என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • கவியரசு அப்படியா அந்த ட்யூனை வாசித்துக் காட்டு கேட்கலாம் என்றார்.
    • ஹம்மிங் இவருக்கு வாய்த்தது போல பாடுவதற்கு யாருக்கும் வாய்க்கவில்லை.

    சிலருக்கு இசை என்பது மூச்சுக் காற்றுப் போல. அப்படிப்பட்ட இசைப்பிரியர்களைப் கேட்டால் அவர்களுடைய விருப்பப் பாடகர்களுக்கு கோவிலே கட்டிவிடுவார்கள். பி.சுசீலாவின் ரசிகர்கள் பலர் அப்படிப்பட்டவர்கள்!

    தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம், சிங்களம், பெங்காலி, பஞ்சாபி, துளு, பதுகா, ஒரியா ஆகிய பலமொழிகளில் பாடி 'கின்னஸ் உலக சாதனை மற்றும் ஆசியா புக் ஆஃப் ரிகார்ட்ஸ் சாதனைகளுக்குறியவரான பி.சுசிலா தென்னிந்தியாவிற்கு கிடைத்த வரம்!!

    இவரை 'ஹம்மிங் பேரரசி' எனலாம். அப்படியொரு வகைவகையான ஹம்மிங் இவருக்கு வாய்த்தது போல பாடுவதற்கு யாருக்கும் வாய்க்கவில்லை.

    ஒருமுறை, "ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை" என்ற 'பணத்தோட்டம்' படப்பாடல் பதிவின்போது எம்.எஸ்.வி. ஹார்மோனியத்தில் வாசித்து சுசீலாவுக்குப் பாடல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சுசீலா அழுதுவிட்டு வீட்டிற்கு சென்று விட்டாராம். ஒலிப்பதிவு கூடத்தில் இருந்த ஒலிப்பதிவாளர் ரங்கசாமி, என்னப்பா, நீ எதாவது சொன்னாயா, சுசீலா வீட்டுக்குப் போயிட்டாங்க. என கேட்டார்"

    இல்லையே நான் எதுவுமே சொல்லலையே என தொலைப்பேசியில் சுசீலாம்மாவை கூப்பிட்டு கேட்டபோது, "எம்.எஸ்.வி. சார், என்னைத் எதுவும் சொல்லவில்லை. அவர் சொல்லிக்கொடுத்த வகையில் பாடமுடியணுமே என்ற கவலையில் அழுதேன் " என சொன்னார்.

    வீட்டுக்குப்போய் சுதாரித்துக் கொண்டு வந்து, மறுநாள் பாடிக்கொடுத்த அத்துணை சிரமமான பாடல் தான் இந்த "ஒருநாள் இரவு கண் உறக்கம் பாடல்! - இதில் ஒவ்வொரு சொல்லிலும் வளைந்து நெளிந்து போகும் கமகங்கள் (அசைவுகள்) பின்னே யாரால் தான் பாட முடியும்?


    தாலாட்டுப் பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் எல்லோரின் மானசீக அம்மா இவர்.

    "மலர்ந்து மலராத பாதி மலர் போல"பாட்டின் நடுவிலும், முத்தான முத்தல்லவோ சோகப் பாட்டில் வரும் விசும்பலை மறக்க முடியுமா?

    "சிரிப்பில் உண்டாகும் இராகத்திலே" பாடலில் தாளத்துக்குள்

    அடக்கி சுரங்களில் சிரிக்கும் `சிரிப்பு'

    "என்ன நினைத்து என்னை

    அழைத்தாயோ? ஏனிந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ?"-பாடலின் "நா தழுதழுப்பு."

    இப்படி எம்.எஸ்.வி. இசையில் பி.சுசீலா பாடல்களின் பல்சுவை விருந்தைப் பற்றி எழுதிக் கொண்டேயிருக்கலாம்...

    எம்.எஸ்.வி. இசையமைப்பில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அம்சங்களில் ஒன்று சீழ்க்கை ஒலி என்று சொல்லப்படும் விசில்.

    உற்சாக பொழுதுகளில், கதாநாயகன் தனியாக, குறிப்பாக சைக்கிளில் செல்லும்போதும், நண்பர்களுடன் உல்லாசமாக பாடும் காட்சிகளில் காதல் படல்களில் தாலாட்டு பாடலில் கூட விசில் ஓசையை பயன்படுத்தியிருக்கிறார்.

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    ஒருமுறை "பார் மகளே பார்" பட பாடல் மெட்டைமைப்பின்போது முன்கூட்டியே கவியரசரிடம் நாங்க பாடல் வரிகள் இல்லாமல், வெறும் விசிலும், ஹம்மிங் மட்டும் வைத்து ஒரு பாடல் வைக்கப் போகிறோம் இந்தப் படத்தில் என்று சொல்கிறார்.

    கவியரசு அப்படியா அந்த ட்யூனை வாசித்துக் காட்டு கேட்கலாம் என்றார்.

    வாசித்து காட்டியதும், "விசு இது ரொம்ப அழகான ட்யூன். இதற்கு நான் வரிகள் தரேன். நல்லா வரும். இதற்கு விசில் ஹம்மிங் வேண்டாம்" என்றார்.

    கவிஞரே, இயக்குநர் பீம்சிங் கிட்டே சொல்லி அவரும் ஒத்துக் கெண்டார் என சொல்கிறார் எம்.எஸ்.வி.

    கண்ணதாசன் இதைப் பற்றி சிவாஜிடம் சொல்லி, இந்த ட்யூனை பாடலாகவே போடலாம் என பேச எல்லோரும் சம்மதித்து விட்டனர். ஆனால் எம்.எஸ்.வி. இந்தப் பாட்டில் கொண்டு வந்தது என்ன? விடுவாரா புதுமையை?

    ஆரம்பமே முன்னிசையாக விசில் தான். அதற்கு ஒத்து ஹம்மிங். பிறகு தான் வரிகள்.

    'நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே' பல்லவிக்கு முன்னும், சரணங்கள் முடிந்த பின்னும், பாடல் முடியும் போதும் விசிலும், ஹம்மிங்கிலும் முடித்திருக்கும் புதுமையை என்ன சொல்ல?

    "வந்த நாள் முதல் இந்த நாள் வரை" என்றப் பாடலில் சிவாஜி சைக்கிளில் பாடிக் கொண்டே போகும்போது விசில். "கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதில் கிடைத்தது" என்றப் பாடலிலும், பாடலிலும் விசில்..

    எம்.எஸ்.வி.யின் இசையமைப்பில் மின்னிய இன்னொரு சிறந்த மென்மையானக் குரலுக்கச் சொந்தக்காரர் பி.பி. சீனிவாஸ்.

    பொதுவாக வீர எழுச்சிப் பாடல்கள் பாடும் எம்.ஜி.ஆருக்கு, பி.பி.எஸ். பாடிய மூன்று பாடல்கள் 'நீயோ நானோ யார் நிலவே' 'பால் வண்ணம் பருவம் கண்டு' 'என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்' ஆகியவை.

    ஜெமினி கணேசனுக்கு ஏ.எம்.ராஜா பின்னணி பாடத் தொடங்கி, அந்த குரல் மிகவும் பொருத்தமென ஏற்றுக் கொண்டு விட்டார்கள் ரசிகர்கள்.

    ஜெமினிக்கு பி.பி.எஸ். குரலை பொருத்திப் பார்க்கலாம் என எப்படிக் கணித்தாரோ எம்.எஸ்.வி. "யார் யார் யார் அவள் யாரோ" என்றப் பாடலில் ஜெமினிக்கு பி.பி.எஸ். பின்னணி பாடி பாடலோ சூப்பர் டூப்பர் ஹிட். "காலங்களில் அவள் வசந்தம்" என்ற பாடலுக்குப் பிறகு பி.பி.எஸ். பாடினாலே அது ஜெமினி பாடும் பாடலோ என்ற கேள்வி உருவானது.

    இவர் பாடிய "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா", "மவுனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்", "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை". என்றப் தனிப் பாடல்களோ, பூஜைக்கு வந்த மலரே வா, ரோஜா மலரே ராஜகுமாரி, இந்த மன்றத்தில் ஓடி வரும் போன்ற டூயட் பாடல்களையோ ரசிக்காதவர்கள் யார்.

    மணப்பந்தல் படத்தில் "உடலுக்கு உயிர் காவல்"என்றப்பாடல், ஒவ்வொரு வரியும் காவல் என்ற சொல்லே இணைப்பு தொடையாக முடியும். இந்த சோகப் பாடலை கசல் வகையில் பாட வைத்தது மட்டுமல்லாமல் இந்துஸ்தானி வகைப்பாடல் என்றாலே பி.பி, சீனிவாஸ்தான் என்கிற அளவுக்கு நிறையப் பாடல்களை அவருக்கு எம்.எஸ்.வி. தந்துள்ளார்.

    நிறைய மொழிகளில் பாடியுள்ள பி.பி. சீனிவாஸ் கர்நாடக இசையில் மேதை, அழகாக கவிதைகள் எழுதக் கூடியவர். அவர் அடிக்கடி சொல்வது "மியூசிக் இல்லையென்றால் நாம் சிக் ஆகிவிடுவோம்".

    • மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார்.
    • ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சத்யா" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.

    கேரள மக்களால் சாதி மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதை கேரளத்தின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு நாளும்...

    ஓண திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான அத்தப்பூ கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர்.

    ஓணம் பண்டிகையை ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாடுகிறார்கள். முதல் நாள் அத்தம், இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படுகிறது. அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில் ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை "ஓண சாத்யா" என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று கேரளத்தின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலை பாடிக்கொண்டு படகை செலுத்துவது இதன் சிறப்பம்சம்.

    ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா), ஏழாம் நாள் மூலம், எட்டாம் நாள் பூராடம், ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படுகிறது. பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.

    மன்னர் மகாபலி

    மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். கொடை செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தார். ஒரு அடியால் இந்த பூமியையும், மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் மகாபலி பேரரசன்.

     

    அவருக்கு முக்தி அளிக்க வேண்டி அவரது தலையில் கால் வைத்து அவரை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை பாதாளத்திலிருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினார் மன்னன்.

    அதன்படி ஒவ்வொரு திருவோண திருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    அத்தப்பூ கோலம்

    ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பல வண்ண மலர்களால் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் போடப்படும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக்குலுங்கும் மாதமாகும். அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாக கொண்டாடுவர்.

    ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக்கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின் தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று என தொடர்ந்து, பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள் பூக்கோலத்தின் அளவு பெரியதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

    ஓண சத்யா

    கேரள உணவுகள் என்றதுமே புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி "ஓண சத்யா" என்ற உணவின் சிறப்பை கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சத்யா" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.

     

    புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இந்த உணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுத்துக் கொள்வர்.

    புலிக்களி

    "புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தை குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்களி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியை தலைநகராக கொண்டு ஆண்ட மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.

    பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் "கைகொட்டுக்களி". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களை பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியை குறித்தும். அவரை வரவேற்பதாகவும் அமையும்.

    யானைத்திருவிழா-படகுப்போட்டி

    ஓணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10-ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூத்தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்குச் சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகளென 10 நாட்களும் பல விளையாட்டு போட்டிகள் நடைபெறும். ஆரன்முலா பாம்பு படகுப் போட்டி ஓணம் பண்டிகையின் மற்றொரு சிறப்பம்சமாகும். இதில் பழங்கால படகு பாடல்களை பாடி நிபுணத்துவம் வாய்ந்த துடுப்பு வீரர்களால் பாரம்பரிய பாம்புப் படகுகள் பந்தயம் நடத்தப்படும்.

    முக்கியத்துவம்

    ஓணம் என்பது கேரளாவில் முக்கியமாக கொண்டாடப்படும் ஒரு குறிப்பிடத்தக்க பண்டிகையாகும். இந்த திருவிழா கேரள மக்களுக்கு ஆழ்ந்த கலாச்சார மற்றும் மத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அவர்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சமூக உணர்வை வளர்க்கிறது. ஓணத்தின்போது கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக மக்கள் 'ஓணக்கொடி' எனப்படும் புதிய ஆடைகளை பரிமாறி, அணிந்து கொள்கின்றனர். மொத்தத்தில் ஓணம் பண்டிகை ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியை குறிக்கிறது.

    வயநாடு நிலச்சரிவு கேரளாவில் ஒரு பேரழிவாக பார்க்கப்படுவதால் மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஓணம் விழா இந்த ஆண்டு நடத்தப்படவில்லை. இருந்தபோதிலும் ஓணம் விழாவை பெரும்பாலான மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  

    • குடி ஒருவனுடைய உடம்பையும், ஒழுக்கத்தையும், அறிவையும், ஆக்கத்தையும் நாசமாக்குகிறது.
    • வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய பரிசு.

    'குடிப்பழக்கத்தைக் கைக்கொள்ளுகிறவன் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் நாசத்திற்கு உள்ளாக்குகிறான். குடி ஒருவனுடைய உடம்பையும், ஒழுக்கத்தையும், அறிவையும், ஆக்கத்தையும் நாசமாக்குகிறது'.

    -மகாத்மா காந்தி

    அது பட்டணத்தின் ஒரு பரபரப்பான சாலை. அங்குமிங்கும் விரைகின்ற வாகனங்களின் இரைச்சல். ஒலியெழுப்பியபடி சீறிப் பாய்கின்ற மோட்டார் பைக்குகள். வியாபாரம், தொழில், அலுவலகம் என எல்லோரும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்ற நேரம்.

    அந்தச் சாலையின் பக்கவாட்டில் மாநகராட்சியின் குப்பைத் தொட்டி. அதன் அருகே ஒருவன் விழுந்து கிடக்கின்றான். முப்பது வயதுதான் இருக்கும். நல்ல பேண்ட், ஷர்ட், விலையுயர்ந்த ஷு அணிந்திருக்கின்றான்.

    வாகனங்களின் பேரிரைச்சல், பாதசாரிகளின் பேச்சு சத்தங்கள், குப்பைத் தொட்டியின் நாற்றம் - எதைப் பற்றிய உணர்வுமின்றிக் கிடக்கின்றான்.

    அவன் செல்போனை எடுத்து, அதிலிருந்து யாரோ ஒருவர் தகவல் கொடுத்திருக்க வேண்டும். சிறிது நேரத்தில் ஒரு ஆட்டோ அங்கு வந்து நிற்க, ஓர் இளம்பெண்ணும் சிறு குழந்தையும் பதற்றத்துடன் இறங்கி அவனருகில் ஓடுகின்றனர்.

    'இப்படி விழுந்து கிடக்கி றீங்களே, தலைவிதியா... ஐயோ... எழும்புங்க, வீட்டுக்குப் போகலாம்' - அழுது அரற்றியபடியே கணவனின் உடலை உலுக்குகிறாள் அந்தப் பெண்.

    'டாடி, டாடி...வாங்க டாடி. என்னை பாருங்க டாடி...நம்ம வீட்டுக்குப் போவோம் டாடி' என்று அந்தப் பிஞ்சுக் குழந்தை, தனது தந்தையின் கையைப் பிடித்து இழுக்கிறது.

    'குடிச்சிக் குடிச்சி குடும்பத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துட்டீங்களே' என்று தலையில் அடித்துக் கொண்டு, அவனின் முதுகுக்குக் கீழ் தனது கையைக் கொடுத்து, ஆட்டோ டிரைவரின் உதவியுடன் சிரமப்பட்டு அவனைத் தூக்கி நிறுத்தி, மெல்ல நகர்த்திச் சென்று, ஆட்டோவில் உட்காரச் செய்துவிட்டாள்.

    போதையின் உச்சத்தில் இருந்த அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. அவளோ அவமானத்தால் கூனிக் குறுகினாள். குழந்தையும் அவளும் ஏறிக் கொள்ள, ஆட்டோ அங்கிருந்து விரைந்தது.


    இன்று எத்தனையோ குடும்பங்களின் நிலை இதுதான். குடி பலரின் குடியை நாசமாக்கிக் கொண்டிருக்கின்றது.

    சம்பளத்தின் பாதி தொகைகூட வீடு வந்து சேர்வதில்லை. கடன் தொல்லை குறைந்தபாடில்லை. மனைவி மக்களைப் பற்றிய நினைவு இல்லை. எப்போதும் சண்டை சச்சரவு. காரணம் என்ன? குடிதானே!

    குடிக்கப் பழகி, பின்னர் குடிக்காமல் இருக்க முடியாது என்கிற நிலை ஏற்பட்டுவிடுகின்றது. அப்போதுதான் பிரச்சனைகளும் போராட்டங்களும் பூதாகரமாய் எழுகின்றன.

    குடிக்கின்ற எவனும் தனக்கென்று ஒரு நியாயத்தை வைத்திருக்கின்றான். அப்படி ஒரு நியாயத்தில் தன்னை நிரபராதியாகக் கருதுவதில் சமாதானப்பட்டுக் கொள்கின்றான்.

    கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல், சிறுசிறு நிறுவனங்கள் வரை பெரும்பாலான இடங்களில் விழா விருந்து என்றால், மது ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கின்றது. அதனை 'நாகரிகக் கலாச்சாரம்' என்று கருதுகிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து குடித்துக் கூத்தடிப்பதை 'நவயுகத்தின் முற்போக்குத்தனம்' என்று பெருமிதம் கொள்கின்றனர்.

    மாணவர்கள், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என எல்லா தரப்பினரிடமும் மதுப்பழக்கம் சகஜமாகிவிட்டது. இது மிகப்பெரிய சமூகச் சீரழிவையே நம் கண்முன் காட்டுகின்றது.

    பர்த்டே பார்ட்டி, புரமோஷன் பார்ட்டி, வெட்டிங் பார்ட்டி, குழந்தை பிறந்தால் பார்ட்டி - இப்படி மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் மதுவிருந்து இல்லை என்றால், எந்தக் கொண்டாட்டமும் முழுமை பெறுவதில்லை.

    காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி, வியாபாரத்தில் சரிவு, அலுவலகத்தில் பிரச்சனை, பாட்டி மரணம் - இத்தகைய காரணங்களை எல்லாம் குடிப்பதற்குரிய தருணங்களாகப் பயன்படுத்திக் கொள்வதில் 'குடிமக்கள்' சளைத்தவர்களில்லை.

    குடிப்பழக்கத்தை சமூக அந்தஸ்தின் ஓர் அடையாளமாகக் கருதுபவர்களும் உண்டு. ஜாலியான பொழுதுகளில் உற்சாக ஊக்கியாக அதை பயன்படுத்துபவர்களும் உண்டு.

    யார் எப்படி நியாயப்படுத்தினாலும், அதனால் ஏற்படுகின்ற விளைவு ஒன்றுதான்.

    மது அருந்தும் போது உடம்பில் ஏதோ அபூர்வ சக்தி ஏற்படுவது போன்ற ஓர் உணர்வு. புத்துணர்ச்சி பொங்கி வழிவதாக ஒரு கற்பனை. நோய்கள் அதிகரிக்கும் போதும், ஆரோக்கியமாக இருப்பது போன்ற எண்ணம். எதார்த்தத்தை உணராமல் ஆபத்தின் வாயில் தலையைக் கொடுக்கின்ற பரிதாப நிலை.

    நாளடைவில் உடம்பின் மத்திய நரம்புத் தொகுதியைப் பாதிக்கும். நடத்தையில் விபரீதமான மாற்றத்தைக் கொண்டுவரும். உளவியலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    ரத்த அழுத்தம் கூடும். காரணமின்றிக் கோபம் வரும். கையில் பணமில்லை என்றால் தாறுமாறாக சிந்திக்கத் தூண்டும். மனிதத் தன்மையே இல்லாமல் போய்விடும்.

    குடிகாரன் தள்ளாடுகிறான். அவன் தள்ளாடும் போது, அவன் மட்டுமல்ல; அவன் குடும்பமும் தள்ளாடுகின்றது, தத்தளிக்கின்றது. பொருளாதாரச் சீரழிவு குடும்பத்தின் நிம்மதியைச் சீர்குலைத்துவிடுகின்றது.

    'வாழ்ந்து கெட்டவர்கள்' என்று சிலரைச் சுட்டிக் காட்டுவார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் குடிபோதைக்கு அடிமையாகித்தான் எல்லாவற்றையும் இழந்தவர்களாக இருப்பார்கள்.

    கம்பீரமாய் நடந்தவர்கள் கையேந்தி நிற்பார்கள். ஊருக்குள் செல்வாக்குடன் வாழ்ந்தவர்கள், செல்லாக் காசாகித் தெருத்திண்ணைக்கு வந்துவிடுவார்கள்.

    கவிஞர் தியாரூ

    கவிஞர் தியாரூ


    வாழ்க்கையை உதாசீனப்படுத்தியவர்களை, ஒரு கட்டத்தில் காலம் தலைகீழாகக் கவிழ்த்துப் போடுகிறது. இழக்க நேரிடுகின்ற எதையும், மீண்டும் பெறுவது கடினம். செல்வம், செல்வாக்கு, மானம், மரியாதை எல்லாவற்றிற்கும் அது பொருந்தும். இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் மட்டுமே, மயக்கத்தின் பிடியிலிருந்து ஒருவன் விடுபட முடியும்.

    வாழ்க்கை அழகானது. அதனை அலங்கோலமாக்கிக் கொள்கின்றவனை யாரால் காப்பாற்றக்கூடும்! வாழ்க்கை இன்பமானது. அதனைத் துன்பமாக்கிக் கொள்கின்றவனை யார்தான் கரைசேர்க்கக்கூடும்!

    புகை, மது, போதைப் பொருட்கள் சாதாரண விஷயங்கள் அல்ல. அவை, மனித சமூகத்தைச் சீரழிப்பதற்கென்றே விஸ்வரூபம் எடுத்து நிற்கின்ற மாபெரும் அழிவுச் சக்திகள்.

    பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோரிடையே போதைப் பழக்கங்கள் தொற்றிக் கொண்டுள்ளதே. அதுதான் இன்றைய உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்; ஆபத்து.

    ஏதோ காரா பூந்தி வாங்குவதுபோல் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை சுலபமாக வாங்க முடிகிறதாம். இன்று எண்ணற்ற இளைஞர்கள் அதற்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

    படிப்பில் கவனம் இல்லை. வேலையில் நாட்டம் இல்லை. குடும்ப வாழ்வில் ஈடுபாடு இல்லை. போதைக்குமேல் போதை தேவை என்னும் அபாயகரமான நிலைக்கு வந்துவிடுகிறார்கள். பணத்திற்காக சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும் அதிகரிக்கின்றன. இப்படியே போனால், இந்த உலகின் எதிர்காலம் என்னாகும். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

    கர்ப்பிணிப் பெண்கள் மதுவைத் தொட்டால், கருவின் ஆரம்ப நிலையையும் கருவையும் கடுமையாகப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது ஓர் எச்சரிக்கை.

    ஈரல், இரைப்பை ஆகியவற்றை மதுபானம் ஒரு கை பார்த்துவிடும். மாரடைப்பு ஏற்படக்கூடும். மூளையில் சேதங்கள் உண்டாகலாம். இவையெல்லாம் தேவைதானா!

    ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கினால்தான், அறிவுப்பூர்வமான சமுதாயம் உருவாகும். இல்லையெனில், நோய்பிடித்து நலிவடைந்து நடுங்குகின்ற சமுதாயத்தைதான் இனி பார்க்க நேரிடும்.

    அன்றாடம் சாலை விபத்துகள். எத்தனையோ உயிர்கள் பலியாகின்றன. அதற்குப் பல்வேறு காரணங்கள். எனினும், போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படுகின்ற விபத்துகள் அதிகம். ஒருவரின் போதை மயக்கத்தால், எத்தனை எத்தனை உயிர்கள் சேதமடைகின்றன! எத்தனைக் குடும்பங்கள் நிராதரவாகின்றன!

    மது உள்ளே இறங்கிவிட்டால், சிலர் வீராதி வீரர் ஆகிவிடுவார்கள். வாய்க்கு வந்தபடி பேசத் தொடங்குவார்கள். தெருவில் போவோர் வருவோரை எல்லாம் வம்புக்கு இழுப்பார்கள். அடிதடி உண்டாகும்.

    ஆக, போதைப்பழக்கம் என்பது தனிமனிதனை மட்டுமல்ல; அதில் சம்பந்தப்படாத மற்றவர்களையும் பாதிக்கின்றது. குடும்பங்களிலும் சமூகத்திலும், இப்பிரச்சனை இன்று கோர தாண்டவமாடுகிறது.

    போதை என்பது சுகமல்ல, வாதை; மயக்கம் என்பது பெருமிதம் அல்ல, பேதைமை; வெறி கொள்ளுதல் ஆரோக்கியம் அல்ல, அழிவு என்கிற மனத்தெளிவு ஏற்பட வேண்டும். அப்போதுதான் போதைப்பழக்கம் நீங்கும்; மானுடம் தழைத்தோங்கும்.

    வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய பரிசு. இந்தப் பரிசுக்குள் எத்தனையோ இன்பங்கள் இருக்கின்றன. குடும்பப் பாசம், நட்பின் நேசம், குழந்தைச் செல்வம், உறவுகளின் பிணைப்பு, உயர்வு, மகிழ்ச்சி என அனைத்தையும் உள்ளடக்கி இருக்கின்ற வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் நாம் ரசித்து ரசித்து அனுபவிக்க வேண்டும்.

    ஆரோக்கியமான உடலும் நல்ல மனநிலையும் இருந்தால்தான் அது சாத்தியம். எனவே, தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு நமக்கு அவசியமாகின்றன.

    பிரச்சனைகளுக்கு ஒருபோதும் போதை மயக்கம் தீர்வாகாது. அத்தகைய தருணங்களில் உணர்ச்சிவசப்படாமல், சற்று நேரம் அமைதியாக இருங்கள். உங்கள் நலனையும், மனைவி மக்களின் மகிழ்ச்சியையும் எண்ணிப் பாருங்கள்.

    'மதுவைத் தொடுவதா விடுவதா' என்னும் குழப்பம் ஏற்படும்போது, 'விடுவது' என்று உடனடியாகத் தீர்மானியுங்கள். அதில் உறுதி கொள்ளுங்கள். உங்களுக்குள் ஒரு வெளிச்சம் வரும். பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும்.

    உங்களிடம் போதைப் பழக்கத்தைத் தூண்டுபவர்கள் உங்கள் விரோதிகள் என்பதை நம்புங்கள். தொடர்பை அறவே துண்டித்திடுங்கள். நல்லவர்களோடு பழகுங்கள். நல்லவற்றைச் செய்யுங்கள். பணத்தை நல்வழியில் பயன்படுத்துங்கள்.

    வாழ்வில் சுகதுக்கங்கள் இயல்பானவை. அவற்றை சரிசமமாய் எண்ணுங்கள். வாழ்வை நலமுடன் கொண்டாடி மகிழுங்கள்.

    போன்: 9940056332

    • உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றும் மனிதர்களின் அடிப்படைத் தேவைகள்.
    • வஸ்திர தானமும் சிறப்பானதாகப் போற்றப் படுகிறது.

    உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றும் மனிதர்களின் அடிப்படைத் தேவைகள். நமது இலக்கியங்களும் புராணங்களும் உடை பற்றி நிறையப் பேசுகின்றன.

    பட்டாடை அணிந்த ராஜகுடும்பத்தைச் சேர்ந்த ராமனும், சீதையும், லட்சுமணனும் வனவாசம் செல்லும்போது மரவுரியையே ஆடையாகத் தரித்துச் சென்றார்கள். மரத்திலிருந்து உரித்து எடுக்கப்படும் மெல்லிய பட்டையே மரவுரி எனப்பட்டது.

    மரவுரியை எப்படிக் கட்டிக்கொள்வது எனத் தெரியாது சீதை தவித்தாளாம். அப்போது, தான் கட்டிக்கொண்ட மனைவிக்கு மரவுரி கட்டிக்கொள்ளக் கற்றுத் தந்தவன் ராமன்தான் என்கிறது ஓர் அபூர்வ ராமாயணக் கதை.

    பாஞ்சாலிக்கு கண்ணன் ஆடை கொடுத்து மானத்தைக் காத்ததை நாம் அறிவோம். கண்ணனின் இளமைக் காலத்தில் அவன் விரலில் ஒரு காயம் பட்டு ரத்தம் சொட்டியதாம். அதைப் பார்த்துப் பதறினாளாம் பாஞ்சாலி.

    தான் கட்டியிருந்தது விலையுயர்ந்த பட்டுத் துணி என்றும் பாராமல் பட்டென்று அதைக் கிழித்து கண்ணனின் காயத்தின்மேல் அவசர அவசரமாகக் கட்டி மேலும் குருதி பெருகாமல் தடுத்தாளாம்.


    அந்த அன்பில் நெகிழ்ந்த கண்ணன் அதற்குப் பிரதிபலனாகத்தான் கவுரவர் சபையில் அவளது ஆடையை வளரச் செய்து அவள் மானத்தைக் காத்தான் என்று ஒரு கதை சொல்கிறது.

    துச்சாதனன் துகிலுரியத் தொடங்கியபோது பாஞ்சாலி உள்ளம் உருகிக் கண்ணனைத் துதித்ததையும் துகில் வளர்ந்ததையும் பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் உணர்ச்சி பொங்க எழுதுகிறார்:

    `வையகம் காத்திடுவாய் -

    கண்ணா

    மணிவண்ணா என்றன்

    மனச்சுடரே!

    ஐய நின் பதமலரே - சரண்

    ஹரி ஹரி ஹரி என்றாள்!

    பொய்யர்தம் துயரினைப்

    போல் - நல்ல

    புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்

    தையலர் கருணையைப் போல் - கடல்

    சலசலத்தெறிந்திடும் அலைகளைப் போல்

    பெண்ணொளி வாழ்த்திடுவார் - அந்தப்

    பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல்போல்

    கண்ணபிரான் அருளால் - தம்பி

    கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்

    வண்ணப் பொற் சேலைகளாம் - அவை

    வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!

    எண்ணத்தி லடங்காவே - அவை

    எத்தனை எத்தனை நிறத்தனவோ!

    பொன்னிழை பட்டிழையும் - பல

    புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்

    சென்னியிற் கைகுவித்தாள் - அவள்

    செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே

    முன்னிய ஹரிநாமம் - தன்னில்

    மூளுநற் பயனுல கறிந்திடவே

    துன்னிய துகில் கூட்டம் - கண்டு

    தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான்!`

    முப்பெருந் தேவியரில், கலைமகள் வெள்ளை ஆடை உடுத்திக் காட்சி தருபவள்.

    `வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப்

    பணிபூண்டு

    வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் -

    வெள்ளை

    அரியா சனத்தில் அரசரோ டென்னைச்

    சரியாசனம் வைத்த தாய்.'

    என்று பாடுகிறார் காளமேகப் புலவர். கலை என்பது உடைக்கான பழந்தமிழ்ச் சொல். சரஸ்வதி வெள்ளை ஆடை புனைபவள் என்பதையே `வெள்ளைக் கலை உடுத்து` என்ற சொற்களால் குறிக்கிறார் அவர்.

    சிவபெருமான் புலித்தோலை அணிபவர்.

    `பொன்னார் மேனியனே! புலித்தோலை

    அரைக்கசைத்து

    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை

    அணிந்தவனே!'

    என்று சிவபெருமானைப் பாடிப் பரவுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். புலித்தோல் அணிந்த தந்தையின் இளைய மகனான முருகன் வெறும் கோவணத்தை மட்டுமே அணிந்த ஆண்டியாகப் பழனியில் காட்சி தருகிறான்.

    புகழேந்திப் புலவர் நளவெண்பாவில் நளனுக்கு கார்க்கோடகன் என்ற பாம்பு ஆடை கொடுத்ததைப் பற்றி எழுதுகிறார்.

    நளன் பகைவர்கள் அறியாதவாறு மறைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டதால் கார்க்கோடகப் பாம்பு அவனைக் கடித்து விஷத்தால் அவன் நிறத்தையும் வடிவத்தையும் மாற்றுகிறது. முற்றிலும் தன் உரு மாறிவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நளனிடம், தான் அவனுக்கு உபகாரமே செய்திருப்பதாக விளக்குகிறது அது.

    இனிப் பகைவர்கள் அவனை அடையாளம் காண இயலாது என்று சொல்லி தன் ஆடை ஒன்றையும் அது நளனுக்குக் கொடுக்கிறது. தோலுரிக்கும் பழக்கமுள்ள பாம்பின் தோலாடையாகத் தான் அது இருக்க வேண்டும்.

    பின்னாளில் நளனுக்கு அவனது பழைய உருவம் தேவைப்படும்போது அந்த ஆடையை அணிந்தால் அவன் மீண்டும் பழையபடி மாறுவான் என அது தெரிவித்து ஊர்ந்துசென்று மறைகிறது.

    கண்பார்வையற்ற கவிஞரான சூர்தாஸ் துவாரகைக் கண்ணன் கோவிலில் ஆஸ்தான பாடகராக நியமிக்கப் பட்டிருந்தார்.

    ஒவ்வொரு நாளும் கிருஷ்ண விக்கிரகத்திற்கு ஆடை மாற்றுவார்கள். அன்றன்று சூர்தாஸ் பாடும் கீர்த்தனைகளில் அந்த ஆடையின் நிறம் எதுவென்று தன் அகக்கண்ணால் தானே கண்டு கீர்த்தனையிலும் ஆடையின் வண்ணத்தைக் குறிப்பிட்டுப் பாடுவாராம்.

    சகோதரி நிவேதிதை தம் குருநாதரான விவேகானந்தர்மேல் அளவற்ற பக்தி செலுத்தியவர். விவேகானந்தர் காலமானபோது துயரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

    விவேகானந்தரின் சடலம் எரிகிறபோது தள்ளி அமர்ந்து கண்ணீர் வழியப் பார்த்துக் கொண்டிருந்த நிவேதிதையின் உள்ளத்தில் ஓர் எண்ணம்.

    `குருநாதரே! இதுவரை நான் வெள்ளை உடைதானே அணிகிறேன். எனக்கு நீங்கள் ஏன் காவி உடை வழங்கவில்லை? நான் துறவின் அடையாளமாக காவி உடை தரிக்கும் அளவு மனப்பக்குவம் பெறவில்லை என்று கருதினீர்களா?` என அவர் எண்ணினார். அடுத்த கணம் விந்தையான ஒரு நிகழ்வு நடந்தது.

    எரிந்து கொண்டிருந்த விவேகானந்தரின் காவி உடையிலிருந்து ஒரு துண்டுக் காவித்துணி காற்றில் பறந்து நிவேதிதையின் மடியில் வந்து விழுந்தது!

    தன் துறவு மனநிலையை விவேகானந்தர் அங்கீகரித்ததற்கான அடையாளம் அது எனக் கருதிய நிவேதிதை அந்தக் காவித் துண்டைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு பத்திரப் படுத்திக் கொண்டார் என்கிறது நிவேதிதையின் திருச்சரிதம்.

    பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடை பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன.

    அவ்வையாரின் நல்வழி நூலில் உள்ள ஒரு வெண்பா, எல்லா மனிதர்களுக்கும் உண்பது நாழியளவு தான், உடுப்பது நான்கு முழம்தான், பிறகு அளவுக்கு மீறி ஆசைப்பட்டு வாழ்வில் சஞ்சலம் கொள்வது ஏன் என்று வினவுகிறது.

    `உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்

    எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த

    மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

    சாந்துணையும் சஞ்சலமே தான்!`

    நாழி உணவும் நான்கு முழ ஆடையும் போதுமானதாய் இருக்க, எண்பது கோடி விஷயங்களுக்கு ஆசை ஏன்? மண்கலம்போல் உடையப் போகும் வாழ்வில் அளவுக்கு மீறிய ஆசை எப்போதும் சஞ்சலத்தையே தரும் என்கிறார் அவ்வை.

