என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • இந்தியை தெரிந்து கொள்ளாமல் எப்படி அரசுப் பதவிக்கு வந்தீர்கள்? என புதுவை அதிகாரிகளை கேட்டு தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
    • இனி புதுவைக்கு வரும் மத்திய அரசின் அமைச்சர்கள், ஆணையர்கள், அதிகாரிகள் யாரும் அதிகாரிகளிடம் இந்தி பேச வலியுறுத்தவோ, மிரட்டவோ கூடாது என்பதையும் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியை தெரிந்து கொள்ளாமல் எப்படி அரசுப் பதவிக்கு வந்தீர்கள்? என புதுவை அதிகாரிகளை கேட்டு தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். இதனை புதுவை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

    இவரது இந்த அநாகரீக, தேவையற்ற செயலால் தேசிய சிறுபான்மையினர் ஆணைய கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மையினர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சிறுபான்மையினருக்கான திட்டங்களில் புதுவை புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் இவ்வாறு நடந்து கொண்டாரோ? என்றும் சந்தேகிக்க தோன்றுகிறது.

    மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேசிய ஒருங்கிணைப்பு மொழியான ஆங்கிலமும், புதுவை அலுவல் மொழியான தமிழும் தெரிந்த ஒரு ஆணைய உறுப்பினரை அனுப்பி சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி மத்திய அரசின் திட்டங்களை கிடைக்கச் செய்ய வேண்டும்.

    இனி புதுவைக்கு வரும் மத்திய அரசின் அமைச்சர்கள், ஆணையர்கள், அதிகாரிகள் யாரும் அதிகாரிகளிடம் இந்தி பேச வலியுறுத்தவோ, மிரட்டவோ கூடாது என்பதையும் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். புதுவை அலுவல் மொழியான தமிழ் தெரிந்த அமைச்சர்கள், அதிகாரிகள், ஆணைய உறுப்பினர்களை மட்டுமே புதுவைக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராஜீவ் கொலையில் தண்டனை பெற்ற நளினி உட்பட 6 பேர் முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டது காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மன வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படு த்தியுள்ளது.
    • காங்கிரஸ் கட்சியினுடைய மிகப்பெரிய தலைவர்களில் இருந்து சாதாரண தொண்டன் வரை இந்த தீர்ப்பை முழுமையாக எதிர்க்கின்றோம்.

    புதுச்சேரி:

    முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜீவ் கொலையில் தண்டனை பெற்ற நளினி உட்பட 6 பேர் முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டது காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மன வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படு த்தியுள்ளது.

    மத்திய அரசு அந்த 6 பேருடைய விடுதலை சம்பந்தமான மனுவில் தங்களுடைய தீவிரமான எதிர்ப்பை காட்ட தவறிவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக சுப்ரீம்கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் இந்த விடுதலையை கொண்டாடுகின்றனர். அது மேலும் வேதனையை உருவாக்குகிறது.

    மற்ற அரசியல் கட்சியினுடைய தலைவர் படுகொலை செய்யப்பட்டால் அந்த கட்சியினர் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்களா? சில அரசியல் கட்சிகள் அடிக்கடி தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்கின்ற போக்கு பெரும் வேதனை தருகிறது.

    காங்கிரஸ் கட்சியினுடைய மிகப்பெரிய தலைவர்களில் இருந்து சாதாரண தொண்டன் வரை இந்த தீர்ப்பை முழுமையாக எதிர்க்கின்றோம். தலைவரை இழந்து வாடும் காங்கிரஸ் தொண்டர்க ளுடைய உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தொண்டன் என்ற முறையிலே தலைவர் ராஜீவ் காந்தி படுகொலையை கண்டித்து முழுமையான நீதி கிடைக்கின்ற வரை நாங்கள் போராடுவோம்.

    இவ்வாறு நாராயணசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிமாநில, வெளிநாடு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
    • தற்போது மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.

