என் மலர்tooltip icon

    வேலூர்

    • அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்
    • தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

    இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று 10 பள்ளிகளை சேர்ந்த 1968 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி பேசியதாவது:-

    மாணவர்களின் கல்வி இடைநிற்றல் தடுக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு உதவிகளை தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

    அதில் ஒரு திட்டம்தான் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்.

    மாணவர்கள் அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளை பயன்படுத்தி உயர்கல்வி பயில வேண்டும்.

    ஆட்சிகள் மாறினாலும் பள்ளி மாணவர்களுக்காக கொண்டுவரப்படும் திட்டங்கள் நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    வேளாண்மை செழிக்கும் வகையிலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு அணைக்கட்டு பகுதியில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் அணைக்கட்டு பகுதியில் புதிய தொழில் பேட்டை ஒன்றும் அரசு கல்லூரியும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில்:-

    ஆந்திரா அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படாமல் தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்.

    மேட்டூர் உபரி நீர் திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது, வாய்ப்பு இருந்தால் பிற மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்படும்.

    தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லை அதற்கான இட வசதியோ நீர்வரத்தோ இல்லை என்றார்.

    • எதிர்பாராத விதமாக குட்டையில் தவறி விழுந்து இறந்தார்
    • சிறுவனை தேடிய போது பிணமாக மிதந்தான்

    வேலூர்:

    பழைய காட்பாடியை சேர்ந்தவர் ராஜ்குமார். மளிகை கடை வைத்துள்ளார்.இவரது மகன் நிதிஷ்குமார் (வயது 4). நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிதீஷ் குமார் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான்.

    யாரும் பார்க்காததால் தண்ணீரில் மூழ்கிய சிறுவன் மூச்சுதிணறி இறந்தான். குழந்தையை காணவில்லை என தேடிய போது தொட்டியில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. காட்பாடி போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியானா மாநிலம் சண்டிகர் பகுதியை சேர்ந்தவர் குனல் கபூர் (21) வேலூர் அருகே உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று நண்பர்களுடன் கரிகிரி கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக குட்டையில் தவறி விழுந்து இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருவலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த போலீஸ் பாதுகாப்பு
    • போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் நடந்தது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கடந்த 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர், இந்து முன்னணியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    சில இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மறுநாளே கரைக்கப்பட்டது. பெரும்பாலான விநாயகர் சிலைகள் நேற்று முன்தினம் நெல்லூர் பேட்டையில் ஏரியில் கரைக்கும் நிகழ்ச்சிக்கு நடைபெற்றது.

    குடியாத்தம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது நேற்று முன்தினம் குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோவிலின் அருகில் இருந்து ஏராளமான விநாயகர் சிலைகள் ஊர்வலமா சென்று நெல்லூர் பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டது

    2-வது நாளாக நேற்று குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 8அடி முதல் 15 அடி உயரத்தில் ஆன விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று இரவு நெல்லூர் பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டது.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் நகரில் உள்ள பல்வேறு விநாயகர் சிலைக்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.நகரின் முக்கிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் 2வது வட்ட மாநாடு மற்றும் கல்வெட்டு திறப்பு விழா, கொடியேற்று விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கினார். வட்டத் துணைத் தலைவர்கள் எம்.பழனிவேல், வி.கோகுல், வட்ட இணை செயலாளர்கள் டி.உமாபதி, எஸ்.மணிவண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பாஸ்கர், ஜெ.வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் எஸ்.வினோத்குமார் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் கே.பெருமாள், மாநில துணைத்தலைவர் ஆர். ரவி, மாவட்டத் தலைவர் எம்.ஜெய்சங்கர், மாவட்ட இணை செயலாளர் ஜி. துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

    இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் தேர்வாணையம் மூலம் நிரப்பக் கோரி கோருதல், ஓட்டுநர் பதவி உயர்வு வழங்க கோருதல், கிராம உதவியாளர்களை கிராம பணியை தவிர இதர பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் வட்ட பொருளாளர் எம்.வீரமணிகண்டன் நன்றி கூறினார்.