    மானம் மறைக்க நான்கு முழம் போதுமென்றாலும் மனிதர்கள் பற்பல வகையான உடைகளில் நாட்டம் கொள்கிறார்கள்!

    காந்தி எளிய ஆடைகளை அணிவதென்று, நம் தமிழகத்தைச் சார்ந்த மதுரையில்தான் முடிவெடுத்தார். பின்னர், இடுப்பில் ஒரு வேட்டியும் மேலே ஒரு துண்டுமாக மட்டுமே காட்சி தந்தார்.

    நம் சுதந்திரப் போராட்ட காலத்தில் உடையும் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. கதர் உடையையே அணியுமாறு காந்திஜி வேண்டுகோள் விடுத்தார். ஏராளமான மக்கள் கதர் அணிந்தார்கள்.

    இப்போதும் காந்தியச் சிந்தனையின் தாக்கத்தால் கதரே அணிபவர்கள் இருக்கிறார்கள்.

    வள்ளலார் போன்ற மிகச் சில துறவிகள் வெள்ளை ஆடை தரித்தாலும் பொதுவாக இந்தியாவில் துறவுக்கான நிறம் என்று காவியே கருதப்படுகிறது.

    சில வண்ண ஆடைகள் மனத்தில் சில உணர்வுகளைத் தூண்டுகின்றன என்றும் நாம் அணியும் ஆடைகளின் நிறத்தின் மூலம் மற்றவர்கள் மனத்தில் நாம் விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் நம்புகிறவர்கள் உண்டு.

    அதனால் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் இன்னின்ன ஆடை என வகுத்துக் கொண்டு அந்தந்த நாட்களில் அந்தந்த வண்ண ஆடைகளையே அணிபவர்களும் உண்டு.

    கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகன் மயிலுக்குக் குளிருமே என அதற்குப் போர்வை போர்த்தினான் என்கிறது சங்கப் பாடல்.

    கிடைத்தற்கரிய நீல நாகத்தின் ஆடை, கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனுக்குக் கிடைத்தது. ஆனால் ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் சிவபெருமானுக்கு அதை வழங்கிவிட்டான் அவன். இந்தச் செய்தியைச் சிறுபாணாற்றுப் படையில் காணலாம்.

    ஐதராபாத் அருங்காட்சியகத்தில் ஓர் அபூர்வமான கற்சிலை இருக்கிறது. அது ஒரு பெண்ணின் சிலை. அவள் மெல்லிய சல்லாத் துணியால் தன் முகத்தை மூடியிருப்பதைப் போல் சிற்பி செதுக்கியிருக்கிறான்.

    மெல்லிய துணியின் ஊடாக உள்ளே அவளது விழிகள் நாசி உதடு போன்றவை யெல்லாம் நிழல்போல் தெரிவதாக சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது.

    கல்லில் உள் உறுப்புக்களைச் செதுக்கிவிட்டுக் கல்லால் ஆன மெல்லிய துணியை மேலே ஒட்டவைப்பதென்பது இயலாது. அப்படியிருக்க இத்தகைய ஜாலத்தை அந்த சிற்பி எப்படித்தான் நிகழ்த்தினான் என்பது இன்றுவரை பார்ப்போரை யெல்லாம் வியக்க வைக்கும் ஒரு சிற்ப அற்புதம்.

    அன்னதானத்தைப் போலவே ஒருவருக்கு வழங்கப்படும் வஸ்திர தானமும் சிறப்பானதாகப் போற்றப் படுகிறது. உணவு உடை உறையுள் என்ற மூன்று அடிப்படைத் தேவைகளில் ஒன்றை அது நிறைவு செய்து விடுகிறது இல்லையா?

    ஆலயத்தில் தெய்வங்களுக்கு வெவ்வேறு ஆடை அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது. தெய்வங்கள் மட்டுமல்ல, தெய்வங்களின் அடியவர்களும் ஆடைகளால் தங்களை வேறுபடுத்திக் கொண்டு தாங்கள் யாருடைய பக்தர்கள் என்பதை அறிவிக்கிறார்கள்.


    ஐயப்ப பக்தர்கள் கறுப்பு ஆடையும் முருகனது அடியவர்கள் பச்சை ஆடையும் மேல்மருவத்தூர் பராசக்தி அடியவர்கள் சிவப்பு ஆடையும் அணிகிறார்கள்.

    கேரளத்தில் ஆண்கள் ஆலயத்திற்குள் செல்லும்போது மேலாடை அணியக் கூடாது என்ற விதி இருக்கிறது. எனவே அவர்கள் மேலாடையை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு தான் கோவிலுக்குள் பிரவேசிக்கிறார்கள்.

    ஆக இந்தியா எங்கும் மக்களின் மனங்களில் ஆன்மிக உணர்வைத் தோற்றுவிப்பதில் அவர்கள் அணியும் ஆடையும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • பழைய செல்கள் அழிவதும், புதிய செல்கள் தோன்றுவதும் இயற்கையின் ஒழுங்கு.
    • ஒரு வாரத்திற்கு 10-15 கிலோமீட்டருக்கு மேல் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

    வருமுன் காப்பது சாலச்சிறந்தது, என்பது புற்றுநோய்க்கு மிகவும் பொருந்தும். கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளன.

    புற்றுநோய் என்பது நம் உடலில் உள்ள செல்கள், கட்டுப்பாட்டை மீறிப் பல்கிப் பெருகுவது மட்டுமல்லாமல், உடலின் பிற பாகங்களுக்கும் பரவக்கூடியது.

    பழைய செல்கள் அழிவதும், புதிய செல்கள் தோன்றுவதும் இயற்கையின் ஒழுங்கு. இயல்பாகவே நம் உடலில் உள்ள செல்கள் குறிப்பிட்டக் கால அளவைக் கடக்கும்போது அவை புதுப்பிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டிற்கு, நம் ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் ஒவ்வொரு 10-வது நாளிலும், சிவப்பணுக்கள் 120-வது நாளிலும் புதுப்பிக்கப்படுகின்றன.

    ஆனால் புற்றுநோயின் செல்கள் இயல்பைமீறி வரையரையின்றித் தொடர்ந்து உருவாகின்றன. நம் உடலில் தோன்றுகின்ற ஒவ்வொரு செல்லும் ஒரு குறிப்பிட்ட பாதையைக் கடக்க வேண்டும் என்ற முறை உள்ளது. ஆனால் இந்த முறையைப் புற்று செல்கள் பின்பற்றுவதில்லை.

    புற்றுநோயின் செல்கள் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம், அதே இடத்தில் ஊடுருவிக் கெடுப்பது மட்டுமல்லாமல், அங்கிருந்து ரத்தத்தின் வழியாகவோ அல்லது நிணநீர்ச் சுழற்சியின் மூலமாகவோ, ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குப் பரவி இடர்களை ஏற்படுத்தக்கூடியவை.

    மரபணு மாற்றம் (டி.என்.ஏ.வில்) செல்கள் பிரிவதில் இடர்களை ஏற்படுத்துவதால், செல்கள் உருமாறி புற்றுசெல்களாக மாறுகின்றன. இந்த மரபணு மாற்றத்திற்கு ஒரு சில முதன்மைக் காரணங்கள் உள்ளன. அவை புறஊதாக் கதிர்களின் தாக்கம், புகைபிடித்தல், மதுப்பழக்கம், மனஅழுத்தம், உடல் பருமன், சில வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்கம், காற்று மாசுபாடு..

    சிலிகா, பென்சீன், குரோமியம் போன்ற வேதியியற் பொருள்களால் உடலில் சில மாறுபாடுகள் ஏற்பட்டுப் புற்றுநோய்ச் செல்கள் உருவாகின்றன.

    இப்போது புற்றுநோய் என்றால் என்ன? அது வருவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி ஓரளவிற்குப் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். இதைத் தொடர்ந்து சில முதன்மையான புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் அவற்றைத் தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

    பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் மிகவும் முதன்மையானது கருப்பைவாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகும்.

    தமிழ்நாட்டில் 2016-ல் 9,000 பேருக்கு இருந்த இந்நோய், 2020-ல் 13,000 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் ஒவ்வொரு 13-வது நிமிடத்திற்கும், ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பபட்டுள்ளது.

    இந்தியாவில் 30 பெண்களில், ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் வரவாய்ப்புள்ளது, என்று கணக்கெடுப்புக் கூறுகிறது. எனவே மார்பகப் புற்றுநோய் பற்றிய ஒரு புரிதல் அனைவருக்கும் வேண்டும். இது 70-80 விழுக்காடு, மிகவும் முற்றிய நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுவது வேதனைப்படக் கூடிய ஒன்று.

    எனவே இதைத் தொடக்க நிலையில் கண்டறிவதற்கும், தடுப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும், என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

    மரு.அ.வேணி

    மரு.அ.வேணி

    1.மார்பகக் கட்டி மற்றும் அக்குள் பகுதியில் கட்டி - இது மார்பகத்தில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். கட்டி சிறிதாக இருக்கும்போதே கண்டுபிடித்தல் வேண்டும். இதற்கு ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் முடிந்து 7 நாள்கள் கழித்து மார்பகத்தைத் தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும்.

    2..மார்பக காம்பில் இருந்து நீர் வடிதல்

    3.மார்பில் நிறமாற்றம்

    தன்மார்பக ஆய்வு:

    இதைப் பல்வேறு நிலைகளில் செய்துக் கொள்ளலாம்.

    1.கண்ணாடி முன் நின்று இரண்டு மார்பகத்திலும் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்று பார்க்கவேண்டும்.

    2.கைகளை இடுப்பின் மீது வைத்துக் கொண்டு முழங்கையை முன்னோக்கிக் கொண்டு வரவேண்டும்.

    3.கைகளை மேல்நோக்கித் தூக்கி முலை காம்பைச் சுற்றி உள்ள தோல் பகுதியில் ஏதேனும் மாற்றம் உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

    4.மூன்று விரல்களைக் கொண்டு (ஆள்காட்டி விரல், நடு விரல் மற்றும் மோதிர விரல்) மார்பகத்தையும், மார்பகத்தைச் சுற்றி உள்ள பகுதிகளையும் அழுத்திப் பார்க்க வேண்டும்.

    5.இதைப் போல் ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டும்.

    இப்படிச் செய்வதால் மார்பகப் புற்றுநோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து விடலாம். ஏதேனும் ஐயப்பாடு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

    மார்பகப் புற்றுநோயை நம்மால் தடுத்துக் கொள்ள முடியும். உணவுக் கட்டுப்பாட்டுடன் சரியான உடல் எடையுடன் இருப்பது, தாய்ப்பால் கொடுப்பது, 25-30 வயதுக்குள்ளேயே குழந்தைப் பேற்றை நிறுத்திக் கொள்ளுவது ஆகியன மார்பகப் புற்றுநோயைத் தடுக்க உதவும்.

    மேலும் குடும்பத்தில் எவருக்கேனும் மார்பகப் புற்றுநோய் இருப்பின் 45-50 வயதிற்கு மேல் மேமோகிராம் என்னும் ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இது மார்பகப் புற்றுநோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிய உதவும். பெண்கள் நடைப்பயிற்சி செய்வதால் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுகிறது.

    மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்ததாகப் பெண்களை அதிக அளவில் கொடுமைக்குள்ளாக்குவது, கருப்பைவாய்ப் புற்றுநோய் ஆகும். இதன் அறிகுறிகள் பின்வருமாறு,

    1.இரண்டு மாதவிடாய்ச் சுழற்சிக்கு இடையே பெண்ணுறுப்பில் இருந்து ரத்தம் வடிதல்.

    2.பெண்ணுறுப்பில் இருந்து வாடை கலந்த நீர் வடிதல்.

    3.உடலுறவுக்குபின் பெண் உறுப்பில் சில நேரங்களில் வலி உண்டாகுதல் அல்லது ரத்தம் வடிதல்.

    யாருக்கு அதிகம் வருகிறது?

    1.18 வயதிற்கு முன் உடலுறவு கொள்ளுதல்

    2.அதிகமான ஆண்களுடன் உடலுறவு கொள்ளுதல்

    3.ஹீயுமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியின் தாக்கம்

    4.உடலுறவின் மூலம் பரவும் நோய்களான எச்.ஐ.வி, கிளமைடியா ஆகியவைகளின் தாக்கம்.

    5.புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெண்கள்.

    இந்தக் கொடுமையான நோயைத் தடுக்கும் ஒரே தடுப்பூசி எச்.பி.வி ஊசி ஆகும். வேறு எந்தத் தடுப்பூசியும் புற்றுநோயைத் தடுக்கக் கூடியதல்ல, பூப்பெய்துவதற்கு முன்பாகவோ அல்லது 18 வயதிற்கு முன்பாகவோ இதனைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

    இதனால் பெண்களுக்கு வரும் கருப்பைவாய்ப் புற்றுநோய் மட்டுமல்ல, பெண்ணின் கருவாய்ப் புற்றுநோய், யோனிப் புற்றுநோய், பாப்பிலோமா மரு, வாய்ப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் ஆகியவற்றில் இருந்தும் பாதுகாப்புப் பெறலாம்.

    பாதுகாப்பான உடலுறவு, புகைபழக்கம் தவிர்த்தல், பி.ஏ.பி. ஸ்மியர் எடுத்து ஆய்வு செய்து கொள்வது, மாதவிடாய்ச் சுழற்சி 28-ல் இருந்து 35 நாள்களுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது.

    நடைப்பயிற்சி செய்வதால் கருப்பைவாய்ப் புற்றுநோய் தடுக்கப்படுகின்றது. ஒரு வாரத்திற்கு 10-15 கிலோமீட்டருக்கு மேல் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

    எல்லா வகையான புற்றுநோய்களுக்கும் முழுமையாகக் குணப்படுத்தக் கூடிய சிகிச்சைமுறைகள் கண்டுபிடிக்கப் படவில்லை. எனவே வருமுன் காப்பது சாலச்சிறந்தது என்பதை மனத்தில் நிறுத்தி, இந்தத் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றிப் புற்றுநோயைத் தடுத்து, வாழ்க்கையை முழுமையான நலத்துடன் வாழலாம்.

    போன்- 75980-01010, 80564-01010.

    • சார்லி சாப்ளினை அடையாளம் காட்டும் பாத்திரமாக ஆனது டிராம்ப் என்ற பாத்திரம்.
    • சரோஜினி நாயுடு காந்திஜியிடம் சாப்ளின் ஒரு பெரும் நகைச்சுவை நடிகர் என்பதை விளக்கினார்.

    "சிரி; உலகமே உன்னுடன் சேர்ந்து சிரிக்கும். அழு; நீ மட்டும் தனியே அழுவாய்" என்பது உலகப் பழமொழி. உலகையே பல வருட காலம் தன்னுடைய நடிப்பால் சிரிக்க வைத்தவர் நடிகர் சார்லி சாப்ளின்.

    அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டு, பூங்காக்களில் தூங்கி சோகமாக இளமைப் பருவத்தைக் கழித்தவர், உலகையே சிரிக்க வைத்து மகிழ்ச்சியால் ஆட்டுவித்தார் என்றால் அது பிரமிப்பூட்டும் ஒரு விஷயம் தானே! அவரைப் பற்றிப் பார்ப்போம்.

    பிறப்பும் இளமையும்:

    சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் இங்கிலாந்தில் லண்டனில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி பிறந்தார். அவரது தந்தை நல்ல பாடகர், நடிகரும் கூட. தாயார் லிலி ஹார்லியோ நல்ல நடிகை, பாடகியும் கூட. குடிப்பழக்கத்தால் சாப்ளினின் தந்தை அவர் பத்தாம் வயதை எட்டும் முன்னரே மறைந்தார். தாயாருக்கோ மனோவியாதி ஏற்பட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சகோதரர் சிட்னியுடன் சாப்ளின் படாதபாடு பட்டார். சோகமான இளமைக் காலத்தில் பல நாட்கள் அவர் இரவில் பூங்காக்களில் படுக்க வேண்டியதாயிற்று. 1896-ம் ஆண்டு சாப்ளினும் அவரது சகோதரரும் பப்ளிக் போர்டிங் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். அதாவது அந்தப் பள்ளி அனாதைகளுக்கும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்குமான பள்ளியாகும். 18 மாதங்கள் அங்கே கழித்தார் சாப்ளின்.

    ஐந்து வயதில் மேடையில் பாட்டு:

    சார்லினுக்கு ஐந்து வயதாகும்போது அவரது தாயார் லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருந்தார். திடீரென்று பாதியில் அவரது தொண்டை அடைத்து விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் அவர் திகைத்தார். உடனே நிகழ்ச்சி அமைப்பாளர் சாப்ளினை மேடைக்கு இழுத்துச்சென்று, "பாடு" என்றார். அவரும் தனக்குத் தெரிந்த "ஜாக் ஜோன்ஸ்" என்ற பாட்டைப் பாடினார். ரசிகர்கள் அதை ரசித்து ஆரவாரம் செய்து நாணயங்களை வீசினர். உடனே சாப்ளின், "இந்தக் காசுகளை எடுத்துக் கொண்டபின் தொடர்கிறேன்" என்றார். இன்னும் ஆரவாரம் அதிகமாகி அதிகமான நாணயங்கள் மேடையில் வந்து விழுந்தன. பின்னால் அவர் மேடை நிகழ்ச்சிகளில் தைரியமாகப் பங்கேற்க இது உதவியது.

    குடும்பம்:

    29 வயதான சார்லி சாப்ளின் 1918-ல் 17 வயது இளம்பெண்ணான நடிகை மில்ட்ரெட் ஹாரிஸை மணம் புரிந்தார். சரியான பொருத்தம் இல்லை என்று விவாகரத்து செய்த அவர் தனது 35-ம் வயதில் 16 வயதுப் பெண்ணான லிடா கிரேயை மணந்தார். அதுவும் 'பிரேக்-அப்'பில் முடிந்தது. அடுத்து 1943-ல் 54 வயதான அவர் 18 வயதான ஓனா ஓநீல் என்ற மங்கையை மணந்தார். ஆனால் இந்த மணம் அவர் இறக்கும் வரை நீடித்தது. ஓனாவுக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தன. சாப்ளினுக்கு மொத்தக் குழந்தைகள் 11.

