என் மலர்
புதுச்சேரி
- நான் சாவர்கர் பெயர் பலகையை வைத்தேன்.
- சாவர்கர் பற்றி தெரிந்து கொண்டு போராட்டம் நடத்தட்டும்.
புதுச்சேரி:
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பிரதமரின் ஸ்வாநிதி மகோத்சவ் என்ற பெயரில் சுயசார்பு சாலையோர வியாபாரிகளின் திருவிழா கடற்கரை காந்தி திடலில் நடைபெற்றது. திருவிழாவை கவர்னர் தமிழிசை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அரங்குகளை பார்வையிட்டார்.
இதன்பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை காந்தி திடலில் அமைக்கப்பட்டு வரும் தியாக பெருஞ்சுவரில் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர் பலகை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அதில் நான் சாவர்கர் பெயர் பலகையை வைத்தேன். அதற்கு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
சாவர்கர் பற்றி தெரிந்து கொண்டு போராட்டம் நடத்தட்டும். அந்தமானில் உள்ள சிறைச்சாலைக்கு ஒரு முறை சென்று பார்த்து விட்டு சாவர்க்கர் பற்றி அறிந்து பாருங்கள். அவர் சுதந்திர போராட்டத்திற்காக சிறையில் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது தெரியும். அவருடைய கொள்கையில் வேறுபாடு இருக்கலாம்.
ஆனால் சுதந்திரப் போராட்ட வீரர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சாவர்கர் சுதந்திர போராட்ட வீரர் என்பது அதிகாரப்பூர்வமாக, சரித்திர பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்துங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் எல்லாவற்றையும் அரசியல் ஆக்க நினைக்காதீர்கள்.
சாவர்க்கர் பற்றி அந்தமான் சிறையில் ஒலி, ஒளி காட்சி நடத்துவார்கள், அதை பார்த்தால் கண்ணீர் வரும். அதைப்பார்த்துவிட்டு வந்து போராட்டம் நடத்துங்கள். இதுபோன்ற போராட்டங்களை பற்றியெல்லாம் நான் கவலைப்படுவது கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்த சூரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது
- சுதாகரன் மதகடிப்பட்டில் செல் போன் கடை நடத்தி வந்தார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் நத்தமேடு சாலை அந்தராசி குப்பம் புதுநகரில் வசித்து வருபவர் ராணி. இவரது மகன் சுதாகர் (வயது 32). இவருக்கும் அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்த சூரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சுதாகரன் மதகடிப்பட்டில் செல் போன் கடை நடத்தி வந்தார். கடையில் ஏற்பட்ட நஷ்ட்டத்தால் சுதாகரனுக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் செல் போன் கடையை மூடிவிட்டு சுதாகரன் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இதன் காரணமாக சுதாகரனுக்கு அவரது மனைவி சூரியாவுக்கும் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சூரியா கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டு சென்று விட்டார். அதில் இருந்து சுதாகரன் மனஉளைச்சலுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சுதாகரனின் தாய் ராணி அரும்பார்த்த புரத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சுதாகரன் வீட்டின் சாமி அறையில் சிமெண்டு கூரையின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.
அப்போது அவரது உறவினர் புகழ் எதேச்சையாக சுதாகரன் வீட்டுக்கு வந்த போது அங்கு சுதாகரன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து சுதாகரனை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுதாகரன ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது உறவினர் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தலைவர்கள் விநாயகம், வீரமுத்து தலைமை வகித்தனர்.
புதுச்சேரி:
காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி மீது மத்திய அரசின் பழிவாங்கும் போக்கை கண்டித்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மங்களம் தொகுதி உறுவையாறில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் விநாயகம், வீரமுத்து தலைமை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ரகுபதி முன்னிலை வகித்தார்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், நிர்வாகிகள் திருமுருகன், மருதுபாண்டியன், செல்வராஜ், ஜானு அம்மாள், காளிமுத்து, லோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
- குபேர் பிறந்தநாள் இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது
- அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ. சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சரும் நகர தந்தை என போற்றப்படுபவருமான குபேர் பிறந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாரதி பூங்காவில் உள்ள குபேர் சிலைக்கு அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ. சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
இதுபோல் பிரெஞ்சிந்திய விடுதலைகால மக்கள் நல இயக்கத்தினர் அதன் தலைவர் சிவராஜ் தலைமையில் குபேர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- தந்தை மகன் இருவரும் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.
