என் மலர்
வேலூர்
குடியாத்தம் எர்த்தாங்கலில் மாடு விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம் அடைந்தனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே எர்த்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழா முன்னிட்டு 48-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது.
இதில் குடியாத்தம், கே வி குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன, விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின. இந்தப் போட்டிகளை குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
காளைவிடும் விழாவை காண குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து காளைகள் ஓடுவதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.
காளை விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர் அவர்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பலத்த காயமடைந்த ஒருவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
காளை விடும் விழாவில் வெற்றி பெற்ற 59 காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் கணபதி உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வேலூர் மாவட்டத்திற்கு 3 புதிய 108 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டுக்கு இன்று முதல் வந்துள்ளது.
வேலூர்:
தமிழகம் முழுவதும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 188 புதிய108 ஆம்புலன்ஸ்களை சென்னை சிட்லபாக்கத்தில் கடந்த வாரம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து வேலூர் மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 3 புதிய 108 ஆம்புலன்ஸ்களை வேலூர் அரசு பெண்ட்லேன்ட் ஆஸ்பத்திரியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 24, 108 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது புதிதாக 3 ஆம்புலன்ஸ்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 27 ஆம்புலன்ஸ்கள் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, துணை இயக்குனர் பானுமதி, நகர் நல அலுவலர் மணிவண்ணன், 108 ஆம்புலன்ஸ் மேலாளர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் ஜெயசிம்மன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் 1.30 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரத்து 345 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை வேலூர் அரசு பெண்ட் லேன்ட் ஆஸ்பத்திரியில் தொடங்கி வைத்தார்.
போலியோ சொட்டு மருந்து போடுவதற்காகவேலூர் மாவட்டத்தில் 934 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு கூடுதலாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து பணி மற்றும் வியாபார நிமித்தமாக வேலூர் மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்.
மேம்பால பணியாளர்கள், சாலை விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க பட்டு வருகிறது.
இப்பணியில் பொது சுகாதாரத் துறை, கல்வித் துறை, சமூக நலத் துறை, வருவாய்த் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்பட 3,548 பணியாளர்களும் மேற்பார்வையிட 116 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
முகாம்களுக்கு தேவையான சொட்டு மருந்துகள் எடுத்துச் செல்லவும் வேலூர் மாவட்டம் முழுவதும் பிற துறை மற்றும் சுகாதாரத் துறை வாகனங்கள் உட்பட 56 வாகனங்கள் பயன்படுத்தப்பட் டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-
பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே வழக்கமாக போடும் போலியோ சொட்டு மருந்து எத்தனை முறை போட்டிருந்தாலும் இம்முறையும் அவசியம் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மகன் உக்ரைனில் தவிப்பதை கேட்டு தாய் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
ரஷ்யா, உக்ரைன் போர் தீவிரமாக நடந்து வருகிறது. தாக்குதலில் உக்ரைனில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக மாணவர்கள் ஏராளமானோர் உக்ரைனில் தவித்து வருகின்றனர்.
பேரணாம்பட்டை சேர்ந்த சக்திவேல் என்ற மாணவரும் உக்ரைனில் தவித்து வருகிறார். மாணவர் சக்திவேல் அங்கு தவித்து வருவதை கேள்விப்பட்ட அவரது தாய் சசிகலா அதிர்ச்சியடைந்தார். சசிகலா ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் அவர் திடீரென அதிர்ச்சியில் இறந்தார். மகன் உக்ரைனில் தவிப்பதை கேட்டு தாய் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகே வீட்டில் காதல் ஜோடி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் வள்ளலார் சவூத் அவென்யூ சாலையை சேர்ந்தவர் பாரதிதாசன். ராணிப்பேட்டை ஷூ கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபலட்சுமி. இவரும் வேறொரு ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்த நிலையில் இளைய மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே இறந்தார்.
16 வயதான மூத்த மகள் வள்ளலார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியின் பாட்டி கருகம்பத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.