    டிராம்ப் என்ற பாத்திரம் உருவான விதம்:

    சார்லி சாப்ளினை அடையாளம் காட்டும் பாத்திரமாக ஆனது டிராம்ப் என்ற பாத்திரம். தான் டிராம்ப் ஆன விதத்தைப் பற்றி அவரே இப்படி சொல்லி இருக்கிறார்.

    "இது தற்செயலாக உருவான ஒரு பாத்திரம். கீஸ்டோன் ஸ்டுடியோவில் ஒரு நாள் ஓட்டலுக்கான செட் ஒன்று போடப்பட்டது. சீக்கிரமாக காமடியன் டிரெஸ் ஒன்றைப் போட்டு வருமாறு என்னை அனைவரும் வற்புறுத்தினர்."

    இப்படி வற்புறுத்தப்பட்ட சாப்ளின் மேக் -அப் அறைக்குச் சென்று தொளதொள பேண்ட் ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டார். அதற்கு மாறுபாடாக இருக்கும்படி இறுக்கமான கோட் ஒன்றை அணிந்தார். முகபாவங்களை மறைத்து விடாமல் இருக்கும் படி சின்ன மீசை ஒன்றை ஒட்ட வைத்துக்கொண்டார்.

    விசித்திரமான தொப்பி ஒன்றையும் அணிந்தார். பெரிய ஷூக்கள் இரண்டையும் போட்டுக்கொண்டபோது காமடி பாத்திரமான டிராம்ப் பாத்திரம் கச்சிதமாக உருவாகி விட்டது. செட்டில் அவரைப் பார்த்த அனைவரும் வியந்து பாராட்டினர். பொதுமக்களும் இந்த பாத்திரத்தை விரும்பி வரவேற்று ஏற்றுக் கொண்டனர்.7-2-1914-ல் வெளியானது 'தி டிராம்ப்' என்ற படம்.

    கீஸ்டோனில் உருவான அவரது 35 நகைச்சுவை டிராம்ப் படங்கள் அவருக்கு உலகில் தனி ஒரு இடத்தைப் பெற்றுத் தந்து விட்டது.

    ஏறிக்கொண்டே போன சம்பளம்:

    முதலில் வாரம் 150 டாலருக்கு ஒப்பந்தமான அவரது சம்பளம் சில வாரங்களில் 1250 டாலராக ஆனது. சில ஆண்டுகளிலேயே பல்லாயிரம் டாலராக உயர்ந்து விட்டது.

    அமெரிக்க ஜனாதிபதியை விட அதிகமாக ஆனது அவர் சம்பளம். அமெரிக்க ஜனாதிபதி வருடத்திற்கு 75000 டாலர் வாங்கியபோது 1916-ல் அவர் நியூயார்க்கில் மியூட்சுவல். பிலிம் கார்பொரேஷனுடன் ஆறு லட்சத்தி எழுபதாயிரம் டாலருக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடார். இதனால் அவரே ஒரு ஸ்டுடியோவை உருவாக்கினார். சொந்தமாக படங்களை எடுக்க ஆரம்பித்தார்.

    ஐன்ஸ்டீனுடன் சார்லி சாப்ளின்:

    பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1931ம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி லாஸ் ஏஞ்சல்சுக்கு விஜயம் செய்தார். சார்லி சாப்ளின் அவருக்குத் தான் நடித்த படமான 'சிடி லைட்ஸ்' என்ற படத்தை பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்க ஆசைப்பட்டு அதைப் பார்க்க வருமாறு அவரை வேண்டிக்கொண்டார்.

    இருவரும் காரில் செல்கையில் அங்கு குழுமியிருந்த மக்கள் கையை அசைத்து உற்சாகமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஐன்ஸ்டீனை நோக்கிய சார்லி சாப்ளின், "இந்த ஜனங்கள் ஏன் தெரியுமா உங்களை உற்சாகமாக வரவேற்கிறார்கள், அவர்களில் ஒருவருக்கும் உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை! அதனால் தான்! என்னை ஏன் தெரியுமா வரவேற்கிறார்கள்! என்னை எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள், அதனால் தான்!"என்றார். ஐன்ஸ்டீன் சிரித்தார்!

    காந்திஜியுடன் சாப்ளின்:

    1931-ம் ஆண்டு வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் வந்த காந்திஜியை சந்திக்க பெரிதும் விரும்பினார் சாப்ளின். சரோஜினி நாயுடு காந்திஜியிடம் சாப்ளின் ஒரு பெரும் நகைச்சுவை நடிகர் என்பதை விளக்கினார். டாக்டர் கத்தியால் என்பவரின் வீட்டில் தங்கி இருந்த காந்திஜி அவரைச் சந்திக்க மாலை ஆறரை மணிக்கு நேரம் ஒதுக்கினார். சாப்ளின் காந்திஜியிடம் இயந்திரப் பயன்பாட்டைப் பற்றிப் பேசினார். காந்திஜி இயந்திரங்களைத் தான் எதிர்க்கவில்லை என்றும் அதற்கு அடிமையாவதையே தான் எதிர்ப்பதாகவும் விளக்கினார். தொடர்ந்து ஏழு மணிக்கு நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திலும் சாப்ளின் கலந்து கொண்டார். காந்திஜியின் இயந்திரம் பற்றிய கருத்தைப் பின்னால் பூடகமாகத் தன் திரைப்படங்களிலும் அவர் புகுத்தினார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

    தி சர்கஸ் (1928):

    சாப்ளினுக்கு முதல் அகாடமி அவார்ட் வாங்கித் தந்த படம் இது. அப்போது ஆஸ்கார் பரிசு என்ற பெயரை இந்த விருது பெறவில்லை. இந்தப் படத்தை எடுக்கும்போது அவர் பெரிதும் துன்பப்பட்டார். மனைவி லிடா கிரேயுடன் விவாகரத்து; சாப்ளினை எல்லாவிதத்திலும் மட்டம்தட்ட லிடா கிரே செய்த செய்கைகள் – இவற்றால் அவர் கஷ்டப்பட்ட போதிலும் படம் வெளியாகி பெரும் வெற்றியைத் தந்தது.

    சிடி லைட்ஸ் (1931):

    இந்தப் படத்திற்காக சாப்ளின் மிகவும் கடுமையாக உழைத்தார். 32 மாதங்கள் இதற்காக அவர் உழைக்க வேண்டியதாக இருந்தது. 190 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது. இந்தக் காலத்தில் பேசும் படம் உருவாகி விட்டது. ஆனால் சாப்ளினுக்கோ அவரது பாத்திரம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தால் அதை உலகம் வரவேற்குமா என்ற சந்தேகம் எழுந்தது. துணிந்து வழக்கம் போல பேச்சே இல்லாத மவுனப் படமாகவே எடுத்தார். பத்திரிகை உலகம் போற்றியது. பொதுமக்கள் படத்தைப் பார்த்து பிரமித்தனர். லாஸ் ஏஞ்சல்சில் ஐன்ஸ்டீன் இதைப் பார்த்தார் என்றால், லண்டனில் பெர்னார்ட் ஷா சாப்ளின் பக்கத்தில் உட்கார்ந்து இதைப் பார்த்தார்.

    தி கிரேட் டிக்டேடர் (1940):

    1939-ல் இதை சாப்ளின் எழுதியபோதே ஹிட்லர் உலக அரங்கில் பெரிதும் பேசப்பட்டவராக ஆகி விட்டார். அவரது பாத்திரம் ஹிட்லரின் அதே மீசையைக் கொண்டிருந்தது. இந்தப் படத்தில் சாப்ளின் இரட்டை வேடத்தில் நடித்தார். ஒரு பாத்திரத்தில் யூத நாவிதராகவும் இன்னொரு பாத்திரத்தில் ஒரு சர்வாதிகாரியாகவும் நடித்தார். இது பெரும் பரபரப்பை உண்டாக்கிய படமாக ஆனது.

    அமெரிக்க வாசமும் தங்க அனுமதி மறுப்பும்:

    இரு முறை அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்ட அவருக்கு ஹாலிவுட்டில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆகவே அங்கேயே தங்க நிச்சயித்தார். 1914 முதல் 38 ஆண்டுகள் அங்கேயே வசித்தார்.

    என்றாலும் இடதுசாரி சிந்தனையாளரான அவருக்கு அமெரிக்க குடியுரிமை மறுக்கப்பட்டதோடு அங்கு தங்கவும் தடை விதிக்கப்பட்டது. 1952 செப்டம்பரில் தனது அமெரிக்க வாசத்தை ஒரேயடியாக முடித்துக்கொண்ட சாப்ளின் சுவிட்சர்லாந்து வந்து

    அங்கேயே தங்க ஆரம்பித்தார்.

    அவருக்குப் பிடித்த இடம் ஸ்காட்லாந்தில் உள்ள நார்ன் என்ற இடம். அங்கேயே அவர் அடிக்கடி சென்று தங்குவார்.

    நிதி உதவி:

    முதல் உலகப் போருக்குப் பின்னர் ஒட்டோமான் அரசில் ஆர்மீனியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கில் அவர்கள் கொல்லப்பட்டனர். உடனே சார்லி சாப்ளின் 150 லட்சம் அமெரிக்க டாலருக்குச் சமமான அளவில் பெரும் நிதியைத் திரட்டி ஆர்மீனியக் குழந்தைகள் வாழ வழி வகை செய்தார். அவரே நேரில் சென்று குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் அளித்தார். இதே காலத்தில் தான் அவரது 'தி கிட்' என்ற பிரபலமான படம் வெளியிடப்பட்டது.

    பிரபலமான டைம் பத்திரிகையில் வெளியான முதல் நடிகர் படம் அவருடையதே. 1925, ஜூலை 6ம்தேதியிட்ட இதழில் அவரது படம் வெளியாகவே உலகமே வியந்தது. இது அவருக்குப் பெரும் புகழைத் தந்தது.

    1972-ல் அவர் விசேஷ அகாடமி விருதைப் பெற்றார். 20 வருடங்கள் அமெரிக்காவிற்கே செல்லாமல் இருந்த சாப்ளின் இந்த விருதைப் பெறுவதற்காக அமெரிக்கா சென்றார்.

    சாப்ளின் மறைந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 1981 அக்டோபர் நான்காம் தேதி உக்ரைன் நாட்டு விண்வெளி வீராங்கனையான லியூட்மிலா கரக்கினா ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்தபோது அதற்கு 3623 சாப்ளின் என்று சாப்ளினை கவுரவப்படுத்தும் விதமாக பெயர் சூட்டினார். அவர் அவரது ரசிகை.

     

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    மறைவு: 1977-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அவர் மறைந்தார். 1978, மார்ச் மாதத்தில் அவரது சடலத்தை ஒரு கும்பல் திருடிக் கொண்டு போனது. ஆனால் அவர்கள் அடுத்த பதினோரு வாரங்களில் பிடிக்கப்பட்டனர். சடலம் மீட்கப்பட்டது.

    புத்தகங்கள்: அவர் தனது வாழ்நாளில் 'மை ட்ரிப் அப்ராட்', 'எ காமடியன் சீஸ் தி வோர்ல்ட்', 'மை ஆடோபயாகிராபி', 'மை லைப் இன் பிக்சர்ஸ்" ஆகிய நான்கு புத்தகங்களை எழுதினார். எல்லா இசைக்கருவிகளிலும் கை தேர்ந்தவரான அவர் பல பாடல்களையும் புனைந்ததுண்டு. தனது படங்களுக்குத் தயாரிப்பாளராகவும், இசை அமைப்பாளராகவும், திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராகவும் அவர் திகழ்ந்தார்.

    அனுபவ மொழிகள்:

    நீங்கள் பயப்படவில்லை என்றால் வாழ்க்கை என்பது அருமையான ஒன்று தான். வேண்டுவதெல்லாம் கொஞ்சம் தைரியம், கற்பனை அப்புறம் கொஞ்சம் பணம்!

    சிரிப்பு என்பது வலியை நிறுத்தி ஆறுதலைத் தரும் ஒரு டானிக். கீழேயே பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு நாளும் உங்களால் வானவில்லைப் பார்க்க முடியாது!

    • கொல்லூர் தாய் மூகாம்பிகை கோவிலை அடையும்போது நம்மையும் அறியாமல் ஒரு பக்தி உணர்வு தோன்றும் என்பது உண்மை.
    • கோயிலில் இருக்கக்கூடிய ஆகம விதிகள் பூஜை முறைகள் அனைத்தும் ஆதிசங்கரால் உருவாக்கப்பட்டவை.

    சென்ற வாரங்களில் மங்களூர்... உடுப்பி நகரங்கள் மற்றும் அந்த மாவட்டத்தை சார்ந்த முக்கியமான கோவில்களை கண்டோம். மேலும் பொழுதுபோக்கு அம்சங்கள் விளையாட்டு மற்றும் அழகிய கடற்கரை போன்ற விஷயங்களையும் அறிந்து கொண்டோம். இப்போது உடுப்பி மாவட்டத்திலேயே இருக்கின்ற உலகப் புகழ் பெற்ற தாய் மூகாம்பிகை என்ற அருள் நிறைந்த அன்னையை தரிசிக்க மங்களூரில் இருந்து அல்லது உடுப்பிலிருந்து போவதற்கான வழிகளும் வாய்ப்புகளும் பார்க்கலாமா..?

    சென்னையில் இருந்து மதியம் மங்களூர் செல்லும் தொடரி ஈரோடு- பாலக்காடு- கோழிக்கோடு வழியாக மங்களூர் அதிகாலைச் சென்று அடைகிறது. ரெயில் நிலையத்திலிருந்து வெளியே வரும் போதே பேருந்து நடத்துனர்களும் வாடகை வண்டி வைத்திருப்போர்களும் உடுப்பி... உடுப்பி... கொல்லூர்... கொல்லூர் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருப்பதை அறியலாம்.

    நமக்கு ஏற்றபடி வாடகை காரோ அல்லது பேருந்தையோ நமது மணிப்பர்சின் கனத்தை பொறுத்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வாடகை கார் இருந்தால் முன்பே சொன்னபடி போகும் வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள் எல்லாம் தரிசித்துக் கொண்டு செல்லலாம். குடும்பத்துடன் பிள்ளைகளை அழைத்துச் செல்லும்போது மழைக்காலங்கள் அல்லாத சீசனில் அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு விஷயங்களை அனுபவிக்கும்படியாக நம்முடைய பயணத்தை நாம் அமைத்துக் கொள்ளலாம்.

    மங்களூரில் இரண்டு ரெயில் நிலையங்கள் இருக்கின்றன. மங்களூர் ஜங்ஷன் மற்றும் மங்களூர் சென்ட்ரல் இந்த இரண்டு ரெயில்வே நிலையங்களில் இருந்தும் நேரத்திற்கு ஏற்றபடி ரெயில்கள். கொங்கண் ரெயில்வே என்று அழைக்கப்படும் கோவா- மும்பை செல்லும் தொடரிகளில் நாம் உடுப்பி மாவட்டம் குந்தாப்பூர் தாலுகாவில் உள்ள பைந்தூர்என்ற ரெயில் நிலையத்தை அடையலாம். இது ஏறக்குறைய 18 கி.மீ தொலைவில் உள்ளது. சில ரெயில்கள் குந்தாபுரில் நிற்கும்இது சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

    எனவே நமக்கு தேவையான நிலையம் வழியாக செல்லும் தொடரிகளை பதிவு செய்து கொள்ளலாம். பைந்தூர் ரெயில் நிலையம் கொல்லூருக்கு அருகில் உள்ளது, இறங்கிக் கொள்ளலாம். ஆனால், குந்தாபூரிலிருந்து பைந்தூர் வழியாக பேருந்தில் பயணிக்கும்போது ஒரு அழகான இடத்தில்... இடது பக்கம் அரபிக் கடலும் வலது பக்கம் நம் நலம் விசாரித்து நம்முடன் வரும் அழகிய நதியும் நம்மை அரவணைத்துச் செல்ல... சிறிது தூரம் நாம் கடலுக்குள் செல்வதைப் போல நடுவில் உள்ள அந்த சாலையில் பயணிப்பதும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய பயணமாக மழைக் காலங்களில் அமையும்.

    தூங்கிக் கொண்டே வரும் வழியில் சில்லென்ற காற்று முகத்தில் பட சற்றே கண்விழித்துப் பார்த்தபோது கடலுக்கு நடுவில் பேருந்து போகிறதோ என்ற உணர்வு அந்த இடத்தை கடக்கும் போது எனக்கு ஒரு முறை கிடைக்கப்பெற்றது.

    வலப்பக்கம் நதியின் ஓரம் நிமிர்ந்த தென்னை மரங்களின் கீற்றுக்கள் ஆடி நம்மை வரவேற்பதை போல பசுமையாகவும்.. இடது பக்கம் இறங்கி கால் நனைத்து விளையாடலாம் போன்ற கடலையும் ஒரு சேர காணும் காட்சி மறக்க முடியாத மகிழ்ச்சியான நிமிடங்களாக இன்னும் இதயத்தில் நிழலாடிக் கொண்டிருக்க..

     

    இப்படியான இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே நாம் கொல்லூர் தாய் மூகாம்பிகை கோவிலை அடையும்போது நம்மையும் அறியாமல் ஒரு பக்தி உணர்வு தோன்றும் என்பது உண்மை.

    பேருந்து நிலையம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டாலும் அங்கிருந்து கோவிலுக்கு செல்வதற்கான ஆட்டோக்கள் நமக்கு கிடைக்கும். ஆட்டோவிலேயே நாம் கோவிலை அடையலாம்.

