என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இன்று சர்வதேச யானைகள் தினம்...
    X

    இன்று சர்வதேச யானைகள் தினம்...

    • ஆப்பிரிக்க பெண் யானைகளுக்கு தந்தம் இருக்கும்.
    • ஒரு யானை தன் வாழ்நாளில் சராசரியாக 18 லட்சம் மரங்கள் வளர காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

    ''என் வழி... தனி வழி...'' என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படத்தில் பேசிய வசனம், யானைகளுக்கு மிகவும் பொருந்தும். பொதுவாக யானைகள் அதன் வழித்தடத்தை மாற்றவே மாற்றாது. தனக்கான வழித்தடப்பாதையில் தொடர்ந்து பயணித்துக்கொண்டேயிருக்கும், குறுக்கே யார் வந்தாலும் தன்னுடைய ஆக்ரோஷ முகத்தை காட்டிவிடும்.

    இன்று வனப்பகுதியில் இருக்கக்கூடிய பெரும்பாலான பாதைகள் யானைகள் பயன்படுத்தியவைதான். ஆனால் வன ஆக்கிரமிப்பு, விவசாய நில விரிவாக்கம், நீர்மின் திட்டங்கள், கூட்டுக்குடிநீர் திட்டங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட காரணங்களால் அதன் வழித்தட பாதைகளில் பல தடைகள் உருவாகி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் யானைகள் புகுவது அதிகரித்து வருகிறது. இதில் மனிதர்களின் தவறுகள் சொல்லமுடியாத அளவுக்கு இருக்கிறது.

    இப்படி மனிதர்கள் எவ்வளவுதான் தீங்குகள் செய்தாலும், யானைகளோ எழில் கொஞ்சும் வளமான காடுகளை உருவாக்குவதில் பெரும் பங்கை தொடர்ந்து வழங்கி கொண்டுதான் இருக்கின்றன. ஒரு யானை சராசரியாக 70 ஆண்டுகள் வரை உயிர்வாழும். சுமார் 7 அடி முதல் 12 அடி உயரம் வரை வளரக்கூடியது. சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான எடை கொண்ட பெரிய விலங்கினமாக உள்ளது.

    ஆசிய பெண் யானைகளுக்கு தந்தம் இருக்காது. ஆனால் ஆப்பிரிக்க பெண் யானைகளுக்கும் தந்தம் இருக்கும். யானையின் 2 தந்தங்களும் சுமார் 90 கிலோ எடை வரை இருக்கும். தந்தம் ஒரு முறை உடைந்துவிட்டால் மீண்டும் வளராது. கூர்மையான கண் பார்வையும், மோப்பம் மற்றும் ஞாபக சக்தி கொண்டது.

    நன்கு வளர்ந்த யானை நாளொன்றுக்கு இலை, செடி, கொடி, மூங்கில், கரும்புகள் என பசுந்தீவனமாக சுமார் 200 கிலோ முதல் 250 கிலோ வரை சாப்பிடும். அதேபோல், 150 முதல் 200 லிட்டர் வரை தண்ணீரும் குடிக்கும். அதற்கு உணவின் தேவை அதிகம் என்பதால், ஓரிடத்தில் தங்கி வாழாது. பசுமையான, செழுமையான பகுதிகளைத் தேடி வெகுதூரம் பயணத்தை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஏனென்றால் பரந்தகாட்டில்தான் அதற்கு தேவையான தீவனங்கள் கிடைக்கும். ஓராண்டுக்குள் ஒவ்வொரு யானைக்கூட்டமும் சராசரியாக 650 சதுர கிலோ மீட்டர் பரப்பு வனப்பகுதியை சுற்றிவருவதாக யானை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    யானைகள் சாப்பிடும் தாவரம் உள்ளிட்ட பசுந்தீவனங்களில் 40 சதவீதம் மட்டுமே செரிமானமாகிறது. செரிமானமாகாத தாவரத்தின் விதைகள் வேறிடத்தில் மரங்கள் உருவாகுவதற்கு ஆதாரமாகிவிடுகின்றன. ஒரு யானை தன் வாழ்நாளில் சராசரியாக 18 லட்சம் மரங்கள் வளர காரணமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கூட்டுக்குடும்பமாகவே வாழக்கூடிய யானைக்கூட்டத்தில் குறைந்தது 8 முதல் 15 யானைகள் வரை இருக்கும். யானைகள் கூட்டத்தை 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க பெண் யானைதான் பாதுகாப்பாக வழிநடத்திச்செல்லும். பாசத்துக்கும், பாதுகாப்புக்கும் இந்த கூட்டத்தில் பஞ்சம் இருக்காது. அதற்கு உதாரணம், பிரசவக் காலத்தில் குட்டியை ஈன்ற பிறகு, தாய் யானை மரித்துப்போனால், மற்ற பெண் யானைகள் தன் குட்டியை போலவே பாதுகாத்துக் கொள்ளுமாம்.

    இப்படியாக உலகம் முழுவதும் 24 வகையான யானை வகைகள் இருந்த நிலையில், காடுகள் அழிப்பு, தந்தங்களை வெட்டி எடுப்பது போன்ற மனிதனின் பேராசை, மனிதத்தன்மையற்ற செயல் ஆகியவற்றால் 22 யானை வகைகள் அழிந்து, தற்போது ஆப்பிரிக்க மற்றும் ஆசிய வகை யானைகள் மட்டுமே வலசை வந்து கொண்டிருக்கின்றன.

    இதில் இந்தியா, தாய்லாந்து, இலங்கை, மியான்மர் உள்ளிட்ட 13 நாடுகளில் ஆசிய யானைகளும், ஜிம்பாப்வே, நமீபியா, போட்ஸ்வேனா போன்ற நாடுகளில் ஆப்பிரிக்க யானைகளும் உள்ளன. அந்தவகையில் சுமார் 4 லட்சத்துக்கும் மேல் ஆப்பிரிக்க யானைகளும், சுமார் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஆசிய யானைகளும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதில் தமிழ்நாடு வனப்பகுதியில் மட்டும் 3 ஆயிரத்து 63 யானைகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

    உருவத்திலும், அதன் செயலிலும் நம்மால் பிரமிப்பாக பார்க்கப்படக்கூடிய யானை, தற்போது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் முதன்மையான ஒன்றாக இருந்து வருகிறது. இதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே சர்வதேச யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ம் தேதி (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது. யானைகள் அழிந்தால் காடுகளும், அதனை சார்ந்து வாழக்கூடிய விலங்குகளும், மனிதஇனமும் அழிந்துவிடும். எனவே சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்துக்கு சிறந்த அடையாளமாகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்தை காக்கும் பாதுகாவலனாகவும் இருக்கக்கூடிய யானைகளை பாதுகாக்கக்கூடிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.

    Next Story
    ×