என் மலர்
வேலூர்
- 3 கத்திகள், பெப்பர் ஸ்பிரே பறிமுதல்
- பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மத்திய ஜெயிலில் இருந்த கூலிப்படையை சேர்ந்த ரவுடி மதுரை பாலா (வயது 35) என்பவரை வேலூர் ஆயுதபடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில் போலீசார் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அவரை அங்கு 5 பேர் கொண்ட கும்பல் போலீசாரின் முகத்தில் பெப்பர் ஸ்பிரேயை அடித்துவிட்டு பாலாவை கொலை செய்ய முயன்றனர். எனினும் போலீசார் பாலாவை காப்பாற்றினர். தப்பியோடியவர்களை 5 பேரை போலீசார் துரத்தி பிடித்தனர்.
அப்போது போலீஸ்காரர்கள் பாரதி, பிரசாந்த், வெங்கடேசன் ஆகியோர் 3 பேரை பிடித்தனர். பாரதி என்பவருக்கு கையில் வெட்டு விழுந்தது.
பிடிபட்டவர்களிடம் இருந்து 3 கத்திகள், பெப்பர் ஸ்பிரேவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பணியின் போது திறம்பட செயல்பட்ட போலீசாரை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
- நோயாளிகளிடம் சிகிச்சையின் தரம் குறித்து விசாரணை
- பிற்பகலில் ஆலோசனை கூட்டம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 11 சட்ட மன்ற உறுப்பினர்கள் அடங்கிய மனுக்கள் குழு, குழுவின் தலைவரும், அரசு தலைமைக் கொறடாவுமான கோவி.செழியன் தலைமையில் பல்வேறு இடங்களில் நேரடியாக ஆய்வு செய்தனர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த குழுவினர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சையின் தரம், மருந்து மாத்திரைகள் சரியாக வழங்கப்படுகிறதா, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு அறிந்தனர்.
இதையடுத்து, பாகாயம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டம், ஓட்டேரி பகுதியில் உள்ள ஓட்டேரி ஏரி, வேலூர் மாங்காய் மண்டி அருகே ரெயில்வே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர்.
பாலாற்றின் குறுக்கே சத்துவாச்சாரி காங்கேயநல்லூர் இணைப்பு தரைப்பாலம் மற்றும் காட்பாடி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் சத்துவாச்சாரியில் இயங்கி வரும் ஆவின் பாலகத்தையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இன்று பிற்பகலில் ஆய்வுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
- கடைகள் இல்லாமல் திண்டாட்டம்
- மர்ம நபர்கள் பொருட்களை சேதப்படுத்துவதாக புகார்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அப்போது சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து காஞ்சிபுரம், திருத்தணி மார்க்கமாக பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் மது அருந்துவதாகவும் பொருட்களை சேதப்படுத்துவதாகவும் புகார்கள் வந்தது.
இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலைய கழிவறையில் கண்ணாடி உடைந்திருந்தது. அதை மாற்றவும் தெர்மல் கட்டிடத்தில் உள்ள கழிவறைகளை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை முதல் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே.ஜி.எப், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், சித்தூர், திருப்பதி ஆகிய மார்க்கங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டு வந்ததால் வெறிச்சோடி கிடந்த புதிய பஸ் நிலையம் இன்று காலை முதல் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் பரபரப்பாக காணப்படுகிறது.
புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் குடிநீர், டீ, காபி, பிஸ்கட், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆரணி, திருவண்ணாமலை வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
- ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றம்
- சிறுமி காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த டி.டி. மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் குமார் (வயது 19) குடியாத்தத்தில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார்.
இந்த ஜவுளி கடையில் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அஜய்குமார் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர்கள் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று சிறுமியுடன் இருந்த அஜய்குமாரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அஜய் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி வேலூரில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- சென்னை அம்பத்தூரை சேர்ந்த அவரது நண்பர் தமிழிடமும் விசாரித்து வருகின்றனர்.
