என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல்- வரும் கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 50-வது ஆண்டு விழா, எம்.ஜி.ஆர். பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள் என முப்பெரும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்த விழாவுக்கு மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஏழை-எளிய மக்களுக்கு ஹாட் பாக்ஸ், வேட்டி, சேலை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    விழாவில் கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சி அதிகாரம், அதிகார துஷ்பிரயோகம், அடக்கு முறையை பயன்படுத்தி செயற்கையாக தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. வெற்றி என்பது நிரந்தரமல்ல. 15 ஆண்டுகளுக்கு முன் பாராளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றிருந்த தி.மு.க.வை ஜெயலலிதா தரைமட்டமாக்கி 10 ஆண்டுகள் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை நிலை நாட்டினார். 

    அப்போது இருந்த 11 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க. வென்றது. அ.தி.மு.க.வுக்கு  விசுவாச மாகவும், உண்மையாகவும் உழைப்பவர்கள் என்றாவது ஒரு நாள் உயர்த்தபடுவார்கள். 

    அரியாங்குப்பம் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்குள்ள தொகுதி ஆகும். உள்ளாட்சித் தேர்தலில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து வார்டுகளில் திட்டமிட்டு நாம் செயல்பட்டால் அதிக இடங்களில் வெற்றியை பெறலாம். 

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரலாம். அப்பொழுது தமிழகம், புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி மலர அனைவரும் சபதமேற்போம். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், ராஜாராமன், இணை செயலாளர்கள் அன்பானந்தம், கணேசன், துணை செயலாளர்கள் அன்பழக உடையார், வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, தொகுதி செயலாளர்கள் ஆறுமுகம், பாஸ்கர், சிவகுமார், சம்பத், கருணாநிதி, நடேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரியாங்குப்பம் தொகுதி செயலாளர் ராஜா என்ற வேலுசாமி நன்றி கூறினார்.
    மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக நிர்வாகிகள் இணைந்து சின்னமணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர்கள் தசரதா, இளவரசி, மல்லிகா தலைமை வகித்தனர். லதா, மாரிமுத்து மீனாட்சி முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர்கள் சரளா, சத்தியா, விஜயா கண்டன உரையாற்றினர். 

    இதில் நிர்வாகிகள் ஆனந்தவள்ளி, சரோஜா, பழனியம்மாள், முத்துலட்சுமி, முனியம்மாள், பெரியநாயகி, அமிர்தவள்ளி, சங்கரி, விசாலாட்சி, ஜெயசீத்தா, விஜயா, லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    மத்திய&மாநில அரசுகள் ஆடையை காரணம் காட்டி இஸ்லாமிய மாணவிகளை பள்ளி, கல்லூரிகளில் இருந்து வெளியேற்றம் செய்வதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
    நேரு வீதி வணிகத்திருவிழா பரிசளிப்பை சிவசங்கரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    புதுச்சேரி:

     புதுவை  நேரு வீதி வணிகத் திருவிழா பரிசளிப்பு நிகழ்ச்சி வள்ளலார் சாலையில் உள்ள வேல்.சொக்கநாதன் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. 

    இந்நிகழ்ச்சிக்கு  சங்கத் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் இசைக் கலைவன், நடராஜன், குகன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன் கலந்து கொண்டு நிச்சய  பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். செயலாளர் ராஜேந்திரன்நன்றிகூறினார்.

    இதுகுறித்து நேரு வீதி வியாபாரிகள்சங்க தலைவர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த நேரு வீதி வணிகத்திருவிழா பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை  பெற்றுள்ளது.  

    நேரு வீதி வணிக திருவிழாவில் பங்கு பெற்ற வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட பரிசு டோக்கன்களுக்கான நிச்சய பரிசுகள் (வீட்டு உபயோக பொருட்கள்)  28--ந் தேதி வரை  வழங்கப்படுகிறது. 