- செந்தில்குமாருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
புதுச்சேரி:
கடலுாரை அடுத்துள்ள குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 65) இவரது மகன் செந்தில்குமார் வயது (40) தந்தை மகன் இருவரும் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். செந்தில்குமாருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் கடலுாரில் வாடகை வீட்டில் குடியேறி, தனது குழந்தைகளை அங்குள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்தார்.
கடந்த மாதம் 23-ந் தேதி இரவு 7 மணியளவில் செந்தில்குமார் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை. அவரது மனைவி, செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், அவர் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
செந்தில்குமார் எப்போதாவது பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் கிராமத்திற்கு மதுகுடிக்க செல்வது வழக்கம் என்பதால், அவரது உறவினர்கள் சோரியாங்குப்பம் பகுதியில் தேடி வந்தனர். 24-ந்தேதி காலை கரும்பு தோட்டத்தில் செந்தில்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்- இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்யப்பட்டு ஒரு மாதமாக ஆகியும் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதை அடுத்து இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் சிறப்புப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் செந்தில்குமாரோடு பழகிய இருவர் தான் அந்த கொலையில் ஈடுபட்டது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கொலையாளிகள் இருவரையும் பிடித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு தான் செந்தில்குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வரும்.
- புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- புதுவையில் பள்ளி-கல்லூரிகள் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் பள்ளி-கல்லூரிகள் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஆனாலும் தொடந்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதற்கிடையே லாஸ்பேட்டை தாகூர் கலை கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப் படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற 3 பேரை பிடித்து அவர்களின் சட்டைப்பைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது சட்டைபையில் அவர்கள் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தனர். மொத்தம் ஒரு கிலோவுக்கும் மேலாக அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை விசாரணை நடத்தினர்.
விசாரனையில் அவர்கள் லாஸ்பேட்டை மடுவு பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராம்கி வயது (25). லாஸ்பேட்டை செண்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த துரை (22) மற்றும் லாஸ்பேட்டை ஏர்போட்டு பின் புறப்பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற ராம் (24) என்பதும் இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது போல் கோரிமேடு காமராஜர் நகர் மெயின் ரோடு பல் மருத்துவ கல்லூரி அருகே இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் வந்ததின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கஞ்சா விற்ற 2 பேரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் தமிழக பகுதியான மொரட்டாண்டியை சேர்ந்த ஹரிகரன் (21) மற்றும் கோரிமேடு காமராஜர் நகர் கென்னடி வீதியை சேர்ந்த சுகுமார் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுவை பஸ்நிலையம் பின்புறம் உள்ள மங்கள லட்சுமி நகர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 17வயது சிறுவன் மற்றும் ஆட்டுப்பட்டி அம்பேத்கார் நகரை சேர்ந்த அருண் (22) ஆகிய 2 பேரை உருளையன் பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆண்ட்ரூஸ் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- ஆரோவில் சர்வதேச நகர கவுன்சில் செயலராக இருப்பவர் சத்தியா.
- ஆரோவில் நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் ஆரோவில் டவுன்ஹால் நிர்வாகி பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லீவா என்ற பெண்மணி தடுத்தார்.
புதுச்சேரி:
ஆரோவில் சர்வதேச நகர கவுன்சில் செயலராக இருப்பவர் சத்தியா. இடையஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்த இவரை ஆரோவில் நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் ஆரோவில் டவுன்ஹால் நிர்வாகி பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லீவா என்ற பெண்மணி தடுத்தார். மேலும் அவர் தள்ளிவிட்டதில் சத்யா கீழே விழுந்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரோவில் கவுன்சில் செயலர் சத்தியா அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் வெளிநாட்டு பெண் தடுத்து தாக்கும் காட்சி வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சத்யா தாக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரோவில் வாசிகள் இன்று டவுன்ஹால் வளாகத்தில் மவுன போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு மித்ரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வானுார் ஒன்றியம் திருவக்கரை கல்மரப்பூங்கா அருகே உள்ள சேனிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் (58) இவரது மகள் தேன்குழலி (25) எம்.பி.ஏ., பட்டதாரி.
