என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கைதிகளை அழைத்து செல்லும் போலீஸ் வாகனத்தின் சீட் சேதமடைந்தும், வாகனத்தின் உள்ளே உள்ள நடைபாதையில் பெரிய ஓட்டையும் உள்ளது.
    • ஒரு வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிளை சிறைச்சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    காரைக்கால் சிறையில் இருந்த தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளின் வழக்குகள் காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனால், கைதிகளை அவ்வப்போது ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் புதுவை சிறையில் இருந்து காரைக்கால் நீதிமன்றத்திற்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்வது வழக்கம்.

    கைதிகளை அழைத்து செல்லும் போலீஸ் வாகனத்தின் சீட் சேதமடைந்தும், வாகனத்தின் உள்ளே உள்ள நடைபாதையில் பெரிய ஓட்டையும் உள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

    இது குறித்து போலீசாரிடம் கேட்டதற்கு, கைதிகளை ஏற்றி செல்லும் பல வாகனங்களின் நிலை இதுதான். இது பற்றி காவல் வாகன அதிகாரியிடம் புகார் தெரிவித்தால் முடிந்தால் இருக்கும் வாகனத்தில் எஸ்கார்ட் பணிக்கு சென்று வாருங்கள் இல்லை என்றால் செல்ல வேண்டாம் என கூறி வருவதாக வேதனை தெரிவித்தனர்.

    போலீஸ் துறையை நவீனப்படுத்த பல கோடி ஒதுக்கீடு, 1000 போலீசார் நியமனம் என அடிக்கடி ஆட்சியாளர் கூறி வருகிறார்கள். ஆனால் அடித்தளம் பலமாக இல்லை என்பதை சுட்டி காட்டியும் சீரமைப்பதில்லை என சமூக வலைதளத்தில் மக்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • புதுவை மணக்குள விநாயகர் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கட்டிடம் தியாகராஜா வீதியில் அமைந்துள்ளது.
    • ரூ.97 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதி பெறப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கட்டிடம் தியாகராஜா வீதியில் அமைந்துள்ளது.

    இந்த கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து காணப்பட்டது. அதில் குடியிருந்தோருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பாழடைந்த குடியிருப்பு கட்டிடத்தை இடிக்கவும், புதிதாக கட்டிடம் கட்டி எழுப்பவும் குடியிருப்புவாசிகளுக்கு உறுதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாழடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய மூன்றடுக்கு கொண்ட குடியிருப்பு கட்ட ரூ.97 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதி பெறப்பட்டது.

    இதற்கான பூமிபூஜை  நடைபெற்றது.பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி–நாராயணன் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆலய அறங்காவலர் குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் தலைமறைவான ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    • இதற்கிடையே ஜெயிலில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த சத்யா அதன் பிறகு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார்.

    புதுச்சேரி:

    நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் தலைமறைவான ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை ரோடியார் பேட் அங்குநாயக்கன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. (வயது 30). இவர் புதுவை சங்கரதாஸ் வீதியில் ஒரு கட்டிடத்தின் மாடியில் அழகு நிலையத்துடன் ஸ்பா நடத்தி வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த அழகு நிலையத்துக்குள் புகுந்து ஒரு கும்பல் கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்றது.

    இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடியான ரெயின்போ நகரை சேர்ந்த சத்யா (27) உள்பட 7 பேரை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    இதற்கிடையே ஜெயிலில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த சத்யா அதன் பிறகு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார். இதனால் அவரது நிபந்தனை ஜாமீனை கோர்ட்டு ரத்து செய்தது.

    இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி சத்யா ரெயின்போ நகர் பகுதியில் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யாவை தேடிவந்தனர். தலைமறைவாக இருந்து வந்த சத்யாவை பெரிய கடை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைந்தனர்.

    • புதுவை கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் மற்றும் கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனை சார்பில் உலக இதய நாள் குறித்து விழிப்புணர்வு நடந்தது.
    • இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கான செயல்பாடுகள், மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் மற்றும் கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனை சார்பில் உலக இதய நாள் குறித்து விழிப்புணர்வு நடந்தது.

