என் மலர்tooltip icon

    கதம்பம்

    • திருமண வீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர்.
    • கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் பட்டு அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.

    திருமணத்தின் போது பட்டு சேலை அணிவதன் ரகசியம் என்ன தெரியுமா?

    தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன.

    பட்டுக்கு இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும், தீய கதிர் வீச்சுகளை தடுத்து உடலிற்கு வலிமை அளிக்கும்.

    திருமண வீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும், மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும், தொற்று நோய் பரவக்கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர்.

    கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் பட்டு அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.

    -உழவன் மகன்

    • உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!
    • சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை அறிந்து கொண்டால், நமக்கு அழகு, நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், கிடைக்கும்.

    பழங்களைச் சாப்பிடுவதென்றால், உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல! பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!

    பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!

    சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.

    பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட 'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.

    இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.

    பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப்போக ஆரம்பிக்கிறது. அதனால் பழங்களை வெறும் வயிற்றில்அல்லது உணவுக்கு முன் சாப்பிடுங்கள்.!

    உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!

    நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவையெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால், நடக்காமல் தடுக்கப்படும்.

    ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்றால், எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன.

    சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை அறிந்து கொண்டால், நமக்கு அழகு, நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், கிடைக்கும்.

    -புவனா வசந்த்

    • வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.
    • சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா.

    ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

    அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

    கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

    சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

    புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

    பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

    சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

    சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக்கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை."

    இப்போது ஞானி சொன்னார்,

    "இது தான் திருமணம்!".

    • மரத்தை ஒட்டித்தான் விதை இருக்கும். அந்த விதையை ஒட்டித்தான் மரம் இருக்கும். இது தொடர் நிகழ்ச்சி.
    • குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் பெற்றோர்கள் மன நலத்திலே உடல் நலத்திலே நலம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    "மருத்துவம் என்பது நோய் வந்த பிறகு தீர்ப்பது மாத்திரம் அல்ல. நோயே வராமலும் காக்கலாம்.

    நோய் என்றால் என்ன? இயற்கையாக நம்முடைய உடலிலே, உடல் நலத்திற்கு ஏற்ற எல்லாம் அமைந்து இருக்கிறது.

    அவ்வப்போது ஏற்படுகின்ற குறையைக் கூட சரிக்கட்டிக் கொள்ளக் கூடிய அளவுக்கு இயற்கையினுடைய ஆற்றல் அமைப்பு நம் உடலிலே இருக்கிறது.

    ஒவ்வொரு செல்லும் ஒரு இரசாயனச் சாலையாக வேலை செய்து கொண்டு இருக்கிறது. நாம் அதைத் தெரிந்து கொண்டு ஒத்துழைத்தால் போதும்.

    மேலும் கருவமைப்பு குறித்தும் அதிகமாக நினைவில் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் எந்த முறையிலே மனம், உடல் அமைப்பிலே இருக்கின்றார்களோ அதை ஒட்டித்தான் ஒரு குழந்தை உருவாக முடியும்.

    மரத்தை ஒட்டித்தான் விதை இருக்கும். அந்த விதையை ஒட்டித்தான் மரம் இருக்கும். இது தொடர் நிகழ்ச்சி.

    குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் பெற்றோர்கள் மன நலத்திலே உடல் நலத்திலே நலம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    பெற்றோர்கள் இடத்திலே ஒருவருக்கு ஒருவர் பிணக்கு மனத்தாங்கல் இருக்குமேயானால் நமது உடலிலே முக்கியமான சக்தியாகிய சீவகாந்த ஆற்றல் பிணக்குற்று அது விஷத் தன்மையாக மாறக் கூடியதாகவே அமையும். அது குழந்தைகளையும் பாதிக்கும். ஆகவே மனநலமும் உடல்நலமும் காத்து இனிமை காப்போம்.