    மேலும் கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர்.  புதுவை வாடிக்கையாளர்கள் மட்டு மின்றி கடலூர், விழுப்புரம், மரக்காணம் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்களும்  இந்த வணிக திருவிழாவில்  அதிக அளவில் பங்கு பெற்றுள்ளனர்.

    வாடிக்கையாளர்கள் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு சிறப்பான  ஏற்பாடு களை செய்துள்ளோம். தினசரி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை வாடிக்கையாளர்கள் பரிசு களைப் பெற்று செல்லலாம்.  

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பொருளாளர் பழனி அடைக்கலம், ராதாகிருஷ்ணன், வெங்கடேஷ், செல்வகணபதி, மற்றும் நேரு வீதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    ஆண்டுக்கு 75 நாட்களாவது என்று சட்டசபையை கூட்ட வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
     
    புதுவையின் சட்டமன்ற  கூட்டம் 20 நிமிடத்தில் முடிந்தது துரதிர்ஷ்ட வசமானது. சட்டமன்றத்தை ஒரு சம்பிரதாய அமைப்பாக மாற்றும் முயற்சியை ஜனநாயக உணர்வுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஒரு முறை யாவது சட்டசபை கூட வேண்டும் என சட்டம் சொல்கிறது. 

    3 மாதங்களுக்கு ஒருமுறை, 4 மாதங்களுக்கு ஒரு முறை, அவசியம் ஏற்படும் போதெல்லாம் சபையை கூட்டலாம்.மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து கூட்டப்படும் சபையை அரசு பொறுப்புணர்வோடு கூட்டி இருக்க வேண்டும். 

    சட்டமன்ற ஆலோசனை அலுவல் குழுவைக் கூட்டி சட்டசபை எத்தனை நாட்கள், எத்தனை மணி நேரம், சட்டசபையில் விவாதிக்க வேண்டிய அலுவல்கள் குறித்து முடிவெடுத்து அறிவித்திருக்க வேண்டும். சட்டமன்றத்தில் விவாதிப் பதற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று இந்த அரசு நினைக்கிறதா? 

    எந்த மாநிலத்தில் இப்படி 20 நிமிடத்திற்கு சட்டமன்றம் கூடி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது? சட்ட மன்றத்தை பெயரளவில் வைத்துவிட்டு காலப்போக்கில், சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்ற ஏதாவது திட்டம் உள்ளதா? 

    சட்டமன்றம் உள்ளதால் தான் நாம் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்கிறோம். ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 75 நாட்களாவது சட்டமன்றம் நடக்கும் என்ற மரபை அரசு உருவாக்க வேண்டும். மக்களின் வாக்குகளை பெற்றுள்ள ஒரு அரசு சட்டமன்றத்தைக் கூட்டுவதில் தயக்கம் காட்டக்கூடாது. அதனை முறையற்ற முறையில் முடக்குவதும் சரியல்ல. 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவரின் பெற்றோருக்கு வையாபுரி மணிகண்டன் ஆறுதல் கூறினார்.
    புதுச்சேரி:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர் உலகம் முழுவதும் மிகுந்த பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    திடீர் போரின் காரணமாக இந்தியாவில் இருந்து படிப்பதற்காகவும், பணி நிமித்தமாகவும் உக்ரைன் நாட்டுக்கு சென்ற இந்தியர்கள் பரிதவித்து வருகின்றனர். 

    புதுவை மாநிலத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தொழிலாளர்கள் உக்ரைன் நாட்டில் சிக்கி,  மீண்டும் தாயகம்  திரும்பமுடியாமல் தவித்து வருகின்றனர். 

    முத்தியால்பேட்டை தேவகி நகரை சேர்ந்த மதன்ராஜ் என்ற மாணவர் உக்ரைன் நாட்டில் மருத்துவப்படிப்புக்காக சென்றிருந்தார். அவரும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். 

