என் மலர்tooltip icon

    கதம்பம்

    • பின்னாட்களில், திருவிழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் விவசாயிகள் கூடுவார்கள்.
    • ஒவ்வொரு வீட்டு பயிர் முளைகளின் வளர்ச்சித்திறனை பரிசோதனை செய்தார்கள்.

    நம்மூர் அம்மன் கோவில்களில் ஆடி மாதம் என்றால் திருவிழாக்களில் பெண்கள் முளைப்பாரி சுமந்து வலம் வருவதை பார்த்திருப்போம். பெரும்பாலும், நவதானிய விதைகளை கொண்டு தான் முளைப்பாரி அமைப்பார்கள்.

    கன்னிப்பெண்கள் விரதமிருந்து முளைப்பாரி தூக்கினால் நல்ல கணவன் கிடைக்கும், குடும்பத்தில் செல்வம் பெருகும், அம்மன் அருளால் கொடிய நோய்கள் நீங்கும் என்று பலதரப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் ஊர்புற வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    இந்த முளைப்பாரி எடுக்கும் சடங்கிற்கு உண்மையான காரணமே வேறு. நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் ஒரு காரணத்தோடு தான் செயல்படுத்தியிருக்கிறார்கள்.

    விவசாயத்திற்கு பயிரிடும் விதைகளை நேரடியாக விளை நிலத்தில் விதைக்காமல் தனியாக வீட்டிலேயே ஒரு கூடையில் மட்கிய குப்பைகளோயிட்டு இளம்வெயில் படும்படி வைப்பார்கள். பத்து நாட்கள் தண்ணீர் தெளித்து விதையின் வளர்ச்சியை பார்த்தனர்.

    இவ்வாறு முன்கூட்டியே விதைகளின் முளைப்புத்திறன், வளர்ச்சித்திறன் ஆகியவற்றை பரிசோதனை செய்து பிறகு நிலத்தில் விதைக்கும் வழக்கம் கொண்டார்கள். அதனால், ஏக்கர் கணக்கில் விதைத்து நஷ்டமடையாமல் காத்துக்கொள்ள முடிந்தது.

    இதுவே பின்னாட்களில், திருவிழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் விவசாயிகள் கூடுவார்கள். அதில் ஒவ்வொரு வீட்டு பயிர் முளைகளின் வளர்ச்சித்திறனை பரிசோதனை செய்தார்கள். அப்படி செய்வதன் மூலம் அந்த ஆண்டின் மகசூலை தோராயமாக கணித்தார்கள்.

    இப்படி ஒரு நல்ல நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது தான் இந்த முளைப்பாரி. இன்று அது முழுக்க முழுக்க வழிபாடு சம்பந்தபட்டதாகி விட்டது.

    • ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்கள் தொகை வித்தியாசப்படுவதால் நம்மால் நிகர நூலக எண்ணிக்கையை எடுத்துக் கொண்டு ஒப்பிட முடியாது.
    • மக்கள்தொகையை வைத்துக் கணக்கிட்டால் நான்காயிரம் பேருக்கு ஒரு நூலகம் என்ற கணக்கில் கேரளாதான் முதலிடத்தில் வருகிறது.

    இந்தியாவில் எண்ணிக்கை அளவில் அதிக பொது நூலகங்கள் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. டாப்-5 மாநிலங்களின் மொத்த நூலக எண்ணிக்கை வருமாறு...

    * மகாராஷ்டிரா - 12,191

    * கேரளா - 8,415

    * கர்நாடகா - 6,798

    * தமிழ்நாடு - 4,622

    * மேற்கு வங்கம் - 5,251

    வழக்கம் போல இந்தி பெல்ட் மாநிலங்கள் இந்தப் பட்டியலில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து இருக்கின்றன.

    * உத்தரப் பிரதேசம் - 573

    * பீகார் - 192

    * மத்தியப் பிரதேசம் - 42

    இதில் இன்னொன்று; ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்கள் தொகை வித்தியாசப்படுவதால் நம்மால் நிகர நூலக எண்ணிக்கையை எடுத்துக் கொண்டு ஒப்பிட முடியாது. எனவே மக்கள்தொகையை வைத்துக் கணக்கிட்டால் நான்காயிரம் பேருக்கு ஒரு நூலகம் என்ற கணக்கில் கேரளாதான் முதலிடத்தில் வருகிறது:

    1. கேரளா - 4,112

    2. மகாராஷ்டிரா - 9,218

    3. கர்நாடகா - 9,429

    4. தமிழ்நாடு - 16,547

    5. குஜராத் - 18,100

    - ஸ்ரீதர் சுப்ரமணியம்

    • தெனாலி ராமன் வீட்டில் என்ன பிரச்சனை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..
    • சமயோசித புத்தி சம்சாரத்திடம் செல்லாது.

