என் மலர்tooltip icon

    ரியோ ஒலிம்பிக்ஸ்-2016

    ரியோவில் இருந்து திரும்பிய இந்திய வீராங்கனை சுதாசிங்கிற்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மாதிரி பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
    பெங்களுர்:

    இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனைகளில் ஒருவர் சுதாசிங். பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் பங்கேற்றார். 2-வது தகுதி சுற்றில் கலந்து கொண்ட அவர் 9-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

    உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுதாசிங் பிரேசிலில் இருந்த போதே, அவருக்கு லேசான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்தியா திரும்பியதும் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. காய்ச்சல், உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தென்அமெரிக்க நாடுகளை அச்சுறுத்திய ஜிகா வைரஸ் குறிப்பாக பிரேசிலை ஆட்டிப்படைத்தது. ரியோவில் கலந்து கொண்ட வீரர்களுக்கு இதுகுறித்து அச்சம் இருந்தது. இந்த வைரஸ் சுதா சிங்கையும் தாக்கி இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் அவரது ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது.

    சோதனையின் முடிவில் அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற தெரிய வந்துள்ளது. ஆனால், H1N1 வைரஸ் நோயான பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளதாக ரத்த மாதிரியில் தெரியவந்துள்ளது.

    ஜிகா வைரஸ் பயத்தால் சுதாசிங்கை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
    ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய மாரத்தான் வீராங்கனை ஓ.பி. ஜெய்ஷாவின் புகார் குறித்து விசாரணை நடத்த இரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் ஓ.பி. ஜெய்ஷா மாரத்தானில் போட்டியில் கலந்து கொண்டார். 157 வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த ஓட்டத்தில் ஜெய்ஷா 89-வது இடம் பிடித்தார். 42 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த மாரத்தான் போட்டி முடிந்தபோது ஜெய்ஷா மிகவும் சோர்வாக காணப்பட்டார்.

    ரியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. இந்தியா திரும்பிய ஜெய்ஷா இந்திய அதிகாரிகள் தன்மீது அக்கறை காட்டவில்லை என்பதை வெளிப்படுத்தினார்.

    இதுதொடர்பாக அவர் செய்தி சேனல்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது “வெயில் அதிகமாக அடிக்கும்போது மாரத்தான் வீராங்கனைகளுக்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும். பொதுவாக முதல் 8 கிலோ மீட்டரை தாண்டிய பின்னர் தண்ணீர் வழங்கப்படும். பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தண்ணீர் தேவைப்படும்.

    போட்டியில் கலந்து கொண்ட பிற வீராங்கனைகளுக்கு அவர்களது நாட்டு அதிகாரிகள் ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டர் தொலைவில் மேஜை அமைத்து அவர்களுக்கு திரவ உணவுகளை வழங்கினர். மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பிற வீராங்கனைகளுக்கு வழியில் உணவு கூட வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு எதுவும் வழங்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ ஒலிம்பிக்ஸ் கவுண்டர்கள் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அதனைத்தான் நான் நம்பியிருந்தேன்.

    போட்டி முடிவடைந்ததும் என்னுடைய உடலில் பல்ஸ் இல்லை என்பதை உணர முடிந்தது. இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை போன்றது’’ என்று ஜெய்ஷா கூறி உள்ளார்.

    ஒரு வீராங்கனையின் இந்த புகார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இந்திய தடகள பெடரேஷன் கூறுகையில் ‘‘போட்டி நடைபெற்ற நாளிற்கு முந்தைய நாள் போட்டிக்கான தயார் நிலை குறித்து கேட்டபோது, எதுவும் வேண்டாம் என்று வீராங்கனை கூறினார்’’ என்று கூறியிருந்தது.

    இந்நிலையில் வீராங்கனையின் புகார் குறித்து விசாரணை நடத்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி இருநபர் கொண்ட விசாரணைக் கமிட்டியை அமைத்துள்ளார்.

    இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மத்திய இணை மந்திரியும், இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரியுமான விஜய் கோயல், இப்புகார் குறித்து விசாரணை நடத்த விளையாட்டுத்துறை இணை செயலாளர் ஓங்கர் கேதியா, விளையாட்டுத்துறை இயக்குனர் விவேக் நாராயண் ஆகியோரை கொண்ட இருநபர் கமிட்டியை அமைத்துள்ளார்’’ என்று கூறியுள்ளது.