    -வேதாத்திரி மகரிஷி

    • நான் பார்க்க முடிந்தவரையில் இங்கே கூடியுள்ளவர்களில் குறைந்த பட்சம் ஐம்பது சதவிகிதம் அதிமூடர்கள்!
    • கிணற்றின் மேல் மோகம் கொண்டு கடலை இழக்கிறார்கள், மதத்தின் மேல் மோகம் கொண்டு கடவுளையே இழக்கிறார்கள்.

    பெர்னார்ட்ஷா அமெரிக்காவுக்குச் சென்றார்.

    அவர் எப்போதும் அமெரிக்கா, முட்டாள்களின் நாடு மூடர்களுக்கிடையில் நான் போய் என்ன செய்யப்போகிறேன் என்று கூறிக்கொண்டிருப்பார்.

    இங்கே அவ்வளவு மட்டமாகப் பேசிக் கொண்டிருந்தார். மறுபுறம் அமெரிக்காவின் கவர்ச்சி அவருக்கு அதிகமாகிக் கொண்டிருந்தது.

    யார் திட்டிக்கொண்டிருக்கிறாரோ, அவரை நோக்கி ஆர்வம் அதிகமாவது இயற்கையே!

    ஏராளமான அழைப்புகள் குவிந்தன அவருக்கு! அதனால் அவர் அமெரிக்கா சென்றார்.

    அவர் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் எக்கச்சக்கமான கூட்டம் கூடிவிட்டது. அதனால், கலவரத்தைத் தடுப்பதற்காக அவரைத் திருட்டுத்தனமாக வேறு இடத்தில் இறக்கி அழைத்துச் சென்றனர்.

    அவர் பேசிய முதல் சபையிலேயே கலவரம் ஆரம்பமாகி விட்டது!

    முதல் சபையில் பேச ஆரம்பிக்கும் போதே அவர் கூறினார், "நான் பார்க்க முடிந்தவரையில் இங்கே கூடியுள்ளவர்களில் குறைந்த பட்சம் ஐம்பது சதவிகிதம் அதிமூடர்கள்!"என்றார்.

    சபைத் தலைவர் பயந்து விட்டார்!

    அவையோர், "அவமானம்! வெட்கம்! நீ சொன்னதை வாபஸ் வாங்கு!' என்று கூக்குரலிட்டனர்.

    சபைத் தலைவர், "ஆரம்பத்திலேயே கலாட்டாவுக்கு இடம் கொடுத்துப் பேசிவிட்டீர்களே! எப்படியாவது ஜனங்களைச் சமாதானப்படுத்துங்கள்!" என்று கேட்டுக்கொண்டார்.

    அப்போது பெர்னார்ட்ஷா, "இருங்கள்! பொறுங்கள்! நானே சரி செய்கிறேன் என்றார்.

    மேலும் அவர் பேசினார் 'என் புத்திக்கெட்டியவரை இங்கே கூடியுள்ளவர்களில் ஐம்பது சதவிகிதம் அதிபுத்திசாலிகளாகத் தோன்றுகிறது!' என்றார்.

    உடனே ஜனங்கள் தலையாட்டிக் கை தட்டினார்கள்; அவர் கூறுவது சரிதான், என்று!

    பெர்னார்ட்ஷா குனிந்து தலைவரிடம், சொன்னார். "நிச்சயம் ஆகி விட்டது. இங்குள்ளவர்களில் ஐம்பது சதவிகிதம் அதிமுட்டாள்கள் என்று அவர்களே ஒத்துக்கொண்டர்கள்" என்றார்.

    இந்த இரண்டு கூற்றுகளிலும் பெரிய வித்தியாசம் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் விஷயம் ஒன்றேதான்.

    இதே போல்தான் எல்லா மதத்தினரும், தம்முடைய மதத்தில் மட்டுமே விஷயம், விசேஷம் உள்ளது என்று நம்புகிறார்கள்.

    இவர்கள் கிணற்றின் மேல் மோகம் கொண்டு கடலை இழக்கிறார்கள், மதத்தின் மேல் மோகம் கொண்டு கடவுளையே இழக்கிறார்கள்.

