என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தி.மு.க. பொதுமக்கள் சேவை மையம் நிர்வாகி மதன் பாபு ஏற்பாட்டில் முத்தியால்பேட்டை சோலை நகரில் தி.மு.க. ஆட்டோ ஸ்டாண்டு அமைக்கப்பட்டுள்ளது.
    • விழாவில் தொகுதி செயலாளர் சவுரிராஜன்,முன்னாள் கவுன்சிலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    தி.மு.க. பொதுமக்கள் சேவை மையம் நிர்வாகி மதன் பாபு ஏற்பாட்டில் முத்தியால்பேட்டை சோலை நகரில் தி.மு.க. ஆட்டோ ஸ்டாண்டு அமைக்கப்பட்டுள்ளது.

    ஆட்டோ ஸ்டாண்டு பெயர் பலகையை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. திறந்து வைத்து, ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினார்.

    விழாவில் தொகுதி செயலாளர் சவுரிராஜன்,முன்னாள் கவுன்சிலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், துணை அமைப்பாளர் அமுதா குமார், உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் சக்திவேல், தொழிற்சங்க தலைவர் அண்ணா அடைக்கலம், ஆட்டோ சங்கத் தலைவர் மெஷில், முன்னாள் கவுன்சிலர் தனசேகர், எழிலன், மணவெளி பொறுப்பாளர் சண்முகம், லாஸ்பேட்டை தொகுதி செயலாளர் ராஜா, கதிர்காமம் பொறுப்பாளர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி திறந்த வெளி புல்வெளி அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.கல்லூரி திறந்த வெளி புல்வெளி அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.

    அருட்தந்தை ஜோபி ஜார்ஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிம்ஸ் மருத்துவமனை கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் பீட்டர் மனோகரன் பங்கேற்று பேசினர்.

    பின்னர் மாணவ- மாணவிகளின் தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டன.

    இதனை தொடர்ந்து நடந்த மாணவ-மாணவிகள் நடனம் அனைவரையும் கவர்ந்தது.பின்னர் காந்தி குறித்த ஆவண படம் அகன்ற திரையில் பின்னணி இசையுடன் காண்பிக்கப்பட்டது‌.

    விழாவில் துணை முதல்வர் மேகி முருகன், செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி உள்ளிட்ட மருத்துவ மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடு களை மருத்துவமனை வளாக பாதுகாப்பு மற்றும்மேம்பாட்டு நிர்வாகி டாக்டர் பிரசன்னாராஜு மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • தவளக்குப்பம் போலீசார் வாழ்முனி, சண்முகசுந்தரம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை செய்ததில் அவர் டி.என். பாளையம் உடையார் தெருவை சேர்ந்த சக்திவேல் மற்றும் சண்முகம் (வயது 23) என தெரியவந்தது.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் போலீசார் வாழ்முனி, சண்முகசுந்தரம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அபிஷேகப்பாக்கம் - டி.என்.பாளையம் பகுதியில் இருந்த போது அங்கிருந்தவர்கள் டி. என்.பாளையம் பகுதியில் உள்ள ஏ.ஜே. தனியார் பள்ளி அருகில் நின்று கொண்டு ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கத்தியை காட்டி மிரட்டிய நபரை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை செய்ததில் அவர் டி.என். பாளையம் உடையார் தெருவை சேர்ந்த சக்திவேல் மற்றும் சண்முகம் (வயது 23) என தெரியவந்தது.

    பொதுமக்களை ஆபாசமாக திட்டி கத்தியை காட்டி மிரட்டிய சண்முகத்தை கத்தியுடன் போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இது சம்பந்தமான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. சண்முகம் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரை கரும்பு தோட்டத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து ஜாமீன் வந்துள்ளார்.

    இந்த நிலையில் சண்மு கமும் பழைய நண்பரான அபிஷேகபாக்கம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரும் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் மது குடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

    அப்போது இருவருக்கும் கேலி கிண்டல் செய்து கொள்ளும் போது வாய் தகராறாக மாறி உள்ளது. வயதான ஒருவரை கொலை செய்து விட்டால் நீ என்ன பெரிய கொலைகாரனா? என்று கேட்டு லட்சுமணன் ஏளனம் செய்துள்ளனர். இது இருதரப்பினரும் இடையே பகையாக மாறிவிட்டது.

