என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டுவிதமான அறிவுகள் உண்டு.
- நம்பியிருப்பவர்கள் சமூகத்தில் தனியர்களாகத் தனித்து விடப்படுவர்.
அன்றாட வாழ்வியலுக்கு உதவுகிற பொது அறிவை வளர்த்துக்கொள்கிற ஆர்வமிக்க வாசகர்களே! வணக்கம்!.
"நான் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்புகிற விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக வேலைபார்க்கிறேன்; வீட்டில் சமையல்கட்டில் தண்ணீர்க்குழாயில் தண்ணீர் வரவில்லை! அதை என்னவென்று பார்த்துச் சரிசெய்து கொடுங்கள்! என்று என் மனைவி கூறுகிறாள். நான் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புகிற அறிவியல் விஞ்ஞானியா? இல்லை வீட்டில் தண்ணீர்க்குழாயைச் சரிசெய்து கொடுக்கிற சாதாரண இல்லறவாசியா?" என்று ஒரு நண்பர் கேட்டார்.
"அலுவலகத்திற்குப் போனால்தான் நீங்கள் அறிவியல் விஞ்ஞானி; வீட்டில் இருக்கும்வரை அன்றாட வீட்டுக் கடமைகளில் கவனம் செலுத்த வேண்டிய இல்லறவாசிதான்" என்று அவருக்குப் பதில் சொன்னால் அவர் ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும். பள்ளிக்கூடங்களில் கற்கிற கல்வி வேறு; அன்றாட வாழ்வியலில் கற்றுக்கொள்ளவேண்டிய அனுபவக்கல்வி என்பது வேறு.
ஐந்தாம் வகுப்புப் படிக்கும் தனது மகனின் பூகோள அறிவு குறித்து ஒரு தந்தை மிகப்பெரிய அளவுக்குக் கூறினார்; உலக வரைபடத்தை அவனிடம் கொடுத்து, அமெரிக்காவின் தலை நகர் எங்கிருக்கிறது? ரஷ்யாவின் தலைநகர் எங்கிருக்கிறது? என்று உலக நாடுகளின் தலைநகர்களில் எதைப்பற்றிக் கேட்டாலும் அடுத்த நொடியே வரைபடத்தில் சுட்டிக்காட்டிவிடுவான்; பூகோள அறிவில் அந்த அளவுக்கு அவன் சுட்டி என்றார். அது சரி!, பள்ளிக்கூடம் விட்டால் அவனாகத் தனியாக வீட்டுக்கு வரத் தெரியுமா? என்று கேட்டால், அதற்கு அவனுக்கு வழி தெரியாதே! பள்ளிக்கூடப் பேருந்தில் மட்டுமே வந்து பழக்கப்பட்டவன் அவன் என்கிறார் தந்தை. உலக வரைபடத்தையே மனத்தில் வைத்திருக்கும் பூகோள அறிவுள்ள மாணவனுக்கு, உள்ளூரில் தன் வீட்டிற்கான வழியைத் தெரிந்திருக்கும் பொது அறிவு இல்லாமல் போனதற்கு யார் காரணம்?.
ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டுவிதமான அறிவுகள் உண்டு. ஒன்று, சிறப்பறிவு; மற்றொன்று, பொது அறிவு. இதில் பொது அறிவு என்பது பொதுவான கல்வியினாலும், சமூக மக்களிடையே கலந்து பேசும் அனுபவத்தினாலும், கூர்ந்து நோக்கும் திறமையினாலும் வருவது. சிறப்பறிவு என்பது, சிறப்பாகக் கற்கும் பாடத்திட்டத்தினாலும், செய்கின்ற தொழிலினாலும் தனித்துவமாக அமைவது. ஒருவர் கற்ற கல்வியினால் மருத்துவராவதும், பொறியாளர் ஆவதும், வழக்கறிஞராவதும், ஆசிரியராவதும், விஞ்ஞானியாவதும், தொழில்நுட்பத் திறமைசாலியாவதும், பார்க்கின்ற தொழிலின் அடிப்படையில் ஓட்டுநராவதும், நடத்துநராவதும், சலவையாளராவதும், முடி திருத்துநராவதும், தச்சராவதும், சமையலராவதும், படைப்பாளராவதும், பத்திரிகையாளராவதும், இசைக்கலைஞராவதும், திரைக்கலைஞராவதும், விவசாயி ஆவதும் என எல்லாமே சிறப்பறிவு சார்ந்த செயல்கள் ஆகும்.
அப்படிப் பார்க்கும்போது ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு விதமான சிறப்பறிவு இருக்கத்தான் செய்யும். ஆனால் எல்லா மனிதருக்கும் பொது அறிவு எனப்படும் உலகியல் அறிவு ஒரேமாதிரி நிறைவாக இருக்கவேண்டியது அவசியமானது ஆகும். வாழ்க்கையில் வேலை எனப்படும் பிழைப்பைப் பார்த்துப் பொருளீட்டிச் சம்பாதித்து வசதியாக வாழ்வதற்குச் சிறப்பறிவு போதுமானதுதான். என்றாலும் அலுவலகம், தொழிலிடம் தாண்டிய நிலையில் சமூக அளவிலான பழக்க வழக்கங்களுக்குப் பொதுஅறிவு எனப்படும் உலகியல் அறிவு இன்றியமையாதது ஆகும்.
"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்"
உலகில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுகலாறுகளைக் குறிப்பிடவந்த வள்ளுவப் பெருந்தகை, உலகம் எப்படி நடக்கிறதோ அதற்கேற்ற உலகியல் அறிவோடு ஒட்டிநடப்பதே சிறந்த படிப்பாளிக்கு அடையாளம். அதுவன்றித், தனக்குத் தோன்றியபடிதான் நடப்பேன்! நான் சிறப்பறிவு உடையவன்! என்று தான்தோன்றித் தனமாக நடந்து கொண்டால், அவன் கற்று எத்தனை பட்டங்களைப் பெற்றிருந்தாலும் படிக்காத முட்டாளுக்கு இணையானவனே! என்று சாடுகிறார் வள்ளுவர். இங்கே சமூகவியல் நோக்கில் பொதுஅறிவே வள்ளுவரால் வற்புறுத்தப்படுகிறது.
ஒரு ராஜா, தன்னுடைய பிறந்த நாளன்று தனக்கு வாழ்த்துக்கூற வந்திருந்த, இலக்கணப் பண்டிதர், தர்க்க அறிஞர், ஜோதிட அறிஞர், மருத்துவ அறிஞர், சங்கீத அறிஞர் ஆகிய ஐந்து பேருக்கும் நிறையப் பொன்னையும் பொருள்களையும் பரிசுகளாக வழங்கினார். பார்த்துக்கொண்டிருந்த அமைச்சர், "அரசே! இந்த அறிஞர்கள் ஐவரும் ஐந்து துறைகளில் சிறப்பறிவு பெற்றவர்கள்!; இவர்களுக்கு நீங்கள் ஏராளமாய்ப் பொன்னும் பொருளும் தருவதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும், இலக்கணம், தர்க்கம், ஜோதிடம், மருத்துவம், சங்கீதம் ஆகிய துறைகளில் சிறப்பறிவு பெற்றிருக்கும் இவர்கள், இந்தப் பரிசுப்பொருள்களை முறையாகப் பாதுகாத்துச் செலவு செய்யுமளவுக்கு வாழ்வியல் அறிவு பெற்றிருக்கிறார்களா? என்பதுபற்றிச் சிறு சோதனை செய்து பார்ப்போம்."

