என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஊழியர்களுக்கிடையேயான கிரிக்கெட் லீக் போட்டி தொடங்கியது.
    • 12ஒவர் கிரிக்கெட் போட்டியில் ஷீல்ட் மற்றும் நைட்ஸ் அணிகள் மோதுகிறது.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஊழியர்களுக்கிடையேயான கிரிக்கெட் லீக் போட்டி தொடங்கியது.

    பிம்ஸ் மருத்துவமனை மனித வளத்துறை முதுநிலை மேலாளர் மதுசூதனன், மேலாளர் அமிர்தா முன்னிலை வகித்தனர்.கிரிக்கெட் வீரர்களுக்கான சீருடையை உடற் கல்வி துறை இணை பேராசிரியர் டாக்டர் பிரசன்னா, மார்க்கெட்டிங் மானேஜர் கோகுல் வழங்கினர்.

    சிறப்பு விருந்தினராக மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் கலந்து கொண்டுபோட்டியை தொடங்கி வைத்தார்.

    நடைபெறும் 12ஒவர் கிரிக்கெட் போட்டியில் ஷீல்ட் மற்றும் நைட்ஸ் அணிகள் மோதுகிறது.

    தொடர்ந்து கிங்க்ஸ், வாரியர்ஸ், டைட்டன்ஸ் ,ஜாகுவார், உள்ளிட்ட 6அணிகள் மோதுகிறது.இன்று தொடங்கி வருகிற 13-ந் தேதி வரை அரை இறுதி சுற்று நடைபெறுகிறது. இறுதி சுற்று வருகிற 18-ந் தேதி நடக்கிறது.

    வெற்றி பெறும் அணிக்கு ரொக்க பரிசு மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையுடன் சான்றிதழை கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் வழங்குகிறார்.

    • புதுவை கடல் பகுதியில் சிறு தொழில் செய்யும் மீனவர்கள் தற்போது கடலில் வலை விட முடியாத சூழல் உள்ளதாக அரசுக்கு மனு அளித்துள்ளனர்.
    • சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் இந்த தொழில் முறையை தடுக்க வேண்டிய கடலூர் மற்றும் புதுவை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

    புதுச்சேரி:

    மூ. புதுக்குப்பம் கிராம பஞ்சாயத்து சார்பில், புதுவை கடல் பகுதியில் சிறு தொழில் செய்யும் மீனவர்கள் தற்போது கடலில் வலை விட முடியாத சூழல் உள்ளதாக அரசுக்கு மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    இயற்கைக்கு மாறான மிகவும் அபாயகரமான முறையில் ஒரு சில மீனவர்கள் கணவாய் மீன் பிடிப்பதற்காக பிளாஸ்டிக் கேன்கள், மணல் மூட்டைகள், சவுக்கு மரக்கிளைகள் இவைகளை கடலில் இறக்குவதால் வலை அதில் சிக்கி கிழிந்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் மீன்களும் கிடைப்பதில்லை,

    கரைப்பகுதியில் 8 பாகம் அளவிலும் கூக்கான் இறக்குவதால் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது.

    கடலின் சூழலை சீர்குலைத்து இயற்கைக்கு மாறாக தொழில் செய்வதால் கடல் வளம் பாதிக்கப்படுவதோடு, சிறு தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் இந்த தொழில் முறையை தடுக்க வேண்டிய கடலூர் மற்றும் புதுவை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கின்றனர்,

    மேலும் இவற்றை கண்காணிக்க வேண்டிய கடலோர காவல்படை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கடல் மாசு ஏற்படுவதுடன் மீன்கள் வாழ முடியாது நிலை உள்ளது,

    சம்மந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் இதன் மீது கவனம் செலுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு இந்த தொழில் முறையை தடுத்து கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சென்னை துறைமுகத்தில் இடபற்றாக்குறை இருப்பதால் அங்கு சரக்குகளை ஏற்றி இறக்க காலதாமதம் ஏற்படுகிறது.
    • கப்பல் சென்னைக்கு இன்று காலை கண்டெய்னர்களை ஏற்றி வருவதற்காக புறப்பட்டது

    புதுச்சேரி:

    சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து கண்டெய்னர் கப்பல் வந்து சரக்குகளை ஏற்றி, இறக்கி செல்கிறது.

