என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கணவன்-மனைவி இருவரும் ஏழுமலையின் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
    • கலைச்செல்வி தீக்குளித்ததை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் காலாப்பட்டு போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சந்திரன். மீனவரான இவரது மனைவி கலைச்செல்வி (வயது 35).

    அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ராஜகுமாரிக்கு கலைச்செல்வி கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ரூ.5 லட்சம் வட்டிக்கு கொடுத்தார். அதற்கு அவர் மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜகுமாரி வட்டியை சரியாக கொடுக்கவில்லை. கலைச்செல்வி பலமுறை கேட்டும், அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

    இதற்கிடையே கலைச்செல்வி குடும்பத்தினருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. எனவே கணவன்-மனைவி இருவரும் ஏழுமலையின் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து ஏழுமலை காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து சந்திரன், கலைச்செல்வி ஆகியோரை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் நடந்தது.

    அப்போது கடன் வாங்கிய ஏழுமலையையும் அவரது மனைவியையும் போலீசார் இருக்கையில் அமர வைத்தும், சந்திரன், கலைச்செல்வியை நிற்க வைத்தும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கலைச்செல்வி, போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். போலீஸ் நிலையம் முன் நிறுத்தியிருந்த அவரது இருசக்கர வாகனத்தில் கேனில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையம் உள்ளே சென்று, தனது பணத்தை தரவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீரென அவர் கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ குளித்தார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பற்றிக்கொண்டதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்து சுருண்டு கீழே விழுந்தார்.

    போலீசார் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைச்செல்வி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    முன்னதாக கலைச்செல்வி தீக்குளித்ததை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் காலாப்பட்டு போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.

    கலைச்செல்வி தீக்குளித்த போது பணியில் இருந்த போலீசார் மற்றும் கடன் வாங்கி விட்டு பணத்தை திரும்ப கொடுக்காமல் இருக்கும் ராஜகுமாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள், உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் அவர்கள் மீண்டும் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் காலாப்பட்டு போலீஸ் நிலைய அதிகாரி இளங்கோ, உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோரை புதுவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி.ஸ்ரீனிவாஸ் உத்தரவிட்டுள்ளார்.

    • மாணவர்களுக்கு வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • முதலாம் ஆண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    புதுச்சேரி:

    அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் கல்லூரியில் பி.எஸ்.சி. எம்.எல்.டி. மற்றும் பி.எஸ்.சி. எம்.ஆர்.ஐ.டி. படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முதலாம் ஆண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரியின் இயக்குனர் டாக்டர் ரத்தினசாமி, பொது மேலாளர் சவுந்தர ராஜன் , கல்வியியல் ஆலோசகர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் மற்றும் டாக்டர்.ஆனந்த வைரவேல் வர வேற்று பேசினார் .

    நிகழ்ச்சியில் துணை பேராசிரி யர்கள், மாணவர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் டயாலிஸிஸ் கல்லூரியின் துணை பேராசிரியை சவுமியா நன்றி கூறினார்.

    • தீக்குளித்த கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
    • போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு போலீஸ்நி லையத்தில் தீக்குளித்த கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

    இத்தகவல் கலைச்செல்வியின் குடும்பத்தினர், உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 10 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டு காவல்நிலையம் அருகே ஒன்று கூடி மறியல் போராட்டத்துக்கு தயாராகினர். தகவலறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா, சூப்பிரண்டு பக்தவச்சலம் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தகவலறிந்த கல்யாண சுந்தரம் எம்எல்ஏ அங்கு வந்தார். அவர்களிடம் கோரிக்கைகளை முதல அமைச்சரிடம் தெரிவியுங்கள் என கூறினார். அதற்கு அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை பிணத்தை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர்.

    காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, பிள்ளை ச்சாவடி, கனகசெட்டிகுளம் ஆகிய 4 மீனவ கிராம பஞ்சாயத்தார் சட்டசபைக்கு வந்தனர். அங்கு முதல்-அமைச்சரை சந்திக்க கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ அறையில் அவர்கள் காத்திருந்தனர். மதியம் 12.30 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்தார்.

