என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆனந்தபுரம் அரசு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    புதுச்சேரி:

    ஆனந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. ஆசிரியர் செந்தில் வரவேற்புரையாற்றினார்.

    தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளித் துணை ஆய்வாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கி, பல்வேறு போட்டிகளில் வென்றவர் களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

    மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் சின்னராசு தொகுப்புரை வழங்கினார். ஆசிரியர் ராஜேஷ் நன்றியுரையாற்றினார். ஆசிரியைகள் கல்பனா, மணிமேகலை ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடு களைச் செய்திருந்தனர். 
    அமித்ஷா உத்தரவுப்படி கட்சி பணி தொடங்குங்கள் என்று பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா உயர்மட்டக்குழு கூட்டம் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம், அசோக்பாபு எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர் மோகன்குமார், துணைத்தலைவர் அருள்முருகன், ரத்தினவேல், செயலாளர் அகிலன், கூட்டுறவு பிரிவு தலைவர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், அலுவலக பொறுப்பாளர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    கூட்டத்தில், அமித்ஷாவுக்கு வரவேற்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்த நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது. 

    அமித்ஷா இட்ட கட்டளையை நிர்வாகிகள் நிறைவேற்றுவதற்கான பணிகளை துரிதமாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மத்திய மந்திரி அமித்ஷா கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போது வருகிற செம்டம்பர் மாதத்துக்குள் அனைத்து தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகளையும் நியமித்திருக்க வேண்டும். அந்த பட்டியலை தலைமைக்கு சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

    அதோடு, தொகுதி பொறுப்பாளர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களை குறைந்தபட்சம் 3-ல் ஒரு பங்கை சேர்ந்தவர்களிடம் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதை நிறைவேற்ற கட்சி நிர்வாகி கள் பணிகளை தொடங்க வேண்டும் என சாமிநாதன் கேட்டுக்கொண்டார்.
    புதுவையில் 3 பேருக்கு கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பூஜ்யத்தை எட்டியது.

    கடந்த ஒரு மாதமாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படாமல் இருந்தது. 

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. புதுவையில் 264 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    புதுவையில் 2, காரைக்காலில் ஒருவர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று  வருகின்றனர். புதுவையில் 5, காரைக்காலில் ஒருவர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். ஏனாமில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    புதுவையில் ஒட்டுமொத்தமாக 7 பேர் தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ்  உட்பட 16 லட்சத்து 77 ஆயிரத்து 21 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 
    இத்தகவலை   சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    ஐஸ் கிரீமுக்கு காசு கேட்டதால் தியேட்டர் கேண்டீன் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    திருபுவனை அருகே மதகடிப்பட்டு பாளையம் வாட்டார் டேங்க் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது55). இவர் திருக்கனூர்-திருவண்ணாமலை ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் கடந்த 15  ஆண்டுகளாக கேண்டீன் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இரவு காட்சி இடைவேளையின் போது திருக்கனூர் அருகே தமிழக பகுதியான சித்தலம்பட்டு காலனியை சேர்ந்த ஆசிக்(19), சூர்யா(25) மற்றும் பன்னீர் செல்வம் (21) ஆகியோர் கண்ணனிடம் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டனர். அப்போது ஐஸ் கிரீமுக்கு காசு கொடுக்கும்படி கண்ணன் கேட்டார். 

    அதற்கு எங்களிடமே காசு கேட்கிறாயா? என கூறி தகாத வார்த்தைகளால் திட்டி கண்ணனை தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர்.

    இதுகுறித்து கண்ணன் திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிக் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
    நோய் கொடுமையால் முதியவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை அருகே தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் முனுசாமி(வயது62). இவர் அரவிந்தர் ஆசிரமத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவருக்கு இருதய கோளாறு இருந்து வந்தது. இதற்காக 2 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் முனுசாமி இந்த நோயினால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அவருக்கு நோய் பாதிப்பு அதிகமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முனுசாமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அப்பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்ற முனுசாமி திடீரென கடலில் குதித்தார். 

    அப்போது அங்கு யாரும் இல்லாததால் நீரில் மூழ்கி சிறிது நேரத்தில் அருகில் உள்ள புதுவை பகுதியில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் காலாப்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம்  மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவில்&மணப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ்(50). கூலி தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    ரமேசுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரல் பிரச்சினை இருந்து வந்தது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேலும் அவருக்கு நரம்பு தளர்ச்சி நோயும் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில்  ரமேசுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ரமேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் மின்விசிறி கொக்கியில் வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திப்புராயப்பேட்டையில் மளிகை கடையை சூறையாடிய பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை திப்புராயபேட்டை லசார் கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மனைவி அருள்மேரி(வயது54). இவர் வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மளிகை கடைக்கு திப்புராயப்பேட்டை அந்தோணியார் தெருவை சேர்ந்த குணா என்ற வாலிபர் அடிக்கடி வந்து தகராறு செய்வார்.

