என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    செல்வமும் மகிழ்ச்சியும் தழைக்க திருச்செந்தூரானுக்கு பச்சைசாத்தி வழிபாடு
    X

    செல்வமும் மகிழ்ச்சியும் தழைக்க திருச்செந்தூரானுக்கு பச்சைசாத்தி வழிபாடு

    • பச்சை சாத்தி திருக்கோலத்தைக் காண்பதற்கு அதிகமான மக்கள் வருகின்றனர்.
    • ஆலயம் சென்று வழிபட முடியாத பக்தர்களின் இருப்பிடம் தேடிவந்து அருள்பாலிப்பதாக நம்பிக்கை.

    முருகப் பெருமானின் படைவீட்டுப் பழமையும் பெருமையும் சிறப்பும் திருச்செந்தூர் தலத்திற்கே உண்டு. காரணம் திருச்செந்தூர் சிறப்புகள் பற்றி பழங்தமிழ் இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் மிக ஆழமாகப் பதிவு செய்துள்ளன.

    அடியார்களும் ஞானியர்களும் புலவர்களும் திருச்செந்தூரின் பெருமைகளையும் செந்தூரானின் திருவடிச் சிறப்புகளையும் பலவாறு பல காலங்களில் புகழ்ந்துரைத்துள்ளனர். திருச்செந்தூர் திருத்தலம் தலம், தீர்த்தம், மூர்த்தம் என்னும் முப்பெரும் சிறப்புகளையுடையது. இத்தலம் திருக்கோவில் அதிசயங்களுள் ஒன்று. வேறு எங்குமில்லாத சிறப்புடையது.

    இத்திருக்கோவில் வரகுணபாண்டியன், உக்கிரபாண்டியன் தொடங்கி நாயக்கர்கள் வழி நடந்து ஐரோப்பியர்களால் சிதைக்கப்பட்டு கேரள சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டு நடந்து துறவியர்களால் பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவத்துடன் புனரமைக்கப்பட்ட இராஜ கோபுர திருக்கோவில் என வளர்ந்ததாகும்.

    திருச்சீரலைவாய் என வழங்கப்பட்டு வந்த இத்தலம் செந்நிறமுடையவன், சேந்தன் எனவே சேந்தில் என்பது செந்தில் என வழங்கலாயிற்று. தேவாரப் பனுவல்கள் காலத்திற்கு முன்புவரை அலைவாய் செந்தில் என அழைக்கப்பட்ட இவ்வூர் செந்தில் ஊர் என அழைக்கப்பட்டு பின் செந்தூர் என்றாயிற்று. திரு என்னும் அடைமொழியுடன் திருச்செந்தூர் என வழங்கப்படுகிறது.

    தேவர்களால் வடிவமைக்கப்பட்ட இத்திருக்கோவில் கருவறைக்குள் முருகன் வழிபட்ட சூரிய லிங்கம், சந்திரலிங்கம் என்னும் இரு லிங்கங்கள் சுவரில் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளன. மூலவர் இருக்கும் கருவறைக்குப்பின் குகைக்குள் அமைந்திருக்கிறது.

    திருச்செந்தூர் திருக்கோவில் வெளிப் பிரகாரத்திலிருந்து கடல் மட்டம் அளவு படிகள் வழியாகக் கீழிறங்கி வந்து வழிபடும் வகையிலும் முருகனருள் பெற்று மேல் ஏறி வந்து வாழ்க்கையிலும் உயர்வெய்தி மகிழ்வடையவும் தத்துவாார்த்த நோக்கில் ஓம் வடிவத்தில் திருக்கோவில் அமைந்திருக்கிறது. முதலில் பூர்வதிசை (கிழக்கு) நோக்கியே அமைந்திருக்க வேண்டும். அங்கு ஒரு வாயிலும் கோபுரமும் இருந்தது. தற்போது கோபுரம் மட்டும் உள்ளது. கிழக்கில் கடல் அமைந்திருப்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் அடைக்கப்பட்டு தெற்கு வாயில் திறக்கப்பட்டிருக்கலாம். மேல வாயிலில் இராஜகோபுரம் அமைந்திருக்கிறது.

    இக்கோபுரம் ஆண்டிற்கு ஒருமுறை கந்த சஷ்டியினைத் தொடர்ந்து தெய்வயானைத் திருமணம் நடைபெறும் சமயத்தில் அதிகாலை திறக்கப்பட்டு திருமணம் முடிந்தவுடன் அடைக்கப்பட்டு விடுகிறது. வடக்கு வாயில் ஒன்று உண்டு. அதன் வழியாகவே பக்தர்கள் வெளியில் வருகிறார்கள். கி.பி 15 -ஆம் நூற்றாண்டிற்குப் பின் மேலக் கோவில் எனப்படும் சிவக் கொழுந்தீஸ்வரர் திருக்கோவிலில் இருந்து முருகன் சிற்பம் கடற்கரை கோவிலுக்கு மாற்றப்பட்டது. எனவே அதற்குப் பின்பே கடற்கரைக் கோவில் எழுப்பப்பட்டிருக்கலாம். 19-ம் நூற்றாண்டுகளுக்குப்பின் காசிசுவாமி மௌனசுவாமி, ஆறுமுகசுவாமி, வள்ளிநாயகசுவாமி, அமாவாசை சுவாமிகளால் புனரமைப்பு செய்யப்பட்டு கருங்கல் கட்டிடமாக மாறியது. தற்போது ரூபாய் 300 கோடி செலவில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது.