    -ஓஷோ

    • தமிழ்நாட்டில் 99.98% பிறப்புகள் மருத்துவமனைகளில் தான் நிகழ்கின்றன.
    • இயற்கை பெர்பெக்ட் என நம்புவது எல்லா விசயத்துக்கும் பொருந்துவதில்லை.

    மனிதனை தவிர 84 லட்சம் வகை உயிரினங்களுக்கும் இயற்கை பிரசவம் தான். மனிதனுக்கு மட்டும் ஏன் சிசேரியன்? என கேட்பவர்கள் உள்ளனர். ஆனால் அந்த 84 லட்சம் (!) உயிரினங்களில் எத்தனை தாய் உயிர்கள், பிரசவ சமயம் பலியாகிறது என சொல்வதில்லை.

    உதாரணமாக கழுதைப்புலியின் பிரசவம் வலி மிகுந்தது. பல சமயம் பிறப்புறுப்பே கிழிந்து பேறுகாலத்தில் சுமார் 18% கழுதைப்புலி தாய்கள் உயிரிழக்கும். பிற மிருகங்களின் கர்ப்பகால மரணவிகிதம் செம்மறி ஆடு 1.6%, மாடு 3%, ஆடு 2.6%.

    தமிழ்நாட்டில் கர்ப்பகால மரணவிகிதம் 0.06% மட்டுமே.

    தமிழ்நாட்டில் 99.98% பிறப்புகள் மருத்துவமனைகளில் தான் நிகழ்கின்றன. இந்தியாவிலேயே மிக அதிக விகிதம் இது. இங்கே கர்ப்பகால மரணவிகிதம் லட்சத்துக்கு 62 தாய்மார்கள் மாத்திரமே

    இயற்கை பெர்பெக்ட் என நம்புவது எல்லா விசயத்துக்கும் பொருந்துவதில்லை. பல விசயங்களுக்கு இயற்கை வைத்துள்ள தீர்வு வலியும், மரணமுமே. இவை இரண்டும் இயற்கையே. அதற்கு தீர்வு காண மனிதன் முயன்றே மானுட சமுதாயம் இந்த அளவு உயர்ந்துள்ளது.

    - நியாண்டர் செல்வன்

    • உடல் ஜடப்பொருள் வயப்பட்ட உலகத்தை சார்ந்தது. செத்துப் போனது எப்படி சாக முடியும்?
    • நித்திய உலகிற்கு உரியது ஆத்மா. எனவே அது சாக முடியாதது. இறைவனின் உலகை சார்ந்தது.

    மரணம் என்பது மன மயக்கங்களில் மிகப்பெரிய மயக்கம்.

    அந்த மயக்கத்தை தோற்றுவிக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது தான்..

    ஆத்மாவும் உடலும் தொடர்பறுந்து போகின்றன. இதுதான் மரணத்தில் நிகழ்கிறது.

    ஆனால் இந்த உடலோ, ஆத்மாவோ இல்லாமல் போய்விடுவதில்லை.

    ஏற்கனவே மரணித்துப் போனது என்பதால் இந்த உடலுக்கு மரணம் இல்லை.

    உடல் ஜடப்பொருள் வயப்பட்ட உலகத்தை சார்ந்தது. செத்துப் போனது எப்படி சாக முடியும்?

    நித்திய உலகிற்கு உரியது ஆத்மா. எனவே அது சாக முடியாதது. இறைவனின் உலகை சார்ந்தது.

    அதுவே ஜீவிதம், அதுவே உயிர். பிறகு உயிர் எப்படி சாக முடியும்?

    இரண்டும் நம்மில் இணைந்து இருக்கின்றன.. .

    இந்த இணைப்பு துண்டித்து போகிறது..

    ஆத்மா உடலில் இருந்து பிடுங்கி எடுக்கப்படுகிறது..

    மரணம் என்பது அவ்வளவுதான்.

