என் மலர்
புதுச்சேரி
- மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
- புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
புதுவை அரசு சார்பில் 100 அடி சாலையில் உள்ள அவரின் சிலைக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடந்தது. 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், ஆர்.இ.சேகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இந்திராகாந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- புதுவை விடுதலை நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு புதுவை மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- புதுவை விடுதலை போராட்டத்தை நினைவு–கூறும் இந்த நாளில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ கொள்கைகளோடு உலக சமுதாயத்திற்கே வழிகாட்டியாகத் திகழும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த நம்மை அர்ப்பணித்து கொள்ள உறுதி ஏற்போம்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள விடுதலை நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுவை விடுதலை நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு புதுவை மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணற்ற விடுதலை போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களால் 1954-ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் புதுவை முழுமையான விடுதலையை பெற்றது.
புதுவை விடுதலை போராட்டத்தை நினைவு–கூறும் இந்த நாளில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ கொள்கைகளோடு உலக சமுதாயத்திற்கே வழிகாட்டியாகத் திகழும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த நம்மை அர்ப்பணித்து கொள்ள உறுதி ஏற்போம்.
இயற்கை வளமும் ஆன்மீக நலமும் நிறைந்த புதுவை மாநிலம் பிரெஞ்சு-இந்திய கலாச்சாரத்தின் பண்புகளைக் கொண்டிருந்தாலும், இந்திய ஒருமைப்பாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணை புரிந்து மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது என்பது உண்மை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் நாளை முதல் கன மழை பெய்யும் என்ற அறிவிப்பை வானிலை அறிவித்துள்ளது.
- கடந்த ஆண்டு பெய்த பெருமழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்ற அறிவிப்பை வானிலை அறிவித்துள்ளது. கனமழையை எதிர்கொள்ளும் விதத்தில் சம்பந்தப்பட்ட பொதுப்ப–ணித்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறை ஆகியவை இணைந்து முன்னெச்சரிக்கை நடவ–டிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக அவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால் நகரப் பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி மக்கள் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாக்கப்ப–ட்டனர். கடந்த ஆண்டு பெய்த பெருமழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கடற்கரைப் பகுதிகள், மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கும் விதத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகளின் உயர்மட்ட குழு கூட்டத்தை கலெக்டர் உடனடியாக கூட்ட வேண்டும்.
தாழ்வான மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தனியார், அரசு பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள் ஆகியவற்றின் இடங்களை குறிப்பிட்டு சில நாட்களுக்கு வருவாய் துறையினரிடம் ஒப்படைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருமழையால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு உடனடி உணவு வழங்க அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் இலக்கிய விழா நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த மாத நிகழ்வாக தமிழ் செம்மொழி நாள் விழா, கவிஞர் புதுவை சிவம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி பாவனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் இலக்கிய விழா நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த மாத நிகழ்வாக தமிழ் செம்மொழி நாள் விழா, கவிஞர் புதுவை சிவம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார்.
செயலாளர் சீனுமோகன் தாசு வரவேற்றார். துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், பொருளாளர் திருநாவுக்கரசு, துணைச் செயலாளர் அருள் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி பாவனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து நடந்த உரையரங்கில் பூங்கொடி பராங்குசம், சிவ. இளங்கோ ஆகியோர் பேசினர். ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு வீர. பாலகிருஷ்ணன் "என்றும் வாழும் எங்கள் சிவம் "என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கலியபெருமாள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் 13 பேர் கலந்து கொண்டு கவிஞர் புதுவை சிவம் குறித்து கவிதை வழங்கினர்.
புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர சுதர்சனன், தேசிய நல்லாசிரியர் பசுபதிராஜன், பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோருக்கு புதுவை தமிழ்ச் சங்க விருது வழங்கப்பட்டது.
முடிவில் ஆட்சிக்குழு உறுப்பினர் தினகரன் நன்றி கூறினார்.
- நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகரைச் சேர்ந்த அல்போன்ஸ் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மாநில அமைப்பாளர் சிவா முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
- எனவே இளைஞர்களான நீங்கள் தி.மு.க.வின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
புதுச்சேரி:
நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகரைச் சேர்ந்த அல்போன்ஸ் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மாநில அமைப்பாளர் சிவா முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது மாநில அமைப்பாளர் சிவா பேசியதாவது:-
மதம், ஜாதியை வைத்து அரசியல் செய்யாத இயக்கமும், அனைவரும் சமம் என்ற அடிப்படையான திராவிட கொள்கையை கொண்டதும் திமு.க.தான், தற்போது நாட்டிற்கு அத்தியாவசியமான கொள்கையும் இதுதான்.
எனவே இளைஞர்களான நீங்கள் தி.மு.க.வின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு சிவா பேசினார்.
நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வேலவன், நெல்லித்தோப்பு தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, தொகுதி துணை ஒருங்கிணைப்பாளர் அருண், வில்லியனூர் தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஒரு அனுமதி பெறாத சூதாட்ட கிளப்பை மக்களே கண்டுபிடித்தனர். அதனை முற்றுகையிட்டு போராடத்தில் ஈடுபட்டனர்.
- ஏனாமில் ஒரு மணி நேரத்திற்கு பதற்றமான சூழல் நிலவியது.
புதுச்சேரி:
புதுவையின் ஏனாம் பிராந்தியத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடத்தப்படுகிறது.
3 கிளப் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்த நிலையில் 20-க்கும் மேற்பட்ட கிளப் அனுமதியின்றி நடத்தப்படுகிறது.
இதில் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்க்கு பணம் வைத்து சூதாடி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், அவற்றை உடனே மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தீபாவளியையொட்டி ஏனாமில் ராயல் மனமகிழ் மன்றத்தில் நடந்த சூதாட்டத்தை ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி என்ற பெயரில் உள்ளே நுழைந்து கையும் களவுமாக பிடித்து சீல் வைத்தனர்.
இந்த நிலையில் மேலும் ஒரு அனுமதி பெறாத சூதாட்ட கிளப்பை மக்களே கண்டுபிடித்தனர். அதனை முற்றுகையிட்டு போராடத்தில் ஈடுபட்டனர்.
ஏனாமில் பதற்றத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் ஏராளமான பெண்களும் இளைஞர்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
மேலும், ஏனாம் பகுதியை ஒரு சூதாட்ட கும்பல் வளைத்து போட்டுள்ளது.அரசு விரைந்து இவற்றை மூட வேண்டும். இல்லையென்றால் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சூறையாடுவோம் என எச்சரித்தனர்.
தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஏனாமில் ஒரு மணி நேரத்திற்கு பதற்றமான சூழல் நிலவியது.
- லாஸ்பேட்டை விவேகானந்தா மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
- மாநில நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் பள்ளிகளுக்கான நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மதிவாணன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தார்கள்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை விவேகானந்தா மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் 7 நாட்கள் நடைபெறவுள்ளது. அதற்கான தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாணவர் கிருஷ்ணன் ஷர்மா வரவேற்பு உரையாற்றினார். பள்ளி முதல்வர் கீதா முன்னிலை வகித்தார். மாநில நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் பள்ளிகளுக்கான நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மதிவாணன் ஆகியோர் முகாமை ெதாடங்கி வைத்தார்கள்.
2-ம் நாள் முகாமில் இயற்கை பேரிடர் மீட்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி சத்யசாய் பவுண்டேஷன் சார்பில் பயிற்சியாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன் மற்றும் பயிற்சியாளர் ராஜ்கமல் ஆகியோர் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அருண் நாகலிங்கம் செய்து இருந்தார்.
- சிந்தனையாளர் பேரவை சார்பில் 116-வது சிந்தனையரங்கம் நடைபெற்றது. புதுவை ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் மானுடத்தை நேசித்த மாமனிதர் கி.ரா. என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சாரதா கங்காதரன் கல்லூரி பேராசிரியர் பிரபா தலைமை தாங்கினார்.