- வேலூர் வனத்துறையினர் பார்த்திபனை பிடித்து கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் மற்றும் ஆன்லைனில் தேசிய விலங்கான புலிக்குட்டி ரூ.25 லட்சத்திற்கு விற்பனை செய்ய தயாராக உள்ளது. தேவைப்படுபவர்கள் அணுகலாம் என்று விளம்பரம் செய்தனர். இதே போல சென்னை பகுதிகளிலும் இந்த விளம்பரம் ஆன்லைனில் வலம் வந்தது.
இதுகுறித்து வேலூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. வேலூர் வனத்துறையினர் வாட்ஸ் அப்பில் வந்த எண் குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த செல்போன் வைத்திருப்பவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 24) என்பதும் அவர் தற்போது வேலூர் சார்பானா மேட்டில் வசித்து வருவது தெரியவந்தது.
வேலூர் வனத்துறையினர் பார்த்திபனை பிடித்து கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் தமிழ். இவர் பார்த்திபனின் நெருங்கிய நண்பர். சென்னையில் பெட் ஷாப் வைத்துள்ளார்.
தமிழகத்தில் விலங்குகள் தொடர்பாக கண்காட்சி எங்கு நடந்தாலும் அங்கு சென்று தங்களுக்கு பிடித்த விலங்குகள் மற்றும் பறவைகளை வாங்கி வந்து பெட் ஷாப் மூலம் ஆன்லைனில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
பார்த்திபன் வாட்ஸ் அப் குரூப் மற்றும் அவரது ஸ்டேட்டசில் புலிக்குட்டி விற்பனை தொடர்பாக விளம்பரம் செய்துள்ளது வெறும் விளம்பர மோசடியா அல்லது உண்மையில் அவரிடம் புலிக்குட்டி உள்ளதா என வனத்துறையினர் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த அவரது நண்பர் தமிழிடமும் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மற்றும் சென்னையில் புலி குட்டி விற்பனை குறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கமிஷனர் ஆய்வு
- கூடுதலாக காவலர்கள் நியமனம்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கூடுதலாக 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார்.
வேலூர் புதிய பஸ் நிலையம் சுமார் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கு தற்போது சென்னை, அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையம் சுத்தம் இல்லாமல் இருப்பதாகவும், இரவு நேரத்தில் மர்மநபர்கள் மது அருந்துவதாகவும் புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது பஸ் நிலையத்தின் உள்ள கழிவறையில் கண்ணாடி உடைந்திருந்தது தெரியவந்தது. அதை மாற்றவும், டெர்மினல் கட்டிடத்தில் உள்ள கழிவறைகளை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வேலூர் புதிய பஸ் நிலையம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கழிவறைகள் சுத்தமாக வைக்கவும், இதுவரை பயன்படுத்தாமல் இருந்த கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தற்போது 3 ஷிப்டுகளாக 3 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து கூடுதலாக 3 காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இனி ஒரு ஷிப்டுக்கு இருவர் பணியில் இருப்பார்கள். பஸ் நிலையப் பகுதியில் சிறுநீர் கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது பஸ் நிலைய வளாகப் பகுதியில் 16 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் கூடுதலாக 36 கண்காணிப்பு கேமராக்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொருத்தப்பட உள்ளது.
பஸ் நிலையம் இந்த வார இறுதிக்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- 30-ந் தேதி கடைசி நாள்
- கலெக்டர் அறிவிப்பு
வேலூர்:
தீபாவளி பண்டிகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் வெடிபொருட்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி, விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள், வணிகர்கள் இ -சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
வருகிற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பிக்கும் போது கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம், கட்டிடத்திற்கான வரைபடம், கடை அமைய உள்ள இடத்திற்கான ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, விசாரணை முடிவுப்பெற்ற பின் ஆன்லைன் மூலமாகவே மனு ஏற்றுக்கொ ள்ளப்பட்டதா?, நிராகரிக்கப்பட்டதா? என்ற விவரம் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தெரிவிக்கப்படும்.