    இதனால் இரு தரப்பிற்கு இடையே அவ்வப்போது தகராறும் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு தரப்பினரும் பலத்த ஆயுதங்களுடன் மோதிக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ஏற்கனவே அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த 2 பேரை வீச்சு அரிவாளுடன் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான சண்முகத்தையும் கத்தியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். துரிதமாக செயல்பட்ட ரோந்து மற்றும் கிரைம் போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • அரியாங்குப்பம், ஒத்தைவீதி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். (வயது 46) காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
    • இந்த நிலையில் கழிவறைக்கு செல்லும் போது தவறி விழுந்து விட்டார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம், ஒத்தைவீதி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். (வயது 46) காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கலைச்செல்வி அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார்.

    காமராஜுக்கு இதய நோய் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

    உடல் சரியானதால் மீண்டும் காவலாளி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் கழிவறைக்கு செல்லும் போது தவறி விழுந்து விட்டார். உடனடியாக அவரது மனைவி கலைச்செல்வி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.

    பின்னர் பிற்பகல் 12 மணி அளவில் மீண்டும் கழிவறைக்கு கலைச்செல்வி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் கழிவறையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென தலைகுப்புற காமராஜ் கீழே விழுந்துள்ளார். இதில் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    அதில் காயமடைந்த காமராஜை, கலைச்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும்வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது சம்பந்தமாக அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இதயநோயின் காரணமாகவாக அல்லது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மியான்மரில் சிக்கித்தவித்த தமிழகம், புதுவையை சேர்ந்த 13 சகோதரர்கள் மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் தாயகம் திரும்புகின்றனர்.
    • மற்ற சகோதரர்களையும் மீட்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மியான்மரில் சிக்கித்தவித்த தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்தவர்கள் மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் 13 சகோதரர்கள் தாயகம் திரும்புகின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர் முயற்சிகளால் மியான்மரில் சிக்கிய சகோதரர்களை மீட்ட மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மற்ற சகோதரர்களையும் மீட்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் மற்றவர்களும் தாயகம் திரும்புவர்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

    • கடந்த வெள்ளிக்கிழமை முதலே புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
    • பயணிகள் அதிக வருகையால் புதுவையில் சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை அறைகள் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருவது உண்டு.

    அதோடு, புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட தொடர் விடுமுறை, கோடை விடுமுறையிலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிவார்கள், இந்த ஆண்டு சனி, ஞாயிறு, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என விடுமுறை விடப்பட்டது.

    இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதலே புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அண்டை மாநிலம் மட்டுமல்லாது வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்தனர்.

    இதனால், மணக்குள விநாயகர் கோவில், கடற்கரை சாலை, படகுத்துறை, பூங்காக்கள், அரவிந்தர் ஆசிரம்,பிரெஞ்சு குடியிருப்பு பகுதி என அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளை காண முடிந்தது.

    பயணிகள் அதிக வருகையால் புதுவையில் சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை அறைகள் இல்லை. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே விடுதி அறைகள் கிடைத்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்டுகள் அனைத்தும் நிரம்பியது.

    இதனால் பல சுற்றுலா பயணிகள் அறை கிடைக்காமல் தவித்தனர். புதுவை மாநிலத்தின் எல்லை பகுதிகளில் உள்ள விடுதிகளுக்கு படையெடுத்தனர். இன்னும் சிலர் புதுவையில் தங்க முடியாமல் அருகிலுள்ள தமிழக பகுதிகளான விழுப்புரம், கடலூரில் தங்கி புதுவைக்கு வந்தனர்.

    • புதிய கல்விக்கொள்கையால் அரசு பள்ளிகளில் தொடக்க வகுப்புகள் வந்து விடும்.
    • இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்கு தயார் செய்ய வழிவகுக்கும்.

    புதுச்சேரி :

    புதுச்சேரி வந்துள்ள மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக முழுமூச்சில் பணிகள் செய்து வருகிறோம். தேசிய கல்விக்கொள்கையில் உள்ளூர்மொழிக்கும், தாய்மொழிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    புதிய கல்விக்கொள்கையால் அரசு பள்ளிகளில் தொடக்க வகுப்புகள் வந்து விடும். அனைத்து விஷயங்களையும் பள்ளிக்கல்வியிலேயே அறிய முடியும். இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்கு தயார் செய்ய வழிவகுக்கும். தேசிய கல்விக்கொள்கையை ஏன் எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. தேசிய கல்விக்கொள்கையில் ஆக்கப்பூர்வ முயற்சியை நாங்கள் தருகிறோம்.

