என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மத்திய மந்திரி அமித்ஷா வருகையையொட்டி புதுவை மேலும் வளர்ச்சி அடையும் என்று வெங்கடேசன் எம்.எல்.ஏ. கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 24-ந் தேதிக்கு பிறகு புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஒரு புதுப்பொலிவு பெற்றுள்ளது என்று கூறலாம். ஏனென்றால் அன்றைய தினம் தான் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுச்சேரிக்கு வந்த தினம். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் புதுச்சேரியில்  மக்களுக்காக செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முக்கியமாக பா.ஜனதா என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு புதுச்சேரியில் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுகின்ற இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரியின் வருகையானது புதுவைக்கு மேலும்  வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுவைக்கு வந்து தொடங்கி வைத்து விட்டுச் சென்றுள்ளார். 

    முக்கியமாக போக்கு வரத்து நெரிசலை மனதில் கொண்டு அவர் மேலும் ஒரு புதிய பஸ் நிலையத்தை அமைப்பதற்கான நிதியும் ஒதுக்கி அந்த திட்டத்தையும் தொடங்கி வைத்துச் சென்றுள்ளார். உருளையன்பேட்டை பேருந்து நிலையத்தை ரூ. 31 கோடி செலவில் உலகத்தரம் வாயந்த ஒரு பேருந்து நிலையமாக மாற்றுவதற்கும் அவர் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.

    இது போன்ற எண்ணற்ற திட்டங்களுக்கு மத்திய மந்திரி வழிவகை செய்துள்ளது புதுவை வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதாவது வர்த்தகம் கல்வி ஆன்மீகம் சுற்றுலா ஆகியவற்றில் இந்தியா விலேயே தலைசிறந்த நகரமாக உயர்த்துவதற்கு பிரதமர் உறுதி கொண்டார். 

    அதனை நாங்கள் அடுத்த தேர்தலுக்கு முன்னதாக அதற்கு முழு வடிவம் கொடுத்த பின்னரே மக்களாகிய உங்களை வந்து மீண்டும் சந்திப்போம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி கொண்டு இருப்பது இந்த நிலையில் வரவேற்கத்தக்க விஷயம் ஆகும். எனவே அடுத்த ஓரிரு ஆண்டுகளில் புதுவை, வர்த்தகம் கல்வி ஆன்மீகம் சுற்றுலாவில் உலகத்தரம் வாய்ந்த ஒரு வளர்ச்சியை சிறந்த புதுவை என்ற பெயரில் அடையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. 

    இவ்வாறு வெங்கடேசன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
    திருப்பூர் பனியன் ஏஜெண்டிடம் செல்போன் பறித்த ஓட்டல் ஊழியர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் ராமர் (வயது32).இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில்  ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். 

    இவர்  பனியன் ஆர்டர் சம்பந்தமாக புதுவை வந்தார். பின்னர் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள கடையில் சாப்பிட்டு விட்டு அவர் தங்கியிருந்த லாட்ஜ்க்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராமரை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். 

    தாக்குதலில் காயமடைந்த ராமர் புதுவை அரசு ஆஸ்பத்திரியல் சிகிச்சை பெற்ற பின்னர் இதுகுறித்து பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் கூடப்பாக்கத்தை சேர்ந்த அரசு (20),காரைக்காலை சேர்ந்த ஜான்சன் (32)ஆகியயோர் என்பது தெரியவந்தது.இவர்கள் இருவரும் புதுவையில் உள்ள ஒட்டலில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது.பின்னர் அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த வாலிபர்களை கைது செய்தனர்.
    உப்பளம் தொகுதியில் ரூ.2 3/4 கோடி செலவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    புதுச்சேரி:

      புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டையில் உள்ள வாணரப்பேட்டை, கடலூர் ரோடு முதல் உப்பனார் வாய்க்கால் வரை உள்ள  வாணரப்பேட்டை வாய்கள் புனரமைப்பு செய்தல் சம்பந்தமாக உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் அப்பகுதி   பொதுமக்கள் கோரிக்கை யாக வைத்தனர்.

    இதன் சம்பந்தமாக 8 மாத காலமாக கடும் முயற்சி எடுத்து அதிகாரிகளை தொடர்ச்சியாக நேரில் சந்தித்தும் மனு அளித்தும் இருந்தது குறிப்பிடத்தக்கது, மேலும் பொதுப்பணித்துறை மற்றும் புதுவை நகராட்சியில் பணம் இல்லாததால் புதுவை ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் செய்து கொடுக்கும்படி கென்னடி எம்.எல்.ஏ  கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் இன்று புதுவை ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 2. கோடியே 81 லட்சத்து 53 ஆயிரத்து 350 மதிப்பீட்டில் பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். 

