என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ரியோ ஒலிம்பிக்ஸ்-2016
சென்னை:
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் ஆக மொத்தம் 2 பதக்கம் கிடைத்தன.
பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளியும், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
இதை தொடர்ந்து ரியோ நகரில் மாற்றுதிறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. 18-ந்தேதி வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் ரியோ டி ஜெனீரோ நகரில் நடக்கிறது.
இதில் இந்தியா சார்பில் 16 வீரர்களும், 3 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 19 பேர் பங்கேற்று உள்ளனர். வில்வித்தை, தடகளம், வலுதூக்குதல், நீச்சல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 5 விளையாட்டுகளில் 20 பிரிவுகளில் இந்தியர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார். உயரம் தாண்டும் போட்டியில் அவர் 1.89 மீட்டர் தாண்டி தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.
இந்தியாவை பெருமைப்பட வைத்த 20 வயதான மாரியப்பன் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.
அவரது தந்தை தங்கவேல் செங்கல் சூளையில் வேலை செய்கிறார். தாய் சரோஜா காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தனது 5-வது வயதில் மாரியப்பன் பஸ் விபத்தில் காயம் அடைந்தார். அவரது வலது கால் முழங்காலுக்கு கீழ் செயல் இழந்தது.
கடந்த மார்ச் மாதம் துனிசியாவில் நடந்த கிராண்ட்பிரீ போட்டியில் 1.78 மீட்டர் தாண்டி பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். 1.60 மீட்டர் உயரம் தான் தகுதியாக இருந்தது.
பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற 3-வது இந்தியர் என்ற பெருமையை மாரியப்பன் பெற்றார்.
இதற்கு முன்பு 1972-ல் நீச்சல் வீரர் முர்லிகன்ட் பெட்கர் 50 மீட்டர் பிரீஸ்டை லிலும், 2004-ம் ஆண்டு தடகள வீரர் தேவேந்திர ஜகாரியா ஈட்டி எறிதலிலும் தங்கம் வென்று இருந்தனர்.
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து. ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் தற்போது நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் நீங்கள் தங்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றுள்ளீர்கள். பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் முறையாக உயரம் தாண்டுதலில் தங்கம் கிடைத்துள்ளதை இதன் மூலம் அறிகிறேன்.
இதன் மூலம் நீங்கள் புதிய வரலாறு படைத்து நாட்டுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். நீங்கள் பல்வேறு தடைகளை தாண்டி இந்த சாதனை புரிந்துள்ளீர்கள். உங்களின் இந்த சாதனை அனைத்து இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஊக்கத்தை அளிக்கும்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களுக்கு தமிழக அரசு ரூ.2 கோடி பரிசு தொகை வழங்குகிறது. அதன்படி உங்களுக்கு இந்த பரிசு தொகையை தமிழக அரசு வழங்குகிறது. இதனை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பெருமை தேடிக் கொடுத்த மாரியப்பனுக்கு மத்திய அரசு ரூ.75 லட்சம் பரிசு தொகையை அறிவித்து உள்ளது.
மத்திய விளையாட்டுத் துறை மந்திரி விஜய் கோயல் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இதே உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்தியருக்கு வெண்கலம் கிடைத்தது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த வருண்சிங் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். அவருக்கு மத்திய அரசு ரூ.30 லட்சம் பரிசு தொகையை அறிவித்துள்ளது.
பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியா தங்கம் மற்றும் வெண்கலம் பதக்கம் பெற்று முத்திரை பதித்தது. இதன் மூலம் இந்தியா பதக்க பட்டியலில் 24-வது இடத்தை பிடித்தது.
பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் மற்றும் வெண்கலம் வென்ற வருண் சிங் பட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இருவரும் நாட்டுக்கு பெருமை சேர்த்து இருப்பதாக தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். நடிகர்கள் அமிதா பச்சன், அபிஷேக், சூர்யா, சிவக்கார்த்திகேயன், சந்தானம், டைரக்டர் மோகன் ராஜா, இசையமைப்பாளர் தமன், பாடகி சின்மயி உள்பட திரை உலகினர், வசந்தகுமார் எம்.எல்.ஏ. உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இருந்து பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து, தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரரான வருண் பட்டி வெண்கலப்பதக்கத்தையும் வென்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடுகளுக்கான ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக முன்னர் பதவி வகித்தவர் பேட்ரிக் ஹிக்கி(71). அயர்லாந்து நாட்டை சேர்ந்த இவர், அந்நாட்டின் ஒலிம்பிக் கமிட்டி தலைவராகவும் முன்னர் பதவி வகித்தார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிரந்தர உறுப்பினராக தற்போது உள்ளார்.