    புதுவை கன்னி யக்கோவில் ராஜகவுரி நகரில் உள்ள வீ ஹெர்பல் கேர் நிறுவனத்தில் நடைபெற்ற இதயநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இதயம் காப்பத்தற்கான வழிமுறைகள், இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கான செயல்பாடு கள், மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். இன்முகத்துடன் உள்ளுணர்ந்து சிரிக்க வேண்டும் என அக்குபஞ்சர் கவுன்சிலின் தலைவரும், தி சுசான்லி குழுமத்தின் சேர்மனுமான டாக்டர் ரவி உரையாற்றினார்.

    முன்னதாக வி ஹெர்பல் கேர் நிறுவனத்தின் மேலாளர் தாயார் அனைவரையும் வரவேற்றார். முடிவில் தலைமை மருந்து உற்பத்தி மேலாளர் சுந்தர் நன்றி கூறினார்.

    • கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதற்கிடையே தேசிங்கு பாகூர் பகுதியை சேர்ந்தஒருவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

    புதுச்சேரி:

    கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர் ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (34) டிரைவர் வேலை செய்து வருகிறார். இவரது தந்தை தேசிங்கு. (வயது 60) இவர் பாகூர் அருகே தமிழக பகுதியான திருப்பணாம் பாக்கத்தில் தனது மனைவியுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.இதற்கிடையே தேசிங்கு பாகூர் பகுதியை சேர்ந்தஒருவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தார். வேலை முடிந்த பின்னர் தினமும் மது குடித்து விட்டு வந்தாதால் தோட்ட வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அவரை குடும்பத்தினர் கூறிவந்தனர்.

    ஆனாலும் தேசிங்கு தொடர்ந்து அங்கு வேலை செய்துவந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தோட்ட வேலைக்கு சென்ற தேசிங்கு அதன் பிறகு வீடு திரும்ப வில்லை.

    இந்த நிலையில் தேசிங்கு அவர் வேலை பார்த்து வந்த தோட்டத்தில் தேக்கு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கு வதாக அவரது மகனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து கார்த்திக் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் மன அழுத்தத்தின் காரணமாக தனது தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் ஹோமியோபதி மருத்துவர்களுக்கு தொடர் மருத்துவ கருத்தரங்கம் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது.
    • கருத்தரங்கில் சிறப்பு மருத்துவர் குழந்தையின்மை நிபுணர் சின்சன் ஜோசப், குழந்தை இன்மை மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    புதுச்சேரி:

    இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் ஹோமியோபதி மருத்துவர்களுக்கு தொடர் மருத்துவ கருத்தரங்கம் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது.

    கருத்தரங்கினை இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் ஜெயந்தி தலைமை தாங்கினார். ஹோமியோபதி தலைமை மருத்துவ அதிகாரி பாலாஜி வரவேற்றார்.

    கருத்தரங்கில் சிறப்பு மருத்துவர் குழந்தையின்மை நிபுணர் சின்சன் ஜோசப், குழந்தை இன்மை மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    கருத்தரங்கில் புதுவை, காரைக்கால் மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். மருத்துவர் சேவர் கொடியன் நன்றி கூறினார்.

    • அரியாங்குப்பத்தில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சமுதாய நலக்கூடத்தில் நடத்தியது.
    • இந்த முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் வள்ளலார் சபை மற்றும் புதுவை முதன்மை கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் தமிழ்வாணன் ஆகியோர் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை அரியாங்குப்பத்தில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சமுதாய நலக்கூடத்தில் நடத்தியது.

    யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டது.

