என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திரையிசையில் தேசபக்தி பாடல்கள்
    X

    திரையிசையில் தேசபக்தி பாடல்கள்

    • “ராமன் எத்தனை ராமனடி” என்ற படத்தில் ஒரு பாடல்.
    • ஒரு கலைக்குழு அரசு சார்பாக அனுப்பப்பட்டது.

    நாட்டுப்பற்றுக்காக எம்.எஸ். வி. ஜலந்தர் சென்ற நிகழ்ச்சியை பார்க்கலாம்.1965ல் இந்தியா- பாகிஸ்தான் போர் நடைபெற்ற போது வீரர்கள் காயம் அடைந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த வீரர்களை தேற்றி உற்சாகம் அளிப்பதற்காக இங்கிருந்து ஜலந்தருக்கு ஒரு கலைக்குழு அரசு சார்பாக அனுப்பப்பட்டது. இக்குழுவில் நடிகர்கள் சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், சந்திரபாபு வி. கோபாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் ஏ.எல். சீனிவாசன், கவியரசர் கண்ணதாசன், நடிகைகள் சாவித்திரி, ஜெயலலிதா அவரது தாயார் சந்தியா, பத்மினி, தேவிகா, பாடகர் ஏ. எல். ராகவன், பாடகி பி. சுசீலா ஆகியோர் சென்றனர்.

    ஜலந்தரில் இந்திய ராணுவ மருத்துவமனைக்கு கலைஞர்கள் சென்றனர். அங்கே எல்லையை இரவு பகலும் கண் இமைக்காமல் காத்த போரில் ஏற்பட்ட காயங்களால் அவதிப்படும் வீரர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை கண்டு எல்லோரும் மனம் கலங்கினார்கள். சிவாஜி, சாவித்திரி, பத்மினி ஆகியோர் தாங்கள் நடித்த படங்களின் காட்சிகளை வசனம் பேசி நடித்துக் காட்டினார்கள்.

    எம்.எஸ்.வி. தனது ஆர்மோனியப் பெட்டியை கழுத்தில் மாட்டிக் கொண்டே ராணுவ வீரர்களிடம் சென்று உடல் நலம் விசாரித்ததுடன், அவர்களுக்கு பிடித்தப் பாடல்களை ஹார்மோனிய இசையில் பாடகர்களை வைத்து தானும் பாடினார். அது ராணுவ வீரர்களின் நேயர் விருப்பம் நிகழ்ச்சியானது.

    கழுத்தில் தொங்கிய ஹார்மோனியத்தின் கனமும் வலியோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாட்டுக்காக போராடிய போது காயம்பட்ட இவர்களின் வலியை விடவா தன் வலி பெரிது என்று எண்ணி வீரர்கள் விரும்பி கேட்ட பாடல்களையே அவர்களுக்கு காணிக்கையாக அளித்து விட்டார்.

    வந்திருந்த கலைக்குழுவினருக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒரு விருந்து அளித்தார். அங்கும் கலைக்குழுவினர் தம் பங்களிப்பை அளித்தார்கள். எம்.எஸ்.வி. ஹார்மோனியம் வாசிக்க, பி.சுசீலா "கண்ணன் என்னும் மன்னன் பேரை" என்ற பாடலை பாட, ஜெயலலிதா நடனம் ஆடினார்.


    குடியரசுத் தலைவர் தனது விருப்பப் பாடலாக "பிறக்கும் போதும் அழுகின்றான். இறக்கும் போதும் அழுகின்றான்" பாடலை பாட சொல்லி கேட்க, நடிகர் சந்திரபாபு மிகவும் உருக்கமாகப் பாடியதை டாக்டர் ராதாகிருஷ்ணன் மிகவும் ரசித்துக் கேட்டார். அப்போது சடாரென அவரது தாடையைப் பிடித்து "நீ மகா ரசிகன்" என்று கொஞ்சி விட்டார் சந்திரபாபு. பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட எல்லோரும் திருக்கிட்டு விட்டார்கள். குடியரசுத் தலைவர், ஒரு கலைஞனின் அதிக ஆர்வத்தை புரிந்து கொண்டு விட, பிறகு நிலைமை சுமுகமானது.

    நாட்டுக்கு சேவை செய்தவர்களின் மனதுக்கு தெம்பூட்டும், கலைப்பணியை செய்ததும் கூட எம்.எஸ்.வி.யின் நாட்டுப்பற்றை நமக்கு உணர்த்துகிறது. இது மட்டுமல்ல, நலத்திட்டப் பணிகள், கோவில் கட்ட, பள்ளிகள் கட்ட என பல நற்பணிகளுக்கு கட்டணம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல், தனது இசைக் குழுவினரையும் குறைந்த தொகையில் இன்னிசை கச்சேரிகள் செய்ய ஊக்கவித்ததும் வெளியில் சொல்லிக் கொள்ளாதவை!

    அப்போதெல்லாம் அரசு விழாக்கள் என்றாலும் முன்னணி இசை அமைப்பாளர் என்ற முறையில் எம்.எஸ்.வியின் கச்சேரிகள்தான் கொடிகட்டி பறக்கும்!