    இத்திருக்கோவிலுக்கு இரு கொடி மரங்கள் உள்ளன. இது வேறு எங்குமில்லாத சிறப்பாகும். இலங்கை கண்டி மன்னன் கனவில் இறைவன் தோன்றி தனக்குரிய கொடிமரத்தைக் காட்ட அவர் இறைவன் கட்டளைக்கேற்ப ஒரு மரத்தை வெட்டி கடலில் போட அதனை எருமைகள் தள்ளிக் கொண்டு வந்து கரை சேர்க்க அது வெளிப் பிரகாரத்தில் மூலவர் எதிர் கிழக்கில் செப்புக் கொடிமரமாக அமைந்துள்ளது. மற்றொரு கொடிமரம் மேற்கு தொடர்ச்சி மலையில் சுடலை மாடனுக்குச் சொந்தமான காக்காச்சி மலை மரத்தை பல உயிர்களை இழந்து கொண்டு வந்து நிறுத்தினர்.

    தீர்த்தச் சிறப்பைப் பொறுத்தவரை வதனாரம்பம் அல்லது முகாரம்பம் எனப்படும் கடல் தீர்த்தம், கந்த புஷ்கரணை எனப்படும் நாழிக்கிணறு, சரவணப் பொய்கை உள்ளிட்ட 24 தீர்த்தங்கள் உண்டு. இவற்றில் முதல் மூன்றும் மிக முக்கியமானவை பிற தீர்த்தங்கள் திருச்செந்தூரைச் சுற்றிலும் நீர்க் கேணிகளாக அமைந்துள்ளன. அவை இன்று இயற்கை சீற்றத்தாலும் மனிதர்களின் பேராசைக் குணத்தாலும் மறைந்தும் மறைக்கப்பட்டும் உள்ளன. இத்தீர்த்தங்களில் நீராடி முருகப் பெருமானை வழிபட்டால் வந்த வினைகள், வருகின்ற வினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்பது அருணகிரியார் உள்ளிட்ட அடியார்களின் அனுபவ உண்மை.

    திருச்செந்தூர் திருக்கோவிலில் வேறு எங்குமில்லாத வகையில் ஆண்டிற்கு இரு திருவிழா நடைபெறுகின்றன. அவை மாசி திருவிழா மற்றும் ஆவணி திருவிழா. தற்போது ஆவணி திருவிழா நடைபெற்று வருகிறது. இரு திருவிழாக்களிலும் மிகச் சிறப்பாக பக்தர்கள் மிகவும் எதிர்பார்த்து வணங்குவது 7, 8 ஆம் திருவிழாக்களின் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி பவனியாகும். இவ்வழிபாட்டில் பங்கெடுத்துக்; கொள்வதை வாழ்வில் செய்த பாக்கியமாகக் கருதி வழிபடுகின்றனர். அவ்வாறே பக்தர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன.

    சிவப்பு சாத்தி வழிபடும் பக்தர்கள் செவ்வாடை அணிந்து செம்மலர் கொண்டு வழிபடுவதைக் காணலாம். ஒரு முறை மிகச் சிறந்த முருக பக்தனான பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் பிள்ளையன் கட்டளையைத் தனது கட்டளையாக நடத்த விரும்பி தமது சமூகத்து மண்டபத்திற்கு ஆறுமுகப் பெருமானைக் கொண்டுவர முயற்சித்தான். ஆனால் அம்முயற்சி நடைபெறவில்லை. மிகக் கடுமையான சூரைக்காற்றும் கனமழையும் அம்முயற்சியைத் தடுத்து விட்டன. முருகப் பெருமானின் விருப்பத்தை அறிந்த கட்டபொம்மன் அம்முயற்சியைக் கைவிட்டான் என ஒரு செய்தி உண்டு.

    கு.கதிரேசன்

    அதிகாலை 2 மணி அளவில் சிவன் கோவில் மண்டகப்படி ஆராதனையினை ஏற்று சிவாலயத்தைச் சுற்றி வந்து வெள்ளை சாத்தி மண்டபத்தில் இறங்குவார். 3 மணி அளவில் அபிசேகத்தைத் தொடர்ந்து வெள்ளைப் பட்டுடுத்தி வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொற் சப்பரத்தில் அமர்ந்து மிக வேகமாக எட்டு வீதிகளையும் சுற்றி வருவார். சூரிய உதய நேரத்தில் இது நிகழ்வதால் காலை இளம் சூரியனின் கதிர்பட்டு ஆறுமுகப் பெருமான் காண்பவர் கண்களையும் கருத்தையும் கவரும் வகையில் மிக அழகாகக் காட்சித் தருவார். இத்திருக்காட்சி உயிர்களைப் படைக்கும் பிரம்ம தேவரை சித்திரிக்கிறது. ஆனால் இக்காட்சியினைப் பெரும்பாலும் மக்கள் விரும்பிப் பார்ப்பதில்லை. வெள்ளை நிறத்தை மக்கள் அமங்கல நிறமாக கருதுவதாலும் பிரம்ம தேவன் காட்சியில் ஈர்ப்பில்லாத நிலையும் அதிகாலை நேரம் ஆதலாலும் அதிகமானோர் பார்ப்பதில்லை. எனவே இவ்வெள்ளை சாத்தி பவனி மிக வேகமாக வந்து பச்சை சாத்தி மண்டபத்தில் இறங்கிவிடும்.