    இந்த கமிட்டி விசாரணை நடத்தி இன்னும் 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்.
    ரியோ ஒலிம்பிக்கில் 27 தங்கம் உள்பட 67 பதக்கங்கள் குவித்து பதக்கப் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி பிரிட்டன் 2-வது இடம் பிடித்தது.
    ரியோ ஒலிம்பிக் பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனீரோவில் கடந்த 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்றது. கடந்த சில ஒலிம்பிக் தொடர்களில் சீனா பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தது.

    போட்டியை நடத்திய சீனா 51 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் முதல் இடம்பிடித்தது. அமெரிக்கா 36 தங்கம், 38 வெற்றி மற்றும் 36 வெண்கலத்துடன் 110 பதக்கங்கள் பெற்று 2-வது இடம் பிடித்தது. பிரிட்டன் 19 தங்கம், 13 வெற்றி, 15 வெண்கலத்துடன் 47 பதக்கங்கள் வென்று 4-வது இடம் பிடித்தது.

    லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்கா 46 தங்கம், 28 வெள்ளி மற்றும் 29 வெண்கலத்துடன் 103 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்தது. சீனா 38 தங்கம், 29 வெள்ளி, 21 வெண்கலத்துடன் 88 பதக்கங்களுடன் 2-வது இடம் பிடித்தது. போட்டியை நடத்திய பிரிட்டன் 29 தங்கம், 17 வெற்றி, 19 வெண்கலத்துடன் 3-வது இடத்தையே பிடித்தது.

    ஆனால், நேற்று முன்தினம் முடிவடைந்த ரியோ ஒலிம்பிக்கில் பிரிட்டன் வீரர் - வீராங்கனைகள் சிறப்பான வகையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அந்த அணி 27 தங்கம், 23 வெள்ளி, 17 வெண்கலத்துடன் மொத்தம் 67 பதக்கங்கள் வென்று 2-வது இடம் பிடித்தது. சீனா 26 தங்கம், 18 வெற்றி, 26 வெண்கலத்துடன் 70 பதக்கங்கள் வென்று 3-வது இடம் பிடித்தது.

    இதன்மூலம் 1980-க்குப் பிறகு சுமார் 36 ஆண்டுகள் கழித்து பதக்கப் பட்டியலில் முதன்முறையாக சீனாவை பின்னுக்குத் தள்ளி பிரிட்டன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா 46 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலத்துடன் 121 பதக்கங்கள் குவித்து முதல் இடத்தை பிடித்துள்ளது.



    67 பதக்கங்கள் குவித்து 2-வது இடம்பிடித்த இங்கிலாந்து வீரர் - வீராங்கனைகள் இன்று பிரிட்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
    ரியோவில் இருந்து திரும்பிய இந்திய வீராங்கனை சுதாசிங் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
    பெங்களுர்:

    இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனைகளில் ஒருவர் சுதாசிங். பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் பங்கேற்றார்.

    2-வது தகுதி சுற்றில் கலந்து கொண்ட அவர் 9-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

    உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுதாசிங் பிரேசிலில் இருந்தபோதே லேசான உடல்நிலை பாதிக்கப்பட்டார். நாடு திரும்பியதும் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. காய்ச்சல், உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பிரேசில் நாட்டில் அனைவரையும் அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் நோய் உள்ளது. இந்த வைரஸ் சுதாசிங்கையும் தாக்கி இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த ரத்த சோதனை நடத்தப்படுகிறது. சோதனை முடிந்த பிறகே தெரியவரும்.

    சுதாசிங்கை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கர்நாடகா சுகாதார குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது.

    மேலும் ரியோவில் இருந்து திரும்பிய மேலும் 2 தடகள வீராங்கனைகளும் காய்ச்சலுடன் நாடு திரும்பி உள்ளனர்.