    சவுபர்ணிக்கா நதிக்கரையோரம் அமைந்திருக்கின்றது கோவில். மழைக்காலங்களில் சவுபர்ணிக்கா கரை புரண்டு ஓடுவதை காண்பதற்கு மெய்சிலிர்க்கும். ஆனால் குளிப்பதற்கு சற்று தொலைவிலுள்ள ஆற்றுக்கு (பல்குணி) சென்று குளித்து வரவேண்டும்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு கோடைக்காலத்திலும் நதி நீரில் நன்றாக குளித்துவிட்டு மகிழ்ச்சியாக வேட்டி சட்டையுடன் கோவிலுக்கு ஆண்களும்... பாரம்பரிய உடையில் பெண்களும் வருவார்கள். இப்போது கோடைக்காலத்தில் அந்த நதி ஓடைப் போன்று காட்சியளிக்கிறது.

    முந்தைய காலத்தில் ஒரு அரக்கன், தேவர்கள் முனிவர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், சாகா வரம் வேண்டி சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்து வந்ததை அறிந்த தேவி மூகாம்பிகை, அவன் வரத்தை கேட்பதற்று முன்பாகவே அவனை ஊமை ஆக்கிவிட்டாள். அதனால் அவன் மூகாசுரன் (கன்னடத்தில் மூகா என்றால் ஊமை என்று பொருள்) என்று அழைக்கப்பட்டான். இந்த நிகழ்ச்சியினால் அம்பாள் மூகாம்பிகை என பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.

    மேற்குத் தொடர்ச்சி மலையில் குடச்சாத்திரி என்ற மலையின் அடிவாரத்தில் அமைதியாக இருக்கும் ஊர் கொல்லூர். இத்தலம் கொல்லூர் என்று அழைக்கப்படுவதற்கு காரணம் முன்னொரு காலத்தில் கோல மகரிஷி என்பவர் சிவனை நோக்கி தவமிருக்க, சிவபெருமானும் காட்சியளித்து "என்ன வரம் வேண்டும்" என்று கேட்டருள, உலக மக்கள் யாவரும் ஒற்றுமையாய் வாழ பொழிய வேண்டும் மும்மாரி. அனைத்து உயிர்களும் செழித்து இருக்க வேண்டும்.. எல்லோரும் ஆயுள் ஆரோக்கியமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும். எனக்கென்று எதுவும் வேண்டாம் என கோல முனி கேட்க ஈசனும் அவ்வாறே மனமகிழ்ந்து ஒரு லிங்கத்தை அமைத்துக் கொடுக்க...

    கோல மகரிஷி, "சக்தி இல்லாமல் லிங்கத்தை வணங்குவது எப்படி" என வினவ லிங்கத்தின் மத்தியில் இருந்த ஸ்வர்ண (தங்க)ரேகையை காட்டி இதன் இடது பக்கத்தில் கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும் அரூபமாக இருப்பதாகவும் ஸ்வர்ணரேகையின் வலப்புறம் பிரம்மா விஷ்ணு சிவபெருமானும் இருப்பதாகவும்... அந்த லிங்கத்தை நாள்தோறும் பூஜித்து வருமாறு கோல மகரிஷிக்கு வரம் அருள இந்த ஊர் கொல்லுரானதாக அறிகிறோம்.

    இங்கு மகிஷாசுரன் என்ற அரக்கன் அனைவரையும் துன்புறுத்த அனைவரின் நலத்தை விரும்பும் கோல மகரிஷி அம்பாளை நோக்கி கடுந்தவம் புரிந்தார். முனியின் வேண்டுகோளுக்கு இறங்கி தேவகணங்களின் தலைவரான வீரபத்திரர் உதவியுடன் அசுரனோட போரிட்டு அவனை அழித்தாகவும் கூறப்படுகிறது.

    இந்த இடம் கொல்லூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மாரண கட்டா என வழங்கப்படுகிறது.

    இர.தேன்மொழி, பெங்களூர்

    இர.தேன்மொழி, பெங்களூர்

     

    ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்தில் அவர் புண்ணிய பாரத தேசமெங்கும் புனித யாத்திரை செய்தபோது, கொல்லூர் மக்கள் தங்க ரேகை மின்னக்கூடிய லிங்கத்தில் அம்பாள் இருந்தாலும் அன்னையின் அருள்வாய்ந்த முகத்தை எங்களால் காண முடியவில்லை என்று கேட்க... ஆதிசங்கரர் அம்பாளை ஆழ்ந்த தியானத்தில் வணங்க....அவருக்கு மூகாம்பிகை நான்கு கைகளுடன்.. கைகளில் சங்கு சக்கரம் பத்மாசன கோலத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்க அப்படியே தெய்வ சிலைகள் வடிக்கும் சிற்பியிடம் விவரித்து அம்பாளின் அழகிய உருவம் அருளின் வடிவமாக நிறுவப்பட்டது. ஸ்வர்ண ரேகையோடும் லிங்கத்தின் பின்புறம் மூகாம்பிகை சிலை வடிவமாக ஸ்தாபிக்கப்பட்டது. அதன் அடியில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்திருப்பதை அறிகிறோம். அந்த சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக மக்களுக்கு நம்பிக்கை. எனவே இங்கு கேட்டவை கிடைக்கிறது.

    இங்குள்ள சரஸ்வதி மண்டபத்தில் கலைகள் அரங்கேற்றப்படுகின்றன. பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளுக்கு அக்ஷராப்யாசம் என்ற வழிப்பாடு முறையில் ஒரு தட்டில் அரிசி நெல் குவித்து முதலில் "அ", மற்றும் "ஓம்" போன்ற எழுத்துக்களை குழந்தைகள் விரல் பிடித்து எழுதுகிறார்கள். இதன் மூலம் அந்த குழந்தைகள் கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. குருவாயூரில் மலையாள சகோதரர்கள் குழந்தைக்கு சோறு ஊட்டுவது போல்.. குழந்தைகளை இங்கு அழைத்து வந்து முதன் முதலாக கல்வி தொடர்பான பணியைத் தொடங்குகிறார்கள்.

    கோயிலில் இருக்கக்கூடிய ஆகம விதிகள் பூஜை முறைகள் அனைத்தும் ஆதிசங்கரால் உருவாக்கப்பட்டவை. அதை இன்றளவும் தொடர்ந்து தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.

    இந்த கோவிலில் குத்துவிளக்கு ஐந்து முகத்திலும் திரி வைத்து நெய் விளக்கு ஏற்றி வணங்குவது அம்பாளுக்கு சிறப்பு வழிபாடாக இருக்கிறது. தங்க ரதம் பக்தர்களின் வேண்டுதலுக்கு எற்ப வலம் வருகிறது.இதற்கு கட்டணம் உண்டு. இங்கு வெளிப்பிரகாரத்தில் வீரபத்திரருக்கு தனி சன்னதி உள்ளது.

    கொல்லூருக்கு வருபவர்கள் மூகாம்பிகை தரிசிப்பதோடு நின்று விடாமல் இரண்டு..இரண்டரை மணி நேர பயணத்தில் குடச்சாத்ரி மலையின் மேலே மூகாம்பிகை தரிசனம் அளித்ததாக (ஜனனி... ஜனனி என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?) கூறப்படும் மலையில் ஏறி நாம் அங்கிருக்கக் கூடிய முழுமையான இயற்கை அழகை ரசிக்க வேண்டும் என்றால், அந்த அருமையான உணர்வை பெற வேண்டும் என்றால் அங்கு செல்வதற்கு காலை முதல் மதியம் வரை பிரத்தியேகமான ஜீப்புகள் இயக்கப்படுகின்றன.

    நம்மை குறிப்பிட்ட தூரம் வரை ஜீப்பில் அழைத்துச் செல்லும் வழியில் காடுகளையும் புல்வெளிகளையும் ரசித்துக் கொண்டே செல்லலாம். அதன் பிறகு அங்கிருந்து ஒரு சில கிலோமீட்டர்கள் நாம் மலையில் ஏற வேண்டியதாக இருக்கும். தகுந்த பாதுகாப்புடன் செல்வது அவசியம். தனி நபர்களாக செல்வது சரியாகாது. மழைக்காலங்களில்அட்டைப் பூச்சி போன்றவைகளும் வழித்தடத்தில் கற்கள் சரிவதற்கும் வாய்ப்பிருக்கிறது. மேலே சற்றே செங்குத்தான இடமாக ஏறுவதற்கு கடினமாக இருந்த போதும் இறுதியாக மலை உச்சியில் ஏறிய போது நமக்கு நாம் பட்ட அசௌகரியங்கள் மறைந்து ஒரு அமைதியான.. நம்முடைய ஆத்மாவை நாமே சுயதரிசனம் செய்யக்கூடிய ஒரு தனிமையான பசுமையான சூழலில் நாம் இருப்பதை உணர முடியும்.

    அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து சிலர் அமைதியாக தியானம் செய்வதையும் காண முடியும். பக்கத்தில் இருக்கின்ற மலை சரிவுகளில் கணபதி குகை உள்ளிட்ட சில குகைகள் இருப்பதாக சொல்கிறார்கள் சில குளங்களும் உள்ளன. அதை நாம் பகல் பொழுதில் கூட்டமாக சென்று பார்ப்பது பாதுகாப்பானதாக இருக்கக்கூடும்.

    இவ்வாறாக மூகாம்பிகை காட்சியளித்ததாக நம்பப்படும் குடச்சாத்ரி மலைப்பகுதி ஒரு ரம்யமான சூழலில் தெய்வீக வாசம் கமழ்வதை நாம் நிச்சயமாக உணர முடியும். எனவே கொல்லூர் செல்பவர்கள் காலை நேரத்தில் மலைக்கு பக்தி பரவசமாகவோ... ட்ரெக்கிங் போக வேண்டும் என்றாலோ... அதற்கேற்ற படி உங்களுடைய திட்டத்தை அமைத்துக் கொண்டால் பயணம் சிறப்பாக அமையும்.

    இப்போது வரவிருகின்ற தசரா பண்டிகை காலம் விசேஷமாக கொண்டாடப்படும். முப்பெரும் தேவிகளாக சரஸ்வதி லட்சுமி பார்வதி மூன்று தெய்வங்களும் ஒன்றிணைந்து இங்கு கொலுவிருப்பதால் தசரா பண்டிகைக்கான சிறப்பு இந்த கோவிலை தரிசனம் செய்வதன் மூலம் நிறைவடையும் என்று சொல்லலாம்....!

    • ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறவியிலேயே மேதையாக இருப்பார்கள்.
    • வளர்பிறையும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் சந்திர தரிசனம் செய்தால் கண் பார்வை குறைபாடுகள் அகலும்.

    காலபுருஷ தத்துவப்படி 27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ரோகிணி. இதன் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரம் சுக்கிரனின் வீடான ரிஷப ராசியில் உள்ளது. இந்த நட்சத்திரத்தில் உச்சமாகும் கிரகம் சந்திரன். நீச்சமாகும் கிரகம் கேதுவாகும். இதன் உருவம் தேர் வண்டி. இதன் அதிதேவதை கிருஷ்ணர். இது கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரமாகும். இது வானில் சக்கரம் போலவும், தேர் போலவும் காட்சியளிப்பதால் இதற்கு ரோகிணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் பெயர் சகடம், ரோகிணி ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலின் முகத்தை ஆள்கிறது. அதாவது முகம், வாய், நாக்கு மற்றும் கழுத்து பகுதிகளை ஆளுமை செய்கிறது.

    ரோகிணி நட்சத்திர பொதுபலன்கள்

    இது சந்திரனின் உச்ச நட்சத்திரம் மற்றும் சுக்ரனின் வீடான ரிஷபத்தில் உள்ள நட்சத்திரம் என்பதால் இதில் பிறந்தவர்கள் மிக அழகாக இருப்பார்கள். தங்களை அலங்கரித்துக் கொள்வதில் அதீத விருப்பம் உள்ளவர்கள். பிறரை ஈர்க்கும் கவர்ச்சியான முகப்பொலிவு, உடல் அமைப்பு உள்ளவர்கள்.குடும்ப உறவுகளின் உணர்விற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

    தனது அன்பினால் பிறரை வசப்படுத்துவதில் வல்லவர்கள்.

    பெற்றோர்கள் மேல் மிகுந்த மதிப்பு, மரியாதை உண்டு. சந்திரனைப் போல் குளிர்ந்த தேகம் உள்ளவர்கள்.

    உணவுப் பிரியர்கள். இனிப்பான, குளிர்ச்சியான, ஆடம்பர உணவு உண்பதில் ஆர்வம் உண்டு. புத்தி சாதுர்த்தியம் நிறைந்தவர்கள். பிறருக்கு உதவி செய்யும் மனோபாவம் உண்டு. அதிக நண்பர்கள் உண்டு. எதிர்பாலின நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள்.

    இயற்கையை ரசிப்பவர்கள். கலை உணர்வு நிரம்பியவர்கள். கலைத்துறையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துக் கொள்வார்கள். கதை, கட்டுரை, கவிதை, ஒவியம் போன்றவற்றில் விருப்பம் உண்டு. வெளிநாட்டு வாழ்க்கையில் நாட்டம் உண்டு.

    பிறருக்கு உபதேசிக்கும் குணம் உண்டு. நல்ல சுறுசுறுப்புடன் துடுக்குத்தனம் நிறைந்து இருக்கும். மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டுவார்கள். எதிரிகளை ராஜ தந்திரத்துடன் வீழ்த்துவார்கள்.

    அதிர்ஷ்டம், செல்வாக்கு நிரம்பியவர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம் உள்ளவர்கள். கவுரவப் பதவி உண்டு. செல்லும் இடம் எல்லாம் மதிப்பு, மரியாதை இருக்கும். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை அயராது பாடுபடுவார்கள். கொள்கை பிடிவாதம், லட்சியம் உண்டு. குல கவுரவம் உள்ளவர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்க்கும், தாய்மாமனுக்கும் தோஷத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என பொதுவான கருத்து உண்டு.

    கல்வி

    இந்த ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறவியிலேயே மேதையாக இருப்பார்கள். வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை அப்படியே மனதில் பதிய வைத்து பரிட்சை எழுதி பாஸ் ஆகுவார்கள். அக்ரிகல்சர் (விவசாயம்) தொடர்பான படிப்பு, கலைத்துறை, கலைகள் சார்ந்த படிப்பு, பொறியியல் நிர்வாகம் சார்ந்த படிப்பு, ஆசிரியர் படிப்பு, அழகுக் கலை சிறப்பாக இருக்கும்.

    தொழில்

    ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாக திறமை உள்ளவர்கள். எதிலும் கர்வம் கொள்ளாதவர்கள். எந்த வேலையாக இருந்தாலும் பொறுப்பாக எடுத்து செய்வார்கள். அதனால் எந்த தொழிலிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தன்னுடைய பணியாளர்களை மதிப்புடன் நடத்துவார்கள்.இவர்கள் கலைத்துறையில் சிறந்து விளங்கு வார்கள். உணவு சார்ந்த தொழில், ஓட்டல், லாட்ஜ், பால் பண்ணை, அழகு நிலையம், சார்ந்த துறை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். அது சார்ந்த விற்பனை செய்து லாபத்தை குவிப்பார்கள். குறிப்பாக சமையலில் சிறப்பாக செயல்படுவார்கள்.

    தனம், வாக்கு குடும்ப ஸ்தானம்

    பேச்சுத்திறமையால் எதையும் சாதிப்பதில் வல்லவர்கள். தன்னையும் தன்னைச் சார்ந்த குடும்பத்தையும் கனிவுடன் கவனிப்பார்கள். சுக்ரன் வீட்டு சந்திரன் என்பதால் சுக போக வாழ்க்கையை விரும்புபவார்கள்.

    நிலையான, நிரந்தரமான வருமானம் உண்டு. பணப்பிரச்சினை என்பது இவர்களுக்கு வராது. அதாவது தேவை எதுவோ, எவ்வளவோ அது சரியான நேரத்திற்கு கண்டிப்பாகக் கிடைத்துவிடும்.நினைத்ததை நினைத்தபடி அடைய வேண்டும் என விரும்புபவர்கள். அதனால் காதலிலும் தான் விரும்பியவரை விடாப்படியாக கடைசி வரை போராடி திரு மணம் செய்து கொள்வார்கள்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

     

    தசா பலன்கள்

    சந்திர தசா

    ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திரன் ராசி அதிபதி என்பதால் முதல் 10 வருடங்கள் சந்திரன் திசை நடக்கும். இது ஜென்ம தாரையின் நட்சத்திரம். சந்திரன் நீர் கிரகம் என்பதால் குழந்தை சளி, வீசிங், இருமல், ஜீரம், ஒவ்வாமை, அலர்ஜி, நீர் கண்டம் போன்ற உடல் பாதிப்புகள் இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் பிரச்சினை உண்டாகும். அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும்.

    செவ்வாய் தசா

    ரோகிணி நட்சத்திரத்திற்கு 2-வதாக வரக்கூடிய தசா செவ்வாய். இது தன, சம்பத்து தாரையின் தசாவாகும். இதன் கால அளவு 7 ஆண்டுகள்.

    இது குழந்தை பருவம் என்பதால் கல்வியில் சிறப்பாக விளங்குவார்கள். கோப உணர்வு அதிகமாக இருக்கும். தாய், தந்தைக்கு தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். குடும்ப முன்னேற்றத்திற்கு தேவையான ஸ்திர சொத்துக்கள் சேரும். சில குழந்தைகள் இளம் வயதில் சம்பாதிக்க துவங்குவார்கள். சுப விரயங்கள் அதிகமாகும்.

    ராகு தசா

    மூன்றாவதாக வரக்கூடியது ராகு தசா. இதன் தசா வருடம் 18 ஆண்டுகள். இது விபத்து தாரையின் நட்சத்திரம் என்பதால் ராகு தசை காலத்தில் இவர்கள் அதிகம் போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். உயர் கல்வியிலும், புதிய வேலை கிடைப்பதிலும் கூடுதல் முயற்சி தேவைப்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். தேவையற்ற காதல் நட்பு, பழக்க வழக்கங்களால் பிரச்சினைகள் உண்டாகலாம். சிலருக்கு இளம் பருவத்தில் தவறான நட்பு, திருமணத்தால் வாழ்க்கை நரகமாகும். சிலருக்கு சுபிட்சமான வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை அமையும்.