    இதையறிந்த கிழக்கு மாநில அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும்,, முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன்  மாணவரின் வீட்டுக்கு நேரில் சென்று, பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

    உக்ரைனில் மாணவர் பாதுகாப்பாக உள்ளாரா? உணவு உட்பட அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா? இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்துள்ளாரா? என கேட்டறிந்தார். 

    மாணவர் மதன்ராஜ் உட்பட புதுவை மாநிலத்தை சேர்ந்த உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள், தொழிலாளர்கள் மீட்க அ.தி.மு.க. சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மாணவர்களின் பட்டியலை அ.தி.மு.க. முன்னாள் முதல்&அமைச்சர்கள் பன்னீர்செல்வம், எடப்படி பழனிசாமி ஆகியோரிடம் அளித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோருக்கு அ.தி.மு.க. சார்பில் அழுத்தம் தரவும், மாணவர்கள், தொழிலாளர்களை மீட்டு அழைத்துவரவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வையாபுரி மணிகண்டன் உறுதியளித்தார்.
    புதுவை அரசு உக்ரைன் சென்றவர்கள் விபரத்தை சேகரிக்க தொடங்கியது. மாணவர் மதன்ராஜின் பெற்றோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேற்று அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

    புதுச்சேரி:

    ரஷிய ராணுவத்தால் தாக்குதலை சந்தித்து வரும் உக்ரைனில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

    உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலிருந்து எத்தனை பேர் சென்றுள்ளனர் என கணக்கெடுத்து வருகின்றனர்.

    இதற்காக அந்தந்த மாநில அரசுகள் டெலிபோன் உதவி எண்ணை வழங்கி உக்ரைன் சென்றவர்களின் விபரத்தை பதிவு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர். போர் தொடங்கியவுடன் தமிழகத்தில் இருந்து சென்றவர்களின் விபரம் இல்லாததால் உடனடியாக உதவி எண் அறிவித்து பதிவு செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியது.

    இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பதிவு செய்து வந்தனர். புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த மதன்ராஜ் என்ற மாணவரின் பெற்றோர் தொடர்பு கொண்டு பேசினர். மாணவர் புதுவையை சேர்ந்தவர் என்பதால் தமிழக அரசு அதிகாரிகள் புதுவை அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து புதுவை அரசு உக்ரைன் சென்றவர்கள் விபரத்தை சேகரிக்க தொடங்கியது. மாணவர் மதன்ராஜின் பெற்றோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேற்று அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

    அப்போது தங்கள் மகன் உக்ரைனில் இருக்கும் விபரத்தை தெரிவித்து, மீட்டுத்தரும்படி கோரிக்கை வைத்தனர். புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் மருத்துவம் படிக்க புதுவை, காரைக்காலை சேர்ந்த மாணவர்கள் உக்ரைன் சென்றுள்ள விபரம் தெரிய வந்துள்ளது.

    இதுதவிர பல்வேறு நிறுவனங்கள் மூலம் மருத்துவம் படிக்கவும், பணியாற்றவும், வியாபார நிமித்தமாகவும் இன்னும் பலர் சென்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து புதுவை அரசு உக்ரைனில் தவிப்போர் பட்டியலை தயாரிக்க உதவி எண்ணை அறிவித்துள்ளது.

    1070, 1077, 04132255407 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல புதுவையின் பிராந்தியங்களான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவற்றுக்கும் தனித்தனியே உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைனில் சிக்கியிருக்கும் புதுவை மாணவர்களை மீட்க முதல்-அமைச்சர் ரங்கசாமி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியாவுக்கான தூதர் பார்த்தசத்பதி ஆகியோரை போனில் தொடர்புகொண்டு பேசினார்.