    இந்நிகழ்ச்சிக்கு புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி  முன்னிலை வகித்தார்.இதில் உள்ளாட்சி துறை செயலாளர் வல்லவன்,  புதுவை ஸ்மார் சிட்டி திட்ட தலைமை செயல் அதிகாரி டாக்டர் அருண், உள்ளாட்சித் துறை இயக்குனர் ரவிதீப் சிங் சாஹர் புதுவை நகராட்சி ஆணையர் சிவகுமார்,  நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், மற்றும் தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, பொருளாளர் சண்முகம், மாநில பிரதிநிதி காத்தலிங்கம், மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தி.மு.க. பிரமுகர்கள் பிராங்கிளின் மற்றும் நோயல், கிளை செயலாளர்கள் செல்வம் மற்றும் டேவிட், இளைஞரணி அரவிந்த் , லாரன்ஸ், காலப்பன், மணிமாறன், ஆறுமுகம், செல்லப்பன், அன்வர், தினேஷ்,ரவி, ஈசாக்கு, அறிவழகன், செழியன்,மணி, கணேசன், மாயவன்,ஸ்டாலின், பாலாஜி, முத்து, மோரீஸ், ரகுமான் மற்றும் ஊர் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.
    அரியாங்குப்பம் கொம்யூனில் ரூ.1.48 கோடியில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார்தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:
     
    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட அரியாங்க்குப்பம்,  வீராம்பட்டினம் கிராமத்தில்  உள்ள சாலைகளான துறைமுக சாலை, நாகூரான் சாலை, சின்ன வீராம்பட்டினம் சாலை, அரிக்கன் மேடு சாலை ஆகிய சாலைகளுக்கு தார் சாலை அமைக்கும் பணி பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் உள்ளாட்சி துறையின் கீழ் அரியாங் குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூ.1கோடியே 84 லட்சம் செலவில்  நடைபெறுகிறது.

    இந்த பணியினை மேற்கொள்வதற்கான பூமி பூஜை, அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், பாஸ் கரன் எம்.எல்.ஏ.ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் உள்ளாட்சித்துறை இயக்குனர் ரவிதீப் சிங்க் சஹார், உள்ளாட்சி துறை கண்காணிப்பு பொறியாளர் சாய் சுப்ரமணியன் உள்ளாட்சிதுறை செயற் பொறியாளர் திருநாவுக்கரசு, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) முகமது இஸ்மாயில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், அரியாங் குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உதவி   பொறியாளர், நாகராஜன், அரியாங்குப்பம் இளநிலை பொறியாளர்கள், சுரேஷ், அகிலன் கட்டுமான நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    அரசு பள்ளி கதவு திறக்கப்படாததால் மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரே அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களின் குழந்தைகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். அரசுப் பள்ளியை பொறுத்தவரை வழக்கமாக 8.30 மணியளவில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஆனால் பாகூர் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி 9 மணிக்கு மேல் திறக்கப்படுகிறது. மேலும் இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 9.30 மணிக்கு மேல் பள்ளிக்கு வருவதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் இன்று பாகூர் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி கதவு 9.30 மணி வரையும் திறக்கப்படவில்லை ஆனால் பள்ளிக்கு வந்த மாணவிகள் மற்றும் அவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள் பள்ளியின் கதவு திறக்கபடாததால் நீண்ட நேரம் காத்து கிடந்தனர். 

    இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பின்னர் ஆசிரியர் வந்தவுடன் பள்ளி வாசல் கதவு திறக்கப்பட்டு பள்ளி மாணவர்களை உள்ளே அனுமதித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    நாள்தோறும் பள்ளி கதவுகள் தாமதமாகவே திறக்கப்படுகின்றன ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. ஆசிரியர்களும் தகுந்த நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை. உள்ளூரில் பணியாற்றுவதால் 9.30 மணிக்கு மேல் பள்ளிக்கு வருகின்றனர்.

    இந்த சாலையில் பள்ளிக்கூடங்கள் இருந்து வருவதால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கார்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த சாலையில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை போலீசார் சரி செய்ய வேண்டும்.இது சம்பந்தமாக அரசு உடனே கவனம் செலுத்தி மாணவர்களின் உயிரை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் காணொலியில் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:
      
     கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். புதுவை சட்டசபையில  முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமைச் செயலர் அஸ்வனி குமார், அரசு செயலர் உதயகுமார்,  சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    புதுவையில் கொரோனா பரவலின் தற்போதைய நிலைமை குறித்தும், புதுவையில் கொரோனா பரவலைத் தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், வருங்காலங்களில் கொரோனா பரவல் அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், இதுவரையில் எவ்வளவு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது என்ற விபரங்கள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
    பாதாள சாக்கடை அடைப்புக்கு நிரந்தர தீர்வு காண பொதுப்பணித்துறை அதிகாரியிடம் நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை பொது சுகாதார கழுநீர் உட்கோட்ட பிரிவு உதவி செயற்பொறியாளர் வைத்தியநாதனிடம் நேரு எம்.எல்.ஏ.   பாதாள சாக்கடை அடைப்புகளை பற்றி புகார் செய்தார்.