இ- சேவை மையம் மூலமாகவே உரிமத்திற்கு ஆணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பின் ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
இந்தத் தகவலை மாவட்ட கலெக்டர் ராமமூர்த்தி (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
- ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படும
- விண்ணப்பிக்க அடுத்த மாதம் 31-ந் தேதி கடைசி நாள்
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் ராமமூர்த்தி (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதி உரையும் வழங்கப்படுகிறது.
விருதாளரை தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்வு செய்வார்.
இந்த ஆண்டிற்கான விருது வழங்க உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.
தங்களது விண்ணப்பம், சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க அடுத்த மாதம் 31-ந் தேதி கடைசி தேதி ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 4 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு
- தீவுத்திடலில் வருகிற 10-ந் தேதி நடக்கிறது
வேலூர்:
வேலூர் ஆசிரியர் இல்லத்தில் ஜாக்டோ -ஜியோ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் செ.நா. ஜனார்த்தனன், சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயசீலன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க செயலாளர் பாபு வரவேற்றார்.
இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை தீவு திடலில் வருகிற 10-ந் தேதி ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வுரிமை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். வேலூர் மாவட்டம் சார்பில் 4 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவது ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இதுதொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- போதை பொருள் விற்பனை தடுக்க நடவடிக்கை
- போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
வேலூர்:
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை, கடத்தலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
போதை பொருட்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் மாவட்ட காவல் துறையின் பிரத்தேக வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வாட்ஸ் அப் எண் 9092700100 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வணிகர் சங்கமும், போலீசார் இணைந்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஒட்டும் பணி வேலூர் லாங்கு பஜாரில் இன்று நடந்தது.
வணிகர் சங்க மாவட்ட தலைவர் ஞானவேலு, செயலாளர் ஏ.வி.எம். குமார், துணைத் தலைவர் ரமேஷ்குமார், இளைஞரணி செயலாளர் அருண் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2 ஆயிரம் ஸ்டிக்கர்கள் கடைகளில், வாகனங்களில் ஒட்டும் பணியை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைத்தார். அவர் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினார்.
மேலும் லாங்கு பஜார், பி .எஸ். எஸ். கோவில் தெருவில் உள்ள கடைகளிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மற்றும் போலீசார், வணிகர்கள் நேரடியாக சென்று ஸ்டிக்கர்களை ஒட்டினர்.
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 274 மாணவிகள், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் 607 மாணவர்கள், நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் 595 மாணவர்கள் என மொத்தம் 1476 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ். அமர்நாத் தலைமை தாங்கினார், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜி.புருஷோத்தமன், பாலசுப்பிரமணியன், நகர் மன்ற உறுப்பினர்கள் நவீன்சங்கர், ஜாவீத்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசீலிகிறிஸ்டி வரவேற்றார்.
குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் 3 பள்ளிகளைச் சேர்ந்த இருபால் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சரளாதேவி நன்றி கூறினார்.
- பெண் துப்புரவு பணியாளர் ஊதிய முறைகேடு புகார்
- 14 அம்ச கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் உதவி கலெக்டர் பூங்கொடி தலைமையில் இன்று நடந்தது.
இதில் வீட்டு மனை பட்டா முதியோர் உதவித்தொகை ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளைக் கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
காட்பாடி அடுத்த மேல் வழி துணையாங் குப்பம் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்யும் பூமணி (வயது 58) என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,
நான் பல ஆண்டுகளாக எம்.வி.குப்பம் பஞ்சாயத்தில் துப்புர பணியாளராக பணியாற்றி வருகிறேன்.
எனக்கு மாத ஊதியமாக ரூ.2200 வழங்கப்பட்டு வருகிறது ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு அரசாணையில் துப்புரவு பணியாளருக்கு 5310 வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இது குறித்து நான் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டபோது ஊதிய உயர்வு வழங்கப்படாது என்று தெரிவித்தார்.
இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இல்லம் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அளித்த மனுவில், தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறோம்.
எங்களுக்கு காலத்திற்கு ஏற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு பேறுகால சலுகைகள் வழங்க வேண்டும்.
முறையாக வங்கி கணக்கில் ஊதியம் செலுத்தப்பட வேண்டும் என்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர்.






