என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்தி பேசும்படி மிரட்ட கூடாது-எதிர்கட்சித்தலைவர் சிவா வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    இந்தி பேசும்படி மிரட்ட கூடாது-எதிர்கட்சித்தலைவர் சிவா வலியுறுத்தல்

    • இந்தியை தெரிந்து கொள்ளாமல் எப்படி அரசுப் பதவிக்கு வந்தீர்கள்? என புதுவை அதிகாரிகளை கேட்டு தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
    • இனி புதுவைக்கு வரும் மத்திய அரசின் அமைச்சர்கள், ஆணையர்கள், அதிகாரிகள் யாரும் அதிகாரிகளிடம் இந்தி பேச வலியுறுத்தவோ, மிரட்டவோ கூடாது என்பதையும் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியை தெரிந்து கொள்ளாமல் எப்படி அரசுப் பதவிக்கு வந்தீர்கள்? என புதுவை அதிகாரிகளை கேட்டு தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். இதனை புதுவை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

    இவரது இந்த அநாகரீக, தேவையற்ற செயலால் தேசிய சிறுபான்மையினர் ஆணைய கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மையினர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சிறுபான்மையினருக்கான திட்டங்களில் புதுவை புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் இவ்வாறு நடந்து கொண்டாரோ? என்றும் சந்தேகிக்க தோன்றுகிறது.

    மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேசிய ஒருங்கிணைப்பு மொழியான ஆங்கிலமும், புதுவை அலுவல் மொழியான தமிழும் தெரிந்த ஒரு ஆணைய உறுப்பினரை அனுப்பி சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி மத்திய அரசின் திட்டங்களை கிடைக்கச் செய்ய வேண்டும்.

    இனி புதுவைக்கு வரும் மத்திய அரசின் அமைச்சர்கள், ஆணையர்கள், அதிகாரிகள் யாரும் அதிகாரிகளிடம் இந்தி பேச வலியுறுத்தவோ, மிரட்டவோ கூடாது என்பதையும் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். புதுவை அலுவல் மொழியான தமிழ் தெரிந்த அமைச்சர்கள், அதிகாரிகள், ஆணைய உறுப்பினர்களை மட்டுமே புதுவைக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×