என் மலர்tooltip icon

    வேலூர்

    • 3 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.
    • கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் புகார்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது.இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தலைவர் ஞானவேலு இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத் மற்றும் வியாபாரிகள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    காட்பாடி ரெயில்வே மேம்பாலம் 25 அடி அகலமும் 300 அடி நீளமும் கொண்டது. வேலூர் மாவட்டத்தையும் ஆந்திர மாநிலத்தையும் இணைத்து வருவாயை ஈட்டித்தரும் பாலமாக விளங்கி வருகிறது. இந்த பாலத்தை பழுதுபார்க்கும் பணியில் 3 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இப்படி இருந்தால் பணி எப்போது முடியும். மாற்றுப்பாதைக்கு நிதி ஒதுக்கப்பட்டு இன்னும் சரி செய்யப்படவில்லை. பாலத்தின் 3 பகுதிகளில் உறுதியாக போடப்படும் இரும்பு சட்டங்கள் உறுதி மற்றும் பாதுகாப்பு குறைவானவை.

    5 டன் முதல் 80 டன் வரை கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் இந்த பாலத்தில் செல்ல வேண்டி உள்ளது. எனவே 5 இடங்களில் கனமான தண்டவாளங்களை பயன்படுத்தி கட்டமைப்பை மேற்கொள்ளவேண்டும். ரெயில்வே மேம்பாலம் மராமத்து பணி தொய்வாக நடப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் வணிகர்கள் காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் பக்தர்கள் 108 ஆம்புலன்சு எற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பணிகளை தரமாக விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    வேலூர் அடுத்த பெருமுகை ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆனந்த பிரியா என்பவர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் பெருமுகை மலை அடிவாரத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி இல்லை.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் தொட்டி போர்வெல் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைத்து வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    • பள்ளிகளை சுத்தம் செய்ய வேண்டும்.
    • மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று ஆய்வு செய்தார். மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக அனைத்து பள்ளிகளில் சுண்ணாம்பு தீட்டி சுத்தம் செய்திருக்க வேண்டும்.

    ஆனால் தொரப்பாடி அரசு பள்ளியில் எந்தவிதமான முன் ஏற்பாடும் செய்யப்படவில்லை. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தாங்களாக அக்கறையுடன் முன்வந்து பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். தேவையான வசதிகளை கேட்டுப் பெற வேண்டும். அது அவர்களுடைய கடமை.

    தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பள்ளி வளாகத்தை விரைவில் சுத்தம் செய்ய வேண்டும். மோசமான சுவர்களுக்கு சுண்ணாம்பு அடித்து இருக்க வேண்டும்.

    இன்னும் இரண்டு வாரங்களில் நான் வந்து இங்கு ஆய்வு செய்வேன். அப்போது பணிகள் மேற்கொள்ள வில்லை என்றால் இங்கு பணிபுரியும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத் தரவேண்டும். மாணவர்கள் ஒழுக்கம் தவறும் பட்சத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் சரிவர பாடப்படுவது இல்லை.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் வகுப்பறைகளில்தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாட வேண்டும்.

    இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் மூலம் ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரோஜா பூ, சாக்லெட் கொடுத்து வரவேற்பு
    • பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    வேலூர்:

    கோடை விடுமுறைக்கு பிறகு இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர் கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

    அவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை தந்த மகிழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆர்ப்பரித்தனர்.

    கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த மழலையர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.சில குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல அடம் பிடித்து அழுது கொண்டே சென்றனர். அவர்களை பெற்றோர்கள் சமாதானம் செய்ததை காணமுடிந்தது.

    சில பள்ளிகளில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். மாணவ மாணவிகளுக்கு பூக்கள் வழங்கியும் மேளதாளத்துடன் வரவேற்று அழைத்து சென்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,266 அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. தொரப்பாடி மற்றும் அணைக்கட்டு அரசு பள்ளிகளில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி தொடங்கி வைத்தார். 