- புதுவையின் பழமை புதுமை என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
புதுச்சேரி:
சிந்தனையாளர் பேரவை சார்பில் 116-வது சிந்தனையரங்கம் நடைபெற்றது. புதுவை ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் மானுடத்தை நேசித்த மாமனிதர் கி.ரா. என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சாரதா கங்காதரன் கல்லூரி பேராசிரியர் பிரபா தலைமை தாங்கினார்.
பேரவை தலைவர் செல்வம் வரவேற்றார். துணை தலைவர் மணி மேகலை, பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன், துணை செயலாளர் ராஜாரங்கம், ஆலோசகர் ராமதாஸ் காந்தி, செயற்குழு உறுப்பினர் பச்சையம்மாள் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் கலியபெருமாள் சிறப்புரையாற்றினார். புதுவையின் பழமை புதுமை என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், கி.ரா. ஆகியோருக்கு நூலகத்தோடு கூடிய நினைவகங்கள் அமைக்க வேண்டும்.
அரசு பணியிடங்களை மேல்நிலை தேர்வில் தமிழ் கட்டாயம் படித்த புதுவையில் பிறந்தோருக்கு தலா 50 சதவீதம் நேரடி மற்றும் துறை ரீதியான பதவி உயர்வு என்ற முறையில் நிரப்ப வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயற்குழு உறுப்பினர் திவ்யா நன்றி கூறினார்.
- உப்பளம் தொகுதி அகத்தியர் நகர் விரிவு திருவள்ளுவர் வீதியில் பல ஆண்டுகளாக அங்குள்ள குடியிருப்புகளுக்கு பாதாள வடிகால் இல்லாமல் இருந்தது.
- இதையடுத்து, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளரிடம், எம்.எல்.ஏ. தெரிவித்து, பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி அகத்தியர் நகர் விரிவு திருவள்ளுவர் வீதியில் பல ஆண்டுகளாக அங்குள்ள குடியிருப்புகளுக்கு பாதாள வடிகால் இல்லாமல் இருந்தது. இதனை அப்பகுதி மக்கள், ஒப்பந்ததாரர் சிவா, உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் தெரிவித்து, பாதாள வடிகால் அமைத்து தர கோரினர்.
இதையடுத்து, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளரிடம், எம்.எல்.ஏ. தெரிவித்து, பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தார். மேலும், ெதாடர்ச்சியாக பொதுப் பணித்துறையை அணுகி, பாதாள வடிகால் அமைத்துத்தர வலியுறுத்தினார்.
எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று, பாதாள வடிகால் அமைப்பதற்கான பூமிபூஜை திருவள்ளுவர் வீதியில் நடந்தது. இப்பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, ஆதிதிராவிடர் பிரிவு துணை அமைப்பாளர் தங்கவேல், மாநில இளைஞரணி, துணை அமைப்பாளர் ராஜி, மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் செல்வம், காலப்பன் மற்றும் ராகேஷ், கவுதமன், பீட்டர், பாலாஜி, மோரிஸ், லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சர் சேதமானதால் தள்ளுவண்டியில் சிறுவனை சிகிச்சைக்கு அழைத்து சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
- தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர் அங்கிருந்த பார்சல் ஏற்றி செல்லும் தள்ளுவண்டியில் சிறுவனை படுக்க வைத்து தள்ளிக் கொண்டு ரெயில் நிலையத்தின் வெளியே நின்ற ஆம்புலன்சுக்கு அழைத்து வந்தனர்.
புதுச்சேரி:
ஹவுராவில் இருந்து புதுவைக்கு சனிக்கிழமைதோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று அந்த ரெயில் ஹவுராவில் இருந்து புதுவைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் கொல்கத்தாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணம் செய்தனர்.
அந்த ரெயில் புதுவை அருகே வந்தபோது, அந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த குடும்பத்தினர் செய்வதறியாது தவித்தனர். இதற்கிடையே அந்த ரெயில் புதுவை ரெயில்நிலையத்தை அடைந்தது. ரெயிலில் இருந்து இறங்கிய அவர்கள், சிறுவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் புதுவை சுகாதார நிலையத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்தது. ஆனால் அந்த ஆம்புலன்சில் உள்ள ஸ்ட்ரெச்சர் சேதமடைந்து காணப்பட்டதால் அதனை நடைமேடைக்கு இழுத்து செல்ல முடியவில்லை. இதனால் சிறுவனை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.
தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர் அங்கிருந்த பார்சல் ஏற்றி செல்லும் தள்ளுவண்டியில் சிறுவனை படுக்க வைத்து தள்ளிக் கொண்டு ரெயில் நிலையத்தின் வெளியே நின்ற ஆம்புலன்சுக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவனை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- புதுவை அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- அதைத்தொடர்ந்து தலைமைச்செயலர் ராஜீவ் வர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முதல் கட்டமாக 116 யூ.டி.சி. ஊழியர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அடுத்தக்கட்டமாக எல்.டி.சி, உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்த நிலையில் உதவியாளர் பணியிடத்தை நேரடியாக தேர்வு செய்தால் தங்கள் பதவி உயர்வு பாதிக்கப்படும் என அமைச்சக ஊழியர்கள் குற்றம் சாட்டி வந்தனர். பதவி உயர்வு மூலம் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வந்தனர்.
அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அமைச்சக ஊழியர்கள் தலைமைச்செயலகத்தில் கடந்த திரண்டு, அங்கு நிர்வாகத்துறை செயலர் கேசவன் அறை முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தலைமைச்செயலர் ராஜீவ் வர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தலைமை செயலகம் முன்பு மீண்டும் அமைச்சக ஊழியர்கள் திரண்டு முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ. க்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோரும் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டனர். உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமிக்க திங்கள்கிழமை ஆணை வெளியாவதை நிறுத்தவேண்டும். நேடியாக உதவியாளர்களை தேர்வு செய்தால் 600 அமைச்சக ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும் என வலியுறுத்தினர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தலைமைசெயலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் வரவில்லை. இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளிக்க சென்றனர்.
- புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் வழங்காமல் நேரடி நியமன முறையை கொண்டு வர இருப்பதாக தெரிகிறது.
- இது அரசின் தவறு என்பதை முதலில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உணர வேண்டும்.
புதுச்சேரி:
சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு முதல் அமைச்சர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் வழங்காமல் நேரடி நியமன முறையை கொண்டு வர இருப்பதாக தெரிகிறது.
இதனால் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் எல்.டி.சி., யூ.டி.சி. பணியில் இருப்பவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக வரையறுக்கப்பட்ட துறை போட்டி தேர்வுகள் அரசு நடத்தாததால் மேற்கண்ட அமைச்சக ஊழியர்களுக்கு சரியான கால கட்டங்களில் பதவி உயர்வு கிடைக்கவில்லை.
இது அரசின் தவறு என்பதை முதலில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உணர வேண்டும். இதற்கான தீர்வை உயர் அதிகாரிகள் உடனே ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் தற்போதுள்ள நியமன விதியின்படி உதவியாளர் பதவிக்கு நேரடி தேர்வு நடந்தால் வெளி மாநிலத்தை சேர்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு வரவாய்ப்பு அதிகம் உள்ளது.
மேலும் இதனால் எல்.டி.சி, யூ.டி.சி. பதவிகளுக்கு காலி பணியிடங்கள் உருவாகாத தேக்க நிலை ஏற்படும் இதனால் புதுவையை சேர்ந்த படித்து முடித்த பட்டதாரி இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்புக்கான கனவு பறிபோகும் நிலை உண்டாகும்.
ஆகையால் அரசு உதவியாளர் நியமன விதிகளில் உள்ள குறைபாடுகளை களைந்து புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பதவி உயர்வு மூலம் பயன்பெறும் விதமாக நியமன விதிகளில் திருத்தம் செய்து யூ.பி.எஸ்.சி.க்கு பரிந்துரை செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
இதனைஅரசு கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து புதுவை மாநிலத்தில் தற்போது பணியாற்றி கொண்டிருக்கும் எல்.டி.சி., யூ.டி.சி., உதவியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்
இவ்வாறு நேரு எம்.எல்.ஏ. மனுவில் கூறியுள்ளார்.






