என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காரைக்கால்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் ஓரளவு நிரம்பி வருகிறது.

    இந்த நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன்காரணமாக காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கொம்பாக்கம் வழியாக வில்லியனூர் செல்லும் சாலை பணியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • சாலையின் தரத்தை உறுதிப்படுத்தும்படியும், தேவையற்ற இடங்களில் வேகத்தடை அமைக்காமல் இருக்கும்படியும் வலியுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை - கடலூர் சாலை முருங்கப்பாக்கம் சந்திப்பில் இருந்து கொம்பாக்கம் வழியாக வில்லியனூர் செல்லும் சாலை பணியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் ஒதியம்பட்டு பகுதியில் நடைபெறும் சாலை பணியை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது உடன் வந்த அதிகாரிகளிடம் பணிகளை கண்காணித்து நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் சாலை பணியை முடிக்கும்படியும், சாலையின் தரத்தை உறுதிப்படுத்தும்படியும், தேவையற்ற இடங்களில் வேகத்தடை அமைக்காமல் இருக்கும்படியும் வலியுறுத்தினார்.

    நிகழ்ச்சியின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜெயராமன், மனோகர், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் மூர்த்தி, தொகுதி துணை செயலாளர் குணேசகரன், மாநில ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, இளைஞரணி தொகுதி செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுகள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • விநாயகா மிஷன் பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் 45 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இயங்கும் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுகள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். விநாயகா மிஷன் பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் 45 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    அவர் பேசுகையில், பட்டம் பெற்றவர்கள் செவித்திறன் மற்றும் பேச்சு பயிற்சி நிபுணர்களாக பேச்சு குறை பாடுகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தகுந்த பயிற்சியை ெகாடுப்பது இந்த சிறப்பு கல்வியின் அங்கமாகும்.

    செவித்திறன் அறிந்து காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் சிகிச்சை வழங் குவதில் உறுதுணையாக இருக்கவும், சரியான காது கருவிகளை பொருத்துவதில் நிபுணத்துவம் வழங்குவதும் இந்த கல்வியின் சாராம்சம் என்று குறிப்பிட்டார்.

    தலைமை விருந்தினராக வல்லுனர்கள் பங்கேற்ற ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுள்ள மாற்று திறனாளிகளுக்கான நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் நசிகேதாராவுட் பேசும் போது, நம் நாட்டில் தேவைக்கும் மிக குறை வான வல்லுனர்கள் இந்த பிரிவில் இருப்பதா ல் மாணவர்கள் இந்த பிரிவு கல்வியை தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவித்தார்.

    விழா வில் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கோட்டூர், டாக்டர் மகாலட்சுமி, மருத்துவ கண் காணிப்பாளர் டாக்டர் ஜெய்சிங், பேராசிரியை ராஜலட்சுமி, இணை பதிவாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை அமுல்யா நன்றி கூறினார்.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அப்பகுதி பொதுமக்களை நேரில் சென்று சந் தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி கருத்து கேட்கலாம் என்று தெரிவித்தார்.
    • காமராஜர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி வீரக்குமார் ஆகியோரை வரவைத்து சிறப்பு ஆலாசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரபேட்டையில் அமைந்துள்ள காமராஜர் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் குறைவாக உள்ளதால் வகுப்புகளை கலைத்து அருகாமையில் உள்ள பள்ளிக்கு மாணவர்களை மாற்றம் செய்ய கல்வித்துறை முயற்சித்தது.

    இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கெ ன்னடியை சந் தித்து கல்வித்துறை துணை இயக்குனர் தெரிவித்தார். அதில் நாட்டம் இல்லாத அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அப்பகுதி பொதுமக்களை நேரில் சென்று சந் தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி கருத்து கேட்கலாம் என்று தெரிவித்தார். பின்னர் கல்வித்துறை துணை இயக்குனர் நடன சபாபதி, காமராஜர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி வீரக்குமார் ஆகியோரை வரவைத்து சிறப்பு ஆலாசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    இதில் அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் அனைவரும் பள்ளி இங்கேயே தொடர்ந்து இயங்க வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கூறுகையில், ''பள்ளி மாணவர்களை இடம் மாற்றம் செய்வதற்கு பதிலாக பள்ளியில் ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தி தரமான கல்வி கொடுக்க வேண்டும், காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளி இதே இடத்தில் இங்கு சிறப்பாக செயல்பட்டு கொண்டி ருக்க வேண்டும'' என தெரிவித் தார்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, காலப்பன், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு ஊர்வலம் சுகாதாரத்துறை அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கியது.
    • ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் தேசிய மன நல திட்டம் சார்பில் சர்வதேச தற்கொலை தடுப்பு மாதத்தை முன்னிட்டு தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் சுகாதாரத்துறை அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கியது.

