என் மலர்tooltip icon

    வேலூர்

    • பிரீத்தி தேர்வு எழுதிய முதல் தடவையே வெற்றி பெற்றுள்ளார். வைஷ்ணவி 4 முறையும், நிரஞ்சனி 3 தடவையும் போராடி தேர்வாகியுள்ளனர்.
    • மூத்த மகளும், 3-வது மகளும் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்தனர். 2-வது மகள் அரக்கோணம் அரசு கல்லூரியில் படித்தார்.

    வேலூர்:

    தமிழகத்தில் 9,791 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான 7 மாதம் அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது.

    இதில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான பிரீத்தி (வயது 28), வைஷ்ணவி (25), நிரஞ்சனி (22) ஆகிய 3 பேரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

    இதில் பிரீத்திக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் சகோதரிகள் 3 பேரும் 2-ம் நிலை காவலர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

    பிரீத்தி தேர்வு எழுதிய முதல் தடவையே வெற்றி பெற்றுள்ளார். வைஷ்ணவி 4 முறையும், நிரஞ்சனி 3 தடவையும் போராடி தேர்வாகியுள்ளனர்.

    மகள்களின் வெற்றி குறித்து அவர்களின் தந்தை வெங்கடேசன் கூறியதாவது:-

    ''எனது மனைவி ஷகிலா இறந்த நிலையில் மகள்கள் பிரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி, மகன் கார்த்திகேயன் ஆகியோரை நன்றாக படிக்க வைத்து அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று பாடுபட்டேன். நான், பிளஸ் 2 முடித்த பிறகு போலீஸ் தேர்வுக்கு சென்றேன். ஆனால் என்னால் தகுதி பெற முடியவில்லை.

    இதனால் இருக்கின்ற 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிள்ளைகளை படிக்க வைத்தேன். எனது 3 மகள்களும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். மகன் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    மூத்த மகள் பிரீத்திக்கு ராஜீவ்காந்தி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். மற்றவர்கள் திருமணமாகாத நிலையில் போலீஸ் பணிக்கு சகோதரிகள் 3 பேரும் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தனர்.

    ''எனக்கு கிடைக்காத காவலர் வேலை எனது மகள்களுக்கு கிடைத்ததில் பெருமையாக இருக்கிறது. மகள்கள் 3 பேரும் அரசுப் பள்ளியில்தான் படித்தார்கள்.

    மூத்த மகளும், 3-வது மகளும் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்தனர். 2-வது மகள் அரக்கோணம் அரசு கல்லூரியில் படித்தார். 3 மகள்களும் வீட்டில் இருந்தே காவலர் தேர்வுக்கு படித்தார்கள். எனது விவசாய நிலத்திலே 3 பேரும் ஓட்டப்பயிற்சி எடுத்தார்கள்.

    அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது'' எனது மகள்கள் 3 பேரும் ஒரே நேரத்தில் காவலர் பணிக்கு தேர்வானதற்கு மருமகன் ராஜூவ்காந்தி தான் காரணம் என்றார்.

    வாழ்க்கையின் அடித்தட்டு நிலையில் இருந்து சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட சகோதரிகள் 3 பேரும் ஒரே நேரத்தில் காவலர் பணிக்கு தேர்வாகி பயிற்சி முடித்துள்ளதை அந்த கிராம மக்கள் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • 5 பேர் கொண்ட திருநங்கை கும்பல் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வெளி மாநிலத்தவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்கள் காந்தி ரோடு ஆற்காடு ரோடு பகுதியில் உள்ள தங்கும் விடுதி லாட்ஜ்களில் தங்கி உள்ளனர்.

    தினந்தோறும் விடுதிகளில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் அவர்களை மடக்கி திருநங்கைகள் சிலர் பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த துளசிதாஸ் அவருடைய பேத்தி பாயில்தாஸ் (வயது 21) ஆகியோர் இன்று காலை காந்தி ரோட்டில் பொருட்கள் வாங்க நடந்து சென்றனர்.

    அவர்களை 5 பேர் கொண்ட திருநங்கைகள் வழிமடக்கி எலுமிச்சம் பழம் கொண்டு திருஷ்டி கழிப்பதாக தெரிவித்துள்ளனர். அவருடைய கைப்பை, மணிபர்ஸ் போன்றவற்றை தடவி உள்ளனர்.

