என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • ஒரு நிகழ்வினை சமாளிக்க அதிக டிராமா தேவையில்லை.
    • நீங்கள் உருவாக்கும் குடும்பம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

    மன அமைதி, தெளிவு, நிம்மதி இவற்றிற்கு அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை அல்லது சில முயற்சிகளை நாம் கடைபிடிக்க வேண்டும். இதனை 50 வயதில் கடைபிடிப்பது ரொம்ப லேட். எனவே 20 வயதிற்குள் அதை கடைபிடிக்க இளைய தலைமுறைக்கு சொல்லித் தரலாமே.

    * பல நேரங்களில் பேசாமல் அமைதி காப்பது நல்லது. நன்கு பேசும் கிளியினைத்தான் கூண்டில் அடைக்கின்றார்கள். மறவாதீர்கள்.

    * ஒரு நிகழ்வினை சமாளிக்க அதிக டிராமா தேவையில்லை. அமைதி போதும்.

    * அநேக மக்களுக்கு வாழ்வின் நோக்கம், வாழ்வின் பாதையினை நிர்ணயிக்க முடிவதில்லை. தெரிவதில்லை.

    * நீங்கள் வந்த குடும்பம் பெரிய முக்கியம் அல்ல. நீங்கள் உருவாக்கும் குடும்பம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

    * குடும்பம்தான் உங்களை ஊக்கப்படுத்தும், உறுதுணையாய் நிற்கும்.

    * உங்கள் வெற்றியில் மகிழும் ஒரு நண்பர் இருந்தாலும் போதும். நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.

    மேலும் இந்த வழக்கங்களும் நடைமுறையும் உதவும்

    * பிறரைப் பற்றி குறை கூறாது இருப்பதும், புறளி பேசாது இருப்பதும் மிகுந்த மன அமைதி தரும்.

    * நீங்கள் பேசுவதை நீங்களே பதிவு செய்து பின்னர் நீங்களே அதனை கேட்டுப் பாருங்கள். உங்களை அழகாய் செதுக்கிக் கொள்ள இந்த பழக்கம் உதவும்.

    * எங்கெங்கு தவறுகள் ஏற்படுகின்றன என்பதனை உணர உங்களுக்கு முழு உண்மையான உள்வட்ட நபர்கள் தேவை.

    * யாரையும் பிறர் எதிரில் அவர்களது தவறுகளைக் கூறாமல் தனியே கூறிப்பாருங்கள்.

    * மற்றவர்கள் பெயர்களை ஞாபகத்தில் வைத்து பேசுவது ஒரு தனி கலை.

    * ஏதேனும் ஒன்று உங்களுக்குத் தெரியாது என்றால் 'தெரியாது' என்று சொல்லி விடுவது நிம்மதி தரும். நமக்கு சாதாரண ஆசைகள் இப்படியும் இருக்கலாமே?

    * ராமாயணம், மகாபாரதம், பைபிள், குரான் இவை அனைத்தையும் சிறு வயதிலேயே படித்து அறியலாமே?

    * தேர்ந்தெடுத்து சில புத்தகங்களை வாழ்நாளில் படித்து அறிந்து கொள்வோமே.

    * சூரிய அஸ்தமனம் செவ்வாயில் நீலமாகத் தெரியுமாம். அழகாய் இருக்கும். சென்று பார்த்து வரலாமா.

    * பிரபஞ்சம் நிசப்தமாக இருக்குமாம். நாமும் நிசப்தமாக இருந்து பிரபஞ்ச சக்தியாக மாற முயற்சிப்போமா.

    * அகத்திய மகரிஷியினைப் பார்த்து இன்றும் ஏதோதோ வைரஸ் வகைகளை சொல்கின் றார்களே. அதற்கெல்லாம் அவருக்குத் தெரியாத மருந்தா? கேட்டு வர முடியுமா?

    * இங்கிருந்து விடாது நடந்தால் 9 அல்லது 12 வருடத்தில் நிலவுக்கு சென்று விடலாம் என்கின்றனர். என்ன பிரமாதம். போக 9 வருடம், திரும்பி வர 9 வருடம். மொத்தம் 18 வருடம் தானே கண் சிமிட்டும் நேரத்தில் சென்று வந்து விடலாமே. செய்யலாமா?

    * கருந்துளை, கருந்துளை என்கின்றார்களே. விண்வெளியில் நிலவும் கருந்துளை ஆற்றல் மிக்க ஈர்ப்பு விசை கொண்டது. ஒளி உட்பட எதுவும் அதன் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பிக்க முடியாது என்கின்றனர். எண்ணற்ற கருந்துளை உள்ளனவாம். மெதுவாக உள்ளே விழுந்து விடாமல் உள்ளே எட்டி பார்த்து விட்டு வருவோமா.

    * என்னிடம் ஒரு பெண்மணி கூறியது. எனக்கும் ஒரே ஒரு சின்ன ஆசைதான். கடவுளைப் பார்த்து கேட்கணும். 'கடவுளே. எனக்கு ஒரு சின்ன ஆசை. உன்னிடம் எல்லா சக்தியும் இருந்தும் ஏன் இவ்வளவு அசடா இருக்கே. உன் சக்தியை என் கிட்ட கொஞ்ச நேரம் மட்டும் கொடு. கெட்டவனை எல்லாம் தீர்த்து கட்டி விட்டு உன்னிடமே உன் சக்தியினை திரும்ப கொடுத்து விடுகின்றேன்" என்றார். இதுவும் மிகச் சிறிய ஆசை தானே.

    * சித்தர்களாலும், யோகிகளாலும் தூசியினைக் கூட ஒரு பொருளாக, சக்தியுள்ளதாக மாற்ற முடிகின்றதே. நமக்கு அந்த அளவு வேண்டாம். செய்யும் வேலை, படிக்கும் படிப்பு இவற்றில் முழு கவனம் செலுத்தி சாதிக்க விழிப்புணர்வும், கவனமும் வேண்டுமே.

    * உங்களுக்கென என்ன வேண்டும்? ஒரு நல்ல தோட்டமும், நூலகமும் இருந்து விட்டால் போதும். அநேக நன்மைகள் கிடைத்ததற்கு இவை சமம்.

    ஜென் புத்திசம்

    இது புத்தர் வழி பின்பற்றுபவர்களின் ஒரு பிரிவு எனலாம். ஜென் என்றால் ஜப்பானிய மொழியில் தியானம் என்று பொருள். தியானத்தின் மூலம் உள்ளுணர்வு மற்றும் ஞானத்தினை அடையும் மார்க்கமாக இதனைக் கூறுவர்.

    இவ்வழி பின்பற்றும் சில துறவிகள், ஞானிகளின் கருத்தினை கேட்கும், படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

    மார்க்கம் எதுவானாலும் மனிதனின் நோக்கம் ஒன்றுதான். தீயவை அகல வேண்டும். நல்லவை வந்து சேர வேண்டும். நல்லது என்று ஒன்று இருக்கும். அந்த தீயதனை நாம் நீக்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

    அப்போதுதான் நன்மை தடங்கல் இன்றி வந்து சேரும் என்ற விதமாக இவர்கள் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவர்களின் பல கருத்துக்கள், பழக்க வழக்க முறைகள் நம் பழக்க வழக்கங்களை ஒத்து உள்ளன.


    உதாரணமாக

    உப்பு: இங்கு உப்பு என்று குறிப்பிடப்படுவது கல் உப்பை பற்றித்தான். நம்ம ஊரில் சாதாரண சமையல் முதல் பதப்படுத்தும் ஊறுகாய் வரை உப்பு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. சிறிய அளவில்தான் என்றாலும் இது இல்லாமல் சமையல் இல்லை.

    அதிக உப்பு கூடாது எனும் மருத்துவ உலகம் உடலில் உப்பின் அளவு குறைந்தால் ஏற்படும் தீமைகளையும் விளக்குகின்றது. நரம்பு மண்டலம், தசைகளின் இயக்கம், உடலின் திரவ சமநிலை இவற்றிற்கு உப்பு அவசியமான ஒன்றே.

    உப்பின் அளவு உடலில் குறையும் போது வாந்தி, மயக்கம், சக்தியின்மை என கொண்டு சென்று விடும். இது ஆரோக்கிய, மருத்துவ முறை.

    வீட்டில் ஏதேனும் புனித நீராடல் என்றால் கடலில் சென்று குளித்து வருவார்கள். அனைத்து தீய சக்திகளை நீக்கும் ஆற்றல் உப்பிற்கு உண்டு. வீட்டில் கண் திருஷ்டி எனச் சொல்ல உப்பு சுற்றி போடுவார்கள். இதனை நம்புபவரும், நம்பாதவரும் உண்டு. இது அவரவர் விருப்பம்.

    மேலே குறிப்பிட்ட ஜென் முறையில் உப்பிற்கு நமக்கு ஆக்கப் பூர்வமான சக்தியிைன ஊட்டி வாழ்வினை வளமாக்கும் சக்தி உண்டு என்கின்றனர். இதனை எந்த மதசார்பும் இன்றி அனைவருமே வலியுறுத்தி உள்ளனர்.

    கடற்கரையை ஒட்டி நடக்கும் போது ஒரு புத்துணர்ச்சி வருவதன் காரணம். உடலின் தீய சக்திகள் உப்பு காற்றின் மூலம் நீக்கப்படுகின்றன என்கின்றனர்.


    உப்பு மனதினை மகிழ்வாக்கும் செரடோனின் சுரக்க உதவு கின்றது. இவர்கள் உப்பினை (ராக்சால்ட், ஸ்ரீமாலயன் சால்ட்) இவைகளை அதிகம் உணவிற்காக சிறிய அளவில் பயன்படுத்துகின்றனர்.

    கல் உப்பினை ஒரு கிளாசில் 2 அல்லது 3 பங்கு நிரப்பி கால்பங்கு நீர் சேர்த்து நீங்கள் இருக்கும் அறையில் உங்களுக்கு அருகில் தரையில் வைத்து விடுங்கள். 24, 48 மணி நேரம் அந்த கிளாஸ் அங்கேயே இருக்கட்டும். உங்களை சுற்றியுள்ள தீய சக்திகள் நீங்கும் என்கின்றனர்.

    • “அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா” என்ற தாலாட்டுக்கும் அவர் குரலில் தான் பாட்டு!
    • ‘பாவ மன்னிப்பு’ படத்தில் “அத்தான் என் அத்தான்” என்றொரு பிரபல பாடல் உண்டு.

    பி.சுசீலாவின் தேன் சிந்தும் குரலுக்கு மயங்காதவர் யார்? அவரது காலகட்டத்தில் தென்னிந்தியாவின் மொழிகளில் வந்த எல்லா படங்களின் பாடல்களில் கதாநாயகியின் குரல் என்றால் அது அவர் குரல் தான்!

    சாவித்திரி, சரோஜாதேவி உள்பட சில நடிகையர் எனக்கு சுசிலா தான் பின்னணி பாட வேண்டும் என்று நிபந்தனைகளை போட்ட வரலாறும் உண்டு!

    "அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா" என்ற தாலாட்டுக்கும் அவர் குரலில் தான் பாட்டு!

    கே..ஆர். விஜயா ஆவியாக வந்து "மன்னவனே அழலாமா? கண்ணீரை விடலாமா?" என்று பாடியதும் சுசிலா குரல் தான்!

    சாவித்திரியின் இரண்டு பாடல்களுக்கும் இவர் குரலே தான் என கற்பகம் படம் முழுக்க "ஒன் உமன் ஷோ".

    பாலும் பழமும்' படத்தில் "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்" என்ற பாடல் 1961ல் திருமணமான எல்லா பெண்களின் தேசிய கீதம் ஆகிவிட்டது என்னவோ உண்மை! நிறைய பேரை துளசி மாடத்தை சுற்றி வரும் போது முணு முணுக்க வைத்த பாடல்!

    'பாவ மன்னிப்பு' படத்தில் "அத்தான் என் அத்தான்" என்றொரு பிரபல பாடல் உண்டு.

    ஒரு முறை கவியரசர் காரில் பயணம் செய்தபோது நொறுக்கு வாங்கி சாப்பிட்ட தாளில், ராமச்சந்திர கவிராயர் எழுதிய "கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?" என்ற பாடலை படிக்கிறார். பிரம்மன் பொன்னை கொடுத்தும் அருளவில்லை. கல்லை, மண்ணை சாப்பிடவும் கற்றுத் தரவில்லை. எல்லோரிடமும் பல்லைக்காட்டி பிழைக்க வைத்து விட்டானே என தனது ஏழ்மையை நினைத்து புலவன் புலம்புவதாக எழுதிய பாடல்?

    இதை படித்த கவியரசரை ஒவ்வொரு சொல்லிலும் இருந்த 'த்தான்' கவர்ந்து விடுகிறது. கவியரசர் இதே பாணியில், "அத்தான் என் அத்தான் அவர் என்னைத்தான்... எப்படி சொல்வேனடி" என்ற ஒரு பாடலை எழுதிவிட்டார்.

    ஒருநாள் எம்.எஸ்.வியிடம் சொல்கிறார். "விசு, நான் ஒரு பிரமாதமானப் பாட்டு எழுதியிருக்கேன். அதை சிலரிடம் கொடுத்தேன். இதற்கெல்லாம் மெட்டு போட வராதுன்னு சொல்லிட்டாங்க. நீயும் முடியாதுன்னு சொல்லிடாதே".

    "அப்படியா? கொடுங்க கவிஞரே பார்ப்போம்" என்று படித்துப் பார்க்கிறார். "மெட்டுப் போடலாமே" எனச் சொல்லிவிட்டு பாடிக் காட்டுகிறார்.

    "அருமையாயிருக்கே, சரி அப்படியே தயாரிப்பாளர்கிட்டே பாடி காட்டி 'பாவ மன்னிப்பு ' படத்திலே சேர்க்க அனுமதி வாங்கிடலாம் விசு.

    ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் ஹார்மோனியத்துடன் இந்தப் பாடலை வாசித்துப் பாடிக்காட்டினார் எம்.எஸ்.வி.

    "இதென்ன ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் நடுவிலே இவ்வளவு இடைவெளி? வெத்தல பாக்கு மடிச்சு போடுற அளவு நேரமிருக்கே ரசிகர்கள் கேட்பாங்களா?"

    "கேட்டாங்க சார், இசையோடு கூட கேட்டுப் பார்த்தா பிரமாதமா வந்திடும்"

    அரைமனதுடன் சம்மதித்தார் ஏ.வி.எம் செட்டியார்.

    தோழியிடம், தன் அத்தானைப் பற்றி நாயகி சொல்வதாகப் பாடல்! . சுசிலாவை பாட வைக்க நினைக்கிறார்கள். எம்.எஸ்.வி. மறுநாள் பாடல் ஒத்திகைக்கு வரச் சொல்லி தொலைபேசியில் சுசிலாவிற்கு சொல்ல. அவரோ, "சார் எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, குரல் சரியில்லை. இன்னொரு நாள் ரிக்கார்டிங் வச்சிக்கலாமா?" என்கிறார்.

    "எங்கே இந்த வரியை பாடிக் காட்டுமா பாக்கலாம்" என்று ஒரு வரியை போனிலேயே சொல்கிறார் எம்.எஸ்.வி.

    "இந்த வாய்ஸ் போதும் இந்தப் பாட்டுக்கு" இந்த குரல் தான் வேணும். நிறுத்தி நிதானமாக பாடுவதற்கு இந்த குரல் போதும். நாளை ரெக்கார்டிங்க்கு வந்துடுங்கமா".

    மறுநாள், வெட்கமும் தயக்கமுமாக 'எப்படி சொல்வேனடி' என்று வரும் "வால்டஸ்"வகைப் பாடல். லதா மகேஷ்கர், "இது போன்ற பாடல் தருவதாக இருந்தால் நான் இங்கே வந்து பாடுகிறேன்" என்று ஆசைப்பட்ட பாடல்.

    கவியரசர் வேண்டுகோளால் நமக்கு கிடைத்த இந்த பாடல் 63 ஆண்டுகளாக காற்றில் கலந்து நம் காதோரம் "என் அத்தான் அவர் என்னைத்தான்" என்று காதோரம் கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறது. இடையிசையில் முதலில் வரும் நீண்ட 'அகார்டியான் ' இசை ஆளை அசத்திவிடும்!

    'நெஞ்சில் ஒரு ஆலயம்' என்ற படத்தில் "சொன்னது நீ தானா? என்ற பாடல்.

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    நோயினால் தான் இறந்து விடுவோமோ என்று நினைக்கும் கணவனாக நடிகர் முத்துராமன், மனைவி தேவிகாவிடம் தன் காலத்துக்குப் பிறகு மறுமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்.

    துடித்துடிக்கும் மனைவியோ, "சொல் சொல் சொல்" என்னுயிரே என்று கேள்வியிலேயே உலுக்குகிறார்! "ஏன் ஏன் ஏன்" என்று ஏறுமுகமாக ஆரோகனமாக கேட்டுவிட்டு சலித்துப் போய், சுயபாச்சதாபம் மேலிட, " ஏன் ஏன் ஏன்" என்னுயிரே என்று இறங்கு முகமாக அவரோகனத்தில் பாடுவாரே அங்கு தெரியும் மெல்லிசை மன்னர்களின் பேருரு! "இறுதிவரை துணையிருப்பேன் என்றதும் நீ.... தா.....னே...?" என்று தழுதழுத்த குறளில் பாடலை கேட்கும்போது எப்படிப்பட்ட முரட்டு குணத்தவரின் கண்களில் ஓரமும், ஈரமும் மின்னும்; அப்படிப்பட்ட பாடல் அது!

    கண்ணதாசனும், மெல்லிசை மன்னர்களும், சுசீலாவும் அந்த பெண்ணின் மனதுக்குள் கூடுவிட்டு கூடு பாய்ந்து இருப்பார்கள்! அதனால் தான் இது போன்ற பாடல்கள் எல்லாம் இன்றும் எல்லோரின் கண்ணதாசன் தொகுப்பிலும், எம்.எஸ்.வி தொகுப்பிலும், சுசிலா தொகுப்பிலும், முதல் 10 பாடல்களில் ஒன்றாக சப்பணம்மிட்டு உட்கார்ந்து இருக்கின்றன.

    சிதார், தில்ரூபா தபலா டோலக் என குறைந்த இசைக்கருவிகளுடன் வந்தாலும் காலத்தை வென்ற பாடல்! இந்தப் பாடலைப் பற்றி ஒரு சுவையான நிகழ்ச்சி..

    "எனக்கு மிகவும் பிடித்த மதம் தாமதம்" என்று சொல்பவர் கண்ணதாசன். 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்திற்கு "சொன்னது நீ தானா?" பாடல் எழுதும் முன் எல்லோரும் வந்து காத்திருக்கிறார்கள். கண்ணதாசன் வரவேயில்லை. வெகு நேரம் காத்....திருந்....தார்கள். எம். எஸ்.விகோ வேறு நிறுவனங்களுக்கு இசையமைக்க போகவேண்டிய வேலை இருந்தது.

    "என்ன இவர் நேரத்திற்கு வராமல் இப்படி பண்றார்" என சலித்துக் கொண்டார். இதை வரும்போது யாரோ கவியரசிடம் போட்டுக் கொடுத்து விட்டார்கள். எம்.எஸ். விடம் மிகவும் அன்பு வைத்திருந்த அவரால் இதை நம்பவே முடியவில்லை. இயக்குனர் ஸ்ரீதர் சூழலை சொல்கிறார், கண்ணதாசன் பாடலைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

    "சொன்னது நீதானா? சொல் சொல் சொல் என்னுயிரே"

    இந்த வரிகளின் உயிரோட்டத்தில் மதி மயங்கி விட்ட எம்.எஸ்.விகோ அது தனக்கு சொல்லப்பட்ட வரிகள் என்று புரியவில்லை. பிறகு கவியரசரே சொன்னபோது தான் புரிந்தது.