    தெனாலி ராமன் இரவில் படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...

    திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...

    தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது...

    மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..

    சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்..

    புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..

    "என்னது.. எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா..'' -கத்துகிறாள் மனைவி.

    "எதிர்த்தா பேசுகிறாய்..'' என்று அவள் மேல் துப்புகிறான்..

    "கேட்பதுற்கு ஆளில்லையா..'' என்று அலற துவங்குகிறாள் மனைவி..

    தெனாலி ராமன் வீட்டில் என்ன பிரச்சனை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..

    "என்ன தெனாலிராமா இது.." என்று கேட்கிறார்கள்..

    "பாருங்கள்.. எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்புகிறேன்.. ஒன்றுமே சொல்லவில்லை.. ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள்.." என்கிறான் தெனாலிராமன்.

    திருடன் பிடிபடுகிறான்..

    சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை..

    திருடன் பிடிபட்டது இருக்கட்டும்..

    அவர்கள் போனதுக்கு அப்புறம் தெனாலிராமன் அலறத் துவங்குகிறான்..

    யாரும் கண்டுக்கல...

    எனவே சமயோசித புத்தி சம்சாரத்திடம் செல்லாது.

    -ஜோசப் அந்தோனிராஜ்

    • ராஜகுமாரியாய் தான் பிறந்து வளர்ந்த வீட்டில் தனக்கு இப்படி பிச்சைக்காரியை விட கேவலமான நிலை வந்து விட்டதே என மனம் குமுறி அழுகிறாள் நல்ல தங்காள்.
    • குழந்தைகளின் பசியை போக்க வழி தெரியாமல் தவித்த நல்ல தங்காளின் கண்ணில் அருகில் இருந்த பாழடைந்த கிணறு தென்படுகின்றது.

    எத்தனையோ கதைகளை கேட்டாலும் பாட்டி சொன்னதில் இன்றும் மறக்காமல் இருப்பது என்னவோ அந்த நல்ல தங்காள் கதை தான்.

    அர்ஜூனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர்.

    இந்த தம்பதியினருக்கு நல்ல தம்பி, நல்ல தங்காள் என இரண்டு மக்கள் பிறந்தனர். தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர்.

    தந்தை மறைவுக்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற நல்லதம்பி தன் தங்கை நல்லதங்காளை நன்முறையில் வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

    இளம் வயதிலேயே திருமணம் ஆன நல்ல தங்காள் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் என ஏழு மக்களை பெற்றாள்.

    நல்ல தங்காளின் புகுந்த வீட்டு இடமான மானாமதுரையில் மழை பெய்யாததால் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழை பொழியவில்லை.

    உண்ண உணவு இன்றி மக்கள் பலரும் மாண்டனர். கிட்டதட்ட நல்ல தங்காள் குடும்பமும் பட்டினியால் சாகும் நிலைக்கு ஆளானது.

    நல்ல தங்காள் தன் அண்ணன் தனக்கு ஆசை ஆசையாய் தந்த சீதன பொருட்களை ஒவ்வொன்றாக விற்றாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தது. சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் போனது.

    மனம் உடைந்த நல்ல தங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தான் பிறந்த அர்ஜூனாபுரம் கிராமத்துக்கு கால்நடையாக வருகிறாள்.

    நல்லதங்காள் தன் பிறந்த வீட்டுக்கு வரும் நேரத்தில் அண்ணன் ஆன நல்லதம்பி வேட்டையாட காட்டுக்கு சென்று இருந்தார்.

    நல்ல தம்பியின் மனைவி மூளியலங்காரி. நல்லதங்காளையும், அவளது பிள்ளைகளையும் வா! என்று கூட அழைக்காமல் அலட்சிய படுத்துகிறாள் மூளியலங்காரி.