    ஒ.பி.ஜெய்ஷா (கேரளா), கவிதா ரவூத் (மராட்டியம்) ஆகியோருக்கு காய்ச்சல் இருந்தது. அவர்களின் உடல்நிலை தேறியதால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற லலிதா பாபருக்கு குருப்-1 அதிகாரிக்கு நிகரான அரசு வேலை வழங்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது.
    மும்பை :

    ரியோ ஒலிம்பிக் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய போட்டியில் தகுதி சுற்று மூலம் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் பங்கேற்றார். அவர் இதில் 10-வது இடத்தை பெற்று, பதக்கத்தை நழுவ விட்டார். இருந்தாலும், ஒலிம்பிக்கில் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷாவுக்கு அடுத்தபடியாக இறுதி சுற்றுக்கு முன்னேறிய 2-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையை லலிதா பாபர் பெற்றிருக்கிறார்.

    27 வயதான லலிதா பாபர், மராட்டிய மாநிலம் சத்தாராவை சேர்ந்தவர். அவரது இந்த சாதனையை கவுரவிக்கும் பொருட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், லலிதா பாபருக்கு குருப்-1 அதிகாரிக்கு நிகரான அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதேபோல், லலிதா பாபருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்குவதாக சத்தாராவை சேர்ந்த நாட்டுப்புற நடன கலைஞர் ஒருவர் அறிவித்திருக்கிறார்.

    ஏற்கனவே, லலிதா பாபருக்கு ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
    பேட்மிண்டன் வீராங்கனை சிந்து ஒரு இந்தியர் என்று அவரின் பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்திருக்கிறார்.
    ஐதராபாத்:

    ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய மக்களின் நேசத்துக்குரியவராக பி.வி. சிந்து மாறியிருக்கிறார்.

    ஆனால், சிந்து யாருக்கு சொந்தம் என்பதில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கிடையே தொடர்ந்து பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில் சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் 'சிந்து இந்தியாவிற்கு சொந்தமானவர்' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

    இருந்தாலும், இரண்டு மாநில அரசுகளும் இந்த விஷயத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவதாக இல்லை. இன்று காலை ராஜீவ்காந்தி விமான நிலையத்தில் வந்திறங்கிய சிந்துவை வரவேற்க ஆந்திர, தெலுங்கானா என இரண்டு மாநில அமைச்சர்களுமே போட்டிபோட்டு காத்திருந்தனர்.

    வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவிற்கு ஆந்திரா அரசு 3 கோடி ரூபாய் பணத்துடன், 1000 சதுர யார்டு வீட்டுமனை வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கானா அரசு 5 கோடி ரூபாயுடன் 1000 சதுர யார்டு வீட்டுமனை சிந்துவிற்கு பரிசாக வழங்கப்படும் என்று போட்டியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
    விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு 2016 ம் ஆண்டிற்கான ராஜீவ் கேல் ரத்னா, துரோணாச்சாரியார் விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்ற  பி.வி.சிந்து, வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரர் ஜித்து ராய் உட்பட 4 பேருக்கு இந்த ஆண்டிற்கான  ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக கேல் ரத்னா விருது இவர்கள் நால்வருக்கும் வழங்கப்படுகிறது.

    இதுபோல துரோணாச்சாரியார், அர்ஜுனா மற்றும் தயான்சந்த் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.விருதுகளை வாங்கும் வீரர்களின் விவரம் பின்வருமாறு:

    துரோணாச்சாரியார் விருது: தடகள பயிற்சியாளர் ரமேஷ், நீச்சல் போட்டி பயிற்சியாளர் பிரதீப் குமார், குத்துச்சண்டை பயிற்சியாளர் சாகர்மால் தயாள், மல்யுத்த பயிற்சியாளர் மகாவீர் சிங்,கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தி. 

    அர்ஜுனா விருது: வில்வித்தை வீரர் ராஜத் சவ்கான், தடகள வீராங்கனை லலிதா பாபர், மாற்றுத் திறனாளி தடகள வீரர் சந்தீப் சிங் மான், கிரிக்கெட் வீரர் ரஹானே.  

    தயான்சந்த் விருது: ஹாக்கி வீரர் சில்வானாஸ், துடுப்பு படகு வீரர் ராஜேந்திரா, தடகள வீராங்கனை சாத்தி சீதா.