சுந்தர ஆவுடையப்பன்
"பரிசுகளைக் கொடுப்பதற்குமுன், இவர்களிடம் கொஞ்சம் காசுகளைக் கொடுத்து, இன்றைய உணவுக்கான பொருள்களை வாங்கி எப்படிச் சமர்த்தாகச் சமைத்து உண்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்!" என்றார் அமைச்சர். அதுவும் நல்ல யோசனைதான் என்று ஏற்றுக்கொண்ட ராஜாவும் அவர்களிடம் உணவுக்கான காசுகளை வழங்கினார். அந்தக்காலத்தில் எங்கும் உணவு விற்கும் விடுதிகள் கிடையாது; ஆங்காங்கு இருந்த சத்திரங்களும் வழிப்போக்கர்களுக்கு மட்டுமே உணவுதரும். தங்களுக்கான உணவைத் தாங்களே சமைத்துச் சாப்பிடுவதைத்தவிர வேறுவழியே இல்லை. சந்தைக்குச் சென்று ஆளுக்கொரு பொருளாக வாங்கி வந்து சமைப்பதென அறிஞர்கள் மத்தியில் முடிவெடுக்கப்பட்டது.
இலக்கணப் பண்டிதர் தயிர் வாங்கச் சென்றார். தயிர் விற்பவர். 'தயிரோ! தயிர்!' என்று கூவிக்கொண்டிருந்தார். அவரிடம் சென்ற இலக்கணப் பண்டிதர்," நீ தயிரை விற்கிறாயா? ஏலம் போடுகிறாயா?" என்று கேட்டார். "விற்கிறேன்" என்றான் தயிர்க்காரன். "அப்படியானால் ஓகாரம் போடாதே! தயிர்த் தயிர்! என்று அடக்கமாகக் கூறு! அப்படியும் பார்த்தால் தயிருக்கு அப்புறம் ஒற்று மிகுமா? மிகாதா?" என்று கேட்டார் பண்டிதர். "இப்படியே போனால் புளிப்புதான் மிகும்" என்று தயிர்க்காரன் நக்கலாகச் சொன்னான். வாக்குவாதம் மிகவே தயிர் வாங்காமல் வெறுங்கையோடு வீடு திரும்பினார் பண்டிதர்.
தர்க்க அறிஞர் நெய் வாங்குவதற்கு நெய்க்கடைக்குச் சென்றார். அங்கே தொன்னையில் நெய் தரப்பட்டது." நெய்க்குத் தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா? என்கிற பழைய தர்க்கம் ஒன்று இருக்கிறது; தெரியுமா உனக்கு?" என நெய்க்கடைக்காரனிடம் கேட்டார் தர்க்க அறிஞர்; அவன் விழித்தான்; இதோ பார் என்று தொன்னையிலிருந்த நெய்யைக் கீழே கவிழ்த்துவிட்டுத், 'தொன்னைதான் நெய்க்கு ஆதாரம்' என்று வெறும் தொன்னையோடு வீட்டிற்கு நடையைக் கட்டினார்.
காய்கறி வாங்கச் சென்ற மருத்துவர், ஒவ்வொரு காயையும் காயாகப் பர்க்கவில்லை; மாறாக நோயாகவே பார்த்தார். இந்தக் காய் சூடு, இந்தக்காய் குளிர்ச்சி, இந்தக்காய் பித்தம் என்று எல்லாக் காயையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு வெறும் பையோடு வீடு வந்து சேர்ந்தார். இலை வாங்கச் சென்ற ஜோதிடர் பல்லி சகுனம் சரியில்லை என்று வாங்காமலேயே வந்து சேர்ந்தார். வீட்டில் சமையல் கட்டில் மண்பானையில் உலையை ஏற்றி அரிசியைப் பாடிக் கொண்டே போடப்போன சங்கீத அறிஞர், உலை கொதிக்கும் சுவரத்திற்கும் தன்னுடைய பாட்டிற்கும் ஒத்துவரவில்லை என அடுப்பில் உலைகொதித்த மண்பானையை அகப்பையாலேயே உடைத்தெறிந்தார்.
இப்படியாகச் சமையலுக்குத் தேவைப்படும் பொது அறிவு ஏதுமில்லாத, சிறப்பறிவு அறிஞர்கள் ஐவரும் அன்று உணவின்றித் தவித்த சோகக்கதை அமைச்சரின் மூலமாக அரசருக்குப் போய்ச் சேர்ந்தது. அதனால் அன்றாடம் வாழ்வதற்கே பொதுஅறிவு எதுவுமில்லாத அறிஞர்கள் ஐவரும், தாம் வழங்கப்போகும் பரிசுகளை மட்டும் எப்படிப் பாதுகாத்து வைத்து வாழ்க்கையை நடத்தப் போகிறார்கள் என்று சந்தேகப்பட்ட ராஜா பரிசுகளை வழங்காமல் விட்டுவிட்டார்.
அறிவுத்துறை வேறு; நடைமுறை அறிவு என்பது வேறு. ஏட்டுச் சுரைக்காய் மட்டுமல்ல ஏட்டுக்கல்வியும் கறிசமைக்க உதவப்போவதில்லை. இன்றைக்குப் பொதுஅறிவை நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பதில், எண்ணற்ற பத்திரிகைகளும், வானொலி தொலைக்காட்சி ஊடகங்களும் போட்டிபோட்டு முந்திக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு சமூக ஊடகங்களான யூடியூப், முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போல் பல ஒலிஒளி வழியே தகவலறிவுகளைக் கொண்டுவந்து தட்டிய வண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு செல்பேசியும் ஒரு ஊடகமாகவும், ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ஊடகவியலாளனாகவும் மாறிவிட்ட ஊடகமுன்னணிக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனக்குச் சிறப்பறிவுமட்டும் போதும்; பொது அறிவில் எனக்கு நாட்டமில்லை என்று யாரும் விலகி ஓடிவிடவும் முடியாது; ஒளியவும் முடியாது.
ஒவ்வொரு மனிதனும் பொது அறிவில் ஆர்வம்கொண்டு, திறமாகச் செயல்பட்டால், சக மனிதர்களோடு சகஜமாகப் பழகுவதற்கு வாய்ப்புகள் உருவாகும். சிறப்பறிவை மட்டுமே நம்பியிருப்பவர்கள் சமூகத்தில் தனியர்களாகத் தனித்து விடப்படுவர். அன்றாட வாழ்வில் ஒருவருக்கொருவர் இயல்பாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கே பொது அறிவு சார்ந்த மொழி தேவைப்படுகிறது. விஞ்ஞானியாக உள்ள ஒருவர் பலசரக்குக் கடைக்காரரிடமோ, அல்லது பயணிக்கும் பேருந்து நடத்துநரிடமோ அறிவியல் கலைச் சொற்களை மட்டுமே பயன்படுத்திப் பேசிக் கொண்டிருந்தால் அவர் தனித்து விடப்படுவார். அவ்வளவு ஏன்? தமிழ் இலக்கியம் படித்தவர், அன்றாடம் மனிதர்களோடு பேசுவதற்கு அவரது இலக்கியத் தமிழறிவு பயன்படாது; பொது அறிவு சார்ந்த பொதுமொழியே தேவைப்படும்.
பொது அறிவு என்பது நடைமுறை அறிவு. அதில் அறிவுக்கூறைவிட அனுபவக் கூறு அதிகம் இருக்கும். தர்க்க விவாதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதநேயம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை காட்டுவதாக இருக்கும். எது நல்லது; எது கெட்டது; யார் நல்லவர்; யார் கெட்டவர் என்பதை அறிவியல் இலக்கிய ஆராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு, வெகு விரைவில் கண்டுபிடித்து நல்லபடியாக நம்மைச் சீரமைத்துக்கொள்ளப் பொது அறிவே உற்ற துணையாக உதவி செய்யும்.
பொது அறிவு என்பது பாமர அறிவு ஆகும்; பாமரர்களுக்கும் பயன்படும் அறிவு பொது அறிவு; அது பாமரத்தனமான அறிவு கிடையாது. சில வாழ்வியல் தொடர்பான பாதுகாப்பு அறிவுகளைப் பொது அறிவுமூலமே உணர்ந்துகொள்ளமுடியும். வண்டி ஓட்டிக்கொண்டே செல்பேசாதீர்கள்! அது ஆபத்து என்பதையும் , வண்டி ஓட்டும்போது தகவல்களைத் தொட்டச்சுச் செய்யாதீர்கள்! விபத்து ஏற்படும் என்பதையும் எந்தக் கல்விப்பாடமும் சொல்லித் தருவதில்லை.
சிறப்பறிவு நமது வேலைவாய்ப்பிற்கு உறுதுணையாக உதவுவது என்றால், பொது அறிவு நமது அன்றாட வாழ்வியலுக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்குகிறது.
தொடர்புக்கு 9443190098
- மனநோய்களான மனஅழுத்தம், படபடப்பு, மனப்பதற்றம் போன்றவை வராமல் தடுப்பதற்கு முக்கியம்.
- உடலில் உள்ள எலும்புகள், தசைகள் மற்றும் பற்களை வலுவாக்க உதவுகிறது.
வைட்டமின்கள் நம் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு, வளர்சிதை மாற்றங்களுக்கு மிகவும் வேண்டிய ஒன்றுதான். வைட்டமின்களில் இரண்டு வகைகள் உள்ளன. நீரில் கரைவன அல்லது கொழுப்பில் கரைவன. தேவையான அளவு உணவின் மூலம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் அளவு குறைந்தாலும் அல்லது மிகுந்தாலும் நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன. அதைப்பற்றி இப்பகுதியில் பார்ப்போம். நீரில் கரையும் வைட்டமின்களின் பயன்களும், குறைபாட்டினால் ஏற்படும் சிக்கல்களும்:
வைட்டமின் "பி1" நன்கு தீட்டப்பட்ட அரிசியில் தையமின் அளவு குறைவாக இருப்பதால், அரிசி உணவு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு "பி1" குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் பசியின்மை, எடைக்குறைவு, மனக்குழப்பம், நினைவுமறதி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மதுப்பழக்கம் உள்ளவர்களுக்குத் தசைகளில் பலவீனம், கண் தொடர்புள்ள நோய்கள் மற்றும் நரம்பு மண்டலத்தில் இடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகமுள்ள உணவுப் பொருட்கள்: தானியங்கள், அசைவ உணவுகள், பீன்ஸ், உலர்ந்தக் கொட்டைகள்.
வைட்டமின் "பி2" (B 2) நமக்கு நாளும் தேவைப்படும் வைட்டமின்களில் முதன்மையானது. இதை உடல் சேமித்து வைத்துக் கொள்ளமுடியாது. நாளும் உணவில் இதை எடுத்து கொள்ளத்தான் வேண்டும். இவை தாம் ஆற்றல் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றன. அதனால் அவசியமான ஊட்டச்சத்தில் இதன் பங்கு இன்றியமையாதது. உடலில் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுவதில் ரைபோபிளேவின் சிறந்த பங்கு வகிக்கிறது.
உடலில் புரதங்கள் உருவாக்குவதோடு தொடர்புக் கொண்டவை என்பதால் உடலின் இயல்பான வளர்ச்சிக்கு உதவுகிறது. இது தைராய்டு செயல்பாட்டையும் சீர்செய்கிறது. இனப்பெருக்க உறுப்புகளின் சரியான வளர்ச்சிக்கு இது உதவுகிறது.
உடலில் தோல், திசு, கண்கள், சவ்வு, நரம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்புமண்டலம் போன்றவற்றின் திசு வளர்ச்சியை உறுதி செய்ய உதவுகிறது. நலமான சருமத்துக்கும், நகங்களின் வலுவுக்கும், வலுவான கூந்தலுக்கும் கூட உதவுகிறது. காயங்களை மீட்டுத் தோலைப் பாதுகாப்பதிலும் சிறந்த பங்கு வகிக்கிறது. கண்புரை வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
அதிகமுள்ள உணவுப் பொருட்கள் - பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், முட்டை, மீன், காளான் வைட்டமின் "பி3" தோல் பாதிப்புகளில் இருந்தும், செரிமான கோளாறுகளில் இருந்தும் காக்கிறது. நாளும் நமக்கு 14-17மிகி போதுமனாது. அளவிற்கு அதிகமாக எடுக்கும்போது கல்லீரல் இடர் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதன் குறைபாட்டால் பெல்லங்ரா (Pellegra) ஏற்படுகிறது. இதனால் வயிற்றுப் போக்கு, நினைவுமறதி, தோல் ஒவ்வாவை போன்றவை ஏற்படுகின்றன. அதிகமுள்ள உணவுப் பொருட்கள்: அசைவ உணவுகள், மீன், முட்டை மற்றும் காய்கறிகள்.
வைட்டமின் "பி6" இது இதயம்,தோல் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ஹார்மோன்களைச் சீராகச் செயல்பட வைக்கிறது மற்றும் அறிவாற்றலை அதிகரிக்கிறது. இதன் குறைபாடு இருக்கும் போது உடல் சோர்வு, பசியின்மை, வறண்ட சருமத்தின் தோற்றம், முடிஉதிர்தல், உதடுகளைச் சுற்றி விரிசல், தூக்க மின்மை, வாய் மற்றும் நாக்குப் பகுதியில் வீக்கம் உண்டாகலாம்.
அதிகமுள்ள உணவுப் பொருட்கள்: முழு தானியங்கள், பருப்புவகை, முட்டை, மீன், இறைச்சி, வாழைப்பழங்கள், காலிப்ளவர், முட்டைகோஸ், சோயாபீன்ஸ், கேரட் மற்றும் கீரைகள்.
வைட்டமின் "பி12" (B12) மிகவும் சக்தி வாய்ந்த, நீரில் கரையும் ''பி''-காம்ளக்ஸ் வைட்டமின் ஆகும். இதைச்சயனோ கோபாலமைன் என்றும் கூறலாம். இது நம் உடலின் ஆற்றல் மையமாகச் செயல்படுகிறது. நம் உடல் வைட்டமின் "பி12"-ஐ தானாகத் தயாரிக்க முடியாது. எனவே தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதற்கு முக்கியம். மூளை மற்றும் நரம்புகளைச் சுற்றி உள்ள மைலின் உருவாக்கத்திற்கும் செயல்பாட்டிற்கும் முக்கியம். மூளையில் உள்ள வேதியியல் பொருட்களின் தயாரிப்புக்கு முக்கியம்.
ரத்தச் சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு முக்கியம். நம் அணுக்களில் உள்ள டி.என்.ஏ.வின் உருவாக்கத்திற்கு முக்கியம். ஞாபக மறதிநோய் வராமல் தடுப்பதற்கு முக்கியம்.
ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியம். மனநோய்களான மனஅழுத்தம், படபடப்பு, மனப்பதற்றம் போன்றவை வராமல் தடுப்பதற்கு முக்கியம். பிறவியில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
வயது மூத்தோருக்கு வரும் கண் குறைபாடுகளைத் தடுக்கிறது. இதய நலனுக்கு உதவுகிறது. நகம், தோல், கண்களின் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மூட்டுகளைச் சுற்றியுள்ள சவ்வுகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியம் தேவைப்படுகிறது.
வைட்டமின்கள் அதிகமுள்ள உணவுப் பொருட்கள்: அசைவ உணவுகள் - முட்டை, மீன் மற்றும் கோழி, ஈரல் மற்றும் சிவப்பு மாமிசம்.
சைவ உணவுகள் - வலு ஊட்டப்பட்ட தானியங்கள், பால் பொருட்கள், சோயா, பாதாம் உள்ளிட்டவைகளில் அதிக அளவில் வைட்டமின் "பி12"உள்ளது.
வைட்டமின் "பி9" ரத்த உற்பத்திக்கு மிகவும் அவசியமான வைட்டமின். இதன் குறைபாட்டால் ரத்தச் சோகை, பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவி குறைபாடு, வாய்ப்புண், தலைவலி, பசியின்மை, அதிகக் கோபம், மனக்கட்டுப்பாடின்மை ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. உடலால் இதைச் சேமித்து வைக்க முடியாது. நாளும் உணவில் இதைச் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமுள்ள உணவுப் பொருட்கள்: புரக்கோலி, விதைகள் மற்றும் கொட்டைகள், அசைவ உணவு, அவகேடோ, சோயா, வாழைப்பழம், தக்காளி, பப்பாளி, சிட்ரஸ் பழங்கள், வெண்டைக்காய், காலிபிளவர், பீட்ரூட், கேரட், கீரைகள்
வைட்டமின் "சி" இது உடலில் உள்ள எலும்புகள், தசைகள் மற்றும் பற்களை வலுவாக்க உதவுகிறது. புரதத்துடன் இணைந்து நம் உடலின் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமித் தொற்றுகளிடமிருந்து காக்கிறது.
உணவில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சவும், கால்சியம் எலும்புகளுக்குச் சென்றடையவும் இது வேண்டும். ஸ்கர்வி என்னும் நோய் இதன் குறைபாட்டால் வருகிறது. இதனால் எலும்புகளும் தசைகளும் வலுவிழந்துவிடும்.
அதிகமுள்ள உணவுப் பொருட்கள்: நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், குடைமிளகாய், கீரைகள், பிரக்கோலி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, காலிப்ளவர், முட்டைகோஸ், அன்னாசிப்பழம், கிவி பழம், மாம்பழம், கொய்யாப்பழம். இந்த பழங்களில் வைட்டமின் "சி" இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத
அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் "சி" மிக அதிகமாக உள்ளது. மேலும் இதில் கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் இருப்பதால் வைரஸ் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. எலும்புகளின் உறுதிக்கும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது. எனவே நாம் உண்ணும் உணவில் மேற்கூறியவற்றை தினமும் எடுத்துக்கொள்ளும்போது வைட்டமின்கள் குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்கலாம், மகிழ்ச்சியாக வாழலாம்.
போன்: 75980-01010, 80564-01010.
- சுக்கிரன் என்பவர் நவகிரகங்களில் ஒருவர்.
- வாழ்விற்கு தேவையான அத்தனை சந்தோஷங்களையும் தரக்கூடியவர் சுக்கிரன்.
சுகபோகமாக வாழ்பவர்களைப் பார்த்து "அவர்களுக்கென்ன சுக்கிர திசை அடிச்சி கெடக்கு" என்பார்கள்.
ஒருவனுக்கு பணம், பதவி, புகழ், அதிர்ஷ்டம் போன்றவை சுக்கிர திசை நடை பெறும் போது தான் கிடைக்குமா?
சுக்கிரன் என்றால் யார்? என்ற தேடல் நிறைய தகவல்களை தந்தது.
சுக்கிரன் என்பவர் நவகிரகங்களில் ஒருவர். வெள்ளி என்ற பெயரிலும் இவரை அழைப்பார்கள்.
நாம் வசிக்கும் பூமியின் அருகில் அமைந்து பூமியை பார்க்கும் நவக்கிரகங்களில் ஒருவர் சுக்கிரன் ஆவார்.
நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுப்பதால் நவகிரகங்களில் "யோக காரகன்" என சுக்கிரனை அழைப்பார்கள்.
சுக்கிரன் அசுரர்களின் குல குருவாக போற்றப்படுபவர். ஆச்சாரியார் என்றால் குரு என பொருள் படும்.
அசுரர்களின் குல குரு என்பதால் சுக்கிரனை "சுக்கிராச்சாரியார்" என்ற பெயரில் அழைப்பார்கள்.
வாழ்விற்கு தேவையான அத்தனை சந்தோஷங்களையும் தரக்கூடியவர் சுக்கிரன்.
ஜாதகத்தில் வாழ்க்கைத் துணையை பற்றிக் கூறும் கிரகம் என்பதால் களத்திர காரகன் என்றும் சுக்கிரனை அழைப்பார்கள்.
நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு இல்லாமல் எப்போதும் இளமையாய் இருக்கும் வல்லமையினை தரும் அமிர்தத்தை பெற வேண்டி தேவர்கள் பிரம்ம தேவரிடம் ஆலோசனை கேட்கின்றனர்.
ஆதிசேஷன் எனும் நாகத்தை மெத்தையாக்கி அனந்த சயன மூர்த்தியாக ஆதி நாராயணர் பள்ளி கொண்டிருக்கும் திருப்பாற்கடலை கடைந்தால் அமிர்தம் கிடைக்கும் என தேவர்களிடம் ஆலோசனை கூறுகிறார் பிரம்மதேவர்.
சவாலும், கடினமும் ஆன அமிர்தம் கடையும் செயலுக்கு அசுரர்களை உதவிக்கு அழைக்கின்றனர் தேவர்கள்.
திருப்பாற்கடலை ஆழியாக்கி, கூர்ம நாராயண மூர்த்தி மேல் மந்தர மலையை மத்தாக அமர்த்தி, வாசுகி எனும் பாம்பினை கயிறாக கொண்டு,சந்திரனை சில்லாக பயன்படுத்தி அசுரர்கள் வாசுகி பாம்பின் தலைபகுதியை பிடித்து கொள்ள தேவர்கள் வாசுகி பாம்பின் வால் பகுதியை பிடித்து அமிர்தம் கடைய துவங்கினர்.
சவாலும், ஆபத்தும் நிறைந்த வாசுகி பாம்பின் தலைப்பகுதியில் நின்று அசுரர்கள் கடைந்திருந்தாலும் மோகினியாக அவதாரம் எடுத்த நாராயண பரம்பொருளின் திருவருளால் தேவர்கள் மட்டுமே அமிர்தத்தை பருகினர்.