    குரு தசா

    ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4-வதாக வரக் கூடியது குரு தசா. குரு தசை 16 வருடங்கள். இது சேஷம தாரையின் நட்சத்திரம் என்பதால் வாழ்ககையில் ஏற்றம் மிகுதியாக இருக்கும். நிதி நிலை முன்னேறும், நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.நிலையான தொழில், உத்தியோகம், வீடு, வாகனம் என வாழ்க்கையில் செட்டிலாகும் காலம். வாழ்வில் சாதனை படைத்து, சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்க உகந்த காலம்.

    சனி தசா

    ஐந்தாவதாக வரக்கூடிய சனி தசா. இது பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் கால அளவு 19 ஆண்டுகள். கோபம், பிடிவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதாக இருக்கும். இந்த காலத்தில் ஏற்றமும், சமூகத்தில் பெயர், புகழ் உண்டாகும். செல்வமும், செல்வாக்கும் அதிகரிக்கும். வாழ்க்கையில் சாதனைகள் பல படைப்பீர்கள். காரணமாக சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றும். குறிப்பாக முன்னோர் களின் பரம்பரை வியாதிகளின் தாக்கம் உருவாகும்.

    புதன் தசா

    ஆறாவதாக வரக்கூடியது புதன் தசா. இது 17 ஆண்டுகள் நடக்கக் கூடிய தசாவாகும். சாதக தாரையின் தசா என்றாலும் வயோதிகம் காரணமாக சுப பலன்களை அனுபவிக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. உயில் எழுதுவது, பாகப்பிரிவினை போன்ற முயற்சியில் ஈடுபடுவார்கள். தன்னம்பிக்கை குறைந்து மனக் குழப்பம் அதிகமாக இருக்கும்.சுப கிரகங்களின் பார்வை இருப்பின் சுப பலன்கள் கிடைக்கும்.

    ரோகிணி நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள்

    இந்த நட்சத்திர அதிபதி சந்திரன். இடப்பெயர்ச்சிக்கு காரக கிரகம் என்பதால் இந்த நட்சத்திர நாளில் இடப்பெயர்ச்சி, வீடு மாற்றம் செய்யலாம். இது கால புருஷ லக்னத்திற்கு இரண்டாம் வீடு என்பதால் உடல் உறுப்பில் வாயைக் குறிக்கும். சந்திரன் உணவை குறிக்கும் கிரகம் என்பதால் இந்த நட்சத்திர நாளில் குழந்தைகளுக்கு முதன் முதலாக உணவு ஊட்டலாம். ரோகிணி நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தால் பல மடங்கு புண்ணிய பலன்கள் பெருகும். அதே போல் முதன் முறை ஒருவரை வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கவும், விருந்திற்கு முதன் முதலாக செல்லவும் உகந்த நட்சத்திரம்.

    கால புருஷப்படி வலது கண்ணைக் குறிக்கும் ராசி ரிஷபம். இடது கண்ணைக் குறிக்கும் நட்சத்திரம் ரோகிணி என்பதால் இந்த நட்சத்திர நாளில் கண் சிகிச்சை செய்யலாம்.

    வளர்பிறையும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் சந்திர தரிசனம் செய்தால் கண் பார்வை குறைபாடுகள் அகலும். முகம் பொலிவாகவும், வசீகரமாகவும் இருக்கும்.கலை நிகழச்சிகள் நடத்த, கலைகள் கற்க, சாந்தி முகூர்த்தம் நடத்த, பெண்களிடம் காதலை வெளிப்படுத்த, உணவு விடுதி, தங்கும் விடுதிகள் துவங்க, ருது சாந்தி செய்ய, கிணறு வெட்ட, வாகனம் வாங்க ஏற்ற நட்சத்திரம் ரோகிணி.

    நட்சத்திர பட்சி : ஆந்தை

    யோகம் : சவுபாக்கியம்

    நவரத்தினம் : முத்து

    உடல் உறுப்பு : நெற்றி

    திசை : கிழக்கு

    பஞ்சபூதம் : நிலம்

    அதிதேவதை : பிரம்மா

    நட்சத்திர மிருகம் : ஆண் நாகம்

    நட்சத்திர வடிவம் : தேர், வண்டி, சக்கரம்

    அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

    நன்மை தரும் நட்சத்திரங்கள்:

    சம்பத்து தாரை. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

    சேம தாரை: புனர்பூசம், விசாகம். பூரட்டாதி.

    சாதக தாரை: ஆயில்யம், கேட்டை, ரேவதி

    பரம மிக்ர தாரை: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.

    பொதுவான பரிகாரங்கள்

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் விரதம் இருந்து மகா விஷ்ணுவை, கிருஷ்ணரை வழிபட வறுமை, தரித்திரம், பசிப்பிணி அகன்று செல்வச் செழிப்பு உண்டாகும்.

    ஜென்ம நட்சத்திர நாளில் அஷ்டலட்சுமியை வழிபட வாழ்நாள் முழுவதும் வெற்றிமேல் வெற்றி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    சாதக தாரையான 6-வது நட்சத்திர நாளில் ஆதிசேஷனை தொடர்ந்து வழிபட வளமான வாழ்க்கை அமையும். நாவல் மர விருட்சம் உள்ள கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    நாகாபரணம் தரித்த அம்மன் வழிபாடு சிறப்பு.

    • ஒரு மனிதனின் முழுமையான ஆயுட் காலம் என்பது 120 வயது.
    • மனித உடலினைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

    இன்றைய கட்டுரையில் மனிதனின் வயது கூடும் போது ஏற்படும் மாற்றங்களை பார்ப்போம்.

    கருவில் வளரும் காலத்தில் இருந்தே மனிதனுக்கு ஒவ்வொரு நாளும் வயது கூடிக் கொண்டுதான் இருக்கின்றது. அதனை குழந்தை பருவம், விடலை பருவம், இளமை பருவம், முதுமை பருவம் என நம் முன்னோர்கள் பிரித்து வைத்தனர்.

    40 வயதில் நாய் குணம் என்றனர். 60 வயதில் ஓய்வு பெறும் காலம் என்றனர். 60-ம் கல்யாணம், 80-ம் கல்யாணம் என்றனர். ஒரு மனிதனின் முழுமையான ஆயுட் காலம் என்பது 120 வயது என்றனர்.


    பிறந்த நாளில் இருந்து வயது கூட கூட நம் வெளித் தோற்றத்தில் மாறுதல்கள் ஏற்படுவதினை நம்மால் பார்க்க முடிகின்றது. ஆனால் நம் உடலின் உள்ளே உள்ள உறுப்புகளில் ஏற்படும் மாற்றத்தினை நம்மால் பார்க்க முடிவதில்லை.

    இன்று ஒவ்வொரு நாட்டிலும் மனித உடலினைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதில் சில ஆய்வுகள் கூறுவது மனித உடலின் மூலக் கூறுகளிலும், நுண்ணுயிர்களிலும் இரண்டு கால கட்டத்தில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். ஒன்று நாற்பது வயதில். மற்றொன்று 60 வயதில். இந்த கால கட்டங்களில் ஏற்படும் மாறுதல்களால் சில உடல் நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர்.

    மேலும் புரத அளவின் மாறுபாடு (குறைபாடு) சுமாராக 35 வயது, 60 வயது, 78 வயதுகளில் ஏற்படு வதாக குறிப்பிடுகின்றனர்.

    தலை முடி நரை, சரும சுருக்கம் இவை நமக்கு கண்ணுக்குத் தெரியும் ஒன்று என்றாலும் உடலினுள் உள்ள உறுப்புகள் திசுக்கள், செல்கள் இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தெரிவதில்லை. இந்த மாற்றங்கள்தான் உடல் நல பாதிப்புகளுக்கு காரணம் என்கின்றனர். இருதய பாதிப்பி னையும் குறிப்பிட்டே சொல்கின்றனர்.

    இந்த ஆய்வுக்காக 25 முதல் 75 வயது வரையுள்ள நபர்களை பல வருடங்கள் ஆய்வு செய்தனர். பல ரத்த பரிசோதனைகள் ஒவ்வொரு நபருக்கும் செய்யப்பட்டது.

    வயது கூடுதல் காரணமாக ஏற்படும் மாறுதல்களையும் கண்டறிய முடிந்தது. ஆக முதுமை எப்படி, எதனால் ஏற்படுகின்றது. நோய்களின் பாதிப்பு எப்படி இருக்கும் என பல பிரிவுகளில் கண்டறிய முடிந்தது.

    மூலக்கூறுகளும், நுண்ணுயிர் மாற்றங்க ளும் 81 சதவீதம் வரை 40 வயதிலும், 60-ஐ நெருங்கும் போதும் ஏற்படுவது உறுதி செய்ய முடிந்தது. பொதுவில் 60 வயதில் ஏற்படுவதற்குக் காரணம் அவர்கள் வாழ்வின் பொறுப்புகளை, சவால்களை சந்திக்கும் காலம் என்பதால்தான். மேலும் முறையான உணவு, உடற்பயிற்சி இன்மையும் முக்கிய காரணம் ஆகின்றது என்றனர்.

    ஆய்வில் அவர்கள் மேலும் குறிப்பிட்டு உள்ளது 40 வயதிலேயே மாறுதல்கள் ஏற்படுவதற்கான காரணம் மது, டீ, காபி, அதிக கொழுப்பு இவைகளை அதிகமாக எடுத்து கொள்வதினை காரணமாக சுட்டிக் காட்டினர். சதை, சருமம், இருதயம் இவை பாதிப்பினை அடைவதாகக் குறிப்பிட்டு உள்ளனர்.


    60 வயதில் மூலக் கூறுகளில் ஏற்படும் மாறுதல்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, இருதய பாதிப்பு, சிறு நீரக செயல்பாடு, மாவு சத்து உணவு அதிகம் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டு உள்ளனர்.

    ஆரோக்கியமான முதுமை என்ற கருத்தினைக் கொண்டுதான் இந்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும் தொடர்கின்றன. சர்க்கரை நோய், மறதி நோய் இவைகளை ஆரம்ப காலத்திலேயே கண்டு பிடித்து விட்டால் பாதிப்புகளை மிக அதிக அளவில் குறைத்து விடலாம் என்கின்றனர்.

    'நம் உடலில் மூலக் கூறுக ளும், நுண்ணுயிர்களும் ஏராள மான வேகமான மாறுதல்களை மேற்கொள்கின்றன. காரணம்- வளர்ச்சி, வாழும் முறை, சூழ் நிலை, மரபு, நோய் ஆகியவை ஆகும். இவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயல்படுகின்றன. உணவு முறை குடல் நுண்ணுயிர்களுக்கு பாதுகாப்பானதாக அல்லது பாதிப்பானதாக அமையலாம்.

    பாதிப்பானதாக அமையும் போது ஹார்மோன் சுரப்பதில் குறைபாடுகள் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். இதனால தான் உடலை நோ யின்றி பாதுகாப்பது மிக முக்கியமாகின்றது.

    ஆயுளும், ஆரோக்கியமும் கூடிய வாழ்க்கையினை நாம் மேற்கொள்வது அவசியம் ஆகின்றது. ஆதி காலம் முதலே.

    இளமையின் அடிப்படை என்பது (இங்கு இளமை என குறிப்பிடப்படுவது ஆயுளும், ஆரோக்கியமும்தான்) மனித வாழ்வில் முக்கிய அங்கம் வகித்துள்ளது. சமீப கால ஆய்வுகள் வாழ்க்கை முறையின் மாற்றங்கள் எனும் வாழும் முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூல மாக அதிக நன்மைகளைப் பெற முடியும் என்கின்றன.

    இருதய ஆய்வு விஞ்ஞானிகள் 8 வகை யான மாற்றங்கள் உடலில் நல்ல மாற்றங் களை கொண்டு வரும் என்கின்றனர்.

    * சீரான எடை, புகையிலை தவிர்த்தல் (பீடி, சிகரெட் உள்பட), 7 முதல் 9 மணி நேர தூக்கம், சுகாதாரம், கொழுப்பு, உயர் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இன்றி இருத்தல்.

    நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருத்தல் ஆகியவையே அதிக நன்மைகளை தரும் என்று வலியுறுத்துகின்றனர்.

    2023-ல் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கையில் நாம் பொதுவில் கூறும் பயிற்சிகளான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சற்று வேகமாக பயிற்சிகள் எடுத்தல், (உதாரணம்) ஓடுதல் போன்றவை தசைகளை வலுவாக, உறுதியாக வைக்கின்றன. எடை தூக்குதல் என்பது சிறிய அளவு எடைதான்.

    பயில்வான் போல் அல்ல? இவைகள், இப்பயிற்சிகள், இள வயதின் இறப்பு விகிதத்தினை வெகுவாய் குறைக்கின்றன என 10 வருட கால ஆய்வின் முடிவாக கூறுகின்றனர்.

    சுமார் 150 முதல் 225 நிமிடங்கள் ஒரு வாரத்திற்கு நடைபயிற்சி, சைக்கிள் போன்ற பயிற்சிகள், வாரத்திற்கு 75 நிமிடங்கள் வேகமான உடற் பயிற்சிகள், வாரத்திற்கு 2 அல்லது 3 முறை தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் போன்றவை இருதய நோய் பாதிப்பு போன்றவற்றினை வெகுவாக குறைக்கின்றன. இவை அனைத்தும் விழிப்புணர் விற்காக கூறப்பட்டுள்ளவை. தானே மனம் போல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

    தகுந்த பயிற்சியாளரின் ஆலோசனை இன்றி எந்த பயிற்சியினையும் மேற்கொள்வது தவறு.

    வயது கூடும்பொழுது உடல் நலியத்தானே செய்யும். இது பலரது வாதம். ஆனால் இங்கு கூறப்படும் செய்திகள் ஆரோக்யமாய் வாழவும், தானே ஒழுக்கமின்றி வரவழைத்துக் கொள்ளும் நோய்களை தவிர்க்கவும் மற்றும் முறையாய் சில பயிற்சிகள் மூலம் உடலை பாதுகாக்கவும் இத்தகைய பாதுகாப்பு முறைகள் ஒருவரின் ஆயுளை 7.5 சதவீதம் அதிகரிக்க செய்யுமாம்.

    வயது கூடிய பொழுது சர்கார்டியன் ரிதம் அன்றாட செயல் சுழற்சிக்கான வட்டம் சற்று மாறுபடும். நாம் விழித்திருக்கும் பொழுது தூக்கம் வருகிறது என்று தூங்க சென்று விடுவோம். தூக்கத்தில் இனி விழித்துக் கொள்ளலாம் என்று தோன்றும் இந்த ரிதம் முறையில் இடையூறுகள் ஏற்படும் பொழுது அன்றாட சுழற்சி வட்டமும் மாறுபடும்.

    இது தூக்கத்தினையும் பாதிக்கும். இது தவிர முதியோருக்கு பொதுவில் காணப்படும் மூட்டு தேய்மானம், மூட்டுவலி போன்றவை உடல் நல பாதிப்பினை ஒருவருக்கு ஏற்படுத்து வதால் தூங்குவதற்கும், விழித்திருப்பதற்கும் அதிகமாக இயலாமை பிரச்சினைகள் ஏற்படலாம்.

    நுரையீரல் பாதிப்பு, இருதய பாதிப்பு இவையும் தூக்க முறையில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

    வயதானவர்கள் உடல் நல பாதிப்பிற்காக எடுத்துக் கொள்ளும் ஒரு சில மருந்துகளும் தூக்கத்தினை பாதிக்கலாம். பொதுவில் இரவில் 7 முதல் 9 மணி நேர உறக்கம் முதிய வர்களுக்கு அவசியமே.

    வயது கூடும் பொழுது எலும்பு பலவீனம் அடைகின்றது. இது ஆண், பெண் இருபாலினரையும் பாதிக்கின்றது.

    மூன்றில் ஒரு பெண்ணும், ஐந்தில் ஒரு ஆணும் எலும்பு பலவீனம் காரணமாக எலும்பு முறிவுகளை சந்திக்கின்றனர். இன்று கால்சியம் சத்து நிறைந்த உணவுகள், வைட்டமின் டி சத்து மாத்திரை என மருத்துவர்கள் பரிந்துரைக் கின்றனர்.


    சற்று ஞாபகம் மறந்து விட்டது என்பது வேறு. மறதி நோய் என்பது வேறு. மறதி என்பது (Dementia) நினைவு, சிந்தனை, நடத்தையில் ஏற்படும் சீர்குலைவு. Alzheimer நோய் என்பது நரம்பியல் சிதைவுகளால் ஏற்படுவது. இது காலம் கூடும்பொழுது அதிக பாதிப்பினைக் கூட உருவாக்கும்.

    இன்று மருத்துவத்தில் முன்னேற்றமான மருந்துகள், இதற்காக வந்துள்ளன. சிறு வயது முதலே ஆரோக்கியமான உணவுகளை மருத்துவர், சத்துணவு நிபுணர் மூலம் அறிவுரை பெற்று கடைபிடிப்பதே இதற்கு சிறந்த தீர்வு.

    60 முதல் 65 வயதில் இருதய நோய் பாதிப்பு என்ற காலம் மாறி 4 முதல் 10 சதவீத மக்களுக்கு 45 வயதிற்குள்ளாகவே மாரடைப்பு நோய், இருதய பாதிப்பு என ஏற்படு கின்றன.

    இவற்றையெல்லாம் தடுக்கவே இன்று மிக அதிகமாக உணவு முறைகள், உடற்பயிற்சி முறைகள் பற்றி பேசப்படுகின்றது. எழுதப்படுகின்றது. அறிந்து பலன் பெற வேண்டியது அனைவரின் கடமையாகும்.

    • நடிப்பதை விட கூடுதல் திறமையுடன் டப்பிங் பேச வேண்டும் என்பதே உண்மை.
    • பாடல் காட்சிகளில் தான் அதிகமாக மேக் அப் போட்டுக் கொள்ள முடியும்.

    நடிப்பு...