    சுதந்திர பொன்விழா ஆண்டின் போது அரசு சார்பில் 40, 50 பள்ளிகளில் இருந்து நன்றாக பாடக்கூடிய ஏறக்குறைய 200 குழந்தைகளை தேர்ந்தெடுத்து மகாகவி பாரதியார் பாடல்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார் எம்.எஸ்.வி. பல ஒத்திகைகளுக்குப் பிறகு இந்த மொத்த குழந்தைகளும் பிசிறு இல்லாமல் ஒட்டுமொத்தமாக ஒரே டேக்கில் நேரடி நிகழ்ச்சியில் அத்தனை சிறப்பாக பாடியிருக்கிறார்கள்.

    தொழில்நுட்ப ஒட்டல் வெட்டல் எதுவுமில்லாமல் நேரடி நிகழ்ச்சியில் இத்தனை குழந்தைகள் பாடிய போது எனக்கு கண்ணில் நீர் வந்துவிட்டது என்றுநெகிழ்ந்து போய் சொல்லியிருக்கிறார் எம்.எஸ்.வி. தொழில்முறை கலைஞர்களே கோரசாக ஒரே அளவில் பாடுவது மிகவும் சிரமம். அதுவும் பள்ளி குழந்தைகளை வைத்து பாட வைப்பது என்பது எத்தனை சிரமம். ஆகச்சிறந்த நாட்டுப்பற்று உள்ள ஒருவரால் தான் இது சாத்தியப்படும்.

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    "கப்பலோட்டிய தமிழன்" படத்தை இயக்கி தயாரித்தவர் பி.ஆர். பந்தலு. அதில் அத்தனை பாடல்களும் மகாகவி பாரதியார் எழுதியவை தான்! ஜி. ராமநாதனின் அற்புதமான இசையில் வந்தன. சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய திருநாட்களில் இன்றைய தலைமுறையினருக்கும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி சொல்லி புரிய வைக்க இது போன்ற படங்கள் தானே இருக்கின்றன. இந்த படத்தில் பாடுவதற்காக ஊதியமாக எந்த தொகையும் பெற்றுக் கொள்ளாமல் திருச்சி லோகநாதன் பாடி கொடுத்துள்ளார்.

    இதுபோல நாட்டுப்பற்றுடன் பணத்தை முன்னிறுத்தி யோசிக்காதவர்களும் திரைத்துறையில் இருந்தனர். போர் காலங்களில் நகைகளை கழற்றிக் கொடுத்தவர்களும் கொடை வழங்கியவர்களும் திரைத்துறையில் நிறைய இருந்தனர்.

    1961-ல் கப்பலோட்டிய தமிழன் படத்தில் "பாரத தேசமென்று பெயர் சொல்லுவார். மிடிப் பயங்கொல்லுவார் துயர் பகை வெல்லுவார்" என்ற பாட்டிலிருந்து வ.உ.சிதம்பரனார் கப்பல் வாங்கி வரும் காட்சிக்கு பொருத்தமாக "வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்", "முத்து குளிப்பதொரு தென்கடலிலே " "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்" ஆகிய சரணங்களை எடுத்து பாடலை அமைத்திருந்தார் பி.ஆர்.பந்தலு. இவர் ஆசிரியராகவும் பணி புரிந்தவர்.

    கை கொடுத்த தெய்வம் 1964 -ல் வந்தது. இப்படத்தின் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். குடும்பத்து உறவுகள் சிக்கல்களை வைத்து சிறப்பாக படங்களை இயக்கியவர். இவர் ஒரு கவிஞர், படத்தின் கதை பகுதி கொஞ்சம் வடக்கில் நடப்பது போல் வரும். அதனாலோ என்னவோ மகாகவி பாரதியாரின் தேசிய ஒருமைப்பாடு பாடல் தன் படத்தில் இடம்பெற நினைத்தார்.

    "பாரத தேசம் மென்று பெயர் சொல்லுவார்" பாடலில் இருந்து ஏற்கனவே மூன்று சரணங்கள் எடுக்கப்பட்டு விட்டதை பார்த்தோம். அதில் மீதமுள்ள சரணங்களில் இருந்து, "சிந்துநதியின் மிசை நிலவினிலே.. (எத்தனை மாநிலங்கள் சொல்லப்பட்டுள்ளன!), அடுத்து, "கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்" (பண்டமாற்று கொடுக்கல் வாங்கல்) கடைசி சரணத்தில் இந்தியாவையும் தாண்டி "சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்" என்று கனவு கண்ட பாரதியின் வரிகளை தேர்ந்தெடுத்தும் "சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து" என்ற வரி வருவதால் பாடலின் ஆங்காங்கே தெலுங்கில் பாட வைத்திருப்பதும் அழகு!

    கேரளப் பெண்களுடன் தெலுங்கில் பாடிக்கொண்டு, தோணிகளில் போகும் பாரதியார் கண்ட கனவின் முழு சாட்சியாக இருக்கும் பாடல் அது! டி.எம்.எஸ்., எல்.ஆர். ஈஸ்வரி, ஜே.வி.ராகவலு குரலுடன் காலத்தை வென்று நிற்கும் பாடல் அது!

