என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு தோறும் பள்ளிக்களுக்கிடையே வினாடி-வினாப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
    • பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ வரவேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு தோறும் பள்ளிக்களுக்கிடையே வினாடி-வினாப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் படி இந்த ஆண்டு வினாடி-வினா போட்டி அமலோற்பவம் லூர்து அகாடமி பள்ளி (சி.பி.எஸ்.இ) லூர்து உள் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 10 பள்ளிகளை சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இளநிலை,முதுநிலை என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

    ஒவ்வொரு பிரிவிலும் 3 பரிசுகள் வழங்கப்பட்டது. இளநிலை பிரிவில் முதல் இடத்தை செயிண்ட் பேட்ரிக் பள்ளி 2-வது இடத்தை செயிண்ட் ஜோசப் ஆப் குளூனி 3-வது இடத்தை பெத்தி செமினார் பள்ளி பிடித்தது. முதுநிலை பிரிவில் முதல் இடத்தை பெத்தி செமினார் பள்ளி 2-வது இடத்தை செயிண்ட் பேட்ரிக் பள்ளி 3-வது இடத்தை செயிண்ட் ஜோசப் ஆப் குளூனி பள்ளி பிடித்தது.

    பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ வரவேற்று பேசினார். அமலோற்பவம் பள்ளி நிறுவனர், தாளாளர், முதுநிலை முதல்வர் லூர்து சாமி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு ரூ.8 ஆயிரத்து 500 வழங்கி பாராட்டினார்.

    இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை கூர்மையாக்கி கொள்ளவும் வெளிபடுத்தவும் வேண்டும் என்று பங்கேற்ற மாணவர்கள் அனைவரையும் உற்சாக படுத்தினார். இந்த ஆண்டிற்கான வினாடி-வினா சுழற்கோப்பையை செயிண்ட் பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெற்றது. முடிவில் பள்ளி முதல்வர் நன்றி கூறினார்.

    • புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட உருவையாறு ஏரிக்கரை முதல் செல்வா நகர் வழியாக ஆற்றுக்கு செல்லும் ஏரி வாய்க்கால் பல ஆண்டு காலமாக தூர்வாரப்படவில்லை.
    • இந்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உடனடியாக ரூ.2 லட்சம் செலவில் ஏரிவாய்க்காலை தூர்வார உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட உருவையாறு ஏரிக்கரை முதல் செல்வா நகர் வழியாக ஆற்றுக்கு செல்லும் ஏரி வாய்க்கால் பல ஆண்டு காலமாக தூர்வாரப்படவில்லை.

    மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளில் சூழ்வதால் ஏரி வாய்க்காலை தூர்வாரி தரும்படி அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உடனடியாக ரூ.2 லட்சம் செலவில் ஏரிவாய்க்காலை தூர்வார உத்தரவிட்டார்.

    இதற்கான பூமி பூஜை விழா நடந்தது. அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ஜெயராமன், வில்லியனூர் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் ரங்க மன்னார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • புதுவை ரெயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் சென்ற ரெயிலில் இளையராஜா பயணம் செய்தார்.
    • குடிபோதையில் ரகளை செய்ததை தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் தொழிலாளியை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளியதால் படுகாயமடைந்தார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் அருகே தளவானூர் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது39). கூலி தொழிலாளி. இவர் தினமும் புதுவைக்கு வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம்.

    அதுபோல் நேற்று காலை இளையராஜா வேலைக்காக விழுப்புரத்தில் இருந்து பஸ்சில் புதுவை மூலக்குளம் வந்தார். மதியம் வேலை முடிந்ததும் புதுவை நகர பகுதிக்கு வந்த இளையராஜா பின்னர் ஊர் திரும்ப ரெயிலில் செல்ல விரும்பினார்.

    அதன்படி புதுவை ரெயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் சென்ற ரெயிலில் இளையராஜா பயணம் செய்தார். அவர் பயணம் செய்த ரெயில் பெட்டியில் 4 வாலிபர்கள் வந்தனர். குடிபோதையில் இருந்த அவர்கள் ரெயில் புறப்பட்டது முதலே ரகளை செய்து கொண்டு வந்தனர்.

