என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவை மாணவர்கள் உக்ரைனில் தவிப்பு- மீட்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்
புதுச்சேரி:
ரஷிய ராணுவத்தால் தாக்குதலை சந்தித்து வரும் உக்ரைனில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முழுவீச்சில் இறங்கியுள்ளது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலிருந்து எத்தனை பேர் சென்றுள்ளனர் என கணக்கெடுத்து வருகின்றனர்.
இதற்காக அந்தந்த மாநில அரசுகள் டெலிபோன் உதவி எண்ணை வழங்கி உக்ரைன் சென்றவர்களின் விபரத்தை பதிவு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர். போர் தொடங்கியவுடன் தமிழகத்தில் இருந்து சென்றவர்களின் விபரம் இல்லாததால் உடனடியாக உதவி எண் அறிவித்து பதிவு செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியது.
இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பதிவு செய்து வந்தனர். புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த மதன்ராஜ் என்ற மாணவரின் பெற்றோர் தொடர்பு கொண்டு பேசினர். மாணவர் புதுவையை சேர்ந்தவர் என்பதால் தமிழக அரசு அதிகாரிகள் புதுவை அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து புதுவை அரசு உக்ரைன் சென்றவர்கள் விபரத்தை சேகரிக்க தொடங்கியது. மாணவர் மதன்ராஜின் பெற்றோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேற்று அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
அப்போது தங்கள் மகன் உக்ரைனில் இருக்கும் விபரத்தை தெரிவித்து, மீட்டுத்தரும்படி கோரிக்கை வைத்தனர். புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் மருத்துவம் படிக்க புதுவை, காரைக்காலை சேர்ந்த மாணவர்கள் உக்ரைன் சென்றுள்ள விபரம் தெரிய வந்துள்ளது.
இதுதவிர பல்வேறு நிறுவனங்கள் மூலம் மருத்துவம் படிக்கவும், பணியாற்றவும், வியாபார நிமித்தமாகவும் இன்னும் பலர் சென்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து புதுவை அரசு உக்ரைனில் தவிப்போர் பட்டியலை தயாரிக்க உதவி எண்ணை அறிவித்துள்ளது.
1070, 1077, 04132255407 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல புதுவையின் பிராந்தியங்களான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவற்றுக்கும் தனித்தனியே உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் சிக்கியிருக்கும் புதுவை மாணவர்களை மீட்க முதல்-அமைச்சர் ரங்கசாமி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியாவுக்கான தூதர் பார்த்தசத்பதி ஆகியோரை போனில் தொடர்புகொண்டு பேசினார்.
உக்ரைனில் உள்ள மாணவர்களோடு முதல்-அமைச்சர் அலுவலக அதிகாரிகளும் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது மாணவர்கள் கூறியதாவது:-
விடுதியில் பாதுகாப்பாக உள்ளோம். போர் காரணமாக குடிநீர், மின்சாரம் உட்பட அத்தியாவசிய தேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு மட்டுமே உணவு இருப்பு உள்ளது என தெரிவித்தனர்.
இதனால் மாணவர்கள் உணவின்றி தவிப்பது தெரிய வந்துள்ளது. மின்சாரம் இல்லாததால் குடும்பத்தையும் இப்போது தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பிரதமருக்கும் உக்ரைனில் சிக்கியுள்ள புதுவையை சேர்ந்தவர்களை மீட்டுத்தரும்படி கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பியுள்ளார்.






