என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பொது அறிவை போற்றுவோம்!
- ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டுவிதமான அறிவுகள் உண்டு.
- நம்பியிருப்பவர்கள் சமூகத்தில் தனியர்களாகத் தனித்து விடப்படுவர்.
அன்றாட வாழ்வியலுக்கு உதவுகிற பொது அறிவை வளர்த்துக்கொள்கிற ஆர்வமிக்க வாசகர்களே! வணக்கம்!.
"நான் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்புகிற விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக வேலைபார்க்கிறேன்; வீட்டில் சமையல்கட்டில் தண்ணீர்க்குழாயில் தண்ணீர் வரவில்லை! அதை என்னவென்று பார்த்துச் சரிசெய்து கொடுங்கள்! என்று என் மனைவி கூறுகிறாள். நான் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புகிற அறிவியல் விஞ்ஞானியா? இல்லை வீட்டில் தண்ணீர்க்குழாயைச் சரிசெய்து கொடுக்கிற சாதாரண இல்லறவாசியா?" என்று ஒரு நண்பர் கேட்டார்.
"அலுவலகத்திற்குப் போனால்தான் நீங்கள் அறிவியல் விஞ்ஞானி; வீட்டில் இருக்கும்வரை அன்றாட வீட்டுக் கடமைகளில் கவனம் செலுத்த வேண்டிய இல்லறவாசிதான்" என்று அவருக்குப் பதில் சொன்னால் அவர் ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும். பள்ளிக்கூடங்களில் கற்கிற கல்வி வேறு; அன்றாட வாழ்வியலில் கற்றுக்கொள்ளவேண்டிய அனுபவக்கல்வி என்பது வேறு.
ஐந்தாம் வகுப்புப் படிக்கும் தனது மகனின் பூகோள அறிவு குறித்து ஒரு தந்தை மிகப்பெரிய அளவுக்குக் கூறினார்; உலக வரைபடத்தை அவனிடம் கொடுத்து, அமெரிக்காவின் தலை நகர் எங்கிருக்கிறது? ரஷ்யாவின் தலைநகர் எங்கிருக்கிறது? என்று உலக நாடுகளின் தலைநகர்களில் எதைப்பற்றிக் கேட்டாலும் அடுத்த நொடியே வரைபடத்தில் சுட்டிக்காட்டிவிடுவான்; பூகோள அறிவில் அந்த அளவுக்கு அவன் சுட்டி என்றார். அது சரி!, பள்ளிக்கூடம் விட்டால் அவனாகத் தனியாக வீட்டுக்கு வரத் தெரியுமா? என்று கேட்டால், அதற்கு அவனுக்கு வழி தெரியாதே! பள்ளிக்கூடப் பேருந்தில் மட்டுமே வந்து பழக்கப்பட்டவன் அவன் என்கிறார் தந்தை. உலக வரைபடத்தையே மனத்தில் வைத்திருக்கும் பூகோள அறிவுள்ள மாணவனுக்கு, உள்ளூரில் தன் வீட்டிற்கான வழியைத் தெரிந்திருக்கும் பொது அறிவு இல்லாமல் போனதற்கு யார் காரணம்?.
ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டுவிதமான அறிவுகள் உண்டு. ஒன்று, சிறப்பறிவு; மற்றொன்று, பொது அறிவு. இதில் பொது அறிவு என்பது பொதுவான கல்வியினாலும், சமூக மக்களிடையே கலந்து பேசும் அனுபவத்தினாலும், கூர்ந்து நோக்கும் திறமையினாலும் வருவது. சிறப்பறிவு என்பது, சிறப்பாகக் கற்கும் பாடத்திட்டத்தினாலும், செய்கின்ற தொழிலினாலும் தனித்துவமாக அமைவது. ஒருவர் கற்ற கல்வியினால் மருத்துவராவதும், பொறியாளர் ஆவதும், வழக்கறிஞராவதும், ஆசிரியராவதும், விஞ்ஞானியாவதும், தொழில்நுட்பத் திறமைசாலியாவதும், பார்க்கின்ற தொழிலின் அடிப்படையில் ஓட்டுநராவதும், நடத்துநராவதும், சலவையாளராவதும், முடி திருத்துநராவதும், தச்சராவதும், சமையலராவதும், படைப்பாளராவதும், பத்திரிகையாளராவதும், இசைக்கலைஞராவதும், திரைக்கலைஞராவதும், விவசாயி ஆவதும் என எல்லாமே சிறப்பறிவு சார்ந்த செயல்கள் ஆகும்.
