என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பதியில் இலவசமாக தரிசனம் செய்ய வாகன சேவையை நந்தகுமார் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்த காட்சி.
திருப்பதியில் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்ய வேலூரில் இருந்து இலவச பயண சேவை
திருப்பதியில் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்ய வேலூரில் இருந்து இலவச பயண சேவையை நந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
வேலூர்:
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும் அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான ஏ.பி.நந்தகுமார், திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறங்காவலர் குழுவின் உறுப்பினராக உள்ளார்.
இவர், தனது சொந்த செலவில் வேலூரில் இருந்து திருப்பதி வெங்கடேச பெருமாளை இலவசமாக தரிசனம் செய்து திரும்ப தினசரி வாகன சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதன் முதல் பயண சேவையை பள்ளிகொண்டா ரங்காநாதர் கோவிலில் இருந்து நேற்று அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து ஏ.பி.நந்தகுமார் கூறும்போது:-
திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினராக தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய பதவிக்காலம் இன்னும் 19 மாதங்களுக்குஉள்ளது.
அதுவரை வாரத்துக்கு 6 நாட்கள் என திருமலைக்கு பொதுமக்கள் இலவச தரிசனம் செய்து திரும்ப என்னுடைய சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளேன்.
இதற்காக, 12 பேர் பயணம் செய்யக்கூடிய வேன் ஒன்றையும் புதிதாக வாங்கியுள்ளேன். இந்த வாகனம் வேறு எதற்கும் பயன்படுத்தப்படாது.
வரும் மார்ச் 1-ந்தேதி முதல் வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து இந்த வாகனம் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்குள் வேலூர் திரும்பும்.
திருப்பதி கோவிலில் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் திருமலை அன்னதான கூடத்தில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
வாகனத்தில் குறைந்த இடவசதி இருப்பதால் ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது 2 பேர் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்படும்.
இலவச தரிசன சேவைக்காக மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் முன்கூட்டியே ஆதார் விவரங்களை அளித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். 300 ரூபாய் டிக்கெட்டில் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Next Story