    உக்ரைனில் உள்ள மாணவர்களோடு முதல்-அமைச்சர் அலுவலக அதிகாரிகளும் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது மாணவர்கள் கூறியதாவது:-

    விடுதியில் பாதுகாப்பாக உள்ளோம். போர் காரணமாக குடிநீர், மின்சாரம் உட்பட அத்தியாவசிய தேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு மட்டுமே உணவு இருப்பு உள்ளது என தெரிவித்தனர்.

    இதனால் மாணவர்கள் உணவின்றி தவிப்பது தெரிய வந்துள்ளது. மின்சாரம் இல்லாததால் குடும்பத்தையும் இப்போது தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பிரதமருக்கும் உக்ரைனில் சிக்கியுள்ள புதுவையை சேர்ந்தவர்களை மீட்டுத்தரும்படி கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பியுள்ளார்.

    2-ம் கட்ட தேசிய திறனாய்வு தேர்வில் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    புதுச்சேரி:

    மத்திய அரசின் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆண்டு தோறும் மாநில அளவில் தேசிய திறனாய்வு தேர்வினை நடத்தி மாணவர்களின் திறனை ஊக்கப்படுத்தி கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. 2020-21 கல்வியாண்டிற்கான முதல் கட்ட தேர்வில் வென்ற 22 மாணவர்களில்  6 பேர் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இம்மாணவர்களுக்கு 2-ம் கட்ட தேசிய தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் அமலோற்பவம் பள்ளி பிளஸ்-1 மாணவர்களான ஹரிபிரசாந்த், சீனு மற்றும் சஞ்சய் ஆகியோர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் டாக்டர் பட்டம் பெறும் வரை மத்திய அரசின் கல்வி உதவிதொகை பெற தகுதி பெற்றுள்ளனர். சிறப்பான தேர்ச்சி பெற்ற 3 மாணவர்களுக்கும் பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துசாமி 4 கிராம் தங்ககாசு வழங்கி கவுரவித்தார்.
    கிருமாம்பாக்கத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் சிறுவர் பூங்கா அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் மந்தை வெளி திடலில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில்  இந்திரா காந்தி சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 

    இந்த பூங்காவில் சிறியவர்கள், குழந்தைகள் விளையாடுவதற்கான சாதனங்களும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

     பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்கா 2 ஆண்டு காலத்திற்கு பிறகு பராமரிப்பின்றி முட்புதர்களும் குப்பைகளும் குவிந்துள்ளது. 

    மேலும் பூங்காவை சுற்றி நடப்பட்ட மரக்கன்றுகள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. இந்த பூங்காவிற்கு சிறுவர்கள் பயன்படுத்தும் வகையில் பொதுக் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்து வருகிற து. 

    மேலும் குடிநீர் வசதியும் ஏற்படுத்தித்தரவில்லை. மின்விளக்குகள் பழுதாகி காணப்படுகிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பயன்படுத்தும் விதமாக இந்த பூங்காவை  பராமரித்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
    பாகூரில் குடிசைக்குள் புகுந்த 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்மை வீரர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.
    புதுச்சேரி:

    பாகூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் பங்களா வீதியில் புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார். 

    கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால் மனைக்கு அருகில் இருந்த குடிசை வீட்டில் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை வைத்துள்ளார்.  அதை எடுப்பதற்காக குமார் குடிசைக்கு சென்ற போது பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தகவலை அறிந்த அதே பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரரான விக்கி என்கி விக்னேஷ் விரைந்து வந்து கொட்டைக்குள் இருந்த பாம்பை  லாவகமாக பிடித்து வெளியே கொண்டு வந்தார். அப்போது அது 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்று தெரியவந்தது. 

    இந்த இந்த பாம்பு கொடிய விஷமுள்ளதாகும். இது மனிதர்களை கடித்தால் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.  உடனடியாக கண்ணாடி விரியன் பாம்பை ஒரு சாக்குப் பையில் பிடித்து பாகூர் ஏரிக்கரையில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது. 