    • விழாவில் கருத்தரங்கு மலர் வெளியிடப்பட்டது
    • மருத்துவ நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர்:

    வேலூர் நறுவீ மருத்துவமனை வலி மருத்துவத்துறைசார்பில் தசைக்கூட்டு வலிக்கான மருத்துவம் குறித்து ஒருநாள் கருத்தரங்கு நேற்று நடந்தது.

    நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மருத்துவமனை மயக்க மருந்தியல் துறைத் தலைவர் மற்றும் கருத்தரங்கு அமைப்பாளர் டாக்டர் சரவணன் வரவேற்றார். கருத்தரங் கின் நோக்கம் குறித்து நறுவீ மருத்துவமனை செயல் இயக் குனர் டாக்டர் பால்ஹென்றி விளக்கி கூறினார்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வலி மருத் துவ நிபுணர் டாக்டர் மதன் பாண்டியன் கலந்து கொண்டு கருத்தரங்கு மலரை வெளியிட்டு பேசினார்.

    கருத்தரங்கில் முழங்கை, மணிக்கட்டு உடற்கூறியல், தோள்பட்டை, முழங்கை மற் றும் தோள்பட்டை அல்ட் ராசவுண்டு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வலி நிவாரண மருத்துவம் குறித்து மருத்துவ நிபுணர்கள் பேசினார்கள்.

    இதில் நறுவீ மருத்துவ மனை தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொதுமேலாளர் நிதின் சம்பத், வலி மருத்துவத்துறை தலைவர் மற்றும் கருத்தரங்கு அமைப்பாளர் டாக்டர்ஜெய சுதா, மருத்துவமனை டாக் டர்கள், செவிலியர்கள் மற் றும் தேசிய அளவில் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த மயக்க மருந்தியல் நிபுணர்கள், மூட்டுவலி மருத்துவ நிபுணர்கள், வலி நிவாரண நிபு ணர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பங்கேற்பு
    • இயற்கை உணவு பொருட்கள் விற்பனை

    வேலூர்:

    வேலூர் காந்திநகர் மகளிர் மன்ற வளாகத்தில் இயற்கை விவசாயிகளின் உற்பத்திகள், தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்களை மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் மக்கள் நல சந்தையை வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் அனைவரும் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். இவ்வாறு இயற்கை முறையில் விளைவித்த உணவு பொருட்களை நாம் சாப்பிடும் போது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாவதோடு, நம் உடல் நலத்தை பேணிக் காக்கலாம். அதேபோல் இயற்கை முறையில் உணவுப் பொருட்களை விளைவித்த விவசாயிகள் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கும் போதிய லாபம் கிடைக்கும்.

    இவ்வாறு இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளை மக்களாகிய நாம்தான் விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அப்போதுதான் இயற்கை விவசாயம் பெருகும், மக்களுக்கும் மருந்தில்லா இயற்கை உணவு பொருட்கள் கிடைக்கும் என்றார்.

    இந்த மக்கள் நல சந்தையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் மூலிகைகள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திகள் மாடி தோட்டத்திற்கான செடிகள், உரங்கள், குரோ பேக் பூச்சிவிரட்டி விதைகள் மற்றும் உண்பதற்கு தயாராக கொடுக்கப்படும் உணவுகள் என பல வகைகள் உள்ளன.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மக்கள் நல சந்தை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன், மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். விழாவில் தொழிற்கல்வி ஆசிரியர் ஜனார்த்தனன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அகரம்சேரி விநாயகபுரம் வளைவில் திரும்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • கார் கவிழ்ந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

    அணைக்கட்டு:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ராஜீவ்காந்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 51). தொழிலதிபர். இவரது மகன்கள் விக்ரம், யோகானந்தம், மருமகள்கள் பவித்ரா, சந்தானலட்சுமி, பேரக்குழந்தைகள் ஜோதிகா, நித்திகா, தஷ்வந்த் மற்றும் யோகானந்தத்தின் மாமியார் கற்பகம் (வயது 60) ஆகியோர் ஒரு காரில் நேற்று திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் காரில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். யோகானந்தம் காரை ஓட்டி வந்தார்.