    உடல் திரும்ப ஜடத்துக்கு போய் சேர்ந்து விடுகிறது..

    மண்ணுக்குப் போய் சேர்ந்து விடுகிறது.

    ஆத்துமாவோ இன்னமும் ஆசைகளும் ஏக்கங்களும் கொண்டிருக்கிறது என்றால் இன்னொரு கருப்பையை நாடுகிறது. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள இன்னும் ஒரு சந்தர்ப்பம் தேடுகிறது.

    ஆசைகள் எல்லாம் கழிந்து விட்டன என்றால்..

    ஏக்கங்கள் எல்லாம் இல்லாமல் போய்விட்டன என்றால்..

    உடல் எடுத்து வரும் சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது.

    அப்போது ஆத்மா நித்திய பிரஞ்ஞைக்குள் நுழைந்து விடுகிறது.

    -ஓஷோ

    • உள ரீதியாகத் துவங்கி உடலில் வந்து வெளிக்காட்டும் நோய்களை விஞ்ஞானபூர்வமாகக் குணப்படுத்தவே முடியாது.
    • உடலைத் தாக்கும் நோயை மட்டுமே நாம் அப்புறப்படுத்துகிறோம்.

    என்னைப் பொறுத்தவரையில், அலோபதி என்பது ஒரு விஞ்ஞான பூர்வமான மருந்து. ஆனால் மனிதனுக்குள் விஞ்ஞானமற்றதாக ஏதோ இருக்கிறது. அதற்கு விஞ்ஞானபூர்வமான மருந்து பயன்படாது. அதனால் நூறு சதவிகித முடிவுகளைக் கொடுக்க முடியாது.

    அதாவது விஞ்ஞானமற்ற முறையில் நோய்வாய்ப்படுவது என்றும் உண்டு. உள ரீதியாகத் துவங்கி உடலில் வந்து வெளிக்காட்டும் நோய்களை விஞ்ஞானபூர்வமாகக் குணப்படுத்தவே முடியாது.

    உடலைத் தாக்கும் நோயை மட்டுமே நாம் அப்புறப்படுத்துகிறோம். ஆனால் அதே சமயம் மனதிலிருந்து கிளம்பும் நோய் அதிகரித்துவிட்டது. இன்று, விஞ்ஞான ரீதியாகச் சிந்திப்பவர்கள் கூட ஐம்பது சதவிகித நோய் மனதிலிருந்துதான் கிளம்புகிறது என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

    மனரீதியான நோய்கள் முதலில் உள்ளே ஆரம்பித்து, வெளியே பரவும். அவை வெளியேறும் வியாதிகள். ஆனால் உடல் ரீதியான நோய்கள் உள்ளே போகக்கூடியவை. மனநோய்க்கு உடல் ரீதியான சிகிச்சை அளித்தால் அது வேறு வழியாக வெளியேறத் துடிக்கும்.

    -ஓஷோ

    • வாவு என்பது உவா அல்லது உவவு என்னும் சொல்லின் திரிபு.
    • வாவு என்னும் பழைய சொல் மறைந்து போய் லீவு, விடுமுறைநாள் என்னும் சொற்களை இக்காலத்தில் வழங்கி வருகின்றனர்!

    பாடசாலைச் சிறுவர்களுக்கு விடுமுறை என்றால் மகிழ்ச்சி. "டேய்! நாளைக்குப் பள்ளிக்கூடம் லீவுடா" என்று மகிழ்ச்சி பொங்க நண்பனிடம் கூறுகிறான் இக்காலத்துப் பள்ளிச் சிறுவன்.

    லீவ் என்பது ஆங்கிலச் சொல். இந்தச் சொல் ஆங்கிலேயரின் சார்பினாலே தமிழ் மொழியில் புதிதாகப் புகுந்தது. லீவ் என்னும் சொல்லுக்குத் தமிழில் விடுமுறை நாள் என்று ஒரு சொல்லை வழங்குகிறார்கள்.