    திரையில் பார்ப்பது மட்டுமல்ல. அந்த திரைக்குப்பின்னால் எத்த னையோ விஷயங்கள் இருக்கின்றன.

    படங்களில் வசனம் பேசுகிறோம். குடும்ப பாங்கான காட்சிகள், காதல் காட்சிகள் என்று பலவிதமான காட்சிகளில் நடிக்கிறோம்.

    அந்த அந்த காட்சிக்கு ஏற்ப முகபாவனைகளும் இருந்தால் தான் காட்சி உயிரோட்டமாக இருக்கும். சிரிப்பு, அழுகை, சோகம், புன்முறுவல், வருத்தம், காதல் மோதல், கோபம், பயம் என்று எத்தனையோ விதமான முகபாவனைகள். அதற்கு ஏற்ப உடல் அசைவுகள் என்று எல்லாமும் நடிப்பில் இணைந்து வர வேண்டும்.

    சும்மா சொல்லக்கூடாது மீனா அந்த காட்சியில் கலக்கி இருக்காங்க... இந்த காட்சியில் சொதப்பி புட்டாங்க... கொஞ்சம் இப்படி செய்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லலாம்.

    காஸ்ட்டியூம், மேக்-அப் எல்லாம் ரெடி... கேமராவுக்கு முன்னால் போய் நின்றதும் காட்சி படமாகி விடுவதில்லை.

    காட்சிகளை படமாக்குவதற்கு முன்பு ஒத்திகை நடக்கும். ஒத்திகையில் முழு திருப்தி ஆன பிறகு தான் படப்பிடிப்பு நடக்கும்.

    ஒத்திகை என்பது எளிதானதல்ல. ஒரு காட்சியில் எப்படி நடக்க வேண்டும், எங்கே திரும்ப வேண்டும். எப்படி நிற்க வேண்டும். முகபாவனை எப்படி இருக்க வேண்டும் என்று எல்லா விஷயங்களையும் பார்ப்பார்கள்.

    நாங்களும் நடப்போம்... எங்களோடு கேமரா டிராலியும் நகர்ந்து வரும். சில நேரங்களில் முதல் முறை சரியாக வராது. இரண்டாவது முறைகூட சரியாக வராமல் போகலாம். எவ்வளவு கஷ்டப்பட்டாவது காட்சிக்கு ஏற்ற வகையில் நடித்து காட்டினால் தான் ஓ.கே. ஆகும்.

    முக்கியமாக ஒரு காட்சியில் நடிக்கும்போது எதுவரை செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் அடையாள மார்க் போட்டு இருப்பார்கள். சரியாக அந்த இடத்தில் போய் நிற்க வேண்டும்.

    இல்லாவிட்டால் கேமரா ஆங்கிள் மற்றும் 'போக்கஸ்' கிடைக்காது.

    சரியாக அந்த இடத்தில் போய் நிற்பதும் எளிதானதல்ல. ஏனெனில் நடிக்கும்போது அந்த இடத்தை பார்க்க முடியாது. கேமராவையே பார்த்தபடி ஆடுவது, பாடுவது, டயலாக் பேசுவது, அதற்கு ஏற்ப முகபாவனைகள் வைப்பது போன்றவற்றில் கவனமாக இருக்கும்போது அடையாள இடத்தை பார்க்க முடியாது. அதற்காக அந்த இடத்தில் தடுத்து நிறுத்த நாற்காலி, ஸ்டூல் எதையாவது போட்டிருப்பார்கள்.

    ஆனால் நான் எதுவும் வேண்டாம் சரியாக அடையாளத்தில் நின்று விடுவேன் என்பேன். அதைப்போலவே நின்று விடுவேன்.

    எல்லோரும் ஆச்சரியமாக கேட்பார்கள். 'மேடம், எப்படி உங்களால் சரியாக வந்து நிற்க முடிகிறது' என்பார்கள்.

    எனக்கும் இதுவரை அது எப்படி முடிகிறது என்பது புரியவில்லை. எல்லாம் கடவுள் செயல் தான். சின்ன வயதில் நடிப்புன்னா என்ன என்றே தெரியாது. அங்குபோய் நில்லு. இங்கு போய் நில்லு. அப்படி திரும்பு.

    அங்கே ஓடு என்பார்கள். அவர்கள் சொல்வதை செய்வேன் அவ்வளவு தான். ஆனால் அதனால் கிடைத்த பயிற்சியால் தான் கதாநாயகி ஆனபிறகு ஒரு காட்சியில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று என்னால் முடிவு செய்ய முடிந்தது.

    பாடல் காட்சிகளை பொறுத்தவரை மூவ்மென்ட்ஸ் ஒத்திகை பார்க்க வேண்டும். இப்படி கஷ்டங்களையும், சிரமங்களையும் சந்தித்து நடித்து தான் ஒரு காட்சி உருவாகிறது.

    இவை எல்லாவற்றையும் விட சவாலானது டப்பிங் பேசுவது. காட்சிகளை மெருகேற்றும் வலிமை டப்பிங்கில் இருக்கிறது. கேமரா முன்பு எல்லா விதமான உணர்ச்சிகளையும் கொண்டு வந்து நடித்து விடுவோம். ஆனால் டப்பிங் என்பது அப்படி அல்ல. ஒரு அறையில் நான் தனியாக இருந்து பேசுவது.

    கேமரா முன்பு எந்த காட்சிக்கு எந்த விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினோமோ அதே உணர்ச்சிகளை அப்போதும் வரவழைத்து அதற்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களோடு பேச வேண்டும். சில காட்சிகளில் கிடைக்காத திருப்தியை டப்பிங் பேச்சு மூலம் மாற்றி அமைத்து விட முடியும்.

    நடிப்பதை விட கூடுதல் திறமையுடன் டப்பிங் பேச வேண்டும் என்பதே உண்மை. ஆரம்பத்தில் என் குரல் மிகவும் மெல்லியதாக 'கீச்' குரலாக இருந்தது. எனவே டப்பிங் பேசமாட்டேன்.

     

    ராஜகுமாரன் படத்தில் முதல் முதலாக டப்பிங் பேச தொடங்கினேன். அதன் பிறகு என் சொந்த குரலிலேயே பேசி வருகிறேன்.

    அப்படியும் பிசியாக இருந்த கால கட்டங்களில் சில படங்களில் டப்பிங் பேச வாய்ப்பு கிடைத்தும் என்னால் பண்ண முடியாமலும் போனது.

    காஸ்ட்டியூமை பொறுத்தவரை என்ன மாதிரி உடை. கலர் எப்படி இருக்க வேண்டும்? டிசைன் எப்படி இருக்க வேண்டும் அதற்கேற்ப நகைகள் எப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை நானே பெரும்பாலும் தேர்வு செய்து விடுவேன்.

    'தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா...' என்ற பாடலுக்கு தருண் மாஸ்டர் தான் நடன பயிற்சி அளித்தார். அவரை பொறுத்தவரை அழகாக காஸ்ட்டியூமை தேர்வு செய்து விட்டார்.

    அதேபோல் மேக்-அப் ஹேர்ஸ்டைல் ஆகியவற்றையும் நானே பெரும்பாலும் தேர்வு செய்து கொள்வேன்.

    பாடல் காட்சிகளில் தான் அதிகமாக மேக் அப் போட்டுக் கொள்ள முடியும். பல மாடல்களில் ஸ்டிக்கர் பொட்டு அதன் மீது கற்கள் இருக்கும். அது அறிமுகமான கால கட்டம். வில்லன் படத்தில் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அந்த மாதிரி பொட்டை நெற்றி மட்டுமில்லாமல் முகத்தில் பல இடங்களில் ஒட்டி வித்தியாசமாக ஒரு மேக்-அப் செய்து இருந்தேன்.

    ஏய் இது என்ன மேக் அப்?

    நல்லாவா இருக்கு என்றார்கள். ஆனால் படத்தில் பார்த்தபோது நன்றாக இருந்தது.

    வெளிநாடுகளுக்கு செல்லும்போது பொட்டுகள், நகைகள் என்று மேக்-அப் பொருட்கள் புதுமையாக இருந்தால் அதை வாங்கி விடுவேன். அந்த காலங்களில் மேக்-அப் சாதனங்கள் அவ்வளவாக நம் நாட்டில் கிடைப்பதில்லை பான் ஸ்டிக், பான்கேக் வகைகள் தான் இருந்தது. ஆனால் இப்போது எல்லா மாடல்களும் நம் நாட்டிலும் கிடைக்கிறது.

    அப்பல்லாம் எனது சருமத்துக்கு பொருந்தும் வகையில் மஞ்சள் பின்னணியில் முகத்துக்கு மேக்-அப் போடுவேன். அது எடுப்பாக இருக்கும். இப்போது எல்லாமே மாறிவிட்டது. ரசிகர்கள் டேஸ்டும் அதற்கேற்ப மாறிவிட்டது. கேமராக்கள் டிஜிட்டல் மயமாகி விட்டது.

    ஒரு சிறு கடுகளவு பரு இருந்தாலும் தெரிந்துவிடும். அதேபோல் விதவிதமான மேக்-அப் சாதனங்களை ஆன்-லைனிலேயே தேடி வாங்கி விடவும் முடிகிறது.

    கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கிறதா? இதை விட ஆச்சரியமெல்லாம் இருக்கிறது. அது பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

    (தொடரும்...)

    முகத்துக்கு மெருகேற்ற பப்பாளியும், வாழைப்பழமும் போதுமோ...

    பெண்கள் எல்லோருமே முக அழகை விரும்புவார்கள். அதிலும் என்னைப் போன்ற நடிகைகளுக்கு முக வசீகரம் ரொம்ப ரொம்ப முக்கியம். எனவே முக அழகை பராமரிப்பதில் கவனமாக இருப்போம்.

    அந்த காலத்தில் மேக்கப் போட பான் ஸ்டிக்தான் இருந்தது. அது குளிர்நேரத்தில் கட்டியாகி விடும். அதன்பிறகு சூடுபடுத்தி முகத்தில் போடுவேன். அப்போதே வெளிநாடுகளில் பல நவீன மேக்கப் சாதனங்கள் புழக்கத்தில் இருந்தன. அவ்வப்போது வெளிநாடு செல்லும் போது வாங்குவேன். 'ஐலேஷ்' வாங்கி வந்து புருவத்தில் போடுவேன். அதற்காகவே குளோசப் ஷாட் கேட்டதும் உண்டு. நான் பொதுவாகவே ரசாயனம் கலந்த செயற்கையான தயாரிப்புகளை முகப்பூச்சுக்கு பயன்படுத்த மாட்டேன். பிளீச்சிங், பேசியல் கூட செய்ததில்லை. கொரியன் கண்ணாடி ஸ்கின்.. இன்னும் என்னவெல்லாமோ சொல்கிறார்கள். வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பப்பாளி, வாழைப்பழம், வெள்ளரிக்காய், மாம்பழம், பால் போன்றவற்றைத்தான் போடுவேன். கடலை மாவை பாலில் குலைத்தும் போடுவேன். இவைகளால் முகத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது. முகப்பொலிவு கூடும்.

    ஆனால் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி இன்றைய இளம்பெண்கள் அதை நாடுகிறார்கள். அதை தவிருங்கள் என்பதே எனது வேண்டுகோள். என் மகள் நைனிகாவிடமும், இந்த ஆலோசனைகளை சொல்வேன். ஆனால் அவளோ 'மம்மி... ரிவியூ' நல்லா போட்டிருக்காங்க என்கிறார்.

    அப்போ யாரோ போட்ட ரிவியூவை நம்புகிறாய். அம்மா சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லையா என்பேன். அவளால் எந்த பதிலும் சொல்ல முடிவதில்லை. பெரும்பாலான இளம்பெண்கள் இதே மனநிலையில் தான் இருக்கிறார்கள்.

    • வெற்றியின் உச்சிக்கு சென்றவர்களுக்கு நிதானம் வேண்டும்.
    • உண்மை பக்தியே உயர்த்தும் உன்னை, பக்தி செலுத்தினால் பாவங்கள் பொடியாகும்.

    அதிகாரம்: வெக்காமை

    இந்த அதிகாரத்தில்,

    நடுவின்றி நன்பொருள் வெஃகாமை குடியொன்றிக்

    குற்றமும் ஆங்கே தரும்.

    என்ற குறளில் தொடங்கி

    இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

    வேண்டாமை என்னுஞ்ச் செருக்கு.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    வெக்காமை என்பது, நம்முடைய தகுதிக்கு மீறிய ஒன்றை செய்வதும் அல்லது தனக்கு மீறிய பெரிய பொருள்களை விரும்புவதும் ஆகும். இவ்வாறு விரும்புவது முறையல்ல. அதனால் கேடுகள் உண்டாகும். அதிக விலைமதிப்புள்ள ஓர் பொருளை பொருளுக்குரியவனின், சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் அவனை வஞ்சித்து அந்தப் பொருளை பெறுவது பாவம் ஆகும்.

    பொருளுக்குரியவன் மனம் வெதும்பினால் ஏமாற்றியவன் பெரும் பழியை ஏற்பான். எளியவர்களின் பொருளை தன்னுடைய செல்வ பலத்தாலோ, அதிகார பலத்தாலோ அவனை அச்சுறுத்தி பொருளை கைப்பற்றுவது தவறானது.

    ஒரே வீட்டுமனையை பலரிடம் காட்டி அதனை விற்று பொருள் ஈட்டுவது நீதிக்குப் புறம்பான செயலாகும். தன் தகுதிக்கு மீறி அழகுடனும் பொருளுடனும் உள்ள பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் இளைஞர்களுக்கு உண்டு. அத்தகைய மனப்பான்மை தவறானதே.

    அத்தகைய எண்ணங்களால் ஏமாற்றங்களும் பல பிரச்சினைகளும் உண்டாகி விரும்புகின்றவனின் தாய், தந்தையருக்கும் குடும்பத்தினருக்கும் தொல்லைகளும் துயரங்களும் ஏற்படும்.

    சிலருக்கு நல்ல அறிவு நுட்பம் இருக்கும். ஆனால் பிறர் பொருளை ஏமாற்றி கைப்பற்றும் குணம் இருக்கும்.

    எத்தகைய திறமை அவர்களிடத்தில் இருந்தாலும் அவையாவும் பயன் இல்லாதவையே. ஏமாற்றி பொருள் பறிக்கும் தன்மையில்லாத பண்பே உயர்ந்தபண்பு, அதுவே நல்லறிவு.

    கடவுளைப் பற்றி அறிந்தவன் உண்மையை அறிந்திருப்பான். உலக நீதியை அறிந்திருப்பான். அத்தகையவன் பிறர் பொருளை அபகரிக்க மாட்டான். பிறர் பொருளை விரும்புகின்றவனிடம் அறம் இல்லை.

    தலைவனைப் பற்றி அறிந்தவன் அறத்தைப் பற்றி அறிந்தவனாக இருப்பான். தூய்மையாக வாழ்பவனிடம் செல்வம் சேரும். அவ்வாறு சேர்ந்த பொருளை நற்காரியங்களுக்காகவே பயன்படுத்துவான்.

    பல இடங்களில் அரசாங்கத்தை ஏமாற்றி கள்ள நோட்டு, கள்ள நாணயம் செய்து வெளியிடுகின்றார்கள். இத்தகைய பேராசையால் வாழ்க்கை அழிந்து அதனால் குடும்பமும் அழியும்.

    தன்னுடைய தேவைக்கும் பொருளை பயன்படுத்தாமல், பிறருக்கும் அதனை கொடுக்காமல் சேர்த்து வைக்கின்ற பொருள் எதிர்காலத்தில் பாதுகாப்பும் உரிமையும் இல்லாமல் தவறான வழிக்குப் பயன்படும்.

     

    தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    சமுதாயத்தில் பொருளாதாரம் என்பது பிரச்சினையை தீர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கலாம்.

    ஆனால் அது சாவாமைக்கு மருந்தல்ல. சிறப்பறிவு உள்ளவர்கள் புண்ணியத்தை செய்தும் உண்மைப் பொருள் அறிந்தவர்களின் திருவடியை பூஜை செய்தும் சாகாவரத்தைப் பெறுவார்கள்.

    வெற்றியின் உச்சிக்கு சென்றவர்களுக்கு நிதானம் வேண்டும். பொருளாதாரத்தைக் கண்டு மயங்கக் கூடாது. பொருளாதாரத்தை கண்டு மயங்காதவன், யாருக்கும் தலைவணங்காத வீரனாக இருப்பான் அன்பிறகு மட்டுமே தலைவணங்குவான்.

    அவனே மாபெரும் பேரறிவாளன். அவன் தலைவனின் ஆசியையும் அருளையும் பெற்றிருப்பான்.

    பொருளாதாரத்தைக் கண்டு மயங்குபவன் சுயநலம் உள்ளவனாக இருப்பான். பிறருக்குப் பசியாற்றுபவன், ஜீவகாருண்யத்தை கடைப்பிடிப்பவன், தலைவனை உருகி பூஜை செய்பவன் எத்தகைய சூழ்நிலையிலும் பிறர் பொருளைக் சுவரமாட்டான்.

    துறவு மேற்கொள்பவர்கள் பிறர்பொருளுக்கு ஆசைப்பட்டால் அவர்களின் தவம் கெட்டு பாவச்சுமை அதிகமாகும். பூஜையும் புண்ணியமும் செய்த மக்கள் பிறருக்கு உதவி செய்வதால் தங்களுடைய ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வார்கள்.

    பூஜையும் புண்ணியமுமே ஒரு மனிதனுக்கு சாகா மருந்து, மரணத்தை வென்றவர்களின் திருவடியைப் பற்றிக் கொள்வோம்; சாகாவரத்தை பெறுவோம்.

    உண்மை பக்தியே உயர்த்தும் உன்னை, பக்தி செலுத்தினால் பாவங்கள் பொடியாகும். பண்புகள் ஓங்கும். பண்பு ஈதென்று அறியலாம். பகைமையை நீக்கலாம். பக்குவம் உண்டாகும். மன்னிக்கும் குணம் உண்டாகும்.