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள அகரம்சேரி விநாயகபுரம் வளைவில் திரும்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையை விட்டு பாய்ந்து அங்கிருந்த அறிவிப்பு பலகை, பாறை, மரங்களின் மீது மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 8 பேரும் படுகாயமடைந்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கற்பகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் விநாயகபுரம் தேசிய நெடுஞ்சாலை வளைவில் அடிக்கடி விபத்துக்கள் நடந்ததால் அதை தடுக்க தடுப்புகள் அமைத்திருந்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தடுப்புகள் திடீரென அகற்றப்பட்டது.அதற்குப் பிறகு இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    மேலும் உடனடியாக விநாயகபுரம் வளைவில் தடுப்பு அமைக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி கொண்டா போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    விநாயகபுரம் வளைவில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • செயின் பறித்த மர்ம நபர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
    • பைக்கில் இருந்து தவறி விழுந்த அமுதா அவரது மகள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டை சேர்ந்தவர் தட்சுணாமூர்த்தி. உளவு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமுதா (வயது 43), மகள் சந்தியா (18) நேற்று இரவு தட்சிணாமூர்த்தி மனைவி மகளுடன் பைக்கில் வேலூர் வந்தார். இரவு பைக்கில் 3 பேரும் அணைக்கட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொய்கை அம்பேத்கர் சிலை அருகே வந்தபோது அவர்களை பின் தொடர்ந்து மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் சாலையில் வாகன போக்குவரத்து எதுவும் இல்லை. இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் அமுதா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பிடித்து இழுத்தனர்.

    இதில் நிலைதடுமாறி அவர்கள் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். செயின் பறித்த மர்ம நபர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    பைக்கில் இருந்து தவறி விழுந்த அமுதா அவரது மகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அமுதாவிற்கு காலில் எலும்பு முறிவும், சந்தியாவிற்கு முகத்தில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் போலீசார் இரவு வாகன சோதனை நடத்தினர்.
    • வேனில் மேலும் சில போதை பொருட்கள் இருந்தது தொடர்பாக உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வேலூர்:

    பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வேலூர் வழியாக குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்துகின்றனர்‌. இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் பள்ளிகொண்டா போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த மினி வேனை மடக்கி சோதனையிட்டனர்.

    அதில் தடைசெய்யப்பட்ட குட்காவை மூட்டைகளில் கட்டி வைத்திருந்தனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம். குட்காவை போலீசார் மினி வேனுடன் பறிமுதல் செய்தனர். இந்த வேனில் மேலும் சில போதை பொருட்கள் இருந்தது. இது தொடர்பாக உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து பெங்களூருவை சேர்ந்த ரமேஷ், ராஜேஷ் ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

    குட்கா எங்கிருந்து யாருக்கு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டும் பைக் திருட்டு சம்பவங்கள் குறையவில்லை.
    • தனியாக குற்றப் பிரிவு போலீசாரை நியமிக்க வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைகளாக ஒருபக்கம் காட்பாடி ரோட்டில் சென்றாம்பள்ளி கிராமம், வேலூர் ரோட்டில் ஹைதர்புரம் வரையிலும், பலமநேர்ரோட்டில் லட்சுமணாபுரம் வரையிலும், சித்தூர் ரோட்டில் முனாப்டிப்போ வரையிலும், பேர்ணாம்பட்டு ரோட்டில் லிங்குன்றம் வரையிலும், மேல்பட்டி ரோட்டில் போஜனாபுரம் வரையிலும் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைகளாக உள்ளன.

    சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையம், குடியாத்தம் நகராட்சி மற்றும் ஏராளமான கிராமங்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ளது.

    குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குள் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள், பீடி தொழிற்சாலைகள், கைத்தறி நெசவு கூடங்கள், காலனி தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலை, பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் என ஏராளமாக உள்ளது மேலும் குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் மிகப்பெரிய தினசரி மார்க்கெட் உள்ளது உழவர் சந்தையும் உள்ளது வேலூர் மாவட்டத்திலேயே அதிக அளவு நகை கடைகளையும் குடியாத்தம் நகரில் உள்ளடக்கியுள்ளது.

    குடியாத்தம் டவுன் தாண்டி தமிழகத்தின் பிற பகுதியிலிருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு வியாபாரத் தளமாகவும் குடியாத்தம் நகரம் அமைந்துள்ளது.

    குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தாலும் புகாரை பெறுவதிலும் காவலர்கள் இல்லை பெற்றுக் கொண்டாலும் சரியான பதில் இல்லை உடனடி நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் உள்ளது.

    அதேபோல் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படாத நாளே இல்லை எனக் கூறும் அளவிற்கு குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெற்ற வண்ணம் உள்ளது. குறிப்பாக அரசு மருத்துவமனை சாலையில் மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வரும் அவரது உறவினர்கள் நோயாளிகள் உடைய மோட்டார் சைக்கிள் திருடு போகிறது, அதேபோல் பஸ் நிலையம், உழவர் சந்தை பஜார், சந்தப்பேட்டை, நேதாஜிசவுக் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் திருடுபோன வண்ணம் உள்ளது.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தும் அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை பெரும்பாலான வாகனங்கள் இன்சூரன்ஸ் காலாவதியாகி உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது சிக்கலாக உள்ளது. இருப்பினும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக குடியாத்தம் டவுன் பகுதியில் திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் குடியாத்தம் கிராமிய பகுதிகள் மற்றும் பேர்ணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூகவிரோத செயல்கள் செயல்படுபவர்கள் மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அந்த மோட்டார் சைக்கிள்களை பெரும்பாலும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் கர்நாடக மற்றும் ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. குடியாத்தம் டவுன் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் குறையவில்லை.

    திருட்டு சம்பவங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் குடியாத்தம் பகுதிக்கு தனி கவனம் செலுத்தி வேலூரில் உள்ளதுபோல் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய த்திற்கு தனியாக குற்றப்பிரிவு அமைக்க வேண்டும் அதற்காக இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இருப்பினும் இது நாள் வரை மோட்டார் சைக்கிள்களில் பறிகொடுத்த பொதுமக்களின் புகார்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

    • அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • நண்பர்கள் கண்முன்னே பரிதாபம்.

    வேலூர்:

    வேலுார் அருகே உள்ள அமிர்தி சிறு வன உயி ரியியல் பூங்கா அருகே வனப்பகுதியில் அமிர்தி அருவி அமைந்துள்ளது. மிகவும் ஆபத்தான இங்கு ஏற்கனவே பலர் பலியாகி யுள்ளனர்.

    இதனால், அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு யாரும் செல்லாத வகையில் வனத்துறையினர் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அருயில் குளித்த நபர்கள்

    வேலுார் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த முக்தர்சி (வயது 21), கிஷோர் (19), விருபாட்சி புரம் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (19), ஆதிஷ் (17), சூர்யா (18) இவர்கள் விருதம்பட்டு பாக ஆற்றங்கரையோரம் உள்ள பிரபல சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வருகின்றனர்.

    5 பேரும் நண்பர்கள்.இவர்கள் அமிர்தி பூங்காவுக்கு நேற்று மாலை பைக்கில் சென்றனர். பைக்கை அங்கு நிறுத்தி விட்டு, பூங்காவில் உள்ள வனவிலங்குகளை சுற்றிப் பார்த்து ரசித்தன. அப்போது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    பின்னர் வனப்பகுதியில் உள்ள அருவிக்கு செல்ல முடிவு செய்தனர். பூங்காவின் அருகே வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இவர்கள் பூங்காவை ஒட்டி உள்ள ஆற்றில் இறங்கி அந்த ஆற்றின் வழியாகவே அருவிக்கு நடந்து சென்றனர். தொடர்ந்து, 5 பேரும் அருவியில் உற்சா கமாக குளித்துள்ளனர்.