    ஆங்கிலேயரின் தொடர்பு இல்லாத பண்டைக் காலத்திலே, தமிழ் சிறுவன் பள்ளிக்கூட விடுமுறை நாளை வாவு என்று சொன்னான்.

    "அடே! நாளைக்கு வாவுடா. பள்ளிக்கூடம் இல்லை" என்று அக்காலத்துச் சிறுவன் கூறினான்.

    வாவு என்பது உவா அல்லது உவவு என்னும் சொல்லின் திரிபு. வாவு என்னும் பழைய சொல் மறைந்து போய் லீவு, விடுமுறைநாள் என்னும் சொற்களை இக்காலத்தில் வழங்கி வருகின்றனர்!

    உவா என்னும் சொல்லுக்கு நேரான பொருள் விடுமுறைநாள் என்பது அன்று; பௌர்ணமி, அமாவாசை என்பவை தான் அதற்கு நேரான பொருள்.

    அதாவது முழுநிலா நாளுக்கும், நிலா முழுதும் மறைந்த நாளுக்கும் உவா என்பது பொதுவான பெயர். பண்டைக் காலத்தில் பௌர்ணமி, அமாவாசை என்னும் சொற்கள் வழக்கத்தில் இல்லை.

    முழு நிலா நாளை வெள்ளுவா அல்லது வெளுத்த உவா என்றும், நிலா முழுவதும் மறைந்த நாளைக் காருவா அல்லது கறுத்த உவா என்றும் அக்காலத்தில் பெயர் வழங்கினார்கள்.

    பண்டைக் காலத்தில், ஆங்கில ஆட்சிக்கு முன்னே, உவா நாட்களில் அதாவது கறுத்த உவாவாகிய அமாவாசை, வெளுத்த உவாவாகிய பௌர்ணமி நாட்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டன. ஆகவே, அக்காலத்துப் பள்ளிச் சிறுவர் விடுமுறை நாட்களை உவா நாள் என்று கூறினார்கள். பேச்சு வழக்கில் உவா என்னும் சொல் வாவு என்று திரிந்து வழங்கப்பட்டது.

    -அறம் இளம்பரிதி

    • இந்தியப் பெருங்கடலிலிருந்து ஈரப்பதத்தை சுமந்து செல்லும் காற்று இமயத்தின் தென் சரிவுகளில் மோதுகையில் அவை மேலெழும்ப வேண்டிய கட்டாயத்திற்கு வருகின்றன.
    • பாரம் தாங்க முடியாமல் தங்களுடைய சுமையை அடைமழை வடிவில் கீழே இறக்குகின்றன.

    சிரபுஞ்சியிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிராமம் தான் மவுசின்ராம் (Mawsynram) இங்கு ஒரே ஆண்டில் 2,540 செண்டிமீட்டர் மழை பொழிந்தது ஒரு உலக சாதனை ஆகும். பொதுவாக இந்தியாவின் ஒரு ஆண்டில் பெய்யும் மொத்த மழையில் 75% ஜூன்- செப்டம்பரிலே இங்கு பெய்து விடுகிறது.

    அங்கு மட்டும் எப்படி இவ்ளோ மழை?

    கடலில் மிக வெப்பமான பகுதிகளிலுள்ள பெருமளவான தண்ணீரை சூரியன் ஆவியாக்கும்போதுதான் வெப்பமண்டல பிரதேசங்களில் பெருமழை பெய்கிறது. இந்தியப் பெருங்கடலிலிருந்து ஈரப்பதத்தை சுமந்து செல்லும் காற்று இமயத்தின் தென் சரிவுகளில் மோதுகையில் அவை மேலெழும்ப வேண்டிய கட்டாயத்திற்கு வருகின்றன; அப்போது அவை பாரம் தாங்க முடியாமல் தங்களுடைய சுமையை அடைமழை வடிவில் கீழே இறக்குகின்றன. இதில் பெரும்பாலானவற்றை மேகாலயா பீடபூமியே பெற்றுக்கொள்கிறது. மேலும், பகல்பொழுதில் வெப்பமண்டல சூரியனின் முழு சக்தியை இந்த மேடான பகுதி வாங்கிக்கொள்வதால், மாலையில் காற்று குளிர்ச்சியடையும் வரை மழை மேகங்கள் மேலே உயர்ந்து இந்தப் பீடபூமியின் மேல் வட்டமிடுகின்றன. இரவில் கனமழை கொட்டி தீர்த்துவிடுகிறது.