இந்நிலையில், ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை காணவந்த இவர், அயர்லாந்து நாட்டின் ஒலிம்பிக் கமிட்டியினருக்கு அளிக்கப்பட்டிருந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ஒரு தனியார் நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்று, பணஆதாயம் அடைந்ததாக ரியோ ஒலிம்பிக் குழுவினருக்கு ஆதாரங்களுடன் தகவல் வந்தது.
இதன் அடிப்படையில், ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த பேட்ரிக்கை கடந்த மாதம் 10-ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கிய பிரபல விளையாட்டு நிறுவனத்தை சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் இங்குள்ள பாங்கு டென் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரையும் ஜாமினில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டாலும், மேற்படி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை முடியும்வரை
ரியோ டி ஜெனீரோ நகரில் தங்கியிருக்கும்படி வலியுறுத்தியுள்ள நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரின் பாஸ்போர்ட்களையும் முடக்கி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு கமாண்டர் மற்றும் விளம்பர தூதர் பதவிகளை வழங்கி கௌரவிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புப் படை(சி.ஆர்.பி.எப்.) முடிவு செய்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு கேல் ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி பாராட்டினார். விருதுடன் தலா ரூ.7½ லட்சமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கமான நடைமுறைகளின் படி கமாண்டர் பதவியை வழங்குமாறு சி.ஆர்.பி.எப் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு கிடைத்த பின் அதிகார பூர்வமாக பி.வி.சிந்துவுக்கு கமாண்டர் பதவி வழங்கபடும்.
சி.ஆர்.பி.எப்.கமாண்டர் பதவி என்பது போலீஸ் துறையில் எஸ்.பி பதவிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் உத்தரவிட்டு உள்ளார்.
நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே சார்பில் 31 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த நாட்டின் சார்பில் எந்த வித பதக்கமும் பெற வில்லை. எந்த வீரரும் 8 வது இடத்திற்கு குறைந்து வரவில்லை.
இந்த நிலையில் ஜிப்பாப்வே அதிபர் ரோபர்ட் முகாபே பதக்கம் வெல்லாத ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட 31 வீரர் வீராங்கனைகளையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார்.
ஜிம்பாப்வே தேசிய இடைக்கால அதிகார சபை வெளியிட்டு உள்ள தகவலின் படி அதிபர் முகாபே போலீஸ் ஆணையாளர் அகஸ்டின் சிகுரியை சந்தித்தார் அப்போது ஹராரே விமான நிலையம் வந்து இறங்கும் ஒலிம்பிக போட்டியில் கலந்து கொண்ட அனைத்து ஜிம்பாப்வே வீரர் வீராங்கனைகளையும் கைது செய்ய உத்தரவிட்டு உள்ளார்.
இவர்கள் நாட்டின் பணத்தை வீணாக்கி விட்டனர் இவர்கள் எலிகள் அவர்களை நாம் விளையாட்டு வீரர்கள் என அழைக்கிறோம். அவர்கள் நாட்டிற்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இல்லை.இவர்களால் செம்பு,பித்தளை பதக்கங்கள் கூட வெல்ல முடியவில்லை ஆனால் நமது பக்கத்து நாடு போட்ஸ்வானாவால் முடிந்து உள்ளது. இவர்கள் அங்கு சென்று நமது பணத்தை வீணாக்கி வந்து உள்ளனர்.என அதிபர் கூறி உள்ளார்.
இது போல் 7 பதக்கங்களை மட்டுமே வென்ற வடகொரிய வீரர்கள் மீது அதிருப்தியில் இருந்த அந்த நாட்டு ஆட்சியாளர் கிம் ஜாங் யுன் பதக்கம் வெல்லாத வீரர்களை தண்டிக்கும் விதமாக, அவர்களை நிலக்கரி சுரங்கங்களில் கூலித்தொழிலாளியாக வேலைக்கு அமர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
பி.சி. சிந்து மோதிய இறுதிப் போட்டியை 66.5 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். முக்கியமான கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை பார்க்கும் மக்களின் எண்ணிக்கையை விட இது குறைவானது. என்றாலும், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டத்தை 50.1 மில்லியன் மக்கள் பார்வையிட்டனர். இதைவிட அதிகம் பேர் சிந்துவின் போட்டியை பார்த்துள்ளனர்.
அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை நோஜோமி ஒகுஹாராவுடன் மோதிய ஆட்டத்தை 25.6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இது இறுதிப்போட்டியில் 57.6 சதவீதமாக உயர்ந்தது. மூன்று செட்டுகள் நடைபெற்ற போட்டியில், 3-வது செட்டிற்கு 16.4 மில்லியனில் இருந்து 38 மில்லியனுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த தீபா கர்மாகர் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தனர்.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் விருது பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜீத்து ராயும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
இந்த நான்கு பேருக்கும் இன்று ஜனாதிபதி கைகளால் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அளிக்கப்பட உள்ளது.