    இந்த நிலையில்  அருள்மேரி மளிகை கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு வந்த குணா மளிகை கடையை மூடுமாறு கூறி தகராறு செய்தார்.

    அருள்மேரி மளிகை கடைடைய மூட மறுக்கவே ஆத்திரமடைந்த குணா கையில் வைத்திருந்த இரும்பு பைப்பால் மளிகை கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்.

    மேலும் அருள்மேரியையும் இரும்பு பைப்பால் குணா தாக்கினார். இதனால் அருள்மேரி வலி தாங்காமல் அலறினார். இதனைகேட்டு அவரது மகன் ஜான்பாஷா, மருமகள் ராணி ஆகியோர் குணாவிடம் தட்டிக்கேட்டனர். அவர்களையும் குணா தாக்கினார். அதோடு 3 பேரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    அப்போது அங்கு கூட்டம் திரளவே குணா அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த தாக்குதலில் காயமடைந்த அருள்மேரி, அவரது மகன் ஜான்பாஷா, அவரது மருமகள் ராணி ஆகிய 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து அருள்மேரி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குணாவை தேடி வருகிறார்கள்.

    கரிக்கலாம்பாக்கம் அருகே கோர்க்காடு ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முத்து (வயது49). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் மகன் மணவாளன் (25) என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில்  முத்து தனது மனைவி மற்றும் மகள்களுடன் வீட்டில் இருந்த போது அங்கு வந்த மணவாளவன் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கு நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை உடைத்து சேதப்படுத்திவிட்டு முத்துவை கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றார்.

    இதுகுறித்து முத்து கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவையில் விரைவில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடந்தது. புதுவை தொழில்நுட்பப பல்கலைக்கழகத்தின் வேந்தர் கவர்னர் தமிழிசை விழாவினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கல்வித்துறை செயலாளர் அசோக் குமார், சிகாகோ இலியனாஸ்  பல்கலைகழக, நிலையான தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணாரெட்டி, புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்-கழகத் துணை வேந்தர் டாக்டர் மோகன், பல்கலைக்கழக பதிவாளர் சிவராஜ், பேராசிரியர்கள், மாண-வர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

     புதுவை பொறியியல் கல்லூரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாறி உள்ளது. டெல்லியில் உள்ள அதிகாரிகள்கூட புதுவை பொறியியல் கல்லூரியை பற்றி கேட்பார்கள். ஆசியாவி லேயே சிறந்த கல்லூரி என கூறுவார்கள்.  அதே நற்பெயரை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பெற வேண்டும். கல்லூரிக்கு நற்பெயர் இருந்தால்தான் மாணவர்களுக்கு மரியாதை கிடைக்கும். அவர்களைத்தான் தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யும். இங்குள்ள கல்லூரியில் பணியாற்றும் 200 பேராசிரியர்களில் 
    120-க்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். இங்கு 90 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. 

    அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும். இது புதுவை அரசின் முதல் பல்கலைக்கழகம். மருத்துவ பல்கலைக்கழகத்தை அரசு விரைவில் தொடங்க உள்ளது. புதுவை பொறியியல் கல்லூரியில் படித்தவர்களில் தெருவுக்கு 2 பேராவது வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். இங்கு படித்து பட்டம் பெறும் மாணவர்கள் புதுவைக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
    புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்பட்ட பின் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  கொரோனா தொற்றுக்கு பிறகு நடைபெறும் விழா. பெறுவதை காட்டிலும், கொடுப்பதில் இன்பம் அதிகம். உங்களுக்கு பட்டம் வழங்க கவர்னர், முதல்&-அமைச்சர் வந்துள்ளனர். 

    தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக ரங்கசாமி பொறுப்பேற்ற பின் தேர்தலில் அளித்த வாக்குறுதி-களை நிறைவேற்றி வருகிறோம். 99 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநில-மாக புதுவை திகழ்கிறது. 