    கிராம வருவாய் ஊழியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஒரே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர், இளம்பெண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • 2 பேர் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை வாணியம்பாடியான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அஜித்குமார் (வயது 26). பால் வியாபாரம் செய்து வந்தார்.

    நேற்று இரவு செட்டிகுப்பம் காளியம்மன் கோவில் குட்டை அருகே அஜித்குமாரின் மோட்டார் சைக்கிள் செருப்பு, செல்போன் பர்ஸ் உள்ளிட்டவை கிடந்தது.

    இதனை கண்டதும் கிராம மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 15 அடி ஆழமுள்ள குட்டையில் இறங்கி தேடினர்.

    2 மணி நேர தேடுதலுக்கு பின் அஜித்குமார் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித் தவறி விழுந்து இறந்தாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் ரீட்டா (22) காட்பாடியில் உள்ள கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். ரீட்டா நெல்லூர் பேட்டை ஊராட்சியில் 9-வது வார்டு உறுப்பினராகவும் இருந்தார்.

    இந்நிலையில் ரீட்டா நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஒரே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர், இளம்பெண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 2 பேர் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருதயம் சென்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது
    • வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளது

    வேலூர்:

    ஆரணி அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 43). நேற்று முன்தினம் சாலை விபத்தில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கலைச்செல்வியை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நேற்று இரவு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து கலைச்செல்வியின் சிறுநீரகம் இருதயம் கல்லீரல் கண்கள் ஆகியவை சென்னையில் உள்ள காவேரி, பிரதாப் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.

    அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டதில் இருந்து முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளது.

    இது போன்ற உடல் உறுப்புகள் தானம் இனிமேல் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • குடும்பத்துடன் வந்து சிலைகளை கரைத்தனர்
    • பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்தனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    பொதுமக்களும் பலர் தங்களது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

    அதைத்தொடர்ந்து வேலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது சிலைகள் அனைத்தும் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டன.

    தற்போது தொடர் மழை காரணமாக வேலூர் பாலாற்றில் வெள்ளம் செல்வதால் ஏராளமான பொதுமக்கள் சிலைகளை கரைத்தனர்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலாற்று பாலங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட சிலைகளை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    பின்னர் சிலைகளை பாலாற்றில் தூக்கி வீசி கரைத்தனர். சிலர் பாலாற்றில் இறங்கி கரையோரம் பூஜை செய்து வழிபட்டனர்.

    இதே போல பாலாற்றின் கரையோரம் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான சிலைகளை பொதுமக்கள் கரைத்தனர்.

    வீடுகளில் இருந்து குடும்பத்துடன் வந்து சிலைகளை கரைத்து சென்றனர்.

    சிலைகளை ஆற்றில் தூக்கி வீசிய குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.

    இதனால் பாலாற்று பாலம் பரபரப்பாக காணப்பட்டது.

    • முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கடந்த 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வைக்கப்பட்டு தினம்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது, பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர், இந்து முன்னணியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    சில இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மறுநாளே கரைக்கப்பட்டது. பெரும்பாலான விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டது.

    குடியாத்தம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது நேற்று மாலையில் குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோவிலின் அருகில் இருந்து ஏராளமான விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது.

    இந்த ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் கோபி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் கலந்து கொண்டார்.

    நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேல தாளங்களுடன், இளைஞர்கள் வீர விளையாட்டுகள் விளையாடி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    காங்கிரஸ் ஹவுஸ் ரோடு, அண்ணாசாலை, பழைய பஸ்நிலையம், காமராஜர்பாலம், தாழையாத்தம் பஜார், சந்தப்பேட்டை பஜார், நேதாஜி சவுக், பேரணாம்பட்டுரோடு, காந்தி சவுக்கு வழியாக நெல்லூர் பேட்டை ஏரியில் இரவு கரைக்கப்பட்டது பல மணி நேரம் ஊர்வலமாக சென்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

    விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் ஊர்வலத்துடன் சென்றனர்.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேற்று காலை முதலே குடியாத்தத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் நகரில் உள்ள பல்வேறு விநாயகர் சிலைக்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நகரின் முக்கிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    முன்னதாக நெல்லூர் பேட்டை பெரிய ஏரியில் விநாயகர் சிலை கரைக்கும் இடத்தை பார்வையிட்டு முன்னேற்பாடுகள் குறித்து குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது நகர மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • எம்.எல்.ஏ., அதிகாரிகள் ஆய்வு
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சி 2வது வார்டு சித்தூர் கேட் 4வது புதுஆலியார் தெரு பள்ளம் பகுதியில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்பதாகவும், மழைக்காலங்களில் மழை நீர், கழிவு நீருடன் சேர்ந்து குடியிருப்புகள் சுற்றி தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதாகவும். மேலும் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும் இது குறித்து அப்பகுதிப் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்தனர்.

    மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லை என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய் கட்டித் தர வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் புது ஆலியார்தெரு பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய்கள் கட்டிதர வேண்டும் எனவும் வெளிப்பகுதியில் இருந்து கழிவுநீர் இப்பகுதியில் புகுவதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது பொதுமக்களிடம் இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து சர்வே செய்து ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    ஆய்வின்போது நகர மன்ற உறுப்பினர்கள் அன்வர்பாஷா, ம.மனோஜ், என்.கோவிந்தராஜ், ஏ.தண்டபாணி, சீஊர் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி, துணைத்தலைவர் அஜீஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தி‌.மு‌.க. அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு மோதல்-பரபரப்பு
    • குழந்தைகள் உயிரோடு விளையாடாதீர்கள்.. நிர்வாக திறமையை மறைக்காதீர்கள்... என கோஷம்

    வேலூர், செப்.3-

    வேலூர் சத்துவாச்சாரி ஆவின் நிறுவனத்தில் இருந்து கடந்த சில நாட்களாக பால் சப்ளை தாமதமாக செல்கிறது. ஒப்பந்த பணியாளர்கள் பணிக்கு வராததால் பால் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பால் முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு பகுதிகளுக்கு ஆவின் பால் சப்ளை தாமதமாக அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆவின் பால் சப்ளை தொடர்பாக வேலூர் மாவட்ட தி.மு.க, அ.தி.மு.க தொழில்நுட்ப பிரிவினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

    திமுக தொழில்நுட்ப பிரிவு சார்பில் வேலூர் மாவட்ட குழந்தைகளின் உயிரோடு விளையாடிய அ.தி.மு.க. முன்னாள் ஆவின் சேர்மனை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அதில் வேலூர், குடியாத்தம், ஆற்காடு ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற பகுதிகளின் ஆவின் பால் வினியோகம் தடைப்பட்டதாக பொது மக்களிடமிருந்து புகார் வந்தது இதற்கான முழு காரணம் கடந்த 10 வருடமாக ஆட்சியில் இருந்த அதிமுகவும் அதற்கு சேர்மனாக இருந்தவரும்தான்.

    வேலூர் பால் பண்ணையில் 125 க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணி செய்து வந்தார்கள், இந்த ஒப்பந்த ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்வர்கள்.

    அதிமுக ஆதரவு ஊழியர்கள் சுமார் 35 பேர் விநாயகர் சதுர்த்தியன்று வேலைக்கு வர வில்லை, அவர்கள் தான் இரவில் பால் பாக்கெட்டுகளை பேக்கிங் செய்பவர்கள் அவர்கள் எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி அன்று இரவு வராத காரணத்தினால் இரவில் சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்ய வேண்டிய இடத்தில் சுமார் 35 ஆயிரம் பால் பாக்கெட்டுக்கள் மட்டுமே பேக் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது என்று கூறி உள்ளனர்.

    இதற்கு பதிலளித்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவினர் சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    நிர்வாக திறமையற்ற அரசின் செயல்படாத, மெத்தனப் போக்கான அதிகாரிகளின் செயலை கண்டிக்க இயலாமலும், பால் சப்ளை கிடைக்கவில்லை என்ற மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியை மூடிமறைக்கவே, அ.தி.மு.க. ஆலின் சேர்மன் மீது தேவையற்ற, உண்மைக்கு புறம்பாக செய்தியை பரப்ப வேண்டும் என்ற நோக்கோடு தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப அணி ஒரு வெத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு 15 மாதங்களாக வேலூர் ஆவினில் நிர்வாக குழு கூட்டமோ அல்லது பொதுக்குழு கூட்டமோ நடத்தப்படவில்லை.