    வில்லியனூர் அருகே கோனேரிக்குப்பம் ஆற்று பாலத்தை ரெயில் கடந்த போது அந்த வாலிபர்களின் செயல்கள் எல்லை மீறியதால் அவர்களை இளையராஜா தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் இளையராஜாவிடம் தகராறு செய்தனர். மேலும் அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டனர்.

    இதில் இளையராஜா படுகாயமடைந்தார். மேலும் அவருக்கு கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டு அந்த இடத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து மற்றொரு ரெயில் அந்த வழியாக வந்தது. அடிபட்டு கிடந்த இளையராஜாவை பார்த்ததும் ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தி இளையராஜாவை மீட்டு கண்டமங்கலம் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    உடனே ரெயில்வே போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்து இளையராஜாவை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை செல்லும் என 3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை தலைமை நீதிபதி உட்பட இருவரும் வழங்கியுள்ளனர்.
    • தீர்ப்பில் அகில இந்திய காங்கிரஸ் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் சமூகநீதியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக புதுவை மாநிலத்தில் நாங்கள் தீர்ப்பை எதிர்க்கிறோம்.

    புதுச்சேரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை செல்லும் என 3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை தலைமை நீதிபதி உட்பட இருவரும் வழங்கியுள்ளனர்.

    தீர்ப்பில் அகில இந்திய காங்கிரஸ் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் சமூகநீதியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக புதுவை மாநிலத்தில் நாங்கள் தீர்ப்பை எதிர்க்கிறோம்.

    பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் எதிர்க்கி ன்றன.9 நீதிபதிகள் அமர்வில் இடஒதுக்கீடு சமூகத்தின் அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் தரவேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளனர். வருமானத்தை மட்டும் கணக்கில் எடுக்கக்கூடாது என இந்திய அரசியலமைப்பு அமர்வு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    மேல்சாதியினரின் வருமான வரம்பு வருடம் ரூ. 8 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 2½ லட்சமும், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ. 3 லட்சம் என வித்தியாசம் உள்ளதால் எதிர்க்கிறோம்.

    5 சதவீதம் உள்ள மேல்சாதியினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடும், 95 சதவீத உள்ள இதர சமுதாயத்தினருக்கு 90 சதவீதம் இடஒதுக்கீடாகிறது.

    ரூ.8 லட்சம் வருமான உள்ள மேல்சாதியினர் அவர்களின் 5 சதவீதத்தில் 2 சதவீதம்தான். இது சமூக நீதிக்கு ஏற்றதல்ல. சமூக நீதியை காக்கவே முழுமையாக புதுவை மாநிலத்தில் இதை எதிர்க்கி றோம். எங்கள் மாநிலத்துக்கு இது பொருந்தாது என்பதை கட்சித் தலைமையிடம் சொல்லிதான் எதிர்க்கி றோம்.

    ராஜீவ் படுகொலை வழக்கில் தெளிவாக எதிர்ப்பை தெரிவித்து ள்ளேன். மத்திய அரசின் நிலை இதில் பாரபட்சமாக உள்ளது. மத்திய அரசு வக்கீல் அந்த தேதியில் சுப்ரீம்கோர்ட்டில் கலந்து கொள்ளவில்லை. ஆயுள்காலம் வரை சிறையில் இருப்பதுதான் ஆயுள்தண்டனை.

    மத்திய மோடி அரசின் மெத்தன போக்கின் கணக்கில் கொண்டு தீர்ப்பு தரப்பட்டுள்ளது. அதனால் பேரரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ததற்கு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்வோம்.

    மறுசீராய்வு மனுவை 90 நாட்களுக்குள் போட வேண்டும். மத்திய அரசு செய்யாவிட்டால் நாங்கள் மனு தாக்கல் செய்வோம்.

    ராஜீவ் கொலையாளி களை சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் மன்னிப்பதாக கூறுவது பெருந்தன்மை. கட்சித் தொண்டர்களாகிய நாங்கள் ஏற்கமாட்டோம். எங்கள் உணர்வை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். மறு சீராய்வு மனுவை நாங்கள் தாக்கல் செய்தால் கட்சித்தலைமை ஏன் கேட்கிறார்கள்?

    கனமழையால் மக்கள் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வெள்ள நிவாரணமும், குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணமும் தரவேண்டும். தெலுங்கானாவில் கவர்னர் மாளிகையில் குறை கேட்கும் நிகழ்வை நடத்துவதை பார்க்க வேண்டும் என்று நான் எழுப்பிய கேள்விக்கு தமிழிசை பதில் தரவில்லை.