    எம்.எல்.ஏ.வோடு முதல்-அமைச்சர் ரங்கசாமியை  சந்தித்தனர். அப்போதும் தீக்குளிப்பை போலீசார் தடுக்காததோடு அந்த பெண்ணுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதால் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் போலீசார் மீது வழக்கு பதிவு செய்து சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்றும் உயிரிழந்த பெண்ணின் குடும்த்திற்கு ரூ 25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    முடிவு தெரியும் வரை பிணத்தை பெற மாட்டோம் என கூறினர். இதனையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ முதல்-அமைச்சருடன் பேசி தகவல் தெரிவிப்பதாக கூறினார். இதனை ஏற்று மீனவ பஞ்சாயத்தார் சட்டமன்ற வளாகத்தில் காத்திருந்தனர்.இதனிடையே காலாப்பட்டு பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கால்நடை டாக்டர் செல்வமுத்து தெரு நாய்களுக்கும், வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார்.
    • வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உலக ரேபிஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு தெருவோர மற்றும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடந்தது.

    கால்நடை டாக்டர் செல்வமுத்து தெரு நாய்களுக்கும், வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார். 60க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்களிடம் தடுப்பு ஊசி பற்றியும் அதன் நன்மைகள் குறித்தும் விளக்கினார்.

    • சத்துணவு மாத விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்று பேசியதாவது:-
    • ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஜவகர் நகரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் நடந்த சத்துணவு மாத விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்று பேசியதாவது:-

    மருத்துவர் என்ற முறையில் அனைவருக்கும் ஊட்டச்சத்து தேவை என்று சொல்வேன். உலக சுகாதார நிறுவனம் கூறுவது, இந்திய பெண்களில் 70 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நன்கு சாப்பிட்டால் போதும். தினமும் முருங்கை கீரை உட்பட ஒரு கீரை, காய்கறிகள்,வாழைத்தண்டு, சுரைக்காய் சாப்பிட வேண்டும்.

    விலை உயர்ந்ததுதான் சத்து என்று நினைக்காதீர்கள். கீரை, காய்கறிகளில் அதிக சத்து உள்ளது. ஆயிரம் ரூபாய் சத்து மாவுவிட முருங்கை கீரையில் அதிக சத்து உள்ளது. காய்கறிகளில் ஊட்டச்சத்து உள்ளது.

    தமிழக, புதுவை உணவு பழக்கத்துக்கு இணையாக வேறு உணவு பழக்கம் இல்லை. சோற்றுடன் முதலில் பருப்பு நெய், அடுத்து சாம்பார், ரசம், மோர், காய்கறிகள் சாப்பிடுகிறோம். இது சரிவிகித உணவு. நெய் நல்ல கொழுப்பு. பசுவிடம் இருந்து வரும் எதுவும் கெட்டது இல்லை. நல்ல பசும்பால் சாப்பிட்டால் யாரும் குண்டாக மாட்டார்கள்.

    உலகிலேயே சாப்பிட்டு விட்டு செரிக்க ரசம் சாப்பிடுவது இங்கு மட்டும்தான். உலகில் எங்கும் கிடையாது. முன்னோர் நன்கு சிந்தித்துள்ளனர். கரோனா வந்தவுடன் சாப்பிட சொன்ன விஷயங்கள் அனைத்தும் ரசத்தில் உள்ளது. இது தமிழகம், புதுவை தாண்டி எங்கும் இல்லை.

    எல்லா சத்தும் இருந்தாலும் ஆர்டர் செய்து பீட்சா பர்கர் சாப்பிடுகிறோம். நம் உணவை ஆர்டரா சாப்பிடாமல் ஆர்டர் போட்டு சாப்பிடுறோம். நம் உணவு பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் தர முதல் அமைச்சரிடம் சொல்லியுள்ளேன். கண்டிப்பாக கொடுக்கப்படும்.

    பெண்கள் நன்றாக சாப்பிட வேண்டும். எதை யாவது சாப்பிடக்கூடாது. ஊட்டச்சத்துடன் சாப்பிட வேண்டும். பெண்கள் சிறந்து இருக்க ஊட்டசத்து உணவு சாப்பிட வேண்டும். தியாகி போல் இருக்கக்கூடாது. அனைவரும் சாப்பிட்டு விட்டு மீதமுள்ளதை சாப்பிடக்கூடாது. பெண்கள் நன்றாக இருந்தால்தான் குடும்பத்தை காக்க முடியும்.