    அதிகாரம்: இன்னா செய்யாமை

    இந்த அதிகாரத்தில்,

    சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

    செய்யாமை மாசுஅற்றார் கோள்.

    என்ற குறளில் தொடங்கி

    நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

    நோயின்மை வேண்டு பவர்.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    இன்னா செய்யாமை என்பது பிறருக்குத் துன்பமும், இடையூறும் செய்யாதிருத்தல் ஆகும். தூய்மையானவர்களின் திருவடிகளைப் பற்றி பூஜை செய்தால் அன்றி மனதிற்குத் தூய்மை வராது.

    நாம் முன்செய்த பாவமே, பகை வருவதற்கு காரணமாக இருக்கும். இதை உணர்ந்து பிறர் நமக்கு இடையூறு செய்தாலும் அதனை மறந்து விட வேண்டும். மீண்டும் அவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.

    பிறரை இடரிப்பேசுதல் மற்றும் செய்கையால் பிறருக்குத் துன்பம் தருதல் கூடாது. அது மீண்டும் பிறவிக்கு காரணமாக அமைந்து அதனை நாமே அனுபவிக்க வேண்டியிருக்கும்.

    பிறர் நமக்குத் துன்பம் செய்தாலும் அவருக்குத் நாம் துன்பம் செய்யாதிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் பிறவியிலிருந்து விடுபடலாம்.

    தவத்தில் உள்ளவர்கள், தம்மிடம் உள்ள பொருள் பலத்தின் காரணமாகவோ படைபலம் இருக்கின்ற காரணத்தினாலோ பிறருக்குத் துன்பம் செய்தால் அவர்கள் பலநாட்கள் செய்த தவம் கெட்டுவிடும்.

    பெரிய செல்வம் வந்த போதும் சிறப்பான வாழ்வும் அதிகாரமும் இருந்த போதும், பிறருக்குத் துன்பம் செய்யாது இருப்பவர்களை மாசற்றவர்கள் என்று கூறுவார்கள்.

    அவர்கள் தனக்கு யாரேனும் துன்பம் செய்தாலும் அதனை மன்னித்து மறந்து விடுவார்கள். பலருக்குத் துன்பம் செய்பவன் பல ஆண்டு நோய்வாய்ப்பட்டுச் சாகாமல் நரகத்தை அனுபவிப்பான்.

    இதனைக்கண்டு, நாம் பிறருக்குத் துன்பம் செய்தால் நமக்கும் இந்நிலை வரும் என தெரிந்து பிறருக்குத் துன்பம் செய்யாதிருக்க வேண்டும்.

    எந்த அளவுக்கு நாம் புண்ணியம் செய்கின்றோமோ அது நம்மையே வந்து சாரும். எந்த அளவு பாவம் செய்கின்றோமோ அதனையும் நாம் அனுபவித்தே தீர வேண்டும்.

    சான்றோர்கள் துன்பம் செய்தவரை மன்னித்து மறந்து விடுவர். அவ்வாறு இல்லையெனில், அவர்களைச் சான்றோர் எனக் கூற தகுதி இல்லாதவர்கள்.

    துன்பம் செய்கின்றவர்களுக்கு அவர்கள் நாணும்படியாக நல்லது செய்ய வேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார். மனித வர்க்கத்திற்கு இந்த காலத்தில் இவ்வாறு செய்ய முடியுமா? முடியும்.

    மாசற்றவர்களைப் பூஜை செய்தால் அவர்களின் ஆசி கிட்டும். அப்போது மன்னிக்கும் மனப்பான்மை ஏற்படும்.

    துன்பம் செய்தவருக்கும் அவர்கள் வெட்கித் தலைகுனியும்படி நன்மை செய்யலாம். குற்றமற்றவர்களை, மாசு நீங்கியவர்களை பூஜை செய்ய வேண்டும்.

    மாசு என்பது உடம்புக்குரிய சொல். உடம்பில் மாசு இருந்தால் சிந்தனையில் அழுக்கு இருக்கும். உடம்பு இருட்டாக இருந்தால் சிந்தனை இருட்டாக இருக்கும்.

    உடம்பின் மாசு நீங்கினால் உள்ளத்தின் மாசும் நீங்கும். உள்ளத்தின் மாசு நீங்கினால் அங்கு சங்கல்பவிகற்பமில்லை.

    சிறப்பான அறிவு, சிறப்பான செயல் என்பது அழியக்கூடிய செல்வத்தை கண்டு மயங்காமல் இருத்தல் என்பதாகும். அழியாத ஒன்றை விரும்புவதே குற்றமற்றவரின் செயலாக இருக்கும்.

    நாம் பிறரை துன்பப்படுத்தாமல் இருந்தால் நமக்கு நல்ல சாவு வரும். பிறரை துன்பப்படுத்துபவன் நோய்வாய்ப்பட்டு, பிறரால் அவமானப்படுத்தப்பட்டு மனம் நொந்து சாவான். அதிக வட்டி வாங்குவது, வேலை செய்தவனுக்கு கூலி தராமல் இருப்பது போன்றவையும் பாவமே.

    இவர்களுக்கு மனம் கருங்கல் போன்று இறுக்கமாக இருக்கும். இவர்கள் இதயத்தில் தலைவன் தங்கமாட்டான். வன்மனம் உள்ளவர்கள் நோய்வாய்ப்படுவார்கள், பிறவிகள் தொடரும். பாவங்கள் செய்தால் மீண்டும் கருப்பைக்குள் சென்று அந்த பாவத்தை அனுபவிக்க வேண்டும்.

    மலரை நெருங்க நெருங்க எவ்வாறு நறுமணம் உள்ளதோ, அதுபோல் இறைவனை நெருங்க நெருங்க குணக்கேடுகள் நீங்கி சிறப்பறிவு உண்டாகும். சிறப்பறிவு பெற்றால் ஆன்மாவைப் பற்றி அறியலாம், உடலைப் பற்றி அறியலாம்.

    இயற்கையின் கூறு பற்றி அறியலாம். ஆன்ம இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கம். ஆன்ம இயக்கமே மனதின் இயக்கம் மூச்சுக்காற்றைப் பற்றி அறிந்து புருவ மத்தியில் செலுத்தினால் உடல் மாசு நீங்கும். உடல் மாசு நீங்கினால் உள்ளம் உயர்ந்த உள்ளமாக இருக்கும். உள்ளம் உயர்ந்திருந்தால் மீண்டும் பாவம் செய்ய மாட்டான். மீண்டும் கருப்பைக்குள் செல்லமாட்டான். அவன் மரணமில்லா பெருவாழ்வை அடைவான். அத்தகையவன் மாசற்றவன், குற்றமில்லாதவன். அவன் திருவடிகளைப் பற்றி பூஜை செய்தால் நாம் பிறருக்கு தீங்கு செய்யாத குணப்பண்பு உண்டாகும். கெடுதல் செய்தவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற பண்பு உண்டாகும்.

    எனவே, புண்ணியம் செய்வோம்! பூஜை செய்வோம்! மாசற்றவனாக வாழ வழி கிடைக்கும்.

    • உணவின் அளவு முறை மிகவும் அவசியமாகும்.
    • உறக்கத்தில் இந்த உடல் ஆனது வான் காந்தத்தோடு சேர்ந்து ஆற்றலை எடுக்கிறது.

    வாழ்க்கையில், ஒவ்வொரு மனிதரும் ஐந்து அளவு முறையை கடைப்பிடித்தால் நோயின்றி வாழலாம் என்று யோகம் சொல்கிறது. அதாவது உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் இவை ஐந்தும்தான் மனிதனுடைய வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறலாம்.

    1. உணவு: உணவின் அளவு முறை மிகவும் அவசியமாகும். நம்முடைய உடல் இயக்கத்திற்கும், மன இயக்கத்திற்கும் சக்தி செலவாகிறது. இந்த உடல் சக்தியானது, நமக்கு உணவில் இருந்தும், காற்றில் இருந்தும், கோள்களில் இருந்தும் வரக்கூடிய காந்த அலைகளில் இருந்தும், மேலும் பூமியின் மையத்தில் அணுக்கள் சிதறும்போது அதிலிருந்து வெளிவரக்கூடிய துகள்களில் இருந்தும் கிடைக்கிறது. இது இந்த உடலுக்கு தேவையான அளவுக்கு ஆற்றலை கொடுக்கும். இந்த நான்கிலும் உணவின் மூலமாக நமக்கு அதிகமான அளவு சக்தி கிடைக்கிறது. எனவே உயிர் வாழ்க்கைக்கு உணவு மற்றும் நீர் அவ்வளவு அவசியமாகும்.

    நம் முன்னோர்கள் பசித்து புசி என்று கூறினார்கள். அதாவது ஒரு முறை உணவு அருந்தி விட்டால், அடுத்த முறை உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பசி இருக்க வேண்டும். அதுதான் உண்மையான உணவின் அளவு முறையாகும். அப்படி பசி இருக்கும்போது வயிற்றில் உணவு இல்லாததால் ஆற்றல் உணவில் இருந்து பெற முடிவதில்லை. அந்த நேரத்தில் இந்த உடலானது தானாகவே நம்மிடம் எந்த விதமான அனுமதியும் பெறாமல், காற்றில் இருந்தும், கோள்களின் அலை வீச்சில் இருந்தும், பூமியின் கதிர் இயக்கத்தில் இருந்தும் உடலுக்கு தேவையான ஆற்றலை எடுத்துக் கொள்கிறது. இதனால் அறிவுக்கும் நல்ல ஆற்றல் கிடைக்கிறது.

    காரணம் என்னவென்றால் உணவின் மூலமாக வரும் ஆற்றலை விட, வான் காந்த அலைகள் மூலமாக வரும் ஆற்றலானது தூய்மை உடையதாக இருக்கும். எனவே தான் நம் முன்னோர்கள் பசித்து புசி என்று கூறினார்கள். எனவே அளவான உணவு என்பது அரை வயிறு உணவு, கால் வயிறு நீர்ம பொருள், கால் வயிறு வெறும் வயிறு அல்லது காற்று என்ற அளவில் முறை இருக்க வேண்டும் என்றுகூறியிருக்கிறார்கள்.

    கால் வயிறு வெற்றிடம் தான் உணவை நல்ல முறையில் செரித்து உயிருக்கு ஏற்ற ஆற்றலாக மாற்றும், சக்தி அதிகரிக்கும். நம் வயிறு முழுவதும் உணவை நிரப்பி விட்டால் உணவு முழுமையாக ஜீரணிக்க முடியாமல் போகும். இதனால் சத்துப் பொருட்கள் ஆனது முறையாக பிரிக்க முடியாமல் உடலை பாதிக்கிறது. ஆனால் நமக்கு வயிறு எப்போதும் நிறைந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இல்லை என்றால், ஏதோ ஒன்றை இழந்துவிட்ட நிலை ஏற்படும். இதைத்தான் திருவள்ளுவர்

    "அற்றது அறிந்து கடைப்பிடித்து

    மாறல்ல

    துயக்க துவரப் பசித்து"

    என்று கூறுகிறார்.

    அற்றது என்றால் முன்பு சாப்பிட்டது செரிமானம் ஆன பின்பு என்று பொருள். மதியம் ஒரு மணிக்கு உணவு உண்ண வேண்டும் என்றால், 12 மணிக்கு பசி எடுக்க வேண்டும். காலையில் நாம் உண்ணும் உணவு அதன் அளவு பகல் 12 மணிக்கு பசியை தூண்டக்கூடிய அளவில் இருக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் நாம் உண்ணும் உணவு அளவு முறையாக இருக்க வேண்டும். உணவு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஜீரண மண்டலம் கெடுவதோடு மட்டும் அல்லாமல் உடல் நோய்களும் வரும். எனவே அளவாக உணவு உண்டால் உடல் உணவை ஜீரணிக்கும், அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொண்டால் உணவு உடலை ஜீரணிக்கும். எனவே உணவில் அளவு முறை என்பது மிகவும் அவசியமாகும்.

    2. உறக்கம்: உறக்கம் என்பது இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு கொடை என்று கூறலாம். உறக்கம் மூலமாகவும் நாம் தினமும் இழந்த சக்தியை பெறுகிறோம். நம் உடலில் உள்ள சீவக்காந்த சக்தியின் அளவு 69%த்தை தொடும்போது, நமது கண்கள் தானாகவே மூடி விடும். இதைத்தான் உறக்கம் என்கிறோம்.

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    உறக்கத்தில் இந்த உடல் ஆனது வான் காந்தத்தோடு சேர்ந்து ஆற்றலை எடுக்கிறது. இந்த ஆற்றல் நமக்கு 100% கிடைக்க 6 மணி முதல் 8 மணி மணி வரை எடுத்துக் கொள்ளும். இதைத்தான் நாம் உறக்கம் என்று கூறுகிறோம். ஒருவர் அதிகபட்சமாக எட்டு மணி நேரம் வரை உறங்கலாம். அதற்கு மேல் உறங்கினால் உடலில் சோம்பேறித்தனம் வந்துவிடும். எந்த ஒரு செயலையும் நாம் குறைந்த நேரத்தில் செய்ய முடியாது. அதைப்போல் குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஆவது உறங்க வேண்டும். அதற்குக் கீழ் உறங்கினால் உடலில் உபாதை தன் வரும். ஆனால் யோக பயிற்சி செய்பவர்களுக்கு 5 மணி உறக்கம் போதுமானது. உறக்கத்தில் எந்தவிதமான விதிகளையும் மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    3. உழைப்பு: உழைப்பில் மிகவும் கவனம் தேவை. நம்மில் பலரிடம் 40 வயது வரை எவ்வளவு உழைக்க முடியுமோ அவ்வளவு வேகமாக உழைத்து நிறைய சம்பாதித்து வாழ்க்கையில் சாதித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அதிகமான உழைப்பை 40 வயதுக்குள் கொடுத்து விடுகிறோம். ஆனால் பணம் சம்பாதித்த பிறகு தான் 40 வயதுக்கு மேல் அதிகமான நோய்களுக்கு நாம் ஆட்கொள்ளப்படுகிறோம். எனவே உழைப்பை உதாசீனம் செய்யக்கூடாது. நமது உடலில் 40 வயது வரை விந்து நாதத்தின் அளவு அதிகமாக உற்பத்தி ஆகும். அதனால் நாம் உடலில் அதிக உழைப்பை கொடுக்கிறோம். பிறகு 40 வயதுக்கு மேல் விந்துநாத திரவத்தின் உற்பத்தி குறைய தொடங்கும். இதனால் உடலில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு உடல் பல துன்பங்களுக்கு ஆளாகும். எனவே உழைப்பை அளவு முறையோடு கடைப்பிடிக்க வேண்டும். அதிகமான உழைப்பு கொடுத்து விட்டால் அடுத்த நாள் அந்த உழைப்புக்கு ஈடாக ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் சக்தி இருக்கிறது என்று அதிகம் உழைத்து உடலை கெடுத்துக் கொள்ளக்கூடாது. எட்டு மணி நேர உழைப்பில் அதிக கவனம் செலுத்தி அதன் மூலமாக அதிகமான முடிவை எடுக்க வேண்டும்.

    4. உடலுறவு: உடலுறவு என்பது ஒரு ஆன்மீகமான உறவு என்று சொல்வார்கள். உடலுறவு என்பது கணவன் மனைவி இருவரின் முழு சம்மதத்தோடு தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்களுக்கு உள்ளும் பெண் தன்மை உள்ளது. அதேபோல ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் தன்மை உள்ளது. இந்தத் தன்மையானது உடல் உறவின் போது தான் சமன்படும். எனவே இதை தெய்வீகமான உறவு என்பார். ஒரு உடலுறவுக்குப் பின் அடுத்த உடலுறவுக்கு குறைந்தபட்சம் நான்கு நாட்களும் அதிகபட்சம் 15 நாட்களும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவம் கூறுகிறது. இந்த விதத்தில் இருந்து தான் நம் அனைத்து பதிவுகளும் வெளிப்படுகிறது. ஆனால் இது ஒரு கழிவு பொருள். எனவே இதை முறையாக வெளியேற்ற வேண்டும். முறை தவறினால் உடலில் நோயும் பால்வினை நோய்களும் உண்டாகும். எனவே இந்த விஷயத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் கற்பு நெறியை கடைப்பிடிக்க வேண்டும். நமது உடலில் இந்த விந்தின் அளவும் திறமும் குறைந்தால் நமது ஆயுள் குறையும். எனவே உடலுறவு என்கின்ற ஒரு செயலில் மிகவும் மன ஒற்றுமை மற்றும் கட்டுப்பாடு அவசியமாகும்.

    5. எண்ணம்: இந்த நான்கு விஷயங்களான உணவு உறக்கம் உழைப்பு மற்றும் உடலுறவு இந்த நிலைகளின் நாம் அளவு முறை மீறாமல் பார்த்துக் கொண்டால் ஐந்தாம் நிலையாகிய நல்ல எண்ணங்கள் எப்போதும் நம் மனதில் தோன்றும். அப்படி தோன்றும் எண்ணங்கள் தான் செயல் வடிவம் பெற்று அதுவே செயலாக மாறும். அவரவர் வாழ்வின் சிற்பி அவரவர் எண்ணங்களே. எனவே எண்ணங்கள் தான் மனதின் பாசறை. அதை ஒழுங்கு படுத்த வேண்டும் என்றால் இந்த நான்கிலே அளவு முறை கடைப்பிடித்தால் நம் மனதிலே நமக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்காத எண்ணங்கள் தோன்றும். இதுவே வாழ்வின் அடிப்படையான ஐந்தின் அளவு முறை ஆகும். இதை நாம் வாழ்வில் கடைப்பிடிப்போம். வளம் பெறுவோம். இதற்கான பயிற்சிகள் வேதாத்திரி மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட ஆழியாறு அறிவு திருக்கோயில், உலகம் எங்கும் உள்ள மனப்பளக் கவலை மன்றம் அறக்கட்டளைகள் தவ மையங்கள் மற்றும் மகரிஷியின் ஆன்மீக கல்வி மையங்களில் கல்வி கொடுக்கப்படுகிறது.

    போன்: 9444234348

    ×