    ராஜகுமாரியாய் தான் பிறந்து வளர்ந்த வீட்டில் தனக்கு இப்படி பிச்சைக்காரியை விட கேவலமான நிலை வந்து விட்டதே என மனம் குமுறி அழுகிறாள் நல்ல தங்காள்.

    பசியால் அழுத தன் பிள்ளைகளின் முகத்தை பார்க்க சகிக்காது சுய கவுரவத்தை விட்டு மாட்டுக்கு தீவனமாக வைக்கும் தவிட்டையாவது தந்தால் போதும்.. அதை தின்றாவது பசியாறுவோம் என அண்ணனின் மனைவியிடம் கெஞ்சுகிறாள் நல்ல தங்காள்.

    ஏழு வண்டி நிறைய சீதனம் வாங்கிட்டு போயும் இன்னும் அண்ணனை உறிஞ்சு எடுக்க புள்ளையளை கூட்டிட்டு இங்க வந்திருக்கா..

    சாப்பாட்டுக்கு வழியில்லைன்னா எங்கேயாவது போய் சாவ வேண்டியது தானே.. எத்தன பாங்கெணறு கெடக்கு.. என மூளி அலங்காரி வார்த்தை நெருப்புகளை அள்ளி கொட்டி வாயில் கதவை அடைத்து வீட்டுக்குள் சென்று விடுகிறாள்.

    மனம் உடைந்த நல்லதங்காள் குழந்தைகளுடன் அண்ணன் வீட்டை விட்டு வந்த வழியே திரும்புகிறாள்.

    "எந்த உதவியும் இல்லாமல் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டேனே... " என்று பலவாறு யோசித்து அழுகையோடு வழி நடக்கிறாள் நல்ல தங்காள்.

    பசி தாங்க முடியாமல் குழந்தைகள் 'அம்மா பசிக்குது... ஏதாவது சாப்பிட வாங்கி கொடும்மா...' என்று அழ ஆரம்பித்து விட்டனர்.

    குழந்தைகளின் பசியை போக்க வழி தெரியாமல் தவித்த நல்ல தங்காளின் கண்ணில் அருகில் இருந்த பாழடைந்த கிணறு தென்படுகின்றது.

    குழந்தைகளை அழைத்து கொண்டு பாழடைந்த கிணற்றின் அருகில் செல்கிறாள் நல்லதங்காள். மனதை கல்லாக்கி கொண்டு பசியால் துடித்து அழுத குழந்தைகளை ஒவ்வொன்றாக கிணற்றுக்குள் தூக்கி போட்டாள். தானும் அதே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.

    மனைவியின் உதாசீனத்தால் தனது தங்கை, பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த நல்லதம்பி துடிதுடித்தான். அந்த கவலையில் அவனும் இறந்து போனான்.

    அண்ணன் - தங்கை பாசம் என்றால் இதுவல்லவா? என்று மெச்சிய சிவனும், பார்வதியும் தோன்றினர்.

    தற்கொலை செய்த நல்லதங்காள், அவளது பிள்ளைகளை உயிர் பெறச் செய்ததோடு, நல்ல தம்பியையும் உயிர்ப்பித்தனர்.

    அப்போது நல்ல தங்காளும், நல்லதம்பியும் "மாண்டவர் மீண்டால் வையகம் தாங்காது. சாவிலாவது சகோதர சகோதரியாகிய நாங்கள் சேர்ந்தோமே.. அதுவே போதும். எனவே நாங்கள் இறந்ததாகவே கருதி அருள் புரிய வேண்டும்" என கூறினார்கள். சிவனும் அவ்வாறே அவர்களின் வேண்டுகோளை ஏற்று கொண்டார்.

    இரந்து வாழ்வதை விட இறந்து விடுவதே மேல் என உயிரை விட்ட நல்லதங்காளை இன்றளவும் ஸ்ரீவில்லிபுத்தூர் அர்ஜூனாபுரம் பகுதி மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர்.

    -சுரேஷ்வரன்

    • மராட்டிய மன்னர் சிவாஜி, மன்னராக பதவியேற்று 300-வது ஆண்டு விழாவை மராட்டிய அரசு கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தது.
    • ஏவி.மெய்யப்ப செட்டியார் தன் செலவில் பிரமாண்ட செட் போட்டுக் கொடுத்தார்.