அப்படிப் பார்க்கும்போது ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு விதமான சிறப்பறிவு இருக்கத்தான் செய்யும். ஆனால் எல்லா மனிதருக்கும் பொது அறிவு எனப்படும் உலகியல் அறிவு ஒரேமாதிரி நிறைவாக இருக்கவேண்டியது அவசியமானது ஆகும். வாழ்க்கையில் வேலை எனப்படும் பிழைப்பைப் பார்த்துப் பொருளீட்டிச் சம்பாதித்து வசதியாக வாழ்வதற்குச் சிறப்பறிவு போதுமானதுதான். என்றாலும் அலுவலகம், தொழிலிடம் தாண்டிய நிலையில் சமூக அளவிலான பழக்க வழக்கங்களுக்குப் பொதுஅறிவு எனப்படும் உலகியல் அறிவு இன்றியமையாதது ஆகும்.
"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்"
உலகில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுகலாறுகளைக் குறிப்பிடவந்த வள்ளுவப் பெருந்தகை, உலகம் எப்படி நடக்கிறதோ அதற்கேற்ற உலகியல் அறிவோடு ஒட்டிநடப்பதே சிறந்த படிப்பாளிக்கு அடையாளம். அதுவன்றித், தனக்குத் தோன்றியபடிதான் நடப்பேன்! நான் சிறப்பறிவு உடையவன்! என்று தான்தோன்றித் தனமாக நடந்து கொண்டால், அவன் கற்று எத்தனை பட்டங்களைப் பெற்றிருந்தாலும் படிக்காத முட்டாளுக்கு இணையானவனே! என்று சாடுகிறார் வள்ளுவர். இங்கே சமூகவியல் நோக்கில் பொதுஅறிவே வள்ளுவரால் வற்புறுத்தப்படுகிறது.
ஒரு ராஜா, தன்னுடைய பிறந்த நாளன்று தனக்கு வாழ்த்துக்கூற வந்திருந்த, இலக்கணப் பண்டிதர், தர்க்க அறிஞர், ஜோதிட அறிஞர், மருத்துவ அறிஞர், சங்கீத அறிஞர் ஆகிய ஐந்து பேருக்கும் நிறையப் பொன்னையும் பொருள்களையும் பரிசுகளாக வழங்கினார். பார்த்துக்கொண்டிருந்த அமைச்சர், "அரசே! இந்த அறிஞர்கள் ஐவரும் ஐந்து துறைகளில் சிறப்பறிவு பெற்றவர்கள்!; இவர்களுக்கு நீங்கள் ஏராளமாய்ப் பொன்னும் பொருளும் தருவதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும், இலக்கணம், தர்க்கம், ஜோதிடம், மருத்துவம், சங்கீதம் ஆகிய துறைகளில் சிறப்பறிவு பெற்றிருக்கும் இவர்கள், இந்தப் பரிசுப்பொருள்களை முறையாகப் பாதுகாத்துச் செலவு செய்யுமளவுக்கு வாழ்வியல் அறிவு பெற்றிருக்கிறார்களா? என்பதுபற்றிச் சிறு சோதனை செய்து பார்ப்போம்."
சுந்தர ஆவுடையப்பன்
"பரிசுகளைக் கொடுப்பதற்குமுன், இவர்களிடம் கொஞ்சம் காசுகளைக் கொடுத்து, இன்றைய உணவுக்கான பொருள்களை வாங்கி எப்படிச் சமர்த்தாகச் சமைத்து உண்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்!" என்றார் அமைச்சர். அதுவும் நல்ல யோசனைதான் என்று ஏற்றுக்கொண்ட ராஜாவும் அவர்களிடம் உணவுக்கான காசுகளை வழங்கினார். அந்தக்காலத்தில் எங்கும் உணவு விற்கும் விடுதிகள் கிடையாது; ஆங்காங்கு இருந்த சத்திரங்களும் வழிப்போக்கர்களுக்கு மட்டுமே உணவுதரும். தங்களுக்கான உணவைத் தாங்களே சமைத்துச் சாப்பிடுவதைத்தவிர வேறுவழியே இல்லை. சந்தைக்குச் சென்று ஆளுக்கொரு பொருளாக வாங்கி வந்து சமைப்பதென அறிஞர்கள் மத்தியில் முடிவெடுக்கப்பட்டது.