    அப்போது பாயில்தாஸ் வைத்திருந்த ரூ.1,000-தை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பாயில்தாஸ் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் காந்தி ரோடு பகுதியில் பணம் பறிக்கும் கும்பலை தேடி வருகின்றனர்.

    • தீபாவளியையொட்டி விற்று தீர்ந்தது
    • வழக்கத்தைவிட அதிகளவில் மது வகைகளை வாங்கி சென்றனர்

    வேலூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி வேலூா் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.10 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

    ஆண்டுதோறும் பண்டிகை நாட்களில் தமிழகத்தில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம். நேற்று நடந்த தீபாவளி பண்டிகையையொட்டி மதுவிற்பனையை அதிகரித்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்பட்டது.

    அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் தேவையான அளவு மது வகைகளும் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. மதுபிரியா்களும் வழக்கத்தைவிட அதிகளவில் மது வகைகளை வாங்கி சென்றனர்.

    தீபாவளியையொட்டி வேலூா் டாஸ்மாக் மாவட்டத்தில் உள்ள 108 மதுக்கடைகள், உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எலைட் கடைகள் ஆகியவற்றில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமை மட்டும் ரூ.10 கோடிக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 79 கடைகளில் ரூ.7.13 கோடிக்கு என மாவட்டம் முழுவதும் ரூ.17.13 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு
    • சமூக விரோதிகள் தொல்லை அதிகரிப்பு

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு பகுதியில் போக்குவரத்து துறைக்கு சொந்தமான மண்டபம் உள்ளது. கடந்த 1994 -ம் ஆண்டு இந்த மண்டபம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.

    சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் தற்போது மண்டபம் சிதிலமடைந்து காணப்படுகிறது.

    அதை சுற்றியுள்ள வளாகப் பகுதி புதர் மண்டி கிடக்கிறது. இந்த மண்டபத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் குமரவேல் பாண்டியன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தாசில்தார் செந்தில், மாநகராட்சி என்ஜினியர் கண்ணன் ஆகியோர் மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திட்ட மதிப்பீடு குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதே மண்டபத்தை மீண்டும் சீரமைப்பதா அல்லது அதனை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டுவதா என்பது குறித்து அறிக்கை கேட்டுள்ளோம். அதற்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

    அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு சென்ற பிறகு அந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் அங்கு வந்தனர். அவர்கள் இந்த இடம் பூங்காவிற்கு சொந்தமான இடம். இதனை குடியிருப்பு நலச் சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

    போக்குவரத்து மண்டபம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த பகுதியில் இரவு மற்றும் மாலை நேரங்களில் சமூக விரோதிகள் வந்து மது குடிப்பதும் வழக்கமாக உள்ளது. மேலும் சிலர் அந்த இடத்தில் அத்துமீறி செயல்படுகின்றனர்.

    அங்குள்ள புதர்களை அகற்றிவிட்டு மின்விளக்குகள் அமைக்க வேண்டும். இதன் மூலம் சமூக விரோத செயல்களை தடுக்க முடியும் என வலியுறுத்தினர்.

    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
    • வடகிழக்கு பருவமழை சராசரி அளவே இருக்கும் என கணிப்பு

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழை யால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பின.

    தொடர்ந்து கோடை காலத்தில் நீர் இருப்பு குறைந்த நிலையில் தென்மேற்கு பருவழையும் சராசரி அளவைவிட கூடுதலாகவே பெய்தது. இதன்காரணமாக பாலாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பாலாற்றில் இருந்து நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு நீர் நிரப்ப தடை விதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை நீரை சேமிக்கவும் அந்த நேரத்தில் ஏரிகள் நிரப்பியிருந்தால் பொதுமக்களுக்கு பெரும் சேதம் ஏற்படக்கூடும் என்று கூறப்பட்டது.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆண்டு சராசரி மழையளவு 980 மி.மீ என்றளவு இருக்கும். அதில், பெரும்பகுதி வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கும் என்பதால் அதற்கு ஏற்ப ஏரிகளில் தண்ணீரை நிரப்ப தடை விதிக்கப்பட்டது.

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விரைவில் முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. எனவே, இப்போதிருந்தே ஏரிகளில் நீர் நிரப்ப பொது பணித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

    பாலாறு மற்றும் கவுன்டன்யா, பொன்னை ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பும் பணி தொடங்கியுள்ளது.

    இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

    ''வடகிழக்கு பருவமழை சராசரி அளவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில், குறைவு ஏற்படவும் வாய்ப்பும் இருப்பதாக கருதப்படு வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை நிரப்பும் பணி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    அவ்வப்போது மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. கிணறு பாசனமும் விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது'' என்று தெரிவித்தனர்.

    மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் 460 கன அடி உபரி நீர் கவுன்டன்யா ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஜிட்டப்பள்ளி தடுப்பணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிட்டுள்ளனர்.

    காட்பாடி அருகேயுள்ள ராஜாதோப்பு அணை 24.57 அடி உயரமுடையது. 20.52 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 11.94 அடி உயரத்துடன் 3.41 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

    அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு ஓடை நீர்த்தேக்க அணை 26.24 அடி உயரத்துடன் 112.20 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் 94.24 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 101 ஏரிகளில் தற்போது 7 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 104 ஏரிகள் முழுமையாக நிரம்பி யுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 25 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

    பாலாற்றை பொறுத்த வரை பள்ளிகொண்டா மற்றும் வேலூர் பாலாற்றில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 2,200 கன அடி நீர் சென்றுகொண்டிருக்கிறது. இதில், ஆந்திர மாநிலம் புல்லூர் தடுப்பணையில் இருந்து 270 கன அடி, மண்ணாற்றில் இருந்து 30, கல்லாற்றில் இருந்து 30, மலட்டாற்றில் இருந்து 1,050, அகரம் ஆற்றில் இருந்து 150, கவுன்டன்யாவில் இருந்து 579, பேயாற்றில் இருந்து 10, வெள்ளக்கல் கானாறு, அணைமடுகு, கண்டித்தோப்பு கானாறுகளில் இருந்து 20 கன அடிக்கு நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறது.

    • வீடு புகுந்து முகமூடி கும்பல் அட்டூழியம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி அருகே உள்ள கீழ்ப்பட்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54). டைல்ஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ராஜேந்திரன் அவரது மனைவி மட்டும் தனியாக வீட்டில் உள்ளனர்.

    நேற்று இரவு ராஜேந்திரன் அவருடைய மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். சாவியை கிரில் கதவுக்கு அருகே வைத்துள்ளனர்.

    நள்ளிரவில் முகமூடி அணிந்து 4 பேர் கும்பல் அவர்களது வீட்டுக்கு வந்தனர். கிரில்கதவு அருகே இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே புகுந்தனர்.

    சத்தம் கேட்டு ராஜேந்திரன் அவரது மனைவி இருவரும் கண்விழித்தனர். 4 பேரும் அவர்களை மடக்கி கத்தியை காட்டி மிரட்டினர்.

    கத்தி முனையில் ராஜேந்திரன் வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ரூ.4000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.இது குறித்து ராஜேந்திரன் மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் கைரேகை சேகரிக்கப்பட்டன.

    சம்பவம் நடந்த வீட்டின் அருகில் ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. இதனை பயன்படுத்தி கொண்டு கும்பல் தண்டவாளம் பகுதி வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.

    கதவுக்கு அருகிலேயே சாவியை வைத்திருந்ததால் அவர்கள் எளிதில் பூட்டை திறந்து உள்ளே வந்துள்ளனர்.

    அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வேலூர் போலீசார் அதிரடி நடவடிக்கை
    • காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது

    வேலூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

    காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    இதனை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியது.

    2 ஆண்டுகளாக கொரோனாவின் பிடியில் இருந்த பொதுமக்கள் தீபாவளியை வெகு விமர்சையாக கொண்டாடினர். புத்தாடை அணிவித்தும் இனிப்புகள் பரிமாறி பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர்.

    வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    பல இடங்களில் தடையை மீறி பட்டாசு வெடித்தனர். குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 52, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12, திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    4 மாவட்டங்களில் மொத்தம் 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    • 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஓராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது 64) அதே ஊரில் இருக்கும் ஆலமரத்தின் விழுதினை பல்துலக்க அறுக்க சென்றுள்ளார்.

    இதனைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஜோதிலிங்கம் (வயது36) என்பவரும் ஆண்டிக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் (வயது31) என்பவரும் முதியவரிடம் சென்று இந்த ஆலமரத்தின் விழுதினை அறுக்க கூடாது, இதில் சாமி இருக்கு என கூறியுள்ளார்கள்.

    இதனால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் இரும்பு கம்பியால் முதியவரை தாக்கியுள்ளனர்.