    சிவாஜி என்ற பெயர் வி.சி. கணேசன் என்ற இயற்பெயருடன் இணைய காரணமான இருந்தது அண்ணா எழுதிய 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' என்ற நாடகம்!

    அந்த நாடகத்தில் நடித்த சிவாஜி கணேசனுக்கு, மராட்டிய வீரர் சிவாஜி வாழ்க்கையை வீரபாண்டிய கட்டபொம்மன் படம் போன்று சினிமாவாக எடுத்து அதில் நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. ஆனால் சில படங்களுக்குள் வந்த நாடகத்தில்தான் அவர் சிவாஜியாக நடித்தாரே தவிர முழுநீள திரைப்படத்தில் நடிக்கவில்லை. கடைசி வரை அவரது ஆசை நிறைவேறவில்லை.

    இந்த நிலையில் மராட்டிய மன்னர் சிவாஜி, மன்னராக பதவியேற்று 300-வது ஆண்டு விழாவை மராட்டிய அரசு கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தது. இதையொட்டி மாவீரன் சிவாஜி வாழ்க்கையை ஒரு டெலிபிலிமாக தயாரித்து அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடிவு செய்தது.

    சிவாஜியாக நடிக்க இந்தியா முழுவதும் நடிகர்களை தேடியது. யாருமே பொருந்தவில்லை. கடைசியாக சிவாஜி கணேசன் பற்றி கேள்விப்பட்டு அவரை நடித்து தர சொன்னது.

    இதை ஏற்றுக்கொண்ட சிவாஜி அந்த டெலிபிலிமை தன் சொந்த செலவில் எடுத்து தருகிறேன் என்று கூறி, சிவாஜி பிலிம்ஸ் சார்பில் அதனை தயாரித்து, நடித்தார். தஞ்சைவாணன் இதற்கான திரைக்கதை வசனத்தை எழுதினார். ஏவி.மெய்யப்ப செட்டியார் தன் செலவில் பிரமாண்ட செட் போட்டுக் கொடுத்தார்.

    இந்த டெலி பிலிமின் மராட்டிய பதிப்பை பாபா சாகில் புரந்தரே எழுதினார். 1974ம் ஆண்டு ஜூலை 21ந் தேதி இந்த டெலிபிலிம் மும்பை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 1975ம் அண்டு சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டதும் இங்கு அது ஒளிபரப்பப்பட்டது.

    - சுப்பிரமணி

    • பி12 பொருத்தவரை மாமிசம், மீன், முழு முட்டை, கோழி போன்றவற்றில் மட்டுமே தேவையான அளவு நிரம்பி உள்ளது.
    • மரக்கறி உணவுகள் வழி பி12 பெரிதாகக் கிடைப்பதில்லை.

    ஹீமோகுளோபின் ஆண்களுக்கு நூறு மில்லி ரத்தத்தில் 14-16 மில்லிகிராமும், பெண்களுக்கு 12-14 மில்லிகிராமும் இருந்தால் அது சரியான அளவாகும்.

    ஹீமோகுளோபின் உருவாக கட்டாயம் இரும்பு சத்து தேவை. சிவப்பு அணுக்கள் முதற்கொண்டு ரத்தத்தின் இதர அணுக்கள் உருவாக விட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் கட்டாயத் தேவை.

    நமது உடலுக்கு மேற்சொன்ன இரும்புச்சத்து, பி12 விட்டமின், ஃபோலிக் அமிலம் ஆகிய மூன்றையும் உணவு மூலம் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    உடல் சோர்வு, உடல் வலி, தலைசுற்றல், புத்தி மங்குதல், படிப்பில் நாட்டம் குறைதல், அடிக்கடி தலைவலி ஏற்படுதல், நாக்கு வெளிரிப்போய் காணப்படுவது போன்றவை ரத்த சோகையின் அறிகுறிகள் ஆகும்.

    இரும்புச்சத்து - கால்நடைகளின் கல்லீரல், சுவரொட்டி உள்ளிட்ட உள்ளுறுப்புகளிலும் மாமிசங்களிலும் அதிகமாக உள்ளது.

    மாமிசம் உண்ணாதவர்களுக்கு சுண்டக்காய், கீரைகள், நொதித்தலுக்குள்ளான பழைய கஞ்சியில் இரும்பு உள்ளது.