    அவரது கவனமோ "சொல் சொல்" என்ற வரிகளை சுசிலா நா தழுதழுக்க பாட வைக்கும் யோசனையில் இருந்திருக்கும். ஒரே அறைக்குள் அலுப்புத் தட்டாமல் வேறு வேறு கோணங்களில் 50க்கும் மேற்பட்ட காட்சிகள் வரும். கேமராவுக்கான பாடமாக திரைப்படக் கல்லூரியில் வைக்கலாம்!

    பி.சுசிலாவின் ஆகச் சிறந்த படைப்புகளில் 'பாக்கியலட்சுமி 'என்ற படத்தில் வரும் "மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி" என்ற பாடலை தவிர்க்க முடியாது! இந்த பாடலைப் பற்றி சிறந்த இசையமைப்பாளரான இளையராஜா மிகவும் சிலாகித்து பேசுவார்.

    குழந்தைப் பருவ திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு பெண் அவளது கணவன் சிறுவயதிலேயே இறந்ததாக தெரிவிக்கப்பட்டு கைம்பெண் கோலத்தில் வாழ்ந்து வருகிறாள். அவர் தான் சவுக்கார் ஜானகி. தோழி ஈ.வி. சரோஜாவின் வீட்டில் வாழ்கிறாள். தோழி ஒரு முறை பாட்டு பாடச் சொல்லிக் கேட்க தனது உள்ளத்திலிருப்பதை பாடலில் கொட்டுகிறாள். இந்த பாடல் வரிகளில் சொல்லப்பட்ட அவளின் மனவலிகளுக்கு சற்றும் குறையாதது எம்.எஸ்.வி. பாடலை கட்டமைத்த விதம்!

    பாடல் சந்திரா கெலன்ஸ் என்ற ராகத்தில் அமைத்திருப்பார்கள். இரவு 9 மணி முதல் 12 மணி வரை பாடக்கூடிய ராகம் சந்திரா கெலன்ஸ் என்பதை கவனிக்கவும்.

    மென்மையாக, நிதானமாக ஆரம்பிக்கும் பாடலின் பல்லவி. இந்த பாடலும் அதிக சொற்கள் கொண்ட நீள நீள வரிகள் உடையதுதான்!

    தோழி உற்சாகமாகத்தான் வீணையில் ஆரம்பிக்கிறாள். பாடப் பாட சோகம் முற்றி இருளைப் போல செனாய் இசையின் வழியே அவளின் துக்கம் அதிகமாகி கொண்டே போவதை உணரலாம்.

    தோழியே நெகிழ்ந்து போய் வீணையை சோகமாக வாசித்து முடிக்கிறார். பாடல் முடிவில் சிதாரில் ஒரு துண்டு வாசிக்கப்படும். Resolute என்று சொல்வார்கள். அது 'ரவிச்சந்திரிக்கா ' இராகமாம். அவளுக்கு தூக்கம் இல்லாமலே பொழுதே விடிந்து விட்டது! என்பதை இசையால் சொல்லும் உத்தி அது!

    சந்திரன் வரும்போது (சந்திரா ஹெலன்ஸ்) ஆரம்பிக்கும் துயரம், ரவிச்சந்திரிகாவில் முடிகிறது!

    கவியரசர் அந்தப் பெண்ணின் மனதை எக்ஸ்ரே எடுத்தார் என்றால், அதைவிட அதிகமாக பெண்ணின் மனதை ஸ்கேன் எடுத்துப் பார்த்து சொல்லி இருப்பார். எம்.எஸ்.வி! இந்தப் பாடலை சுசீலாவை தவிர வேறு யார் குரலிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதுதானே? இந்தப் பாடலைக் கேட்டால் மறுமணத்தை ஆதரிக்க தோன்றும்!

    படகோட்டி என்ற படத்தில் "என்னை எடுத்து தன்னைக் கொடுத்துப் போனவன் போனாண்டி" என்று ஒரு பாட்டு உண்டு. இதுவும் உச்சஸ்தாயில் கழி நெடிலடி பாடல்தான். கவிஞர் வாலி எழுதியது. இதிலும் சரண வரிகள் பாடி இடைவெளி இல்லாமல் அப்படியே பல்லவிக்கு வந்து முடிக்கும் பாடல்!

    இதுபோன்ற பாடலுக்கு மூச்சை ஆளும் தன்மை நன்றாக இருந்தால் மட்டுமே பாட முடியும். இதில் சுசீலா முதன்மையானவர் என்று சொல்வதற்கு இன்னும் இதுபோல நிறைய பாடல்கள் இருக்கின்றன. சுசீலா திறனறிந்து இதுபோன்ற பாடல்களைத் தந்து அவரது ஒட்டுமொத்த திறனை வெளிக்கொண்டு வந்ததில் எம்.எஸ்.வி அவர்களின் பங்கு அதிகம்.

    • எந்த வேலை செய்தாலும் அதில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தி வேலை செய்ய முயல வேண்டும்.
    • நலமற்ற சிந்தனைகளைக் கண்டறிந்து மாற்ற முயல வேண்டும்.

    இக்காலத்தில் மனப்பதற்றம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் வந்து செல்கின்ற ஒன்றாகிவிட்டது. எனவே மனப்பதற்றத்தை எப்படி எதிர்கொள்வது? என்பதை அனைவரும் அறிந்து கொள்வது நன்று. அப்போதுதான் வாழ்வியல்முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் இருந்து விலகி நின்று, நம் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம், சிக்கல்களைகளையும் தவிர்க்கலாம்.

    இரவு உறங்காமல் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதுதான் மனப்பதற்றத்திற்கு முதற்காரணமாக உள்ளது.

    பொறுப்புகளைச் செய்ய வேண்டும், இந்த வேலையைக் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிக்க வேண்டும், என்று வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் பெரியவர்களை மட்டுமே துன்புறுத்தும் இந்த மனப்பதற்றம், தற்போது குழந்தைகளையும் தொற்றிக் கொண்டுவிட்டது. இது காலத்தின் கோலமா? இதற்குத் தீர்வுதான் என்ன? என்பது பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்.

    மனப்பதற்றத்தின் அறிகுறிகள்:-

    1.படபடப்பு,

    2.பய உணர்வு,

    3.எதைப் பற்றியும் சிந்திக்க

    முடியாமல் இருத்தல்,

    4.வியர்த்துக் கொட்டுதல்,

    5.கை மற்றும் உடல் நடுக்கம்,

    6.உடல் சில்லிட்டுப் போதல்,

    7.வார்த்தைகளில் தடுமாற்றம்,

    8.கண்கள் மறைப்பது போன்ற

    உணர்வு,

    9.பேச நினைத்ததை மறந்து விடுவது,

    10.செய்யும் வேலைகளைத் திறம்பட செய்ய

    முடியாமல் போவது.

    மனப்பதற்றத்திற்கான சிகிச்சை முறைகள்:

    இதைக் கண்டு பிடிப்பதற்கென்று சிறப்பான ஆய்வுகள் ஏதுமில்லை. நீங்கள் கூறும் தொந்தரவுகளை வைத்தே இதைக் கண்டுபிடித்து விடலாம்.

    ஆலோசனைகள், பதற்றத்தை விரட்டுவதற்கான சில மாத்திரைகள், உறக்கத்தை வரவைப்பதற்கான மாத்திரைகள் என்று அவரவர் மனப்பதற்றத்திற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் இந்த மனப்பதற்றத்தை அகற்றச் செய்ய வேண்டிய செயல் திட்டங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

    மனப்பதற்றத்தை அகற்றும் செயல் திட்டங்கள்:

    முதலில் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவோம். எடுத்துக்காட்டுக்கு உங்களுக்காக இந்த 6 விதைகளை நான் உருவாக்கியுள்ளேன். இதைக் காலை எழுந்தவுடனும், இரவு உறங்குவதற்கு முன்னும் குறைந்தது 3 முறைகளாவது மனத்திற்குள் சொல்ல வேண்டும்.

    1."நான் மன அமைதியுடன் இருக்கிறேன், என் ஒவ்வோர் அணுவிலும் அமைதியானது வாசம் செய்கிறது. நான் தைரியசாலி. தைரியத்துடனும், உறுதியுடனும் இருக்கிறேன். நான் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன், ஒவ்வொரு அணுவிலும் மகிழ்ச்சியை உணர்கிறேன்.

    நான் உடல் நலத்துடன் இருக்கிறேன். என் ஒவ்வோர் அணுவும் திறம்பட தன் பணிகளைச் செய்கிறது. நான் என்னை நேசிக்கிறேன். இம்மனப் பயிற்சியை நான் எனக்கேப் பரிசளிக்கிறேன். நான் இயற்கையை நேசிக்கிறேன். இயற்கையோடு இணைந்து வாழ்கிறேன்."

    இவற்றை இரு வேளைகள் சொல்வதோடு மட்டும் நிறுத்திவிடாமல், எப்போதெல்லாம் மனப்பதற்றம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் இந்த 6 விதைகளை மீண்டும் மீண்டும் சொல்லி மனத்திற்குள் ஊன்ற வேண்டும். உங்களுக்கு ஏற்றவாறு விதைகளை நீங்களே உருவாக்கியும் கொள்ளலாம்.

    2. நாளும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி செய்வது மனப்பதற்றத்தைக் குறைக்கும்.

    3. அன்றன்று சமைத்த உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    4.இரவு 7 மணி நேரமாவது ஆழ்ந்த உறக்கம் கொள்ள வேண்டும்.

    5.உறங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு அலைபேசி, தொலைக்காட்சி, கணினி மற்றும் மடிக்கணினி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    6.எந்த வேலை செய்தாலும் அதில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தி வேலை செய்ய முயல வேண்டும்.

    7.நீங்கள் கவலையாகவோ, மன அழுத்தமாகவோ, மனச்சோர்வடைந்தவராக அல்லது தனிமையாகவோ உணர்ந்தால், செல்ல பிராணிகளோடு நேரத்தைச் செலவிட வேண்டும்.

    மரு.அ.வேணி

    மரு.அ.வேணி

    8.காபி எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தால் அதைத் தவிர்த்துவிட வேண்டும்.

    9.பதற்றத்தை உருவாக்கும் உணர்ச்சிகளை எதிர்கொள்ள, நலமான வழிகளை உருவாக்க முயன்றிட வேண்டும்..

    10.நலமற்ற சிந்தனைகளைக் கண்டறிந்து மாற்ற முயல வேண்டும்.

    11.மது மற்றும் புகைபழக்கம், போதைப்பொருட்களுக்கு அடிமையாவது போன்ற கெட்ட பழக்கங்கள் இருந்தால் அவற்றைக் கைவிட வேண்டும்.

    12.அவ்வப்போது மகிழ்ச்சியான உங்கள் வாழ்க்கையின் பக்கங்களைத் திருப்பிப்பார்க்க வேண்டும்.

    13.உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டும் மற்றும் உங்கள் நோக்கங்களில் எப்போதும் விழிப்புடனேயே இருக்க வேண்டும்.

    கடந்த காலம் ஒரு அனுபவம், எதிர்காலம் ஒரு கனவு, நிகழ்காலம் மட்டுமே உண்மை என்பதை உணர்ந்து, நிகழ்காலத்தில் நாம் செய்ய வேண்டிய வேலைகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்ய வேண்டும்.

    அப்படிச் செய்யும்போது எந்த வித மனக்கசப்பும், மனக்கவலைகளும், எதிர்மறை எண்ணங்களும் நம்மைப் பாதிக்க முடியாது, என்பதை மனத்தில் கொண்டு மேற்கூறிய 6 விதைகளையும், 6 செயல் திட்டங்களையும் பின்பற்றி, வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் இருந்து விலகி நின்று, நலமுடனும், மகிழ்வுடனும் வாழ முயல்வோமாக.

    குழந்தைகளுக்கு ஏற்படும் மனப்பதற்றம்:

    25 ஆண்டு கால மருத்துவச் சேவையில் குழந்தைகள் மனப்பதற்றத்துடன் வருவதைக் கொரோனாக் காலகட்டத்திலிருந்து பார்க்க நேரிடுகிறது. இதற்கு முதற்காரணம் இரவில் சரியாக உறங்காமல் இருப்பதும், காணொலி விளையாட்டில் அதிக ஆர்வம் கொள்வதும் மற்றும் அலைபேசியில் அதிகநேரம் செலவிடுவதும்தான். இன்னும் பல காரணங்கள் இருந்தாலும் இவையே குழந்தைகளை அதிகமாய்ச் சீர்குலைக்கின்றன. எனவே குழந்தைகளை அலைபேசி மற்றும் சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருக்க நாம் என்ன செய்யலாம்? என்பதை இங்கே காண்போம்.

    குழந்தைகள் அலைபேசி பார்ப்பதைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

    உங்கள் குழந்தை படிக்காமல் தொடர்ந்து அலைபேசியைப் பார்த்துக்கொண்டே இருந்தாலோ அல்லது தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடந்தாலோ, உடனே குழந்தையை அடிக்கப் பாயாமல், "இங்க பாருடா கண்ணா...! தினமும் ஈவ்னிங் அரை மணிநேரம் அலைபேசி பார்க்க அப்பா, அம்மா உன்னை அனுமதிக்கிறோம். ஆனா அதையும் தாண்டி அப்பா, அம்மா பேச்சைக் கேட்காமல், நீ தொடர்ந்து மொபைல் பாக்குற, டிவி பாக்குற இனிமேல் இப்படிச் செய்தா, இனி நீ வழக்கமா பாக்குற நேரத்தில்கூட அலைபேசி, தொலைக்காட்சி பார்க்க முடியாது. அதனால கவனமா நடந்துக்கோ" என்று உறுதியான குரலில் தெரிவியுங்கள்.

    மறுநாள், உங்கள் பேச்சை மதித்து, குழந்தை அலைபேசி பார்க்கும் நேரம் முடிந்ததும் அதை வைத்துவிட்டுப் படிக்கவந்தால் நலம். அப்படி இல்லாமல், முதல் நாள் போலவே அலைபேசியைப் பார்க்க ஆரம்பித்தால், அதற்கடுத்த நாள்களில் உங்கள் குழந்தை முற்றிலும் அலைபேசி பயன்படுத்துவதை அனுமதிக்காதீர்கள்.

    இதற்காகக் குழந்தை அழுது அடம்பிடித்தால், அதை அடிக்காதீர்கள். உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள். தொடர்ந்து இதுபோல் உங்கள் உறுதியைக் காண்பித்தால், குழந்தைகள் இனி அம்மா, அப்பாவ ஏமாற்ற முடியாது என்று முடிவுசெய்து உங்கள் வழிக்கு வருவார்கள்.

    ஆனால், ஒரு நாளிலேயே இந்த மாற்றம் குழந்தைகளிடம் வந்துவிடாது. உங்களின் தொடர்ந்த உறுதியும், பொறுமையும் மட்டுமே அவர்களை உங்கள் வழிக்குக் கொண்டுவரும். எனவே தொடர்ந்து முயலுங்கள்.

    மனப்பதற்றத்தைத் தவிர்க்க மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி மனஅமைதியுடனும் மனமகிழ்ச்சியுடனும் வாழலாமே.

    போன்- 75980-01010, 80564-01010.


    • பச்சை சாத்தி திருக்கோலத்தைக் காண்பதற்கு அதிகமான மக்கள் வருகின்றனர்.
    • ஆலயம் சென்று வழிபட முடியாத பக்தர்களின் இருப்பிடம் தேடிவந்து அருள்பாலிப்பதாக நம்பிக்கை.

    முருகப் பெருமானின் படைவீட்டுப் பழமையும் பெருமையும் சிறப்பும் திருச்செந்தூர் தலத்திற்கே உண்டு. காரணம் திருச்செந்தூர் சிறப்புகள் பற்றி பழங்தமிழ் இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் மிக ஆழமாகப் பதிவு செய்துள்ளன.

    அடியார்களும் ஞானியர்களும் புலவர்களும் திருச்செந்தூரின் பெருமைகளையும் செந்தூரானின் திருவடிச் சிறப்புகளையும் பலவாறு பல காலங்களில் புகழ்ந்துரைத்துள்ளனர். திருச்செந்தூர் திருத்தலம் தலம், தீர்த்தம், மூர்த்தம் என்னும் முப்பெரும் சிறப்புகளையுடையது. இத்தலம் திருக்கோவில் அதிசயங்களுள் ஒன்று. வேறு எங்குமில்லாத சிறப்புடையது.

    இத்திருக்கோவில் வரகுணபாண்டியன், உக்கிரபாண்டியன் தொடங்கி நாயக்கர்கள் வழி நடந்து ஐரோப்பியர்களால் சிதைக்கப்பட்டு கேரள சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டு நடந்து துறவியர்களால் பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவத்துடன் புனரமைக்கப்பட்ட இராஜ கோபுர திருக்கோவில் என வளர்ந்ததாகும்.

    திருச்சீரலைவாய் என வழங்கப்பட்டு வந்த இத்தலம் செந்நிறமுடையவன், சேந்தன் எனவே சேந்தில் என்பது செந்தில் என வழங்கலாயிற்று. தேவாரப் பனுவல்கள் காலத்திற்கு முன்புவரை அலைவாய் செந்தில் என அழைக்கப்பட்ட இவ்வூர் செந்தில் ஊர் என அழைக்கப்பட்டு பின் செந்தூர் என்றாயிற்று. திரு என்னும் அடைமொழியுடன் திருச்செந்தூர் என வழங்கப்படுகிறது.

    தேவர்களால் வடிவமைக்கப்பட்ட இத்திருக்கோவில் கருவறைக்குள் முருகன் வழிபட்ட சூரிய லிங்கம், சந்திரலிங்கம் என்னும் இரு லிங்கங்கள் சுவரில் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளன. மூலவர் இருக்கும் கருவறைக்குப்பின் குகைக்குள் அமைந்திருக்கிறது.

    திருச்செந்தூர் திருக்கோவில் வெளிப் பிரகாரத்திலிருந்து கடல் மட்டம் அளவு படிகள் வழியாகக் கீழிறங்கி வந்து வழிபடும் வகையிலும் முருகனருள் பெற்று மேல் ஏறி வந்து வாழ்க்கையிலும் உயர்வெய்தி மகிழ்வடையவும் தத்துவாார்த்த நோக்கில் ஓம் வடிவத்தில் திருக்கோவில் அமைந்திருக்கிறது. முதலில் பூர்வதிசை (கிழக்கு) நோக்கியே அமைந்திருக்க வேண்டும். அங்கு ஒரு வாயிலும் கோபுரமும் இருந்தது. தற்போது கோபுரம் மட்டும் உள்ளது. கிழக்கில் கடல் அமைந்திருப்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் அடைக்கப்பட்டு தெற்கு வாயில் திறக்கப்பட்டிருக்கலாம். மேல வாயிலில் இராஜகோபுரம் அமைந்திருக்கிறது.

    இக்கோபுரம் ஆண்டிற்கு ஒருமுறை கந்த சஷ்டியினைத் தொடர்ந்து தெய்வயானைத் திருமணம் நடைபெறும் சமயத்தில் அதிகாலை திறக்கப்பட்டு திருமணம் முடிந்தவுடன் அடைக்கப்பட்டு விடுகிறது. வடக்கு வாயில் ஒன்று உண்டு. அதன் வழியாகவே பக்தர்கள் வெளியில் வருகிறார்கள். கி.பி 15 -ஆம் நூற்றாண்டிற்குப் பின் மேலக் கோவில் எனப்படும் சிவக் கொழுந்தீஸ்வரர் திருக்கோவிலில் இருந்து முருகன் சிற்பம் கடற்கரை கோவிலுக்கு மாற்றப்பட்டது. எனவே அதற்குப் பின்பே கடற்கரைக் கோவில் எழுப்பப்பட்டிருக்கலாம். 19-ம் நூற்றாண்டுகளுக்குப்பின் காசிசுவாமி மௌனசுவாமி, ஆறுமுகசுவாமி, வள்ளிநாயகசுவாமி, அமாவாசை சுவாமிகளால் புனரமைப்பு செய்யப்பட்டு கருங்கல் கட்டிடமாக மாறியது. தற்போது ரூபாய் 300 கோடி செலவில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது.