    உருளையான்பேட்டை தொகுதியின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகள் ஏற்படுகிறது.இதற்கு நிரந்தர தீர்வு  காணவும் மற்றும் பாதாள சாக்கடை தொட்டிகளில் உள்ள கழிவுகளை  தூர்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள  வேண்டும் என  கேட்டுக் கொண்டார்.

    ஆலோசனையின் போது பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சங்கர், தனசீலன் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த குணசேகரன், வேலாயுதம், ஆதி, சிவராமன், காமராஜ், தர்மேஷ், பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
    மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் கார் டிரைவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த சோம்பட் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் செல்வம் (வயது 39). 

    இவர் புதுவையில் உள்ள தனியார் டிராவல்ஸில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் திருவண்டார் கோவிலை சேர்ந்த கலைவாணிக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக  இருந்துள்ளது.
     
    கடந்த சில மாதங்களாக கலைவாணி திருவண்டார் கோவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மகள்களுடன் வசித்து வந்தார். டிரைவர் செல்வம் தனியாக இருந்தார். இந்நிலையில்  இரு வீட்டினரும் தம்பதியருக்கு அறிவுரை கூறி இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வத்துடன் வாழ வந்த கலைவாணி மீண்டும் ஏற்பட்ட தகராறில் திருவண்டார் கோவிலுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் மனம் வேதனை அடைந்த செல்வம் நேற்று வில்லியனூர்-கூடப்பாக்கம் சாலையில் பட்டாணிகளம் என்ற பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி ரெயில் வந்தது. ரெயில் வருவதால் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் இரண்டு புறமும் வாகனத்தில் வந்தவர்கள்  காத்திருந்தனர். 

    ரெயில்வே தண்ட வாள த்தை ஒட்டி நிறைய குடியிருப்புகளும் உள்ளது.  இந்நிலையில் செல்வம் ரெயிலை நோக்கி வேகமாக நடந்து சென்றார். 

    வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதை உணர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒருசேர சத்தம் போட்டுள்ளனர். அதனை காதில் வாங்காமல் வேகமாக வந்த ரெயில் முன் செல்வம் பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்டு செல்வம் பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து வில்லியனூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ராமு தலைமையிலான போலீசார் வந்து செல்வத்தின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக செல்வத்தின் மனைவி கலைவாணி கொடுத்த புகாரின் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    புதுவை வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் திருவிழா கண்காட்சியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டத் தின் வரிசையில் மத்திய வேளாண் அமைச்சகம் விவசாயிகள் கூட்டு பங்கேற்பு எங்கள் முன்னுரிமை என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்ட மிட்டுள்ளது.

    நாடு முழுவதும் 731 வேளாண் அறிவியல் நிலையங்களில் விவசாயிகள் திருவிழாவை நடத்துகிறது. நாட்டில் முதல்முறையாக தொடங்கப்பட்ட புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் திருவிழா இன்று நடந்தது. 

    திருவிழா, கண்காட்சியை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயகுமார் தொடங்கி வைத்தார். அமைச்சர் சாய்.ஜெ.சரவணக்குமார், விவசாயிகள் நலத்துறை இயக்குனர் பாலகாந்தி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாகீர் உசேன், கரிக்காலன் வேளாண் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ், வேளாண் தொழில்நுட்ப முகமை திட்ட இயக்குனர் வசந்தகுமார், கால்நடைக்கல்லூரி முதல்வர் முருகவேல், பூச்சியியல் வல்லுநகர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    தொடக்கவிழாவில் மத்திய வேளாண் அமைச்சரின் இணையவழி நேரலை ஒளிபரப்பு செய்யப் பட்டது. தொடர்ந்து விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல், கருத்தரங்கு நடந்தது. விவசாய கண்காட்சியில் உயிரக பூச்சி, நோய் மேலாண்மை இடுபொருட்கள், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் செயல்பாடுகள், திட்டங்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் விளைபொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டன. 

