search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது பாஜகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடே: முக ஸ்டாலின்
    X

    கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது பாஜகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடே: முக ஸ்டாலின்

    • கெஜ்ரிவால் அவர்கள், சிறைக்குள் இருந்து ஆட்சியை மட்டும் நடத்தவில்லை, இந்தியா கூட்டணியின் எழுச்சிக்கும் தூண்டுதலாக அமைந்து விட்டார்
    • ஆம் ஆத்மி கட்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாகத் துணை நிற்கிறது

    டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அக்கூட்டத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா கலந்து கொண்டார். அங்கு அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வாசித்தார்.

    அக்கடிதத்தில், "இந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் கைதுக்கு எனது கடுமையான கண்டனங்கள்

    பா.ஜ.க அரசு தனது ஏவல் படைகளான சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி எங்களை மிரட்டுகிறார்கள். இதில் மிரண்டு பா.ஜ.க.வில் ஐக்கியம் ஆகிறவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்குகளே திரும்பப் பெறப்படும்.

    ஆனால் பா.ஜ.க.வின் ஆணவத்துக்கு அடங்காதவர்களாக இருந்தால் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இது இந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதைப் போல இருக்கிறது.

    இது போன்ற கைதுகள், 'இந்தியா' கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர பலவீனப்படுத்தவில்லை. அரைக்க அரைக்கச் சந்தனம் மணப்பதைப் போல, தாக்குதல் அதிகமாக அதிகமாகக் கூட்டணியும், கூட்டணித் தலைவர்களும் வலிமை அடைகிறார்கள்.

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரைக் கைது செய்திருப்பது பா.ஜ.க.வின் தோல்வி பயத்தின் வெளிப்பாடே ஆகும்!

    அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், பாஜகவுக்கு எதிராகப் பரப்புரை செய்தால் அவர் கருத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை அறிந்து, அதனைத் தடுக்கும் முயற்சியாகவே அவரைக் கைது செய்துள்ளனர். ஆனால், அவரது பரப்புரை ஏற்படுத்தி இருக்க வேண்டியதை விட, அவரது கைது மூலமாகக் கிடைத்த அரசியல் விழிப்புணர்வு என்பது மிகமிக அதிகம்.

    அருமை நண்பர் கெஜ்ரிவால் அவர்கள், சிறைக்குள் இருந்து ஆட்சியை மட்டும் நடத்தவில்லை, இந்தியா கூட்டணியின் எழுச்சிக்கும் தூண்டுதலாக அமைந்து விட்டார்.

    இந்தச் சூழலில் ஆம் ஆத்மி கட்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாகத் துணை நிற்கிறது.

    'இந்தியா' கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். மக்கள் அளிக்கும் வாக்கு மட்டும்தான் பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு முடிவுரை எழுத முடியும்.

    நான் தினந்தோறும் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து வருகிறேன். பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டார்கள்.

    பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்" என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×