    புதுவை:

    புதுவையில் கடந்த வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. நேற்று அதிகாலை வரை இந்த மழை நீடித்தது. நேற்று பகலில் வெயில் அடிக்க தொடங்கியது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிமாநில, வெளிநாடு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். தற்போது மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. புதுவை வந்த ஒருசில சுற்றுலா பயணிகளும் மழை காரணமாக தங்கும் விடுதிகளில் முடங்கினர்.

    மழை காரணமாக இன்று செயல்பட்ட சண்டே மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

    • ஆசிரியர்கள் தவறான கண்ணோட்டத்தில் அணுகுவதாகவும், அவர்களது செய்கை, பார்வை சரியில்லை என மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
    • புகாரில் சிக்கிய 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்தும், துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைபள்ளியில் சமீபத்தில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பாதுகாப்பு குறித்து விவாதித்த போது பெரும்பாலான பெற்றோர் அச்சம் தெரிவித்தனர். பள்ளியில் 3 ஆசிரியர்கள், மாணவிகளிடம் தவறான கண்ணோட்டத்தில் அணுகுவதாகவும், ஆபாசமாக பேசுவதாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

    புகாரை பள்ளி நிர்வாகம் மறுத்த நிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட பெற்றோர், கல்வித்துறை செயலரை சந்தித்து, அரசு பள்ளியில் பயிலும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என எழுத்து பூர்வமாக புகார் அளித்தனர்.

    அதனைத்தொடர்ந்து கல்வித்துறை செயலர் உத்தரவின் பேரில், பள்ளி கல்வி அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பள்ளிக்கு சென்று பெற்றோர் மற்றும் மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர்.

    அதில் 3 ஆசிரியர்கள் தவறான கண்ணோட்டத்தில் அணுகுவதாகவும், அவர்களது செய்கை, பார்வை சரியில்லை என மாணவிகள் தெரிவித்தனர்.

    அதன்பேரில் புகாரில் சிக்கிய 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்தும், துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து அறிந்த குழந்தை நலக்குழு தலைவர் சிவகாமி, பள்ளியில் மாணவிகளிடம் நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    இச்சம்பவம் பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுவை மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக உப்பளம் தொகுதியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று சுமார் 2500-க்கு மேற்பட்டோருக்கு உணவுகளை வழங்கினார்.
    • பொதுமக்களை நேரில் அணுகி நிவாரண உதவிகள்,மற்றும் சீரமைப்பு பணிகளை செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக உப்பளம் தொகுதியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று சுமார் 2500-க்கு மேற்பட்டோருக்கு உணவுகளை வழங்கினார்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு அவர்களுக்கு தார்ப்பாய் மற்றும் உணவுகள் உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

    பொதுமக்களை நேரில் அணுகி நிவாரண உதவிகள்,மற்றும் சீரமைப்பு பணிகளை செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். இதில் தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, தி.மு.க. மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தி.மு.க. கிளைச் செயலாளர்கள் செல்வம் மற்றும் மணிகண்டன், காளபன், டேவிட், லாரன்ஸ், மோரிஸ், ரகுமான் தி.மு.க. கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் பல ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் அங்கன்வாடி ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
    • இதற்கான பணி ஆணையை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் பல ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் அங்கன்வாடி ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இது சம்பந்தமாக துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் மதிப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வருகிற 27 அங்கன்வாடி ஊழியர்கள், 23 அங்கன்வாடி உதவியாளர்கள் என 50 ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

    பணிநிரந்தரம் செய்யப் பட்ட 27 அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் ஒரு மாதத்திற்கு ரூ.6 லட்சத்து 21 ஆயிரமும், 23 உதவியாளர்களுக்கு ஊதியம் ஒரு மாதத்திற்கு ரூ.5 லட்சத்து 11 ஆயிரமும் மொத்தம் ஒரு மாதத்திற்கு ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் சம்பளம் வழங்கப்படவுள்ளது.