    யார் என்ன சொன்னாலும் சரியாக சாப்பிடுங்கள். வீட்டையும், நாட்டையும் பார்க்க வேண்டும் என்பதால் ஊட்டச்சத்து உணவு சாப்பிடுங்கள். பெண்கள் ருசித்து மகிழ்ச்சியாக சாப்பிடுங்கள். காலையில் பழையதில் இருக்கும் ஊட்டச் சத்து எதிலும் இல்லை.

    நானும் காலையில் பழையதுதான் சாப்பிட்டேன். புதுமை பெண்ணாக இருந்தாலும் நான் சாப்பிடுவது பழையதுதான். பூரி, வடை காலையில் சாப்பிடுவதை தவிருங்கள். உப்பு, எண்ணெய் குறையுங்கள.

    இவ்வாறு தமிழிசை பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்எல்ஏ சிவசங்கர், துறை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    • பாகூர் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • இது குறித்து கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

    புதுச்சேரி:

    சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓர பாகூர் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

    சாத்தனூர் அணையின் நீர்வரத்து பகுதிகளில் பெய்து வரும் பருவ மழை காரணமாக அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் 116.75 அடிக்கு மேல் உபரி நீரினை பாசன விதிமுறைகளின் படி வெளியேற்ற வேண்டியுள்ளது. இன்று 1,035 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என்ற தகவல் உதவி செயற்பொறியாளர் சாத்தனூர் அணை செயற்பொறியாளர் மூலம் பெறப்பட்டுள்ளது.

    மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர் வெளியேற்றும் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 10,000 கன அடி வரை வெளியேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணையாற்றின் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. மேலும் தென்பெண்னை ஆற்றின் அமைந்துள்ள புதுவை கிராமங்களான நெட்டப்பாக்கம், பண்ட சோழநல்லூர், வடுகுப்பம், ஏம்பலம், நத்தமேடு. கம்பளிகாரன்குப்பம், மணமேடு, குருவிநத்தம், பரிக்கல்பட்டு, சொரியங்குப்பம், கொமந்தமேடு, உச்சிமேடு, முதலிய பகுதி வாழ் மக்கள் கரையோரம் உள்ள தமது உடமைகளையும் கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் ஆற்றில் இறங்கவோ ஆற்றில் குளிக்கவோ ஆற்றங்கரையை கடக்கவோ கூடாது என்றும் அதனை மீறுவோர் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரி க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதை ஒட்டி பாகூர் தாசில்தார் கோபாலகி ருஷ்ணன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரி கள் தென்பனையாற்று கரையோரங்களில் உள்ள கிராமங்களில் ஒளிபரப்பின் மூலம் வெள்ள அபாயம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரித்து வருகின்றனர்.

    • திருபுவனை பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது
    • இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி தலைவர் ஜெயக்குமார், பொதுச்செயலாளர் முத்து குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    திருபுவனை பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. விபத்தில் சிக்குபவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்தி ரிக்கு அழைத்துச்செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவை தாமதமாக வருகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    எனவே இது போன்று உயிரிழப்புகளை தடுக்க திருபுவனை பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த வேண்டும். மேலும் திருபுவனை, திருவ ண்டார் கோவில் மற்றும் மதகடிப்பட்டு பகுதியில் பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • பாரதியார் பல்லைக்கூடத்தில் காலியாக உள்ள இளங்கலை படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை நடக்கிறது.
    • பி.எப்.ஏ நுண்கலை படிப்பில் கூடுதலாக 10 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் பாரதியார் பல்லைக்கூடத்தில் காலியாக உள்ள இளங்கலை படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை நடக்கிறது.

    பிஎப்ஏ நுண்கலை படிப்பில் கூடுதலாக 10 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இளங்கலை பி.பி.ஏ, ஆர்ட்ஸ், இசை, நடன படிப்புகளில் சேர விருப்பம் உள்ள பிளஸ்-2 முடித்த மாணவர்கள் வரும் 4-ந் தேதிக்குள் பல்கலைக்கூடத்தில் நேரில் அணுகி விண்ணப்பித்து சேரலாம்.

