என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான ரவிச்சந்திரன்
கார் மோதி பால் வியாபாரி சாவு
தவளக்குப்பம் அருகே டயர் வெடித்ததில் கார் தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பால் வியாபாரி பலியானார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது55). பால் வியாபாரி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரவிச்சந்திரன் வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் பால் வியாபாரத்துக்காக புதுவைக்கு வந்தார்.
பின்னர் பால் வியாபாரம் முடிந்து மாடுகளுக்கு தீவனம் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். தவளக்குப்பம் அருகே இடையார்பாளையத்தில் ஒரு தனியார் கம்பெனி அருகே வந்த போது அந்த வழியாக வந்த காரின் டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரவிச்சந்திரன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மேலும் 2 வாகனங்கள் மீதும் அந்த கார் மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ரவிச்சந்திரன் படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரவிச்சந்திரன் சிறிது நேரத்தில் இறந்து போனார். இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காலாப்பட்டு அருகே பெரிய முதலியார்சாவடி பாரதி நகரை சேர்ந்தவர் லட்சுமி (80). இவர் இன்று காலை புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் லட்சுமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