    இத்திருக்கோவிலுக்கு இரு கொடி மரங்கள் உள்ளன. இது வேறு எங்குமில்லாத சிறப்பாகும். இலங்கை கண்டி மன்னன் கனவில் இறைவன் தோன்றி தனக்குரிய கொடிமரத்தைக் காட்ட அவர் இறைவன் கட்டளைக்கேற்ப ஒரு மரத்தை வெட்டி கடலில் போட அதனை எருமைகள் தள்ளிக் கொண்டு வந்து கரை சேர்க்க அது வெளிப் பிரகாரத்தில் மூலவர் எதிர் கிழக்கில் செப்புக் கொடிமரமாக அமைந்துள்ளது. மற்றொரு கொடிமரம் மேற்கு தொடர்ச்சி மலையில் சுடலை மாடனுக்குச் சொந்தமான காக்காச்சி மலை மரத்தை பல உயிர்களை இழந்து கொண்டு வந்து நிறுத்தினர்.

    தீர்த்தச் சிறப்பைப் பொறுத்தவரை வதனாரம்பம் அல்லது முகாரம்பம் எனப்படும் கடல் தீர்த்தம், கந்த புஷ்கரணை எனப்படும் நாழிக்கிணறு, சரவணப் பொய்கை உள்ளிட்ட 24 தீர்த்தங்கள் உண்டு. இவற்றில் முதல் மூன்றும் மிக முக்கியமானவை பிற தீர்த்தங்கள் திருச்செந்தூரைச் சுற்றிலும் நீர்க் கேணிகளாக அமைந்துள்ளன. அவை இன்று இயற்கை சீற்றத்தாலும் மனிதர்களின் பேராசைக் குணத்தாலும் மறைந்தும் மறைக்கப்பட்டும் உள்ளன. இத்தீர்த்தங்களில் நீராடி முருகப் பெருமானை வழிபட்டால் வந்த வினைகள், வருகின்ற வினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்பது அருணகிரியார் உள்ளிட்ட அடியார்களின் அனுபவ உண்மை.

    திருச்செந்தூர் திருக்கோவிலில் வேறு எங்குமில்லாத வகையில் ஆண்டிற்கு இரு திருவிழா நடைபெறுகின்றன. அவை மாசி திருவிழா மற்றும் ஆவணி திருவிழா. தற்போது ஆவணி திருவிழா நடைபெற்று வருகிறது. இரு திருவிழாக்களிலும் மிகச் சிறப்பாக பக்தர்கள் மிகவும் எதிர்பார்த்து வணங்குவது 7, 8 ஆம் திருவிழாக்களின் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி பவனியாகும். இவ்வழிபாட்டில் பங்கெடுத்துக்; கொள்வதை வாழ்வில் செய்த பாக்கியமாகக் கருதி வழிபடுகின்றனர். அவ்வாறே பக்தர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன.

    சிவப்பு சாத்தி வழிபடும் பக்தர்கள் செவ்வாடை அணிந்து செம்மலர் கொண்டு வழிபடுவதைக் காணலாம். ஒரு முறை மிகச் சிறந்த முருக பக்தனான பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் பிள்ளையன் கட்டளையைத் தனது கட்டளையாக நடத்த விரும்பி தமது சமூகத்து மண்டபத்திற்கு ஆறுமுகப் பெருமானைக் கொண்டுவர முயற்சித்தான். ஆனால் அம்முயற்சி நடைபெறவில்லை. மிகக் கடுமையான சூரைக்காற்றும் கனமழையும் அம்முயற்சியைத் தடுத்து விட்டன. முருகப் பெருமானின் விருப்பத்தை அறிந்த கட்டபொம்மன் அம்முயற்சியைக் கைவிட்டான் என ஒரு செய்தி உண்டு.

    கு.கதிரேசன்

    கு.கதிரேசன்

    அதிகாலை 2 மணி அளவில் சிவன் கோவில் மண்டகப்படி ஆராதனையினை ஏற்று சிவாலயத்தைச் சுற்றி வந்து வெள்ளை சாத்தி மண்டபத்தில் இறங்குவார். 3 மணி அளவில் அபிசேகத்தைத் தொடர்ந்து வெள்ளைப் பட்டுடுத்தி வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொற் சப்பரத்தில் அமர்ந்து மிக வேகமாக எட்டு வீதிகளையும் சுற்றி வருவார். சூரிய உதய நேரத்தில் இது நிகழ்வதால் காலை இளம் சூரியனின் கதிர்பட்டு ஆறுமுகப் பெருமான் காண்பவர் கண்களையும் கருத்தையும் கவரும் வகையில் மிக அழகாகக் காட்சித் தருவார். இத்திருக்காட்சி உயிர்களைப் படைக்கும் பிரம்ம தேவரை சித்திரிக்கிறது. ஆனால் இக்காட்சியினைப் பெரும்பாலும் மக்கள் விரும்பிப் பார்ப்பதில்லை. வெள்ளை நிறத்தை மக்கள் அமங்கல நிறமாக கருதுவதாலும் பிரம்ம தேவன் காட்சியில் ஈர்ப்பில்லாத நிலையும் அதிகாலை நேரம் ஆதலாலும் அதிகமானோர் பார்ப்பதில்லை. எனவே இவ்வெள்ளை சாத்தி பவனி மிக வேகமாக வந்து பச்சை சாத்தி மண்டபத்தில் இறங்கிவிடும்.

    8 ஆம் திருநாள் காலை பச்சை சாத்தி மண்டபத்தில் சிறப்பு அபிசேகம் நடைபெற்று ஆறுமுகப் பெருமான் வள்ளி, தெய்வ யானையுடன் பச்சை மரகத கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டுடுத்தி, பச்சைக்கல் மாலை, பச்சை மரிக்கொழுந்து, ஏலக்காய் மாலை அணிந்து பச்சைமால் வண்ணனான மகா விஷ்ணுவின் அம்சமாகப் பக்தர்களுக்குக் காட்சி தருவார். பக்தர்களும் பச்சை ஆடை உடுத்தி பச்சைக் கொழுந்து மாலை, பச்சைப்பட்டு, தேங்காய்ப் பழம், பன்னீர் சாத்தி வழிபடுவர். இக்காட்சியினைக் காண்பவர் வாழ்க்கை என்றும் பசுமையாக இருக்கும் என்பது நம்பிக்கை. மகிழ்ச்சியும் சகல செல்வங்களும் கொழிக்கும் எனவும் நம்புகின்றனர். பச்சை சாத்தி பார்ப்பவர்களுக்கு மனதில் மகிழ்ச்சி பெருகும். மணமாகா தவர்களுக்கு மணமாகும் குழந்தைப் பேரில்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும்.

    வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கை உண்டு. எனவே பச்சை சாத்தி திருக்கோலத்தைக் காண்பதற்கு அதிகமான மக்கள் வருகின்றனர். நாதஸ்வர தவில் வாத்தியம் மற்றும் தேவாரப் பண்ணிசை முழங்க முருகப் பெருமான் எட்டு வீதிகளிலும் காட்சி தருவார். காலை புறப்பட்டு பச்சை சாத்தி திருக்காட்சி, மறுநாள் அதிகாலை 2 மணி அளவில் சந்நிதி தெரு வழியாக வசந்த மண்டபத்தில் மண்டகப் படியேற்று சண்முக விலாசமடைந்து அதிகாலையில் தமது இருப்பிடத்திற்குச் சென்று ஆகம முறைப்படி ஆராதனை ஏற்று திருக்கோவில் சேர்வார். இதனை "சேர்க்கை" என குறிப்பிடுகின்றனர். சுவாமி வெளியில் வருவதை ஏற்றம் எனவும் திருக்கோவில் சென்று சேர்வதை சேர்க்கை எனவும் கூறி வழிபடுவதைக் காணலாம். ஆலயம் சென்று வழிபட முடியாத பக்தர்களின் இருப்பிடம் தேடிவந்து அருள்பாலிப்பதாக நம்பிக்கை. இருக்கும் இடம் நாடி வந்து அருள் வழங்கும் இறைவனை வரவேற்கும் மக்கள் புத்தாடை அணிந்து மாக்கோலமிட்டு, வான வேடிக்கை வைத்து பக்தர்களுக்குப் பருகிட பானகம் தந்து உபசரிக்கும் அற்புதமான மனிதநேயத் திருவிழாவாக அமைந்துள்ளது. மேலும் வளத்தினை, செழிப்பினை, செல்வத்தினை, மகிழ்ச்சியினை வழங்கும் திருவிழாவாக நடந்து வருவது சிறப்பிற்குரியது.

    தொடர்ந்து 9 ஆம் திருவிழா காலையில் வெள்ளிக் குதிரையில் அமர்ந்து வேட்டை ஆடும் மண்டபம் சென்று வேடபரி நடத்துவார். இரவு குமரவிடங்கப்பெருமான் இராவணன் கைலாய மலையைப் பெயர்த்த திருக்காட்சி சப்பரத்தில் தோன்றி தேருக்குத் தரிசனம் தந்து இரத வீதியில் வலம் வருவார். 10 ஆம் நாள் காலையில் தேரோட்டம் நடைபெறும். தேர்வடம் பிடித்து முருகப் பெருமானை மகிழ்ச்சிப்படுத்தி பக்தர்கள் தானும் மகிழ்ச்சியடை கின்றனர். அவர்கள் வாழ்வும் இறையருளால் மகிழ்ச்சியடைகிறது. எனவே திருவிழா நாயகன் திருச்செந்தில் ஆண்டவனைத் தரிசிப்போம். சகல செல்வங்களையும் பெறுவோம்.

    • பல ஆண்டுகள் பூஜை செய்த மக்களுக்கு இத்தகைய வாய்ப்பு கிடைக்கும்.
    • தவம் என்பதே விரதம், வைராக்கியம், நோன்பு ஆகும்.

    அதிகாரம்: தவம்

    இந்த அதிகாரத்தில் ,

    உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை

    அற்றே தவத்திற்கு உரு.

    என்ற குறளில் தொடங்கி

    இல்ர்பலர் ஆகிய காரணம் நோற்பார்

    சிலர்பலர் நோவா தவர்.

    -என்ற குறள்வரை 10 குறட்பாக்கள் உள்ளன. உண்மைப் பொருளை அறிந்து, தலைவன் மீது பக்தி செலுத்தி, திருவடியைப் பற்றித் தியானிப்பதே தவமாகும். ஒருவருடைய தவம் முற்றுப் பெறுவதற்கு 27,000 ஆண்டுகள் பலபிறவிகளில் தவம் செய்திருக்க வேண்டும். பல ஜென்மங்களில் பாடுபட்டு, ஒரு ஜென்மத்தில் மரணத்தை வெல்லுவதே தவம்.

    தவத்திற்கு அடிப்படை சரியை, கிரியை, யோகம், ஞானம். சரியை என்பது இனிமையாக நடந்து கொள்ளுதல், பொய் சொல்லாதிருத்தல், நீதிக்குட்பட்டு பொருள் சேர்த்தல், சிறுதெய்வ வழிபாட்டில் ஈடுபடாது இருத்தல், புலால் உண்ணாதிருத்தல் போன்றவற்றைச் கடைப்பிடித்து பண்புள்ளவனாக மாறுவதாகும். கிரியை என்பது தலைவன் யார் என்று அறிந்து, அவர் மீது பக்தி செலுத்தி பூஜை செய்வது.

    யோகம் என்பது மூச்சுக் காற்று. நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போகும், அதனை எப்படிச் செயல்படுத்துவது என்பதை அறிந்து கொள்வதாகும். ஞானம் என்பது மூச்சுக்காற்றைப் புருவ மத்தியில் ஒடுக்க வேண்டும். அங்கே ஒடுங்குகின்ற காற்று அங்கேயே தங்கி விடும். அது கபத்தை அறுக்கும், தேகக்கசடாகிய களிம்பை நீக்கும்.

    அந்த களிம்பை நீக்குவதுதான் ஞானம். இத்தகைய செயல் இயற்கையால் கொடுக்கப்பட்டது. தேகக்கசடை நீக்கவில்லையென்றால், தவத்தைத் தட்டி எழுப்ப முடியாது, நமக்குள் ஜோதி தோன்றாது, இயற்கை அன்னை இந்த தேகத்தை படைக்கும்பொழுதே கசடையும் சேர்த்து வைத்திருக்கின்றாள். நெல்லில் உமி இருப்பது போல காமதேகம் நீங்கினால் உள்ளுடம்பு தோன்றும். அத்தகைய உள்ளுடம்பு, ஞான உடம்பு, ஒளி உடம்பு. அருள் உடம்பு தோன்றுவதற்கு இந்த புறஉடம்பு துணையாக இருக்கும்.

    புருவ மத்தியில் ஒடுங்குகின்ற காற்றுதான் கசடை நீக்கி ஒளி உடம்பை எழுப்பும். உமிநீங்கினால் அரிசி முளைக்காததுபோல காமதேகம் நீங்கினால் மீண்டும் பிறக்க மாட்டான். இது தொன்றுதொட்டு பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தாலும் தவமுயற்சியாலும் கைகூடும். திருமணம் செய்து கொண்டு தவம் மேற்கொள்வது சிறந்தது ஆகும்.

    முன் ஜென்மத்தில் மிகுந்த புண்ணிய பலமும் தவ முயற்சியும் உள்ளவர் வெகுசிலரே. அவர்கள் திருமணம் செய்ய முயற்சித்தாலும் தடைபட்டு அவர்களை தலைவன் யோக வழியில் நடத்திச் செல்வான். அது எல்லோருக்கும் சாத்தியமாகாது. தலைவனின் ஆசி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

    திருமணம் செய்து கொள்ளவில்லை எனில், மனம் தடுமாறும், காம விகாரம் மேலோங்கும். அப்போது மனம் தடுமாறி தவறு செய்து விடுவான். அதனால் இல்லறமும் கெட்டு துவறமும் கெட்டு வீணாகி விடுவான். எனவே, இல்லறத்தில் இருந்து துறவறம் மேற்கொள்வது சிறப்பைத் தரும்.

     ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    தவத்திற்கு உற்ற துணையாக மனைவி இருப்பாள். காமத்தாலும் மழலையின் ஸ்பரிசத்தாலும் மனம் சாந்தப்படும். மனைவி, விருந்தை உபசரிக்கவும், புண்ணியம் செய்யவும் உறுதுணையாக இருப்பாள். காலம் கைகூடி வருகையில் தவ வாழ்க்கையும் தொடரும். சரியையில் ஒரு ஜென்மமும் கிரியையில் ஒரு ஜென்மமும் யோகத்தில் ஒரு ஜென்மமும் முறையாகச் செய்துவந்தால் இறுதியில் ஞானம் கைகூடும். பல ஆண்டுகள் பூஜை செய்த மக்களுக்கு இத்தகைய வாய்ப்பு கிடைக்கும். எந்த அளவு பாடுபட்டாலும் வீண்போகாது. அடுத்தடுத்த பிறவியில் பலன் கிடைக்கும். முன் ஜென்மத்தில் ஏற்பட்ட அனுபவமும் செய்த முயற்சியும் பின் ஜென்மத்தில் பலனைக் கொடுக்கும்.

    பலர் ஆர்வத்தின் காரணமாக முறையான வழிகாட்டுதல் இல்லாமல், மூச்சுக்காற்றை நிறுத்துவார்கள். அதனால் ரத்தக் கொதிப்பு, குடல்புண், வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் உண்டாகி இறந்து போவார்கள்.

    பிராணாயாமம் செய்பவர்கள், இரவு தங்களின் உடல்நிலையை அறிந்து, அதற்கேற்றவாறு உணவு உட்கொள்ளுதல் வேண்டும். சிறிதளவு பாசிப்பயறு, சிறிதளவு உணவு, ஒன்றிரண்டு பழங்கள், இவ்வாறாக அரைவயிறு உணவு உட்கொள்ள வேண்டும். சுலபமாக ஜீரணிக்கக் கூடிய உணவையே ஆகாரமாகக் கொள்வது நல்லது. இது எங்கள் அனுபவம். காலையில் எழுந்து மலம் கழித்து காலைக் கடன்களை முடித்து, வெறும் வயிற்றுடன் பத்மாசனம் போட்டு முதுகுத் தண்டு நிமிர்ந்து இருக்குமாறு அமர்ந்து மூச்சை ஒரு பக்கம் லேசாக இழுத்து ஸ்தம்பித்து, சிறிது நேரம் நிறுத்தினால் பிராணன் துடிக்கும், ரத்தம் சுத்தி ஆகும், நன்றாகப் பசி வரும். உடல்நிலை யோகாப்பியாசத்திற்குத் தகுந்த உடம்பாக இருக்க வேண்டும். நோயுள்ளவர்கள் பயிற்சி செய்தால் வேறுவிதமான சிக்கல்கள் தோன்ற வாய்ப்பு உண்டு. யோகாப்பியாசத்தால் சில நோய்கள் நீங்குவதற்கும் வாய்ப்புண்டு.

    அதற்கு தக்கபயிற்சி உள்ள உண்மைப் பொருள் அறிந்தவர்கள் வழி காட்டுதலாக அமையவேண்டும். அதற்கு முன்ஜென்ம புண்ணியமும் அருள் பலமும் இருக்க வேண்டும். சிலர் செடி கொடிகளைச் சாப்பிடச் சொல்வார்கள். சிலர் தண்ணீருக்குள் தியானம் செய்யச் சொல்வார்கள். மனைவி மக்களை விட்டுவிட்டு, காடு, மலையெல்லாம் திரிவார்கள். இவையெல்லாம் சரியான முறை அல்ல.

    உடம்பை மையமாகக் கொண்டதே ஞானம். தவம் மேற்கொள்பவர்கள் அதிகமாக போகத்தில் ஈடுபடுதல் கூடாது. வரம்புமீறி தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் நோய்வாய்ப்படு தலுக்கு வாய்ப்பு உண்டு, இல்லறத்தில் இருந்தே உடலைப் பக்குவ நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும். புண்ணியத்தைத் தொடர்ந்து செய்யவும், இல்லறத்தை நடத்தவும், தவத்தை மேற்கொள்ளவும், உடல்நலம் முக்கியமானது. பல சிந்தனைகள் இருந்தாலும் பிரச்சினைகள் இருந்தாலும் தொடர்ந்து பூஜை செய்து மனதை ஒருநிலைப்படுத்தும் பக்குவம் வரவேண்டும்.

    மற்றவற்றை தானாக தலைவன் பார்த்துக்கொள்வான். நாம் கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. வைராக்கியத்துடன் உலக நடையில் இருந்தே பூஜை செய்து வந்தால், மலைமடுவில் உள்ள தண்ணீரில் தங்கியுள்ள மீன், திடீரென்று ஒருநாள் வரும் மழைநீரில் வெளியேறிவிடும். அதுபோல் கர்மவினை முடிந்தவுடன் ஞானிகளின் திருவடியை அடைவார்கள்.

    தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்பு பத்து நிமிடம் பூஜை செய்தால் பண்புள்ள புத்திர பாக்கியம் உண்டாகும். தவத்திற்குத் தேவையான பொருள் உதவி இல்லையென்றாலும், பிரச்சனைகள் இருந்தாலும், எதிரிகளால் தொல்லைகள் இருந்தாலும், எல்லா இடையூறுகளையும் பொறுத்துக் கொண்டு நாம் பிறருக்கு நன்மை புரிவதே தவத்திற்குச் சிறந்த இலக்கணமாகும். முன் செய்த நல்வினை இருந்தால் தவம் கைகூடும். அவர்களுக்கே மூச்சுக் காற்று வசப்படும். மற்றவர்களுக்கு முழுமையான பலன் தராது. பாடுபட்ட அளவு மறுபிறப்பில் பயன்தரும். தலைவனை அறிந்து பூஜை செய்து தவம் மேற்கொள்ளவேண்டும். தவத்திற்கு ஏற்ற சூழல் நமக்கு அமையவில்லையெனில் அதற்காக ஏங்க வேண்டாம். உடலையும் உயிரையும் அறிந்து, உடம்பிலுள்ள காமதேகம் நீங்குவதற்காக யார் தவம் மேற்கொள்கின்றார்களோ அவர்களுக்கு உணவு கொடுப்பதும் ஒரு தவமே. தவசிகள் மனம்மகிழ்ந்து ஒருமுறை ஒருவர் வீட்டில் உண்டால் மூன்று புவனத்தார் உண்டதற்கும், ஆயிரத்தி இருபத்து நான்கு அண்டங்களில் உள்ளவர்கள் உண்டதற்குமான புண்ணியம் சன்மார்க்கவாதிகளுக்கு உணவு அளிப்பதும் புண்ணியம் ஆகும். கிடைக்கும்.

    அதிக சொத்துக்கள் உள்ளவர்கள் மேலும் பொருள் வெறி கொண்டு பணம் ஈட்டுவதில் குறியாய் இருப்பார்கள். உலகியல் கடமைகளை மட்டுமே செல்வார்கள். பொருள் பற்றினால் ஆன்மாவிற்கு எந்தப் பயனும் இல்லை. பொருள் சேர்ப்பது அவன் சாகும் வரை மட்டுமே. ஆனால் தவம் அவனுக்கு உயர்ந்தநிலையை உருவாக்கி முக்தியடையச் செய்யும். தவம் செய்கின்ற மக்களுக்கு எல்லா நன்மைகளும் வல்லமைகளும் உண்டு.

    தவத்திற்கு எமனை வெல்லும் சக்தி உண்டு, பகைவர்களை அடக்கலாம். தவசியின் மனம்மகிழும்படி நடக்கும் மக்களை, தொண்டனை, சீடனை தவசி மனமுவந்து நீடூழி வாழ வைக்கலாம். தவத்தின் வலிமையால், யாராலும் வெல்ல முடியாத காமத்தை வெல்லமுடியும். தவம் என்பதே விரதம், வைராக்கியம், நோன்பு ஆகும். புலால் உண்ணாது இருப்பது ஒருவகை நோன்பு. உயிர்க்கொலை செய்யாது இருப்பது ஒருவகை விரதம். தொடர்ந்து தடைபடாமல் ஞானிகளைப் பூஜைசெய்வது ஒருவகை வைராக்கியம்.

    விருந்தை உபசரிப்பது, பசியாற்றுவது, ஞானிகளின் நூலை படிப்பது, பிறருக்குத் துன்பம் செய்யாது இருப்பது, உடலைக் காப்பாற்றிக்கொள்வது, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வது ஆகிய எல்லா செயல்களும் தவமாகும். தவத்தை மேற்கொண்டு, மானிடப்பிறவியைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும். இவர்களே பேரறிவு படைத்த இறைவனை மனம் உருகி தியானம் செய்வார்கள். தன்உடம்பை காப்பதற்காக பிறஉயிர்களின் உடம்பை உண்ணுதல் கூடாது. பிற உயிர்களை கொலை செய்வதால் பாவம் சூழ்ந்து நோய்வாய்ப்பட்டு துன்பங்களை அனுபவிக்க நேரிடும். தலைவனின் அருளைப் பெற, பிற உயிர்கள் மீது நாம் அன்பு செலுத்த வேண்டும். பிற உயிர்களைக் கொலை செய்கின்றவரின் மனம் கொலைக் கருவிப் போன்றது. பிற உயிர்களைக் கொலைசெய்யாதவர்களை எல்லா உயிரினங்களும் வாழ்த்தும். அவர்கள் தலைவனின் அருளைப் பெறுவார்கள்.

    • வருகிற 7-ந்தேதி விநாயகர் சதுர்த்தி.
    • பிள்ளையாரை ஸ்ரீசித்தி விநாயகர் என அழைப்பார்கள்.

    விநாயகர் சதுர்த்தி வருகிற 7-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் கும்பகோணம் செல்பவர்கள் அருமையான சில விநாயகர் தலங்களை தரிசனம் செய்து வரலாம்.

    நமது நற்காரியங்கள் நல்லபடியாக நிறைவேற விநாயகரை வழிபடச் சொல்கின்றன புராணங்கள். காரியங்கள் சித்தி பெற அருளும் தெய்வம் அவர். உள்ளத்தில் நல்லதையே நினைக்கச் செய்து அந்த நற்செயல்களை ஒரு குறையும் இன்றி திறம்படச் செய்து முடிக்கும் ஆற்றலை நல்குவதால் பிள்ளையாரை ஸ்ரீசித்தி விநாயகர் என அழைப்பார்கள்.

    அந்த வகையில் கும்பகோணத்துக்கு வட மேற்கில் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் மண்ணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருப்புறம்பியத்தில் பிரளயம் காத்த விநாயகர் உள்ளார்.

    கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர், இன்னம்பர் வழியாக இந்த தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

    ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் கடல் பொங்கி எழுந்து உலகை அழிக்கும் காலமே 'ஊழி' எனப்படும். இதை, 'யுகப்பிரளய' காலம் என்றும் அழைப்பார்கள். அப்போது தோன்றும் பெரும் ஊழிக் காற்றாலும், தீயாலும் உலகம் அழிக்கப்படும்.

    பின்னர், உலகத் தோற்றத்துக்கான தாண்டவத்தை மேற்கொள்வார் இறைவன். இவ்வாறு ஒரு யுகம் முடிந்து புதிய யுகம் துவங்கும் இடைப்பட்ட நேரத்தில் சிவபெருமான் ஆடுவது பிரளய தாண்டவம் எனப்படும்.


    சிவபெருமானைப் போலவே விநாயகரும் பிரளயத்தில் இருந்து மக்கள் அனைவரையும் காத்தருள்கிறார். இவரை பிரளயம் காத்த விநாயகர் என்பார்கள். இதே பெயருடன் இவர் அருளும் இடம்தான் திருப்புறம்பியம்.

    புறம் வெளி; பயம்- நீர்; பிரளய வெள்ளம் ஊரில் புகாமல் நின்றமையால் புறம்பயம். அந்த பெயர் புறம்பியம் என்று மருவி விட்டது. அதாவது பிரளயத்துக்கு புறம்பாய் இருந்ததால் இப்பெயர் வந்தது.

    வரலாற்றுச் சிறப்பு மிக்க திருப்புறம்பியப் போரில் முதலாம் ஆதித்த சோழன் வெற்றி பெற்று சோழ சாம்ராஜ்ஜியத்தை நிறுவினான். இந்த தலத்தில் அவன் திருப்பணி செய்த கோவிலுக்கு ஆதித்தேச்வரம் என்று பெயர்.

    செட்டிப் பெண் ஒருத்திக்காக இந்த தலத்தில் உள்ள லிங்கம், வன்னி மரம், கிணறு, மடப்பள்ளி அனைத்தும் மதுரையில் சாட்சி சொன்னதாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

    எனவே, இறைவன் பெயர் ஸ்ரீசாட்சி நாதர் எனும் சாட்சீஸ்வரர். அம்பிகை பெயர் கரும்படு சொல்லி.

    ஒரு பிரளயத்தின்போது, சிவபெருமானின் ஆணைப்படி ஸ்ரீவிநாயகப் பெருமான் அந்த பிரளயத்தை அடக்கிக் காத்தாராம்.

    அப்போது வருணன், கடலில் உள்ள பொருட்களான சிப்பி, சங்கு முதலானவற்றைக் கொண்டு விநாயகரை வழிபட்டார். பிரளயத்தில் இருந்து ஊரை காத்ததால் இங்குள்ள கணபதிக்கு ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர் என்று பெயர்.

    கோவிலின் மகா மண்டபத்துக்கு வெளியே தென்கிழக்கில் பிரளயம் காத்த விநாயகர் கோவில் உள்ளது. வெண்மையுடன் சந்தன நிறம் கொண்ட திருவுருவம். இவரது திருமேனியில் சங்கும் சிப்பியும் காணப்படுகின்றன.

    அடுத்த வாரம் (செப்டம்பர் 7-ந்தேதி) விநாயகர் சதுர்த்தி அன்று இவருக்கு குடம் குடமாகத் தேன் அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யும் தேன் முழுவதையும் பிள்ளையார் உறிஞ்சி விடுவார். இவரை தேன் உறிஞ்சும் விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.


    மற்ற நாட்களில் இவருக்கு அபிஷேகம் கிடையாது. தேன் கெட்டியான திரவம். எதன் மேல் வைத்தாலும் தேன் உறிஞ்சப்பட மாட்டாது. ஆனால், இங்கு மட்டும் தேனை முழுவதும் விநாயகர் ஈர்த்துக் கொள்ளும் அற்புதம் நடக்கிறது.

    அரசமர விநாயகர் என்ற பெயரில் ஆனைமுகன் அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

    ஆரம்பத்தில் வெட்டவெளியில் பின்னிப்பிணைந்து வளர்ந்திருந்த ஆல, அரசமரங்களுக்கு அடியில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருந்த விநாயகருக்கு காலப்போக்கில் கிழக்கு நோக்கி ஆலயம் உருவானது.

    உள்ளே நுழைந்ததும் மகாமண்டபத்தைத் தொடர்ந்து கருவறை நுழைவாயிலின் இடதுபுறம் சுவாமிநாத சுவாமியும், வலதுபுறம் ஐயப்ப சுவாமியும் அருள்பாலிக்கின்றனர்.

    அழகான பிரகாரத்தில் நாகர்கள் மற்றும் தட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி, திருக்குளத்தைப் பார்த்த நிலையில் அமர்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட காட்சி அபூர்வம் என்கின்றனர் பக்தர்கள்.

    பிரகாரத்தில் மேல்புறம் சனீஸ்வரரும், வடபுறம் துர்க்கை அம்மனும் அருள்கின்றனர். தலவிருட்சமான ஆல, அரச மரத்தை சுற்றி ஏராளமான நாகர் சிலைகள் உள்ளன.

    நவகன்னியருக்கும் இந்த ஆலயத்திற்கும் தொடர்புடைய புராணக்கதை ஒன்று உண்டு.

    ஒருசமயம், நவகன்னியருக்கு ஓர் ஆசை வந்தது. தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் யாவும் தங்களை விட்டு விலகி, தாங்கள் தூய தேவதைகளாக விளங்க வேண்டும் என்பதுதான் அது.

    சிவபெருமானிடம் சென்று "பிரபோ, நாங்கள் செய்த பாவங்கள் யாவும் விலக வேண்டும். இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டனர்.

    'கும்பகோணம் செல்லுங்கள். அங்குள்ள குளத்தில் நீராடி, குளத்தின் வடகரையில் இருக்கும் அரசரடி விநாயகரை வழிபடுங்கள். உங்கள் பாவம் யாவும் விலகும் என்றார் பரமன்.

    அதன்படியே நவ கன்னியர் பூலோகம் வந்தனர். மகாமக குளத்தில் நீராடினர். அருகே வடக்கு திசையில் அரச மரத்தடியில் அருள்பாலிக்கும் விநாயகரை வழிபட்டனர். பாவ விமோசனம் பெற்றனர். இது செவிவழிக்கதை.

    விநாயகர் சதுர்த்தியின்போது இங்கே 10 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று வீதியுலாவும் உண்டு.

    நவராத்திரி நாட்களில் இங்குள்ள துர்க்கைக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்கின்றனர். விஜயதசமி அன்று துர்க்கை அம்மன் வீதியுலா வருவதுண்டு. சித்திரையில் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று இங்கு விசேஷ ஹோமம் நடைபெறுவது உண்டு. அதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கு பெறுவர்.

    தன்னை வணங்கும் பக்தர்களின் சகல பாவங்களையும் போக்கி, அவர்களுக்கு நற்பேறு அருள்கிறார் இங்குள்ள அரசமர விநாயகர்.

    கும்பகோணம் அருகே பாபநாசத்தில் இருக்கும் இரட்டை பிள்ளையாரும் சக்தி வாய்ந்தவர்கள். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விநாயகர்கள் தங்களை தாங்களே வெளிப் படுத்திய அற்பு தம் நடந்தது.

    ஒரு நாள் இரவு தன் பக்தரான முதியவர் ஒருவரின் கனவில் தோன்றினார் பிள்ளையார். குடமுருட்டி ஆற்று வெள்ளம் மூலம் நான் உங்கள் ஊருக்கு வந்துள்ளேன். என்னை அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்யவும், நான் இந்த ஊரையும், என்னை வழிபடும் மக்களையும் காப்பேன்! என்றார்.

    திடுக்கிட்டு எழுந்தார் பெரியவர். 'தான் கண்டது ' கனவா? உண்மையா? புரியவில்லை.

    பொழுது விடிந்ததும் ஊர் மக்களிடம் தான் கண்ட கனவை சொன்னார். பின் ஊர் மக்களை அழைத்துக்கொண்டு ஆற்றுக்குச் சென்றார்.

    இரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வடிந்திருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார்கள். ஓரிடத்தில் ஒன்றல்ல, இரண்டு பிள்ளையார் சிலைகள் இருந்தன. அனைவருக்கும் ஆச்சரியம்!

    ஊர் மக்கள் உதவியுடன் அந்தச் சிலைகள் எடுத்து வரப்பட்டு ஓர் அரச மரத்தடியில் நிறுவப்பட்டது. காலப்போக்கில் அங்கு கருவறையுடன் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டு, அதில் இரட்டைப் பிள்ளையார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டார்கள்.

    அந்த தலம், பாபநாசம். தற்போது ஊரின் மேல வீதியும், வடக்கு வீதியும் சந்திக்கும் இடம். வடமேற்கு மூலை லட்சுமி குடியிருக்கும் இடம் என்பார்கள். அந்த இடத்தில்தான் இரட்டைப் பிள்ளையார் தரிசனம் கிடைக்கிறது.

    ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தென் திசையிலும் ஒரு வாயில் உள்ளது. பக்தர்கள் பெரும்பாலும் இந்த வாயிலையே பயன்படுத்துகின்றனர்.

    ஆலய முகப்பைத் தாண்டியதும் மகா மண்டபம், பலிபீடம், மூஞ்சூறு ஆகியவை உள்ளன, அர்த்த மண்டப நுழைவாயிலின் இடது புறம் வள்ளி, தெய்வானையுடன் தனி சன்னதியில் முருகன் அருள்பாலிக்க, எதிரே மயிலும் பலி பீடமும் உள்ளன.

    வலதுபுறம் ஆதி கும்பேஸ்வரரின் தனிச்சன்னதி உள்ளது. இவர் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டவர். வடக்கில் மங்கம்மாளும், வடகிழக்கு மூலையில் நவகிரகங்களும் அருள்கின்றன.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 நாட்கள் உற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அது சமயம் ஹோமம் சிறப்பு ஆராதனை, விநாயகர் வீதியுலா எல்லாம் உண்டு. சங்கடஹர சதுர்த்தியின் போதும், வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சியும் நடைபெறுகிறது.

    திருமணம் வேண்டி காத்திருப்போர் இங்குள்ள இரட்டை பிள்ளையாருக்கு 9 வகை தானியங்களால் அர்ச்சனை செய்தால் அவர்களுக்கு விரைந்து திருமணம் நடக்கிறது என்பது நம்பிக்கை. தவிர இங்கு நடைபெறும் ராகு கால பூஜை யில் கலந்துகொண்டால் கடன் தொல்லை களில் இருந்தும், பில்லி சூனிய பாதிப்புகளில் இருந்தும் மீண்டு நலம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    • லதாவே குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டியதாயிற்று.
    • திரைக்கதையுடன் திரைப்படப் பாடலும் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.

    உலகின் ஏதோ ஒரு பகுதியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வருடத்திற்கு 365 நாட்களும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு இந்தியக் குரல் யாருடையது தெரியுமா? நைட்டிங்கேல் என்று பாராட்டப்படும் பாரத் ரத்னா லதா மங்கேஷ்கரின் குரல் தான் அது!

    கடும் உழைப்பால் உயர்ந்து பாரத் ரத்னா பட்டத்தைப் பெற்ற இருவரின் வாழ்க்கை ஒரு அற்புதம் தான்.

    பிறப்பும் இளமையும்: லதா மங்கேஷ்கர் 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதியன்று இந்தூரில் ஒரு அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் தீனநாத் மங்கேஷ்கர் மராத்திய மொழியிலும் கொங்கணி மொழியிலும் சிறந்த பாடகர்.

    ஒரு நாடக நடிகரும் கூட. கோவாவில் உள்ள மங்கேஷ் என்ற தனது புராதன கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு மங்கேஷ்கர் என்பதைத் தன் பெயரில் அவர் வைத்துக் கொண்டார். தாயார் செவந்தி என்ற சுதாமணி குஜராத்தைச் சேர்ந்தவர். குஜராத்திய நாட்டுப்புறப் பாடல்களில் வல்லவர்.

    லதாவிற்கு சூட்டப்பட்ட பெயர் ஹேமா. ஆனால் பின்னால் அவரது தந்தை தனது நாடகத்தில் வரும் பாத்திரமான லதிகா என்பதை ஒட்டி அவருக்கு லதா என்று பெயரை மாற்றினார். குடும்பத்தில் லதாவே மூத்த குழந்தை. அவருக்கு மூன்று தங்கைகளும் ஒரு தம்பியும் உண்டு.

    வறுமையில் வாட்டம்: தந்தையாரிடமிருந்து இசையைக் கற்ற லதா ஐந்தாம் வயதிலிருந்தே தந்தையாருடன் கூட இருந்து அருமையாகப் பாட ஆரம்பித்தார். லதாவிற்கு 13 வயதே ஆகும் போது அவர் தந்தை மரணமடைந்தார். குடும்பம் வறுமையில் வாட ஆரம்பித்தது. லதாவே குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டியதாயிற்று.

    1942-ல் ஒரு மராத்தியத் திரைப்படத்தில் (கிதி ஹஸால் என்ற படம்) அவர் ஒரு பாடலைப் பாடினார். ஆனால் இறுதியில் அது 'வெட்டப்பட்டது; படத்தில் இடம் பெறவில்லை.

    தொடர்ந்து ஆறு வருடங்கள் கடும் போராட்ட வருடங்களாக அமைந்தன. ஏராளமான எதிர்மறை விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. ஆனால் தன் திறமையிலும் உழைப்பிலும் நம்பிக்கை கொண்டிருந்த லதா விடவில்லை; வெற்றியே பெற ஆரம்பித்தார்.

    1945-ல் லதா மும்பைக்குக் குடி பெயர்ந்தார்.

    இந்தி திரையுலகத்தில் நுழைவு: லதாவிற்கு இசை அமைப்பாளர் குலாம் ஹைதர், 'மஜ்பூர்' (1948) என்ற படத்தில் ஒரு வாய்ப்பை அளித்தார். இந்தி திரையுலகில் நுழையும் வாய்ப்பு கிடைக்கவே கெம்சந்த் பிரகாஷ் இசை அமைத்த மஹால் (1949) உள்ளிட்ட படங்களில் அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. லதாவின் குரல் மிகவும் சன்னமாக இருக்கிறது என்ற ஒரு இசையமைப்பாளரின் ஆட்சேபணைக்கு குலாம் ஹைதர் கூறிய பதில்: "ஒரு நாள் லதாவின் காலில் விழுந்து என் படத்தில் பாடுங்கள் என்று எல்லோரும் சொல்லப் போகிறார்கள்' என்பதே. பின்னால் தனது 84வது பிறந்த நாள் விழாவில் லதா கூறியது: "உண்மையில் என்னை ஆதரித்து உருவாக்கியவர் குலாம் ஹைதரே"!