    சென்னை துறைமுகத்தில் இடபற்றாக்குறை இருப்பதால் அங்கு சரக்குகளை ஏற்றி இறக்க காலதாமதம் ஏற்படுகிறது. இதனால 100 கண்டெய்னர்களை மட்டும் புதுவை துறைமுகத்திற்கு கொண்டு வந்து இங்கிருந்து தெற்கு பகுதிக்கு டெலிவரி செய்ய 2 துறைமுகம் இடையே ஒப்பந்தம் கையழுத்தானது.

    இதற்காக ஒரு தனியார் நிறுவனம் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து 106 கண்டெய்னர்களை ஏற்றி செல்லும் வகையில் சிறிய ரக கப்பலை புதுவைக்கு கடந்த 11-ந் தேதி கொண்டு வந்தது. கடந்த 15 நாட்களாக துறைமுக வளாகத்தில் அந்த கண்டெய்னர் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், அந்த கப்பல் சென்னைக்கு இன்று காலை கண்டெய்னர்களை ஏற்றி வருவதற்காக புறப்பட்டது, ஆனால் துறைமுகத்தை மணல் மூடியதால் அந்த கப்பலால் கடலுக்குள் செல்லடியவில்லை இதனையடுத்து 2 படகுகளை வைத்து சிரமத்துடன் அந்த கப்பல் கடலுக்கு இழுத்து செல்லப்பட்டது.

    இதனால் கண்டெய்னர்களை ஏற்றி வர செல்லும் கப்பல் சுமார் 1 1/2 மணி நேரம் துறைமுகத்தில் இருந்து வெளியேற தாமதம் ஏற்பட்டது, சென்னையில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றி வரும் அந்த கப்பல், கண்டெய்னர்களை ஏற்றிய வந்த பிறகும், துறைமுகத்தில் நுழைய கப்பலுக்கு சிரமம் ஏற்படும் என தெரிகிறது.

    இதனால் நடுக்கடலில் அந்த கப்பல் நிறுத்தப்பட்டு படகுகள் மூலம் கண்டெய்னர்களை கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    • தமிழை தனது பெயரிலேயே வைத்திருக்கும் கவர்னரும் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
    • கவர்னர் தமிழிசை தமிழ் மீது பற்று கொண்டவர்.

    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தை கட்சி எம்.பி. ரவிக்குமார் புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பல ஆய்வாளர்களை உருவாக காரணமாக இருந்தது. இதில் பெரிய பல பேராசிரியர்கள் பணியாற்றினார்கள்.

    தற்போது பேராசிரியர், இயக்குநர் இல்லாமல் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் தமிழ் மீது பற்று கொண்டவர்.தமிழுக்காக போராட்டக்களத்தில் இருந்தவர்.

    அவரது ஆட்சிக்காலத்தில தமிழுக்காக இருந்த நிறுவனம மூடப்பட்டது என்ற அவபெயர் வரக்கூடாது.

    எனவே புதுவை மொழியில் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மீண்டும் புதுப்பிக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை தனது பெயரிலேயே வைத்திருக்கும் கவர்னரும் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

    கவர்னர் தமிழிசை தமிழ் மீது பற்று கொண்டவர். அவரது தந்தையும் தமிழ் மீது பெரும் பற்று கொண்டவர். அவரது காலததில் இந்த நிறுவனம் மூடப்பட்டால் அவருக்கும் அது பெரும் அவபெயராக இருக்கும், எனவே அவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாசு தமிழை தேடி என்ற பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழுக்காக யார் எதை செய்தாலும் அதை வரவேற்கிறோம். அவரது நோக்கம் நிறைவேற வாழ்த்துகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராகவேந்தரின் 428- வது அவதார ஜெயந்தி தினத்தையொட்டி புதுவை ராகவேந்திரா நகரில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் 108 பால் குட அபிஷேக விழா நடைபெற்றது.
    • பால்குடங்களை சுமந்து வந்த பக்தர்களே ராகவேந்தருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    புதுச்சேரி:

    ராகவேந்தரின் 428- வது அவதார ஜெயந்தி தினத்தையொட்டி புதுவை ராகவேந்திரா நகரில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் 108 பால் குட அபிஷேக விழா நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு நித்தியபடி பூஜைகள் நடை பெற்று, 10 மணியளவில் கோவில் வளாகத்தில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த ஊர்வலம் மீண்டும் ஆலயத்தை அடைந்ததும், பால்குடங்களை சுமந்து வந்த பக்தர்களே ராகவேந்தருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து பூஜைகளும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

