search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்‌ஷி மாலிக் டெல்லி திரும்பினார்: உற்சாக வரவேற்பு
    X

    ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்‌ஷி மாலிக் டெல்லி திரும்பினார்: உற்சாக வரவேற்பு

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை இன்று தாயகம் திரும்பினார். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக போராடி இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுதந்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் இன்று தாயகம் திரும்பினார். இன்று அதிகாலை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது.




    அவரது வருகைக்காக காத்திருந்த பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாக்‌ஷிக்கு பூங்கொத்துகளை அளித்து வரவேற்றனர். ஒலிம்பிக்கில் வென்ற வெண்கலப் பதக்கத்தை அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் உயர்த்தி காட்டிய சாக்‌ஷி மாலிக், தனது தந்தையை கட்டியணைத்தவாறு ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒலிம்பிக்கில் நான் பதக்கம் வெல்ல ஊக்கப்படுத்தியவர்கள், பிரார்த்தனை செய்தவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அவர்களின் ஊக்கமும், பிராரத்தனையும்தான் இந்த வெற்றிக்கு துணையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

    ’எனது பயிற்சியாளர்களும், பெற்றோரும் இந்த கனவு நிறைவேற பக்கபலமாக இருந்தனர். சுஷில் குமார், யோகேஷ்வர் தத் போன்ற மூத்த மல்யுத்த வீரர்களும் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தனர். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்று கொண்டேன்.

    ஒலிம்பிக் நிறைவு விழாவில் நம்முடைய தாய்நாட்டு கொடியை ஏந்திச் சென்றபோது மிகவும் பெருமிதமாக இருந்தது. வரும் 29-ம் தேதியில் ஜனாதிபதியின் கையால் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெருவதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று தெரிவித்தார்.



    பின்னர், டெல்லியில் இருந்து சொந்த மாநிலமான அரியானாவுக்கு சென்ற சாக்‌ஷிக்கு அவரது பிறந்த ஊரான திக்ரி கரன் கிராம மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பகதூர்கர் நகரில் இன்று காலை நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்ற அரியானா மாநில முதல் மந்திரி மனோகர்லால் கட்டார், வெற்றி வீராங்கனை சாக்‌ஷியை வாழ்த்தியதுடன் இரண்டரை கோடி ரூபாய்க்கான பரிசு காசோலையில் விழா மேடையில் அளித்து கவுரவித்தார்.
    Next Story
    ×