    இதனால் தலையில் ரத்தம் கொட்டியது. முதியவரை மீட்ட அப்பகுதி மக்கள் வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி முதியவரை தாக்கிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • டாக்டர் சங்கர் தொடங்கி வைத்தார்
    • காட்பாடி இந்திரா மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி சார்பில் நடந்தது

    வேலூர்:

    காட்பாடியில் உள்ள இந்திரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, வெல்லூர் பைக்கர்ஸ் கிளப் மற்றும் பெண்கள் மோட்டார் சைக்கிள் கிளப் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பைக் பேரணி இன்று காலை நடந்தது. ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பைக் பேரணியை தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தினராக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டார். இந்திரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முன்பாக தொடங்கிய பைக் பேரணி ஓடை பிள்ளையார் கோவில் வழியாக விருதம்பட்டு, கிரீன் சர்க்கிள், வேலூர் கலெக்டர், பேலஸ் கேப், அண்ணா சாலை, திருப்பதி தேவஸ்தான வழியாக சென்று மீண்டும் ஆஸ்பத்திரி முன்பாக பேரணி நிறைவடைந்தது. பைக் பேரணிகள் சென்றவர்கள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    இதையடுத்து டாக்டர் சங்கர் பேசுகையில்:-

    மார்பக புற்றுநோய் குறித்த பரிசோதனை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் செய்யப்படுகிறது. பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்வதற்கு கூச்சப்படுகின்றனர்.

    முதலிலேயே மார்பக புற்றுநோய் கண்ட றியப்பட்டால் எளிதாக சரி செய்து விட முடியும். நாள்பட்ட மார்பக புற்றுநோயை சரி செய்வது கடினம் எனவே பெண்கள் அனைவரும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்ய கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பேசுகையில்:- மாணவ- மாணவிகள் போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதில் இருந்து காப்பாற்ற தமிழகத்தை போதை இல்லா மாநிலமாக மாற்ற போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்காக பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார்.

    நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் லதா லட்சுமி காட்பாடி டிஎஸ்பி பழனி இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் தங்க கோவில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது
    • சக்தி அம்மா சிறப்பு வழிபாடு செய்து திறந்து வைத்தார்

    வேலூர்:

    வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவில் வளாகத்தில் 23 அடி உயர ஐம்பொன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 23 அடி உயரம் 18 அடி அகலம் 15,000 கிலோ ஐம்பொன்னால் ரூ.4 கோடி மதிப்பில் இந்த சிலை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் செய்ய தொடங்கினார்கள்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிலை முழுமையாக செய்யப்பட்டு வேலூர் தங்க கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது .இந்த சிலை தற்போது ஸ்ரீபுரம் தங்கக் கோவில் அருகே உள்ள திருமண மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது .

    இதனை சக்தி அம்மா இன்று காலை திறந்து வைத்தார். இதுகுறித்து சக்தி அம்மா கூறியதாவது:-

    இந்திய கலாச்சாரம் பழமையும் தொன்மையும் அழகும் வாய்ந்தது. சமூகத்தில் கோவில் என்பது ரொம்ப முக்கியமானது.கோவிலுக்கு செல்லும்போது மனிதனுக்கு பூரண மன அமைதி கிடைக்கும். கோவிலில் தான் தெய்வீகத்தன்மை உணர முடியும்.

    மனித சமூகத்திற்கு கோவில் அவசியமானது. கோவிலில் நடக்கும் சமுதாய பூஜைகளுக்கும் ஆன்மீகம் மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் தொடர்பு உள்ளது. கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் தெய்வத்திற்கு கொடுத்ததை விட பல மடங்கு சக்தி அமைதி போன்றவை நமக்கு கிடைக்கிறது.

    சக்கரவர்த்திகளாக பல பகுதிகளை ஆண்ட ராஜாக்கள் கோவில்கள் மூலம் தான் இன்றும் பேசப்படுகிறார்கள். ராஜராஜ சோழன் பற்றி தற்போது பேசுகிறோம். அவர் கட்டிய அரண்மனை அவர் அமர்ந்த சிம்மாசனம் பற்றி தெரியாது. ஆனால் அவர் கட்டிய பெரிய கோவில் மூலம்தான் நாம் அவரைப் பற்றி பேசுகிறோம்.

    வேலூர் நாராயணி பீடம் கடந்த 1992 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 30 ஆண்டுகளாக பல தரும காரியங்கள் நடந்து வருகிறது. 2007-ம் ஆண்டு ஸ்ரீபுரம் உருவாக்கப்பட்டு தங்க கோவில் அமைக்கப்பட்டது.

