என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களின் பெற்றோர் ரங்கசாமியுடன் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
    புதுச்சேரி:

    ரஷ்யா ராணுவம் உக்ரைன் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.

    உக்ரைனில் மருத்துவம் படிப்பதற்காகவும், மேல்படிப்புக்காகவும், வணிகரீதியாகவும் இந்தியாவிலிருந்து சென்ற 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

    முதல்கட்டமாக 131 பேர் மீட்டுவரப்பட்டுள்ளனர். புதுவையிலிருந்தும் மருத்துவம் படிக்க மாணவர்கள் சென்றுள்ளனர். முதல்கட்டமாக 8 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக தெரியவந்தது. பின்னர் உதவி எண்களை அரசு அறிவித்து, உக்ரைனில் சிக்கியுள்ளவர்களின் தகவல் திரட்டப்பட்டது. 

    இதில் புதுவையிலிருந்து 14, காரைக்காலில் 5, மாகியில் 3, ஏனாமில் ஒருவர் என புதுவை மாநிலத்தை சேர்ந்த 23 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே புதுவையை சேர்ந்தவர்களை மீட்டுத்தரும்படி பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் அனுப்பியிருந்தார். மேலும் புதுவை மாணவர்களின் பயண செலவையும் அரசே ஏற்கும் என ரங்கசாமி அறிவித்திருந்தார். 

    இந்நிலையில்  புதுவை, காரைக்காலை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் சட்டசபையில் முதல்&அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர். அப்போது, புதுவை மாவட்ட கலெக்டர் வல்லவன், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, எம்.பி. செல்வகணபதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. ஒரு சிலர் பதுங்கு குழிகளில் தவித்து வருகின்றனர். அங்கு மின்சாரம் இல்லாததால் தொடர்புகொள்ள முடியவில்லை. உணவு, தண்ணீர் இன்றி தவிப்பதாக செய்திகள் வருகிறது. அவர்களை மீட்டுத்தர முழு முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, மத்திய அரசு மூலம் மாணவர்களை மீட்டுவர கோரிக்கை வைத்துள்ளோம். உக்ரைனில் உள்ள இந்திய துதரகத்தை தொடர்புகொண்டும் பேசி வருகிறோம். மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என உறுதியளித்தார்.
    இந்திய கம்யூ. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை மாநில செயலாளர் சலீம் வழங்கினார்.
    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி தட்டாஞ்சாவடி தொகுதிக்குழு மற்றும் கிளை செயலாளர் கூட்டம் பாக்கமுடையான்பட்டு  கார்ல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு தொகுதிக் குழு உறுப்பினர்  சிவகுமார் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர்  முருகன் நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பேசினார். 

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம் ஆகியோர் கட்சி முடிவுகளையும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார்கள். 

    மாநில குழு உறுப்பினர் ஹேமலதா, தொகுதி துணை செயலாளர் செல்வம் தொகுதி பொருளாளர் தனஞ் செழியன், தொகுதிக் குழு மற்றும் கிளை செயலாளர்கள் சத்தியசீலன்,  முருகன், மூர்த்தி, லோகு ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடை யாள அட்டை வழங்கப்பட்டது.
    பொய்வழக்கு அடக்குமுறையால் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என்று அன்பழகன் பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் தமிழக தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து அண்ணாசிலை அருகே கண்டன  ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், இணை செயலாளர் அன்பானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் அன்பழகன் பேசியதாவது: -

    தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொய்யான  வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., மக்களை திசைத்திருப்பும் விதத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு  போட்டு வருகிறது. தி.மு.க.வின் பொய்யான அறிவிப்புகளை அ.தி.மு.க. தலைவர்கள் மக்களிடம் கொண்டு செல்கின்றனர்.

    இதனால் அவர்கள்  மீது திட்டமிட்டு தி.மு.க. அரசு பொய்வழக்கு தொடர்கிறது. உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஒட்டு போட்ட தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தியதால்  முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் மீது பொய்வழக்கு போட்டு காவலில் வைத்துள்ளனர். இது ஆட்சி அதிகாரத்தின் பழிவாங்கும் உச்சக்கட்ட செயலாகும். 