சுரேஸ்வரன் அய்யாப்பழம்
இதனால் கோபமடைந்த அசுரர்கள் தங்களின் குல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்று தேவர்கள் தங்களுக்கு அமிர்தம் தராமல் ஏமாற்றியதைப் முறையிட்டனர்.
தனது மக்களாகிய அசுரர்களை ஏமாற்றிய தேவர்கள் அனைத்து செல்வ வளங்களையும் இழந்து பூலோகம் சென்று துன்பப்படட்டும் என சுக்கிராச்சாரியார் தேவர்களுக்கு சாபம் அளித்தார்.
சுக்கிராச்சாரியாரின் சாபத்தால் அல்லலுற்ற தேவர்கள் தங்களை காப்பாற்றும் படி வேதங்களை தொகுத்த வேதவியாச மாமுனிவரிடம் சரணடைந்தனர்.
உத்திரவாகினி என அழைக்கப்படும் வட காவிரியில் சென்று நீராடி, கற்பகாம்பிகை சமேத அக்கினீஸ்வரரை வழிபட்டால் தேவர்களுக்கு சுக்கிரனால் வழங்கப்பட்ட சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என தேவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் வியாச முனிவர்.
வியாச மாமுனிவரின் ஆலோசனைப்படி தேவர்களும் கஞ்சனூர் என தற்போது அழைக்கப்படும் அக்னீஸ்வரர் ஆலயத்தில் வந்து சிவ பெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர்.
சுக்கிரன் அளித்த சாபத்தில் இருந்து தேவர்களுக்கு நிவாரணம் வழங்கிய தலம் என்பதால் சுக்கிரனால் ஏற்படும் தோஷ நிவர்த்திக்குரிய தலமாக கஞ்சனூர் அக்கினீஸ்வரர் ஆலயம் ஆனது போற்றப் படுகிறது.
சுக்கிர தோஷ பரிகார தலமாக இருந்தாலும் கஞ்சனூர் அக்கினீஸ்வரர் ஆலயத்தில் சுக்கிரனுக்கு என தனி சன்னதி எதுவும் கிடையாது.
இங்கு சிவனே சுக்கிரனின் வடிவாக காட்சி அளித்து தன்னை வணங்குவோர்களுக்கு அருள் புரிவது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு ஆகும்.
சுக்கிராச்சாரியாரின் சிறப்புகளையும், கருணையையும் மற்றும் சுக்கிராச்சாரியாரின் தலமான கஞ்சனூர் அக்கினீஸ்வரர் ஆலய தல வரலாற்றைப் பற்றிய சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம்.
நவக்கிரகங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார். சுக்கிரன் மிகச் சிறந்த சிவபக்தர். சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவி மந்திரத்தை கற்றவர்.
நீதி நெறி தவறாத அசுர வேந்தனான மகாபலி, அமர வேந்தன் எனும் தேவேந்திர பதவி வேண்டி அஸ்வமேத யாகம் நடத்துகிறார்.
குள்ள வாமனனாக நாராயணர் அவதாரம் புரிந்து மூன்றடி நிலம் மகாபலியிடம் தானமாக கேட்கிறார். வாமன மூர்த்தியின் சூழ்ச்சியை அறிந்து மகாபலி நீரை வார்த்து தானம் செய்யும் போது கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேறும் பகுதியில் வண்டாக உருமாறி அடைத்துக் கொள்கிறார் சுக்கராச்சாரியார்.
சிறு குச்சியால் வாமன மூர்த்தி கமண்டலத்தை வண்டாக உருமாறி அடைத்து இருக்கும் சுக்கிராச்சாரியாரின் கண்ணை குத்துகிறார். சுக்கிராச்சாரியாரின் கண் பார்வை பறி போகின்றது.
தன்னை ஆச்சாரியாராக நம்பிய மகாலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார்.
சுக்கிரனாகிய தனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்து வணங்கு பவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருணை குணம் கொண்டவர் சுக்கிராச்சாரியார்.
அதனால் தான் கிரகங்களில் சுக்கிரனை சுபர் கிரகம் எனவும் அழைப்பார்கள்.
மூர்த்தி, தலம், விருட்சம் என மூன்று சிறப்புகளையும் ஒருங்கே கொண்ட ஆலயங்கள் ஒரு சிலவே உண்டு.
கஞ்சனூர் அக்கினீஸ்வரர் ஆலயத்தின் மூர்த்தி, தலம், விருட்சம் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை.
ஒரு சமயம் பிரம்ம தேவர் நடத்திய யாகத்தில் தேவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆஹூதிகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்காமல் தனக்கு மட்டுமே சேரும்படி எடுத்துக் கொண்டார் அக்கினி தேவன்.
அக்கினி தேவனின் சுயநலமான இந்த செயலால் பாண்டு ரோகம் என்ற சோகை நோய் அக்கினி தேவனைப் பற்றிக் கொண்டது.
பிரம்ம தேவரிடம் நோய் நீங்க வழி கேட்டார் அக்கினி தேவன்.
கஞ்சனூரில் வீற்றிருந்து அருள் புரியும் சிவ பெருமானை வழிபடும்படி அக்கினி பகவானுக்கு ஆலோசனை வழங்கினார் பிரம்ம தேவர்.
அக்கினி தேவரும் கஞ்சனூர் சிவபெருமானை வழிபட்டு பாண்டு ரோக நோய் நீங்கப் பெற்றார்.
அக்கினி பகவான் வழிபட்டு நோய் நீங்கியதால் இத்தல இறைவன் "அக்கினீஸ்வரர்" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அக்னி பகவான் இந்த தலத்தில் உருவாக்கிய தீர்த்தம் அக்னி தீர்த்தம் என தற்போதும் அழைக்கப்படுகிறது.
அக்னி தேவனின் நோய் காரணமாக பிரம்மா துவங்கிய யாகம் ஆனது தடைபடுகிறது. யாகம் நிறைவு பெறாததால் பிரம்ம தேவரின் படைப்பு தொழில் ஆனது பாதிக்கப் படுகின்றது
தனது படைப்பு தொழில் தடையின்றி நடைபெற பிரம்ம தேவரும் இத்தலத்திற்கு வந்து சிவ பெருமானை நோக்கி தவமிருந்து, அருள் பெற்றார்.
கஞ்சம் என்றால் தாமரையில் இருப்பவர் என்று பொருள்.பிரம்ம தேவர் சிவபெருமானை வணங்கி வழிபட்டு அருள் பெற்ற தலம் என்பதால் இத்தலம் ஆனது தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் பிரம்மாவின் பெயரால் கஞ்சனூர் என அழைக்கப்படுகிறது.
பிரம்மா நீராடி சிவபெருமானை வணங்கி வழிபட்டதால் இந்த தலத்தில் ஓடும் காவிரி ஆற்றிற்கு பிரம்ம தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.
பலா மற்றும் புரசு கஞ்சனூர் ஆலயத்தின் தல விருட்சமாக போற்றப்படுகின்றன.
கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலய தல விருட்சத்தை ஒரு மண்டல காலம் தொடர்ந்து பதினாறு முறை வலம் வந்து வழிபட்டால் பதினாறு வகை பேறினை பெற்று வாழலாம்.
பொதுவாக மூலவர் ஆன ஆண் தெய்வத்தின் சன்னதி வலது புறத்திலும் பெண் தெய்வமான அம்பாளின் சன்னதி இடது புறத்திலும் இருக்கும்.
கஞ்சனூர் ஆலயத்தின் தெய்வ சன்னதிகள் தனி சிறப்பு வாய்ந்தது ஆகும்.
தன்னை தவமிருந்து வழிபட்ட பிரம்மா முன் கஞ்சனூர் தலத்தில் சிவ பெருமான் - பார்வதி தம்பதி சமேதராய் திருமண கோலத்தில் காட்சி அளித்தார்.
திருமணக் கோலத்தில் காட்சியளித்த தலம் என்பதால் இறைவனின் வலது புறத்தில் அம்பாளின் சன்னதி அமைந்துள்ளது.
அம்பாளின் திருநாமம் கற்பாகம்பாள் ஆகும்.
அக்கினீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் சன்னதி நடுவில் முருகப்பெருமானுக்கு தனி சன்னதி உள்ளது. இவ்வாறான முருகப்பெருமான் சன்னதி அபூர்வமாய் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே காணப்படும்
இவ்வாறு இறைவன் மற்றும் அம்பாள் சன்னதி நடுவில் அமைந்திருக்கும் அபூர்வமான முருகப் பெருமான் சன்னதியை ஸோம ஸ்கந்தர் சன்னதி என அழைப்பார்கள்
மூர்த்தி,தலம்,விருட்சம் என அனைத்து சிறப்புகளையும் ஒருங்கே பெற்று கேட்டவர்களுக்கு கேட்ட வரங்களை கீர்த்தியுடன் அள்ளித் தரும் சுக்கிரனின் அம்சமாய் வீற்றிருக்கும் கஞ்சனூர் அக்கினீஸ்வரரை வாழ்வில் ஒரு முறையேனும் சென்று தரிசித்து அவர் அருளைப் பெற்று வாருங்கள்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கும்பகோணத்தில் இருந்து கிட்டத்தட்ட 16 கிலோமீட்டர் தொலைவில் காவிரி ஆற்றின் வட திசைக் கரையில் கஞ்சனூர் என்ற கிராமத்தில் அக்கினீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
தொடர்புக்கு-isuresh669@gmail.com
- ஸ்ரீபகவத் விநாயகர், நவக்கிரகங்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளார்.
- திருக்கோவிலில் பகவத் முனிவருக்கு சிலை உள்ளது.
கோவில் மாநகரம் என்று போற்றப்படும் கும்பகோணம் மடத்துத் தெருவில் கோவில் கொண்டுள்ளார் ஸ்ரீபகவத் விநாயகர். இவர் ஆரம்ப காலத்தில் இக்கோவிலுக்கு அருகில் ஓடும் காவிரி நதிக்கரையில் ஓர் அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
அந்தக் கால கட்டத்தில் வேதாரண்யம் திருத்தலத்தில் பகவத் முனிவர் என்பவர் தன் சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். இவரின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் தன் மகனிடம், "நான் இறந்ததும் என்னை தகனம் செய்த பின் அந்த அஸ்தியை ஒரு கலசத்தில் சேகரித்துப் புனிதத் திருத்தலங்களில் ஓடும் நதிக்கரைக்கு எடுத்துச்செல். எங்கு என்னுடைய அஸ்தி பூக்களாக மலர்கிறதோ அங்கு ஓடும் புனித நதியில் முறைப்படி கரைத்து விடு' என்று சொல்லி விட்டு உயிர்துறந்தார்.
அன்னை சொன்னதுபோல், தன் தாயாரின் அஸ்தியை ஒரு மண் கலசத்தில் சேகரித்து ஓர் ஓலைக் கூடைக்குள் பத்திரப்படுத்தி துணியால் மண் கலசத்தின் வாய்ப்பகுதியை மூடி, மூட்டையாகக் கட்டினார். பகவத் முனிவர், தன் சீடர்களில் ஒருவனை அழைத்துக்கொண்டு பயணமானார்.
'புனிதத்திருத்தலமான காசியில் ஓடும் கங்கைக் கரையில் தான் தன் அன்னையின் அஸ்தி, பூக்களாக மலரும்' என்ற எண்ணத்தில் பயணத்தைத் தொடர்ந்தவர். வழியில் கும்பகோணம் தலத்திற்கு வந்ததும், அங்கு ஓடும் காவிரியில் நீராட விரும்பினார். தன் தாயின் அஸ்தி உள்ள கலசக் கூடையை, அங்கு அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பிள்ளையார் முன்பு வைத்தவர். தன் சீடனைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, காவிரியில் நீராட சென்றார்.
குருநாதர், காவிரியில் நீராடிக் கொண்டிருக்கும் போது, சீடனுக்குப் பசி எடுக்கவே, 'கூடையில் உள்ள மண் பாண்டத்தில் ஏதாவது பலகாரங்கள் இருக்கும்' என்று எண்ணியவன், அஸ்தியுள்ள மண்பாண்டமான கலசத்தைத் திறந்து பார்த்தான். மண் கலசத்திற்குள் பூக்கள் நிறைந்திருப் பதைக் கண்டு ஏமாற்றமடைந்தவன், மறுபடியும் முன்பு உள்ளது போல் மூட்டையைக்கட்டி பத்திரப்படுத்தி விட்டு, குருநாதருக்காகக் காத்திருந்தான்.
நீராடிவிட்டு வந்த பகவத் முனிவர், விநாயகருக்கு ஒரு கும்பிடுபோட்டு விட்டு மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.
சில நாட்களில் காசியை அடைந்த முனிவர், அங்கே ஓடும் புனித நதியான கங்கையில் நீராடி விட்டு, அஸ்தி கலசத்திற்குப் பூஜை செய்த பின், திறந்து பார்த்தார். அந்த மண் கலசத்திற்குள் எலும்பு மற்றும் சாம்பல் அப்படியே இருந்ததால் என்ன செய்வதென்று யோசித்தார். அப்போது, பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சீடன் இந்த நிகழ்வுகளை அதிசயத்துடன் பார்த்தான்' கும்பகோணத்தில் இந்தக் கலசத்திற்குள் இருந்த மலர்கள். இங்கே எப்படி அஸ்தியாக மாறியிருந்தது!" என்று குழம்பினான். பகவத் முனிவர் தனக்குள், "அஸ்தி மலர்களாக மாறும் என்று நினைத்தேன். அப்படியே இருக்கிறதே" என்று முணு முணுத்தார்.
முனிவரின் நிலையை அறிந்த சீடன். "குருவே, என்னை மன்னித்து விடுங்கள். இது அஸ்தி கலசம் என்று எனக்குத் தெரியாது. தாங்கள் கும்பகோணத்தில் காவிரியில் நீராடும் போது எனக்குப் பசி எடுக்கவே, மண் கலசத்திற்குள் ஏதாவது பலகாரங்கள் இருக்கும் என்று கலசத்தை மெதுவாக திறந்து பார்த்தேன். அப்போது இந்தக் கலசத்திற்குள் பூக்கள் மலர்ந்து நிறைந்திருந்தன. இப்பொழுது, எலும்பும் சாம்பலுமாக அஸ்தி நிறைந் திருக்கிறதே. அது எப்படி என்று தெரியவில்லை?" என்றான் பயத்துடன். இதை ஏன் அங்கேயே கூறவில்லை?" என்று கோபித்துக் கொண்ட முனிவர். மீண்டும் கும்பகோணம் நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.

கும்பகோணம் வந்தடைந்ததும், முன்பு நீராடிய காவிரிக் கரைக்கு வந்து, காவிரியில் நீராடி, அங்கு அரசமரத்தடியில் எழுந்தருளியிருந்த விநாயகர் முன், அஸ்திக் கல்சத்தை வைத்துப் பூஜித்து விநாயகரை வேண்டினார். பிறகு, பயபக்தியுடன் கலசத்தைத் திறந்து பார்க்க அதிலிருந்த அஸ்தி, பூக்களாக மலர்த்திருந்தது கண்டு மகிழ்ந்தார்.
தன் அன்னைக்குச் செய்ய வேண்டிய பிதுர்காரியங்களை காவிரிக்கரையில் மேற்கொண்டு, பிதுர் பூஜைகள் செய்தபின், மலர்களாக மாறியிருந்த அஸ்திக் கலசத்தை காவிரியில் கரையச் செய்து மறுபடியும் வழிபாடு செய்தார் முனிவர்.
இதனால்தான் காசியைவிட மிக உயர்ந்தது கும்பகோணம் திருத்தலம் என்று பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
அஸ்தியானது பூக்களாக மாறிய காவிரிக்கரையே 'பகவத் படித்துறை' (பகவத் தீர்த்தம்) என்றும் முனிவர் வழிபட்ட விநாயகர், பகவத் விநாயகர் என்றும் போற்றப்படுகிறது.
அரசமரத்தடியிலிருந்த விநாயகருக்கு, அங்கு வசிக்கும் பக்தர்கள் உதவியுடன் காவிரிக் கரைக்கு அருகில் ஒரு கோவில் கட்டினார்.
அதுதான் இன்று மடத்துத் தெருவில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோவில் ஆகும்.
கும்பகோணம் மடத்துத் தெருவில் கிழக்கு திசை நோக்கி உள்ள இக்கோவில் ஆரம்ப காலத்தில் காவிரிப் படித்துறைக்கு அருகிலேயே இருந்தது. கால ஓட்டத்தில் காவிரி நதி குறுகி விட்டதால் தற்போது இக்கோவில் தனியாகவும், பகவத் படித்துறை தனியாகவும் உள்ளதைக் காணலாம்.
'இந்த ஸ்ரீபகவத் விநாயகர், நவக்கிரகங்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளார்' என்று தல புராணம் கூறுகிறது. இவர், சூரியனை நெற்றியிலும், சந்திரனை தாபியிலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ் கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ் கையிலும் சனியை வலது மேல்கையிலும், ராகுவை இடது மேல்கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு அருள்புரிகிறார்.
ஜாதகத்தில் தோஷம் உள்ளவர் இந்த விநாயகரை பூஜித்து வலம் வந்தால் நவக்கிரக தோஷம் நீங்கும். மேலும், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையும் போக்கி அருள்புரிவார் என் பது ஐதீகம்.
மிகவும் பழமையான கோவிலான இந்த ஆலயம் இன்று பலவித மாற்றங்கள் கொண்டு புதுமையாகத் திகழ்கிறது. இத்திருக்கோவிலில் பகவத் முனிவருக்கு சிலை உள்ளது.
காஞ்சி மகா பெரியவர். கும்பகோணம் சங்கர மடத்திற்கு வரும் போதெல்லாம் இந்த விநாயகரை வழிபடுவது வழக்கம் என்று கூறுகிறார்கள். 1952-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமான சந்திரமவு லீஸ்வரன் என்னும் யானை திருவிசநல்லூரில் இறந்தது. அப்போது, காஞ்சி மகா பெரியவர், அந்த யானையின் இரண்டு தந்தங்களையும் விநாயகருக்கு சமர்ப்பித்து வழிபட்டார். மூன்றடி உயரமுள்ள இரு தந்தங்களை விநாயகரின் இருபுறமும் அலங்காரமாக வைக்க அருளினார். அதன்படி இருபுறமும் தந்தங்களுடன் அருள்புரியும் ஸ்ரீபகவத் விநாயகர் சுமார் இரண்டடி உயரத்துடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
- ஒருமுறை திருமாலின் கரத்தில் உள்ள சுதர்சன சக்கரத்தை விளையாட்டாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டுவிட்டாராம் பிள்ளையார்.
- அகத்திய முனிவர் தமது கமண்டலத்தில் கங்கை நீரை அடக்கி வைத்திருந்தார்.
எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும், பிள்ளையார் இந்து மதத்தின் எல்லாப் பிரிவினராலும் ஏற்கப்படக் கூடிய தெய்வமாக விளங்குகிறார்.
திருமாலை வழிபடும் வைணவர்களும் கூடத் `தும்பிக்கை ஆழ்வார்` எனப் பெயரிட்டு விநாயகரை வழிபடுகிறார்கள்.
சிவ குடும்பத்தின் மூத்த பிள்ளை விநாயகர். வாழ்வில் நேரும் தடைகள் அனைத்தையும் நீக்குபவர். விக்கினங்களை நீக்குபவர் என்பதால் அவர் விக்ன விநாயகர் எனப்படுகிறார்.
எந்தச் செயல் செய்தாலும் அதில் வரக்கூடிய விக்கினங்கள் நீங்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் விநாயகருக்கு முதல் வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. எந்தத் தெய்வத்தை பூஜித்தாலும் முதன்முதலில் மஞ்சள் பொடியால் செய்யப்பட்ட பிள்ளையாரை பூஜிக்கும் மரபு அனுசரிக்கப்படுகிறது.
இந்து மதத்தில் அறுவகைப் பிரிவுகளை வகைப்படுத்தி ஆறு வகையிலான வழிபாட்டு முறைக்கு வழிவகுத்தார் மகான் ஆதிசங்கர். சைவம், வைணவம், சவுரம், காணாபத்யம், கவுமாரம், சாக்தம் என்பனவே அவர் வகுத்த அறுவகை பக்தி நெறிகள்.
அவற்றுள் கணபதியை வழிபடும் நெறி `காணாபத்யம்` எனப்பட்டது. விநாயகரைத் துதித்து ஆதிசங்கரர் `முதாகராத்த மோதகம்` எனத் தொடங்கும் கணேச பஞ்சரத்னம் என்ற ஐந்து சுலோகங்களை அருளியுள்ளார்.
மக்கள் எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதத் தொடங்குகிறார்கள். பிரம்மன் தலையில் இட்ட சுழி எப்படியிருந்தாலும் நாம் பக்தியோடு தொடக்கத்தில் எழுதும் பிள்ளையார் சுழி பிரம்மன் இட்ட சுழியை நல்ல விதமாக மாற்றி விடும் என்பது நம் நம்பிக்கை.
பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போடும் வழக்கம் பாரத தேசத்தில் எல்லாப் பிரதேசங்களிலும் உள்ளது.
பிற தெய்வங்களைத் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் வழக்கம் இல்லை. பிள்ளையாரை வழிபடும்போது மட்டும் இந்த வழக்கம் எப்படி வந்தது என்பதை ஒரு கதை விவரிக்கிறது.
ஒருமுறை திருமாலின் கரத்தில் உள்ள சுதர்சன சக்கரத்தை விளையாட்டாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டுவிட்டாராம் பிள்ளையார்.
திருமாலுக்குத் தன் சகோதரி மீனாட்சியின் மகனான பிள்ளையார் மேல் மிகுந்த பாசம் உண்டு. ஆனால் பிள்ளையார் செய்த பிள்ளை விளையாட்டினால் அவரது ஆயுதமான சக்கரம் அவர் வாய்க்குள் போய்விட்டதே?
சக்கரம் மிகுந்த வலிமை நிறைந்தது. அது பிள்ளையாரின் உடலுக்குள் சென்று அவருக்கு எந்தக் கெடுதலும் செய்துவிடாமல் இருக்க வேண்டுமே எனப் பதறியது திருமாலின் உள்ளம்.
அதோடு அவரது சக்ராயுதம் எந்தச் சேதமும் இல்லாமல் அவருக்குத் திரும்பக் கிட்டவும் வேண்டும். சக்கரமில்லாமல் அவர் தீய சக்திகளை வதம் செய்ய இயலாது.
என்ன செய்தால் சுதர்சன சக்கரம் சேதமில்லாமல் அப்படியே முழுமையாகத் திரும்பக் கிடைக்கும்?
யோசித்தார் திருமால். பிள்ளையார் வாயைத் திறந்து உரக்கச் சிரித்தால் கட்டாயம் சக்கரம் கீழே உருண்டு விழுந்து விடும். பிள்ளையாரை எப்படிச் சிரிக்க வைப்பது?
திருமால் பிள்ளையாருக்கு வேடிக்கை காட்டக் கையால் காதுகளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்து நடனமாடினாராம்.
அதைப் பார்த்த விநாயகருக்குச் சிரிப்புத் தாளவில்லை. அவர் வாய்விட்டுச் சிரிக்க சக்கரம் உருண்டு வெளியே வந்து விழுந்துவிட்டதாம்.
விநாயகரை மகிழ வைக்க, காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடும் முறை அப்போதிருந்துதான் தோன்றியது என்றும் பிள்ளையாருக்கு முதன்முதலில் தோப்புக்கரணம் போட்ட பெருமை திருமாலுக்குத்தான் உரியது என்றும் சொல்கிறது அந்தப் பழங்கதை.
பழங்காலப் பாடசாலைகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறிய குற்றங்களுக்காகக் குழந்தைகளைத் தோப்புக்கரணம் போடச் செய்வதுண்டு. கிராமப் பஞ்சாயத்துகளிலும் தோப்புக்கரணம் போடுதல் குற்றங்களைச் செய்தவர்களுக்கு ஒரு தண்டனையாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது.
தோப்புக்கரணம் மூளை நரம்புகளைத் தூண்டும் என்றும் அதனால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஞாபக சக்தி வளர வேண்டும் என விரும்புகிறவர்கள் நாள்தோறும் விநாயகருக்கு எட்டுத் தோப்புக் கரணமாவது போடுவது நல்லது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும்!
தோப்புக்கரணம் போடுவதற்கு முன் இரு கரங்களால் அவரவர் நெற்றியின் மேல் புறத்தில் குட்டிக் கொள்ளும் வழக்கமும் நடைமுறையில் உண்டு. இந்த வழக்கம் எப்படி வந்தது என்பதற்கும் ஒரு கதை இருக்கிறது.
அகத்திய முனிவர் தமது கமண்டலத்தில் கங்கை நீரை அடக்கி வைத்திருந்தார். அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது, விநாயகர் காகமாக உருவெடுத்து வந்து அந்தக் கமண்டல நீரைச் சடாரெனத் தட்டிவிட்டார். அந்த நீர் காவிரி நீராகப் பெருக்கெடுத்து ஓடியது.
தியானம் கலைந்த அகத்தியர் யார் இந்தச் செயலைச் செய்தது எனச் சுற்றுமுற்றும் பார்த்தார். கமண்டலத்தைத் தட்டிவிட்ட காகம் அவர் எதிரே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு நின்றது.
சீற்றமடைந்த முனிவர் சிறுவன்தான் கமண்டல நீரைத் தட்டிவிட்டவன் என்ற எண்ணத்தில் அவன் தலையில் ஓங்கிக் குட்ட முயன்றார்.
ஆனால் என்ன ஆச்சரியம்! மறுகணம் அந்த தெய்வீகச் சிறுவன் தும்பிக்கையோடும் பெரிய காதுகளோடும் விநாயகப் பெருமானாக உருவெடுத்து அவருக்குக் காட்சி தந்தான்.
முழுமுதல் கடவுளான விநாயகரையே குட்ட எண்ணினோமே என வருந்தியது அகத்தியரின் நெஞ்சம். உடனே அதற்குத் தண்டனையாக அவர், தன் தலையில் தானே குட்டிக்கொண்டு விநாயகரிடம் மனமார மன்னிப்பு வேண்டினார்.
விநாயகர் அகத்தியரை மன்னித்தது மட்டுமல்ல, `இனி என்னை வழிபடுவோர் எல்லாம் உன்னைப் போல் தலையில் குட்டிக் கொண்டு வழிபடட்டும்` எனக் கூறியதாகச் சொல்கிறது அந்தக் கதை.
தோப்புக்கரணத்தைத் திருமால் தொடங்கி வைத்தார் என்றால், விநாயகர்முன் குட்டிக்கொள்ளும் வேண்டுதல் முறையைத் தொடங்கி வைத்தவர் தமிழ் முனிவரான அகத்தியர்தான்.

