என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் எடியூரப்பா ஊழலற்ற ஆட்சியை கொடுப்பார் - அமித்ஷா பேச்சு
    X

    கர்நாடகாவில் எடியூரப்பா ஊழலற்ற ஆட்சியை கொடுப்பார் - அமித்ஷா பேச்சு

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் எடியூரப்பா ஊழலற்ற ஆட்சியை கொடுப்பார் என்று பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பேசியுள்ளார்.
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலத்தில் அடுத்து ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில பா.ஜனதா சார்பில் ‘‘மாற்றத்திற்கான பயணம்’’ என்ற பிரசார பயணத்தை பெங்களூருவில் அமித்ஷா தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசுகையில் சித்தராமையா அரசு ஊழலில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளதாக குற்றம் சாட்டினார்.
     
    நாட்டிலேயே சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தான் ஊழல் மிகுந்த ஆட்சி. சித்தராமையா ஆட்சி ஊழலில் முதல் இடத்தில் உள்ளது. இது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. சித்தராமையா அரசு ஊழலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து உள்ளது.

    மத்தியில் பிரதமர் மோடி பாரபட்சமற்ற, ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறார். அதே போல் கர்நாடகத்தில் எடியூரப்பாவை முதல்–மந்திரி பதவியில் அமர்த்தினால், அவரும் நல்லாட்சியை வழங்குவார். பெங்களூருவில் இரும்பு மேம்பாலம் அமைத்து அதில் ஊழல் செய்ய சித்தராமையா அரசு திட்டமிட்டது. இதற்கு எதிராக பா.ஜனதா போராட்டத்தை நடத்தியதால், அந்த திட்டத்தை இந்த அரசு கைவிட்டது.

    ஊழலை தடுக்கும் பணியில் இங்குள்ள லோக் அயுக்தா அமைப்பு நன்றாக செயல்பட்டு வந்தது. அந்த அமைப்பின் அதிகாரத்தை பறித்து, ஊழல் தடுப்பு படையை சித்தராமையா உருவாக்கி உள்ளார். நாட்டில் உத்தரபிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், அரியானா, மராட்டியம் உள்பட பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் பாரபட்சமற்ற, ஊழலற்ற ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது. முத்ரா திட்டத்திற்கு ரூ.39 ஆயிரம் கோடி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.960 கோடி, அம்ருத் திட்டத்திற்கு ரூ.4,953 கோடியை கர்நாடகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

    இந்த நிதி மக்களுக்கு முறையாக சென்று அடையவில்லை. இதில் சித்தராமையா அரசு ஊழல் செய்துள்ளது என கடுமையாக விமர்சனம் செய்தார் அமித்ஷா. 
    Next Story
    ×