    அதேபோல் தேர்தல் வாக்குறுதியில் என்.ஆர்.காங்கிரஸ் அளித்தவை ஏதும் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றாத வாக்குறு திகளும்- செயல்படாத முதல்- அமைச்சருமாகதான் ரங்கசாமி உள்ளார்

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    • விழுப்புரம் -புதுவை 4 வழி சாலை பணி தற்போது நடைபெற்று வருகிறது.
    • இதில் வெளிமாநிலத்தவர் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் -புதுவை 4 வழி சாலை பணி தற்போது நடைபெற்று வருகிறது.இதில் வெளிமாநிலத்தவர் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக திருவண்டார்கோவில் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் இரும்பு பொருட்கள் அடிக்கடி திருடு போய் வந்தது. இதற்கிடையே மதகடிப்பட்டு அருகே உள்ள ஆண்டியார் பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் திருவண்டார் கோவில் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் நடராஜனிடம் அடிக்கடி 3 வெளி மாநிலத்தவர் இரும்பு பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இந்நிலையில் நேற்றும் அவர்கள் இரும்பு பொருட்களை திருடி கடையில் விற்பனை செய்தனர். இதுகுறித்து மேற்பார்வையாளர் மதன்ராஜ் திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 400 கிலோ இரும்பு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இரும்பு பொருட்களை திருடி விற்ற வடமாநிலத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், முஹம்மது இஜமதுல்லா, முகமது சகன்யராஜ் மற்றும் பழைய இரும்பு கடை வியாபாரி நடராஜன் ஆகிய 4 பேரையும் கைது செய்து புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருடப்பட்ட இரும்பு பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2லட்சம் ஆகும்.

    • திருபுவனை தொகுதிக்குட்பட்ட பி.எஸ்.பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவுக்கு பள்ளி துணைமுதல்வர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட பி.எஸ்.பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி துணைமுதல்வர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். பாடகர் வேணுசெல்வம் விழிப்புணர்வு பாடல்களை பாடி மாணவர்களை மகிழ்வித்தார்.

    நிகழ்ச்சியில் விரிவுரையாளர் மாயவன், ரஷித், பழனிவேல், கருணை ஞானபிரகாஷம், முருகானந்தம், அஜித்குமார், கிருபாகரன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆங்கில விரிவுரையாளர் தியோடர் நன்றி கூறினார்.

    • புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் வேளாண், மலர், காய்கறி கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
    • இந்த கண்காட்சி மலர், காய்கறியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் விதமாக அமைய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் வேளாண், மலர், காய்கறி கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்தில் நிதித்துறை செயலர் ராஜூ, விவசாயத்துறை செயலர் குமார், துறை இயக்குனர் பாலகாந்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசியதாவது:-

    என்வீடு என் நலம் என்ற திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் விதமாகவும், இல்லத்தரசிகளை கவரும்விதமாகவும், விவசாயம், காய்கறி, கனி கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும். இந்த கண்காட்சி மலர், காய்கறியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் விதமாக அமைய வேண்டும்.

    சூரிய ஒளி மின்சாரம் மூலம் வாட்டர் பம்பிங் சிஸ்டம் நிறுவுவது தொடர்பாக விவசாயிகள் புரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் அரங்குககள் அமைக்கப்பட வேண்டும்.

    புதிய விவசாய கருவிகள் அறிமுகப்படுத்த வேண்டும். கண்காட்சியை வேளாண்துறை, சுற்றுலாத்துறை இணைந்து நடத்தலாம் என்பது உட்பட பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. 

    • புதுவை பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் என்ற ராஜா. பிரபல ரவுடி.
    • இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    புதுவை பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் என்ற ராஜா. பிரபல ரவுடி. இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    அப்போது இருவருக்கும் மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த ஸ்டிக்கர் மணி என்பவருக்கும் இடையில் விரோதம் ஏற்பட்டது. இதனால் இருவரும் சிறையிலேயே அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இருவரும் தற்போது சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளனர்.

    இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜ்குமார் தனது நண்பருடன் சேர்ந்து ஸ்டிக்கர் மணியை அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்டிக்கர் மணி ராஜ்குமாரை பழிவாங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு நெல்லித்தோப்பு பெரியார்நகரில் உள்ள அரசு பள்ளி அருகில் நடந்து சென்றுக் கொண்டிருந்த ராஜ்குமாரை கொலை செய்யும் முயற்சியில் ஸ்டிக்கர்மணி, கோவிந்தசாலையை சேர்ந்த சஞ்சய்குமார், ஆட்டுப்பட்டியை சேர்ந்த பாலாஜி, நோனாங்குப்பத்தை சேர்ந்த வீரமணிகண்டன், கோவிந்தசாலை கபாலி, நோனாங்குப்பம் சஞ்சய், சூர்யா மற்றும் சிலர் சேர்ந்து அவரை தாக்கினர்.

    அந்த நேரத்தில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர். அவர்கள் இச்சம்பவத்தை பார்த்ததும் விரைந்து வந்து, தகராறில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர். அதில் பால்ராஜ், சசிகுமார், மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்க ளிட மிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர். போலீசார் சரியான நேரத்தில் அங்கு சென்றதால் கொலை சம்பவம் தடுக்கப்பட்டது.

    • பிரெஞ்சு-இந்திய வம்சாவழி நகரமன்ற உறுப்பினர்கள் குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • புதுவையில் சில தொகுதிகளை தத்தெடுத்து பல சேவைகள் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின்போது புதுவை அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கு பிரான்ஸ் திருவள்ளுவர் கலைக் கூடம், பிரெஞ்சு-இந்திய வம்சாவழி நகரமன்ற உறுப்பினர்கள் குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் இந்திய வம்சாவழியை சார்ந்த மோங்மாங்கி நகரமன்ற உறுப்பினர் செல்வா அண்ணாமலை, புதுவையில் சில தொகுதிகளை தத்தெடுத்து பல சேவைகள் செய்ய இருப்பதாக தெரிவித்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், பிரான்சிற்கும், புதுவைக்கும் உள்ள தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் சில சுற்றுலா திட்டங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசு செயல்படுத்தவிரும்புவதாக தெரிவித்தார்.

    புதுவை எம்.எல்.ஏ.க்களும், பிரான்ஸ் வம்சாவழி நகரமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒரு குடையின் கீழ் ஓர் பொதுவான அமைப்பைத் தொடங்கி புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் பல பயனுள்ள திட்டங்களை எளிதாக செய்யமுடியும். அதன் மூலம் பிரான்சிலிருந்து புதுவைக்கு அதன் நிர்வாகிகளும், புதுவையிலிருந்து பிரான்சிற்கு எம்.எல்.ஏ.க்களும் வந்து பல கலாச்சார விழாக்களை ஏற்பாடு செய்து கொண்டாடலாம், பல திட்டங்களை செய்து முடிக்க ஏதுவாக அமையும் என்றார்.

    பிரெஞ்சு தூதரகத்தால் மட்டுமே கொண்டாடப்பட்டு வரும் பாஸ்டில் தின விழாவை புதுவை அரசு- பிரான்ஸ் இந்திய வம்சாவழி நகரமன்ற உறுப்பினர்களோடு சேர்ந்து கொண்டாடலாம். புதுவை மக்களால் மறக்கப்பட்டு வரும் பிரான்சின் பாரம்பரிய சிறப்புகளை மீட்டெடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் புதுவை அரசு கொறடா ஏ.கேடி.ஆறுமுகம் , எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், பிரெஞ்சு இந்திய வம்சா வழி நகரமன்ற உறுப்பினர்கள் , பிரெஞ்சு இந்திய கழகங்களை சேர்ந்த மதியழகன், பிரபுராம், கமல்ராஜ், மன்சூர், கோபால கிருஷ்ணன், ஆதித்தன், பேராசிரியர் சக்திபுயல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கவர்னர் என்றால் வயதானவர் என குழந்தைகள் மனதில் இருந்தது.
    • விமான நிலையத்தில் நான் தான் தெலுங்கானா கவர்னர் என கூறியபோது ஒரு குழந்தை நம்பவில்லை.