    தமிழகத்தில் 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க.வை பழிவாங்கும் எந்த செயலையும் செய்த தில்லை. பொய் வழக்கு  அடக்கு முறையால் அ.தி.மு.க.வை யாரும் அழித்து விட முடியாது.
    அ.தி.மு.க. ஒருங்கிணைப் பாளர்கள் எதிர்காலத்தில் தி.மு.க.வுக்கு சரியான  பாடம் புகட்டுவார்கள். பொய் வழக்குகளினால் அ.தி.மு.க.வை அழித்து விட நினைக்கும் தி.மு.க.வின் கனவு பலிக்காது. 

    இவ்வாறு அவர் பேசினார். 

    ஆர்ப்பாட்டத்தில் இணை செயலாளர்கள்  கணேசன், திருநாவுக்கரசு, துணை தலைவர்கள் ராஜாராமன், சின்னதுரை, துணை செயலாளர்கள்  முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, எம்.ஏ.கே.கருணாநிதி, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணை செயலாளர் அன்பழக உடையார், மூர்த்தி,   ஜெயசேரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மணவாளன், குமுதன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன் , எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி, மாணவரணி செயலாளர் பிரதீப், வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மீனவரணி செயலாளர் ஞானவேல், இலக்கிய அணி செயலாளர் ராமசாமி உட்பட  பலர் கலந்து கொண்டனர்.
    புதுவையில் 9 பேருக்கு கொரோனா மற்றும் பிராந்தியங்களில் தொற்று இல்லை.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 27-ந் தேதி 871 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் புதுவையில மட்டும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் தொற்று பாதிப்பு இல்லை. இதேபோல் ஜிப்மர், அரசு மருத்துவமனைகளில் தொற்றால் பாதித்தவர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 

    அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 4 பேரும், கோவிட் கேர் சென்டரில் 5 பேர் மட்டுமே உள்ளனர்.தற்போது கொரோனா பாதித்தவர்களில் 12 பேர் மருத்துவமனையிலும், 106 பேர் வீட்டு தனிமையிலும் என ஒட்டுமொத்தமாக 118 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    33 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. புதுவை  மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 640 பேர் குணமடைந்துள்ளனர். 

    1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். புதுவையை தவிர வேறு பிராந்தியங்களில் தொற்று பாதித்தவர் யாரும் இல்லாதது பொது மக்களிடையே சற்று நிம்ம தியை ஏற்படுத்தி உள்ளது.
    தமிழக தி.மு.க. அரசு மக்களை திசைதிருப்ப அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட்டு வருகின்றனர் என ஒம்சக்தி சேகர் பேசினார்.
    புதுச்சேரி:

    தட்டாஞ்சாவடி தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஜீவா காலனி அருகில் நடைபெற்றது. 

    தொகுதி செயலாளர் கமல்தாஸ் தலைமை தாங்கினார்.மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் 200 பேருக்கு போர்வை,300 பேருக்கு புடவை உள்ளிட்ட  நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:&

    அ.தி.மு.க. என்பது தொண்டர்களால் வளர்ந்த இயக்கம் இந்த இயக்கத்தை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதை வாடிக் கையாக தமிழக தி.மு.க. அரசு கொண்டுள்ளது. 

    பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முடியாத தி.மு.க. மக்களை திசை திருப்ப இது போன்ற கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

    கள்ள ஒட்டு போட்ட ஒருவரை சட்டப்படி பிடித்து கொடுத்த ஒரு முன்னாள் அமைச்சரை பழி வாங்கும் செயல்களை மக்கள் பார்த்து கொண்டுள்ளனர்.

    இது போன்ற பூச்சாண்டி வேலைக்கெல்லாம் அ.தி.மு.க. ஒரு போதும் அஞ்சாது. கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆசியோடு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும்.

    இவ்வாறு பேசினார்.

    விழாவில் மேற்கு மாநில அவைத்தலைவர் ராமதாஸ், இணை செயலாளர் காசி நாதன், துணை செயலாளர் நாகமணி, கோவிந்தம் மாள்,அணி செயலாளர்கள் விக்னேஸ், மலை. செல்வராஜ், வெரோனிகா, மற்றும் மாசிலா குப்பு சாமி, இருசப்பன், பாஸ்கர், 
    மீனா,கலா, அயரின், அய் யனார், தட்டான் சாவடி தொகுதி நிர்வாகி கள் ராமமூர்த்தி, கங்காதரன், பரமசிவன், ராஜேந்திரன், கண்ணியப்பன், லட்சுமணன், இளையராஜா, பச்சையப்பன், மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
    அரியாங்குப்பத்தில் மின்சாரம் தாக்கியதில் பிப்டிக் ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்தவர் முருகன்(வயது46). இவர் பிப்டிக் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    முருகன் அதேபகுதியில் புதிதாக வீடு கட்டி கடந்த 11&ந் தேதி  கிரகபிரவேச விழா நடத்தினார். புதிதாக கட்டிய வீட்டில் சிறுசிறு வேலைகள் முடிக்காமல் இருந்தது. நேற்று அந்த வீட்டில் புதிதாக இரும்பு கேட் கதவு பதிக்கப்பட்டது.