இதனால் மாணவி அடிக்கடி பாட்டி வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த ராம்குமார் ( 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவியின் பெற்றோர் காலை 8 மணிக்கே வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவார்கள். அவ்வாறு நேற்று மாலை 5.30 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது.
தொடர்ந்து உள்ளேசென்று பார்த்த போது மாணவி தரையில் பிணமாக கிடந்தார். ராம்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்களின் கதறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வர வைக்கப்பட்டனர்.
சத்துவாச்சாரி போலீசார் மாணவி மற்றும் ராம்குமார் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னியம்மன் மேலகுப்பம் கோவில் தெருவை சேர்ந்த பாரதிதாசன், தனது மகளின் படிப்புக்காக இங்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார். மாணவி அடிக்கடி கருகம்பத்தூரில் உள்ள பாட்டி வீட்டுக் செல்வது வழக்கம்.
அப்போது அதே தெருவில் வசித்து வந்த ராம்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் மாணவியின் பெற்றோருக்கு இவர்களின் காதல் விவகாரம் தெரிய வந்துள்ளது.
மாணவியின் பெற்றோர் ராம்குமார் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் முறையிட்டு எச்சரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு மாணவியை பார்க்க ராம்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக ராம்குமார், மாணவியின் கழுத்தை கயிறால் இறுக்கியுள்ளார். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதில் அதிர்ச்சியடைந்த ராம்குமார் அந்த கயிற்றிலேயே தூக்குமாட்டி தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையிலும், தடயவியல் நிபுணர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மாணவியை கொலை செய்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா என்பது தெரியவரும்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
திருப்பதியில் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்ய வேலூரில் இருந்து இலவச பயண சேவையை நந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
வேலூர்:
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும் அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான ஏ.பி.நந்தகுமார், திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறங்காவலர் குழுவின் உறுப்பினராக உள்ளார்.
இவர், தனது சொந்த செலவில் வேலூரில் இருந்து திருப்பதி வெங்கடேச பெருமாளை இலவசமாக தரிசனம் செய்து திரும்ப தினசரி வாகன சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதன் முதல் பயண சேவையை பள்ளிகொண்டா ரங்காநாதர் கோவிலில் இருந்து நேற்று அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து ஏ.பி.நந்தகுமார் கூறும்போது:-
திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினராக தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய பதவிக்காலம் இன்னும் 19 மாதங்களுக்குஉள்ளது.
அதுவரை வாரத்துக்கு 6 நாட்கள் என திருமலைக்கு பொதுமக்கள் இலவச தரிசனம் செய்து திரும்ப என்னுடைய சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளேன்.
இதற்காக, 12 பேர் பயணம் செய்யக்கூடிய வேன் ஒன்றையும் புதிதாக வாங்கியுள்ளேன். இந்த வாகனம் வேறு எதற்கும் பயன்படுத்தப்படாது.
வரும் மார்ச் 1-ந்தேதி முதல் வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து இந்த வாகனம் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்குள் வேலூர் திரும்பும்.
திருப்பதி கோவிலில் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் திருமலை அன்னதான கூடத்தில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
வாகனத்தில் குறைந்த இடவசதி இருப்பதால் ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது 2 பேர் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்படும்.
இலவச தரிசன சேவைக்காக மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் முன்கூட்டியே ஆதார் விவரங்களை அளித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். 300 ரூபாய் டிக்கெட்டில் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என டி.ஐ.ஜி. அறிவுரை வழங்கினார்.
வேலூர்:
வேலூர் நேதாஜி மைதானத்தில் போலீசாருக்கான உடற் பயிற்சி முகாம் இன்று நடந்தது. டி.ஐ.ஜி. ஆனி விஜயா கலந்துகொண்டு போலீசாருக்கான உடற்பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும்.முதலில் நீங்கள் உங்களை ரசிக்க வேண்டும்.
இல்லாவிட்டாலும் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
குடும்பம், வேலை, உலகத்தை ரசிக்க கற்றுக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
வாழ்வில் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும்.உங்கள் திறமை மீது நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டும். அந்த திறமையை வெளிக்கொண்டு வந்து சாதனை புரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் உடற்பயிற்சி பெற்றனர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் போலீசாருக்கு உடற் பயிற்சி முகாம் நடத்த டி.ஐ.ஜி.உத்தரவிட்டார்.