    கடந்த சில முன்பு நாட்களுக்கு 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு அதே இடத்தில் பிடிபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    பூரணாங்குப்பத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    புதுச்சேரி:

    தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. 

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மயானக் கொள்ளை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மயானகொள்ளை திருவிழா  வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் சார்பில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    8-ந் தேதி நள்ளிரவு 12 மணியளவில் ரணகளிப்பும் அதனை தொடர்ந்து சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக் கொள்ளை தேரோட்டம் 9-ந் தேதி மாலை  5.30 மணிக்கு நடக்கிறது. 

    இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள் தேரோட்டத்தினை வடம் பிடித்து தொடங்கி வைக்கின்றனர். 

    விழாவின் நிறைவாக 10-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.  விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் எழில்ராஜா, துணைத் தலைவர் ராஜசேகரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமிர்த லிங்கம், உறுப்பினர் சத்தியவேணி மற்றும் கிராம பொதுமக்களும் இளைஞர்களும் செய்து வருகின்றனர்.
    புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கை செல்வகணபதி எம்.பி. நேரில் சந்தித்து பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கை செல்வகணபதி எம்.பி. நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் புதுவையை சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி தொடர்வதற்கான வாய்ப்புகளை கூடுதலாக வழங்க மத்திய அரசுடன் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தரை கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து புதுவையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் பல்கலைத்தின் எதிர்காலத்தையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பன்னாட்டு தரத்திலான ஆராய்ச்சிகளை மாணவர்கள் மேற்கொள்ள மத்திய அரசின் பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களை பல்கழகத்தில் கொண்டு வர ஒத்துழைப்பு தருவதாகவும் துணைவேந்தரிடம் செல்வகணபதி எம்.பி. தெரிவித்தார்.  இந்த சந்திப்பின் போது பல்கலைக்கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    சர்வதேச குதிரையேற்ற போட்டியில் பங்கேற்க ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து 80-க்கும் மேற்பட்ட உயர்ரக குதிரைகள் புதுவை வருகின்றன.
    புதுச்சேரி:

    சர்வதேச நகரான ஆரோவில்லில் ரெட்எர்த் குதிரையேற்ற பள்ளியில் வெளிநாடு மற்றும் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் குதிரையேற்றத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    ரெட்எர்த் பள்ளி சார்பில் நடப்பாண்டுக்கான குதிரையேற்ற போட்டி வருகிற 1-ந் தேதி தொடங்கி 6-ந் தேதி வரை நடக்கிறது. இதுதொடர்பாக போட்டி அமைப்பாளர் ஜாக்குலின் கூறியதாவது:-

    டிரஸ்ஸேஜ் எனப்படும் குதிரைகளின் அலங்கார நடைபோட்டி, ஷோ ஜம்பிங் பிரிவுகளில் சர்வதேச, தேசிய, குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை காண்பிக்கின்றனர். 3 கிராண்ட் பிரிக்ஸ் ஜம்பிங் பிரிவுகள் ஆகியற்றில் போட்டிகள் நடக்கிறது.

    தொழில்நுட்ப பயிலரங்கம் வருகிற 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.

    பேசிக், பேசிக் ஒபன், அட்வான்ஸ்ட், அட்வான்ஸ்ட் ஒபன், மீடியம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.

    போட்டியில் பங்கேற்க ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து 80-க்கும் மேற்பட்ட உயர்ரக குதிரைகள் புதுவை வருகின்றன.

    பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெங்களூரு, புனே, தமிழகத்தின் தூத்துக்குடி, ஆம்பூர், கோவை, திருப்பூர், புதுவை ஆகிய இடங்களில் இருந்து குதிரையேற்ற வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

    வெளிநாடுகளில் இருந்து பயிற்சியாளர்களும் வருகின்றனர். போட்டியில் பங்கேற்கும் குறைந்த வயது போட்டியாளருக்கு வயது 6. உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்

    இவ்வாறு ஜாக்குலின் கூறினார்.

    ×