என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் குறைகளை கேட்டறிந்த காட்சி
வேலூரில் சட்டப்பேரவை மனுக்கள் குழு ஆய்வு
- நோயாளிகளிடம் சிகிச்சையின் தரம் குறித்து விசாரணை
- பிற்பகலில் ஆலோசனை கூட்டம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 11 சட்ட மன்ற உறுப்பினர்கள் அடங்கிய மனுக்கள் குழு, குழுவின் தலைவரும், அரசு தலைமைக் கொறடாவுமான கோவி.செழியன் தலைமையில் பல்வேறு இடங்களில் நேரடியாக ஆய்வு செய்தனர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த குழுவினர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சையின் தரம், மருந்து மாத்திரைகள் சரியாக வழங்கப்படுகிறதா, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு அறிந்தனர்.
இதையடுத்து, பாகாயம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டம், ஓட்டேரி பகுதியில் உள்ள ஓட்டேரி ஏரி, வேலூர் மாங்காய் மண்டி அருகே ரெயில்வே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர்.
பாலாற்றின் குறுக்கே சத்துவாச்சாரி காங்கேயநல்லூர் இணைப்பு தரைப்பாலம் மற்றும் காட்பாடி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் சத்துவாச்சாரியில் இயங்கி வரும் ஆவின் பாலகத்தையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இன்று பிற்பகலில் ஆய்வுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.