    மேலும் விபரங்களுக்கு 0413-2600935 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என பல்கலைக்கூட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    • பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
    • இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள புதுவை தொழில்துறை அழைப்பு விடுத்துள்ளது.

    புதுச்சேரி

    இந்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் துறை மூலம் தொழில் பழகுநர் பயிற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.

    புதுவை அரசின் தொழிலாளர் துறை, துணை தொழில் பழகுநர் ஆலோசகர் அலுவலகம் சார்பில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை அரசு ஆண்கள் தொழில்பயிற்சி மையத்தில் முகாம் நடக்கிறது. இதில் மத்திய, மாநில நிறுவனங்கள், தனியார், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஒரே இடத்தில் பங்கேற்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள புதுவை தொழில்துறை அழைப்பு விடுத்துள்ளது.

    • புதுவை ஜிப்மர் மருந்தக துறையின் சார்பில் உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது.
    • மருந்தகத்துறை அதிகாரி ஜெயந்தி வரவேற்றார்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருந்தக துறையின் சார்பில் உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டின் கருப்பொருளான சுகதார அமைப்பை வலுப்படுத்தும் மருந்தாளுநர்கள் என்ற பதாகைகள் ஏந்தி பேரணி, மரக்கன்று நடுதல், மருந்துகள் பயன்பாடு குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் தலைமை வகித்தார். மருந்தகத்துறை அதிகாரி ஜெயந்தி வரவேற்றார்.

    ஜிப்மர் பொறுப்பு இயக்குனர் அப்துல்ஹமீது, மருந்தியல்துறை முதுநிலை பேராசிரியர் ரவீந்திரன், உதவி பொறுப்பு அதிகாரி கேசவன், இணை பேராசிரியர் மிருணாலினி உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் வெங்கடேசுவரன் அறிவியல் உரையாற்றினார்.

    தொடர்ந்து கருத்தரங்கம், 30 ஆண்டுக்கும் மேல் பணிபுரியும் மருந்தாளு நர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை ஜிப்மர் மருந்தாளுநர்கள் சங்க செயலாளர் சம்பத், தலைவர் ராஜகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • 55 மாதமாக சம்பளம் இல்லாமல் பண்ணையில் பணியாற்றி வந்தோம்.
    • பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    வேளாண் அறிவியல் நிலையத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் கவர்னர் தமிழிசையை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில், வேளாண் அறிவியல் மையத்தில் 2009 முதல் 11 ஆண்டு தினக்கூலி ஊழியர்களாக பணிபுரிந்து வந்தோம். 2020 மார்ச் 7-ந் தேதி முன்னறிவிப்பின்றி 156 பேரை பணிநீக்கம் செய்தனர். 55 மாதமாக சம்பளம் இல்லாமல் பண்ணையில் பணியாற்றி வந்தோம்.

    எனவே அரசு கொள்கை முடிவு எடுத்த நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கவும், மீண்டும் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த சந்திப்பின்போது பா.ஜனதா விவசாய அணி தலைவர் புகழேந்தி, முத்தியால்பேட்டை தொகுதி தலைவர் ஹரிதாஸ், ஊழியர்கள் புத்துப்பட்டான், புவியரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • புதுவை மாநில அ.தி.மு.க. 2 ஆண்டுக்கு முன் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது.
    • ஒருங்கிணைந்த புதுவை மாநில அ.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. 2 ஆண்டுக்கு முன் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது.

    தற்போது நிர்வாக வசதியை கருத்தில்கொண்டு புதுவை மாநில அ.தி.மு.க என ஒருங்கிணைப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவி த்துள்ளார். ஒருங்கிணைந்த புதுவை மாநில அ.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ள்ளனர்.

    மாநில செயலாளராக அன்பழகன், அவைத்தலை வராக அன்பானந்தம், இணை செயலாளர்களாக பேராசிரியர் ராமதாஸ், வீரம்மாள், மகாதேவி, துணை செயலாளர்களாக உமா, முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், குணசேகரன், பொருளாளராக ரவி பாண்டுரங்கன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஒருங்கிணைந்த மாநில அ.தி.மு.க நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படவில்லை. காரைக்கால் தொடர்ந்து தனி மாவட்டமாக செயல்படும்.

    ×