search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது: குமாரசாமி பேட்டி
    X

    பா.ஜனதாவின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது: குமாரசாமி பேட்டி

    பா.ஜனதாவின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது என்றும், கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Kumaraswamy #BJP
    ஹாசன் :

    ஹாசனில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவிலில் நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. இந்த கோவிலில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த குமாரசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    5 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த இடைத்தேர்தல் அடுத்த ஆண்டு (2019) நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி தொடரும். ராமநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விலகியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவர் எங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை. அவர் முன்பு இருந்த கட்சிக்கே மீண்டும் வந்துள்ளார். அவர் விலகியதற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    கூட்டணி ஆட்சி மீது பா.ஜனதாவினர் தேவையில்லாத குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். ராமநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விலகியதற்கு பா.ஜனதாவினரே காரணம். தங்கள் மீதுள்ள தவறை மறைக்க அவர்கள், மற்ற கட்சிகள் மீது குற்றம்சாட்டுகிறார்கள். பா.ஜனதாவினர் கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள். இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி இருக்காது என்று கூறி வருகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. ஆபரேஷன் தாமரை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தாலும், அதுவும் தோல்வி அடையும். பா.ஜனதாவின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும்.



    பிரதமர் மோடிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து கொண்டே செல்வதாகவும், அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் மத்தியில் பா.ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. கருத்துக்கணிப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது. கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் பா.ஜனதா ஆதரவாளர்களாக இருக்கக்கூடும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறாது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தான் பிரதமர் வேட்பாளர் இல்லை என்று கூறியுள்ளார். இது அவர் நாட்டு மக்களை நேசிப்பதை காட்டுகிறது. கர்நாடகத்தில் ஆன்லைன் மதுபானம் விற்பனைக்கு முந்தைய ஆட்சியில் முடிவு எடுக்கப்பட்டது. எக்காரணம் கொண்டும் ஆன்லைன் மதுபானம் விற்பனைக்கு அனுமதிக்க மாட்டேன். ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை செய்ய தடை விதிக்கப்படும்.

    ஹாசனாம்பா கோவிலில் பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் எடுத்த முடிவு தவறானது. பத்திரிகையாளர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #BJP
    Next Story
    ×