என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே ஹெல்த்ஸ்ப்ரிங் மருத்துவ மையம் உள்ளது. இந்த மருத்துவ மையத்தில் காது, மூக்கு, தொண்டை மற்றும் எலும்பு, மூட்டு நோய்க்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் எலும்பு குறை கண்டறியும் ஸ்கேன், தீராத மூட்டுவலி, முதுகுவலி, தோள்பட்டை வலி, விளையாட்டு காயம், எலும்பு முறிவு, மூட்டு சவ்வு பழுதடைகள் ஆகியவற்றிக்கு சிறப்பு சிகிச்சையும் மற்றும் சைனஸ், தலைவலி, தலைசுற்று, அலர்ஜி, மூக்கடைப்பு, காதில் சீழ் வடிதல், காது கேளாமை, குரல் மாற்றம் ஆகியவைக்கு இலவசமாக நவீன பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    மேட்டுப்பாளையத்தில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு ஒம்சக்தி சேகர் அன்னதானம் வழங்கினார்.
    புதுச்சேரி:

    ஜெயலலிதாவின்  74-ம் ஆண்டு பிறந்தநாள் விழா கதிர்காமம், இந்திரா நகர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் தொகுதி  செயலாளர்கள் கதிர்காமம் வேலவன், இந்திரா நகர் ஆனந்தன் ஆகியோரின் ஏற்பாட்டில்  மேட்டுப்பாளையம் சிக்னல் அருகில் நடைபெற்றது. 

    விழாவில் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் தலைமை தாங்கி அ.தி.மு.க. கொடி ஏற்றி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

    இதில் மாநில அவைத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ், மாநில இணை செயலாளர் காசிநாதன், மாநில துணை தலைவர் நந்தன், மாநில துணை செயலாளர் நாகமணி, சதாசிவம், மாநில பொருளாளர் சங்கர்,மாநில இளைஞர்அணி செயலாளர் விக்னேஷ்,மாநில அண்ணா தொழிற்சங்க செயலாளர் மலை. செல்வராஜ், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் குணசேகரன்,மாநில மகளிரணி செயலாளர் வெரோனிகா, மாநில தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் லட்சுமணன் மற்றும் பலர் பங்கேற்றனர்
    தள்ளு வண்டியில் காய்கறி விற்க எதிர்ப்பு தெரிவித்ததை தட்டிக்கேட்ட பெண் வியாபாரி தாக்கப்பட்டார்.
    புதுச்சேரி:


    திருக்கனூர் அருகே முற்றாம்பட்டு  விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி பூமாதேவி (வயது 43).

    இவர், முத்தியால் பேட்டை பகுதியில் தினமும் ஒரு இடத்தில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். 

    இவர் கருவடிக் குப்பம் ரோட்டில் உள்ள முருகன் கோவில் அருகே தள்ளுவண்டியில் வைத்து காய்கறி வியாபாரம் செய்தார். அதற்கு கோவில் அர்ச்சகரான வைத்திகுப்பம் பிள்ளையார்   கோவில் தெருவை சேர்ந்த விஜய  வெங்கடேசன் (58) என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனை பூமாதேவி தட்டிக்கேட்ட போது அவரை விஜய வெங்கடேசன் கையால் தாக்கினார். 

    இதுகுறித்து பூமாதேவி முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வங்கிகளில் பெண்களுக்கு தடையின்றி கடன் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆண்களை போன்று குடும்ப சொத்தில் பெண்க ளுக்கும் உரிமை உண்டு என அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள நிலையில் பெண்கள் பெயரில் வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் போது அவர்களுக்கு பத்திர பதிவில் 50 சதவிகிதம் சிறப்பு சலுகை அரசு வழங்கியுள்ளது.

    இந்த நிலையில் அப்படி பெண்கள் பெயரில் வாங்கிய நிலம், மனைகள், வீடு போன்ற சொத்துக்களை வைத்து வங்கிகளில் கடன் பெற சென்றால் வங்கிகள் அவர்களிடம் 50 சதவிகிதம் சிறப்பு அதிகாரத்தை ஏற்காமல் அரசு சலுகையில் வழங்கியுள்ள 50 சதவிகித கட்டணத்தையும் பத்திரபதிவு அலுவலகத்தில் செலுத்தி விட்டு வந்தால் மட்டுமே அவர்களின் கடன் பெறும் மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளபடுவதாக கூறப்படும் செயல் அரசியலமைப்பு சட்டத்தை இழிவுபடுத்தும் செயலாகும்.