    காய்கறி, பழங்கள் மதிப்பு கூட்டுதல், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு பயிற்சி பெற்ற பெண்களுக்கு சிறுதொழில் தொடங்க ரூ.3 ஆயிரம் மதிப்பிலான எடை, சீலிங் கருவிகள் வழங்கப் பட்டது. எண்ணைவித்து பயிர்கள், சிறுதானிய பயிர்கள், ஊட்டமேற்றிய பயிர்கள் என்ற தலைப்பில் தொழில்நுட்ப அமர்வு நடத்தப்பட்டது.
    மசோதவை வாபஸ் பெறக்கோரி போக்குவரத்து சம்மேளனம் போராட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை சி.ஐ.டி.யூ. சாலை போக்குவரத்து சம்மேளனம் சார்பில் கடலூர் சாலை உழைப்பாளர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். செயலாளர் சீனுவாசன் கண்டன உரையாற்றினார். 

    நிர்வாகிகள் ராமசாமி,  கொளஞ்சியப்பன், ரவிச்சந்திரன், மணிபாலன், ராஜ்குமார், பனிமலர், ராஜா, விஜயகுமார், அந்தோணி தாஸ், சத்தியமூர்த்தி, மருதப்பன், மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர். மத்திய அரசு பொது போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை அப்புறப்படுத்தி கார்ப்பரேட் வசம் ஒப்படைக்க  கூடிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு மசோதா 2019 என்ற பெயரில் ஒரு சட்டத்தை கொண்டு வர உள்ளது.

    இந்த சட்டம் அமல்படுத்தப் பட்டால் போக்குவரத்து தொழில் அத்தனையும் தனியார் வசம் ஒப்படைக் கப்படும், ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் புதுப்பித்தல் தனியார் முதலாளிகளிடம் சென்றுவிடும். டிங்கர், வெல்டர், பெயிண்டிங் உட்பட துணை தொழில்களும் கார்ப்பரேட் நிறுவனங் களிடம் செல்லும் என்பதால் இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். காப்பீடு, டோல்கேட், உரிமம் புதுப்பித்தல் கட்டணத்தை குறைக்க வேண்டும்.  பெட்ரோல் டீசல் விலை உயர்வு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பாகூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    புதுச்சேரி:

    அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாகூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். கொம்யூன் செயலாளர் ஹரிதாஸ் முன்னிலை வகித்தார். தமிழ் மாநில துணைத்தலைவர் சுப்பிரமணி, புதுவை பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

    பிரதேச பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கொம்யூன் செயலாளர் சரவணன், முத்துலிங்கம், செல்வராசு, முருகையன், வளர்மதி, கிளை கமிட்டி உறுப்பினர்கள் சாம்பசிவம், தனுசு, சக்திவேல், பூங்கா வனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். 200 நாட்கள் வேலையும் சம்பளமாக நாளொன்றுக்கு 600 ரூபாய் வழங்க வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. முன்னதாக பாகூர் சிவன் கோவில் அருகில் இருந்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    டாக்டரை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்
    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கலைவாணர் நகர் குறிஞ்சி வீதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். (வயது 48). இவர் ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவருக்கும், வங்கியில் பணியாற்றும் இவரது மனைவி ஜீவிதாவுக்கும்   திண்டிவனம்- புதுவை பைபாஸ் சாலை பட்டனூர் அருகே தகராறு ஏற்பட்டது. 

    அப்போது ஜனார்த்-தனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் ஜனார்த்தனன் மனைவி ஜீவிதா தப்பி ஓடி விட்டார். இதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்தவர்கள் காரை நிறுத்தி டீ குடிக்க கடைக்கு வந்தனர். பின்னர் காருக்கு சென்ற அவர்கள் காருக்கு முன்னால் நிறுத்தி இருந்த ஜனார்த்தனன் மோட்டார் சைக்கிளை எடுக்கும்படி கூறியுள்ளனர். 

    ஏற்கனவே கோபத்தில் இருந்த ஜனார்த்தனன் காரில் இருந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அந்த நபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் விசாரணை மேற்கொண்டதில், காரில் வந்தவர் மகாத்மா காந்தி ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் சந்திப் மனோகர் (29) என்பதும், சென்னை அண்ணா நகரை சேர்ந்த இவர் பிரபல அரசியல் பிரமுகரின் மகன் என்பதும் தெரியவந்தது. 

    டாக்டரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய ஜனார்த்தனனை போலீசார் போலீஸ் நிலையம் வரவழைத்தனர். அவர் தனது மனைவி கொடுத்த புகாரில் தான் போலீசார் விசாரணைக்கு அழைப்பதாக போலீஸ் நிலையம் வந்து தன்னுடைய மனைவியை பற்றி சரமாரி புகார் அளித்தார். 

    பின்னர் போலீசார், டாக்டர் சந்திப் மனோகர் கொடுத்த புகாரின் பேரில் ஜனார்த்தனனை கைது செய்தனர். அப்போதுதான், ஜனார்த்தனன் தனது மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கவில்லை. டாக்டரை தாக்கியதால் தான் கைது செய்யப்பட்டதை உணர்ந்தார். பின்னர் அவரை திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.
    ×