    ஆகஸ்ட் 29-ம் தேதி குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி விருதுகளை வழங்குகிறார். ராஜீவ் கேல் ரத்னா விருது பெறுவோருக்கு ரூபாய் 7.5 லட்சமும், துரோணாச்சாரியார், அர்ஜுனா விருது பெறுவோருக்கு ரூபாய் 5 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
    ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில் பிரேசில் தங்கம் வென்றது.
    ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில் பிரேசில் தங்கம் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் 25-22, 28-26, 26-24 என்ற நேர்செட் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.

    அமெரிக்கா 23-25, 21-25, 25-19, 25-19, 15-13 என்ற செட் கணக்கில் ரஷியாவை போராடி வீழ்த்தி வெண்கலம் பெற்றது.

    ஆண்களுக்கான ஹேண்ட்பால் போட்டியில் டென்மார்க் தங்கம் வென்றது. பரபரப்பான இறுதிப் போட்டியில் அந்த அணி 28-26 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தியது. ஜெர்மனி 31-25 என்ற கணக்கில் போலாந்தை வீழ்த்தி வெண்கலம் பெற்றது.
    ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கூடைப்பந்தில் அமெரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றது
    ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கூடைப்பந்தில் அமெரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றது. நள்ளிரவு நடந்த இறுதிப்போட்டியில் அந்த அணி 96-66 என்ற புள்ளிக் கணக்கில் செர்பியாவை வீழ்த்தி தங்கம் வென்றது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் பரபரப்பு இருந்தது. இதில் ஸ்பெயின் 89-88 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலம் பெற்றது.
    ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றுதந்த வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    ஐதராபாத்:

    ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றுதந்த வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் நடந்து வரும் 31-வது ஒலிம்பிக் போட்டி இன்று நிறைவடைந்தது.

    இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இதுவரை 2 பதக்கங்களே கிடைத்துள்ளன. இந்த பதக்கங்களை பெற்றுத்தந்த இருவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 12-21, 15-21 என்ற செட் கணக்கில், உலக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் போராடி தோல்வி கண்டார். எனினும், 2-வது இடம் பிடித்த சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது.

    ஒலிம்பிக் வரலாற்றில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சிந்துதான். இதனால் ஒட்டுமொத்த தேசமும் அவரை பாராட்டி கொண்டாடுகிறது.

    வெள்ளிப்ப தக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள 21 வயதான சிந்து, பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ரூ.13 கோடிக்கும் அதிகமாக பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரேசிலில் இருந்து இன்றுகாலை ஐதராபாத் விமான நிலையம் வந்தடைந்த சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநில துணை முதல் மந்திரி முஹம்மது மஹ்மூத் அலி, சிந்துவின் பெற்றோரானா பி.வி.ரமணா - விஜயா தம்பதியர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோர் திரளாக கூடிநின்று, வெற்றி வீராங்கனை சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோரை உற்சாகமாக வரவேற்றனர்.

    எழுச்சிமிகு இந்த வரவேற்பை ஏற்றுகொண்ட சிந்து, ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை உயர்த்தி காட்டியபோது அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பின்னர், விமான நிலையத்தில் இருந்து கச்சிபவுலி ஸ்டேடியம்வரை டபுள் டெக்கர் பஸ் மூலம் ரசிகர்கள் அவரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். அவரது அருகில் பயிற்சியாளர் கோபிநாத்தும் உடன் இருந்தார்.

    வழியில் உள்ள சாலைகளின் இருபுறங்களிலும் திரளாக கூடியிருந்த மக்கள் சிந்துவை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். கச்சிபவுலி ஸ்டேடியத்தில் தெலுங்கானா மாநில அரசின் சார்பில் இன்று நடத்தப்படும் பாராட்டுவிழாவில் சிந்து பங்கேற்கிறார்.

    பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடிக்க ரியோ ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது.
    ரியோ டி ஜெனிரோ:

    பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடிக்க ரியோ ஒலிம்பிக் போட்டி  இன்றுடன் நிறைவடைந்தது.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் ஒலிம்பிக்கான இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 17 நாட்கள் நடந்தேறிய இந்த ஒலிம்பிக் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

    ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாளில் இருந்தே பதக்க வேட்டையாடிய அமெரிக்கா எதிர்பார்த்தது போலவே பதக்கப்பட்டியலில் ‘செஞ்சுரி’ அடித்து முதலிடத்தை பிடித்து இருக்கிறது. 43 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம் என்று மொத்தம் 118 பதக்கத்துடன் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தை அமெரிக்கா எட்டியது.