    ஆனால், தேசிய கல்விக்கொள்கையை அரசியல் காரணங்களுக்காக தான் சிலர் எதிர்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். என்பது தனிப்பட்ட அமைப்பு. தசரா காலத்தில் அவர்கள் ஊர்வலம் செல்வது வழக்கம். இந்தியா ஜனநாயக நாடு. அவரவருக்கு உரிய தனிப்பட்ட பார்வைகளை வெளிப்படுத்த அனுமதியுண்டு. புதுவையில் உள்ள அனைத்து பிராந்தியங்களிலும் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர். அது வரவேற்கத்தக்கது. மத்திய கல்வி அமைச்சகம் பரிசீலித்து விரைவில் முடிவு தெரிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின் ஊழியர்கள் போராட்டத்தாலும், அதன் விளைவுகளாலும் புதுவை கலவர பூமியாக மாறியுள்ளது.
    • 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தனியார் வசம் செல்லும். கட்டணம் அதிகம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

    புதுச்சேரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மின் ஊழியர்கள் போராட்டத்தாலும், அதன் விளைவுகளாலும் புதுவை கலவர பூமியாக மாறியுள்ளது. மின்துறையை தனியார் மயமாக்குவதால் புதுவை மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தனியார் வசம் செல்லும். கட்டணம் அதிகம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

    இதனால் தான் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியில் எதிர்த்தோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்காது. அரசு அலுவலகங்கள் மற்றும் தெரு விளக்குகளுக்கு அரசு மின் கட்டணம் செலுத்துவதில்லை இதற்கு பாக்கி 800 கோடி நிலுவையில் உள்ளது. இவற்றை எல்லாம் தனியார் மயமானால் செலுத்த வேண்டியிருக்கும்.

    புதுவையை பொருத்த மட்டில் மின்துறை நஷ்டத்தில் இயங்கவில்லை. ரூ.1500 கோடிக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்து நஷ்டம் இல்லாமல் விற்பனை செய்து வருகின்றனர். மின்துறையை தனியார் மயமாக்க பொதுமக்கள், தொழிற்சங்கம், அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்கப்படவில்லை. தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தற்போது எஸ்மா சட்டம் பாயும் என கூறுகின்றனர். புதுவையில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுவையின் சிறப்பு சி.எம். கவர்னர் தான் என்பது நிரூபணமாகி உள்ளது.

    மின்துறையை தனியார்மயமாக்க ரங்கசாமிக்கு விருப்பம் உள்ளதா என்பதை அவர் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் மின் ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்தோம். தனியார் மயமாக்கத்திற்காக அறிவிக்கப்பட்ட டெண்டரை ரத்து செய்ய முடியாது என மின்துறை அமைச்சர் கூறுகிறார்.

    மாநில அரசு அறிவித்த டெண்டரை ரத்து செய்வதில் என்ன கஷ்டம்.? தனியார் மயத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவதோடு, நீதிமன்றம் வரை செல்வோம்.

    ஆர்.எஸ்.எஸ். பேரணியில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றது அவமானம். அமைச்சர்களாக இருக்கவே தகுதி இல்லை. துணை ராணுவத்தை கொண்டு வந்து மிரட்டுவதற்கு புதுவை மக்கள் பயப்பட மாட்டார்கள். கவர்னருக்கு நாவடக்கம் தேவை. அவர் பா.ஜனதா ஏஜெண்டாக செயல்படுகிறார். முதல்- அமைச்சர் ரங்கசாமி மீது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஊழல் புகார் கூறுகிறார்கள்.

    என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் போட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை பதவி விலக கூறுகிறார்கள். மகா அலங்கோலமான ஒரு ஆட்சி புதுவையில் நடக்கிறது. இந்த ஆட்சி குறை பிரசவத்தில் முடியும் என்பதுதான் எனது கணிப்பு.