    அந்த வளாகத்தில் 70 கிலோ தங்கத்தில் சொர்ண மகாலட்சுமி சிலை அமைக்கப்பட்டு பக்தர்கள் கையால் தற்போது அபிஷேகம் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து 9 அடி உயரத்தில் சீனிவாச பெருமாளுக்கு சன்னதி அமைக்கப்பட்டது. தொடர்ந்து 1200 கிலோ வெள்ளியால் சக்தி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது உலகில் மிக பெரிய 23 அடி உயர நடராஜர் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது ஆனந்த தாண்டவ ரூபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வழிபடும்போது ஆனந்தம் தானாக வரும்.

    இந்த நடராஜருக்கு தனியாக கோவில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் கோவில் கட்டப்பட்டு சம்பிரதாய சாஸ்திர முறைப்படி விநாயகர் நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.

    அதுவரை இந்த இடத்தில் நடராஜருக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும். இதில் தினம் தோறும் 2 அல்லது 3 மணி நேரம் மட்டும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த சிலை உருவாக காரணம் இருந்த நாராயணி பீட நிர்வாகிகள் மற்றும் இதனை செய்த அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்.

    இந்த சிலையின் மூலம் பல பெருமைகளை கொண்ட வேலூருக்கு மேலும் ஒரு பெருமை வந்து சேர்ந்துள்ளது. இந்த திருமேனியை உலகத்திற்கு அர்ப்பணித்ததற்காக அம்மாவிற்கு மிகுந்த சந்தோசம்.

    ஸ்ரீபுரத்தில் சூரிய வழிபாடு, விநாயகர் வழிபாடு, அம்மன் வழிபாடு, சிவன் வழிபாடு, பெருமாள் வழிபாடு ஆகியவை உள்ளன. இந்து தர்மத்தில் உள்ள ஆறு வழிபாட்டு முறைகளில் சுப்பிரமணியர் வழிபாடு மட்டும் இன்னும் இல்லை .அதுவும் விரைவில் அமையவும். இவ்வாறு அவர் கூறினார்.

    நாராயணி பீட இயக்குனர் சுரேஷ், மேலாளர் சம்பத் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • தமிழ்நாட்டில் முதல்முறையாக அமைகிறது
    • தினமும் 30 ஆயிரம் லிட்டர் கழிவு நீரை மறுசுழற்சி சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் 15-வது நிதிக்குழு மானியத்தில் 24 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் மறு சுழற்சி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

    மறு சுழற்சி சுத்திகரிப்பு நிலையம்

    இந்த கழிவுநீர் மறு சுழற்சி சுத்திகரிப்பு நிலையம் தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் முதல்முறையாக குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது .

    தினமும் 30 ஆயிரம் லிட்டர் கழிவு நீரை மறுசுழற்சி சுத்திகரிப்பு செய்து பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது இந்த சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    இதில் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் கலந்துகொண்டு கழிவுநீர் மறுசுத்திகரிப்பு நிலையத்தின் இயந்திரங்களை இயக்கி வைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, நகராட்சி பொறியாளர் பி.சிசில்தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோ மோகன், அன்வர்பாஷா, ஏ.தண்டபாணி, எம்.எஸ்.குகன், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் அமர்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உரிமம் பெற வேண்டும்
    • போலீசார் விழிப்புணர்வு

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த அல்லேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் அமலாக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் அணைக்கட்டு சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.

    விழிப்புணர்வு கூட்டம்

    இதில் கள்ளத்துப்பாக்கி பயன்படுத்துவது குற்றம், யாரும் பயன்படுத்த கூடாது அவ்வாறு பயன்படுத்தினால் போலீஸ் நிலையம் எடுத்து வந்து ஒப்படைக்க வேண்டும். அதைமீறி கள்ள துப்பாக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.

    உரிமம் இல்லாதவர்களுக்கு துப்பாக்கியை எப்படி கையாளுவது என்பது தெரியாது இதனால் வேட்டையாடும் போது பல விபத்துக்கள் ஏற்படலாம். இதனால் உயிர் சேதம் ஏற்ப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினார்கள்.

    எனவே உரிமம் பெற்று துப்பாக்கி பயன்படுத்த வேண்டும். உரிமம் பெறாத கள்ளத்துப்பாக்கியை உடனடியாக காவல்நிலையம் எடுத்து வந்து ஒப்படைக்க வேண்டும் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×