இலக்கணப் பண்டிதர் தயிர் வாங்கச் சென்றார். தயிர் விற்பவர். 'தயிரோ! தயிர்!' என்று கூவிக்கொண்டிருந்தார். அவரிடம் சென்ற இலக்கணப் பண்டிதர்," நீ தயிரை விற்கிறாயா? ஏலம் போடுகிறாயா?" என்று கேட்டார். "விற்கிறேன்" என்றான் தயிர்க்காரன். "அப்படியானால் ஓகாரம் போடாதே! தயிர்த் தயிர்! என்று அடக்கமாகக் கூறு! அப்படியும் பார்த்தால் தயிருக்கு அப்புறம் ஒற்று மிகுமா? மிகாதா?" என்று கேட்டார் பண்டிதர். "இப்படியே போனால் புளிப்புதான் மிகும்" என்று தயிர்க்காரன் நக்கலாகச் சொன்னான். வாக்குவாதம் மிகவே தயிர் வாங்காமல் வெறுங்கையோடு வீடு திரும்பினார் பண்டிதர்.
தர்க்க அறிஞர் நெய் வாங்குவதற்கு நெய்க்கடைக்குச் சென்றார். அங்கே தொன்னையில் நெய் தரப்பட்டது." நெய்க்குத் தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா? என்கிற பழைய தர்க்கம் ஒன்று இருக்கிறது; தெரியுமா உனக்கு?" என நெய்க்கடைக்காரனிடம் கேட்டார் தர்க்க அறிஞர்; அவன் விழித்தான்; இதோ பார் என்று தொன்னையிலிருந்த நெய்யைக் கீழே கவிழ்த்துவிட்டுத், 'தொன்னைதான் நெய்க்கு ஆதாரம்' என்று வெறும் தொன்னையோடு வீட்டிற்கு நடையைக் கட்டினார்.
காய்கறி வாங்கச் சென்ற மருத்துவர், ஒவ்வொரு காயையும் காயாகப் பர்க்கவில்லை; மாறாக நோயாகவே பார்த்தார். இந்தக் காய் சூடு, இந்தக்காய் குளிர்ச்சி, இந்தக்காய் பித்தம் என்று எல்லாக் காயையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு வெறும் பையோடு வீடு வந்து சேர்ந்தார். இலை வாங்கச் சென்ற ஜோதிடர் பல்லி சகுனம் சரியில்லை என்று வாங்காமலேயே வந்து சேர்ந்தார். வீட்டில் சமையல் கட்டில் மண்பானையில் உலையை ஏற்றி அரிசியைப் பாடிக் கொண்டே போடப்போன சங்கீத அறிஞர், உலை கொதிக்கும் சுவரத்திற்கும் தன்னுடைய பாட்டிற்கும் ஒத்துவரவில்லை என அடுப்பில் உலைகொதித்த மண்பானையை அகப்பையாலேயே உடைத்தெறிந்தார்.
இப்படியாகச் சமையலுக்குத் தேவைப்படும் பொது அறிவு ஏதுமில்லாத, சிறப்பறிவு அறிஞர்கள் ஐவரும் அன்று உணவின்றித் தவித்த சோகக்கதை அமைச்சரின் மூலமாக அரசருக்குப் போய்ச் சேர்ந்தது. அதனால் அன்றாடம் வாழ்வதற்கே பொதுஅறிவு எதுவுமில்லாத அறிஞர்கள் ஐவரும், தாம் வழங்கப்போகும் பரிசுகளை மட்டும் எப்படிப் பாதுகாத்து வைத்து வாழ்க்கையை நடத்தப் போகிறார்கள் என்று சந்தேகப்பட்ட ராஜா பரிசுகளை வழங்காமல் விட்டுவிட்டார்.