    மக்கள் இதனை தூக்கி எரிவார்கள். முரண்பாடான கொள்கைகள் கொண்ட 2 கட்சிகள் கூட்டணியாக ஆட்சிய செய்கின்றனர். இதனால் தான் வளர்ச்சி இல்லை. புதிய கல்வி கொள்கையை மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் எதிர்க்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் 75-வது சுதந்திர தினம், காந்தி மற்றும் வள்ளலார் பிறந்த தினங்கள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
    • பாரத மாதா சிலை முன்னே செல்ல ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சீருடையில் அணிவகுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் 75-வது சுதந்திர தினம், காந்தி மற்றும் வள்ளலார் பிறந்த தினங்கள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

    அதனையொட்டி, புதுவை பாலாஜி திரையரங்கம் அருகே உள்ள நாடார் உறவின் முறை சங்க இடத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை செல்வகணபதி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பாரத மாதா சிலை முன்னே செல்ல ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சீருடையில் அணிவகுத்தனர். ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, மறைமலையடிகள் சாலை வழியாக கடலூர் சாலையில் உள்ள சுதேசி மில் திடலை சென்றடைந்தது. அங்கு 6 மணிக்கு முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    சீருடை அணிவகுப்பு ஊர்வலத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், ரிச்சர்ட்ஸ் ஜான்குமார், அசோக்பாபு, சிவசங்கர் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் பங்கேற்றனர்.

    தொடர்ந்து நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்திற்கு ஆதித்யா பள்ளி தாளாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ரவிக்குமார் கோரிகானா முன்னிலை வகித்தார். தமிழ் மாநில மக்கள் தொடர்பு பொறுப்பாளர் ராமராஜசேகர் சிறப்புரை ஆற்றினார். செல்வகணபதி எம்.பி., தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ, ஆர்.எஸ்.ஸ். மாவட்ட தலைவர் சீனிவாசன், விபாக் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நெட்டப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    நெட்டப்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படு வதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நெட்டப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் 3 வாலிபர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து அவர்களது சட்டை பையில் சோதனை நடத்தினர்.

    அதில் அவர்கள் சிறு சிறு பொட்டங்களாக 210 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் பிடிப்பட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் வடலூரை சேர்ந்த பாலாஜி(வயது20), ஈஸ்வர்(18) மற்றும் திருப்பதி (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
    • பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான ரத்ததான முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

    முகாமிற்கு டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியை நேரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், டாக்டர் ரத்னவேல் காமராஜன், ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பாளர் மற்றும் டாக்டர்கள் வடிவேல், ரோஷினி, மதன் மற்றும் உதவும் பேரியக்கம் நிறுவனர் புதுவை குமார் கலந்து கொண்டனர் முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்கள் சமூக சேவகர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தும் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாண வர்கள் செய்திருந்தனர்.

    • கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி திறக்கப்பட்டது.
    • நவீன மீன் அங்காடி திறந்து 4 ஆண்டுகள் ஆகியும், மீனவர்கள் யாரும் அங்கு செல்லாமல், தொடர்ந்து நேரு வீதியிலேயே ஏலம் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள 18 மீனவ பஞ்சாயத்து கிராம மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் நகரின் மையத்தில் உள்ள நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் ஏலம் விடப்படும்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஏலம் விட்ட பிறகு, மீன்களின் கழிவுகள் சாலையிலேயே கொட்டிவிட்டு போனதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி திறக்கப்பட்டது.

    ஆனால் நவீன மீன் அங்காடி திறந்து 4 ஆண்டுகள் ஆகியும், மீனவர்கள் யாரும் அங்கு செல்லாமல், தொடர்ந்து நேரு வீதியிலேயே ஏலம் நடக்கிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குபேர் அங்காடி நவீனப்படுத்தப்படுவதால் மீன் ஏலத்தை கிழக்கு கடற்கரை சாலை நவீன அங்காடிக்கு அரசு மாற்றியது.

    ஆனால் அதனை ஏற்காமல் கால அவகாசம் கேட்டு மீனவர்கள் தள்ளி போட்டு வந்தனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் வல்லவன் காந்தி வீதியில் குபேர் மீன் மார்க்கெட் முன்பு கடந்த 1-ந் தேதி முதல் மீன் ஏலம் விடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 29-ந் தேதி மீன் ஏலத்தை நிறுத்திவிட்டு மீனவர்கள சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.

    இதனிடையே தடையை மீறி மீன் ஏலம் விட முயன்ற 2 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த மீன்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இன்று மீனவர்கள் மீன்களை ஏலம் விடாமல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் புதுவை முழுவதும் மீன் விற்பனையை நிறுத்தி விட்டு குபேர் அங்காடியில் உள்ள மீன் விற்பனை மையத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதனால் மீன் விற்பனை பாதிக்கப்பட்டது. மீன்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பல ஆண்டுகளாக. மீன் ஏலம் மற்றும் விற்பனை நடைபெறும் நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் ஏலம் நடத்துவோம். இல்லையென்றால், காலவரையின்றி வேலைநிறுத்தம் செய்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    ×