    இதற்கான பணி ஆணையை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். பணி ஆணையை பெற்றுக் கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோரின் காலில் விழுந்து ஆணையை பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர்.

    • புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவர் நீதிபதி பரோஸ் யுபாத்யாய் வழிகாட்டுதலின்படி 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் புதுவையில் நடந்தது.
    • தேசிய மக்கள் நீதிமன்றத்தை புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவர் நீதிபதி பரோஸ் யுபாத்யாய் வழிகாட்டுதலின்படி 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் புதுவையில் நடந்தது.

    புதுவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம், காரைக்கால், மாகி, ஏனாம் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    சுமார் 3 ஆயிரத்து 600 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதற்காக புதுவையில் 9, காரைக்காலில் 4, மாகிவில் 2, ஏனாமில் ஒரு அமர்வு என மொத்தம் 16 அமர்வுகள் செயல்பட்டன.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தை புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் செந்தில்குமார், நீதிபதிகள் ராபர்ட்கென்னடி, ரமேஷ், வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேலு, பொருளாளர் லட்சுமிநாராயணன், மற்றும் வக்கீல்கள், அரசு அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், வழக்காளிகள் என பலரும் பங்கேற்றனர். 

    • புதுவை அரசு காவல்துறையில் 60 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்றாமல் மத்திய அரசின் ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி உள்ளது.
    • இந்த இட ஒதுக்கீட்டில் முன்னேறிய சமுதாயங்களுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் புதுவையின் மிகப்பெரிய சமுதாயமாகிய வன்னியர்களுக்கும், 3-வது மிகப்பெரிய சமுதாயமாகிய மீனவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எந்த இடஒதுக்கீடும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு காவல்துறையில் 60 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்றாமல் மத்திய அரசின் ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி உள்ளது.

    புதுவை மக்களுக்கு, குறிப்பாக, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக அநீதியை இழைப்பதாக உள்ளது. 60 இடங்களில், 25 பொதுப் பிரிவினருக்கும், 6 பொருளாதார ரீதியாக நலிவடைந்தவருக்கும், 19 இதர பிற்படுத்தப்ப ட்டவர்க ளுக்கும், 9 அட்டவணை இனத்தவருக்கும் 1 பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த இட ஒதுக்கீட்டில் முன்னேறிய சமுதாயங்களுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் புதுவையின் மிகப்பெரிய சமுதாயமாகிய வன்னியர்களுக்கும், 3-வது மிகப்பெரிய சமுதாயமாகிய மீனவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எந்த இடஒதுக்கீடும் இல்லை. தேர்வில் புதுவை அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றி தான் 60 இடங்களையும் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

    பொதுப் பிரிவு 24, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் 6, இதர பிற்படுத்தப்பட்டவர் 7, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 11, இ.பி.சி. மீனவர் 1, பி.சி.எம். 1, பி.டி. 1, அட்டவணை இனத்தவர் 9 என ஒதுக்குவதால் எந்தக் கொள்கை மீறலும் முரண்பாடும் கிடையாது.

    நம் மாநில நியமனத்திற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே 16 பதவிகளுக்கும் புதுவை அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படும் என்ற ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும். இந்த ஆணை பிறப்பிக்கும் வரை பதவியை நிரப்பும் பணியை தள்ளி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாரை சந்தித்து கலந்துரையாடினார்.
    • தலைமை செயலகத்தில் அனைத்து துறை அரசு செயலர்கள், இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் சிறுபான்மையினருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சயித் ஷாசேஷதி 2 நாள் பயணமாக புதுவைக்கு வந்தார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாரை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து தலைமை செயலகத்தில் அனைத்து துறை அரசு செயலர்கள், இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    கூட்டத்தில் அவர் இந்தியில் பேச தொடங்கினார். பல அரசு செயலர்களுக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் பேசும்படி கோரினர். இதனால் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் டென்ஷன் ஆனார்.