    அதன்பிறகு, அருவியின் மேல்பகுதியில் நின்றப டியே 5 பேரும் சேர்ந்து ' செல்பி ' எடுத்தனர். அப்போது, எதிர்பாராதவி தமாக கால் வழுக்கியதில் முக்தர்சி அருவியில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதைக்கண்டு திடுக்கிட்ட அவரது நண்பர்கள் அவரை காப் பாற்ற முயன்றனர்.

    இதில் யாருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கிய வாலிபரை மீட்க முடியாமல் தவித்தனர்.மேலும் அவரை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    அனைவரது பேண்டையும் கயிறு போல கட்டி தண்ணீரில் இறங்கி மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதற்குள் புதைசேற்றில் மூழ்கிய வாலிபர் முக்தர்சி பரிதாபமாக இறந்தார்.

    இதனால் கதறி துடித்த நண்பர்கள் 4 பேரும், அமிர்தி வனச்சரக அலுவலகத்துக்கு வந்து நடந்த சம்பவத்தை கூறி அழுதனர். இதையடுத்து, வனச்ச ரகர் முருகன், வனவர் ரவீந்திரன் மற்றும் வனத் துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று, நீரில் குதித்து முக்தர்சி உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து ஜமுனா மரத்தூர் போலீ சாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அதன்பேரில், போளூர் டி.எஸ்.பி.குமார் அங்கு சென்று விசா ரணை மேற் கொண்டார். தொடர்ந்து, முக்தர்சி உடலை கைப் பற்றி பிரேத பரிசோத னைக்காக வேலுார் அடுக் கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் தனர்.

    மேலும், இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமிர்தி அருவிப் பகுதியில் ஆழமான பள்ளங்கள் சேரும் சகதியுமாக உள்ளன‌ இதனால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி யாரும் அருவிப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வனத்துறை யினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • 2 பீரோக்களை உடைத்து கைவரிசை.
    • துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது துணிகரம்

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 46).இவர் கிருஷ்ணகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக வேலை செய்து வருகிறார் இவரது மனைவி பரமேஸ்வரி. பரமேஸ்வரியின் தந்தை மேல் பாடியில் கடந்த வாரம் காலமானார்.

    அவரது காரியம் இன்று நடைபெறுவதால் நேற்று காலை வீட்டை பூட்டி கொண்டு அனைவரும் மேல்பாடி சென்று இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சங்கரின் வீட்டின் முன்பாக இருந்த மதில் சுவரின் மீது ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். அங்கு அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்தனர். பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டனர். பீரோவில் இருந்த கவரிங் நகைகளை மட்டும் அப்படியே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    இன்று காலை சங்கரின் எதிர்த்து வீட்டை சேர்ந்தவர் பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சங்கருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் மேல்பாடியில் இருந்து இன்று காலை வீட்டிற்கு வந்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் முத்துக்குமார சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோவில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1965 இடங்களில் நடந்தது.
    • 2 கட்டிடங்களை இடிக்க உத்தரவு.

    வேலூர்:

    கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 1965 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. வேலூர் மாநகராட்சியில் 434 இடங்களிலும் காட்பாடி ஒன்றியத்தில் 267, குடியாத்தம் 369,பேரணாம்பட்டு 183,கே.வி.குப்பம் 299,அணைக்கட்டு 799, கணியம்பாடி 130 முகாம்கள் நடந்தன.

    வேலூர் கஸ்பா மாசிலாமணி அரசு பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    பின்னர் பள்ளி வளாகத்தில் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்த 2 கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பேருக்கு செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. 2-வது தவணை 90 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    மீதம் உள்ளவர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைக்க அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அவ்வாறு பள்ளிகளை தூய்மைப்படுத்தாத தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் திறந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வார காலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, நகர்நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×