    இந்த நிலையில்  முருகன் புதிதாக பதிக்கப்பட்ட இரும்பு கேட்டில் தண்ணீர் ஊற்றினார். அப்போது இரும்பு கேட்டில் மின்கசிவு இருந்ததால் முருகனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்து போனார்.
    இதுகுறித்து அரியாங் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தவளக்குப்பம் அருகே டயர் வெடித்ததில் கார் தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பால் வியாபாரி பலியானார்.
    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது55). பால் வியாபாரி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரவிச்சந்திரன் வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் பால் வியாபாரத்துக்காக புதுவைக்கு வந்தார்.

    பின்னர் பால் வியாபாரம் முடிந்து மாடுகளுக்கு  தீவனம் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். தவளக்குப்பம் அருகே இடையார்பாளையத்தில் ஒரு தனியார் கம்பெனி அருகே வந்த போது அந்த வழியாக வந்த காரின் டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரவிச்சந்திரன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    மேலும் 2 வாகனங்கள் மீதும் அந்த கார் மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ரவிச்சந்திரன் படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரவிச்சந்திரன் சிறிது நேரத்தில் இறந்து போனார். இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காலாப்பட்டு அருகே பெரிய முதலியார்சாவடி பாரதி நகரை சேர்ந்தவர் லட்சுமி (80). இவர் இன்று காலை புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் லட்சுமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    உறவினர் பெண்ணுடன் மோட்டார் சைக்கிள் வந்த போது கார் மோதியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.
    புதுச்சேரி:

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் அல்லிகொண்ட பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது24). இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் பெண்ணான டெல்சி(24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்தார்.

    புதுவை மறைமலை அடிகள் சாலையில் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது அந்தவழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக ஸ்டீபன்ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஸ்டீபன்ராஜ் படுகாயமடைந்தார். டெல்சி லேசான காயமடைந்தார்.

    உடனே ஸ்டீபன்ராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோவில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஸ்டீபன்ராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் புதுவை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    எலி மருந்து தின்று பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    ஆந்திர மாநிலம் நிவாகம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ். இவர் கடந்த 33 ஆண்டுகளாக ஜிப்மர் குடியிருப்பில் தங்கி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நலத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ரத்னாமவுனிகா(வயது28). இவர் கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து தற்போது எம்.டி. இறுதியாண்டு படித்து வந்தார்.

    ரத்னாமவுனிகா அங்குள்ள விடுதியிலேயே தங்கி இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக ரத்னாமவுனிகா மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக இவர் படித்து வரும் ஆஸ்பத்திரியிலேயே மனநல டாக்டரிடம் ஆலோசனை பெற்று மருந்து&மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்தநிலையில் சம்பவத் தன்று ரத்னாமவுனிகா தனது பெற்றோருக்கு போனில் திருமணநாள் வாழ்த்து தெரிவித்தார். 

    அதன்பின்னர் சிறிது நேரத்தில் ரத்னா மவுனிகா எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கல்லூரி நிர்வாகம் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைக்கேட்டு அதிர்ச்சிய டைந்த மாணவியின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக ரத்னாமவுனிகாவை  சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ரத்னாமவுனிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ரத்னாமவுனிகா பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தந்தை கிருஷ்ணாராவ் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை கோவிந்தசாலை வாஞ்சிநாதன் வீதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரங்கநாயகி. இவர் களது மகன் கணேஷ்(18). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் ரங்கநாயகி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கணேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று விட்டார்.

    இதில் மயங்கி விழுந்த கணேசை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேஷ் இறந்து போனார்.

    இதுகுறித்து ரங்கநாயகி யின் சகோதரர் ஜெயக்குமார் சேவியர் கொடுத்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் புதுவை தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் வேளாண் துறையின் சார்பில் தாவரவியல் பூங்காவில் கடந்த 1978 முதல் ஆண்டுதோறும் மலர், காய் மற்றும் கனிகள் கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது.