    ஆனால் இந்த மழையால் நமக்கு பயனதிகமில்லை. சிரபுஞ்சியை சுற்றிலுமுள்ள காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டதாலும் நீர்த்தேக்கங்களை கட்டாததாலும் பெருமளவான மழை நீர் இந்த உயர்ந்த பீடபூமியிலிருந்து கீழே வடிந்து சமவெளிகளிலுள்ள ஆறுகளை நிரப்புகிறது, இந்த ஆறுகள் பெரும்பாலும் வங்காள தேசத்திற்குள் ஓடிவிடுகின்றன.

    -அருண் நாகலிங்கம்

    • லண்டன் தேவாலய நியாய சபையில் போப் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    • தங்கள் மதத்தைப் பரப்ப இந்தியா சென்ற போப் அங்கிருந்த சைவ மதக் கருத்துகளை இங்கே வந்து பரப்பிக் கொண்டிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.

    18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிருஸ்தவ மதத்தைப் பரப்ப இந்தியாவிற்குள் நுழைந்தவர் தான் ஜி.யூ.போப். இவருக்கு தமிழர்கள் அதிகம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள். 600 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த தமிழ் மொழியை உலகறியச் செய்த பெருமகன் அவர் தான். பைபிள் உட்பட பல தத்துவ நூல்களோடு தமிழகம் வந்த போப் மதப் பரப்புரையில் ஈடுபட்டார். தமிழ் மொழியையும் இலக்கணங்களையும் கற்றுத் தெளிந்தார்.

    தமிழ் கற்றபின் முழுதாக அவர் படித்த முதல் புத்தகம் திருக்குறள். "இந்த புத்தகத்தில் அறம் பொருள் இன்பம் மட்டுமே உள்ளது. சொர்க்கத்திற்குரிய வீடுபேறு குறித்து எந்த தகவலும் இல்லையே'' எனச் சொன்னார். அப்போது ஒரு புலவர் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் புத்தகத்தை அவரிடம் கொடுத்தார்.

    போப் அவர்களை திருவாசகம் உலுக்கிவிட்டது. லண்டன் திரும்பிய போப் தன் தலைமை கார்டினலிடம் "நம் மேற்கத்திய தத்துவப் புத்தகங்களை ஒரு தட்டிலும் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வரியை மற்றொரு தட்டிலும் வைத்தால் அது சரியாக இருக்கும்'' என்றார்.

    கார்டினல் "அப்படியா.. அந்த வரியைச் சொல்லுங்கள் கேட்கிறேன்'' என்றார். "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க'' என்ற வரியை போப் குறிப்பிட்டார். கார்டினல் வியந்து போற்றிவிட்டு மொத்த திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் சொன்னார். 1900 வது வருடம் மொழிபெயர்ப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    லண்டன் தேவாலய நியாய சபையில் போப் மீது குற்றம் சாட்டப்பட்டது. தங்கள் மதத்தைப் பரப்ப இந்தியா சென்ற போப் அங்கிருந்த சைவ மதக் கருத்துகளை இங்கே வந்து பரப்பிக் கொண்டிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.

    நீதிபதி [கிருஸ்தவ மதத் தலைவர்] முன்பு போப் நிறுத்தப்பட்டார். விசாரித்த நீதிபதி "அவர் மொழிபெயர்த்த புத்தகத்தைப் படித்துவிட்டு தீர்ப்பு சொல்கிறேன்'' என போப்பிடம் ஒரு பிரிதியைப் பெற்றுக் கொண்டு சென்றார்.