    பி12 பொருத்தவரை மாமிசம், மீன், முழு முட்டை, கோழி போன்றவற்றில் மட்டுமே தேவையான அளவு நிரம்பி உள்ளது.

    மரக்கறி உணவுகள் வழி பி12 பெரிதாகக் கிடைப்பதில்லை. மாறாகக் கிடைத்தாலும் அது நம் உடலால் மிகக்குறைவாகவே கிரகிக்கப்படுகிறது.

    ஃபோலிக் அமிலம் - கீரைகள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், கடலை, பழங்கள், மாமிசம், முட்டை, கல்லீரல், மீன் போன்றவற்றில் நிறைந்துள்ளது.

    மரக்கறி மட்டும் உண்ணும் உணவாளர்களுக்கும் மேற்சொன்ன உணவுகளை மிகக் குறைவாக உண்பவர்களுக்கும் இரும்புச்சத்து மற்றும் பி12, பி9 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    இவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது மருத்துவரின் ஆலோசனைபேரில் உணவோடு சேர்த்து ஊட்டச்சத்து நிரம்பிய மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.

    ரத்த சோகையுடன் தொடர்ந்து இருப்பது இதயத்துக்கும் இன்னபிற முக்கியமான உள்ளுறுப்புகளுக்கும் பாதகம் விளைவிக்கும். நமது அன்றாட வாழ்வின் தரத்தையும் நமது நுட்பத்திறனையும் பாதிக்கும்.

    எனவே ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு பெற்று எதனால் ரத்த சோகை ஏற்பட்டது என்பதை உணர்ந்து அதற்கேற்றாற் போல உணவையும் மருந்தையும் உட்கொண்டு சரிசெய்ய வேண்டும்.

    - டாக்டர். ஃபரூக் அப்துல்லா

    • வாரம் இருமுறை வாழைப்பூவை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
    • புண்களை ஆற்ற வாழைப்பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும்.

    இயற்கை நமக்கு தந்த மிகப்பெரும் கொடைகளில் வாழைப்பூவும் ஒன்று. வாரம் இருமுறை வாழைப்பூவை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

    ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

    இன்றைய உணவு முறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப்பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானம் அதிகரிக்கும்.

    மூல நோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம்.

    மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் தீரும்.

    - மரிய பெல்சின்

    • எம் கருப்புத் தலைவனோ... எங்களுக்கு பாதுகாப்பான... கூரையைத் தந்தான்...
    • பெருந்தலைவனே.. கருப்பாயிருந்தாலும் நீ விளக்கு... நீ வெளிச்சம்...

    எங்கள் பூட்டன் பாட்டன்களின் சரித்திரம்

    புராதன அழுக்கைக் கொண்டது

    சிமினி விளக்கை ஏற்றியும்

    லாந்தரைக் கொளுத்தியும் அகலாதது

    அவர்களைச் சூழ்ந்த இருள்

    புழுதியும் சேறும்தான்

    அவர்களுடைய பகல்

    அத்தைகளைக் கட்டிக்கொடுக்க

    வாங்கிய ஆயிரம் ரூபாய்க்கு

    அவர்களது இடக்கை பெருவிரல்

    வண்டிப்பசை பூசியது

    தெருவுக்கு வந்த வெளிச்சத்திலும்

    அவர்கள் கண்கள் மூடியேக் கிடந்தது

    போய்ச் சேர பேருந்தின்

    வண்ணங்களை ஒடுக்குகளை

    அடையாளம் கண்டவர்கள்

    பாட்டிகள் அத்தைகளின் கதையோ

    இன்னும் மோசம்

    விறகுப் புகையில் இருமி

    பிள்ளைப் பேற்றில்

    செத்துப் போனார்கள்

    குக்கிராமங்களில்

    விலங்குகளைப்போல்

    வாழ்ந்த

    இவர்களைச் சிந்தித்தான்

    ஒரு தலைவன்

    அவனும் படிக்காதவன்

    ஏழை பாழைகளின்..

    பஞ்சைப் பராரிகளின்..

    ஏக்கங்களை..

    பெருமூச்சை..

    கண்ணீரை..