    கடந்த 2019, 2020, 2021-ம் ஆண்டுகளில் கண்காட்சி நடத்தப்படவில்லை. கடந்தாண்டு  கண்காட்சிக்கு பதில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மலர் உற்பத்தி, காய்கறி சாகுபடி தொழில் நுட்பங்கள் சிறிய அளவில் காட்சிப்படுத்தப்பட்டது.

    இந்த ஆண்டு மலர் கண்காட்சியை மனதில் கொண்டு, கடந்த ஆகஸ்டு மாதம் முதல் ரூ.1.15 லட்சம் செலவில் மலர் கண்காட்சிக்காக செடிகள் உற்பத்தி செய்யப் பட்டன. 

    வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும். மலர் கண்காட்சிக்கு ரூ.70 லட்சம் வரை செலவாகும். நிதி நெருக்கடி, கொரோனா பரவல் காரண மாக புதுவை அரசு மலர் கண்காட்சி நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. 

    தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. அதே நேரத்தில் மலர் கண்காட்சிக்காக லாஸ்பேட்டை அசோக் நகரில் உள்ள மலர்செடிகள் மையத்தில் உருவாக்கப்பட்ட மலர் செடிகள்  பூத்து குலுங்க தொடங்கி உள்ளது. இந்த மலர் செடிகளை தாவரவியல் பூங்காவில் காட்சிப்படுத்தும் பணியை தோட்டக்கலை பிரிவு மேற்கொண்டது.

    இதன் காரணமாக தாவரவியல் பூங்கா வண்ண மலர்களாக காட்சி தருகிறது.  இதனால், தாவரவியல் பூங்காவில் பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. மலர்களின் அருகே சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கிழக்கு கடற்கரைசாலை யில் அமைந்துள்ள ஒரே தாவரவியல் பூங்கா என்ற பெருமை கொண்டது புதுவை தாவரவியல் பூங்காவாகும். 1826-ம் ஆண்டு இந்த பூங்கா பிரெஞ்சுக்காரர்களால் நிர்மாணிக்கப்பட்டது.
    பிரபல நிறுவனம் பெயரில் விற்பனை செய்த ரூ.1 லட்சம் போலி டீ தூள்- துணி பவுடரை பறிமுதல் செய்த போலீசார் 3 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை பெரிய மார்க் கெட், ரங்கப்பிள்ளை வீதி மற்றும் பாரதி வீதியில் செயல்படும் 3 கடைகளில் பிரபல நிறுவனம் பெயரில் போலி டீ தூள் மற்றும் துணி பவுடர் விற்பனை செய்யப்படுவதாக அந் நிறுவன சட்ட ஆலோசகர் நயன்தாரா டெமிக்கு புகார் வந்தது.

    இதையடுத்து நயன்தாரா டெமி மற்றும் அவரது குழுவினர் சம்பந்தப்பட்ட கடைகளில் அந்த பொருட்களை விலைக்கு வாங்கி பார்த்தனர்.

    அப்போது அந்த 3 கடைகளில் தங்களது நிறுவனம் பெயரில் போலி டீ தூள் மற்றும் துணி பவுடர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து நயன்தாரா டெமி இதுகுறித்து பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த 3 கடைகளிலும் சோதனை நடத்தி ரூ.1 லட்சத்துக்கும் மேலான போலி டீ தூள் மற்றும் துணி பவுடரை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கடை உரிமையாளர்களான மாணிக்கம், ஜாபர் அலி மற்றும் விற்பனையாளர் பாலமுருகன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவை மாநிலத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 26-ந் தேதி 1302 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் 10 பேருக்கு மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 5 பேருக்கும், காரைக்காலில் 4 பேருக்கும் மாகியில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. ஏனாமில் தொற்று பாதித்தவர் யாரும் இல்லை.

    தற்போது அரசு மார்பக மருத்துவமனையில் 4 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 5 பேரும் சிகிச்சையில் உள்ளனர். ஜிப்மர் மருத்துவமனை, அரசு பொதுமருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. மருத்துவ மனைகளில் 13 பேரும், வீட்டு தனிமையில் 129 பேர் என மொத்தம் 142 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சதது 63 ஆயிரத்து 707 பேர் குணமடைந்துள்ளனர். 1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 
    ×