என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிகொண்டா அருகே கார் கவிழ்ந்து பெண் பலி-பொதுமக்கள் மறியல்
- அகரம்சேரி விநாயகபுரம் வளைவில் திரும்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
- கார் கவிழ்ந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
அணைக்கட்டு:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ராஜீவ்காந்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 51). தொழிலதிபர். இவரது மகன்கள் விக்ரம், யோகானந்தம், மருமகள்கள் பவித்ரா, சந்தானலட்சுமி, பேரக்குழந்தைகள் ஜோதிகா, நித்திகா, தஷ்வந்த் மற்றும் யோகானந்தத்தின் மாமியார் கற்பகம் (வயது 60) ஆகியோர் ஒரு காரில் நேற்று திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் காரில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். யோகானந்தம் காரை ஓட்டி வந்தார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள அகரம்சேரி விநாயகபுரம் வளைவில் திரும்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையை விட்டு பாய்ந்து அங்கிருந்த அறிவிப்பு பலகை, பாறை, மரங்களின் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 8 பேரும் படுகாயமடைந்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கற்பகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் விநாயகபுரம் தேசிய நெடுஞ்சாலை வளைவில் அடிக்கடி விபத்துக்கள் நடந்ததால் அதை தடுக்க தடுப்புகள் அமைத்திருந்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தடுப்புகள் திடீரென அகற்றப்பட்டது.அதற்குப் பிறகு இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் உடனடியாக விநாயகபுரம் வளைவில் தடுப்பு அமைக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி கொண்டா போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விநாயகபுரம் வளைவில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