    எனவே புதுவையை ஆளக்கூடிய என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு அரசியலமைப்பு சட்டம் பெண்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பாதுகாக்கும் வகையில் பெண்கள் பெயரில் உள்ள சொத்து பத்திரங்களை வங்கிகளில் எந்தவித தடையுமின்றி கடன் பெறும் வகையில் வங்கி அதிகாரிகளை அழைத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    ஆக்கிரமிப்பில் இருந்த 7 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு பூங்கா அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு ஒட்டிய தமிழக பகுதி ஸ்ரீராம் நகர். திருச்சிற்றம்பலம் ஊராட்சிமன்ற எல்லைக்கு உட்பட்ட அந்தப் பகுதியில் புதுவை தமிழகத்தை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

    இந்த பகுதியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு புறம் போக்கு இடம் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இந்த இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தினை செயல்படுத்த, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடேசன், வானூர் வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள், மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆவணங்களுடன் எடுத்துரைத்தார். 

    இந்நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் தற்போது ஒரே பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 7 ஏக்கர் புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டது. 

    அந்த இடத்தில் சிறுவர் விளையாட்டு பூங்கா, மேல்நிலை நீர்தேக்க தொட்டி, நாடகமேடை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் அடங்கிய ஒருங் கிணைந்த பூங்காவை உருவாக்குவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

    இந்த திட்டத்தால் நாவர்குளம், அன்னை வேளாங்கண்ணி நகர், வசந்தபுரம், ஸ்ரீராம் நகர், மாட்டுக்காரன் சாவடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறுவார்கள். 

    அரசு பொது இடத்தை தனியார் வசம் இருந்து மீட்டு தொலைநோக்குப் பார்வையுடன் அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் நவீன பூங்கா அமைத்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    வேல்ராம்பட்டு-100 அடி சாலையில் கால்வாய் மீது பாலம் அமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரியிடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
    புதுச்சேரி:

    வேல்ராம்பட்டு- 100 அடி ரோடு மரப்பாலம் சந்திப்பில் கால்வாய் மீது பாலம் அமைத்து ஒரு வழி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியிடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அதில்  கூறியிருப்பதாவது:-

    முதலியார்பேட்டை மரப்பாலம் சந்திப்பில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிக்னலை கடக்க வாகன ஓட்டிகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. 

    இதற்கு முக்கிய காரணம் வேல்ராம்பட்டு ஏரிக்கரை வீதியில் இருந்து வெளியேறும் வாகனங்கள் மரப்பாலம் சந்திப்பில் இணைந்து 100 அடி சாலையை கடப்பதே ஆகும். 

    வேல்ராம்பட்டு சாலை மரப்பாலம் சந்திப்பு அடைவதற்கு சில அடி முன்னதாக பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் 100 அடி சாலையில் வந்தடைந்து சாலையை கடந்து பெட்ரோல் பங்க் வழியாக வெளியேறி செல்கின்றது. 

    வேல்ராம்பட்டு முதல் 100 அடி சாலை வரையிலான வாய்க்கால் 22.5 அடி அகலமும் 200 அடி நீளமும் கொண்டுள்ளது. இந்த வாய்க்கால் மீது பாலம் அமைத்து ஒரு வழி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யலாம். 

    இதன் மூலம் வேல்ராம் பட்டு வழியாக 100 அடி சாலையை கடப்பவர்கள் சிக்னலில் நிற்காமல் இந்த புதிய பாலம் வழியாக 100 அடி சாலையை அடைந்துவிடுவார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துவிடும். 

    எனவே, வாய்க்கால் மீது பாலம் அமைத்து ஒரு வழி போக்குவரத்து ஏற்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
    சண்முகாபுரத்தில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதால் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவியிடம் விசாரிக்க கோரி தங்கை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:


    புதுவை சண்முகாபுரம் சுப்பிரமணியர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது42). இவர் பாண்லேவில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயா(24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதமே ஆகிறது.

     கணவன்-மனைவி இருவரும் கோவிலுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில்  ராஜேந்திரன் வீட்டின் வராண்டாவில் மின் விசிறியில் துப்பட்டா வால் தூக்கு போட்டு தொங்குவதாக அவரது மனைவி ஜெயா குடும்பத் தினரிடம் தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரனின் தங்கை கலையரசி மற்றும் குடும்பத்தினர் உடனடி யாக தூக்கில் இருந்து ராஜேந்திரனை மீட்டு ஆட்டோவில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தங்கை கலையரசி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது அண்ணன் ராஜேந்திரன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் தூக்குபோட்டு தொங்கும் போது கால்கள்  இரண்டும் மடிந்து இருந்தது என்றும் அப்போது அவரது மனைவி ஜெயா எந்தவித பதட்டமும் இல்லாமல் எப்போதும் போல சகஜமாக காணப்பட்டார்.