    வேலூர் மாவட்ட ஆவின் அதிகாரிகளே, நிர்வாகத்தை துறை சார்ந்த அமைச்சரின் கட்டுப்பாட்டில் நேரடியாக, நடத்தி வருகின்றனர்.

    ஆளுங்கட்சியின் மேற்பார்வையில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள், முன்னாள் சேர்மன் சொல்லிக்கொடுத்து இரவுப் பணிக்கு வராமல் நின்று விட்டார்கள் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.

    பணிக்கு வராமல் போன ஒப்பந்த ஊழியர்களை கண்காணித்து, வேலை வாங்க வேண்டிய அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதும் விசித்திரமாக உள்ளது.தங்கள் நிர்வாக சீர்கேட்டை மறைத்து, இயலாமையை மூடிமறைக்க தேவையற்ற விஷம பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    இந்த மோதல் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஊர்வல பாதை 3 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது
    • 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள், பொது மக்கள் மற்றும் தனி நபர்கள் என மொத்தம் 976 சிலைகள் நிறுவப்பட்டன.

    வேலூர் மாநகரப் பகுதியில் ஏராளமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை நேற்று கொண்டு சென்று கரைத்தனர்.

    3-வது நாளான நேற்று வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டன.

    இதனையொட்டி பாதுகாப்பு பணியில் மாவட்டத்தில் மொத்தம் 1500 போலீஸ் மற்றும் கூடுதலாக 261 பயிற்சி போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஊர்வலத்தின் போது அசம்பாவிதம் நடவாமல் தடுக்கவும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையில் 3 ட்ரோன் மேராக்கள் மூலம் கண்காணித்தனர்.

    விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக சதுப்பேரி ஏரியில் கிரேன் வசதி, மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை பொதுமக்கள் அங்கு கொண்டு சென்று கரைத்தனர். நள்ளிரவு 1.30 மணிவரை சிலைகள் கரைக்கபட்டன.

    • டிரைவர், கண்டக்டரை கத்தியை காட்டி கொலை மிரட்டல்
    • பெண் பயணி காயம்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பணிமனையில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று குடியாத்தம் மோர்தனா கிராமத்திற்கு சென்று வருகிறது.

    நேற்று மாலையில் சுமார் 4.45 மணி அளவில் அந்த டவுன் மோர்தானா கிராமம் சென்று கொண்டிருந்தபோது சேங்குன்றம் கிராமம் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவர் சாலையின் குறுக்கே நின்று குடிபோதையில் கத்தியை காட்டி கலாட்டா செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கற்களை எடுத்து பஸ் மீது சரமாரியாக வீசினார்.

    இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்தது மற்றும் பக்கவாட்டில் இருந்த நான்கு கண்ணாடிகள் உடைந்தது. கண்ணாடி துண்டுகள் விழுந்து ஒரு பெண் பயணிக்கு காயம் ஏற்பட்டது.

    அப்போது டிரைவர் சவுந்தரராஜன் கண்டக்டர் சீனிவாசன் கீழே இறங்கி வந்தபோது அவர்களை அந்த பூவரசன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதை தொடர்ந்து பயணிகள் வேறு பஸ்சில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர் கண்ணாடி துண்டுபட்டு காயமடைந்த பெண் பயணி குடியாத்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    தொடர்ந்து அந்த பூவரசன் அந்த வழியாக சென்ற தனியார் பஸ்சையும் வழிமறித்து தகராறு செய்துள்ளார். அந்த வழியாக ஆந்திராவிற்கு சென்ற காரை நிறுத்தி தகராறு செய்து காரில் இருந்த நபரை கத்தியால் வெட்டியுள்ளான்.

    அவர்கள் பயந்தபடியே சென்று விட்டனர் இதனை தொடர்ந்து டவுன் பஸ் டிரைவர் சவுந்தர்ராஜன், கண்டக்டர் சீனிவாசன் ஆகியோர் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி பஸ் கண்ணாடி உடைத்து கொலை மிரட்டல் விடுத்த பூவரசன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகிறார்.

    பூவரசன் தொடர்ந்து பல்வேறு குற்ற நடவடிக்கைகள் ஈடுபட்டு வந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×