search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பத்தம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு
    X

    பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பத்தம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு

    பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பத்தம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

    சென்னை:

    பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் ஆக மொத்தம் 2 பதக்கம் கிடைத்தன.

    பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளியும், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    இதை தொடர்ந்து ரியோ நகரில் மாற்றுதிறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. 18-ந்தேதி வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் ரியோ டி ஜெனீரோ நகரில் நடக்கிறது.

    இதில் இந்தியா சார்பில் 16 வீரர்களும், 3 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 19 பேர் பங்கேற்று உள்ளனர். வில்வித்தை, தடகளம், வலுதூக்குதல், நீச்சல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 5 விளையாட்டுகளில் 20 பிரிவுகளில் இந்தியர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார். உயரம் தாண்டும் போட்டியில் அவர் 1.89 மீட்டர் தாண்டி தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

    இந்தியாவை பெருமைப்பட வைத்த 20 வயதான மாரியப்பன் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.

    அவரது தந்தை தங்கவேல் செங்கல் சூளையில் வேலை செய்கிறார். தாய் சரோஜா காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தனது 5-வது வயதில் மாரியப்பன் பஸ் விபத்தில் காயம் அடைந்தார். அவரது வலது கால் முழங்காலுக்கு கீழ் செயல் இழந்தது.

    கடந்த மார்ச் மாதம் துனிசியாவில் நடந்த கிராண்ட்பிரீ போட்டியில் 1.78 மீட்டர் தாண்டி பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். 1.60 மீட்டர் உயரம் தான் தகுதியாக இருந்தது.

    பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற 3-வது இந்தியர் என்ற பெருமையை மாரியப்பன் பெற்றார்.

    இதற்கு முன்பு 1972-ல் நீச்சல் வீரர் முர்லிகன்ட் பெட்கர் 50 மீட்டர் பிரீஸ்டை லிலும், 2004-ம் ஆண்டு தடகள வீரர் தேவேந்திர ஜகாரியா ஈட்டி எறிதலிலும் தங்கம் வென்று இருந்தனர்.

    பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து. ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் தற்போது நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் நீங்கள் தங்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றுள்ளீர்கள். பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் முறையாக உயரம் தாண்டுதலில் தங்கம் கிடைத்துள்ளதை இதன் மூலம் அறிகிறேன்.

    இதன் மூலம் நீங்கள் புதிய வரலாறு படைத்து நாட்டுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். நீங்கள் பல்வேறு தடைகளை தாண்டி இந்த சாதனை புரிந்துள்ளீர்கள். உங்களின் இந்த சாதனை அனைத்து இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஊக்கத்தை அளிக்கும்.

    ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களுக்கு தமிழக அரசு ரூ.2 கோடி பரிசு தொகை வழங்குகிறது. அதன்படி உங்களுக்கு இந்த பரிசு தொகையை தமிழக அரசு வழங்குகிறது. இதனை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீங்கள் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவுக்கு பெருமை தேடிக் கொடுத்த மாரியப்பனுக்கு மத்திய அரசு ரூ.75 லட்சம் பரிசு தொகையை அறிவித்து உள்ளது.

    மத்திய விளையாட்டுத் துறை மந்திரி விஜய் கோயல் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

    இதே உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்தியருக்கு வெண்கலம் கிடைத்தது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த வருண்சிங் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். அவருக்கு மத்திய அரசு ரூ.30 லட்சம் பரிசு தொகையை அறிவித்துள்ளது.

    பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியா தங்கம் மற்றும் வெண்கலம் பதக்கம் பெற்று முத்திரை பதித்தது. இதன் மூலம் இந்தியா பதக்க பட்டியலில் 24-வது இடத்தை பிடித்தது.

    பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் மற்றும் வெண்கலம் வென்ற வருண் சிங் பட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இருவரும் நாட்டுக்கு பெருமை சேர்த்து இருப்பதாக தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    இதே போல விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். நடிகர்கள் அமிதா பச்சன், அபிஷேக், சூர்யா, சிவக்கார்த்திகேயன், சந்தானம், டைரக்டர் மோகன் ராஜா, இசையமைப்பாளர் தமன், பாடகி சின்மயி உள்பட திரை உலகினர், வசந்தகுமார் எம்.எல்.ஏ. உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    நாடு முழுவதும் இருந்து பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    Next Story
    ×