    நீச்சல், தடகளம் போன்றவை அமெரிக்காவின் ‘நம்பர் ஒன்’ இடத்திற்கு உதவிகரமாக இருந்தது. நீச்சலில் 16 தங்கம் உள்பட 33 பதக்கமும், தடகளத்தில் 13 தங்கம் உள்பட 31 தங்கமும் அமெரிக்கா அள்ளியது. ஒலிம்பிக்கில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடிப்பது இது 17-வது முறையாகும்.

    இந்த முறை சீனாவை பின்னுக்கு தள்ளிய இங்கிலாந்து 27 தங்கம், 22 வெள்ளி, 17 வெண்கலம் என்று 66 பதக்கத்துடன் 2-வது இடத்தை பிடித்தது. 1908-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இங்கிலாந்து முதலிடத்தை பெற்றிருந்தது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் இங்கிலாந்தின் சிறந்த செயல்பாடாக இது அமைந்துள்ளது. சீனா 26 தங்கம் உள்பட 70 தங்கத்துடன் 3-வது இடத்தை பெற்றது.

    இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக்குக்கு அனுப்பப்பட்டனர். ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது இதுவே முதல் முறையாகும். முதல் 11 நாட்களில் சோகமே மிஞ்சிய நிலையில் கடைசியில் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கலமும், பேட்மிண்டன் ‘புயல்‘ பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றி இந்தியாவின் மானத்தை காப்பாற்றினர்.

    ஒலிம்பிக் வரலாற்றில் பெண்கள் பிரிவில் குறைந்த வயதில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய பி.வி.சிந்துவின் காட்டில் இப்போது பரிசுமழை கொட்டி கொண்டிருக்கிறது.

    இந்நிலையில், ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் நிறைவு விழா இன்று நடைபெற்றது.

    பிரேசில் நாட்டு பாடகர்கள், நடிகர்கள், விளையாட்டு சாதனையாளர்கள் இந்த நிறைவு விழாவில் கலந்து கொண்ட இந்த நிறைவு விழா ஆடல், பாடல், வீரர்கள் அணி வகுப்பு, வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

    அந்தந்த நாட்டு வீரர்கள் தங்களது நாட்டுக் கொடிகளை ஏந்தி அணிவகுத்து சென்றனர். இந்தியா சார்பில் முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த சாக்‌ஷி மாலிக் தேசியக் கொடி ஏந்தி சென்றார்.

    அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.

    இன்றைய ஒலிம்பிக் நிறைவு விழாவில் அடுத்த ஒலிம்பிக் நடைபெறவுள்ள ஜப்பான் நாட்டின் கலாச்சாரத்தை குறிக்கும் கண்கவர் கலை நிகழ்சிகளும், ஒலிம்பிக் பிறந்த கிரீஸ் நாட்டை கௌரவிக்கும் வகையிலான நிகழ்சிகளும் நடைப்பெற்றன. அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்த உள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மேடையில் தோன்றி பார்வையாளர்களை மகிழ்வித்தார்

    தொடர்ந்து, ஒலிம்பிக் கொடியை ரியோ டி ஜெனிரோ நகர மேயர் எடூரோ பயஸ் இறக்கி, டோக்கியோ நகர ஆளுநர் யூரிகோ கொய்கோவிடம் ஒப்படைத்தார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாஷ் போட்டிகளை நிறைவு செய்து வைத்தார். இறுதியாக ஒலிம்பிக் ஜோதி முறைப்படி அணைத்து வைக்கப்பட்டது.
    ரியோ டி ஜெனிரொ நகரில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் வண்ண நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.
    ரியோ:

    பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரொ நகரில் கடந்த 3-ம் தேதி 31-வது ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியது. 207 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இந்த ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றது.

    பதக்கப் பட்டியலில் அமெரிக்க முதலிடமும் (46 தங்கம்), பிரிட்டன் இரண்டாம் இடமும் (27 தங்கம்), சீனா மூன்றாம் இடமும் (26 தங்கம்) பெற்றது. இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் 67-வது இடத்தை பிடித்தது.

    மரக்கானா மைதானத்தில் இன்று நடந்த கோலாகல நிகழ்ச்சியுடன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றது.

    அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது.
    ×