    மேலும் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த இலவச முகாமிற்கான ஏற்பாடுகளை யுவர் பேக்கர்ஸ் முருகன், பிரகாஷ், அகிலன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • புதுவை தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் தமிழ் ஒளியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பாவலர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யாருக்கு இந்த புவி சொந்தம் என்ற தலைப்பில் தமிழ் ஒளி குறித்து சிறப்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் தமிழ் ஒளியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு மோகன்தாசு வரவேற்றார். துணைத் தலைவர் ஆதிகேசவன், பொருளாளர் திருநாவுக்கரசு, துணை செயலாளர் அருள் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனை அடுத்து கவிஞர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தமிழ் ஒளியின் பன்முகப் பாங்கு என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிஞர்கள் அருள்ராஜ், விஜயலட்சுமி ,முனைவர் பிரபா, டேவிட் பிரபாகர், மற்றும் மணிமொழி ஆகியோர் கவிதை வாசித்தனர்.

    பாவலர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யாருக்கு இந்த புவி சொந்தம் என்ற தலைப்பில் தமிழ் ஒளி குறித்து சிறப்புரையாற்றினார்.

    இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற சிறைத்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், கலை இலக்கிய பெருமன்றத்தின் பொருளாளர் துரை. செல்வம், பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஏகாம்பரம், தன்னம்பிக்கை கலை குழு தலைவர் எலிசபெத் ராணி ஆகியோருக்கு தமிழ் சங்க விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    முடிவில் சிவேந்திரன் நன்றி கூறினார். விழாவில் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு நிர்வாகிகள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த வாகனங்கள் தமிழகப் பகுதியான கலைவாணன் நகரில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஸ்தம்பித்தது.
    • சம்பவ இடத்திற்கு வந்த ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுவை மின்துறை தனியார் மயமாக்கப்படுவதாக வெளியான தகவல் மற்றும் அதற்கான அரசு வெளியிட்ட டெண்டர் அறிவிப்பால் புதுவை மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மின்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் புதுவை முழுவதும் பல்வேறு இடங்களில் மின்வெட்டுகள் ஏற்பட்டு அதனை சரி செய்ய ஆள் இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கிராமப் பகுதிகளில் குறிப்பாக காலாப்பட்டு, சேதராப்பட்டு, பத்துக்கண்ணு சுற்றியுள்ள பகுதிகளில் பல மணி நேரம் தொடர் மின்வெட்டு காரணமாக தண்ணீர் கூட இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதனால் நேற்று புதுவையில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. பத்துக்கண்ணு சந்திப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் போராட்டம் இரவு வரை தொடர்ந்தது. இதனால் விழுப்புரம், திருக்கனூர் வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை 2மணி நேரம் சேதராபட்டில் ஏற்பட்ட மின் தடை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் அலுவலகம் செல்பவர்கள் தண்ணீர் கூட இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.

    இந்நிலையில் சேதராப்பட்டைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மந்தைவெளியில் சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சாலை மறியல் ஈடுபட்டு மத்திய மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இவர்கள் மறியலில் ஈடுபட்ட சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. கோரிமேடு பகுதியில் தமிழக-புதுவை எல்லையில் அமைந்துள்ள காமராஜர் நகரில் காலை முதலே தொடர் மின்தடை காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோரிமேடு எல்லையான மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரி எதிரே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திண்டிவனம்- சென்னை செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டது.

    திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த வாகனங்கள் தமிழகப் பகுதியான கலைவாணன் நகரில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஸ்தம்பித்தது. சம்பவ இடத்திற்கு வந்த ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    காலாப்பட்டு பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் 4 இடங்களில் பொதுமக்கள் ஆங்காங்கே முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மீனவகுப்பத்தைச் சேர்ந்தவர்கள் சின்ன காலாப்பட்டு ஜெயா தியேட்டர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து காலாப்பட்டு பஸ் நிறுத்தம் அருகிலும், கனகச்செட்டிகுளம் உள்ளிட்ட 4 இடங்களில் பொதுமக்கள் பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பெரிதும் ஸ்தம்பித்தது. அலுவலக நேரத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுவையில் இருந்து சென்னை செல்லும் வாகனங்களும் சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

    மறியல் காரணமாக போலீசார் கனகசெட்டிக்குளத்தில் வாகனங்கள் திருப்பி அனுப்புவதை அறிந்த பொதுமக்கள் அங்கேயும் சாலை மறியலில் ஈடுபட்டதால் கீழ் புத்துப்பட்டு வரை வாகனங்கள் சாலையின் இருபுறத்திலும் வரிசையில் நின்றது.

    • தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • புதுவையிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு அதிரடியாக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதுவையிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புதுவை அரசின் தலைமை செயலர் ராஜூவர்மா நேற்று இரவு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்திலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பு மற்றும் தொடர்புடைய ரீஹேப் இந்தியா பவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம்கள் கவுன்சில், மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு, நேஷனல் உமன்ஸ் பிரண்ட், ஜூனியர்பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேசன் மற்றும் ரீஹேப் பவுண்டேசன் கேரளா ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனை அமல்படுத்த மாவட்ட கலெக்டர்கள், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தண்ணீர் இல்லாமல் துத்திப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.
    • பொதுமக்கள் மின் துறை அதிகாரிகள், போலீசாருக்கு புகார் அளித்தும் மின் வினியோகம் இல்லை.

    சேதராப்பட்டு:

    புதுவையில் மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் நேற்று பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இதனை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுவை சேதராப்பட்டு அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தொண்டமாநத்தம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு திரண்டு சென்று மின்துறை ஊழியர்களிடம் புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இரவு மின்சாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சுமார் 5 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தண்ணீர் இல்லாமல் துத்திப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். பொதுமக்கள் மின் துறை அதிகாரிகள், போலீசாருக்கு புகார் அளித்தும் மின் வினியோகம் இல்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த துத்திப்பட்டு கிராம பொதுமக்கள் அங்குள்ள தேவாலயம் அருகே மெயின் ரோட்டில் மரங்களை வெட்டி சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேதராபட்டிலிருந்து பத்துகண்ணு செல்லும் சாலையிலும், கடப்பேரி குப்பத்திலிருந்து புதுவை செல்லும் சாலைகளிலும் நீண்ட தூரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டது.

    சம்பவம் அறிந்து அங்கு சென்ற சேதராப்பட்டு போலீசார் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். மின் வினியோகம் கிடைக்கும் வரை மறியலை கைவிடமாட்டோம் என பொதுமக்கள் திட்டவட்டமாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலை கடந்த காலங்களில் பெய்த பலத்த மழையினால் கடுமையாக சேதம் அடைந்தது.
    • பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்டம் சார்பில் ரூ.17.98 கோடியில் சாலை வசதி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலை கடந்த காலங்களில் பெய்த பலத்த மழையினால் கடுமையாக சேதம் அடைந்தது.

    இதனால் போக்குவரத்து இடையூறுகளும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இது சம்பந்தமாக பொது மக்களும், சமூக ஆர்வலர்களும், போக்குவரத்து போலீசாரும் புதிய தார் சாலை அமைக்க கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் முதலியார் பேட்டை, அரியாங்குப்பம், ஏம்பலம், பாகூர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்திவந்தனர்.

    அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்டம் சார்பில் ரூ.17.98 கோடியில் சாலை வசதி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்புதலை மத்திய சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கி உள்ளது.

    இந்தத் திட்டத்தில் தற்போது உள்ள பழுதடைந்தை சாலையை வலுப்படுத்துவது, தேவையான இடங்களில் வாய்க்கால் கட்டுவது, தடுப்பு சுவர் கட்டுவது, சாலை பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்துவது, சாலை மார்க்கிங் பெயிண்ட் அடிப்பது, பிளிங்கர் வைப்பது, எச்சரிக்கை பலகைகள் நடுவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 14கி.மீ தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை இன்று காலை கடலூர்-புதுவை ரோடு தவளக்குப்பம் அடுத்த கொருக்குமேடு பகுதியில் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், கே.எஸ்.பி ரமேஷ், சம்பத், பாஸ்கரன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் ஆறுமுகம், ஒப்பந்ததாரர் கதிரேசன், பா.ஜனதா ராமு, என்‌.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா முக்கிய கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×