    புதுச்சேரி:

    புதுவைக்கு கல்விச் சுற்றுலா வந்த மும்பை சத்ரபூஜ் நர்சீ பள்ளி மாணவர்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கவர்னர் தமிழிசையை ராஜ் நிவாசில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

    கலந்துரையாடலின் போது கவர்னர் தமிழிசை மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

    கவர்னர் என்றால் வயதானவர் என குழந்தைகள் மனதில் இருந்தது. விமான நிலையத்தில் நான் தான் தெலுங்கானா கவர்னர் என கூறியபோது ஒரு குழந்தை நம்பவில்லை.

    பின்னர் என்னுடன் அந்த குழந்தை புகைப்படம் எடுத்த போது தானும் கவர்னராக வரவேண்டும் என தன் விருப்பத்தை தெரிவித்தது.

    உயர்ப்பதவிக்கு வர கல்வி மற்றும் பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும். நேர்மையாக உங்கள் பணிகளை செய்யுங்கள்.தானாக பதவி வரும் என தெரிவித்தேன்.

    புதுவையில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும். புதுவை சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்க்க பேருந்து வசதி, நீர் விளையாட்டுகள், இந்திய பிரெஞ்சு கலாச்சார சுற்றுலா ஏற்படுத்தப்படும். விமானதளத்தை விரிவாக்கம் செய்யவும் இரவு விமான சேவை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதனால் பல மாநிலம், பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவார்கள்.டாக்டரான நான் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தால் என்னால் பார்த்து கொள்ள முடியும். அதேபோல்தான் தெலுங்கானா, புதுவை கவர்னர் பதவிகளை பார்க்கிறேன். இதை கூடுதல் வேலையாக கருதவில்லை. மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளேன்.

    எதையும் சமமாக பார்ப்பேன். நமக்கு வேண்டாதவர்கள் கோபத்தை ஏற்படுத்தினால் அதிக அளவில் சிரிப்பேன். நான் என் நிலையில் இருந்து மாற மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • (16-ந் தேதி) முதல் 19-ந்தேதி வரை 4 நாட்கள் சிறப்பு விற்பனை முகாமை புதுவை தலைமை அலுவலகம், வில்லியனூர் தொலைபேசி நிலையங்களில் நடத்துகிறது.
    • முகாமில், இலவசமாக புதிய ப்ரீபெய்டு சிம்கார்டு விற்பனை, நெட்வொர்க் மாற்றுதல் சேவை வழங்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பி.எஸ்.என்.எல். அங்கீகாரம் பெற்ற விற்பனையாளருடன் இணைந்து, (16-ந் தேதி) முதல் 19-ந்தேதி வரை 4 நாட்கள் சிறப்பு விற்பனை முகாமை புதுவை தலைமை அலுவலகம், வில்லியனூர் தொலைபேசி நிலையங்களில் நடத்துகிறது.

    முகாமில், இலவசமாக புதிய ப்ரீபெய்டு சிம்கார்டு விற்பனை, நெட்வொர்க் மாற்றுதல் சேவை வழங்கப்பட உள்ளது.

    முகாமில் ரூ.269 மதிப்புள்ள பி.எஸ்.என்.எல்.4ஜி சிம் இலவசமாக வழங்கப்படும். இதில் 45 நாட்கள் இலவசமாக பேசலாம். நாள்தோறும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். இலவசம். இத்தகவலை பி.எஸ்.என்.எல். உதவி பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் கடல் வழியே தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.
    • தேங்காய்திட்டு துறைமுக வளாகத்தில் உள்ள கடலோர காவல் படைக்கு சொந்தமான அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி:

    கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் சீ விஜில் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி நாளை மாலை வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் கடல் வழியே தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதில் இந்திய கடலோர காவல் படை, மத்திய சுங்கத்துறை மற்றும் புதுவை கடலோர காவல்படையினர் இணைந்து ஆழ்கடல் மற்றும் கடற்கரை பகுதிகளை தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக பகுதியான கோட்டகுப்பம் அருகே ஆழ்கடலில் கள்ளத்தோணி மூலம் தீவிரவாத வேடமிட்ட 9 நபர்களை அடையாளம் கண்ட கடலோர காவல் படையினர் ஆழ் கடலில் விரட்டிச்சென்று கைது செய்தனர். இவர்களை தேங்காய்திட்டு துறைமுக வளாகத்தில் உள்ள கடலோர காவல் படைக்கு சொந்தமான அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    அவர்களிடம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தீவிர தீவிரவாத தடுப்பு ஒத்திகை நாளை மாலை வரை தொடர்கிறது.

    ×