    கே.எஸ். கோபாலகிருஷ்ணன் விவரிக்கிறார் எம்.எஸ்.வியிடம்.. "நாயகன் பாரதியாராகவே தன்னை கனவில் காண்கிறார். பாரதியார் ஒவ்வொன்றாக யோசித்தபடி எழுதிக் கொண்டே பாடுவது போல் ஒரு பாட்டு வேணும்".

    இந்த பாடலுக்கு மெட்டமைத்ததை பேட்டியில் சொல்கிறார், "ஒரு தாளை எடுத்துக் கொண்டு எழுதினால் எப்படி எழுதுவோம்? நலம் நீங்கள் நலமான்னு எழுதுவோமில்லையா? அது மாதிரி, முணுமுணுத்தப்படியே, யோசித்தப்படியே பாரதியார் எழுதினால் ஒவ்வொரு சொல்லுக்கும் எவ்வளவு நேரம் இடைவெளி வருமோ அந்த வேகத்தில் தான் பாடலை மெட்டமைத்தேன். இதே போல் தான் "அன்புள்ள மான் விழியே ஆசையில் ஒரு கடிதம்" என்ற பாடலுக்கும் மெட்டைப் பிடித்தேன்"- என்கிறார்.

    ஒரு மெட்டுக்கான உந்து சக்தி எங்கிருந்தெல்லாம் கிடைக்கிறது இவருக்கு! பள்ளிகள் தோறும் தேசிய திரு நாட்களில் இன்றும் பாடப்படும் சிரஞ்சீவி பாடல்! சிவாஜியை பார்க்க முடியாது! பாரதியார் தான் பாடியிருந்தால் எப்படி யோசித்து பாடியிருப்பாரோ அப்படி நடித்திருப்பார் சிவாஜி! மெல்லிசை மன்னர்களின் புகழுக்கு சாட்சி இப்பாடல்!

    'கனவு மெய்ப்பட வேண்டும்' என்று பாடிய பாரதியின் கனவுக்கு உயிர் கொடுத்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போற்றுதலுக்குரியவர்!

    "பாரத விலாஸ்" என்ற படம் 1973-ல் வந்தது. இதில் ஒரு பாடல் "இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு"!- என்று கவிஞர் வாலி எழுதிய பாடல்!

    இந்தப் பாடல் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வசிக்கும் தமிழர், ஆந்திரர், மலையாளர், கன்னடர், பஞ்சாபி ஆகியோர் தங்களது மாநிலங்களின் சிறப்புகளை புகழ்ந்து பாடுவதாக வரும் பாடல்!

    தேசிய ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாக வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தினை வைத்து மிகச் சிறப்பாக கவிஞர் வாலி எழுதியிருப்பார். இந்த ஒரே பாடலில் மேக்கத்திய கிராமியம், பங்காரா, பஜன் இசை என்ற பலவகை இசைகளை தந்திருப்பார் எம்.எஸ்.வி.

    "ராஜ பார்ட் ரங்கதுரை" படத்தில் "இன்குலாப் ஜிந்தாபாத்" என்று பஞ்சாப் சிங்கம் "பகத்சிங்" கதாபாத்திரம் பாடுவதானப் பாடல் கவியரசர் எழுதியது. டி.எம்.எஸ். உணர்வு பூர்வமாக பாட, நடிகர் சிவாஜி கணேசன் அற்புதமாக நடிக்க, இசையில் மிரட்டியிருப்பார் எம்.எஸ்.வி.

    "ராமன் எத்தனை ராமனடி" என்ற படத்தில் ஒரு பாடல். "சேர, சோழ, பாண்டியன் மன்னர் ஆண்ட தமிழ்நாடு"- என்ற பாடல் கவியரசர் எழுதியது. எல்.ஆர்.ஈஸ்வரி, மாதுரி குழுவினர் பாடிய பாடல். குழந்தைகள் சேர்ந்து ஆடும் நாட்டிய நிகழ்ச்சி!

    ஒவ்வொரு மாநிலத்தவரும் தங்களுக்குள் பிரிவினை பேசி தனி மாநிலம் வேண்டுமென பாடுவது போல காட்சி! அந்தந்த மாநிலத்துக்கென பொருத்தமான இசை. காந்தி வந்து ஒற்றுமையை போதிக்கும் போது "ரகுபதி ராகவ ராஜாராம்" என்ற ஹம்மிங், நேருவை காட்டும்போது ராணுவ இசை, பாரதியார் வந்து "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்று புரட்சியாக பாட வைத்து இசையமைத்திருப்பார் எம்.எஸ்.வி.! இயக்குனர் பி.மாதவனின் தேசிய சிந்தனை பாராட்டுக்குரியது. தேசப்பற்றுடன் கூடிய இதுபோல பல நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட எம்.எஸ்.வி. அவர்களை போற்றுகிறேன்! வணங்குகிறேன்!

    அடுத்த தொடரில் பார்ப்போம்...

    Next Story
    ×