- திருவக்கரை குவாரியில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
புதுச்சேரி:
வானுார் ஒன்றியம் திருவக்கரை கல்மரப்பூங்கா அருகே உள்ள சேனிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் (58) இவரது மகள் தேன்குழலி (25) எம்.பி.ஏ., பட்டதாரி.
நீலமேகம் தனது மகள் தேன்குழலியுடன் மோட்டார் சைக்களில் சேனிப்பட்டில் இருந்து அருகில் உள்ள புதுவை பகுதியான திருக்கனுார் கடை வீதிக்குச் சென்று மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு சென்றார்.
அவர்கள் திருமங்கலம் பாதை நான்குமுனை சந்திப்பில் இருந்து கொடுக்கூர் நடு ஏரிக்கரை அருகே சென்றபோது எதிரே திருவக்கரை குவாரியில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே தலை மற்றும் உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்த கொடுக்கூர் கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் விபத்தில் இறந்த உடல்களை ஏற்றிச்செல்ல வந்த ஆம்புலன்ஸ் வண்டியை மறித்து, உடலை ஏற்ற விடமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவக்கரையில் உள்ள மலை பகுதி குவாரியில் கருங்கல் ஜல்லி ஏற்றிச்செல்லும் லாரி டிரைவர்கள் சாலை விதிகளை கடைபிடிக்காமல் அதிவேகமாக செல்வதை வாடிக்யைாக கொண்டு ள்ளனர்.
எனவே இப்பகுதியில் சாலை விபத்துகளில் உயிர் பலியை தடுக்க மாவட்ட கலெக்டர்,போலீசார் மற்றும் சமந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். கண்டமங்கலம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டம் வாபஸ் ஆனது. போலீசார் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை விபத்து நடந்த பகுதியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திருமங்கலம் 4 முறை சந்திப்பில் விபத்து ஏற்படுத்திச் சென்ற லாரியை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியல் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் காவல்துறையின் மூலம் உடனடியாக விபத்து ஏற்படுத்திய லாரியை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் புதுவை-திருக்கனூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- திருக்கனூர் அருகே கோவிலில் வரவு-செலவு தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
- ரவி குடி போதையில் கோவில் வரிப்பணம் வாங்கிக் கொண்டு திருட்டு கணக்கு காட்டி சொந்த செலவு செய்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே கோவிலில் வரவு-செலவு தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
திருக்கனூர் அருகே குமார பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் ஊர் முக்கியஸ்தராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அந்த கிராமத்தில் ஊர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோவிலில் வரவு-செலவு குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவி குடி போதையில் கோவில் வரிப்பணம் வாங்கிக் கொண்டு திருட்டு கணக்கு காட்டி சொந்த செலவு செய்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார்.
இதனை மூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் கண்டித்தனர். இதனால் மூர்த்தி தரப்பினருக்கும் ரவிக்கும் வாய்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
இருதரப்பினரும் கைகளால் தாக்கிக் கொண்டனர். இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியே காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தேசிய அளவிலான 16-வது சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் ஜம்ப்ரோப் சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
- பாரத் ஜம்ப்ரோப் அசோசியேஷன் ஆப் புதுவை தலைவரும் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி தாளாளருமான கிருஸ்துராஜ் வீரர்களுக்கு சீருடை வழங்கி, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
புதுச்சேரி:
தேசிய அளவிலான 16-வது சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் ஜம்ப்ரோப் சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் புதுவை வீரர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி பிரெசிடென்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
பாரத் ஜம்ப்ரோப் அசோசியேஷன் ஆப் புதுவை தலைவரும் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி தாளாளருமான கிருஸ்துராஜ் வீரர்களுக்கு சீருடை வழங்கி, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
வீரர்களுடன் பாரத் ஜம்ப்ரோப் அசோசியேஷன் ஆப் புதுவை பொது செயலாளர் ஞானசேகரன், விஷ்வசுந்தரம், அருள்ராஜ், டாக்டர் பிருந்தா, சுரேஷ் ஆகியோரும் உடன் சென்றனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் தேசிய ஜம்ப்ரோப் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் புதுவை வீரர்களை, பாரத் ஜம்ப்ரோப் அசோசியேஷன் ஆப் புதுவை தலைவர் கிருஸ்துராஜ் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
- புதுவை தர்மாபுரி தனகோடி நகரை சேர்ந்தவர் கண்ணன்.
- பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை தர்மாபுரி தனகோடி நகரை சேர்ந்தவர் கண்ணன். (வயது 39). இவர் வில்லியனூர் அருகே கூடப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 5 வருடத்திற்க்கு முன்பு கூடப்பாக்கத்தை சேர்ந்த ரகுவின் மகன் பூவரசன் கண்ணன் பணி புரியும் அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து படித்தார். இதற்கிடையே பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியின் போது 7-ம் வகுப்பு மாணவன் ஜவகரை பூவரசன் கடுமையாக தாக்கினார்.
அப்போது பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஆசிரியர் கண்ணன் இருந்ததால் பூவரசன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து மாற்று சான்றிதழ் கொடுத்து பள்ளியில் இருந்து பூவரசனை அனுப்பிவிட்டார்.
பின்னர் மீண்டும் 1 வருடம் கழித்து பூவரசன் இதே பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு சேர்ந்து படித்தார்.
அப்போது மீண்டும் மீண்டும் சக மாணவர்களை பூவரசன் அடித்து தாக்கி பிரச்சினை செய்து வந்ததால் அவரை மீண்டும் பள்ளியில் இருந்து நீக்கினர். இதனால் ஆசிரியர் கண்ணன் மீது பூவரசன் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் ஆசிரியர் கண்ணன் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டு இருந்த போது பூவரசன் திடீரென ஆக்ரோசமாக ஓடிவந்து ஆசிரியர் கண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கினார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியர் கண்ணன் தடுமாறி கீழே விழுந்த போது பூவரசன் அவரது உடலின் மீது ஏறிக்கொண்டு முகத்திலும் கண்களிலும் பலமாக குத்தினார்.
இதனால் வலி தாங்காமல் ஆசிரியர் கண்ணன் அலறினார். இந்த அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் ஓடி வந்து தாக்குதலை தடுத்தனர்.
இதையடுத்து பூவரசன் அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து ஆசிரியர் கண்ணன் மேல் அதிகாரிகளுக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்து விட்டு தாக்குதலில் காயமடைந்ததற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
- மாநில அளவிலான கண்காணிப்பு குழு ஒன்றை நியமிக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் சுதந்திர தின 75-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் சிறையில் உள்ள ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநில அளவிலான கண்காணிப்பு குழு ஒன்றை நியமிக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் மத்திய அரசின் உத்தரவின்படி 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் புதுவையில் தகுதியான கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசு கண்காணிப்பு குழுவைக்கூட நியமிக்கவில்லை. இது சரியானது அல்ல.
எனவே 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சிறை கைதிகளை விடுதலை செய்ய உடனடியாக மத்திய அரசின் உத்தரவின்படி மாநில அரசு கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும். மேலும் சில தினங்களி லேயே அக்குழுவின் பரிந்துரையை பெற்று புதுவை சிறைக்கைதிகளை சுதந்திர தினத்திற்கு முன்பாக விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் உத்தரவின்படி கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கண்காணிப்பு குழு அமைத்து, அதன்பரிந்துரையின் அடிப்படையில் கைதிகளை ஆகஸ்ட் 15-ந் தேதி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுபோல் புதுவையிலும் சிறை கைதிகளை ஆகஸ்ட் 15-ந் தேதி விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும். அப்போது அரசியல் காரணங்களால் யாருடைய விடுதலையையும் ஆட்சியாளர்கள் தடுக்காமல், குழு பரிந்துரைக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.