    ஊர்வலத்தை சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் ரகுநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் செவிலியர் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தற்கொலை தடுப்பு சம்பந்தமாக அரசு ஆஸ்பத்திரியில்நடந்த கருத்தரங்கை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி கருணாநிதி,மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மன நல திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் கெஜலட்சுமி தற்கொலை தடுப்பு முறை கள், அவற்றை எப்படி கையாளுவது என்று மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    முடிவில் டாக்டர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

    • நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி அப்துல் கலாம் மாணவர் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.துணை தலைவர் சுகுமாறன் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார்.

    கல்லூரியின் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். தேன்மொழி தலைமையில் மருத்துவக்குழுவினர்கள் 55 யூனிட் வரை ரத்தம் சேகரித்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கார்த்திகேயன் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் உதயபிரகாஷ் மற்றும் தாரன்யா ஆகியார் செய்திருந்தனர். ரத்ததான முகாமில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் முடிவில் அப்துல் கலாம் மாணவர் சங்கத்தின் தலைவர் விக்னேஷ் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் மாணவியர்களின் தலைவர் நித்யா ஆகியோர் நன்றி கூறினர்.

    • கவர்னர் தமிழிசை பேசும்போது பெண்கள் அதிகளவு வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் வர வேண்டும் என குறிப்பிட்டார்.
    • தற்போது நிலைமை மாறி வருகிறது. பெண்கள் அதிகளவு சட்டம் படிக்க முன் வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சட்டக்கல்லூரியின் பொன்விழா கொண்டாட்ட நிறைவு விழா நடந்தது.

    இதில் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி உதய்உமேஷ்லலித் பேசியதாவது:- கவர்னர் தமிழிசை பேசும்போது பெண்கள் அதிகளவு வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் வர வேண்டும் என குறிப்பிட்டார். தமிழகம், ராஜஸ்தான், ஒரிசா, ஜார்கண்ட் உட்பட 5 மாநிலங்களில் கீழமை நீதிமன்றங்களில் அதிகளவு பெண்கள் உள்ளனர்.

    தற்போது நிலைமை மாறி வருகிறது. பெண்கள் அதிகளவு சட்டம் படிக்க முன் வருகின்றனர். இதனால் வரும்காலத்தில் அதிகளவு பெண் வக்கீல்களும், நீதிபதிகளும் இடம்பெறுவார்கள்.

    கடந்தகாலங்களில் சுப்ரீம்கோர்ட்டில் ஒன்று அல்லது 2 பெண் நீதிபதி இடம்பெறுவதே அரிதாக இருந்தது. ஆனால் இப்போது 4 பெண் நீதிபதிகள் சுப்ரீம்கோர்ட்டில் உள்ளனர். வரும்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து பெண்கள் அதிகளவில் இடம்பெறுவார்கள்.

    தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் தீர்ப்புகளை பாடமாக வைத்துள்ளனர். அதேபோல சட்ட கல்லூரிகளிலும் தீர்ப்புகள் பாடமாக இடம்பெற வேண்டும். அப்போதுதான் நீதித்துறை பணிகளில் மாணவர்கள் இடம்பெற வழிவகுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை அரசு சட்டக்கல்லூரியின் பொன்விழா கொண்டாட்ட நிறைவு விழா நடந்தது.
    • நாடு முழுவதும் 18 லட்சம் வக்கீல்களில் 15 சதவீதம் மட்டுமே பெண் வக்கீல்கள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சட்டக்கல்லூரியின் பொன்விழா கொண்டாட்ட நிறைவு விழா நடந்தது.