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    திலிப்குமாரின் சந்தேகம்: ஹைதர் எடுத்த படத்தில் லதாவின் இசையை இசையமைப்பாளர் நவுஷத் கேட்டார். உடனே தனது அடுத்த படத்தில் அவரைப் பாட வைக்கலாம் என்று யோசனை கூறினார். அப்போது இந்தி திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருந்த திலிப்குமார் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். ஒரு மராத்தியப் பெண்ணுக்கு உருது உச்சரிப்பு எப்படி சரியாக வரும் என்பதே அவரது கேள்வி. இந்த கடுமையான விமர்சனத்தைக் கேட்ட லதா மனம் தளரவில்லை. கடும் உழைப்பை மேற்கொண்டார். உருது உச்சரிப்பை தக்க ஒருவரிடம் கேட்டு முறையாகப் பயின்றார்.

    1949-ல் அந்தாஸ் படம் வெளியானது. அதில் ஹிட்டான பாடலைப் பாடியவர் லதா தான்! அந்தப் பாடலில் உருது மொழி உச்சரிப்பைக் கேட்ட திலிப்குமார் அசந்து போனார். பாடியவர் யார் என்றால் அவர் விமரிசித்த அதே லதா தான்! உடனே தான் கூறிய வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாகக் கூறினார் அவர்.

    அந்த வருடம் வெளியான அவர் பாடல் இடம் பெற்ற ஐந்து படங்களும் இந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டின. திரைக்கதையுடன் திரைப்படப் பாடலும் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. மஹால் படத்தில் வந்த ஆயகா ஆனேவாலா என்ற பாடல் எங்கும் ஒலித்தது!

    பாடகர்களுக்கு லதாவின் பேருதவி: அந்தக் காலத்தில் கிராமபோன் இசைத்தட்டில் பாடியவர் பெயர் இடம் பெறாது. ஒன்று திரைப்படத்தில் அந்தப் பாடலைப் பாடிய கதாபாத்திரத்தின் பெயர் இடம் பெறும் அல்லது அதைப் பாடிய நடிகையின் பெயர் இடம் பெறும்.

    இது லதாவிற்குப் பெரும் வருத்தத்தை அளித்தது. பாடியவர் பெயரைப் போடுமாறு அவர் வேண்டினார். ஆனால் தயாரிப்பாளர்கள் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.ஆனால் மஹால் படத்தில் இடம் பெற்ற பாடலைக் கேட்ட ரசிகர்கள் சும்மா இருக்கவில்லை.

    ஆல் இந்தியா ரேடியோவில் 'ஆயகா' பாடலைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் இதைப் பாடியது யார் என்று திரும்பத் திரும்பக் கேட்க வானொலி நிலையம் படத்தின் தயாரிப்பாளரை நாடி லதாவின் பெயரைக் கேட்டு ஒலிபரப்ப ஆரம்பித்தது. காமினி என்ற கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்டிருந்த இசைத்தட்டுகள் இனி அப்படி பெயரைப் போடாமல் பாடியவரின் பெயரைப் போட ஆரம்பித்தன. லதாவிற்கு கிடைத்த பெரும் வெற்றி இது. பாடியவருக்கு உரிய மதிப்பைக் கொடுத்து பாடகர்களின் பெயரை இசைத்தட்டுகளில் போட வைத்தவர் அவரே!

    இசையே தெய்வம்: லதா மங்கேஷ்கருக்கு இசை ஒரு தொழில் அல்ல; அதுவே அவருக்கு தெய்வம்! இசையை கடவுளின் குரல் என்றார் அவர். அவரது அற்புதமான குரலைக் கேட்ட ரசிகர்கள் அவரது பாடல் இடம் பெற்ற படங்களை வெற்றிப் படங்களாக்கினர். ஒரு நாளைக்கு பத்துப் பாடல்களை ரிகார்ட் செய்யும் அளவுக்கு அவர் உயர்ந்தார்; அதற்கான கடும் உழைப்பையும் பயிற்சியையும் அவர் விருப்பத்துடன் மேற்கொண்டார்.

    பஜனை, கஜல்கள் ஆகியவற்றுடன் சிக்கலான இசை அமைப்புகள் கொண்ட பாடல்களை அவர் சாதாரணமாகப் பாடினார். ராகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்களை அவர் தன் குரல்வளத்தால் மெருகேற்றினார். தொடர்ந்து பல பிலிம் பேர் விருதுகளைப் பெற்றார்.

    மராத்தி, இந்தி மொழிகளில் மட்டுமல்லாது கன்னடம், தமிழ், தெலுங்கு, வங்காளம், பஞ்சாபி, குஜராத்தி, ஆங்கிலம், ரஷிய மொழி உள்ளிட்ட இருபது மொழிகளில் அவர் பாடியுள்ளார்..

    ஆகப் பெரும் இசையமைப்பாளர்களான எஸ்.டி.பர்மன், சலில் சவுத்ரி, ஆர்.டி.பர்மன், சங்கர்-ஜெய்கிஷன், சி. ராமச்சந்திரா உள்ளிட்ட அனைத்து இசை அமைப்பாளர்களும் அவரை விரும்பி வரவேற்றுப் பாட வைத்தனர். அதே போல சிறந்த பாடலாசிரியர்களான குல்ஜர், ஷகீல் பதாயுனி, ஆனந்த் பக்ஷி உள்ளிட்டோரும் அவர் திறமையை உணர்ந்து பாடல் வரிகளை அமைத்துப் புகழ் பெற்றனர்.

    புகழ் பெற்ற பாடகர்களான மன்னாடே, முகேஷ், ஹேமந்த் குமார், முகம்மத் ரபி, கிஷோர் குமார் உள்ளிட்டோருடன் அவர் பாடிய பாடல்கள் காலத்தை வென்ற பாடல்களாக ஆகி விட்டன!

    லதாவே பாடல்களை இயற்றியுள்ளார்; இசைஅமைப்பாளராகவும் திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

    குடும்பம்: லதா திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். ஆனால் தனது குடும்ப உறுப்பினர்கள் மீது அளவிலாப் பாசம் கொண்டிருந்தார்.

    ராஜ்ய சபா உறுப்பினர்: 1999-ல் அவர் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கென அவர் சம்பளத்தையோ டெல்லியில் தரப்படும் வீட்டையோ பெறவில்லை.

    பாரத் ரத்னா: ஏராளமான விருதுகளைத் தன் வாழ்நாளில் அவர் பெற்றார். 1969-ல் பத்ம பூஷன் விருதையும் 1999-ல் பத்ம விபூஷன் விருதையும் அவர் பெற்றார்.

    2001-ம் ஆண்டு மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருதை அவருக்கு இந்திய அரசு வழங்கி கவுரவித்தது.

    ஏழைகளுக்கு உதவி: 2001-ல் அவர் புனாவில் மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையை நிறுவி ஏழைகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார். காஷ்மீரில் 2005ல் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அவர் நிதி உதவி அளித்தார்.

    எத்தனை பாடல்களை அவர் பாடினார்?

    லதா எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார் என்பது பற்றிய தொடர் விவாதம் கின்னஸ் ரிகார்ட் 25000 பாடல்களை அவர் பாடியுள்ளார் என்று தெரிவித்ததையொட்டி எழ ஆரம்பித்தது.

    லதாவோ தான் பாடிய பாடல்களுக்கான எண்ணிக்கை குறிப்பைத் தான் குறித்து வைத்துக் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.

    சிலர் 20000 பாடல்கள் என்று சொல்ல இன்னும் சிலரோ 30000 பாடல்கள் என்று சொல்ல இந்த விவாதம் தொடர் விவாதமாக ஆகி விட்டது!

    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஏராளமான நாடுகளில் அவர் குரல் இசைத்துக் கொண்டே இருக்கிறது.

    அவரது பாடல்களைக் கேட்டு தங்களின் அபிப்ராயத்தைத் தெரிவிப்போர் மிகுந்த மன நெகிழ்வுடன், "இது சிறு வயதில் நான் கேட்ட பாடல். இன்னும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்", இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மறைந்து விட்ட எனது தாயாரின் நினைவு வருகிறது". "இந்தப் பாடல் என் தந்தையாருக்குப் பிடித்தமானது; இதைப் கேட்காமல் அவர் உறங்க மாட்டார்", 'எனக்கு பாடப்படும் பாடலின் மொழி தெரியாது, ஆனால் இந்த இனிய குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்' என்பன போன்ற ஆயிரக்கணக்கான விமர்சனங்களைப் பதிவிடுகின்றனர்

    பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வாழ்வில் நல்ல விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய இசை ராணி அவர் என்பதில் ஐயமே இல்லை!

    மறைவு: 2022-ல் ஜனவரி மாதம் 8-ம் தேதி அவருக்கு கோவிட் -19 நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிய வந்தது. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    2022 பிப்ரவரி 6-ம் தேதி அவர் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 92. பல நாடுகளின் பிரதம மந்திரிகள், மற்றும் தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்தனர். மும்பையில் அரசு மரியாதையுடன் அவரது உடல் எரியூட்டப்பட்டது. அவரது அஸ்தி கோதாவரி நதியில் கரைக்கப்பட்டது.

    அனுபவ மொழிகள்:

    தனது அனுபவத்தின் அடிப்படையில் அவர் கூறிய பொன்மொழிகள் பல. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.

    ஒவ்வொரு பாடலிலும் எனது ஒரு துளி உள்ளது. எனது உணர்வுகள், அனுபவங்கள், கனவுகள் ஆகியவற்றின் ஒரு சிறிய பகுதி உள்ளது. பாடுவது என்பது எனது தொழில் மட்டுமல்ல, அது எனது உயிர். அது எனது வாழ்க்கை முறை!

    இசைக்கு எல்லைகளே இல்லை; அது ஆன்மாவின் மொழி!

    இந்தி திரையுலகின் பிரபலமான நடிகரும் பாடகரும் தயாரிப்பாளருமான கிஷோர் குமார் லதாவைப் பற்றி மிகச் சரியாக இப்படிக் கூறினார்: "லதா மங்கேஷ்கரைப் புகழ்வது என்பது சூரியனுக்கு முன் அகல் விளக்கைக் காட்டுவதைப் போலத் தான்!"

    இந்த அவரது கூற்று லதா மங்கேஷ்கரைப் பற்றிய சரியான விளக்கம் தான், இல்லையா!

    • அடுத்ததாக இவர்கள் உட்கொள்கிற மருந்துகள்.
    • இரண்டாவது ரத்த அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்கிற மாத்திரைகள்.

    பெண்களுக்கான பாலியல் உறவு பிரச்சனைகள், அவர்களின் வாழ்க்கையை பாதிக்கின்ற ஒரு விஷயம். பொதுவாக 40 சதவீதம் பெண்கள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சனை பெண்களின் மனம், உடல் ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை, அன்றாட வாழ்க்கை முறைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன? இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

    பெண்கள் அதிகம் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகள்:

    பாலியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எவ்வளவு நாட்கள் இந்த பிரச்சனை இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக 6 மாதத்திற்கு மேல் இந்த பிரச்சனை இருந்தால் இதற்கு முக்கியமாக தீர்வு காண வேண்டும். பொதுவாக பாலியல் பிரச்சனைகளை 3 விதமாக பிரிக்கலாம். முதலாவது பாலியல் ஆர்வக் குறைவு எனப்படும் லோ டிசையர் அன்ட் லோ லிபிடோ. இதோடு சேர்ந்து பாலியல் எழுச்சி பிரச்சனை, இது முதல் பிரச்சனை. இதுதான் அதிகமாக பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சனையாகும். இதை இன்ட்ரஸ்ட் பிரச்சனை என்று சொல்கிறோம்.

    இரண்டாவது பிரச்சனை, பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை என்பதாகும். மூன்றாவது பிரச்சனை பாலியல் உறவு கொள்ளும் பொழுது ஏற்படுகிற வலிகள். இது ஜெனிட்டோ பெல்விக் வலி பிரச்சனை. இந்த 3 பிரச்சனைகள் தான் பெண்களை பாதிக்கிற பாலியல் பிரச்சனைகள். இவற்றுக்கான தீர்வு என்ன என்பதை பார்க்கலாம்.

    பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைக்கு வரும்போது முதலில் அவர்களுக்கான ஒரு தெளிவான கவுன்சிலிங் தேவை. அவர்களுக்கான பிரச்சனை என்ன? எவ்வளவு காலம் இருக்கிறது? மன ரீதியான பிரச்சனைகள் இருக்கிறதா? குடும்ப உறவுகள், கணவன்-மனைவி உறவுகள், அவர்களுடைய வாழ்க்கை பிரச்சனைகள், குடும்ப ரீதியான பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை முறையான அணுகுமுறையுடன் கண்டுபிடிக்க வேண்டும்.

    பல நேரங்களில் இந்த பாலியல் பிரச்சனைகள், மனரீதியான மற்றும் சுற்றுப்புற சூழலில் ஏற்பட்ட பிரச்சனைகள், குடும்ப உறவுகளால் ஏற்பட்ட பிரச்சனைகளினால் வருவது தான் முக்கியமான காரணமாக இருக்கும். இந்த காரணங்களுக்கான தீர்வு, முதலில் அவர்களுடைய குடும்ப பிரச்சனைகளை சரி செய்வதற்கு கவுன்சிலிங் தான் மிக முக்கியமான முதல் சிகிச்சை முறை.

    இரண்டாவது பல பெண்களின் பாலியல் பிரச்சனைகளுக்கான அடிப்படையான விஷயம், உடல் ரீதியான நோய்கள் மற்றும் அவர்கள் உட்கொள்கிற மருந்துகள் ஆகும். உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்தால் அதனை சரி செய்வதன் மூலமாக இவர்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண முடியும்.

    பாலியல் பிரச்சனைக்கு மருந்துகள் மூலம் தீர்வு:

    அடுத்ததாக இவர்கள் உட்கொள்கிற மருந்துகள். பொதுவாக இருமல், காய்ச்சல், சளி ஏற்படும் பொழுது எடுத்துக்கொள்கிற சாதாரண மாத்திரை கூட பாலியல் பிரச்சனைகளை உருவாக்கலாம். இது உலர்வு தன்மையை உருவாக்கலாம். இதனால் உறவு கொள்வதில் ஆர்வ குறைபாடுகள் ஏற்படலாம். இரண்டாவது ரத்த அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்கிற மாத்திரைகள். மூன்றாவது மன அழுத்தத்திற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் அனைத்துமே பாலியல் உறவு கொள்வதற்கான ஆர்வத்தை குறைக்கக்கூடிய மருந்துகள்.

    இந்த மருந்துகளை எடுத்துக் கொள்கிற பெண்கள், அவர்களுடைய மருத்துவரிடம் இந்த பிரச்சனைக்கான சிகிச்சை முறைகளுக்கான மருந்துகளை மாற்றிக் கொடுக்க சொல்ல வேண்டும். தேவைப்பட்டால் இதனோடு வேறு சில மருந்துகளையும் கொடுப்பது மிகச்சிறந்தது. பொதுவாக பெண்களுக்கு பாலியல் ஆர்வக் குறைவுக்கு ஒரே ஒரு மருந்து என்பது பிளிபான்செரின் என்ற மருந்து தான். இந்த மருந்துகள் நமது நாட்டில் கிடைப்பதில்லை, வெளிநாடுகளில் கிடைக்கிறது. இந்த ஒரு மருந்து மட்டுமே பாலியல் உறவு ஆர்வ குறைபாடுகள் ஏற்படுகிற பெண்களுக்கு ஒரு தீர்வான மருந்தாக கருதப்படுகிறது. இந்த மருந்தை பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் உறவுக்கு முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிற பெண்களுக்கு இந்த மருந்துகள் கொடுக்கக் கூடாது. இவை தவிர வேறு சில மருந்துகளும் கொடுக்கப்படுகிறது. இவை பாலியல் உறவுகள் ஆர்வ குறைவுக்கு நல்ல தீர்வை கொடுக்கிறது.

    பொதுவாக பெண்களுடைய ஹார்மோன் குறைபாடுகளால் பாலியல் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கான தீர்வாக சில ஹார்மோன் மாத்திரைகள் கொடுப்பதன் மூலமாக பெண்களுக்கு பாலியல் பிரச்சனை குறைந்து நல்ல முறையில் உறவு கொள்ள முடிகிறது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவுகளால் இந்த பிரச்சனை ஏற்படும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை மாத்திரைகள் மூலமாக கொடுக்கலாம். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு பெண்ணுறுப்புகளில் ஏற்படுகிற உலர்வு தன்மைகளால் உறவுகளில் ஆர்வ குறைபாடுகள் ஏற்படலாம். இதற்கான தீர்வாக ஈஸ்ட்ரோஜன் கிரீம் பயன்படுத்தி அந்த இடத்தில் உலர்வு தன்மையை குறைக்கும் போது நல்ல தீர்வு கிடைக்கிறது.

    ஜெயராணி காமராஜ்

    ஜெயராணி காமராஜ்

    பெண்களின் எழுச்சி குறைபாடுகளுக்கான தீர்வு:

    பெண்களுக்கான தூண்டுதல் சரியான முறையில் இல்லாத காரணங்களாலேயே பல நேரங்களில் உச்சக்கட்டம் அடையாத நிலையில் பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்கள். உச்சக்கட்டம் அடைய முடியாத பெண்களுக்கு பெண் உறுப்பு பகுதியில் கிளைட்டோரஸ் மற்றும் ஜீஸ்பாட் தூண்டுதலை முறையாக கற்றுக் கொடுக்கும் பொழுது இந்த பிரச்சனைகளுக்கான தீர்வாக அமைகிறது. பெண்களுக்கான பாலியல் தூண்டுதல் பாயிண்ட்ஸ் சரியான முறையில் பெண்களுக்கு தெரியாததால் தம்பதியினரிடம் இந்த பிரச்சனைகள் அதிகமாக எதிர் நோக்கப்படுகிறது. பாலியல் தூண்டுதல்களை சீராக செய்யும் பொழுது, பெண்ணுறுப்புக்கான ரத்த ஓட்டம் அதிகமாகி பெண்களால் பாலியல் உச்சக்கட்டம் அடைய முடிகிறது. பெண்கள் உச்சக்கட்டம் அடைவதற்கு சில மருந்துகள், மாத்திரைகளும் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ஆண்களுக்கு பயன்படுத்துகின்ற வயாகரா மாத்திரைகளும், பெண்கள் உச்சக்கட்டம் அடையாத நிலையில் அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் மருந்தாக அமைகிறது.

    பெண் உறுப்புகளில் ஏற்படும் வலிகளுக்கான தீர்வு:

    பெண்களுக்கு பெண் உறுப்பில் ஏற்படுகிற பிரச்சனைகள், குறிப்பாக தொற்றுகள் ஏற்பட்டால் இதனை முறையாக சரி செய்யும் பொழுது பெண்கள் பாலியல் உறவு கொள்ளும் போது வலி குறைகிறது. முக்கியமாக பெண்ணுறுப்பில் ஏற்படும் தொற்றுக்கள், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஏற்படுகிற உலர்வு தன்மை ஆகியவை வலிகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ஆகும். இதை பரிசோதித்து என்ன காரணம் என்பதை கண்டறிந்து தொற்றுகள் இருந்தால் சரி செய்ய மருந்துகள் கொடுக்க வேண்டும். உலர்வு தன்மை இருந்தால் பெண்ணுறுப்பு பகுதி தூண்டுதல் முறைகள் மூலமாக முறையாக சரி செய்யலாம்.