    முதல்-அமைச்சர் ரங்கசாமி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி ஆரம்பகல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை செலவிட்டு வருகிறார். பட்டம் பெற்றவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தின்படி அரசின் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுவை மாநிலத்தை இந்தியாவில் முதலிடத்துக்கு கொண்டுவர வேண்டும் என செயல்படுகிறோம். பிரதமர் கூறியபடி பெஸ்ட் புதுவையை உருவாக்கி வருகிறோம். 

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுவைக்கு வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். புதுவைக்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் புதுவை மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அரசாக திகழ்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு உறவுப்பாலமாக கவர்னர் தமிழிசை திகழ்கிறார். படிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது. 

    இளைஞர்கள் நலனுக்காக ஸ்டார்ட் அப் இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் கொண்டு வந்துள்ளார். தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

    பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கி இளைஞர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 
    உங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்கும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    கன்னியக்கோவிலில் சாலையை கடக்க முயன்ற முதியவர் லாரி மோதி பலியானார்.
    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அருகே கன்னியகோவில் கடலூர் -புதுவை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது65) இவர் நேற்று முன்தினம் பரிக்கல்பட்டு சொசைட்டியில் பால் வாங்கி கொண்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 

    அப்போது முள்ளோடை அருகே கடலூர்-புதுவை சாலையை கடக்கும் போது கடலூரில் இருந்து புதுவை நோக்கி சென்ற கார் இவர் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

    பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    முள்ளோடையில் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில எல்லை பகுதியான முள்ளோடை பரிக்கல்பட்டு சாலையில் பெருமாள் கார்டனில் குரு சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 21-ந் தேதி கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், கோ பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து வாஸ்து சாந்தி, அங்குரார்ப் பணம், யாகசாலை பூஜை ஹோமம்,  9.00 மணிக்கு அஷ்டபந்தனம் சமர்பித்தல், பிம்பசுத்தி ரக்ஷாபந்தனம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான 6 மணிக்கு 2-வது கால யாக பூஜை, மூலமந்தர ஹோமம், 9.00 மணிக்கு யாத்ராதானம், 9.15 மணிக்கு கடம் புறப்பாடு, 10.10 மணிக்கு கோபுர கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு சாய்பாபாவுக்கு மகா கும்பாபிஷேகம் விமர்சியாக நடந்தது.

    இதில் துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, புதுவை பாலா அறக்கட்டளை தலைவர் சாமிநாதன், பொருளாளர் கோகுல்ராஜ், கோமதி, முரளீஸ்வரன் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
    புதுவையின் வளர்ச்சிக்கு மத்திய உள்துறை மந்திரி உதவ வேண்டும் முன்னாள் முதல்&அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:&

    சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்முறையாக புதுவைக்கு வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ்-தி.மு.க. அரசு கவிழ்க்கப்பட்டது. அதன்பின்னணயில் யார் இருந்தார்கள் என்ற விஷயத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. 

    தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியும், நீங்களும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்தால் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்தீர்கள். சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். 

    பெஸ்ட் புதுவையாக மாற்றுவோம் என பிரதமர் மோடி கூறினார். தேர்தல் முடிந்து ஓராண்டாகியும் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. மாநில அரசு 5சதவீத நிதியைக்கூட கூடுதலாக பெறவில்லை. 1.6 சதவீத நிதியை மட்டுமே மத்திய அரசு கூடுதலாக வழங்கியுள்ளது. 

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், நிதிக்கமிஷனில் சேர்க்க வேண்டும். ரூ.8 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்து வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மாநில அரசுகளுக்கு 41 சதவீத நிதி வழங்கும்போது, புதுவைக்கு மட்டும் 22 சதவீதம்தான் தரப்படுகிறது. 

    புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் மாபெரும் வளர்ச்சி தேவைப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிட்டு புதுவையின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. நான் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை மாநில அந்தஸ்து, நிதி அதிகாரம், கூடுதல் நிதி குறித்து தங்களை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். 

    பிரதமருக்கும் பலமுறை கடிதம் எழுதினேன். மாநில அரசுக்கு தொல்லை கொடுக்கும் கவர்னர் கிரண்பேடியை மாற்ற வலியுறுத்தினேன். அப்போது ராணுவ அதிகாரியை புதுவை கவர்னராக நியமிப்பதாக வாக்குறுதியளித்தீர்கள். ஆனால் உங்கள் வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை. வளர்ச்சி, கட்டமைப்பு, கூட்டுறவு நிறுவனங்கள், ஆலைகள் புனரமைப்பு என நாங்கள் பல விஷயங்களை கோரினோம். ஆனால் தீர்வு இப்போது வரை கிடைக்கவில்லை. 