    குருதியைப்

    படித்த மா மேதை

    மண்சுவர் கொண்டு

    கூரை வேய்ந்து

    ஒரு கோவில் செய்தான்

    அதில் ஒரு தண்டவாளத்

    துண்டை மாட்டினான்

    வயிற்றுத் தீயை

    இரண்டு உருண்டை

    சோற்றுப் பருக்கைகளால்

    அணைத்து வைத்தான்

    ஒவ்வொரு குடிசையிலும்

    ஔவைப் பாட்டி

    வலதுகாலெடுத்து வைத்தாள்

    வள்ளுவர் வந்தார்

    கம்பர் வந்தார்

    ஷேக்ஸ்பியர் வந்தார்

    அல்ஜிப்ரா வந்தது

    நியூட்டன் வந்தார்

    குடிசையிலிருந்து

    அப்பா ஆசிரியராய்

    வெளிவந்தார்

    அக்காக்களுக்கு

    டீச்சர் ட்ரைனிங் கனவு

    மருமகள்களுக்கு

    மருத்துவக் கனவு

    எங்களை தெய்வங்கள்கூட

    சற்று தூரத்தில்

    இடுப்பில் துண்டைக் கட்டி

    நிற்க வைத்தது

    எம் கருப்புத் தலைவனோ

    எங்களுக்கு பாதுகாப்பான

    கூரையைத் தந்தான்

    ஆண்களோடு பெண்கள்

    சமமாக அமர

    நாற்காலி தந்தான்

    சாதியைக் காட்டி

    பிடுங்கிக் கொண்ட

    பாடப் புத்தகங்களை

    அவனே மீட்டுக் கொடுத்தான்

    வேறெப்படி சொல்லமுடியும்

    பெருந்தலைவனே..

    கருப்பாயிருந்தாலும்

    நீ விளக்கு

    நீ வெளிச்சம்

    சுயமரியாதை கூடிய

    இத்தலைமுறை

    வாழ்வு நீ தந்தது!

    -கவிஞர் கரிகாலன்

    • வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம்.
    • வீட்டை துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.

    * வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது.

    * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.

    * வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.

    * வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம் அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.

    * குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வீட்டில் வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் அமர்ந்து செவ்வாய், புதன், கிழக்கே பார்த்து அமர்ந்தும் மற்ற நாட்களில் வடக்கே பார்த்து அமர்ந்தும் படித்தால் படித்தவுடன் மனதில் பதியும் வாய்ப்பு மிக அதிகம்.

    * 15 வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

    - ஜோதிடர் சுப்பிரமணியன்

    • வழக்கமாக தேவர் பிலிம்ஸ் தயாரித்த எல்லாப் படங்களுக்கும், கே.வி. மகாதேவன்தான் இசை அமைத்து வந்தார்.
    • மொத்தப் பணத்தையும் எம்.எஸ்.வி.யிடம் நீட்டி, தனது அடுத்த படத்திற்கு இசை அமைக்கும்படி கூறினார் தேவர்.

    ரொம்பவே என்னை சிந்திக்க வைத்தன அந்த வரிகள்!

    'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..."

    'நம் நாடு' படப்பாடல், டி.எம்.எஸ். குரலில் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது.

    பாடலின் கடைசி சரணத்தில்,

    "கிளி போல பேசு

    இளங்குயில் போல பாடு

    மலர் போல சிரித்து

    நீ குறள் போல வாழு..."

    ஒரு கணம் சிந்தித்தேன்.

    குறள் போல வாழ்வது சாத்தியமா?

    ஏன் முடியாது?

    இந்தப் பாடலுக்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம், என் நினைவுக்கு வந்தது. இதோ, அது பற்றி சொல்கிறார் கதை- வசனகர்த்தா ஆரூர்தாஸ் :

    "வழக்கமாக தேவர் பிலிம்ஸ் தயாரித்த எல்லாப் படங்களுக்கும், கே.வி. மகாதேவன்தான் இசை அமைத்து வந்தார். 'வேட்டைக்காரன்' பட சமயத்தில், இதில் ஒரு மாற்றம் வேண்டும் என்று ஒரு சில விநியோகஸ்தர்கள் விரும்பியதன் காரணமாக, தேவரண்ணன் (சாண்டோ சின்னப்பாதேவர்) விஸ்வநாதன் வீட்டிற்குச் சென்றார்.