    பின்னர் அன்னததானம் வழங்கப்படடது. விழாவில் கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ. உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • புதுவை மாநில அமெச்சூர் ஹேண்ட்பால் சங்கம் சார்பில் சப்-ஜூனியர் பிரிவு மாணவ- மாணவியருக்கான 5-வது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அமெச்சூர் ஹேண்ட்பால் சங்கம் சார்பில் சப்-ஜூனியர் பிரிவு மாணவ- மாணவியருக்கான 5-வது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் கருவடிக்குப்பத்தில் உள்ள பாத்திமா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    பாத்திமா மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆக்னல் போட்டியை தொடங்கி வைத்தார்.ஹேண்ட்பால் சங்க நிர்வாகிகள் சசிகுமார், அருள், வீரா, ஏகாம்பரம், ஆகியோர் பங்கேற்றனர்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை ஒலிம்பிக் சங்க பொருளாளர் நாராயணசாமி செய்திருந்தார். வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.

    • திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட நாவற்குளத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது.
    • ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்த கிராம பொதுக்கூட்டத்தில் பாலமுருகன் கோவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட நாவற்குளத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    ஏப்ரல் 5-ந் தேதி நடை பெறவுள்ள பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாவற்குளம் பாலமுருகன் கோவிலில் கிராம பொதுக்கூட்டம் நடந்தது.

    ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்த கிராம பொதுக்கூட்டத்தில் பாலமுருகன் கோவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    கவுரவத் தலைவர் ரத்தினம், தலைவர் சொக்கலிங்கம், துணைத் தலைவர் பாண்டியன், பொருளாளர் கலியன், துணைப் பொருளாளர் பாஸ்கரன், செயலாளர்கள் முருகன், சீனிவாசன், பழனி, குமார், வினோத், துணைச் செயலாளர் பாபு,

    கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜானகி ராமன், நாராயணன், ராஜா, மணி, கோபால், நவநீத், சாரதி, சுந்தர், சிவப்பிர காசம், ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகி களின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். புதிய கோவில் நிர்வாகிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்தார்.

    • புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உலகத் தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்க விருதினை செல்வமணிகண்டன், என்ஜினீயர் சபரிநாதன் ஆகியோருக்கு வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உலகத் தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து புதுவைத் தமிழ்ச் சங்க விருதினை முதன்மைக் கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு, அரவிந்த் கல்விக் குழுமத் தலைவர் நித்தியானந்தன், தொழிலதிபர் ராமகிருட்டிணன், ராஜகண்ணு, ஆசிரியர் எட்வர்டு சார்லசு, செல்வமணிகண்டன், என்ஜினீயர் சபரிநாதன் ஆகியோருக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு.மோகன் தாசு, பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், பாலசுப்பிரமணியன், தேசிய மரபு அறக்கட்டளை தலைவர் அறிவன், அருள் செல்வன், உசேன், சிவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இயற்கை மருத்துவ தினத்தை சர்வதேச இயற்கை மருத்துவ அமைப்பான சூர்யா பவுண்டேசன் மற்றும் தேசிய இயற்கை மருத்துவ மையத்துடன் சேர்ந்து கொண்டாடியது.
    • இயற்கை மருத்துவம் மூலம் வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்திக் கொள்வது என்று விளக்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியின் யோகா கல்வி மையம் 5-வது இயற்கை மருத்துவ தினத்தை சர்வதேச இயற்கை மருத்துவ அமைப்பான சூர்யா பவுண்டேசன் மற்றும் தேசிய இயற்கை மருத்துவ மையத்துடன் சேர்ந்து கொண்டாடியது. கல்லூரியின் யோகா கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் உதயசூரியன், இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.

    முதுகலை வணிகவியல் தலைவர் குமார் இயற்கை மருத்துவத்தின் தொடக்கம் மற்றும் அதன் தேவையைப்பற்றி கூறினார். சர்வதேச இயற்கை மருத்துவ அமைப்பின் புதுவை ஒருங்கிணைப்பாளர் அத்துழாய் யோகாவின் சிறப்பு, அதன் முக்கியத்துவம், பல்வேறு நிலைகள், மூச்சுப்பயிற்சி பற்றி விளக்கினார். தென்னிந்தியாவின் தலைவர் பிராங்கிளின் ஹெர்பர்ட் தாஸ் காணொலி காட்சி மூலம் இயற்கை மருத்துவம் மூலம் வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்திக் கொள்வது என்று விளக்கினார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இயற்கை உணவாக முளை கட்டிய பாசிப்பயிறு, இனிப்பு அவல், பழக்கலவை , காய்கறி கலவை மற்றும் இஞ்சி, புதினா கலந்த எலுமிச்சைசாறு வழங்கப்பட்டது.

    முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர் அமுதா நன்றி கூறினார்.

    • நெட்டப்பாக்கம் அருகே தொழிற்சாலையை பார்வையிட சென்ற தொழிலதிபர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
    • உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் தயாளமூர்த்தியை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே தொழிற்சாலையை பார்வையிட சென்ற தொழிலதிபர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

    புதுவை ரெட்டியார்பாளையம் பொன் நகரை சேர்ந்தவர் தயாள மூர்த்தி (வயது52). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    தயாளமூர்த்தி நெட்டப்பாக்கம் அருகே ஏரிபாக்கத்தில் தெர்மாகோல் புதுப்பிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. ஆனால் இதற்காக அவர் எந்த மருத்துவ சிகிச்சையும் பெறவில்லை.

    இந்த நிலையில் தயாளமூர்த்தி வீட்டில் வைத்திருந்த செல்போனை காணாமல் மிகுந்த வேதனையில் இருந்தார். பின்னர் மதியம் தொழிற்சாலையை பார்வையிட சென்றார். அப்போது 6 மணி அளவில் தொழிற்சாலையில் தயாளமூர்த்தி திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் தயாளமூர்த்தியை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தயாள மூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது உறவினர் பரணிதரன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 100 கண்டெய்னர்களை மட்டும் கப்பல் மூலம் புதுவை உப்பளம் துறைமுகத்திற்கு கொண்டு வந்து, இங்கிருந்து டெலிவரி செய்வது குறித்து 2 துறைமுகங்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
    • கப்பலின் பல்வேறு தேவைகளுக்காக 6 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டது.

    புதுச்சேரி:

    சென்னை, எண்ணூர் துறைமுகத்திற்கு, பல்வேறு நாடுகளில் இருந்து கப்பலில் வரும் கண்டெய்னர்களை ஏற்றி, இறக்குவது மற்றும் டெலிவரி செய்வதில், இடப்பற்றாக்குறை காரணமாக காலதாமதம் ஏற்படுகிறது.

    இதை சரி செய்யும் விதமாக அங்கிருந்து, 100 கண்டெய்னர்களை மட்டும் கப்பல் மூலம் புதுவை உப்பளம் துறைமுகத்திற்கு கொண்டு வந்து, இங்கிருந்து டெலிவரி செய்வது குறித்து 2 துறைமுகங்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இந்த பணிக்காக குளோபல் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின், 106 கண்டெய்னர்களை, ஒரே நேரத்தில் ஏற்றிச்செல்லும் சிறிய ரக கப்பல் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து புதுவைக்கு கடந்த 11-ம் தேதி வந்தது.

    கடந்த 15 நாட்களாக உப்பளம் துறைமுக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த கப்பல், சென்னையிலிருந்து கண்டெய்னர்களை ஏற்றி வர, இன்று சென்னைக்கு செல்கிறது.

    இந்த கப்பல் வாரத்தில் 2 நாட்கள் சென்னையில் இருந்து கண்டெய்னர்களை கொண்டு வந்து டெலிவரி செய்வது மற்றும் புதுவையில் இருந்து அவற்றை சென்னைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட உள்ளது.

    அதனையொட்டி, கப்பலின் பல்வேறு தேவைகளுக்காக 6 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டது. இன்று முதல் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது.

    • வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மாசிமக தீர்த்தவாரியும், 7-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா ஓவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக நடைபெறும் அதுபோல் இந்த ஆண்டு மாசி மக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. வருகிற 4-ந் தேதி 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந் தேதி நடக்கிறது.

    மாசிமக தீர்த்தவாரியும், 7-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தேரோட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், இந்து சமய அறநிலையத்துறை செயலர் குமார், ஆணையர் சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை சிறப்பு அதிகாரி சீத்தாராமன், நிர்வாக அதிகாரி சதீஷ், தலைமை அர்ச்சகர் சரவண சிவாச்சாரியார் உட்பட கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

    ×