என் மலர்
வேலூர்
- 7,180 பேர் தேர்வு எழுத வரவில்லை.
- தேர்வு மையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
வேலூர்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில் குரூப்-4 பல்வேறு பதவிகளுக்கான தேர்வு இன்று நடந்தது.
வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி. குப்பம், காட்பாடி மற்றும் பேரணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
வேலூர் மையத்தில் 65, அணைக்கட்டு 13, குடியாத்தம் 27, கே.வி.குப்பம் 8, காட்பாடி 25, பேர்ணாம்பட்டு 4 தேர்வு கூடங்களில் தேர்வு நடந்தது. வேலூர் மாவட்டம் முழுவதுமாக 41,307 தேர்வர்கள் தேர்வு எழுதினர்.
ஒவ்வொரு தேர்வு மையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுத 41,307 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இன்று காலை 34,127 பேர் தேர்வு எழுதினர். 7,180 பேர் தேர்வு எழுத வரவில்லை.
- 948 இடங்களில் நடந்தது
- பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் இன்று 948 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முன்னதாக தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் 32 வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் மையங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகரப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 948 மையங்களில் இன்று காலை முதல் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
- பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளையர்கள் கையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது.
- பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளையர்கள் கையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது.
வேலூர்:
வேலூர், பூந்தோட்டம், சகுந்தலா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சுப்ரியா. இருவரும் அரசு டாக்டர்களாக உள்ளனர். மேலும் வேலப்பாடியில் தனியாக கிளினிக் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு கொச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் 2 பேர் இன்று அதிகாலை 2 மணி அளவில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 10 பவுன் நகைகள் மற்றும் அடுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக் கொண்டனர்.
மேலும் பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளையர்கள் கையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது. அதனை கொள்ளையர்கள் கவனிக்காததால் பணம் தப்பியது.
இன்று காலை வீட்டு வேலை செய்யும் பெண் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் டாக்டர் மணிகண்டனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து மணிகண்டன் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். வேலூர் டவுன் டி.எஸ்பி திருநாவுக்கரசு இன்ஸ்பெக்டர்கள் சியாமளா மற்றும் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தபடி வேலப்பாடி பஸ் நிலையம் வரைசென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
எதிர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சி.சி.டி.வி கேமராவில் பதிவானவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலை மறியலில் ஈடுபட முயற்சி
- சார்ப்பனாமேட்டில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
வேலூர்:
வேலூர் சார்ப்பனாமேடு தேவராஜ் நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வந்தது. அந்த மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து மையத்தில் குப்பை பிரிக்கப்படும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்தப் பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர். குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி இன்று அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்ததும் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து குப்பை கொட்டுவதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ரேசன் கடை அங்கன்வாடி மையம் போன்றவை செயல் படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
நோய் பரவும் அபாயமும் உள்ளது. இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் குப்பை கொட்டுவது தடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- பா.ஜ.க சார்பில் நடந்தது
- ஏாளமானோர் கலந்து கொண்டனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி சிறப்புரையாற்றினார்.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன், பாபு, மகேஷ், மாவட்ட பொருளாளர் தீபக், மாவட்ட துணை தலைவர் ஜெகன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், தேசிய பொதுக்குழு பிச்சாண்டி, மாநில வணிக பிரிவு செயலாளர் இளங்கோ, சிறுபான்மை பிரிவு தலைவர் சையத் முனிவர், எஸ்.சி.அணி தலைவர் சக்கரவர்த்தி, மகளிர் அணிதலைவி செல்வி, ரேகா, கனிமொழி, சுகுணா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.
- காலை 9 மணிக்கு பிறகு வந்தால் அனுமதி இல்லை
- முகக்கவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தல்
வேலூர்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில் குரூப்-4 பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாளை காலை நடைபெற உள்ளது.
வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி. குப்பம், காட்பாடி மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் தேர்வமைப்பாளர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர் மையத்தில் 65, அணைக்கட்டு 13, குடியாத்தம் 27, கே.வி.குப்பம் 8, காட்பாடி 25, பேர்ணாம்பட்டு 4 தேர்வு கூடங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதுமாக 41,307 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இது தவிர, ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் பாதுகாப்பிற்கு ஒரு போலீஸ் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்திற்கு பைகள், புத்தகங்கள் மற்றும் செல்போன் கால்குலேட்டர், பேஜர், போன்ற மின்னணு சாதனங்களை கண்டிப்பாக எடுத்துவரக் கூடாது.
கொரோனா காலமாக இருப்பதால் கொரோனா விதிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும், முகக்கவசம் கட்டாயம் அணியுமாறும், சிறிய அளவிலான கை சுத்தம் செய்யும் திரவத்தினை எடுத்து செல்லுமாறும் தெரிவிக்கப்படுகிறது.
தேர்வர்கள் 8.30 மணி முதல் 9 மணிக்குள்ளாக தேர்வுக் கூடத்திற்குள் சென்றிருக்க வேண்டும். 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வுக் கூடங்களிலும் விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இன்றி தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் விசாரணை
வேலூர்:
சென்னையிலிருந்து வேலூர் நோக்கி இன்று காலை பைக்கில் 2 பெண்கள் வந்து கொண்டிருந்தனர்.ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது அவர்களுக்கு பின்னால் கர்நாடகா மாநில தனியார் பஸ் வந்தது.