    இந்தி தேசிய அலுவலக மொழி. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்தி தெரியாது என்றால் எப்படி திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என கேள்வி எழுப்பினார். அவரை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் சமாதானப்படுத்தினார். தொடர்ந்து ஆய்வுக்கூட்டத்தில் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

    • புதுவைக்கு வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
    • அலைகள் சீற்றமாக இருந்ததால் கடலில் இறங்காமல் கரையில் இருந்தபடியே கடல் அழகை ரசித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

    வியாழக்கிழமை மாலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை தொடங்குகிறது.இந்த வாரம் புதுவையில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதால் விடுதி அறைகளில் தங்க முன் பதிவு செய்த சுற்றுலா பயணிகள் அறைகளை ரத்து செய்தனர்.

    இருப்பினும், திட்டமிட்டபடி சில சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்தனர். அவர்கள் புதுவை கடற்கரை சாலையில் அதிகாலை முதலே கூடி கடல் அழகைரசித்தனர். லேசான தூறலை அனுபவித்தபடி செல்போன் மூலம் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து மமகிழ்ந்தனர்.

    அலைகள் சீற்றமாக இருந்ததால் கடலில் இறங்காமல் கரையில் இருந்தபடியே கடல் அழகை ரசித்தனர். * * * கடற்கரை அழகை ரசித்த சுற்றுலா பயணிகள்

    • புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் 58-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
    • அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் 58-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜனதா அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ், மத்திய இணைமந்திரிகள் ஜிதேந்திர பிரசாத்சிங், எல்.முருகன், புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தொலை பேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும், முதல்-அமைச்சர் ரங்கசாமி, செல்வகணபதி எம்.பி, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க.கிழக்கு மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சம்பத், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர், தீப்பாய்ந்தான், ராஜாராமன், பா.ஜனதா மாநில செயலாளர் ரத்தினவேலு, மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, மற்றும் அரசு செயலாளர்கள் அரசு உயரதிகாரிகள், ஏ.டி.ஜி.பி, போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    பிறந்த நாளையொட்டி ரெட்டியார் பாளையம், ராஜ்பவன், முத்தியா ல்பேட்டை, காலாப்பட்டு, அரியாங்குப்பம், உப்பளம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பிறந்த நாளையொட்டி அவரது ஆத வரவாளர்கள் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் இழுத்தனர்.

    அவரது சொந்த தொகுதியான மணவெளியில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்ய ப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் தவளகுப்பத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்த விழாவில் கலந்து கொண்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டனர்.

    மேலும், 2 ஆயிரம் பேருக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது.

    • ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் மனித உரிமை நிலை குறித்து நேரலையை புதுவையைச் சேர்ந்தவர்கள் பார்ப்பதற்கு தமிழ்நாடு மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு மற்றும் புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேரலையில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
    • மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு ஆசீர் மற்றும் ஜெரோம் சாம்ராஜ், முத்துக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் மனித உரிமை நிலை குறித்து நேரலையை புதுவையைச் சேர்ந்தவர்கள் பார்ப்பதற்கு தமிழ்நாடு மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு மற்றும் புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேரலையில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அதன்படி புதுவை புவன்கரே வீதியில் உள்ள அகத்தியர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொது செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் கருத்துரை வழங்கினர். மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு ஆசீர் மற்றும் ஜெரோம் சாம்ராஜ், முத்துக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், மார்க்சிஸ்டு (எம்.எல்.) புருஷோத்தமன், விடுதலை சிறுத்தைகள் செழியன், தந்தை பெரியார் திராவிட கழகம் வீரமோகன், பி போல்ட் அமைப்பு பஷீர், மாணவர்கள் கூட்டமைப்பு சாமிநாதன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன், நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், மக்கள் அதிகாரம் சாந்தகுமார் உள்ளிட்ட பல்வேறு இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×