    மனரீதியான பிரச்சனைகளுக்கான கவுன்சிலிங்:

    வஜினிஸ்மஸ் என்ற பிரச்சனை இருக்கிற பெண்களுக்கு, முறையான செக்ஸ் தெரபி மூலமாக இவற்றை சரி செய்ய முடியும். தேவைப்பட்டால் மன ரீதியான சிகிச்சை முறைகளாலும் இவற்றினை சரி செய்ய முடியும். பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, பொதுவாக அவர்களுடைய மன ரீதியான பிரச்சனைகளுக்கு முக்கியமான தீர்வானது கவுன்சிலிங். தேவைப்பட்டால் அவர்களுக்கு சில சைக்கோ தெரபி ஆகியவற்றின் மூலமாகவும் மனரீதியான பிரச்சனைகள், உறவுமுறை பிரச்சனைகள், சமுதாய ரீதியான பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.

    பல நேரங்களில் இவர்களுடைய பார்ட்னர் உறவு முறையில் பிரச்சனைகள் ஏற்படுவதால் மன அழுத்தம் காரணமாக பாலியல் பிரச்சனைகள் அதிகமாகிறது. இவற்றினை முறையாக மனரீதியான அணுகுமுறை மூலமாக சரி செய்யும் பொழுது இவர்களுடைய உடல் ரீதியான பிரச்சனைகளும் சரியாகிறது. பொதுவாக பாதிக்கப்பட்ட பெண்கள் எங்களிடம் சிகிச்சைக்கு வரும்பொழுது முதலாவதாக கணவன், மனைவி இருவருக்கும் முறையாக கவுன்சிலிங் கொடுக்கிறோம். இரண்டாவது இவர்களுடைய பிரச்சனைகளுக்கு ஒரு கேள்வியை கொடுக்கும்போது அவர்கள் மனரீதியாக அவர்களுடைய பிரச்சனைகளை எழுதி தருகிறார்கள். அவர்களால் நேரில் விளக்க முடியாத விஷயங்களையும் எழுதிக் கொடுக்கும் பொழுது அவர்களுடைய பிரச்சனையை முழுமையாக புரிந்து அதற்கான தீர்வுகளையும் கொடுக்க முடியும். இதற்கு சர்வதேச தரத்திலான பல நிலையான கேள்விகள் இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் தெளிவாக தங்கள் பிரச்சனைகளை விளக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த வகையில் அவர்களுடைய பிரச்சனை என்ன என்பதை தெரிந்து, அதனை சரி செய்வதற்கு இது சீரான முறையாக அமைகிறது.

    பெண்களுக்கு முக்கியமாக மாதவிலக்கு நின்ற பிறகு ஏற்படுகிற பிரச்சனைகள் என்பது மிக அதிகம். குறிப்பாக பெண் உறுப்பில் ஏற்படும் ஜெனிட்டோ யூரினரி சின்ட்ரோம் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு உறவு முறை பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது. இவர்களுக்கான தீர்வு, முறையான ஹார்மோன் தெரபி. இதை முறையாக கொடுப்பதன் மூலமாக இந்த பெண்களுக்கு உலர்வு தன்மை ஹார்மோன் குறைபாடுகள் சீராகி முறையாக பாலியல் உறவு கொள்ள முடியும். எனவே மன ரீதியான பாலியல் உறவு பிரச்சனைகள், உடல் ரீதியான பாலியல் உறவு பிரச்சனைகள் என அனைத்தையுமே முறையாக பரிசோதித்து, சரியான மருந்துகள் மூலமாக குணப்படுத்தி அதற்கு கண்டிப்பாக தீர்வு காண முடியும்.

    போன்: 72999 74701

    • ஒரு கிரகம் நீசம் பெறும் போது பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும்.
    • ஒரு கிரகம் அதன் உச்ச வீட்டில் இருக்கும் போது 100 சதவீதம் முழு பலம் பெறும்.

    ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வீடு உச்சமாகவும், அதன் நேர் எதிர் 180 டிகிரியில் உள்ள வீடு நீச்சமாகவும் வரும். கிரகங்கள் உச்ச வீட்டில் சஞ்சாரம் செய்யும் போது பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதன் வலிமையும் மிகுதியாக இருக்கும்.


    உச்ச கிரகங்களின் கதிர் வீச்சு பூமிக்கு மிகுதியாக கிடைக்கும். ஒரு கிரகம் நீசம் பெறும் போது பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும்.

    அதாவது ஒரு கிரகம் சூரியனை சுற்றி வரும் சுற்று வட்டப்பாதையில் இருந்து அதிக தொலைவு விலகி செல்லும் பொழுது சூரியனிடமிருந்து தான் பெற்ற ஒளியை பிரதிபலிக்க இயலாத தன்மையை குறிக்கும்.

    நீசம் பெற்ற கிரகத்தின் அதிர்வலைகள் பூமிக்கு குறைவாக இருக்கும். ஒரு கிரகம் அதன் உச்ச வீட்டில் இருக்கும் போது 100 சதவீதம் முழு பலம் பெறும். நீச்ச வீட்டில் அதன் பலத்தை முற்றிலும் இழக்கும்.

    ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.மனித வாழ்க்கைக்கு சந்தோஷம், இன்பம் தருகின்ற நிகழ்வுகள் அனைத்தும் சுக்ரனுடைய காரகத்திற்கு உட்பட்டது என்றால் மிகைப்படுத்தலாகாது.

    அதனால் தான் வாழ்க்கையில் நல்ல வீடு, மனை, வாகனம், நல்ல அழகான வாழ்க்கைத் துணை போன்ற அமைப்புகளோடு வாழ்பவர்களை பார்த்து அவனுக்கு என்ன சுக்கிர திசை நடக்கிறதா? என்று சொல்கிறார்கள்.

    இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இவர் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். தற்போது கோட்சாரத்தில் அசுர குருவான சுக்ரன் கன்னி ராசியில் 25.8.2024 முதல் நீசம் பெறுகிறார்.

    18.9.2024 வரை நீடிக்கும் இந்த கிரக நிலவரம் எந்த ராசிக்கு நன்மை தரப் போகிறது? எந்த ராசிக்கு தீமை வழங்கப் போகிறது? இந்த கட்டுரையில் கிரகங்கள் நீசம் பெறுவது நல்லதா? என்பது பற்றி பார்க்கலாம்.

    சுக்ரன்

    சுக்ரன் என்ற பெயரைக் கேட்டாலே மனதில் பரவசம் பெருகும். வயது வித்தியாசமின்றி ஒருவரின் மனதில் இன்ப அலைகளை பரவ விடுவதில் சுக்ரனுக்கு நிகர் சுக்ரனே. காதலுக்கும், காமத்திற்கும் அடிமையாகாத நபரை உலகில் பார்ப்பது அரிது.

    எல்லா மனிதனுக்கும் பொதுவான, சிற்றின்பமான காதல் மற்றும் காமத்தை கொடுக்கும் கிரகம் சுக்கிரன். சில நிமிடங்கள் நீடிக்கக்கூடிய சிற்றின்பமான, காதல், காமத்திற்கும் பெண் ஆசைக்கும் பல கோட்டைகள் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்துள்ளதை நாம் கேள்விப்பட்டு உள்ளோம்.

    அந்த காமத்தை, ஆசையை தூண்டுவது சுக்கிரன் தான். ஒரு மனிதனுக்கு அழகு, கவர்ச்சியை கொடுப்பதும் சுக்கிரன் தான். ஒருவருடைய திருமண வாழ்க்கை, காதல், காமம், அன்பு, எதிர்பாலின ஈர்ப்பு, உறவுகள், உறவுகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புற அழகியல் சார்ந்த விஷயங்கள், உலகியல் இன்பங்கள், சொகுசான வாழ்விற்கு தேவையான விஷயங்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், அணிகலன்கள், போன்றவற்றிற்கு காரக கிரகம் சுக்கிரன்.


    சுக்கிரன், வாழும் வரை ஜாலியாக வாழ்ந்து விட்டு போக வைக்கும் கிரகம். பணம் மட்டும் இருந்தால் போதும், அதை எப்படி வேண்டு மானாலும், அனுபவித்து செலவழிக்க கூடிய கிரகம் சுக்ரன்.

    ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட முறையில், பணம் இருந்தாலும், சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க சுக்கிரனின் தயவு தேவை. அதனால் சுக போகத்தின் அதிபதி, சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் எல்லா நிலைகளிலும், கெடாமல் வலுப்பெற்று இருக்க வேண்டும்.

    அன்பான மனைவி, அழகான வீடு, ஆடம்பரமான கார், சொகுசான இன்பமய மான வாழ்க்கை இத்தனையையும் ஒருவருக்கு குறைவின்றி கொடுக்கும் கிரகம் சுக்கிரன்.

    சுக்ரன் பாவக, ஆதிபத்திய ரீதியாக வலுப்பெற்றால் பெரிய பொருளாதாரம் ஈட்டுதல், சுக்ரனின் காரகங்களான நவீனம், வாசனைப் பொருட்கள், உயர்ரக வாகனம், வீடு, இசை,கவிதை ஆர்வம், அலங்காரம், ஒப்பனை, நளினம் போன்றவற்றில் ஆர்வம் கூடும்.

    கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்து பெரிய உயரத்தையும் தொட வைக்கும். காரக, பாவக ஆதிபத்திய ரீதியாக சுக்ரன் பலம் குறைந்தால் நீசம் பெற்றால் வறுமை, தரித்திரம் போன்ற பாதிப்பு இருக்கும்.

    சம்பாத்தியம், ஆடம்பரம் என்ற எண்ணமே வராமல் செய்யும். ஒரு மனிதன் யோகமான வாழ்க்கை வாழ்ந்தால், அவனுக்கென்னப்பா சுக்கிர திசை, பிச்சுகிட்டு கொட்டுகிறது என்று படிக்காத பாமரனும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.

    உண்மையைச் சொன்னால் சுக்கிரன், எல்லோருக்கும் நல்ல பலனை அள்ளி கொடுத்து விடுவதில்லை. சுக்கிரன் தன்னுடைய நண்பர்களான புதன் , சனியின் லக்னங்களுக்கு யோக கிரகமாக வரும் பொழுது, அவருடைய திசையில் மிகச் சிறப்பான யோக பலன்களை கொடுக்கும்.

    சுக்கிரனின் பகை கிரகமான குருவிற்கு, சுக்கிரன் எந்த விதத்திலும் நல்ல பலனைத் தருவதில்லை. அதேபோல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் இரு பாவகத்திற்கு உள்ள பலன்களை நடத்தியே தீரும்.

    நீச்ச சுக்ரனால் ஏற்படும் பொதுவான பலன்கள் : 25.8.2024 முதல் 18.9.2024 வரை

    ஒரு கிரகம் நீசம் பெறும் போது இயல்பான தனது காரகத்துவ ஆதிபத்திய ரீதியான பலனை தரத் தவறுகிறது. நீச்சம் பெற்ற கிரகம் நீச்ச பங்கம் பெற்றால் நூறு மடங்கு ராஜயோகத்தை வழங்கி குப்பை மேட்டில் இருப்பவரை கோடிஸ்வர யோகம் வழங்கி மாளிகையில் வாழ வைக்கிறது.

    ஆண்களின் களத்திர காரகன் சுக்ரன் நீச்சம் பெறுவதால் அதீத திருமணத் தடை இருக்கும். வாழ்க்கைத் துணையால் மன உளைச்சல் மிகுதியாகும்.

    பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய முடியாது. பொன், பொருள் சேராது. நகைகள் அடமானத்திற்கு செல்லும். இனிமையான இல்லறம் அமையாது. தனித்த கிரகங்கள் வழங்கும் பலன்களை விட கூட்டு கிரகங்களால் உண்டாகும் பலன்களில் சாதகம், பாதகம் அதிகம் உண்டு. நீச்சம் பெற்று சுக்ரன் கேதுவுடன் இணைகிறார்.

    நீச்ச சுக்ரன் மேல் குருவின் 5-ம் பார்வையும் செவ்வாயின் 4-ம் பார்வையும் பதிகிறது. பொதுவாக கேதுவுடன் இணையும் கிரகம் தனது காரக, பாவக, ஆதிபத்திய ரீதியான பலன்களை முற்றிலும் இழக்கும். தற்போது கோட்சாரத்தில் நீசம் பெறும் கேதுவுடன் இணைந்த சுக்ரனை குரு மற்றும் செவ்வாய் பார்ப்பது சுபித்துச் சொல்லக் கூடிய பலன் அல்ல.

    அதே நேரத்தில் சுக்ரன் சித்திரை நட்சத்திரத்தில் நீசம் பெறுவார். 12.9.2024 முதல் 18.9.2024 வரையான 7 நாட்கள் மட்டுமே சுக்ரன் பரம நீசம். இந்த காலகட்டத்தில் திருமணம் சம்பந்தமான நிகழ்வுகளை தவிர்ப்பது நல்லது.

    இனி 12 ராசிக்கு நீச சுக்ரன் கேது+ குரு மற்றும் நீச சுக்ரன் கேது + செவ்வாய் இணைவால் ஏற்படும் பலன்களையும் பரிகாரங்களையும் காணலாம்.


    மேஷம்:

    ராசிக்கு 6-ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானமான கன்னியில் நீச சுக்ரன் கேது சேர்க்கை இருப்பதால் கடன் தொல்வை, நோய் தாக்கம் குறையும். மாற்றுமுறை வைத்தியம் பலன் தரும்.வீடு வாகன கடன் விண்ணப்பிக்க உகந்த காலம். திருமணத் தடை அதிகமாகும். குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்ல வேண்டும்.

    ரிஷபம்:

    ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி சுக்ரன் நீசம் பெற்று கேதுவுடன் இணைகிறார். பங்குச்சந்தை, காதல் தொடர்பான விசயங்களில் அவமானம் உண்டாகும். பூர்வீகம் தொடர்பான வம்பு வழக்குகள் இழுபறியாகும். பிள்ளைகளின் திருமணம் கல்வி போன்ற தேவைக்காக கடன் பெற நேரும்

    மிதுனம்:

    ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் கேதுவுடன் இணைகிறார். காதல் கை கொடுக்காது. ஆன்மீக நாட்டம் குறையும். பிள்ளைகளின் எதிர்காலம், அதிர்ஷ்டம், பூர்வீகம் பற்றிய சிந்தனை மிகுதியாகும். ஆரோக்கியம் தொடர்பான விசயங்களில் கவனம் தேவை

    கடகம்:

    ராசிக்கு 3ம்மிடமான சகாய ஸ்தானத்தில் பாதகாதிபதி சுக்ரன் நீசம் பெறுகிறார். பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். தாய்வழிச் சொத்தில் நிலவிய மாற்றுக் கருத்து மறையும். விவசாயிகளுக்கு, பண்ணை யாளர்களுக்கு சாதகமான பலன் உண்டு. முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்கு 2-ம்மிடமான தனம் வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் நீச்ச சுக்ரன் கேது சேர்க்கை உள்ளது. கற்ற கல்வியால் பயன் உண்டு. ஆசிரியர், ஜோதிடர், வங்கிப் பணியாளர்கள் தனித்திறமையுடன் மிளிர்வார்கள். அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள். ஞாபகசக்தி குறையும். பாகப் பிரிவினையை தவிர்க்க வேண்டும்.

    கன்னி:

    ராசியில் 2, 9 ம் அதிபதியாகிய சுக்ரன் நீசம் பெற்று கேதுவுடன் இணைகிறார். சிலர் பூர்வீகத்தை விட்டு எதிர்கால தேவைக்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம். பூர்வீகச் சொத்தில் சர்ச்சை உண்டு. பிள்ளைகளிடம் கவனமாக இருக்க வேண்டும். குலதெய்வ பிரார்த்தனைகளை ஒத்தி வைக்கவும்

    துலாம்:

    ராசி மற்றும் அஷ்டமாதிபதி சுக்ரன் ராசிக்கு 12ல் நீசம் பெற்று கேதுவுடன் இணைகி றார். சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் எதிரியை அதிகப்படுத்தும். தீய பழக்க வழக்கங்களால் நோய் ஏற்படும். நோய்க்கு வைத்தியம் செய்ய கடன் பெறுவார்கள். கடனுக்கு பயந்து நோய் கூடிக் கொண்டே போகும். முக்கிய பணிகளை ஒத்தி வைக்கவும்.

    விருச்சிகம்:

    ராசிக்கு 11-ம் மிடமான லாப ஸ்தானத்தில் நீச சுக்ரன் கேது சேர்க்கை உள்ளது. அயன சயன போகம் சிறந்த நிலையில் இருக்கும். சிலருக்கு முதல் மனைவி இருக்கும் போதே மறு திருமணம் நடக்கும். தம்பதிகளிடம் நெருக்கம் குறையும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. நம்பியவர்களே நம்பிக்கைத் துரோகம் செய்யலாம்

    தனுசு: ராசிக்கு 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் நீச சுக்ரன், கேது சேர்க்கை உள்ளது. பொருளாதார வெற்றி,வீடு மனை வாகனம் போன்றவை கிடைக்கும். தாயின் ஆரோக்கியம் சீராகும்.சிலருக்கு மறு திருமணம் நடக்கும். கடன், நோய் பாதிப்பு எதிரி தொல்லை குறையும். வராக்கடன்கள் வசூலாகும்.

    மகரம்:

    மகரம் ராசிக்கு 9-ம்மிடமான பாக்கிய ஸதா னத்தில் நீச சுக்ரன் கேது சேர்க்கை உள்ளது. காதலிப்பது தவறு என்ற உண்மை புலப்படும். நிலையான பொருள் வரவு இருக்காது. குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு குறையும். பதவி, புகழ், அந்தஸ்து குறையும்.

    கும்பம்:

    ராசிக்கு 8-ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் 4,9-ம் அதிபதி சுக்ரன் நீசம் பெற்று கேதுவுடன் இணைகிறார்.நிறைவான சொத்து சுகத்தையும் நிறைந்த லாபத்தையும் தாய் வழி உறவுகளின் அனுசரனையும், வழக்குகளில் வெற்றியையும் முன்னோர்களின் நல்லாசியையும் வழங்கும்.

    மீனம்:

    ராசிக்கு 7-ம்மிடமான களத்திர ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சுக்ரன் நீசம் அடைந்து வலு குறைவது மிகச் சிறப்பு. வாழ்க்கைத் துணையால் கூட்டாளிகளால் அதிர்ஷ்டம் உண்டு. புரிதலின்றி பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். காதலில் வெற்றி உண்டு.. அலைச்சல் மிகுந்த பயணம் மிகுதியாகும்.


    பரிகாரம்

    புதனின் வீடான கன்னியில் சுக்ரன் நீசம். புதன் என்றால் புத்தி அறிவு. சுக்ரனுக்கு காமம் மற்றும் ஆசை காரகமாகும். புத்தி தெளிந்த இடத்தில் ஆசைக்கு இடமில்லை. ஆசை (காமம்) அதிகமுள்ள இடத்தில் புத்திக்கு இடமில்லை என்பது புலனாகிறது.

    நீச்ச சுக்ரனால் இன்னல்களை சந்திப்பவர்கள் வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

    • இந்தியாவில் ஆன்மீக பங்களிப்பு அதிகம் என்று சொல்லலாம்.
    • நாம் நன்கு அறிந்த சமீப கால நிகழ்வுகளைக் கூட மேற்கோள்களாக நாம் காணலாம்.

    சமீபத்தில் ஒரு சிறிய ஆன்மீக கூட்டத்தில் ஒரு நபர் ஒரு கேள்வி எழுப்பினார்.

    சுனிதா வில்லிம்ஸ் விண்வெளி பயணம் இருமுறை நாம் பார்த்து இருந்தாலும் மூன்றாம் முறையாக சென்றதும் தெரியும். அங்கு விண்கலத்தின் கோளாறு காரணமாக அவரும், உடன் சென்றவரும் பூமி திரும்ப காலதாமதம் ஆகின்றது. அதனையும் சமாளித்துக் கொண்டு இருக்கின்றார். அப்படியொரு விஞ்ஞான முன்னேற்றம் காணும் இக்காலத்திலும் இந்த கவலைகளை நீக்க ஆன்மீகம், மெய்ஞானம் இவையெல்லாம் உள்ளதா? என்று கேட்டார். எதுவும் ஒன்றும் செய்யவில்லையே என்று வருந்தினார்.

    கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இது அவரது கருத்து. இது போன்ற பல விதமான கருத்துகள் பலருக்கும் இருக்கலாம். இது வரவேற்கத்தக்கதே.

    மேலும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மனித வாழ்வின் தரத்தினை வெகுவாய் உயர்த்தி உள்ளன. இது உண்மையே. விண்வெளி சென்ற அனைவரும் நல்லபடி பூமி வர இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

    வாழ்வின் மற்றொரு புறமாக பார்க்கப்படுவதுதான் ஆன்மீகம். இதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பமே. எந்த கட்டாயமும் இல்லை.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    இந்தியாவில் ஆன்மீக பங்களிப்பு அதிகம் என்று சொல்லலாம். இங்கு அவதரிதத மகான்கள், ரிஷிகள், சித்த மகா புருஷர்கள் என எந்த பெயரில் நாம் குறிப்பிட்டாலும், எந்த மதம் என்றாலும், இவர்களின் ஆன்மீகப் பயணம், தொண்டு, கருத்துகள் இவை எல்லாம் நமக்குள் ஒரு தேடலை தோற்றுவிக்கின்றன.

    இருப்பினும் வாழ்வின் சில கட்டாயங்கள் வாழ்வு எனும் வட்டத்தை சுற்றியே ஒருவரை ஓட வைக்கின்றது. கோவிலுக்கு சென்றால் கூட ஒரு மீட்டர் பட்டியல் போட்ட வேண்டுதல்கள், பரிகாரங்கள் என்றே சுற்றி சுற்றி வருகின்றோம். இதுவும் எந்த தவறும் கிடையாது. ஆனால் ஆன்மீகம் என்பது மனதை கடந்த நிலை எல்லையற்ற நம் ஆன்மா பரந்து விரிந்து இருக்கும் பேரானந்த நிலை. ஆன்மாவின் இயல்பு நிலை என்பது பொருள் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் மனம் அழிந்து ஆன்மா பரம் பொருளுடன் இணைந்த நிலை ஆகும்.

    இந்த நிலையில்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஞானிகள், மகரிஷிகள், சித்தர்கள் இவர்களின் வழிகாட்டுதலால் பரம்பொருளை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது மனதில் தோன்றுகின்றது.

    நாம் நன்கு அறிந்த சமீப கால நிகழ்வுகளைக் கூட மேற்கோள்களாக நாம் காணலாம்.


    ரமண மகரிஷி அவர்களை அறிந்தவர்கள், கேள்விபட்டவர்கள் அநேகர் உலகெங்கிலும் உள்ளனர். ஆன்மீக விழிப்புணர் வினை பார்வையாலேயே பலருக்கு ஏற்படுத்தியவர். 'நான் யார்?' என்று ஒவ்வொருவரும் தன்னுள் தேடி தன்னை உணரும் வழியினைக் காட்டியவர்.

    * மகிழ்ச்சிதான் (ஆரவாரமற்ற) ஆன்மாவின் சுயரூபம். * அதனை வெளியே தேடாதே. உன்னுள்ளேயே இருக்கின்றது. * எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்.

    * வருங்காலத்தினைப் பற்றி அதிகம் யோசித்து கவலையில் மூழ்காதே.

    இந்த நொடியில் முழு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இது போன்ற சாராம்சமான கருத்துக்களை மக்களின் மனதில் பதிய வைத்தவர்.

    இளம் வயதிலேயே இவரது மனத்துடிப்பு, 'அருணாசலம் அருணாசலம்' என துடிக்க அருணாசலேஸ்வரரை தேடி திருவண்ணாமலை வந்தவர்.

    தியான நிலையில் வருடக்கணக்கில் அசையாது இருந்ததால் உடலில் கரையான் பிடித்தும் அதனைப் பற்றி உணர்வின்றி இருந்தவர்.

    அவரை சந்திக்க வந்தவர்கள் பல கேள்விகள் எழுதி வந்தும் அவரைப் பார்த்தவுடன் ஒரு கேள்வி கூட கேட்காமல் தனது அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்து விட்டதாக எழுதியுள்ளனர்.


    ரமண மகரிஷி எந்த வேத பாடசாலையும் சென்று படிக்கவில்லை. வேதத்தின் சாரமாக பேசினார். தான் சமாதி நிலை அடையும் இறுதி நிமிடத்தில் கூட மயில்களுக்கு சாப்பாடு கொடுத்தீர்களா? என்றார். அவரது ஆசிரமத்தில் எந்தவித பாகுபாடும் இல்லாது இருக்கச் செய்தார்.

    இவரைப் பற்றி எழுதினால் பல புத்தகங்கள் எழுதலாம். அவரது வாழ்வே மனிதனுக்கு ஆன்மீகம் காட்டியது. ஆன்மீகம், தியானம் இவற்றின் மூலம் மனம் அமைதி பெற்று ஆன்மாதன் சுயரூபத்தில் லயித்து இருக்க முடியும் என்பதனை பேசாமல் பேசி புரிய வைத்தவர்.

    படிப்படியாக தகுதி பெற்று அனைவரும் இந்நிலைக்கும் செல்ல முடியும்.

    காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை அனைவருமே போற்றுவர். ஆராதிப்பர். மனிதனின் சமூக ஒற்றுமைக்கு அதிக கவனம் கொடுத்தவர்.

    * எத்தனையோ குடும்பங்களில் பல அதிசயங்களை நிகழ்த்தி தனக்கு எதுவுமே தெரியாதது போல் இருக்கும் பரமசிவன். கருணாமூர்த்தி 'தெய்வத்தின் குரல்'- 7 பாகத்தினையும் அனைவரும் படிக்கலாம். இந்த அற்புத கருத்தை படித்தால் பொக்கிஷங்கள் கிடைக்கும். இது போன்று திருவண்ணாமலையில் வாழ்ந்த, வாழும் சேஷாத்திரி சுவாமிகள், யோகி ராம் சுரத்குமார் இவர்கள் எல்லாம் நம் காலத்தில் நாம் அறிந்த மகான்கள், ஞானிகள், மகரிஷிகள் ஆவர். ஷீரடி சாய்பாபா என்றாலே மக்களின் மனதில் ஆறுதல் கொடுப்பவர்.

    பாம்பன் சுவாமிகளின் கண்களை பார்த்தாலே ஆனமீகம் அருவி போல் கொட்டும். சமீப காலத்திய அருணாகிரி நாதருக்கு முருகன் காட்சி அளிக்கவில்லையா? பேச வில்லையா? இப்படி கூறிக் கொண்டே செல்லலாம். ஏசுநாதரின் வாழ்வே மக்களுக்காகத்தானே. இஸ்லாமியர் நோன்பு விரதம் கடுமையானதுதான். ஆனால் சிறு குழந்தைகள் கூட கடைபிடிக்கும் கட்டுப்பாடு உள்ளதே.

    ஆக மனித இனம் இருக்கும் வரை விஞ்ஞானமும் வளரும், மெய்ஞானமும் வளரும்.

    இக்கட்டுரையில் மற்றொரு செய்தியினையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றோம். பலர் அறிந்திராத 'ஆண்டவன் பிச்சை' என்ற அன்னையின் வாழ்க்கையினைப் பற்றி சற்று பார்க்கலாமா?

    இவரைப் பற்றி சிலர் எழுதியிருந்தாலும் 'டேவில் காட்மேன்' அவர்கள் எழுத்திலிருந்தே இங்கு பிரதிபலிக்கப்பட்டுள்ளது. அவரும் மற்றொரு தெய்வீக சங்கல்பத்தில் இருந்தே இதனைத் தொகுத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளர்.

    மரகத அம்மாள் என்று குழந்தையில் பெற்றோரால் பெயரிடப்பட்ட இவர் ஆண்டவன் பரிசு என்று பொருள் கொண்ட முறையில் 'ஆண்டவன் பிச்சை' என்று அழைக்கப்பட்டுள்ளார்.

    ஆண்டவன் பிச்சை அம்மாள் செப்டம்பர் 6, 1899-ல் சென்னை மயிலாப்பூரில் பிறந்துள்ளார். இவர் பெயர் மரகதவல்லி. மிகச்சிறிய வயதில் தாயை இழந்தவர். பேச்சே சரியாக வரவில்லை. வீட்டில் தனி டியூஷன் வைத்தும் சரியாக வரவில்லை. 9 வயதில் இவருக்குத் திருமணம். திருமணம் நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தந்தையுடன் இருந்து மாமியார் வீடு சென்றார். மரகதம்மாளின் குடும்பத்தில் அநேகரும் உயர் கல்வி கற்றவர்களே.

    1908-ல் நவராத்திரி சமயம் அம்மா அவர்கள் தன் தந்தை வீட்டிற்கு வந்தார். இரவில் தூக்கத்தில் அவருக்கு நடந்த அதிசயம். முருகன் சிறு வயது பிள்ளையாகத் தோன்றி அவரது நாக்கில் 'ஓம்' என்றும 'ஷடாசரமும்' எழுதி தீட்சை அளித்தார். அடுத்த நாள் முதல் அம்மா அவர்கள் சரளமாக பேசினார். பாடினார். மனம் முழுவதும் அந்த இறைவன் நிறைந்து இருக்க முருகனின் பாடல்கள் அருவியாய் கொட்டின.

    இவையெல்லாம் நிகழும் போது அவருக்கு வயது 10தான். காலம் செல்ல இவருக்கு சில குழந்தைகளும் பிறந்தன. ஒரு குழந்தை பிறப்பின் போது குழந்தை பாலுக்கு அழுவதை உணராமல் முருகன் மீது பாடிக் கொண்டே இருந்து விட்டார்.

    குடும்ப நன்மைக்காக இவரது மாமியார் இவரது பாடல் தொகுப்புகளை பெட்டியில் வைதது பூட்டி இனி குடும்பத்தினை கவனிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். அதன் பிறகு வெகு காலம் தான் கொடுத்த வாக்கின் படி வெளியில் பாடவில்லை. மரகதம்மாள் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்களுக்கும் குறைவே இல்லை. மனம் என்ற ஒன்றினை தாண்டிய பக்குவத்தினை அடைந்திருந்தார்.

    டி.எம்.சவுந்தரராஜன் பாடியுள்ள பிரசித்தி பெற்ற முருகனின் பாடல் 'உள்ளம் உருகுதய்யா முருகா' என்ற பாடலின் ஆசிரியர் ஆண்டவன் பிச்சை அம்மாதான். திருவண்ணாமலையில் இவருக்கு முருகன் நிகழ்த்திய அனுபவம் ஆண்டவன் பிச்சை என்ற பெயர் வந்த விவரம் என ஏராளமான செய்திகள் இவரைப் பற்றி உள்ளன. இவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், பிள்ளைகள் இழப்பு, உடல் பாதிப்பு என்ற எதுவுமே இவரை அசைக்கவில்லை. ஆண்டவன் மீது குறை கூற வில்லை. அரற்றவில்லை. மனம் கடந்து பரம்பொருளை பற்றினார். தன்னுள்ளேயே இறைவன் இருப்பதனை உணர்ந்தார்.

    தனி மனித ஒழுக்கம், அசையா உறுதி, கலங்காத மனம் இவை ஒவ்வொரு மனிதனும் சற்றேனும் முயற்சிக்க வேண்டும் என்று எண்ண வைக்கும் ஞானிகள் இந்த பூமியில் பிறந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

    உயிருடன் இருக்கும் போதே எவன் ஒருவன் புலன்களிடமித்து செத்தாரைப் போன்று ஆகி விடுகின்றானோ அவனே ஞானியாவான். -வள்ளலார்

    விண்வெளி செல்பவர்களும் ஐஸ்கிரீமும், ஸ்வீட்டும் சாப்பிட்டு, சொகுசு மெத்தையில் தூங்கி, டி.வி. பாார்த்து பயணம் செய்யவில்லை. குடிக்கும் தண்ணீர் முதற்கொண்டு அளவுதான். அத்தனை தியாகங்கள்தான். மன உறுதிதான். ஒரு விதத்தில் இவர்களும் மனதைக் கடந்த ஞானிகள்தான்.

    இந்த மனித முயற்சியை பாராட்டுவோம். அவர்களுக்காக அனைவரும் மனம் ஒருமித்து தினமும் ஒரு நிமிடமாவது அவர்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்வோம். இந்த சிறு முயற்சி கூட ஒரு மனிதரால் முடியாதா என்ன?

    • குழந்தை நட்சத்திரம் கதாநாயகியாக ஜொலிக்க தொடங்கியதும் எல்லாம் மாறிவிட்டது.
    • காரில் விமான நிலையத்துக்கு செல்லும் போது மேம்பாலத்தில் மெட்ரோ ரெயில் செல்வதை மட்டும் பார்த்திருக்கிறேன்.

    சின்ன சின்ன ஆசைகள்...

    நம்ம சென்னையை சுற்றிப் பார்க்க ஆசை.

    மெட்ரோ ரெயிலில் சுற்றி வர ஆசை.

    ரங்கநாதன் தெருவில் நடக்க ஆசை.

    சவுகார்பேட்டை கடைத் தெருவை பார்க்க ஆசை.

    என்ன ஆச்சரியமாக நினைக்கிறீர்களா? மீனாவுக்கு சென்னைதானே... சென்னையில் உள்ள இடங்களை பார்க்காமலா இருப்பார்கள் என்று நீங்கள் நினைப்பதும் நியாயம்தான்.

    ஆனால் நிஜம் வேறுவிதமாக உள்ளது.

    நாலு வயதில் சினிமாவுக்குள் நுழைந்து விட்டேன் என்பதை அறிவீர்கள். அந்த சின்ன வயதில் படப்பிடிப்பு... பள்ளிக்கூடம்... என்று ஒவ்வொரு நாளும் நகர்ந்தது.

    ஆனாலும் நேரம் கிடைக்கும் போது அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினருடன் மெரினா பீச் சென்றிருக்கிறேன். கடற்கரை மணலில் ஓடிவிளையாடியதை மறக்க முடியாது.

    கடல் அலையில் கால் வைக்க ஓடியதும் அலை வருவதை பார்த்ததும் பயந்து கரையை நோக்கி ஓடியதும் மறக்குமா?

    கடற்கரை மணலில் வீடு கட்டி மகிழ்ந்தும் அலை வந்து சிதைத்ததும் கோபத்தில் நானும் சிதைத்துவிட்டு கிளம்பியதும் மறக்குமா?

    வாங்கி தந்த பஞ்சு மிட்டாய் குச்சியை கையில் பிடித்தபடி சுவைத்ததும், சீக்கிரம் சாப்பிட்டவர்கள் கையில் இருப்பதை பிடுங்கி சென்றதும், அதற்காக சண்டை போட்டதும் மறக்குமா?

    கலங்கரை விளக்கத்தில் இருந்து வீசும் ஒளியை ஆச்சரியத்துடன் பார்த்து நின்றதும்... கண்ணுக்கெட்டிய தூரத்தில் கடலில் மின் விளக்குகள் வெளிச்சத்தில் மிதக்கும் வீடுகளை போல் மிதந்து கொண்டிருக்கும் கப்பல்களை பார்த்து டாடி... மம்மி... அதோ பாருங்கள்... என்று மகிழ்ச்சி பொங்க கூறியதும் மறக்குமா?

    மெரினா பீச் மட்டுமல்ல! பெசன்ட் நகர் பீச்சுக்கும் போய் வந்திருக்கிறேன். இவையெல்லாம் சிறு வயதின் மலரும் நினைவுகள். பருவமும் மாறியது! உருவமும் மாறியது. குழந்தை நட்சத்திரம் கதாநாயகியாக ஜொலிக்க தொடங்கியதும் எல்லாம் மாறிவிட்டது.


    மக்கள் மத்தியில் பிரபலம் ஆனதும் மக்கள் மத்தியில் சாதாரணமாக நடமாட முடியாமல் போனது. வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் உங்கள் மீனா பறந்து கொண்டிருந்தேன்.

    அந்த காலத்தில் விமான சேவைகள் குறைவாக இருந்தது. அதனால் கோவை, ஊட்டி, மதுரை மற்றும் கேரளா, ஆந்திராவுக்கு ரெயில் பயணமாகத்தான் இருக்கும்.

    அதற்காக வீட்டில் இருந்து காரில் எழும்பூர் அல்லது சென்ட்ரல் ரெயில் நிலையங்களுக்கு செல்வேன். அங்கிருந்து ரெயிலில் செல்வேன். விமான சேவைகள் அதிகரித்த பிறகு சுமார் 25 ஆண்டுகளாக ரெயில் நிலையங்களுக்கு செல்வதும் இல்லை. பெரும்பாலும் விமான பயணமே! இப்போது காரில் செல்லும் போது சென்ட்ரல் ரெயில் நிலையத்தை பார்த்து வாவ்... எவ்வளவு மாறி இருக்கிறது என்று நானே பிரமித்து இருக்கிறேன்.

    வெளிநாட்டு பயணத்தில் லண்டன் சென்றதும் அந்த நகரை சுற்றி பார்த்ததும் என்னால் மறக்க முடியாத அனுபவம். அங்குதான் முதல் முதலில் மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டேன். சுரங்கத்துக்கு அடியில் ரெயில்... அங்கே ஒரு உலகம்... பூமிக்கு அடியில் கட்டப்பட்டிருந்த ரெயில் நிலையங்களின் பிரமாண்ட தோற்றம்! கடைகள்... எல்லாவற்றையும் பிரமிப்புடன் பார்த்து பார்த்து வியந்தேன்.


    மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஆசை பட்டதால் ஒரு நாள் முழுவதும் பயணிக்கும் பயண அட்டை வாங்கி தந்தார்கள். ஒரு மேப்பையும் தந்து வழிகாட்டி ஒருவரை துணைக்கும் அனுப்பி வைத்தார்கள். நாள் முழுவதும் மெட்ரோ ரெயிலில் ஏறுவது, இறங்குவது, ஒவ்வொரு ஸ்டேசனிலும் இறங்கி அதை பார்த்து ரசிப்பது என்று பொழுதை போக்கியிருக்கிறேன். இப்போதும் வெளி நாடுகளுக்கு செல்லும் போது மெட்ரோ ரெயிலில் எப்படியாவது பயணிப்பதை வழக்கமாக வைத்து உள்ளேன். அந்த பயணம் ரொம்ப சந்தோசமாக இருக்கும்.

    வெளிநாடுகளில் இருந்த வசதிகளை பார்த்து மெய்சிலிர்த்த தருணங்களில் நம் நாட்டில் எப்போது வரும் என்று நினைத்துக் கொள்வேன்.

    காலங்கள் உருண்டது. நம் நாட்டிலும் வந்தது. அதிலும் நம்மூர் சென்னையிலும் வந்துவிட்டது. மெட்ரோ ரெயிலுக்காக தூண்கள் அமைத்து பணிகள் நடந்த போது காரில் பார்த்து செல்வேன்.

    மெட்ரோ ரெயில் ஓட தொடங்கியதும் பயணிக்க ஆசைப்பட்டேன். ஆனால் செலிபிரிட்டியாகி விட்டதால் என்னால் அந்த அனுபவத்தை அனுபவிக்க முடியவில்லை. நம்ம சென்னையிலும் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் பூமிக்கடியில் பிரமாண்டமாக இருப்பதாக சொன்னார்கள். ஆனால் இன்னும் நேரில் பார்க்க முடியவில்லை. மெட்ரோ ரெயிலில் பயணிக்கவும் முடியவில்லை. காரில் விமான நிலையத்துக்கு செல்லும் போது மேம்பாலத்தில் மெட்ரோ ரெயில் செல்வதை மட்டும் பார்த்திருக்கிறேன்.