விநாயகரைச் சிதறு தேங்காய் உடைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் சிதறு தேங்காய் வழிபாட்டிற்கென்றே பெரிய கல் தொட்டியைக் கட்டி வைத்திருக்கிறார்கள்.
அந்தக் கல் தொட்டியில் தேங்காயை வீசி உடைத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நேர்த்தியாகச் செலுத்துகிறார்கள்.
விநாயகர் சன்னிதியில் தேங்காயைச் சிதறச் செய்தால், நம் துன்பங்கள் அனைத்தும் தூள்தூளாகச் சிதறி நம்மை விட்டு விலகி ஓடிவிடும் என அடியவர்கள் நம்புகிறார்கள்.
சிதறு தேங்காய்ச் சில்லுகள் குழந்தைகளுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. அந்த உடைந்த தேங்காய்ச் சில்லுகளை எடுத்துக்கொண்டு போகும் குழந்தைகளை யாரும் தடுப்பதில்லை.
ஜாதகத்தில் திருமணத்தடை இருப்பவர்கள் விநாயகரை வழிபட்டால் அந்தத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்று கருதப்படுகிறது.
விநாயகரின் தம்பியான முருகன் வள்ளியைக் காதலித்தபோது, அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் வகையில் யானை வடிவில் வந்து உதவியவர் பிள்ளையார் தானே? முருகனின் திருமணத்திற்கு உதவிய பிள்ளையார் தம் அன்பர்கள் அனைவரின் திருமணத்திற்கும் உதவுவார் என்பது நம்பிக்கை.
பொதுவாக குன்றுதோறும் குடிகொண்டு அருள்பாலிக்கும் கடவுள் முருகப் பெருமான்தான் என்றாலும் அரிதாக அண்ணன் விநாயகரும் மலைகளில் தென்படுவதுண்டு.
யானையே கானகங்களிலும் மலைகளிலும் வாழ்கிற விலங்குதானே? யானை வடிவம் கொண்ட விநாயகரும் மலையில் வசிப்பதில் வியப்பில்லையே?

திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் விநாயகர், மலை உச்சியில் வீற்றிருக்கிறார். படியேறிச் சென்று அவரை வழிபடுவோரை வாழ்க்கையில் படிப்படியாக அவர் உயர்த்துகிறார்.
விநாயகர் பல்வேறு தோற்றங்களில் காட்சி கொடுக்கக் கூடியவர். விநாயகர் அளவு விதவிதமாகத் தோற்றமளிக்கும் கடவுள் வேறு இல்லை.
வீணையைக் கையிலேந்திய வீணாதர விநாயகர், மிருதங்கம் வாசிக்கும் மிருதங்க விநாயகர், சயன விநாயகர், வட இந்தியாவில் இரு மனைவியரோடு காட்சி தரும் சித்தி புத்தி விநாயகர், அண்மைக் காலங்களில் கணிப்பொறியை இயக்குபவராய்க் காட்சிதரும் கம்ப்யூட்டர் விநாயகர் என விநாயகர் காலத்திற்கேற்ற கோலம் கொள்ளும் கடவுளாக விளங்குகிறார். பக்தர்கள் அவரைத் தங்களுக்குப் பிடித்த வகையிலெல்லாம் வழிபட்டுப் போற்றுகிறார்கள்.

திருப்பூர் கிருஷ்ணன்
கந்த புராணம் எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியார், அண்ணன் விநாயகரை வணங்கிய பின்னரே தம்பி முருகனைப் பற்றி நூல் எழுதத் தொடங்குகிறார்.
`திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்!`
என்பது அவர் எழுதியுள்ள விநாயகர் துதி.
தமிழில் விநாயகர் மேல் இன்னும் பற்பல தோத்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. யோகசாத்திரம் முழுவதையும் உள்ளடக்கி `சீதக்களப செந்தாமரை` எனத் தொடங்கி, அவ்வையார் எழுதிய விநாயகர் அகவல், பாரதியார் பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் மேல் எழுதிய `விநாயகர் நான்மணிமாலை` போன்ற நூல்கள் பிரசித்தி பெற்றவை. இவற்றை பக்தியுடன் பாராயணம் செய்வதன் மூலம் விநாயகரின் அருளைப் பெற முடியும்.
இன்றளவும் விநாயகர் ஆன்மிக உணர்வுடைய அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து வருகிறார். தீய சக்திகள் அவரது பிளிறலைக் கேட்டு வேர்த்து விறுவிறுத்துக் காணாமலே போய் விடுகின்றன.
கோடி கோடி மத யானைகள் பணிசெய்யக் குன்றென விளங்கும் பெம்மானான விநாயகர் இந்திய மக்களை ஒருங்கிணைத்து நல்லவை வெற்றிபெறத் தொடர்ந்து அருள்புரிந்து வருகிறார். விநாயகரை வழிபட்டு அவர் அருள்பெற்று, அதன்மூலம் வீட்டையும் நாட்டையும் வளமாக்குவோம்.
`கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை நீங்குமே!`
(-திருமூலர் அருளிய திருமந்திரம்.)
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com
- விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும்.
- விநாயகரை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் வழிபடுவது உத்தமம்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே!
நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், வாழ்வில் 16 வகை செல்வங்களும் பெற்று வாழ இறைவனை நினைத்து இருப்பது விரதம். ஒரு விசேஷ நாளில் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நினைத்து ஐம்புலனை அடக்கி, உண்ணாமல் இருக்கும் நிலை விரதமாகும்.
விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும். விரதங்களை கடைபிடிப்பதால் ஆன்மிக ரீதியான பயன்களுடன் அறிவியல் ரீதியாக உடலும், உள்ளமும் நலம் பெறும்.
பிரார்த்தனைகளை நிறைவேற்றும் விரத நாட்களை திதி மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் கடைபிடிப்பது இந்துக்களின் வழக்கம்.
திதிகளின் தேவதைகளுக்கு சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் சக்தி உள்ளதால் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களை வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.
திதியால் ஏற்படும் கிரக தோஷம் நீங்க அதற்குரிய திதிதேவதைகளை வழிபட்டால் எத்தகைய கடுமையான பாதிப்புகளில் இருந்தும் விடுபடலாம்.
திதிகளின் அதி தேவதைகளை வழிபாடு செய்தால் அது அவர்களுக்கு காவல் தெய்வங்களாக இருந்து வறுமை பிணி, பீடை, கஷ்டம் என அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி சுபிட்சமான வாழ்வு கிடைக்கச் செய்யும்.
பொதுவாக அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, பஞ்சமி,சஷ்டி, ஏகாதசி, திரயோதசி போன்ற ஒரு சில குறிப்பிட்ட திதிகள் காலத்தால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் வலிமை பெற்றவை.
அந்த வகையில் வளர்பிறை சதுர்த்தி திதியின் அதி தேவதை விநாயகரை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் வழிபடுவது மிகவும் உன்னதமானது.
இந்துக்களின் வழிபாட்டு தெய்வங்களில் முதன்மை யானது விநாயகர் வழிபாடு.கணபதியை வழிபட்டுத் துவங்கும் அனைத்தும் சித்தியாகுவதுடன் நற்காரி யமாக மாறும் என்பது நம்பிக்கை. தன்னை வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றுவது விநாயகரின் தனிச்சிறப்பு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகர் சதுர்த்தி விரதம் குரோதி வருடம் ஆவணி மாதம் 22-ம் நாள் சனிக்கிழமை 7.9.2024 அன்று சித்திரை நட்சத்திரத்தில் வருகிறது. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் விரதம் இருந்து விநாயகரை வழிபட ஜனன கால ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் அகலும்.

விநாயகரின் சிறப்புகள்
இந்திய மக்கள் அனைவராலும் விரும்பி வழிபாடு செய்யப்படுபவர் விநாயகர். விநாயகர் எளிமையான கடவுள். களிமண், சாணம், மஞ்சள் என எதைப் பிடித்து வைத்தாலும் பிள்ளையார் ஆகிவிடுவார். எளிதில் கிடைக்கும் அருகம்புல், எருக்கு போன்ற பூக்களால் அர்ச்சனை செய்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்.
ஆற்றங்கரை, குளத்தங்கரை, அரசமரத்தடி, தெருமுக்கு என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் விநாயகர்.
ஓங்கார நாயகனாக திகழும் விநாயகரின் உடலில் நவக்கிரகங்களும் இருப்பதாக ஐதீகம்.அவரது நெற்றியில் சூரியனும், நாபி (தொப்புள்)யில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாய் எனப்படும் அங்காரகனும், வலது கீழ் கையில் புதனும் ,வலது மேல் கையில் சனி பகவானும், சிரசில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்கிர பகவானும், இடது மேல் கையில் ராகு பகவானும், இடது தொடையில் கேது பகவானும் இருப்பதால் நவக்கிரகங்களால் ஏற்படும் தீமைகளை கட்டுப்படுத்தும் சக்தி விநாயகருக்கு உண்டு.
விநாயகர் சதுர்த்தி விரதத்தால் விலகும் தோஷங்கள்

சனி தோஷம்
கர்ம வினைப்படி ஒரு மனிதன் வாழ்வில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்ப துன்பங்களையும் வழங்குபவர் சனி பகவான். அதாவது பூர்வ ஜென்ம கணக்குப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை நிர்ணயம் செய்பவர் சனி பகவான். அதனால் தான் நியாயத்தராசை ராசிச் சின்னமாகக் கொண்ட துலாம் ராசியில் உச்சம் அடைகிறார்.
சனி சுப வலுப்பெற்றால் மட்டுமே பிறப்பு முதல் இறப்பு வரை வசதியான வாழ்க்கை, நிறைந்த தொழில், நீண்ட ஆயுள் இவற்றை ஒரு மனிதன் பெற முடியும். சனி ஒளியற்ற இருளைச்சுட்டிக் காட்டக் கூடிய கிரகம்.
வாழ்வில் நடக்கும் மங்கலம் இல்லாத விஷயங்களை சுட்டிக் காட்டும் கிரகம். சனி தூய்மையின்மை, அழுக்கு, தடை, தாமதம், சோம்பல், ஊனம் போன்றவற்றிற்கு காரக கிரகம். சுய ஜாதகத்தில் சனி பலம் குறைந்தவர்கள் சனிக்கிழமை பிறந்தவர்கள் 8,17, 26ம் தேதி பிறந்தவர்கள்.
சனிக்கிழமை பிறந்தவர்கள், சனிதசா, சனி புத்தி நடப்பில் இருப்பவர்கள், தீராத நோய் கடன், ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பாதிப்பு இருப்பவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் வறுமை, கடன், நிலையில்லாத தொழில், கஷ்ட ஜீவனம், தடை, தாமதம், ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் போன்றவைகள் விலகும்.

நாகதோஷ நிவர்த்தி
சர்ப்ப தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள் 4,13,22,31ம் தேதியில் பிறந்தவர்கள், ராகு, கேது தசை நடப்பவர்கள், ஜனன கால ஜாதகத்தில் அதிக கிரகங்கள் ராகு/கேது சாரம் பெற்றவர்கள் வாசுகி , ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன்,பதுமன், மகாபதுமன் எனும் ஒன்பது தெய்வத்தன்மை மிகுந்த நாகங்களை மனதில் நிறுத்தி ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் மற்றும் நாகர்சிலைக்கு பால் மற்றும் மஞ்சள் அபிஷேகம் செய்தால் ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான சர்ப்ப தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.
திருமணத்தடை நீங்கும்,தீர்க்க சுமங்கலி பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.அத்துடன் கண்திருஷ்டி, செய்வினை பயம், ஏதாவது ஒரு ரூபத்தில் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருக்கும் பிரச்சினைகள், முன்னேற்றமின்மை போன்றவை நீங்கும். சம்பள உயர்வு . வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பி வரும்.