    பல ஆண்டாக அரசின் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப் படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் விரைவுபடுத்தவில்லை. மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் புதுவை மாநில வளர்ச்சிக்காக மத்திய உள்துறை அமைச்சகம் செய்து கொடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார்.
    உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இருங்கள் என உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்துக்கு ஒரு நாள் பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா நேற்று வந்தார்.

    பல்கலைக்கழக கருத்தாய்வு மையத்தில் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். பாரதியார் நினைவு இல்லம், அரவிந்தர் ஆசிரமத்துக்கும் சென்றார்.

    தொடர்ந்து கவர்னர் மாளிகையில் மதிய உணவருந்தினார். கவர்னர் மாளிகையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக விழா திட்டமிட்ட நேரத்தை தாண்டிச் சென்றதால் அமித்ஷாவால் இவர்களை தனித்தனியே சந்திக்க முடியவில்லை.

    அதேநேரத்தில் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்களோடு அமர்ந்து உணவருந்தினார். தொடர்ந்து அவர் கம்பன் கலையரங்கில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி பேசினார்.

    அரவிந்தர் விழா, அரசு விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா இந்தியில் பேசினார். அரசு விழாவில் அவரின் பேச்சு மொழி பெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா நடந்த 2 இடங்களிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அழைப்பிதழ் இருந்தவர்கள் மட்டும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து அமித்ஷா பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளை சந்தித்தார். 200 நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகள், போலீசாரை அறையிலிருந்து வெளியேற அமித்ஷா உத்தரவிட்டார். கட்சி நிர்வாகிகளிடம் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

    பின்னர் நிர்வாகிகளிடம், எத்தனை ஆண்டாக கட்சிப்பணியில் உள்ளீர்கள்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நிர்வாகிகளிடம், இத்தனை ஆண்டுகளாக கட்சிக்காக என்ன பணிகளை செய்துள்ளீர்கள்? என கேள்வி எழுப்பினார். சிலர் பதிலளித்தனர், சிலர் பதிலளிக்க முடியாமல் திணறினர்.

    தொடர்ந்து நிர்வாகிகளிடம் பேசிய அமித்ஷா, உங்கள் பகுதியில் உள்ள மக்களின் அன்றாட பிரச்சினைகளை கேட்டறிந்து, நேரில் சென்று அதை தீர்த்து வையுங்கள். மக்களோடு கலந்து பழகுங்கள். அவர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்.

    உங்களால் முடியாத பணிகளை எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் கவனத்துக்கு கொண்டுசென்று தீர்த்து வையுங்கள். உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இருங்கள் என உத்தரவிட்டார். அதோடு, கட்சி கூட்டத்தில் நாம் பேசும் விபரங்களை வெளியில் யாரிடமும் தெரிவிக்காதீர்கள் என கூறினார்.

    இதனால் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்த வி‌ஷயங்களை பற்றி பேசாமல் வாய்மூடி இறுக்கமாக உள்ளனர். புதுவையில் உள்ள எதிர்கட்சிகள் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியை திணிக்காதே, வாக்குறுதிகளை நிறை வேற்று என வலியுறுத்தி கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர்.

    அதேநேரத்தில் அமித் ஷாவை வரவேற்று அமைக்கப்பட்டிருந்த பேனர்களில் இந்தியில் அவரை வரவேற்று வாசகங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    முத்து ரத்தின அரங்கம் பள்ளி வளாகத்தில் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியின்  ஆண்டு விழா கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலை பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வளவன் ஆகியோர் கலந்துகொண்டு மழலையர்களின் நடன நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். 

    சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல டாக்டர் ரத்தின தனவேந்தன் மற்றும் கால்நடை மருத்துவர்  அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மழலையர்களை வாழ்த்திப் பேசினார்.

    மேலும் உலக கவிஞர்கள் சங்க நிறுவனர் புதுவை குமார், டாக்டர் ரங்கநாயகி வளவன் பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி  மரிய ஸ்டெல்லா பள்ளியின் துணை முதல்வர் மங்கையர்கரசி   பள்ளியின் ஆலோசகர் ரத்னப்பிரியா அருண்குமார் கவுண்டன் பாளையம் ஊர் தலைவர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுந்தர நாட்டியாலயா பள்ளி மாணவர்களின் பரதநாட்டிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர்  பள்ளி ஆசிரியைகள் லக்ஷ்மி பிரியா,  மகாலட்சுமி, சோபியா ஆகியோர் செய்திருந்தனர்.
    ×