திடீரென அந்த பஸ் பெண்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். அங்கிருந்த பொதுமக்கள் இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பலியானவர் குடியாத்தம் காளியம்மன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் வித்யா (வயது21) என்பதும், படுகாயமடைந்தவர் அவரது தாயார் பிரேமா (49) என்பது தெரியவந்தது.இந்த விபத்தில் தாய் கண்முன்னே மகள் பலியானார்.
படுகாயமடைந்த பிரேமாவை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான வித்யா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ரங்காபுரத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
- குடியாத்தம் நகராட்சி சார்பில் நடந்தது
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சி சார்பில் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவி களுக்கான தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம் எஸ் அமர்நாத் தலைமை தாங்கினார். நகர மன்ற உறுப்பினர்கள் இ.ஜாவித்அகமது, என். கோவிந்தராஜ், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ கிறிஸ்டி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாணவி களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.மாணவிகள் தூய்மையான நகரம் அதற்கான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியை சரளாதேவி, தூய்மை பாரதம் மேற்பார்வையாளர் ராஜேந்திரன், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் சாமுண்டீஸ்வரி, பென்னி, சதீஷ்குமார் உள்பட, பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் நன்றி கூறினார்.
- சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
வேலூர்:
ஆடி கிருத்திகையை யொட்டி முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று முதல் முருகன் கோவில்களில் விழா களைகட்ட தொடங்கியது.
ஆடிக்கிருத்திகை விழா
இந்த நிலையில் பரணி கிருத்திகையையோட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இன்று அனைத்து முருகர் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா நடந்தது.
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமன பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
வேலூர் ராணிப்பேட்டை பகுதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை கோவில், கரிகிரி 66 புத்தூர் மலையில் உள்ள முருகன் கோவில், ரத்தினகிரி பாலமுருகன் கோவில், காட்பாடி காங்கேயநல்லூர் முருகன் கோவில், ஓடைப்பள்ளியார் கோவில் அமைந்துள்ள முருகன் கோவில், சைதாப்பேட்டை பழனியாண்டவர் கோவில், பாலமதி குழந்தை தண்டாயுதபாணி உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பாத யாத்திரையாக காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து திருத்தணிக்கு நேற்று முன்தினம் முதல் 170 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில் கைலாசகிரி மலை, மகாதேவமலை, வள்ளிமலை, பாலமதி உள்ளிட்ட முருகன் கோவில்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அணைக்கட்டு அருகே வேலாடும் தணிகை மலை பாலமுருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மலர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திகடன் செலுத்தினர். இதையொட்டி மூலவர் பாலமுருகன் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு
- வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தினர்
ஆற்காடு
ஆற்காடு நகராட்சிக்கு உட் பட்ட பாரதிதாசன் தெரு, தேவி நகர் பகுதியை சேர்ந்த மாணவர் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.
அவருக்குலேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரை ஆற்காட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது காய்ச்சல் அதிகமானதால் வேலூரில் உள்ள தனியார் மருத் துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றனர். அங்கு பரிசோ தனை செய்ததில் மாணவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆற்காடு தேவி நகர் பாரதிதாசன் தெருவில் மாவட்ட மலேரியா அலுவலர் பிரேமா, ஆற்காடு நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்புரவு பணியாளர்களைக்கொண்டு அனைத்து வீடுகளை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்கள், தேங்கியுள்ள நீர் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.
பின்னர் அனைத்து வீடுகளிலும் மருந்து தெளித்து, கொசு ஒழிப்பு புகை அடிக்கப்பட்டது. அப்போது துப்புரவு அலுவ லர் பாஸ்கர், துப்புரவு ஆய்வாளர் சத்தியமூர்த்தி மற்றும் களப்பணியாளர்கள் உடன் இருந்தனர் .
- திருப்பாற்கடல் பகுதியில் நடந்தது
- அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
நெமிலி :
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் ஊராட்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அந்த ஊராட்சியில் செய்துள்ள திட்ட பணிகள் மற்றும் செய்யப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.
அப்போது அவருடன் திருப்பாற்கடல் ஊராட்சி மன்ற தலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்த தனஞ்ஜெயன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
- விவசாயிகள் மகிழ்ச்சி
- கிலோவிற்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை உயர்ந்துள்ளது
நெமிலி :
நெமிலி காவேரிப்பாக்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிகமாக நெல் மற்றும் வாழை பயிர்களை பயிர் செய்துள்ளனர்.
இருந்த போதிலும் ஒரு சிலர் பூந்தோட்டபயிர்களான சம்பங்கி, கனகாம்பரம் முல்லை, போன்ற பூக்களை வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடி மாதம் கிருத்திகையை முன்னிட்டு பூக்களின் விலை சென்ற வாரத்தை விட இந்த வாரம் கிலோவிற்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