    விழாவில் புதுவை கவர்னர் தமிழிசை பேசியதாவது:- நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வக்கீல்களின் பங்கு இன்றியமையாதது. நாடு முழுவதும் 18 லட்சம் வக்கீல்களில் 15 சதவீதம் மட்டுமே பெண் வக்கீல்கள் உள்ளனர்.

    நீதிபதிகளிலும் பெண்கள் குறைவாகவே உள்ளனர். இளம்பெண்கள் நீதித்துறையில் பணியாற்ற முன்வர வேண்டும். ஏனெனில் ஒரு சமூகத்தில் பெண்களின் நிலையை வைத்துத்தான் அளவீடு செய்ய முடியும் என அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.

    எனவே நீதித்துறையில் அதிகளவு பெண்கள் வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கவர்னர் மாளிகையில் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி உதய்உமேஷ்லலித் தலைமையில் நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், சுந்தரேஷ், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி ராஜா ஆகியோர் கவர்னர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.

    • ஊட்டச் சத்து மற்றும் உணவுமுறை வாரத்தையொட்டி முத்தியால்பேட்டையில் உள்ள சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா நடந்தது.
    • பள்ளி முதல்வர் அர்பிதா தாஸ் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    ஊட்டச் சத்து மற்றும் உணவுமுறை வாரத்தையொட்டி முத்தியால்பேட்டையில் உள்ள சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா நடந்தது.இதனை பள்ளி முதல்வர் அர்பிதா தாஸ் தொடங்கி வைத்தார்.

    உணவு திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். 300-க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான உணவு வகைகள் இடம் பெற்றன.

    • வில்லியனூர் அருகே மனைவி பேசாததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த சில நாட்களாக ஜெயசந்திரன் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே மனைவி பேசாததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே சிவராந்தம் புதுகாலனி ஓடை வீதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். கூலி தொழிலாளி. இவருக்கு அரிமாலா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக ஜெயசந்திரன் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்தார்.

    அதுபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயசந்திரன் மது குடித்து விட்டு மனைவி அரிமாலாவிடம் தகராறு செய்து அவரை அடித்து உதைத்தார். இதனால் அரிமாலா கடந்த 2 நாட்களாக கணவரிடம் பேசவில்லை. மனைவி பேசாததால் ஜெயசந்திரன் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அரிமாலா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அரிமாலா வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் கணவர் ஜெயசந்திரன் மின்விசிறியில் துப்பட்டா வால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெயசந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி அரிமாலா கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சர்வதேச எழுத்தறிவு தினம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் மற்றும் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் வழிகாட்டலின் படி கொண்டாடப்பட்டது.
    • இப்பேரணி கிருமாம்பாக்கம் வளைவில் தொடங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக அரசு கிளை நூலகத்தில் முடிவடைந்தது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சர்வதேச எழுத்தறிவு தினம்

    அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் மற்றும் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் வழிகாட்டலின் படி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு இயக்குனர் ஆண்ட்ரூ ஜான் தலைமை தாங்கினார். ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி இணை பதிவாளர் பெருமாள் வாழ்த்தினார். பேரணியை கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி கிருமாம்பாக்கம் வளைவில் தொடங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக அரசு கிளை நூலகத்தில் முடிவடைந்தது.

    பின்னர் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவ சங்க அமைப்பின் மூலம் புத்தகங்கள் அரசு கிளை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த பேரணியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், துணைப் பேராசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, விழா குழுவினர் தமிழ்ச்செல்வன், மோகனப்பிரியா மற்றும் மாணவர் சங்க அமைப்பினர் செய்திருந்தனர்.

    • குடிபோதையில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
    • சம்பவத்தன்று வேலை முடிந்து இவர் பாக்கமுடையான்பட்டில் உள்ள ஒரு மது கடையில் மது குடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    குடிபோதையில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

    லாஸ்பேட்டை குறிஞ்சிநகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புஷ்ப நாதன்(வயது62). இவர் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் சென்டரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. புஷ்பநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று வேலை முடிந்து இவர் பாக்கமுடையான்பட்டில் உள்ள ஒரு மது கடையில் மது குடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

    உடனே தகவல் அறிந்த அவரது மருமகன் தனசேகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து புஷ்பநாதனை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி புஷ்பநாதன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×