    மொத்தப் பணத்தையும் எம்.எஸ்.வி.யிடம் நீட்டி, தனது அடுத்த படத்திற்கு இசை அமைக்கும்படி கூறினார் தேவர்.

    ஒப்புக்கொள்ளலாமா வேண்டாமா என மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில், 'விசு... கொஞ்சம் உள்ளே வா...' என்று, வீட்டுக்குள் இருந்து அவரின் தாயார் அழைக்கும் குரல்.

    உள்ளே போனார் எம்.எஸ்.வி...

    "பளார்" என்று தன் மகனின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்ட அவரது தாயார்,

    "நன்றி கெட்டவனே! ஒரு காலத்துல நீ வேலை இல்லாம கஷ்டப்பட்டப்போ, அய்யர்கிட்ட போய் (கே.வி. மகாதேவனிடம்) உதவி கேட்டப்போ, உனக்குப் போட்டுக்க சட்டை கொடுத்து, ரெயில் செலவுக்குப் பணமும் கொடுத்து உன்னைக் கோயம்புத்தூருக்கு அனுப்பினாரே, அதை மறந்திட்டியா?

    அந்தப் புண்ணியவான் தொழில் பண்ற இடத்துக்கு நீ போட்டியா போகலாமா?'' என்று கோபத்துடன் கூற..,

    அந்தத் தாயார், இந்த வயதில் தன் மகனைக் கன்னத்தில் அறைந்ததைப் பார்த்தும், கூறியதைக் கேட்டும் கதிகலங்கிப் போன தேவரண்ணன், தன் அலுவலகத்துக்கு வந்து இதைக் கூறி, 'இப்படி ஒரு தாயும் பிள்ளையுமா?' என்று ஆச்சரியம் அடைந்தார்..!"

    ஆரூர்தாஸ் சொன்னதை படித்தபோது நானும் கூட ஆச்சரியம் அடைந்தேன்.

    "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

    செய்ந்நன்றி கொன்ற மகற்கு."

    திருக்குறள்களை நாம் வாசிக்கிறோம்.

    சிலர் வாழ்ந்து காட்டி விட்டு சென்றிருக்கிறார்கள்.

    -ஜான்துரை ஆசிர் செல்லையா

    • ஒரே மாதத்தில் ஒரு பௌர்ணமியோ ஒரு அமாவாசையோ மட்டுமே வர வேண்டும். இதுவே நியதியாகும்.
    • மாதத்தின் துவக்கத்தில் வரும் அமாவாசையோ பெளர்ணமியோ அதிக திதி எனப்படும்.

    இவ்வாண்டு ஆடி அமாவாசையானது ஆடி மாதம் 1ம் தேதியிலும் 31-ஆம் தேதியிலும் வருகின்றது. பொதுவாக ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசையோ பௌர்ணமியோ வந்தால் அது மலமாதம் எனப்படுகின்றது. பொதுவாக மலமாதத்தில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட்டு வந்துள்ளது. மலம் என்றால் அழுக்கு, கழிவு என பொருள்படும். ஒதுக்கப்பட வேண்டியது எனவும் தவறானது எனவும் கூட பொருள் படும்.

    அதாவது ஒரே மாதத்தில் ஒரு பௌர்ணமியோ ஒரு அமாவாசையோ மட்டுமே வர வேண்டும். இதுவே நியதியாகும். மாறாக இரு முறை வந்தால் அது மலமாதம் எனப்படுகின்றது.

    மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசையோ இரண்டு பௌர்ணமியோ நிகழக்கூடிய வாய்ப்பு உண்டு. தமிழ் மாதத்தில் 31 அல்லது 32 நாட்கள் வரக்கூடிய மாதத்தில் மட்டுமே இவ்வாறு நிகழும் வாய்ப்பு உண்டு.

    மாதத்தின் துவக்கத்தில் வரும் அமாவாசையோ பெளர்ணமியோ அதிக திதி எனப்படும். அதாவது சந்திரன் கணக்குப்படி இது அமாவாசையோ பௌர்ணமியோ ஆகும். ஆனால் சூரியனின் சஞ்சாரத்தின் கணக்குப்படி அதாவது தமிழ் மாதப்படி அது அமாவாசையா பௌர்ணமியோ ஆகாது.