    மேலும் தனது அண்ணன் இறந்தும் அவரது மனைவி ஜெயாவை அவரது பெற்றோர் உடனடியாக அழைத்து சென்று விட்டனர். எனவே ஜெயாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கலையரசி புகாரில் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் தர்பாராண்யேஸ்வரர் கோவிலைச் சேர்ந்த நளபுரநாயகி சமேத நளநாராயணப்பெருமாள் கோவில் 5 நாள் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் தர்பாராண்யேஸ்வரர் கோவிலைச் சேர்ந்த நளபுரநாயகி சமேத நளநாராயணப்பெருமாள் கோவில் 5 நாள் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அப்போது ஸ்ரீதேவி, பூதேவியார் சமேத நளநாரா யணப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடி கம்பம் அருகே எழுந்தருளச் செய்யப்பட்டார். தொடர்ந்து, பட்டாச்சாரியார்கள் சிறப்பு ஹோமம் நடத்தி, வேத மந்திரங்கள் ரிறி கொடிக் கம்பத்தில் கருடக்கொடியை எற்றி வைத்தனர். பின்னர், சுவாமிக்கும், கொடி கம்பத் திற்கும் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை சூரிய பிரபையில் வேணுகோபாலராக பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.

    நேற்று காலை பெரு மாளுக்கு திருமஞ்சனமும் ஹம்ச வாகனத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் வீதியுலா புறப்பாடும், இன்று (26-ந் தேதி) காலை திருமஞ்சனமும் நடந்தது.மாலை சே‌ஷ வாகனத்தில் வைகுந்தராகவும், நாளை (27-ந் தேதி) காலை திருமஞ் சனமும், மாலை கருடசேவை யாகவும் பெருமாள் புறப்பாடு செய்யப்படுகிறது.

    28ந் தேதி காலை தேரில் பெருமாள் நளதீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. பிற்பகல் திருக்கல்யாண உத்ஸவமும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
    வீடு புகுந்து மர்ம நபர்கள் விரட்டியதில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    காரைக்கால்:

    காரைக்கால் பெசன்ட் நகரை சேர்ந்தவர் ஹாஜாகுத் புதீன். இவரது மகள் சகினா சோபி (வயது24). இவரது பெற்றோர் பிரான்சில் இருப்பதால், அவரது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். சகினாசோபியின் பள்ளிக்கால தோழி ஷெரீன்.

    இவர் தற்போது கோவையில் உள்ளார். தோழி ஷெரீன் கேட்டுக்கொண்டதின் பேரில், காரைக்கால் நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு சகினாசோபி தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து, இருவரும் வாட்ஸ் அப்பில் பேசிவந்துள்ளனர். சம்பவத்தன்று சகினா சோபியின் வீட்டிற்குள், திடீரென மர்ம நபர்கள் சிலர் நுழைந்து, சகினாசோபியை தாக்கி, செல்போனை பிடுங்க முயன்றனர். அப்போது சகினாசோபி பயந்து ஓடியதில் முதல் மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து உள்ளார். இதில் அவருக்கு காயம் ரிற்பட்டது.

    உடனே உறவினர்கள் சகினாசோபியை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் நகராட்சி வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள் கூட்டு போராட்டக்குழு அமைப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.

    காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் உள்ளிட்ட பலர், கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குரிய பணப்பலன்கள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளன. எனவே இதை சரிசெய்ய, புதுச்சேரி பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கி அரசே நேரடியாக உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய நிலுவை, பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
    உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வல்லவன் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட கலெக்டர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உக்ரைன் நாட்டில் படிப்பு மற்றும் வேலை சம்பந்தமாக சென்றவர்களை மீட்க பிரதமருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    தற்போது வரை உக்ரைனில் புதுவையை சேர்ந்த 5 மாணவர்களூம் காரைக்காலில் 5 மாணவர் களும் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் மட்டுல்லாது புதுவையை சேர்ந்தவர்கள்  உக்ரைனில் இருப்பவர்கள் குறித்து தகவல் இருந்தால் அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் உதவிக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன் +380 997300428, + 380 997300483 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு கலெக்டர் வல்லவன்  தெரிவித்தார்.
    புதுச்சேரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 5, காரைக்காலில் 5, ஏனாமில் ஒருவர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    புதுவையில் 11, காரைக் காலில் 2, ஏனாமில் ஒருவர் என 14 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை யில் 23, காரைக்காலில் 11, ஏனாமில் 4, மாகியில் 4 பேர் என 42 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    புதுவை  மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 701 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63  ஆயிரத்து 570 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 
    புதுவையில் 89, காரைக் காலில் 58, ஏனாமில் 5, மாகியில் 3 பேர் என 155 பேர்  வீட்டு தனிமையில் உள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 169 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை ரெட்டியார்பாளையம் ஜெயா நகரை சேர்ந்த 62 வயது ஆண், மதிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 64 வயது பெண் என 2 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். 

    இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு  பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை  உட்பட 15 லட்சத்து 88 ஆயிரத்து 474 பேர் தடுப்பூசி  போட்டுள் ளனர். 

    இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    ×