    8 ஆம் திருநாள் காலை பச்சை சாத்தி மண்டபத்தில் சிறப்பு அபிசேகம் நடைபெற்று ஆறுமுகப் பெருமான் வள்ளி, தெய்வ யானையுடன் பச்சை மரகத கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டுடுத்தி, பச்சைக்கல் மாலை, பச்சை மரிக்கொழுந்து, ஏலக்காய் மாலை அணிந்து பச்சைமால் வண்ணனான மகா விஷ்ணுவின் அம்சமாகப் பக்தர்களுக்குக் காட்சி தருவார். பக்தர்களும் பச்சை ஆடை உடுத்தி பச்சைக் கொழுந்து மாலை, பச்சைப்பட்டு, தேங்காய்ப் பழம், பன்னீர் சாத்தி வழிபடுவர். இக்காட்சியினைக் காண்பவர் வாழ்க்கை என்றும் பசுமையாக இருக்கும் என்பது நம்பிக்கை. மகிழ்ச்சியும் சகல செல்வங்களும் கொழிக்கும் எனவும் நம்புகின்றனர். பச்சை சாத்தி பார்ப்பவர்களுக்கு மனதில் மகிழ்ச்சி பெருகும். மணமாகா தவர்களுக்கு மணமாகும் குழந்தைப் பேரில்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும்.

    வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கை உண்டு. எனவே பச்சை சாத்தி திருக்கோலத்தைக் காண்பதற்கு அதிகமான மக்கள் வருகின்றனர். நாதஸ்வர தவில் வாத்தியம் மற்றும் தேவாரப் பண்ணிசை முழங்க முருகப் பெருமான் எட்டு வீதிகளிலும் காட்சி தருவார். காலை புறப்பட்டு பச்சை சாத்தி திருக்காட்சி, மறுநாள் அதிகாலை 2 மணி அளவில் சந்நிதி தெரு வழியாக வசந்த மண்டபத்தில் மண்டகப் படியேற்று சண்முக விலாசமடைந்து அதிகாலையில் தமது இருப்பிடத்திற்குச் சென்று ஆகம முறைப்படி ஆராதனை ஏற்று திருக்கோவில் சேர்வார். இதனை "சேர்க்கை" என குறிப்பிடுகின்றனர். சுவாமி வெளியில் வருவதை ஏற்றம் எனவும் திருக்கோவில் சென்று சேர்வதை சேர்க்கை எனவும் கூறி வழிபடுவதைக் காணலாம். ஆலயம் சென்று வழிபட முடியாத பக்தர்களின் இருப்பிடம் தேடிவந்து அருள்பாலிப்பதாக நம்பிக்கை. இருக்கும் இடம் நாடி வந்து அருள் வழங்கும் இறைவனை வரவேற்கும் மக்கள் புத்தாடை அணிந்து மாக்கோலமிட்டு, வான வேடிக்கை வைத்து பக்தர்களுக்குப் பருகிட பானகம் தந்து உபசரிக்கும் அற்புதமான மனிதநேயத் திருவிழாவாக அமைந்துள்ளது. மேலும் வளத்தினை, செழிப்பினை, செல்வத்தினை, மகிழ்ச்சியினை வழங்கும் திருவிழாவாக நடந்து வருவது சிறப்பிற்குரியது.

    தொடர்ந்து 9 ஆம் திருவிழா காலையில் வெள்ளிக் குதிரையில் அமர்ந்து வேட்டை ஆடும் மண்டபம் சென்று வேடபரி நடத்துவார். இரவு குமரவிடங்கப்பெருமான் இராவணன் கைலாய மலையைப் பெயர்த்த திருக்காட்சி சப்பரத்தில் தோன்றி தேருக்குத் தரிசனம் தந்து இரத வீதியில் வலம் வருவார். 10 ஆம் நாள் காலையில் தேரோட்டம் நடைபெறும். தேர்வடம் பிடித்து முருகப் பெருமானை மகிழ்ச்சிப்படுத்தி பக்தர்கள் தானும் மகிழ்ச்சியடை கின்றனர். அவர்கள் வாழ்வும் இறையருளால் மகிழ்ச்சியடைகிறது. எனவே திருவிழா நாயகன் திருச்செந்தில் ஆண்டவனைத் தரிசிப்போம். சகல செல்வங்களையும் பெறுவோம்.

    Next Story
    ×