search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவுக்கு ‘ராமர்’ காங்கிரசுக்கு ‘சிவன்’ - கடவுள்களை கையில் எடுக்கும் கட்சிகள்
    X

    பா.ஜனதாவுக்கு ‘ராமர்’ காங்கிரசுக்கு ‘சிவன்’ - கடவுள்களை கையில் எடுக்கும் கட்சிகள்

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கடவுள்களின் பெயரால் மக்களின் வாக்குகளை கணிசமாக பெறும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளனர். #RahulGandhi #Akileshyadav #BJP
    லக்னோ:

    வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க ஆளும் பா.ஜனதா கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் தயாராகி வருகின்றன.

    இதில் வாக்காளர்களை கவர பலவித உத்திகளை கையாள கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. மக்கள் பிரச்சினைகள் நலத்திட்டங்களை சொல்லி வாக்கு கேட்பது ஒருபுறம் இருக்க கடவுள்கள் பெயரால் மக்களை கவரும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

    உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பா.ஜனதா ஏற்கனவே ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று கூறியுள்ளது. இதன் மூலம் இந்துக்கள் ஓட்டுகளை பா.ஜனதா தன் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறது. இதே போல் காங்கிரசும் சமாஜ்வாடி கட்சியும் இந்துக் கடவுள்கள் பக்கம் கவனம் சொலுத்த தொடங்கியுள்ளன.

    ராகுல் காந்தி குஜராத், கர்நாடக சட்டசபை தேர்தல்களின் போது இந்துக் கோவில்களுக்கு சென்ற வழிபட்டார் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன் இந்துக்கள் கவனத்தையும் ஈர்த்தது. கர்நாடக தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. அப்போது எந்த ஆபத்தும் இல்லாமல் திரும்பியதற்காக கைலாஷ் யாத்திரை செல்வேன் என்று ராகுல்காந்தி வேண்டிக் கொண்டார்.

    அதன்படி ராகுல்காந்தி சமீபத்தில் 12 நாள் கைலாஷ் யாத்திரை சென்று திரும்பினார். கைலாஷ் யாத்திரையின் போது மானசரோவரில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பிறகு ராகுல் காந்தி முதல் முறையாக தனது அமேதி தொகுதிக்கு சென்றார்.


    அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் சிவபக்தர்கள் போல் உடை அணிந்து வரவேற்றனர். பர்சத்கஞ்ச் பகுதிக்கு சென்ற போது அவருக்கு சிலர் சிவன் படத்தை பரிசளித்தனர். ராகுல்காந்தியும் நெற்றியில் குங்குமம் இட்டு சிவபக்தரைப் போலவே இருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் மூலம் ராகுல்காந்தியும், காங்கிரசும் இந்துக்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

    இந்த கட்சிகளுக்கு போட்டியாக சமாஜ்வாடி கட்சியும் கடவுள் பக்கம் கவனம் செலுத்த தொடங்கியது. இந்த கட்சி விஷ்ணு கோவில் கட்டுவோம் என்று அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவில் போல் உத்தரப்பிரதேசத்தில் பிரமாண்டமான விஷ்ணு கோவில் கட்டுவோம் என்று உறுதி அளித்துள்ளார். கட்சிகளின் இந்த நடவடிக்கைகள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 80 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் பா.ஜனதா 71 இடங்களை கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சியான அப்னா தள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் பா.ஜனதாவுக்கு பாராளுமன்றத்தில் தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைத்தது.

    சமாஜ்வாடிகட்சி 5 தொகுதிகளையும், காங்கிரஸ் 2 தொகுதிகளையும் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. #RahulGandhi #Akileshyadav #BJP #Samajwadi
    Next Story
    ×