    தெளிவாக சொல்ல வேண்டுமானால் இவ்வாண்டு ஆடி மாதத்தை எடுத்துக் கொண்டோமேயானால் சூரியன் கடக ராசியில் பிற்பகல் 12.40 மணியளவில் தான் நுழைகின்றார். அதாவது ஆடி மாதம் பிற்பகல் தான் உதயமாகிறது. ஆனால் அமாவாசையோ முதல் நாள் இரவே வந்து விடுகின்றது. அதன் காரணமாகவே இது அதிக திதி எனப்படுகின்றது இது பஞ்சாங்கத்தில் சாந்திரமான அமாவாசை திதி என்றும் ஸெளரமான அதிக திதி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

    அதாவது சந்திரனின் கணக்குப்படி அமாவாசை திதி என்றும் சூரியனின் கணக்குப்படி பார்த்தால் இது அதிக திதி என்றும் பொருள் படும். ஏனென்றால் 29.5 நாட்களுக்கு ஒரு முறை அமாவாசை திதி நிகழும் என்பது நியதி. இது அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு மட்டும்தான் பொருந்துமா என்றால் அப்படி இல்லை, எல்லா திதிகளுக்கும் பொருந்தும்.

    எனவே இவ்வாண்டு ஆடி அமாவாசை என்பது ஆடி 31 (16-08-2023)ம் தேதி அன்று தான் நிகழவிருக்கின்றது. முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை சிறப்பு தர்ப்பணம் செய்ய விரும்புவர்கள் இந்த தேதியில் தான் செய்ய வேண்டும்.

    சரி, ஆடி முதலாம் தேதி வரக்கூடிய அமாவாசையில் விரதம் இருக்கலாமா? கூடாதா? என்ற ஐயம் சிலருக்கு எழக்கூடும். விரதம் இருக்க நினைப்பவர்கள் தாராளமாக விரதம் இருக்கலாம். அது ஒன்றும் தவறானது அல்ல. வழக்கமாக அமாவாசை தோறும் விரதம் இருப்பவர்களும் முதல் அமாவாசையில் விரதம் இருக்கலாம்.

    ஜோதிட கலாமணி கே. ராதா கிருஷ்ணன்.

    எட்டயபுரம்.

    • இந்தியாவில் 20 முதல் 39 சதவீதம் பேர் அசைவ உணவுகளை உண்பதில்லை என தெரிய வந்துள்ளது.
    • ஆஸ்திரேலியாவில் 12.1 சதவீதம் பேரும், ரஷியாவில் 1 சதவீதம் பேரும் சைவம் உண்பது தெரியவந்துள்ளது.

    உலகில் சைவம் மற்றும் அசைவ பிரியர்கள் உள்ள நாடுகள் குறித்து, வெளியான பட்டியலில், இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

    உலகளவில் சைவம், அசைவம் என இரு வகையான உணவு நுகர்வு முறைகள் மக்களால் பின்பற்றப்படுகின்றன.

    உலகளவில் சைவ பிரியர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், நம் நாடு முதலிடம் பிடித்துள்ளது.

    பல்வேறு தளங்களில், புள்ளி விபரங்கள் வெளியிடும் உலக அளவிலான அமைப்பு வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் இந்தியாவில் 20 முதல் 39 சதவீதம் பேர் அசைவ உணவுகளை உண்பதில்லை என தெரிய வந்துள்ளது.

    அடுத்தபடியாக, மெக்சிகோவில் 19 சதவீதம் பேர் சைவம் உண்பவர்களாகவும், தைவானில் 14 சதவீதம் பேரும், இஸ்ரேலில் 13 சதவீதம் பேரும் சைவ உணவுகளை உண்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், ஆஸ்திரேலியாவில் 12.1 சதவீதம் பேரும், ரஷியாவில் 1 சதவீதம் பேரும் சைவம் உண்பது தெரியவந்துள்ளது. இதன் வாயிலாக 99 சதவீத அசைவ உணவு சாப்பிடுபவர்களுடன், ரஷியா அசைவ உணவு பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளது.

    தவிர அமெரிக்கா மற்றும் சீனாவில் 5 சதவீதம் பேர் அசைவ உணவுகளை சாப்பிடுவதில்லை எனவும், ஜப்பானில் 9 சதவீதம் பேர், இங்கிலாந்தில் 10 சதவீத மக்கள் அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை எனவும் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    -சீதாராமன்

    ×