அறிவுத்துறை வேறு; நடைமுறை அறிவு என்பது வேறு. ஏட்டுச் சுரைக்காய் மட்டுமல்ல ஏட்டுக்கல்வியும் கறிசமைக்க உதவப்போவதில்லை. இன்றைக்குப் பொதுஅறிவை நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பதில், எண்ணற்ற பத்திரிகைகளும், வானொலி தொலைக்காட்சி ஊடகங்களும் போட்டிபோட்டு முந்திக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு சமூக ஊடகங்களான யூடியூப், முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போல் பல ஒலிஒளி வழியே தகவலறிவுகளைக் கொண்டுவந்து தட்டிய வண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு செல்பேசியும் ஒரு ஊடகமாகவும், ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ஊடகவியலாளனாகவும் மாறிவிட்ட ஊடகமுன்னணிக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனக்குச் சிறப்பறிவுமட்டும் போதும்; பொது அறிவில் எனக்கு நாட்டமில்லை என்று யாரும் விலகி ஓடிவிடவும் முடியாது; ஒளியவும் முடியாது.
ஒவ்வொரு மனிதனும் பொது அறிவில் ஆர்வம்கொண்டு, திறமாகச் செயல்பட்டால், சக மனிதர்களோடு சகஜமாகப் பழகுவதற்கு வாய்ப்புகள் உருவாகும். சிறப்பறிவை மட்டுமே நம்பியிருப்பவர்கள் சமூகத்தில் தனியர்களாகத் தனித்து விடப்படுவர். அன்றாட வாழ்வில் ஒருவருக்கொருவர் இயல்பாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கே பொது அறிவு சார்ந்த மொழி தேவைப்படுகிறது. விஞ்ஞானியாக உள்ள ஒருவர் பலசரக்குக் கடைக்காரரிடமோ, அல்லது பயணிக்கும் பேருந்து நடத்துநரிடமோ அறிவியல் கலைச் சொற்களை மட்டுமே பயன்படுத்திப் பேசிக் கொண்டிருந்தால் அவர் தனித்து விடப்படுவார். அவ்வளவு ஏன்? தமிழ் இலக்கியம் படித்தவர், அன்றாடம் மனிதர்களோடு பேசுவதற்கு அவரது இலக்கியத் தமிழறிவு பயன்படாது; பொது அறிவு சார்ந்த பொதுமொழியே தேவைப்படும்.
பொது அறிவு என்பது நடைமுறை அறிவு. அதில் அறிவுக்கூறைவிட அனுபவக் கூறு அதிகம் இருக்கும். தர்க்க விவாதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதநேயம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை காட்டுவதாக இருக்கும். எது நல்லது; எது கெட்டது; யார் நல்லவர்; யார் கெட்டவர் என்பதை அறிவியல் இலக்கிய ஆராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு, வெகு விரைவில் கண்டுபிடித்து நல்லபடியாக நம்மைச் சீரமைத்துக்கொள்ளப் பொது அறிவே உற்ற துணையாக உதவி செய்யும்.
பொது அறிவு என்பது பாமர அறிவு ஆகும்; பாமரர்களுக்கும் பயன்படும் அறிவு பொது அறிவு; அது பாமரத்தனமான அறிவு கிடையாது. சில வாழ்வியல் தொடர்பான பாதுகாப்பு அறிவுகளைப் பொது அறிவுமூலமே உணர்ந்துகொள்ளமுடியும். வண்டி ஓட்டிக்கொண்டே செல்பேசாதீர்கள்! அது ஆபத்து என்பதையும் , வண்டி ஓட்டும்போது தகவல்களைத் தொட்டச்சுச் செய்யாதீர்கள்! விபத்து ஏற்படும் என்பதையும் எந்தக் கல்விப்பாடமும் சொல்லித் தருவதில்லை.
சிறப்பறிவு நமது வேலைவாய்ப்பிற்கு உறுதுணையாக உதவுவது என்றால், பொது அறிவு நமது அன்றாட வாழ்வியலுக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்குகிறது.
தொடர்புக்கு 9443190098