    மெரினா பீச்சுக்கு பலமுறை ஷூட்டிங் சென்றிருக்கிறேன். ஆனால் சின்ன வயதில் கடல் மணலில் நடந்து, கடல் அழகை பார்த்து ரசித்தது போல் இப்போதும் ரசிக்க ஆசை. ஆனால் முடியவில்லை. சென்னையில் பல முக்கியமான பகுதிகளை இன்னும் நான் பார்த்தது இல்லை. குறிப்பாக சவுகார்பேட்டையை பார்க்க ஆசை. அங்கு விதவிதமான ஆடைகள், மேக்-அப் சாதனங்கள், எல்லாம் வாங்கலாம் என்கிறார்கள். அங்கும் தெருக்களில் நடந்து, ஒவ்வொரு கடைக்கும் சென்று பார்த்து பர்சேஸ் பண்ணத்தான் ஆசை. ஆனால் இதுவரை அந்த பஜாரை பார்த்தது இல்லை.

    அவ்வளவு ஏன்...?

    சென்னையில் பிரபலமாக பேசப்படும் பகுதி ரங்கநாதன் தெரு, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் ரங்கநாதன் தெருவை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகளாக சென்னையில் வசித்தும் இதுவரை ரங்கநாதன் தெருவுக்கு போனது இல்லை. அதுவும் ஒரு ஏமாற்றமாகவே இருக்கிறது.

    சின்ன வயதில் பல தடவை பாண்டிபஜாருக்கு சென்று இருக்கிறேன். அப்போதெல்லாம் தெருக்களில் சின்ன சின்ன கடைகள் இருந்தது. அந்த கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி இருக்கிறேன். இப்போது அந்த கடைகள் அகற்றப்பட்டு விட்டன. அதே போல் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் மால், பீனிக்ஸ் மால், போரம் மாலுக்கும் செல்வேன். இதில் வேடிக்கை என்ன வென்றால் நம்மூரில் நடக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிநாடுகளில் தீர்த்துக் கொள்வோம்.

    வெளிநாடுகளுக்கு செல்லும் போது மணி கணக்கில் நடந்து செல்வது, பஜார்களுக்கு சென்று ஷாப்பிங் செய்வது உண்டு. வெளி நாடுகளில் வாழ்பவர்களும் அதிகமாக நடப்பதையே விரும்புகிறார்கள். காரணம் குளிர்பிரதேசம். நடந்தால் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதற்காக நடப்பார்கள்.

    இன்னொன்று நம்மூரை போல் எல்லா இடங்களிலும் வாகனம் நிறுத்துமிடம் அங்கு இருப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு இடத்தில் குறிப்பிட்ட ஒரு கடைக்கு செல்ல வேண்டும் என்றால் ரொம்ப தூரத்தில் காரை நிறுத்திவிட்டு நடந்து தான் செல்ல வேண்டும்.

    அதற்கு பதிலாக ரெயில்களில் சென்று இறங்கி நடந்தே செல்கிறார்கள்.

    நாங்களும் அவர்களை போல் நடப்போம். முக்கியமாக என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது என்பது எனக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்.

    மீண்டும் அடுத்த வாரம் வருகிறேன்.

    (தொடரும்...)

    • வங்கிகள் தந்துள்ள கடன் அட்டைகள், சேமிப்பு அட்டைகள் மூலமாகவும் பணம் செலுத்தி விடலாம்.
    • எல்லாமே டிஜிட்டல் மயம் என்று ஆகிவிட்டதால் இப்போது பணத்திருட்டும் டிஜிட்டல் மயமாக மாறிக்கொண்டிருக்கிறது.

    திருட்டைப் பற்றித் தெரிந்துகொண்டு நேர்மையாக வாழ விரும்பும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    மனித வாழ்வியலில் மனிதர்கள் செய்யக் கூடாதவைகள் பல இருந்தாலும், பெரியோர்களும் அற நூல்களும் வலியுறுத்திக்கூறும் தலைசிறந்த "கூடாதுகள்" மூன்றே மூன்றுதாம். அவை, "திருடக் கூடாது!", பொய் சொல்லக் கூடாது!", "பிச்சை எடுக்கக் கூடாது!". 'திருட்டு' ஒரு மனிதருக்கு சகலவிதமான தீய குணங்களையும் கொண்டுவந்து சேர்க்கும்; 'பொய்' ஒரு மனிதரின் உண்மை அடையாளங்கள் அனைத்தையும் அழித்து விடும்; 'பிச்சையெடுத்தல்' ஒரு மனிதனைத் தன்மானம் அற்றவனாக்கித் தலைகுனிய வைத்து விடும். திருட்டு, பொய், பிச்சையெடுத்தல் ஆகிய இந்த மூன்றையும் சிறுவயது முதலே ஒருவர் செய்யாமல் வந்தால், அவர் வாழ்க்கையில் அப்பழுக்கற்ற மனிதராகத் திகழலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    திருட்டு என்பது அடுத்தவருக்குச் சொந்தமான பொருளை, அவருக்குத் தெரியாமல் அல்லது வேறு யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாகக் கவர்ந்து கொள்வது ஆகும். திருட்டுக்குத் தமிழில் 'களவு' என்று மற்றொரு பெயரும் உண்டு. ஆணும் பெண்ணுமாக நிகழ்த்தும் காதல் வாழ்வில், யாருக்கும் தெரியாமல் சந்திப்பு நிகழ்த்திடுவதைக் 'களவு' என்றும், பிறகு அவர்களே அனைவரும் அறிய மணம் முடித்துக்கொண்டு வாழ்வதைக் 'கற்பு' என்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் பகர்கின்றன. அந்த வகையிலான காதல் களவிற்கு இலக்கிய அடிப்படையிலான சமூக அனுமதி உண்டென்றாலும், அது தவிர்ந்த களவிற்கும் திருட்டிற்கும் சமூகத்தில் துளியளவும் அனுமதி கிடையாது.

    சமூகத்தில் இன்றுநாம் சகலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு வாழ்கிறோம்; நாட்டைப் பாதுகாப்பது முதற்கொண்டு, வீட்டைப் பாதுகாப்பது வரை ஏகப்பட்ட ஏற்பாடுகள். நம்முடைய பொருள்கள் மற்றும் உடைமைகள் மட்டுமல்ல, நம்முடைய உரிமைகளும் களவு போய்விடக் கூடாது என்பதில் பெருங்கவனத்தோடு செயல்பட வேண்டியிருக்கிறது.

    திருடுபோய்விடாமல் தடுக்க நாம் எவ்வளவு கவனத்தோடு இருந்தாலும் திருடர்கள் நம்மை விட விழிப்புணர்வோடு திருட்டுத் தொழிலை நடத்தி விடுகிறார்கள். 'கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா?' என்கிற பழமொழி, திருடர்களே திறமைசாலிகள் என்பதை வலியுறுத்தி நம்மை உஷார்ப்படுத்தவே வந்தது ஆகும். திருடர்கள் எனப்படும் கயவர்களும் பார்ப்பதற்குச் சாதாரண மனிதர்களைப் போலவே இருப்பார்கள்; ஏமாந்து போகாதீர்! என்கிறார் திருவள்ளுவர். அவர் இன்னும் ஒருபடி மேலே போய், திருடர்கள், தங்களுக்கு விருப்பமான திருட்டுகளை, விரும்பியபடி நடத்திக் காட்டும் வல்லமை மிக்கவர்கள் என்பதனால் வானுலக தேவர்களுக்கு இணையானவர்கள் என்று புகழ்வதுபோல இகழ்கிறார்.

    நம் தமிழில், 'களவும் கற்று மற!' என்கிற ஒரு புதுமையான பழமொழியும் உண்டு. அப்படியானால் களவு என்பது கற்றுக்கொள்ள வேண்டிய அளவுக்கு ஒரு சிறந்த பாடமா? களவைக் கற்றுக்கொள்வதனால் விளையும் நன்மைகள் யாவை? அது ஏன் களவைக் கற்றுவிட்டுப் பிறகு மறந்துவிடச் சொல்கிறது பழமொழி? எனப் பல கேள்விகள் எழலாம்.

    களவு எனப்படும் திருட்டு காலகாலமாக ஒரே மாதிரியாக இருப்பதில்லை; அது காலத்திற்குக் காலம் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. முன்பெல்லாம் சம்பாதித்த பணத்தையும் நகைகளையும் பொருள்களையும் அவரவர் தமது வீடுகளில் மட்டுமே பாதுகாத்து வைத்திருப்பர். திருடர்கள், பணக்காரர்கள் வீடுகளாக நோட்டமிட்டு, வீடு வீடாகச் சென்று சுவற்றிலோ அல்லது கூரைகளிலோ ஓட்டையிட்டு வீட்டுக்குள் புகுந்து அடுக்குப்பானை, அரிசிப்பானை, பீரோ, டிரங்குப்பெட்டி என ஒன்றுவிடாமல் அலசித், திருடிச் செல்வார்கள். வீட்டில் ஆள்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போதோ அல்லது வெளியூர், கோவில் குளங்களுக்குச் சென்றிருக்கும்போதோ இது நடக்கும். ஊர்க்காவல் தாண்டி, தெருக்காவல் தாண்டி, வீட்டுக்காவல் தாண்டி, நாய்கள் தொல்லைகள்தாண்டி, இந்தத் திருட்டை நிகழ்த்த வேண்டியது திருடர்களுக்குப் பெரும் சவாலாகவே இருந்தது.

    இப்போது தெருக்கள்தோறும் வங்கிகள் வந்து விட்டன. பணத்தை மட்டுமல்ல, நகைகளையும் மதிப்புமிக்க பத்திரங்கள் போன்றவற்றையும் பாதுகாத்து வைப்பதற்குப் பாதுகாப்புப் பெட்டக வசதிகள் வந்துவிட்டன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை விரைந்த நடைமுறைக்கு வந்துவிட்டதால், இப்போதெல்லாம் யாருடைய பாக்கெட்டிலும் பர்சிலும் பணம் என்பதே இல்லாமல் போய்விட்டது. சாதாரண தேநீர்க்கடை முதற்கொண்டு, காய்கறிக்கடை, பலசரக்குக்கடை, இளநீர்க்கடை, ஆட்டோ, டாக்சி, ரயில் பயணங்கள், விமானப் பயணங்கள் என எல்லாவற்றிலும் செல்பேசிகொண்டே பணம் செலுத்தும் வசதிகள் வந்துவிட்டன. தவிர வங்கிகள் தந்துள்ள கடன் அட்டைகள், சேமிப்பு அட்டைகள் மூலமாகவும் பணம் செலுத்தி விடலாம். எனவே எல்லாருடைய மணி பர்சுகளும் தற்போது பண அட்டை வைக்கும் பர்சுகளாக மாறிவிட்டன.

    எவர் கையிலும் , எந்த வீட்டிலும் பணம் இல்லை; எந்த வீட்டிலும் குண்டுமணித் தங்கம்கூட இல்லை; எல்லாம் வங்கிப் பெட்டகங்களில் பாதுகாப்பாக இருக்கின்றன; இனித் திருடுவதற்குத் திருடர்கள் எங்கே போவார்கள்?. இனி வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியே செல்வதில் எந்தப் பயனுமில்லை; திறந்துவைத்துவிட்டே அந்தக் காலங்களைப்போல செல்லலாம்; உள்ளே திருடும் நோக்கத்துடன் யார் நுழைந்தாலும் வெறுங்கையோடுதான் வெளியே செல்ல வேண்டும்.


    பணம் நகைகள் எல்லாம் வங்கிப் பெட்டகங்களுக்குச் சென்றுவிட்டதால், திருடர்களின் முற்றுகையெல்லாம் தற்போது வங்கி வளாகங்களை நோக்கியே இருக்கின்றன. தானியங்கிப் பணம் வழங்கும் இயந்திரங்களைத் தகர்ப்பது; வங்கிக் கட்டிடங்களை ஓட்டையிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும், பலமாக இருக்கும் பாதுகாப்பு வளையங்களால் திருடர்களின் முயற்சிகள் முழு வெற்றிகள் அடைவதில்லை.

    எல்லாமே டிஜிட்டல் மயம் என்று ஆகிவிட்டதால் இப்போது பணத்திருட்டும் டிஜிட்டல் மயமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் சாதாரண மனிதர்கள்கூடக் களவைக் கற்று மறக்க வேண்டிய தருணத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். முன்பெல்லாம் பணத்தை, உடையவருக்குத் தெரியாமல் எடுப்பது திருட்டாக இருந்தது; ஆனால் இன்று சைபர் குற்றமாகும் டிஜிட்டல் திருட்டில், உடையவரின் கைகைகளைக் கொண்டே அவருடைய பாக்கெட்டிலேயே விரல்களை நுழைத்து அவருடைய சொந்தப்பணத்தையே எடுக்கவைத்துப் பெற்றுக்கொள்ளும் வினோதத் திருட்டுமுறை நடந்து கொண்டிருக்கிறது.

    முகநூல் வழியே போலி அடையாளங்களை உருவாக்கிப் பணம் கேட்பதும், குறுஞ்செய்திகள் வழியே லிங்க்கைத் தொடச் சொல்லி வங்கிக் கணக்கு வரை அழைத்துச் சென்று பணம் பறிப்பதும் நடக்கின்றன. செல்பேசியில், பதிவு செய்யப்பட்ட குரல்வழியே," நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள்!, ஒன்றை அழுத்துங்கள்! ஓடிபி வந்தால் உடனே அழுத்துங்கள்! என்று நம் கை விரல்களை வைத்தே நமது வங்கிச் சேமிப்பைத் திருடும் கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது. வங்கியில் இருந்து அழைப்பதுபோல் நம் விரல்கொண்டு நம்கண்ணைக் குத்துவதுபோல் திருடுவோரும் உண்டு. களவைக் கற்று மற! என்று அந்தக் காலத்தில் சொன்னது, இந்தக்கால டிஜிட்டல் திருட்டு முறைகளில் இருந்து தப்பிக்கும் விழிப்புணைர்வை அடைவதற்காகத்தானோ என்னவோ!.

    திருட்டு என்பது உடம்பால், உடம்பின் அங்கங்களால் பொருள்களைக் களவாட நிகழ்த்தப்படும் திருட்டு மட்டுமல்ல; யாருக்கும் தெரியாமல் நிகழ்த்தப்படும் எந்தத் தீய செயலும் திருட்டுத்தான். திருட்டு என்பது அடுத்தவர் அறியாமல் அடுத்தவர்பாக்கெட்டிலிருந்து எடுக்கப்படும் பத்து ரூபாயும் திருட்டுதான்; கோடிக்கணக்கில் ஊழல் செய்து பெறப்படும் லஞ்சப்பணமும் திருட்டுதான். அளவுக்குமீறி லாபம் வைத்துப் பொருள்வணிகம் செய்து பணம் சம்பாதிப்பதும் திருட்டுதான்; வாங்கிய சம்பளத்திற்கும் கூலிக்கும் உழைக்காமல் ஏமாற்றித் திரிவதும் திருட்டுதான். மகாத்மா காந்தியடிகள் கூறுவார், உண்ணும் உணவுக்கேற்ற உடலுழைப்புச் செய்யாமல் உண்பதுகூடத் திருட்டுதான்.

    ஒரு கிராமத்து விவசாயி, தன்னுடைய நிலத்தில் அந்த போகத்தில் அமோகமாக விளைந்த தானியங்களை மூட்டைகளாகக் கட்டி வண்டியில் ஏற்றி அருகிலிருந்த நகரத்துச் சந்தைக்கு வந்து விலைக்குப் போட்டார். அமோக விளைச்சல் என்பதால் பணமும் அமோகமாகக் கிடைத்தது. பணத்தை ஒரு மஞ்சள் துணிப்பையில் எடுத்துக்கொண்டு, வண்டியை கிராமத்துக்கு அனுப்பி வைத்துவிட்டுச், சந்தைக்கு அருகிலிருந்த சிவன்கோவிலுக்கு வந்து மனமுருக வழிபட்டார்; வீட்டுக்குக் கிளம்பும் அவசரத்தில் கோவில் சன்னதி அருகில் இருந்த திண்டில் பணப்பையை மறந்து வைத்துவிட்டார். அவர் அங்கிருந்து சென்றபிறகு, அந்த ஊரின் ஓய்வுபெற்ற ஆசிரியர் வழிபாட்டிற்கு வந்தார். வழிபாடு முடித்தபின் திண்டில் பணப்பை இருப்பதைப் பார்த்தார்; அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார்.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    ஆசிரியரின் வீடு கோவிலை ஒட்டியதாக இருந்தது. வீட்டிற்கு வந்த ஆசிரியர், ஒரு சிலேட்டில் இவ்வாறு எழுதினார்," கோவிலுக்குள் பணப்பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொலைத்தவர்கள் அடையாளம் கூறிப் பெற்றுக் கொள்ளலாம்". பணப்பை தொலைத்த விவசாயி, கோவிலுக்குள் நுழைந்து தேடினார்; காணவில்லை; கோவிலுக்கு வெளியே வந்தார்; ஆசிரியர் வீட்டு வாசலில் சிலேட்டில் எழுதப்பட்டிருந்த அறிவிப்பைப் படித்தார். உள்ளே சென்று அடையாளம் சொன்னார் விவசாயி. பையை எடுத்துவந்து விவசாயியிடம் தந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், பணம் சரியாக இருக்கிறதா? என எண்ணிப்பார்த்து எடுத்துச் செல்லுங்கள்! என்று தந்தார்.

    எண்ணிப்பார்த்த விவசாயி, சரியாக இருக்கிறது என்று கூறிவிட்டுச், சரிபாதி பணத்தைக் கட்டுகளாக எடுத்து, இதை எனது அன்பளிப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்! என்று ஆசிரியரிடம் நீட்டினார். " ஐயா இந்தப் பணத்தின்மீது எனக்கு ஆசை இருந்திருந்தால், உங்களுக்குத் தராமல் முழுப்பணத்தையும் நானே எடுத்து வைத்திருப்பேன்!. இது உங்கள் பணம்; நீங்களே எடுத்துச் செல்லுங்கள்!" என்றார் ஆசிரியர். சற்றும் எதிர்பாராத வண்ணம் பாதிப்பணத்தை ஆசிரியர் வீட்டு மேசையில் வைத்து விட்டு, வீட்டை விட்டு வெளியே ஓடத்தொடங்கினார் விவசாயி. உடனே ஆசிரியர்,"ஐயோ திருடன்! திருடன்!" என்று சத்தம்போட்டுக் கத்தத் தொடங்கி விட்டார்.

    இங்கே விவசாயி எப்படித் திருடன் ஆனார்? அவர் பணத்தை அல்லவா விட்டுச் செல்கிறார்!. அக்கம் பக்கத்தார் ஆசிரியரிடம் வந்து கேட்டனர், "அவர் எதைத் திருடிக்கொண்டு செல்கிறார்?". ஆசிரியர் சொன்னார், " என்னுடைய நேர்மையை!.... இதுவரை நான் சம்பாதித்த நாணயத்தை!... இந்தப் பணத்தை இங்கே வைத்துவிட்டுச் செல்வதன் மூலம் திருடிக் கொண்டு செல்கிறார்" என்று.

    ஆம்!. திருட்டு என்பது அங்கங்களால் நிகழ்த்தப்படும் பொருள் திருட்டு மட்டுமல்ல!; அடுத்தவரிடம் ஒரு நல்ல பொருள், விலைமதிக்கமுடியாத பொருள் இருந்தால், 'ஆஹா! திருடினால் என்ன?' என்று மனத்தால் திட்டமிட்டாலே திருட்டுதான்.

    "உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

    கள்ளத்தால் கள்வேம் எனல்" என்பது வள்ளுவம்

    தொடர்புக்கு 9443190098

    ×