மாங்கல்ய தோஷம்
ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அதிதேவதையாகும். ஜனன கால ஜாதகத்தில் எட்டாமிட கேது , செவ்வாய் மற்றும் சனியினால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம்,
செவ்வாய் தோஷம் நீங்கி திருமணத் தடைகள் அகன்று மங்கல வாழ்வு அமையவும். சனி பகவானின் தோஷம் நீங்கி, ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கவும். விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து விநாயகரை தரிசித்து, சூரைத்தேங்காய் உடைத்து வழிபட அனைத்து தடை தாமதங்களும் விலகி சுப பலன் தேடி வரும்.

கேது தோஷம்
ஜாதகத்தில் கேது திசை மற்றும் கேது புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கு நிச்சயம் விநாயகர் வழிபாடே சிறந்த பரிகார மாகும். இப்படியாக நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான இன்னல்க ளுக்கும் விநாயகரை வழிபடுவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் உண்டாகும்.
ஜனன ஜாதகத்தில் கேது சந்திரன் சாரம், சந்திரன் கேது சாரம், சந்திரன் வீட்டில் கேது,சந்திரன் கேது சேர்க்கை, சந்திரனுக்கு அடுத்த வீட்டில் கேது, திரிகோணம் மற்றும் கோட்சார கேது, சந்திரன் தொடர்பால் பிரச்சினைகளை சந்திப்பவர்களுக்கும் மீள முடியாத கோர்ட்,கேஸ் பிரச்சினை உள்ளவர்களும் விநாயகர் சதுர்த்தி அன்று செய்யும் விநாயகர் வழிபாடு அதிக நன்மை தரும்.

செவ்வாய் தோஷம்
செவ்வாய் பூமிக் காரகன், ரத்த காரகன் மற்றும் யுத்த காரகன். தைரிய வீரியத்திற்குரிய கிரகம். மேலும் உடன் பிறந்த சகோதரம் மற்றும் பெண்கள் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் கிரகமாகும். இந்த செவ்வாய் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பது பொது விதி. ஆனால் தனித்த செவ்வாய் திருமணத்திற்கு திருமண வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்ப டுத்தாது.
செவ்வாய், சனி ராகு/ கேது சம்பந்தம் திரு மணத்திற்கு முன், பின் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அல்லது கடன், நோய் பகை போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி சனிக்கிழமையும் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரையிலும் வருவதால் அன்று விரதம் இருந்து ருண விமோசன கணபதி மந்திரம் சொல்லி வணங்க, தீராத கடன் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நோய், பகை தீரும்.
"ஓம் கணேசாய ருணம்
சிந்தி வரேண்யம்
ஹூம் நம்; பட்ஸ்வாஹா"
கிழக்கு முகமாக அமர்ந்து குத்துவிளக்கு ஏற்றி 108 தடவை இந்த மந்திரத்தை ஜெபித்து விளக்கின் பாதத்தில் குங்குமம் இட்டு அந்தக் குங்குமத்தை அணிந்து வர விரைவில் மந்திர சித்தியாகும்.
விநாயகர் சதுர்த்தி அன்று ஆரம்பித்து 90 நாட்களுக்கு குறைந்தது 108 தடவை ஜெபித்து வரவும்.
90 நாட்கள் கழித்து கணபதி ஹோமம் செய்து கொள்ளவும்.அஷ்டம சனி, ஏழரை சனி, சனி தசையால் பாதிப்படைபவர்கள் விநாயகரின் ஜாதகத்தை ஒரு அட்டையில் எழுதி விநாயகர் சதுர்த்தி அன்று பூஜையில் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் தேடி வரும்.
விருட்சமும் விநாயகரும்
அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும். வன்னி மரத்தடி விநாயகர், கிரக தோஷங்கள் விலக்குவார். ஆலமரத்தடி விநாயகரை வழிபடுவதால் சூனியங்கள் அகலும். வேப்பமர விநாயகர் அருளால் தீராத, நாட்பட்ட நோய்கள் மறையும். நாவல் மரத்தடி விநாயகரை வழிபடுவதால் பிள்ளைகளுக்கு அறிவு வளரும்.
விநாயகர் சதுர்த்தி விரத முறைகள்
அதிகாலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி இரண்டு வாழைக் கன்றுகளையும் கட்டவேண்டும்.
பூஜையறையை சுத்தம் செய்து ஒரு மணையை வைத்து கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் விநாயகரை வைக்க வேண்டும்.
விநாயகருக்கு கொழுக்கட்டையுடன் எள்ளுருண்டை, பாயாசம், வடை பால், தேன், வெல்லம், முந்திரி, அவல், பொரி, சோளம், விளாம்பழம், நாவல்பழம், வடை, சுண்டல், வெற்றிலை, பாக்கு ,வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு என அவரவர் வசதிக்கேற்ப நைவேத்யம் செய்யலாம்.
நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் வைக்கலாம்.பூஜையின் போது மண் அகலில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி பூக்களால் அலங்காரம் செய்து 21 வகை இலைகள் மற்றும் அறுகம்புல்லி னால் 108 முறை அவரின் திருநாமத்தைச் சொல்லியும், அஷ்டோத்திரம் படித்து அர்ச்சனை செய்யலாம்.
விநாயகர் அகவல், காரிய சித்திமாலை,விநாயகர் கவசம் படிப்பது விசேஷமான சுப பலன்களைத்தரும். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம். இயன்ற உணவுகளை தான தர்மங்களை செய்ய பலன் இரட்டிப்பாகும்.
சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரித்து பவுர்ணமிக்குப் பிறகு வரும் சங்கட ஹர சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்தால் நினைத்தது நிறைவேறும்.
- மனித உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களிலும் ஸ்டெம் செல் உள்ளது.
- அனைத்திற்கும் தீர்வாக அமைவது ஸ்டெம் செல் சிகிச்சையாகும்.
இன்றைய கால கட்டத்தில் மருத்துவ ரீதியாக அதிகரித்து வருகிற பலவிதமான பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக வயதான பிறகு ஏற்படுகிற பலவிதமான தேய்மானங்கள் மற்றும் வயதான பிறகு ஏற்படும் பாதிப்புகள் ஆகிய அனைத்திற்கும் தீர்வாக அமைவது ஸ்டெம் செல் சிகிச்சையாகும்.
மனித உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களிலும் ஸ்டெம் செல் உள்ளது. நமது உடலில் உள்ள செல்களில் ஏதாவது ஒன்று பழுதானாலோ அல்லது வயது மாற்றங்களினால் தேய்மானம் அடைந்தாலோ அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் திசுக்கள் சேதம் அடைந்தாலோ அதனை சீர் செய்வதற்கான அடிப்படையே ஸ்டெம் செல் தான்.

ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்:
அதன் ஆரம்பம் பிளேட்லெட் ஆக இருந்தாலும், முடிவானது ஸ்டெம் செல் தான். ஸ்டெம் செல் நன்றாக இருக்கிற திசுக்களில் பழுது பார்க்கும் வேலை, மீளுருவாக்கம் மற்றும் புதிய திசுக்களை உருவாக்குதல் ஆகிய அனைத்துமே ஸ்டெம் செல்களால் மட்டும்தான் ஏற்படுகிறது. கடந்த பல வருடங்களாகவே ஸ்டெம் செல் பற்றிய பலவிதமான ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்து வருகிறது.
ஆரம்பத்தில் விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஸ்டெம் செல் ஆராய்ச்சியானது, அதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை தொடர்ந்து மனிதர்களிடையே நடத்தப்பட்டது. அதிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவ ரீதியான விஷயங்கள் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.
ஆரம்ப கால கட்டத்தில் ஸ்டெம் செல் தெரபி என்பது குறிப்பாக ரத்த புற்றுநோய் பாதித்தவர்களுக்கான தீர்வாக அமைந்தது.
இது தொடர்பாக கடந்த காலங்களில் பல ஆய்வுகளும் நடந்துள்ளன. தற்போதைய காலகட்டத்தில் எல்லாவிதமான வயதான மாற்றங்களுக்கும் இந்த ஸ்டெம்செல் தெரபி என்பது மிக முக்கியமானதாக கருதப்படு கிறது.
இதில் மீசன்கைமல் என்கிற ஸ்டெம் செல் தான் மனிதனின் உடல் உறுப்புகளுக்கு ஏற்ற மாதிரி செயல்படுகிறது. அதாவது மீசன்கைமல் ஸ்டெம் செல்லை எடுத்து ஒரு பெண்ணின் தோலில் செலுத்தினால் தோல் பகுதி புத்துணர்வு பெறும். தோல் பகுதியில் ஏற்பட்டுள்ள வயதான மாற்றங்கள் மாறும். வயதான தோற்றத்துடன் கூடிய அந்த தோலை இளமையாக மாற்றும் தன்மை கொண்டது.

வயதான மாற்றங்களை சரி செய்வதற்கான வழிமுறை:
பொதுவாக ஒருவருக்கு வயது கூடும் போது வயதான மாற்றங்கள் எல்லா உறுப்புகளிலும் ஏற்படும். அதாவது மனிதர்களுக்கு வயதாகும் போது தோல், முடி, இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் உள்ள செல்களுக்கும் வயதாகும்.
அந்த செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா செயலிழக்க ஆரம்பித்து, அதனுடைய ஆற்றல் குறைவாகும் போது, அந்த செல்லின் ஆற்றலும் குறைவாகி, செல்கள் இறந்து போவதற்கு வாய்ப்பு உண்டு.
இதுபோன்று அனைத்து செல்களும் ஒரு கட்டத்தில் இறக்கும்போது தான், ஒரு மனிதனின் இறப்பு என்பது முடிவாகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் வயதாகும் போது அவர்களின் உறுப்புகளில் இருக்கும் திசுவில் உள்ள செல்களுக்கும் வயதான மாற்றங்கள் ஏற்பட்டு உடலில் செயலிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்த வகையில் ஸ்டெம் செல் சிகிச்சை என்பது நமது உடலில் ஏற்படும் வயதான மாற்றங்களை சரிசெய்து, உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பதற்கான ஒரு அருமையான வழிமுறையாகும்.
ஆரம்ப காலகட்டத்தில் இந்த ஸ்டெம் செல் சிகிச்சை பற்றி பலருக்கும் பலவிதமான பயம் இருந்தது. ஸ்டெம் செல் சிகிச்சையால் ஏதாவது பின்விளைவுகள் வருமோ, பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளதோ, நீண்ட நாள் பிரச்சினைகள் ஏதாவது ஏற்படுமோ என்ற அச்சம் இருந்தது.
ஆனால் இதை பற்றி தெளிவாக சிந்தித்தால் அச்ச உணர்வு ஏற்படாது. மருத்துவ சிகிச்சையின் போது ரத்தம் ஏற்றுகிறோம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்கிறோம். அப்போதெல்லாம் எந்த பிரச்சினையும் ஏற்படுவது இல்லை.
அதே போலத்தான் நமது உடலில் உள்ள செல்லை எடுத்து நமது உடலிலேயே செலுத்தும் போது எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாது. இதனை அடிப்படையாக கொண்டே ஸ்டெம் செல் பற்றி பலவிதமான ஆய்வுகள் நடந்து வருகிறது.

பெண்களுக்கு வயதாகும் போது அவர்களின் உடலில் பலவி தமான மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த உடலியல் மாற்றங்களை சீர் செய்வதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை ஒரு நல்ல வழிமுறையாகும். ஸ்டெம் செல் தெரபி என்பது பெண்களுக்கு பலவிதமான பிரச்சினைகளுக்கும் நல்ல ஒரு தீர்வாக அமைகிறது.
சினைமுட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஸ்டெம் செல்:
பெண்களின் மிக முக்கியமான ஒரு விஷயமே குழந்தைபேறு தான். ஒரு பெண் குழந்தை பேறு பெறுவதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். ஒன்று சினை முட்டைகள், மற்றொன்று பெண்ணின் கர்ப்பப்பை ஆகியவை ஆகும்.
சினை முட்டைகள் சீரான அளவில், நல்ல எண்ணிக்கையில், நல்ல தரத்தில் இருந்தால் கண்டிப்பாக அந்த சினை முட்டைகளால் ஆரோக்கியமான குழந்தை பேறு பெற முடியும். இந்த குழந்தை பேறு என்பது இயற்கையான முறையிலோ அல்லது செயற்கையான முறையிலோ அமையலாம்.
ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் சினை முட்டைகள் குறைவாக இருக்கும் பெண்களுக்கு மீசன்கைமல் ஸ்டெம் செல் செலுத்துவதன் மூலமாக சினை முட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் சினை முட்டைகளின் தரமும் மேம்படுத்தப்படுகிறது.
சினை முட்டைகளின் தரமும், எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படுகிறது. சினை முட்டைகள் குறைவாக உள்ள பல பெண்கள், ஸ்டெம் செல் சிகிச்சை மூலமாக சினை முட்டைகளின் தரமும், எண்ணிக்கையும் அதிகரித்த நிலையில் இயற்கையாகவே கருத்தரித்து குழந்தை பேறு பெற்றுள்ளனர்.
என்னிடம் ஒரு பெண், குழந்தை பேறு சிகிச்சை பெறுவதற்காக வந்தார். அவர் ஏற்கனவே மூன்று முறை ஐவிஎப் சிகிச்சை பெற்று அது தோல்வியில் முடிந்ததாக என்னிடம் தெரிவித்தார். என்னிடமும் ஐவிஎப் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறினார்.
அந்த பெண்ணுக்கு முதலில் ஸ்டெம் செல் சிகிச்சை அளித்தோம். வழக்கமாக ஸ்டெம் செல் தெரபி கொடுத்து இரண்டு மாதங்கள் கழித்து, மூன்றாவது மாதத்தில் தான் கருத்தரிப் பதற்கான சிகிச்சையை ஆரம்பிப்போம். ஆனால் இரண்டாவது மாதத்தில் காத்திருப்பு காலத்தின் போது அவருக்கு ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தோம்.
ஆனால் அவர் இயற்கையாகவே கருத்த ரித்திருந்தார். இப்போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், சினை முட்டைகளின் எண்ணிக்கை, வளர்ச்சி, தரம் ஆகிய அனைத்தையுமே ஸ்டெம் செல்லானது மேம்படுத்தியுள்ளது. கருமுட்டைகள் அதிகரிப்பதற்கு இது ஒரு நல்ல வழிமுறையாகும்.

கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சியில் ஸ்டெம் செல் சிகிச்சையின் பங்கு:
குழந்தை பேறுக்கு இரண்டாவது விஷயம் கர்ப்பப்பை ஆகும். கர்ப்பப்பையின் உள் சுவரில் உள்ள செல்கள் வரிசை தான் கரு ஒட்டி வளருவதற்கு தேவையான ஒன்றாகும். இந்த செல்கள் வரிசை சீராக இல்லாத நிலையில் கருத்தரிக்க முடியாமல் பல பெண்கள் கஷ்டப்படுகிறார்கள்.
காசநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களுக்கு இந்த கர்ப்பப்பை உள்சுவரானது சிதைந்து விடும். அல்லது சில நேரங்களில் அழிந்து விடும். இப்படிப்பட்ட பெண்களுக்கு இதை சரி செய்வது என்பது மிகப்பெரிய சவால்.
இவர்கள் அனை வருக்கும் குழந்தை பேறு பெறு வதற்கு இப்போதைய காலகட்டத்தில் உள்ள ஒரே முறை ஸ்டெம் செல் சிகிச்சை தான். கர்ப்பப்பையில் உள்ள பழுதான சுவர் பகுதியை சீராக்குவதற்கு மீசன்கைமல் ஸ்டெம் செல்லை கர்ப்பப்பை உள் சுவர்களில் செலுத்துகிறோம்.
இதனை செலுத்தும் போது கர்ப்பப்பை உள்சுவரில் உள்ள பழுதான திசுக்கள் அனைத்தும் சீராகி கர்ப்பப்பையின் உள்சுவர் வளர்ச்சி சரியாகும்.
இதன் மூலம் ஸ்டெம் செல் சிகிச்சையானது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பெண்கள் கருத்தரிப்பதற்கான இரண்டு முக்கியமான பணிகளை இந்த ஸ்டெம் செல் தெரபி செய்கிறது.
ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் ஆண்களுக்கும் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள். ஏனென்றால் குழந்தை பேறு என்பது ஆண்களுக்கு முக்கியம்தான். அந்த வகையில் ஆண்களின் விந்து பையில் இந்த ஸ்டெம் செல்லை செலுத்தும் போது, விந்து உற்பத்தியே இல்லாத ஆண்களுக்கும் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் விந்தணுக்கள் உருவாகிறது.
ஒரு விந்தணு இருந்தாலே போதும், முட்டையுடன் செலுத்தி கருத்தரிப்பு செய்ய முடியும். இந்த வகையில் விந்தணுக்களே இல்லாத ஆண்களுக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் விந்தணுக்களை உருவாக்கி, முட்டையில் செலுத்தி செயற்கை முறையில் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.
- 40000 ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களை உருவாக்கினார்.
- ஆழ்நிலை தியானத்தால் கவலை, மன அழுத்தம் குறைந்து எப்போதும் சமச்சீருடனான சாந்தமான மனநிலையைக் கொண்டிருப்பதைக் காட்டியது.
உலகெங்கும் யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை அறியச் செய்தவர்களுள் மிக முக்கியமானவரும் பல லட்சம் பேர்களை ஆன்மீகத்தில் உயர ஏற்றியவருமான ஒருவர் மகேஷ் யோகி!
பிறப்பும் இளமையும்: பின்னால் மஹரிஷி மகேஷ் யோகி என்று அறியப்பட்ட மகேஷ் ப்ரசாத் வர்மா 1917-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு அருகே உள்ள சிச்லி என்ற கிராமத்தில் பிறந்தார்.
1942-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்ற அவர் சிறிது காலம் தொழிற்சாலைகளில் வேலை பார்த்தார். ஆன்மீக ஈர்ப்பால் ஒரு குருவைத் தேடத் தொடங்கிய அவர் ப்ரஹ்மானந்த சரஸ்வதியை தரிசித்தார். ஜோதிர் மடம் சங்கராசார்யரான ப்ரஹ்மானந்த சரஸ்வதி என்ற மகானைக் குருவாகக் கொண்டதோடு அவரது செயலாளராகவும் பணி புரிந்தார் மகேஷ் யோகி.
'முதலில் பட்டப்படிப்பை முடி; பெற்றோரிடமிருந்து அனுமதி பெற்று இங்கு வா' என்றார் குரு. இரண்டரை வருட காலம் அவரது வழிமுறைகளுக்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட மகேஷ் யோகி, அவரிடம் அனைத்து யோகா மற்றும் தியான முறைகளை நன்கு கற்றுக் கொண்டார்.
1953-ல் அவரது குரு இறைவனடி சேரவே இமயமலையில் உள்ள உத்தர்காண்ட் சென்றார் அவர்.
இமயமலைக் காடுகளில் தவம் புரிந்த அவர் 1955ல் ஆழ்நிலை தியானத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஆழ்நிலை தியானம் என்பது ஒரு நாளைக்கு இரு முறை செய்யப்பட வேண்டிய தியானமாகும். இதற்கு விசேஷ மந்திரமும் உண்டு. இது சாதகரை உயர் பிரக்ஞை நிலைக்கு முன்னேற்றி விடும்.
இரு வருடங்கள் இந்தியா முழுவதும் பயணப்பட்ட பின், 1958-ல் அவர் தனது முதல் உலகப் பயணத்தை மேற்கொண்டார். ஐந்து முறை உலகப்பயணத்தை மேற்கொண்ட அவர் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் சென்றார்.
40000 ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களை உருவாக்கினார். 50 லட்சம் பேர்களுக்கு இவர்கள் ஆழ்நிலை தியான முறையைக் கற்பித்தனர்.
பீட்டில்ஸ் இசைக்குழு: 1962 முதல் உலகின் ஆகப்பெரும் இசைக்குழுவாக பீட்டில்ஸ் குழு திகழ்ந்தது. ஜான் லெனான், பௌல் மக்கார்ட்டினி, ஜார்ஜ் ஹாரிஸன், ரிங்கோ ஸ்டோர் ஆகிய நால்வர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களது இசையால் உலகப் புகழ் பெற்றது பீட்டில்ஸ் இசைக்குழு.
இக்குழுவில் இருந்தோர் அனைவருக்கும் ஒரு ஆன்மீக தாகம் ஏற்பட்டது. "அதிகப் புகழை அடைந்து விட்டோம். ஆனால் இதெல்லாம் எதற்காக" என்ற ஒரு தேடல் உணர்வு குழுவினரிடையே ஏற்பட்டது. 1967 பிப்ரவரியில் ஜார்ஜ் ஹாரிஸனின் மனைவி பாட்டி பாய்ட் ஆழ்நிலை தியானம் பற்றி அறிந்து தன் கணவரிடம் சொல்ல அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் நிகழ்ந்த மஹரிஷியின் உரைக்கு இருவரும் சென்றனர். பின்னர் வேல்ஸில் நடந்த பத்து நாள் முகாமிற்கு பீட்டில்ஸ் குழுவினர் சென்று அதில் கலந்து கொண்டனர்.
தங்களின் ஆன்மீகத் தேடலுக்கு விடை காண குழுவினர் அனைவரும் 1968 பிப்ரவரி மாதம் ரிஷிகேசம் வந்து சேர்ந்தனர்.
உலகெங்குமுள்ள பத்திரிகைகள் இதைப் பெரிய நிகழ்வாகக் கொண்டு செய்திகளைச் சேகரிக்க ஆரம்பித்தன. ஆன்மீக எழுச்சிக்காக அவர்கள் ரிஷிகேசத்தில் உள்ள மஹரிஷியின் ஆசிரமத்திற்கு வந்தது அவர்களது படைப்பாற்றல் திறனை வெகுவாகத் தூண்டிவிட்டது. எப்போதுமில்லாத விதமாக அற்புதமான 48 பாடல்களை அவர்கள் உருவாக்கினர். இவற்றில் பெரும்பாலானவை மிகவும் பிரபலமான 'வொய்ட் ஆல்பம்' என்ற அந்த வருடத்திய வெளியீட்டில் சேர்க்கப்பட்டிருந்தன. பீட்டில்ஸ் குரு என்ற பெயரை மஹரிஷி பெற்றார்.
ஆனால் மஹரிஷியைப் பற்றிய சில புரளிகளால் மூன்று மாதம் தங்க திட்டமிட்ட அவர்களது ரிஷிகேச வாசம் பாதியிலேயே முடிந்தது. ஆனால் பின்னால் பலவருடங்களுக்குப் பிறகு அவர்களில் சிலர் மீண்டும் மஹரிஷியைச் சந்தித்தனர். தங்களது தவறான புரிதலுக்கு அவர்கள் பெரிதும் வருந்தினர்.
ஆனால் மஹரிஷியோ அவர்கள் வந்ததையும் பெரிது படுத்தவில்லை; அவர்கள் சென்றதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.
ச.நாகராஜன்
அறிவியல் சோதனைகள் மூலம் நிரூபணம்!
ஒரு சமுதாயம் நலமுற இருக்கவேண்டுமெனில் அந்த சமுதாயத்தில் வாழும் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மனநலத்துடனும் இருத்தல் வேண்டும். இதற்கு ஆழ்நிலை தியானம் உதவுகிறது என்பதை அறிவியல் சோதனைகள் நிரூபித்துள்ளன.
ஆழ்நிலை தியானத்தினால் என்ன பயன் என்று கேட்கும் சில பகுத்தறிவுவாதிகளுக்குப் பதில் சொல்லும் விதமாக ஏராளமான அறிவியல் சோதனைகளின் முடிவுகளை வரைபடங்களுடன் 1977-ல் ''க்ரியேடிங் அன் ஐடியல் சொஸைடி – மஹரிஷி எஃபெக்ட்' என்ற 170 பக்கங்கள் அடங்கிய ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. ஆழ்நிலை தியானத்தைப் பற்றி நூற்றுக்கும் மேலான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. என்ற போதிலும் இது குறிப்பிடத்தக்க புத்தகமாக அமைகிறது.
இதிலுள்ள அறிவியல் சோதனை முடிவுகள் விவரிக்கும் வரைபடங்களின் சுருக்கத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.
உயிர்ப்பொருள் மாறுபாடு என்னும் மெடபாலிக் ரேட், ஆக்ஸிஜன் அளவை அளப்பதன் மூலம் பெறப்பட்டது. ஆழ்நிலை தியானத்தின் போது ஆக்ஸிஜனை உட்கொள்ளும் அளவு வியக்கத்தக்க அளவில் குறைவாக இருந்தது. இது ஒரு ஆழ்ந்த ஓய்வை உடலுக்குத் தருகிறது.
எலக்ட்ரோ கார்டியோ கிராம் மூலமாக ஆழ்நிலை தியானத்தில் தேர்ந்த 11 பயிற்சியாளர்கள் மூலமாக அவர்களது இதயத் துடிப்பின் அளவு ரிகார்ட் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடும்போது இதயத்துடிப்பின் அளவு நிமிடத்திற்கு ஐந்து துடிப்புகள் குறைவது தெரிய வந்தது.
முன்கையில் ஏற்படும் ரத்த ஓட்டத்தை ஐந்து பேரிடம் ஆழ்நிலை தியானத்திற்கு முன்னர், தியானம் செய்யப்படும் நிலையில் மற்றும் ஆழ்நிலை தியானம் முடிந்த பின்னர் அமைதியாக உட்காரும் நிலையில் 180 முறை அளவுகள் எடுக்கப்பட்டன. இந்த முன்கை ரத்த ஓட்ட அளவு தானியங்கி நரம்பு மண்டலத்தின் நிலையைத் தெளிவாகக் காட்டும் ஒன்று. 32 சதவிகித முன்கை ரத்த ஓட்ட அளவு அதிகரிப்பு தானியங்கி மண்டலத்தின் அதிக அளவு சமச்சீர் நிலை பெறுவதைத் தெளிவாகக் காட்டியது.
ப்ளாஸ்மா கார்டிஸாலின் அளவு வெகுவாகக் குறைவது காணப்பட்டது. அதிக அளவு கார்டிஸால் அதிக அளவு கவலையையும், மனநிம்மதி அற்ற தன்மையையும் கொண்டதைக் காட்டும். ஆனால் ஆழ்நிலை தியானத்தால் கவலை, மன அழுத்தம் குறைந்து எப்போதும் சமச்சீருடனான சாந்தமான மனநிலையைக் கொண்டிருப்பதைக் காட்டியது.
தோலின் எதிர்ப்புத் தன்மை கூடுகிறது.
படைப்பாற்றல் திறன் கூடுகிறது.
நுண்ணறிவுத் திறன் கூடுகிறது.
மதுப்பழக்கம் போன்றவற்றைத் தடுக்கிறது.
இதுபோன்ற இன்னும் ஏராளமான நலன்களை அறிவியல் சோதனைகள் நிரூபிப்பதைக் காண்கிறோம்.
நுண்ணறிவின் 40 அம்சங்களை வளர்க்கும் தியானம்!
நுண்ணறிவுக்கு 40 குணாதிசயங்கள் உள்ளன.
1) ஆற்றலுடன் கூடிய மௌனம், 2) எப்போதும் நீரோட்டம் போல அமைந்துள்ள விழிப்பு நிலை, 3) கொடுத்தலும், உருவாக்குதலும், 4) துடிப்புள்ள முழுமை நிலை, 5) வெளிப்படுத்தும் திறன், 6) மாற்றும் திறன், 7) விரிவடையும் திறன், 8) தனக்கு பரிந்துரைத்தல், 9) அளத்தலும், நிர்ணயித்தலும், 10) அனைத்தும் அறிதல், 11) வேறுபாடுகளை அறிதலும் முடிவெடுத்தலும், 12) குறிப்பாகச் சொல்லுதல், 13) விரிவாக்கல், 14) ஒருங்கிணைத்தல், 15) பகுத்தாய்தல், 16) முழுமையாக வாழ்தல், 17) ஒருங்கிணைத்து ஒத்திசைத்தல், 18) மறைந்திருத்தலும், முன்னேற்றமும், 19) நிலைநிறுத்தல், 20) போஷித்தல், 21) வகைப்படுத்தல், 22) சமான உறவு, 23) சமச்சீர்ப்படுத்தல், 24) பிரித்தல், 25) தகவல் தொடர்பும், பேச்சாற்றலும், 26) பகுத்தாராய்தல், 27) அனைத்தையும் ஒருங்கு சேர்த்தல், 28) அறிவு ஒளி பெறுதல், 29) ஆழ்நிலை அடைதல், 30) கலக்குதல், 31) முழுமையை விகசிக்க வைத்தல், 32) புராதனமானதும் எப்போதும் உள்ளதும், 33) நினைவாற்றல், 34) எங்கும் விரவியுள்ள முழுமை, 35) அமைதிப்படுத்தல், 36) பகிர்தல், 37) பரப்புதல், 38) கட்டவிழ்த்தல், 39) கரைதல், 40) உதிரிப் பகுதிகளை நீக்கி முழுமையை உருவாக்கல் ஆகிய நுண்ணறிவின் நாற்பது குணாதிசயங்களையும் வேதம், உபநிடதம், சாத்திரங்கள் விளக்கியுள்ளன.
இந்த நாற்பது அம்சங்களையும் மஹரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானப் பயிற்சி, யோகமுறைகள் மற்றும் பறக்கும் திறனுடன் கூடிய சித்தி திட்டம் ஆகியவற்றின் மூலம் பெறலாம்.
2000-ம் ஆண்டில் அவர் அமைதிக்கான உலக நாடு ஒன்றை உருவாக்கினார்.
ஆழ்நிலை தியானம் எங்கெல்லாம் அதிகமாகப் பரவியதோ அங்கெல்லாம் அந்த நாடுகளில் குற்ற விகிதம் கணிசமாகக் குறைந்ததை புள்ளி விவரங்களுடன் தந்து அந்தந்த நாட்டின் அறிஞர்கள் சுட்டிக்காட்டி மகிழ்ந்தனர்.
மறைவு: ஸ்விட்சர்லாந்தில் செலிஸ்பர்க்கைத் தன் தலைமையகமாகக் கொண்டு உலக மையங்களை அவர் இயக்கலானார். பின்னர் 1991-ம் ஆண்டு நெதர்லாந்தில் உள்ள விளாட்ராப் என்ற இடத்திற்குச் சென்ற அவர் 2008-ல் அவர் மறையும் வரை அங்கேயே தங்கலானார்.
வாழ்நாளின் இறுதிக் காலத்தில் அவர் தனது இரு அறைகளை விட்டு வெளியே வரவில்லை. பெரும்பாலும் வீடியோக்கள் மூலமாகவே அவர் பார்வையாளர்களைச் சந்தித்தார்; உரைகளை நிகழ்த்தினார்.
2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி உறங்குகையில் மிக அமைதியாக அவர் தன் உடலை உகுத்தார். அப்போது அவருக்கு வயது 91. மறைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஆழ்நிலை தியான இயக்கத் தலைமைப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அவர் அறிவித்தார்.
அவரது மறைவை ஒட்டி ஒலிபரப்பு ஒன்றை மேற்கொண்ட பி.பி.சி. உலக ஒற்றுமைக்கும் உலக மக்களுக்காகவும் ஓயாமல் உழைத்த மாமனிதர் மகேஷ் யோகி என்று வானளவாகப் புகழ்ந்தது.
மஹரிஷியின் பொன்மொழிகள்:
ஒரு மனிதனை ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும், தேவையான செல்வத்துடனும் நீடித்த ஆயுளுடனும் வாழ வைக்கும் ஆசனங்கள் மற்றும் தியான முறைகளைக் கற்பிப்பதே ஆழ்நிலை தியானம் என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
மஹரிஷி தனது வாழ்க்கையில் ஏராளமான அறிவுரைகளைத் தந்துள்ளார். அவற்றில் சில:-
இருளுடன் சண்டை போடாதீர்கள். ஒளியை ஏற்றுங்கள். இருள் தானே மறையும்.
எப்போதும் சந்தோஷமாக இருப்பதே முக்கியமானது. சந்தோஷமாக இருக்கும்போது இயற்கையின் அரிய உதவி மிக அதிகமாகக் கிடைக்கும். மனமே தான் எல்லாம். நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆவோம்.
- படத்தில் முதல் கதாநாயகி மட்டுமல்ல. நடிகைகளிலும் சவுந்தர்யா என்னை விட ஜுனியர்தான்.
- இறுதியில் அந்த படத்தில் நடித்ததால் மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.
பார்த்திபனுமா இப்படி....? என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
'இவன்' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒத்துக்கொண்டேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. நான் மிகவும் மதிப்பவர்களில் அவரும் ஒருவர்.
அவர் முதல் முதலாக பட தயாரிப்பில் இறங்கியதும் அவருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நடிக்க ஒத்துக்கொண்டேன்.
அந்த கால கட்டத்தில் நான் வாங்கிய சம்பளத்தை விட மிக குறைவான சம்பளமே அவரிடம் வாங்கினேன்.
அது மட்டுமல்ல. படத்தில் முடிந்தவரை செலவை குறைப்பதற்கு என்னென்ன முடியுமோ அவ்வளவையும் செய்தேன்.
காஸ்ட்யூம் தேர்விலும் அதிக செலவை கொடுக்கவில்லை. அதிக விலை உள்ள உடைகளை எடுக்க சொல்லியும், 'அவ்வளவு தேவையில்லை சார்' என்று குறைந்த விலை யிலான உடைகளையே வாங்க சொன்னேன்.
படத்தில் என்னுடன் சவுந்தர்யாவும் உண்டு. படத்தின் கதையை விளக்கியபோது 'நீ தான் ஹீரோவுக்கு ஜோடி. உனக்கும் ஹீரோவுக்கும் தான் திருமணம் நடக்கும். எனவே முக்கியமான கதாபாத்திரம் நீ தான்' என்றார்.
நானும் சரி என்றேன். படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கியது. படப்பிடிப்பு ஜாலியாக போய் கொண்டிருந்தது.
தினமும் வாய்க்கு ருசியாக சீதாம்மா சமைத்து கொடுத்து அனுப்புவார்கள். (அப்போது பார்த்திபன்-சீதா தம்பதிகள் பிரியவில்லை). படப்பிடிப்பு முடிந்தது. டப்பிங், எடிட்டிங் உள்பட எல்லா பணிகளும் முடிந்து 'இவன்' திரைக்கு வர தயாரானான்.
படத்தை போட்டு பார்த்தபோது டைட்டிலில் முதலில் பார்த்திபன் பெயர் இடம் பெற்று இருந்தது. அதற்கு அடுத்ததாக முறைப்படி என் பெயர்தான் இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் சவுந்தர்யா பெயர் இடம் பெற்று இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
படத்தில் முதல் கதாநாயகி மட்டுமல்ல. நடிகைகளிலும் சவுந்தர்யா என்னை விட ஜுனியர்தான். எனவே எனது பெயருக்கு உரிய மரியாதை இல்லாதது எனக்கு தரப்பட்ட அவமரியாதையாகவே கருதினேன்.
உடனே பார்த்திபன் சாருக்கு போன் போட்டு 'என்ன சார் என் பெயரை சவுந்தர்யாவுக்கு கீழே போட்டுள்ளீர்கள். இது சரியில்லையே' என்றேன்.
அதை கேட்டதும், 'அதை இப்போ வந்து கேட்டால் எப்படிம்மா? எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. இனி மாற்றுவது சிரமம் என்று கூறி விட்டார்.
ஆனால் அந்த சம்பவத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அவமதிக்கப்பட்டதாகவே கருதினேன். அந்த சம்பவத்தை என்றுமே என்னால் மறக்க முடியாது.
அப்புறம் படம் வெற்றிகரமாக ஓடியது. இறுதியில் அந்த படத்தில் நடித்ததால் மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.
விருது வழங்கும் விழாவில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு விருது வழங்கினார்.
விருதை பெற்றுக்கொண்ட என்னிடம் 'மீனா, படம் பார்த்தேன். உன் நடிப்பு நன்றாக இருந்தது. ரசித்து பார்த்தேன்' என்றார். அதை கேட்டதும் எனக்கு ஆச்சரியம். படம் பார்க்க அவருக்கு ஏது நேரம் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால் படத்தையும் பார்த்து அதில் நடித்த கலைஞரையும் பாராட்டும் மனசு யாருக்கு வரும்? அவரிடம் பாராட்டு பெற்றது மறக்க முடியாத நிகழ்வு.