பணிச்சுமையால் அவதிப்படுகிறோம் என ஆயுதப்படை பெண் போலீசார் கண்ணீர் மல்க குமுறினர்.
வேலூர்:
வேலூர் ஆயுதப்படை குடியிருப்பில் நேற்று பெண் காவலர் இந்துமதி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்துமதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆயுதப் படையில் உள்ள பெண் போலீசார் கடும் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-
ஆயுதப் படையில் பணியாற்றி வரும் பெண் போலீசாருக்கு தொடர்ந்து பணி வழங்கப்படுகிறது.
மேலும் வார விடுமுறை அளிப்பது இல்லை தேர்தல் அறிவித்த பிறகு கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் வேலை பார்த்து வருகிறோம்.
பெண் போலீசார் பலர் திருமணமானவர்கள்.அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.தொடர்ந்து பணி அளிப்பதால் குடும்பத்தோடு நேரத்தை செலவிட முடியவில்லை. மேலும் குழந்தைகளையும் சரியாக கவனிக்க முடியாமல் அவதிப் படுகிறோம்.
ஆயுதப் படையில் பணியாற்றும் போலீசாரிடம் அதிகாரிகள் அவர்களுக்கான குறைகளை கேட்டு அறிவதில்லை.
மாதத்தில் ஒரு முறையாவது ஆயுதப்படை பெண் போலீசாரிடம் குறைகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிய வேண்டும். அதன் மூலம் மன உளைச்சல் தவிர்க்கப் பட வாய்ப்பு உள்ளது.
பணி சுமை அதிகரித்து வருவதால் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகிறோம்.
இதுபோன்ற கஷ்டத்தை நீக்க போலீஸ் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை.
வேலூர்:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.45 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இங்கு முதல் தளத்தில் வணிக வளாகம், ஆண், பெண் கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தானியங்கி வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, ஓய்வறை, வாகனங்கள் நிறுத்துமிடம் (பார்க்கிங்) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பஸ் நிலையத்தில் இருபுறமும் நுழைவாயில்கள் அமைக்கப்படுகின்றன.
பஸ் நிலையம் மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பஸ்நிலையத்தில் இறுதிகட்ட பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது.
பஸ்நிலையத்தில் கால்வாய் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. மேலும் அதன் ஒரு பகுதியில் பஸ்கள் நிறுத்துவதற்கான பிளாட்பாரங்கள் இன்னும் அமைக்கப்படவில்லை.
அதைத்தொடர்ந்து மின்சார வசதி, குடிநீர் வசதி போன்றவை செய்ய வேண்டும். இதனால் பஸ் நிலையப் பணிகள் முடிவடைய இன்னும் சில மாதங்கள் ஆகும்.
ஏற்கனவே அறிவித்தது போல மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதிய பஸ் நிலையம் வர வாய்ப்பில்லை பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் 55 சதவீதம் நிறைவடைந்தது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாளசாக்கடை பணிகள் கால்வாய் அமைக்கும் பணிகள் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து சில ஆண்டுகளாக பணிகள் நடந்து வருவதால் மாநகராட்சியில் உள்ள தெருக்கள் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக காட்சி அளித்தன. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் படாத பாடுபட்டனர்.
இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடைந்த தெருக்களில் சாலை அமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:-
வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. பாதாள சாக்கடை, கால்வாய் அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த தெருக்கள் சாலைகளில் சிமெண்ட் சாலை, தார் சாலை அமைக்கும் பணிகள் துரிதப் படுத்தப் பட்டுள்ளன.
இன்று வரை மாநகராட்சி பகுதியில் 55 சதவீத சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் மாநகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களில் சாலை பணிகள் நிறைவடைந்து விடும்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பகுதிகளில் சாலை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது என்றனர்.
பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் என்ன? பணிச்சுமை காரணமா? அல்லது குடும்பத்தில் ஏதாவது பிரச்னையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுக்கம் பாறை அருகே உள்ள மூஞ்சூர்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆயுதப்படை பெண் போலீஸ்காரர் இந்துமதி (வயது 30). இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு போலீஸ் வேலையில் இந்துமதி சேர்ந்தார். கடந்த சில ஆண்டுகளாக வேலூர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.
தற்போது பாகாயத்தில் உள்ள தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது குழந்தைகள் மேட்டுஇடையம்பட்டியில் உள்ள அவரது மாமனார் வீட்டில் தங்கி உள்ளனர். அங்கிருந்து தினமும் பள்ளிக்கு குழந்தைகள் சென்று வருகின்றனர். நேற்று இந்துமதி குழந்தைகளை பார்த்து விட்டு பின்னர் ஆயுதப்படை குடியிருப்புக்கு வந்தார்.
இரவு அவர் மீண்டும் பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக பெண் காவலர்கள் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அவரது போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக தெரிவித்தது.
இதுகுறித்து ஆயுதப்படை தலைமை அலுவலகத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். அவருடைய தம்பி வேலூர் ஆயுதப்படை குடியிருப்புக்கு நேற்றிரவு 10.30 மணியவில் வந்தார்.
பூட்டியிருந்த கதவை உடைத்து பார்த்தபோது இந்துமதி மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்டு போலீசார் மற்றும் அவரது தம்பி அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்துமதி தூக்கில் தொங்கிய அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு அவர் வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்துமதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் என்ன? பணிச்சுமை காரணமா? அல்லது குடும்பத்தில் ஏதாவது பிரச்னையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆயு தப்படை போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரில் அனுமதியின்றி கட்டிடம் கட்டி வழிபாட்டு தலமாக மாற்ற முயற்சி நடப்பதாக மாநகராட்சி கமிஷனரிடம் இந்து முன்னணி மனு அளித்தனர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் இந்து முன்னணி நிர்வாகிகள் மகேஷ் தலைமையில் இன்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது;
வேலூர் மெயின் பஜார், சர்க்கார் மண்டி தெருவில் குடியிருப்பு கட்டிடம் இருந்தது. அதை உரிய அனுமதியின்றி இடித்து அப்புறப்படுத்தி விட்டு, வேலூர் மாநகராட்சி அனுமதியின்றி கட்டிடம் கட்டி பள்ளிவாசலாக முயற்சி செய்கிறார்கள்.
இந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதி முழுவதும் இந்துக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி மற்றும் வியாபார பகுதியாகவும் உள்ளது.
இந்த பிரச்சனைக்குரிய கட்டிடத்திற்கு பின்புறம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இடது புறம் சுமார் 10 மீட்டர் தொலைவில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
வலதுபுறம் சுமார் 100 மீட்டர் தொலைவில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இதற்கு கிழக்கு பக்கம் 100 மீட்டர் தொலைவில் மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில்களில் திருவிழா மற்றும் உற்சவ காலங்களில் மற்றும் பண்டிகைகள் நடைபெறுகின்ற இடத்தில் இந்த பிரச்சனைக்குரிய இடம் அமைந்துள்ளது. சர்க்கார் மண்டி தெரு வழியாகதான் சாமி ஊர்வலமும், ரத ஊர்வலமும், பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு இந்துக்கள் வசிக்கும் பகுதிகளால் சூழப்பட்டு இந்து கோவில்களின் மிக அருகாமையில் சாமி ஊர்வலம் நடைபெறும் தெருவிலும், எவ்வித அனுமதியின்றி சட்ட விரோதமாக கட்டிடம் எழுப்பி பள்ளிவாசலாக மாற்ற முயற்சிப்பது பொது அமைதிக்கும், இந்துக்களின் வழிபாட்டு உரிமையும், மத மோதல்கள்கள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும்.
எனவே பிரச்சனைக் குரிய சட்ட விரோத கட்டிடத்தை அகற்றியும், அங்கு வழிபாடுகளை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.