    ஒருவாரம் ஒரு வரி விடாமல் படித்த நீதிபதி தேவாலயம் வந்தார். அங்கே போப் நின்றிருந்தார். தொப்பென நீதிபதி, போப்பின் கால்களில் விழுந்துவிட்டார். பின்பு தன் இருக்கையில் அமர்ந்த நீதிபதி "போப் அவர்கள் தான் உண்மையான கிருஸ்தவர்.. அவர் இந்த மதத்திற்கு எதிராக எந்த தவறும் செய்யவில்லை. மிக அருமையான புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பை படித்தாலே பிரம்மிப்பாக இருக்கிறதே.. அதன் மூலமாக தமிழ் மொழியிலே திருவாசகத்தைப் படித்த போப் ஒரு பாக்யவான்.. அவரை இந்த குற்றத்திலிருந்து விடுவிக்கிறேன்'' என்றார்.

    -சதீஸ் காரட் தமிழன்

    • பல வளர்ந்த நாடுகளில் களைச்செடிகள் அரசுடமையாக்கப்பட்டிருக்கின்றன.
    • சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் எந்த செடியையும் யாரும் அனுமதியின்றி பறிக்கவோ, அகற்றவோ, பயன்படுத்தவோ முடியாது.

    உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தைத்தான் இந்தியா கொண்டிருக்கிறது. எனினும் இங்கு மட்டுமே 47,513 தாவர வகைகள் இருக்கின்றன. அதாவது உலகில் இதுவரை அறியப்பட்ட சுமார் 0.4 மில்லியன் தாவரங்களில், 11.4% இந்தியாவில் இருக்கின்றது.

    இவற்றில் 28% இந்தியாவில் மட்டுமே காணப்படும் எண்டெமிக் வகையை சேர்ந்தவை.

    உலகின் மலரும் வகை தாவரங்களில் 6% இந்தியாவில் இருக்கிறது. பல வகையான அரிய தாவரங்களை கொண்டிருப்பதால் உலகின் மூலிகைப் பூங்கா என்று அழைக்கப்படும் இந்தியாவின் வளங்களிலிருந்து பல தாவரங்களை கடந்த காலங்களில் முழுவதுமாக இழந்திருக்கிறோம். மேலும் பல அரிய தாவரங்கள் மிக வேகமாக அழிந்துகொண்டிருக்கின்றன.

    நகரமயமாக்கல், காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாவது சுரங்கங்கள் உள்ளிட்ட காரணங்களினால் மட்டுமல்லாது தாவர குருடினாலும் இவை அழியும் அபாயத்தில் உள்ளன.

    பல வளர்ந்த நாடுகளில் களைச்செடிகள் அரசுடமையாக்கப்பட்டிருக்கின்றன. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் எந்த செடியையும் யாரும் அனுமதியின்றி பறிக்கவோ, அகற்றவோ, பயன்படுத்தவோ முடியாது. இப்படி கடுமையான சட்டங்கள் மூலம் தாவரங்கள் பாதுகாக்கப்படவேண்டிய நிலை வந்ததே தாவரக் குருட்டுத்தன்மையால்தான்.

    தாவர குருடு என்பது நாம் முழுக்க முழுக்க நமது அடிப்படை தேவைகளுக்கு சார்ந்திருக்கும் தாவரங்களை குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்காதது, நம்மை சுற்றி இருக்கும் தாவரங்களை கவனிக்காதது, முக்கியத்துவத்தை உணராமல் அழிப்பது, அவற்றை பாதுகாப்பதன் அவசியம் அறியாதது ஆகியவையே…!

    நம் அன்றாட வாழ்வில் ஒரே ஒரு நாள் கூட உணவு, இருப்பிடம், மருந்து, குடிநீர், காற்று, போன்ற தாவரங்களினால் மட்டுமே கிடைக்கும் பயன்களை அனுபவிக்காமல் கழிவதில்லை. எனினும் அவற்றை குறித்த அறிவு நமக்கு இருப்பதே இல்லை அறிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.

    -லோகமாதேவி

    ×