பாடல் காட்சிகளில் அதற்கேற்ற காஸ்ட்யூம்களை சில நேரங்களில் நானே தயார் செய்வேன். இந்த படத்திலும் அப்படித்தான் ஒரு பாடல்.
'தூளு போடு தூளு மொளகா
தூளு தூவு சால்ட் தூளு....'
இந்த டூயட் பாடலில் மிளகாய், மிளகாய் என்று நிறைய வரும். எனவே மிளகாயை காஸ்ட்யூமில் பயன்படுத்தலாமே என நினைத்தேன். இடுப்பு கச்சை, ரவிக்கை, கொண்டை எல்லா இடத்திலும் சிவப்பு மிளகாயை கட்டி இருப்பேன். படத்தில் பார்த்தபோது அதுவும் வித்தியாசமான காஸ்ட்யூமாக ரொம்ப நல்லா இருந்தது.
இந்த படத்தில் எனக்கு தமிழ் பேசும் தெலுங்கு பெண் வேடம். ஆந்திரத்து மக்கள் காரம் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவார்கள். எனவே தானோ என்னவோ பாடலிலும் போடு மிளகாய் தூளு' என்ற வரிகளும் எனக்கு வந்தது.
எனவே நானும் என் பங்குக்கு மிளகாயை இங்கு... அங்கு... என்று உடல் முழுவதும் கட்டி போடு மிளகாய் போடு என்று ஆக்கி விட்டேன்.
மீண்டும் அடுத்த வாரம் புதிய தகவலுடன் வருகிறேன். பை... பை...
(தொடரும்)
- ’நம்மால் முடியும்’ எனப் பன்மைச் சொல்லாய்’ மாற்றி, நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயமாக அமைந்துவிடும்.
- நாட்டில் எத்தனையோ பேர் எத்தனையோ காரியங்களில் நம்பிக்கை அடிப்படையிலேயே ஈடுபடுகிறார்கள்.
நம்மால் முடியும்! என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் உலகியல் வாழ்வில், 'நம்மால் முடியும்!' என்கிற நம்பிக்கைச் சொல்லைத் 'தன்மைச் சொல்லாய்' 'என்னால் மட்டுமே முடியும்!' என்று எண்ணிச் செயல்படுவது ஆணவச் செயலாய் அமைந்து தோல்வியில் கொண்டுபோய் விட்டுவிடும். அதையே கொஞ்சம் விரிவுபடுத்தி, "நாம்" என நம்மோடு ஒரு சிலரை இணைத்துக்கொண்டு, 'நம்மால் முடியும்' எனப் பன்மைச் சொல்லாய்' மாற்றி, நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயமாக அமைந்துவிடும்.
வாழ்க்கையில் 'நம்பிக்கை' என்கிற சொல்லே மனத்திலும் செயலிலும், வலிமையை ஏற்படுத்துகிற சொல்லாகவே திகழுகிறது. ஒரு செயலில் ஈடுபடுவதற்குமுன் எந்த மனிதனும் அவநம்பிக்கையோடு, இந்தச் செயலில் நாம் தோற்றுவிடுவோம் என்று எண்ணிச் செயலில் இறங்குவதில்லை. எல்லாரும் செயல்திட்டம் வகுக்கும்போதே வெற்றி உறுதி என்கிற நம்பிக்கையோடுதான் ஈடுபடுகிறார்கள்; ஆனால் நம்பிக்கையோடு செயல்திட்டம் வகுக்கிறவர்கள் எல்லாருமா செயலின் இறுதியில் வெற்றிக்கனியைப் பறித்துவிடுகிறார்கள்? இல்லையே!; பலருக்குத் தோல்விதானே பரிசாகக் கிடைக்கிறது!. அப்படியானால் நம்பிக்கையில் கோளாறா? இல்லை திட்டமிடலில் கோளாறா? இல்லை செயல்படுத்தியதில் கோளாறா?. எப்படியாயினும் வலிமைமிக்க ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்குமுன் நான்குவிதமான செயல்களில் கவனம் வைக்கவேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார்.
"வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கிச் செயல்!"
அதாவது ஒரு காரியத்தில் அல்லது ஒரு போட்டியில் இறங்கி வெற்றிபெற வேண்டுமென்றால், முதலில் அந்தக் காரியம் அல்லது போட்டி எப்படிப்பட்டது? என்பதை எடைபோட்டுப் பார்த்து, அதில் வெற்றிபெறுவதற்கான வலிமைச் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்; அப்போதுதான் அந்தக் காரியத்தில் நம்மால் முழு வெற்றி அடையமுடியும் என்கிற நம்பிக்கை ஏற்படும்.

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
காரியம் இலகுவானதோ கடினமானதோ அதைச் செய்துமுடிப்பதற்கான திறமையும் வலிமையும் தன்னிடம் இருக்கிறதா? என்கிற சுய பரிசோதனையில் அடுத்து இறங்க வேண்டுமென்கிறார் வள்ளுவர். தன் வலிமை உணர்தல் என்பது தன்னம்பிக்கை யைத் தவிர வேறொன்றுமில்லை. அடுத்து இந்தப் போட்டியில் நமக்கு எதிராக இறங்கக் கூடிய பகைவனின் வலிமையையும் துல்லியமாகக் கணித்து வைத்துக்கொண்டு அதற்கேற்பச் செயலில் இறங்க வேண்டுமாம். அதற்கும் முன்பாக வள்ளுவர் கவனமாகக் கணிக்கச் சொல்வது, இந்தப் போட்டியில் தனக்கும், மாற்றானுக்கும் துணையாக இறங்கக் கூடிய துணைவர்களின் பலத்தையும் பகுத்துக் கண்டறிய வேண்டும் என்பதுதான். இந்த இடத்தில்தான் 'நம்மால் முடியும்' என்கிற நம்பிக்கைச் சொல் பன்மைச் சொல்லாய் மாறி எதிரொலிக்கிறது.
செயலின் வலிமை, தனது வலிமை, மாற்றானுடைய வலிமை, தனக்கும் மாற்றானுக்கும் உள்ள துணைவர்களின் வலிமை, ஆகிய நான்கு வலிமைமைகளையும் ஆராய்ந்து உணர்ந்தே போட்டிக்கோ போருக்கோ இறங்க வேண்டும் என்பது அக்கால வழக்கு.
இன்று வாழ்க்கையில் நேரடிப் போட்டிகளோ நேரடிப் போர்களோ இல்லை; நாமும் மன்னர்கள் இல்லை!. ஆயினும் கண்ணுக்குத் தெரியாத ஆயிரம் முனைப் போட்டிகளில் நாம் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். நம்முடைய வெற்றிகளைப் பங்கு போடவோ, அல்லது தட்டிப்பறிக்கவோ நேரடிப் பகைவர்கள் இல்லை என்றாலும், நம்முடைய தோல்விகளுக்காக உள்ளூற மகிழ்ச்சி அடையக்கூடிய வஞ்சக நண்பர்கள் புடைசூழ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் காரியத்தின் வலிமையை , தன்னுடைய வலிமையை, தனக்கு உண்மையான துணைவர்களாக, நண்பர்களாக, ஊழியர்களாக இருந்து உதவப்போகிற உற்றவர்களின் வலிமையை உணர்ந்துகொண்டு செயல்பட்டாலே போதும். நம்மால் முடியும் என்கிற நம்பிக்கை நாற்று முளைவிட்டு, அமோக விளைச்சலைக் கொண்டுவந்து கொட்டும்.
ஒரு பெரும் தொழிலதிபர், ஒரு தொழிற்சாலையை நடத்தி வந்தார்.. அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தொடங்கிய காலந்தொட்டு பத்தாண்டுகளுக்கு நல்ல லாபத்துடன் இயங்கிவந்த தொழிற்சாலை, கடந்த இரண்டு ஆண்டுகளாக நொடித்துப் போகத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளில் நட்டம் ஐந்நூறு கோடி ரூபாயை எட்டிவிட்டது.
ஒருநாள் நடைப்பயிற்சிக்காக அந்த நகரத்தில் இருந்த பிரபலமான பூங்காவிற்குப் புதிதாக, தொழிலதிபர் சென்றார். மனமும் உடலும் தோல்வியில் துவண்டு நிற்கும்போது, நடையில் எப்படிக் கம்பீரம் வரும்?. அப்போது அவரைவிட வயதான ஒரு பெரியவர், மகிழ்ச்சித் துள்ளலோடு வந்து இவரது தோள்களைத் தட்டி," ஹலோ! மிஸ்டர்! நடந்து போனால் அதில் ஒரு மிடுக்கு வர வேண்டாமா?. அப்படி என்ன கப்பலா கவிழ்ந்து போய் விட்டது? என்னிடம் சொல்லுங்கள்! கவலையைத் தள்ளுங்கள்!. நான் மிஸ்டர்…………." என்று அந்த நகரத்திலேயே மிக முக்கியமான பணக்காரர் பெயரைத் தன்னுடைய பெயராகச் சொன்னார். நடைப்பயிற்சிக்கே சூட்டுக் கோட்டு சகிதம் வந்திருந்தார்.
தோல்வி கண்டிருந்த தொழிலதிபரை அரவணைப்பாக அழைத்துக்கொண்டு, அந்தப்பூங்காவின் ஓரமாக இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார் பணக்காரர். " சொல்லுங்கள்! . உங்களிடம் ஏனிந்த சோகம்?" கேட்டார் செல்வந்தர். " ஐயா! நான் இந்த நகரத்தில் உள்ள அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளர்; கடந்த பத்தாண்டுகளுக்குமேல் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த தொழிற்சாலை, சமீபமாக இரண்டாண்டுகளில் பெரும் நஷ்டத்தைக் கண்டுவிட்டது!. ஐந்நூறு கோடி ரூபாய் நட்டம்" என்றார் தொழிலதிபர்.
"ஏதாவது நிதி ஆதாரம் இருந்தால், தொழிலில் மறுபடியும் மீண்டு வந்துவிடமுடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறதா?" செல்வந்தர் கேட்டார். " நம்பிக்கை நிச்சயம் இருக்கிறது ஐயா!" தொழிலதிபர் சொன்னார். சிரித்துக் கொண்டே கோட் பாக்கெட்டுக்குள்ளிருந்து செக் புக்கையும் பேனாவையும் எடுத்தார் செல்வந்தர். காசோலையில் "ஐந்நூறு கோடிமட்டும்" என்று எழுதித் தன்னுடைய கையெழுத்தைப் போட்டுத் தோல்வியில் துவண்டிருந்த தொழிலதிபரிடம் நீட்டினார்.
" இந்தாருங்கள்!. இந்த நிதியை ஆதாரமாக வைத்துக்கொண்டு, இன்றே நம்பிக்கையோடு உங்கள் தொழிலில் ஈடுபடுங்கள். உங்களுக்கு ஓராண்டு அவகாசம் தருகிறேன்; அடுத்த ஆண்டு இதே நாள் இதே தேதி இதே நேரம் இங்கு வந்து, இதே ஐந்நூறு கோடிரூபாய்க்குக் காசோலை மட்டும் தந்தால்போதும். மகிழ்ச்சியாக இருங்கள்!" என்றார் செல்வந்தர்.
ஆச்சரியத்தோடும் நன்றிப்பெருக்கோடும் செல்வந்தரிடம் காசோலையைப் பெற்றுக் கொண்ட தொழிலதிபர், நேரடியாகத் தொழிற்சாலைக்கு வந்தார். வந்தவுடன் தொழிலாளர்களைத் தன்னுடைய அறைக்கு அழைத்தார். " இதோ பாருங்கள்!, ஐந்நூறு கோடி ரூபாய்க்கான காசோலை!. நாம் நட்டத்திலிருந்து மீண்டு வருவதற்கு நிதியாதாரமாக ஒரு வள்ளல் கொடுத்தது. இந்த முதலை ஒரு வருடத்திற்குள் புரட்டி, மீண்டும் அந்த செல்வந்தருக்குத் தந்துவிடவேண்டும்" என்றார் முதலாளி.
தொழிலாளர்கள் முகத்தில் ஆயிரம்கோடிச் சூரியப் பிரகாசங்கள்!; எல்லாரும் ஒருமித்த குரலில், "நம்பிக்கையோடு உழைப்போம்! இழந்த நட்டத்தை மீட்டெடுப்போம்!" என்று நம்பிக்கை முழக்கம் எழுப்பினர். தொழிலதிபர் பேசினார், "நீங்கள் இருக்கும் அதே நம்பிக்கையோடுதான் நானும் இப்போது இருக்கிறேன். இந்தக் காசோலையை, இப்போது நான் வங்கியில் போட்டுப் பணமாக்கப் போவதில்லை; மாறாக, என்னுடைய அறையிலுள்ள பீரோவில் பத்திரமாக வைத்துப் பூட்டப் போகிறேன்; அவசியமென்று வந்தால் பயன்படுத்துவோம். அதுவரை நம்முடைய நம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்துப் பாடுபடுவோம்!" என்று தீர்க்கமாகக் கூறினார்.
ஓராண்டு ஆயிற்று; அதே நாள் அதே தேதி வந்தது; தொழிற்சாலை முன்னிலும் பலமடங்கு லாபம் ஈட்டியிருந்தது. கம்பெனிக் காசோலையை எடுத்த தொழிலதிபர்,' 550 கோடிகள்' என ஐம்பது கோடி ரூபாய்களை அதிகமாக எழுதி எடுத்துக்கொண்டு, அதே பூங்காவிற்குள் சென்று அந்தச் செல்வந்த வள்ளலைத் தேடினார். அந்தப் பூங்காவில் கடந்த ஆண்டு அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த அதே சிமெண்ட் பெஞ்சில் அந்தச் செல்வந்தர் அமர்ந்திருந்தார்; அவரருகில் ஒரு வயதான அம்மாவும் அமர்ந்திருந்தார்.
"ஐயா! வணக்கம்! நலமாக இருக்கிறீர்களா?" செல்வந்தரைப் பார்த்துத் தொழிலதிபர் கேட்டார்; இவரைக் கவனிக்காமல், செல்வந்தர் வேறுபக்கமாக முகத்தைத் திருப்பி அமர்ந்திருந்தார். " சமீபத்தில் இவர் உங்களுக்கு ஏதேனும் காசோலை தந்திருந்தாரா?" அந்தம்மா கேட்டார். "ஆமாம் என் நிலைமை கண்டு இரங்கி ஐந்நூறு கோடிக்குத் தந்தார்" தொழிலதிபர் சொன்னார்.
"இவர் என் கணவர்; வசதியானவர்தான்; ஆனாலும் கடந்த இரண்டாண்டுகளாக மனநிலை சரியில்லை; இந்தப் பூங்காவிற்கு வருகிற போகிறவர்களுக்கெல்லாம் காசோலை தரத் தொடங்கிவிட்டார்; தங்களுக்குத் தந்த காசோலை ஏதும் திரும்பி வந்துவிட்டதா?" கேட்டார் செல்வந்தரின் மனைவி. "அம்மா! ஐயா தந்த காசோலையை விட அவர் தந்த நம்பிக்கை வார்த்தை வலிமையானதாக இருந்ததால், நான் காசோலையைப் பயன்படுத்தாமல், நம்பிக்கையை மட்டும் கடைப்பிடித்து மீண்டு வந்திருக்கிறேன்!. நான் இப்போது சொந்தமாகச் சம்பாதித்த பணத்தில் எனது காசோலையை ஐயாவிடம் தந்துவிட்டுப் போக வந்திருக்கிறேன்!" என்றார் மீண்டுவந்த தொழிலதிபர். செல்வந்தர் ஏதுமறியாதவர்போல வானத்தைநோக்கி அமர்ந்திருந்தார்.
இங்கே 'நம்மால் முடியும்' என்கிற நம்பிக்கையை அந்தத் தொழிலதிபர், செல்வந்தர் தந்த காசோலையிலிருந்து பெற்றாரா? அல்லது அவரது நம்பிக்கை வார்த்தையிலிருந்து பெற்றாரா? அல்லது தன்னிடமிருந்தும் தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களிட மிருந்தும் பெற்றாரா?. எது எப்படி ஆயினும் கையில் கிடைத்த காசோலையை முழுமையும் நம்பி அவர், தொழிற்சாலையை மீட்கும் செயலில் ஈடுபடவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
நாட்டில் எத்தனையோ பேர் எத்தனையோ காரியங்களில் நம்பிக்கை அடிப்படையிலேயே ஈடுபடுகிறார்கள்; இந்தத் திருமணம் நன்றாக அமையும்! என்கிற அடிப்படையில் தான் ஆணும் பெண்ணும் நம்பிக்கையோடு இல்லற வாழ்விற்குள் நுழைகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான தொழிலைக் கோடிக்கணக்கிலோ அல்லது சொற்ப அளவிலோ முதலீடுகளைப் போட்டுத் தொடங்குவதும் நம்பிக்கை அடிப்படையில்தான்., பள்ளிக்குச் செல்லும் பேருந்து, நேரத்திற்கு வந்துவிடும் என்று நம்பி பேருந்து நிறுத்தத்திற்குச் செல்வது முதற்கொண்டு, விண்ணிற்கு அனுப்பும் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணை எட்டும் என்று நம்பிக்கையோடு அனுப்புவது வரை எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்த்தப்படுவதுதான்.
நம்மால் முடியும் என்கிற கூட்டு முயற்சியில் வலிமையான நம்பிக்கை மட்டுமல்ல, பலருடைய வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் அடங்கியிருப்பதால் அது நேர்முறையான வெற்றிகளை மட்டுமே வாரி வழங்கும். நம்புங்கள் நம்மால் முடியும்.
தொடர்புக்கு: 944319008
- இரவு 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.
- அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும்.
ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.
ஒருமுறை விநாயகப்பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின் விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார்.
எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து கேலி செய்தான்.

இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு, உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது.
பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தினான். பின் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து தன் பழைய அழகை பெற்றான்.
மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைதான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.
சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். மேலும் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வார்கள்.
சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி "சந்திர மவுலீஸ்வரராக" காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியையே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.
மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்து–வதற்கே பெரியவர்கள் இதைக்காண வேண்டும் என்று கூறினார்கள்.மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.
ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும்.
சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும். சந்திரனுக்கும் ஆயு–ளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது.
எனவே ஜாதகத்தில் சந்திரன் 6/8/12 வீடுகளில் மறைவு பெற்றோ, விருச்சிகத்தில் நீசம் பெற்றோ அல்லது சனி/ராகு/கேது போன்ற அசுப கிரகங்களுடன் சேர்ந்தோ இருந்தால் மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுள் தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.
சந்திர தரிசனம் செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். இந்த பிறைநாள் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு, அதேபோல் சித்திரை, வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும்.
அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும்.
மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.
மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர். மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.
ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான். ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும். ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.
பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும். வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும். கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் இன்று சந்திர தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும்.
ஜோதிட சாஸ்திரப்படி சந்திர பகவான் என்பவர் மனதிற்கு காரணமானவர் என சொல்லப்படுகிறது. ஒருவர் தெளிவான மனநிலையில் இருந்தால் மட்டுமே சரியான முடிவுகளை எடுக்க முடியும். அதற்கு சந்திரனின் அருள் அவசியம் தேவை.
சந்திர தரிசனம் கிடைக்கும் போதெல்லாம் "ஸ்ரீசந்திர மவுலீஸ்வராய நம!" அல்லது "ஸ்ரீசந்திர மவுலீஸ்வரா போற்றி" என்று இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும். அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எந்த நிலையிலும் மன வியாதிகளே வராது. செல்வ வளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
சந்திரனை வணங்கும் முறை :
ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி, அதன் மேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு, மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அப்போது இறைவனை மும்மூர்த்தியாக பாவித்து வணங்க வேண்டும். பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும்.
தேவையை கேட்க வேண்டும். இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு மற்றும் தண்ணீர் என தர்மம் செய்திருக்க வேண்டும். மேலும் சந்திரனிடமும், வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும். அதுவே யாசகம் பெறுவது ஆகும்.
இவ்வாறு வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்க வேண்டும். பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு, தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்க வேண்டும். இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தை யாவது செய்வது நலம். ஆயுளுக்கும் செய்து வந்தால் வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும்.
ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறை, பார்த்தால் முக்தி எனச் சொல்லப்படுகிறது.
- மரணத்தையே பொய்யாகச் செய்கிற அந்தக் காதலைத் தூண்டுவது ஒரு ஹார்மோன்.
- ஆக்சிடோசின் என இன்னொரு ஹார்மோன் உண்டு. அன்பு செலுத்துவதில் அதன் பங்கும் பெரியது.
"காதலினால் சாகாம லிருத்தல் கூடும்.
கவலை போம்...
அதனாலே மரணம் பொய்யாம்..." என்கிறார் பாரதி.
மரணத்தையே பொய்யாகச் செய்கிற அந்தக் காதலைத் தூண்டுவது ஒரு ஹார்மோன். காதல் கண்களை மறைக்க, அதில் நீங்கள் கரைந்து உருகவும், காதல் காணாமல் போகும்போது, உயிரை மாய்த்துக் கொள்ளவோ, உயிரை எடுக்கவோ துணியவும் காரணம் காதல் அல்ல... காதலுக்குக் காரணமான ஹார்மோன்.
ஆமாம்...
அது மட்டுமல்ல... நீங்கள் யார் என்பதை உங்கள் ஹார்மோன்கள் தீர்மானிக்கின்றன.
அட... இதென்ன புதுக்கதை?

ஹார்மோன்கள் என்பவை உடலை இயக்கும் ஒருவித ரசாயனங்கள்தானே... அவை எப்படி நமது ஆளுமையைத் தீர்மானிக்கும் என்கிறீர்களா? அது அப்படித்தான்!
அமைதி, ஆத்திரம், கோபம், குரூரம், காதல், காமம், பயம், பதற்றம்... இப்படி மனித வாழ்க்கையில் மாறி மாறிக் கிளர்ந்தெழுகிற அத்தனை உணர்ச்சிகளின் பின்னணியிலும் இருப்பவை ஹார்மோன்களின் விளையாட்டே...
காதலில் ஈடுபடும்போது செரட்டோனின் என்கிற ஹார்மோன் உச்சத்தில் இருக்கும். காதலனோ, காதலியோ பக்கத்தில் இருக்கும் போது, மிதக்கிற மாதிரியான ஒரு உணர்வைப் பெறுவதும் இதனால்தான்.
ஆக்சிடோசின் என இன்னொரு ஹார்மோன் உண்டு. அன்பு செலுத்துவதில் அதன் பங்கும் பெரியது. ஆனால், இது வெறும் காதலுக்கு மட்டுமின்றி, பாசத்துக்கும் காரணமானது. குறிப்பாக அம்மாவுக்கும் குழந்தைக்குமான நெருக்கத்தின்போது இது ஊற்றெடுக்கும்.
பிறந்த குழந்தையை அணைத்தபடி தாய்ப்பால் கொடுக்கும் அம்மாவுக்கும், பால் குடிக்கிற குழந்தைக்கும் இந்த ஆக்சிடோசின் அளவு கடந்து சுரக்கும்.

அதனால்தான் குழந்தைகளுக்கு அம்மா எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இருக்கிறாள். சுருக்கமாகச் சொன்னால், ஸ்பரிசத்தினால் அதிகமாகிற ஹார்மோன் இது.
அடிக்கடி தொட்டுக் கொள்ளாத, முத்தமிடாத கணவன் - மனைவியிடையே இந்த ஹார்மோன் சுரப்பு குறைவாகத்தான் இருக்கும்.
தவிர பெண்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு அதிகம். அதனால்தான் அவள் எப்போதும் கணவன் என்கிற ஒரே ஆணுடன் மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புவாள்.
பெண்ணை ஒரே ஆணுடன் உறவு கொள்ளச் செய்கிற மாதிரி, ஆணுக்கு பல காதல்களில், உறவுகளில் நாட்டத்தை ஏற்படுத்தவும் டெஸ்ட்டோஸ்டீரான் என்கிற ஹார்மோனே காரணம்.
இந்த ஹார்மோன் பெண்களுக்கும் இருக்கும். அது அளவு கூடும்போது, அவளுக்கும் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் என்கிறது விஞ்ஞானம்.

டெஸ்ட்ரோஸ்டீரான் அளவு கூடும்போது, அன்புக்கும் அரவணைப்புக்கும் காரணமான ஆக்சிடோசின் அளவை அது குறைத்து விடும்.
அதனால்தான் ஆண்களால் ஒரு உறவை சுலபமாக முறித்துக் கொண்டு, இன்னொன்றுக்குத் தாவ முடிகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான டோபமைன் என்கிற ஹார்மோன் சந்தோஷத்துக்குக் காரணமானது. டோப் என்றால் போதை என அர்த்தம்.
காதலோ, காமமோ எதிலும் ஒருவித போதை நிலைக்குக் கொண்டு போவதில் இந்த ஹார்மோனுக்கு முக்கிய இடமுண்டு. அடுத்தவரின் மேல் ஈர்ப்பையும் உண்டாக்கக் கூடியது. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரான் என இரண்டு முக்கியமான ஹார்மோன்கள் இருக்கும். இந்த இரண்டும் அவர்களுக்கு மாதம் முழுக்க ஏறுவதும், இறங்குவதுமாக நிலையற்று இருக்கும். ஈஸ்ட்ரோஜென் என்பதுதான் அவர்கள் பெண்மையை உணரச் செய்வது. ஆணையும் பெண்ணையும் இணைப்பதிலிருந்து, இருவரையும் ஆழமாக நெருங்கச் செய்வது,
பாலியல் ஆர்வத்தைத் தருவது, பெண்ணுக்கு முடியழகைத் தருவது, அழகான உடல் வளைவைத் தருவது என எல்லாம் ஈஸ்ட்ரோஜெனால் வருவதே.

ஒரு பெண் மன அழுத்தத்தில் இருக்கும்போது அவளுக்கு இந்த ஹார்மோனின் அளவு குறைவாக இருக்கலாம். மாதவிலக்கான 15 நாட்களுக்குப் பிறகு புரோஜெஸ்டிரான் சுரப்பு குறையும். அந்த நாட்களில் அவர்களுக்கு சரியான தூக்கம் இருக்காது. பாதித் தூக்கத்தில் விழித்துக் கொள்வதும், மறுபடி தூக்கத்துக்குள் போக முடியாமலும் படபடப்புடன் இருக்கவெல்லாம் இதுவே காரணம்.
கார்ட்டிசால் என்கிற ஹார்மோன், அவசர காலத்து நடவடிக்கைகளின் போது ஊற்றெடுக்கக் கூடியது. உதாரணத்துக்கு யாருடனாவது சண்டையிடும் போது... ஓட வேண்டியிருக்கையில்... பிரச்னைகளை எதிர்கொள்வதில்... இப்படி உடனடி ஆற்றலுக்கு உதவக் கூடியது இது.
வாசோப்ரெசின் என்கிற ஹார்மோனை வாஞ்சையானது என்றே சொல்லலாம். ஆண்களுக்குக் காதல் உணர்வைக் கொடுத்து, குடும்பத்தைப் பாதுகாக்கும், காப்பாற்றும் பொறுப்பையும் கொடுக்கக்கூடியது.
புரோலாக்டின் என இன்னொன்று...
குழந்தை பெற்ற ஒரு பெண், ஏதோ ஒரு கூட்டத்தில் தன் குழந்தை இல்லாமல் நின்று கொண்டிருப்பாள். வேறு யாருடைய குழந்தையோ பசியால் அழும். அந்த அழுகைச் சத்தம் கேட்டதும், கூட்டத்தில் நிற்கிற அந்தத் தாய்க்கு அவளையும் அறியாமல் பால் சுரந்து, உடைகள் நனையும்.
இந்த ஹார்மோனின் அளவு கடந்த சுரப்பினால்தான் குழந்தை பெற்ற பெண்களுக்கு இயல்பாகவே செக்ஸ் ஆர்வம் குறையும். இன்னும் இப்படி அட்ரீனலின், எபிநெர்ஃபின், நார்எபிநெஃப்ரைன் என வேறு சில ஹார்மோன்களும் ஆண், பெண் உடலில் உண்டு.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. சரி... இப்போது எதற்கு ஹார்மோன் புராணம் என்கிறீர்களா? உங்கள் துணையின் நடவடிக்கைகளில் ஏற்படுகிற திடீர் மாற்றங்களின் பின்னணியில் இப்படி சில ஹார்மோன்களின் வேலைகள் கூட காரணமாக இருக்கலாம்.
உங்கள் உணர்வுகளைப் பிரதிபலிப்பது, எண்ணங்களின் எழுச்சி, துணையுடனான உங்கள் நெருக்கத்தைத் தீர்மானிப்பது என எல்லாவற்றிலும் ஹார்மோன்களின் திருவிளையாடல் இருக்கும்.
பெண்ணுக்கு மீசை, தாடியை வளரச் செய்வதன் பின்னணியிலும், ஆணுக்கு அதை வளரவிடாமல் செய்வதன் பின்னணியிலும்கூட ஹார்மோன்களே நிற்கின்றன.
'நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா/ பொம்பிளையா...?' என துணையின் மேல் நெருப்பு வார்த்தைகளைக் கக்குவது சுலபம். அப்படி வசை பாடச் செய்த பிரச்னையின் பின் மறைந்து நிற்கிற ஹார்மோன் கோளாறுகளைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பது நலம்.

தினமும் உங்கள் துணையைக் கட்டி அணையுங்கள். முடிந்தபோதெல்லாம் முத்தமிடுங்கள். 'ஐ லவ் யூ' சொல்லுங்கள்.
உடனே உங்கள் ஹைபோதலாமஸ் பகுதியிலிருந்து சிக்னல் கிடைத்து, ஆக்சிடோசின் சுரக்கும். அது உங்கள் இருவருக்கும் இடையில் பிணைப்பைக் கூட்டும். ஆறுதலான, இதமான ஒரு உணர்வைத் தரும். காதல் கூடும்.
- பொன்.தங்கராஜ்






