என் மலர்
வேலூர்
- பொதுமக்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 651 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சிறப்பு முகாம் நடந்தது. ஏராளமானவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தனர். நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நேற்று நடந்த முகாமுக்கு பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் சென்று பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பித்தனர்.
கடந்த 12-ந் தேதி நடந்த முகாமில் 4,370 பேரும், 13-ந் தேதி நடந்த முகாமில் 5,884 பேரும் விண்ணப்பங்கள் அளித்திருந்தனர். நேற்று முன்தினம் நடந்த முகாமில் பெயர் சேர்த்தலுக்கு 1,016 பேரும், நீக்கம் செய்ய 197 பேரும், திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தலுக்கு 731 பேரும் என மொத்தம் 2,944 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
நேற்று நடந்த முகாமில் பெயர் சேர்க்க 3276 மனுக்களும் நீக்கம் செய்ய 420 திருத்தம் முகவரி மாற்றம் புதிய வாக்காளர் அட்டை பெறுவதற்கு 1435 பேர் என மொத்தம் 5031 விண்ணப்பம் பெறப்பட்டன.
இதுவரை நடந்த 4 சிறப்பு முகாம்களில் 18,229 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
- குறைதீர்வு கூட்டத்தில் கிராம மக்கள் மனு
- வேலூரில் லாட்டரி விற்பனையை தடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சி மாவட்ட பொது செயலாளர் சரவணன் தலைமையில் மனு அளித்தனர்.
அதில் வேலூர் டவுன் சத்துவாச்சாரி, பழைய பஸ் நிலையம், காகிதப்பட்டறை, நேதாஜி மார்க்கெட் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை நடக்கிறது.
கூலி தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் லாட்டரி வாங்கி பணத்தை இழக்கின்றனர். இதனால் கூலி தொழிலாளர் வாழ்வாதாரம் கெடுகிறது. லாட்டரி விற்பனை சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து ஏழை குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.
குடியாத்தம் அருகே உள்ள பரதராமி இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக மனு அளித்தனர்.
அதில் பரதராமி இந்திரா நகரில் நத்தம் நிலம் உள்ளது. இந்த இடத்தை மாடி வீடு உள்ளவர்களும் அரசாங்கத்தில் வேலை செய்பவர்களும் இலவச பட்டா வாங்கியதாக கூறி ஆக்கிரமிப்பு செய்ய பார்க்கிறார்கள். இதில் தீர விசாரித்து அந்த இடத்தை அங்கன்வாடி மையம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதேபோல் காட்பாடி அருகே உள்ள காசிகுட்டை கிராமத்தை ேசர்ந்த பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
- மின் வாரிய அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது
- டிசம்பர் 31-ந் தேதி வரை இணைக்கலாம் என அதிகாரிகள் தகவல்
வேலூர்:
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்து, அதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
இதன்படி, மின் நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் குறுஞ்செய்தியை அனுப்பி வருகிறது.
மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடங்கியது.
இதற்காக சிறப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படவில்லை. அனைத்து மின்வாரிய அலுவலகங்களில் இதற்கான தனி கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தாங்கள் ஏற்கனவே மின்கட்டணம் செலுத்தி வரும் மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாக சென்று ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை இணைத்துக் கொள்ளலாம்.
இதற்கு கண்டிப்பாக ஆதார் அட்டை உடன் எடுத்து வர வேண்டும். வருகிற 31.12.22-ந் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தமிழகம், ஆந்திரா தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று வருகின்றனர்.
- 2-வது நாளாக இன்றும் பெண்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடந்தது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 15-ந் தேதி முதல் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் வரை ஆண்களுக்கான ராணுவ தேர்வு முகாம் நடந்தது. இதில் உடற்தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர்.
நேற்று முதல் பெண்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தொடங்கியது.
இதில் தமிழகம், ஆந்திரா தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று வருகின்றனர். முதல் நாளான நேற்று நடந்த முகாமில் காலை முதல் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
நள்ளிரவு 12 மணிக்கு உயரம் அளவீடு செய்யப்பட்டது. பின்னர் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஓட்டம் விடப்பட்டு நேற்று முழுவதும் பல்வேறு உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டது.
2-வது நாளாக இன்றும் பெண்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடந்தது. நள்ளிரவு முதலே ஏராளமான பெண்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர்.
பெண்களுக்கான முகாம் நாளையுடன் முடிவடைகிறது.
- சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் பனிமூட்டம் நிலவியது.
- தேசிய நெடுஞ்சாலையில் பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கடும் பனி கொட்டுகிறது. இதனால் சாலைகள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு உள்ளன.
அதிகபட்சமாக இன்று அதிகாலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடும் பனி கொட்டியது. இதனால் சென்னை- அரக்கோணம் - காட்பாடி- ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் ரெயில்கள் வழக்கத்தை விட தாமதமாக சென்றன.
இன்று காலையில் சென்னை நோக்கி வந்த காவேரி, மைசூர், சேரன், நீலகிரி, திருவனந்தபுரம்- ஏலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னையில் இருந்து அரக்கோணம் காட்பாடி வழியாக சென்ற கோவை, சப்தகிரி, டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் 4 மின்சார ரெயில்கள் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
கடும் பனிமூட்டம் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் குறைக்கப்பட்டது. அதனால் தாமதம் ஏற்பட்டது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் பனிமூட்டம் நிலவியது. தேசிய நெடுஞ்சாலையில் பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.
வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். பனிமூட்டத்தால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
கடும் பனி காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் தெருக்களில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். டீ கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. சாலையோரங்களில் சொட்டர் விற்பனை களைகட்டியது.
- 5 மையங்களில் நடைபெற்றது
- 143 பேர் ரத்த தானம் செய்தனர்.
வேலூர்:
வேலூரில் 76-வது என்.சி.சி. தினத்தையொட்டி சி.எம்.சி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, வாணியம்பாடி அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் 10வது பட்டாலியனுக்கு உட்பட்ட சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரி உள்பட 5 மையங்களில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
5 மையங்களையும் சேர்த்து மொத்தம் 143 என்சிசி மாணவ, மாணவிகள் முகாமில் ரத்த தானம் செய்தனர். சி.எம்.சி. மருத்துவமனையில் ரத்த தான முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
10வது பட்டாலியன் என்சிசி நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே. சுந்தரம் தலைமையில் பட்டாலியன் மக்கள் தொடர்பு மற்றும் என்சிசி முதன்மை அலுவலர் க. ராஜா, சுபேதார் தினேஷ் குமார், அவில்தார் தீபு ஆகியோர் முகாமை வழி நடத்தினர். வேலூர் விஐடி பல்கலைக்கழகம், ஊரீஸ் கல்லூரி, மேல்விஷாரம் சி.அப்துல் ஹகீம் கல்லூரி, குடியாத்தம் அரசினர் திருமகள் மில்ஸ் கலைக் கல்லூரி உள்ளிட்ட என்சிசி மாணவ, மாணவர்கள் 30 பேர் சி.எம்.சி மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர்.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனை ரத்த வங்கியின் தலைவர்கள் மற்றும் டாக்டர் டாலி டேனியல், டாக்டர் சுகீஷ், மேற்பார்வையாளர் அமல்ராஜ் மற்றும் ரத்த வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெ. அருள் பாக்கியராஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று ரத்த தானம் செய்த என்சிசி மாணவர்களது சேவை மனப்பான்மை குறித்து வாழ்த்தி பாராட்டினர், பின்னர் ரத்த தானம் செய்த அனைத்து என்சிசி மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
10-வது பட்டாலியன் சுபேதார் மேஜர் சட்பீர் சிங், பயிற்சி பிரிவு சுபேதார் மகாலிங்கம், ராணுவ வீரர்கள் ஹவில்தார்கள் வெங்கடேசன், துரை முருகன், ரஞ்சித், சீனுவாசன், குல்வந்த் சிங், ஜீட் சிங் மற்றும் சுனில்தத் உள்பட பலர் பங்கேற்றனர்.
- முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேச்சு
- குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது
வேலூர்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆக்சிலியம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இந்த அறிவியல் மாநாட்டினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:-
மாணவர்கள் ஊக்கமுடன் முயற்சி மேற்கொண்டால் மிக சிறந்தவர்களாக வளர முடியும். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் வேண்டும். படிக்க இயலாத மாணவர் என கூறப்பட்ட மாணவர் தான் மிக சிறந்த அறிவியல் விஞ்ஞானியாக மாறினார். அவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன். அனைவரிடமும் ஆற்றல் இருக்கிறது பயிற்சி முயற்சி தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் அமுதா தலைமை தாங்கினார். ஆக்சிலியம் கல்லூரியின் துணை முதல்வர் சுமதி துணைத் தலைவர்கள் விஸ்வநாதன் செ.நா.ஜனார்த்தனன் செயலாளர் டி.முனுசாமி மாவட்ட நிர்வாக குழு பி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
மாநில பொதுச் செயலாளர் எஸ் சுப்பிரமணி மாநில செயலாளர் சேதுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்
மாவட்ட பொருளாளர் டி.மஸ்தான் சா.குமரன் வீரா.குமரன் எம்.ஜி.ராமகிருஷ்ணன் ஆக்சிலியம் கல்லூரி கிளை தலைவர் மற்றும் முதல்வர் ஜெயசாந்தி செயலாளர் காயத்ரி பொருளாளர் உமாசந்திரா மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் டி.மஸ்தான் நன்றி கூறினார்.
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்
- வெற்றி தோல்வியை பார்க்காமல் நண்பர்களாக பாவித்து விளையாட வேண்டும்
வேலூர்:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.
மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்கள் வேலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சி என 8 மண்ட லங்களாக பிரிக்கப்பட்டு 5 நாட்கள் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.
மண்டலம் 'பி-யில் அடங்கிய வேலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கடலூர், விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் வேலூர் நறுவீ மருத்து வமனை தலைவருமான ஜி.வி. சம்பத் தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்ற அணி வீரர்களை எதிரிகளாக பார்க்காமல், வெற்றி தோல்வியை பார்க்காமல் நண்பர்களாக பாவித்து விளையாட வேண்டும். விளையாட்டில் தோல்வி என்பது வெற்றிக்கு அடுத்த படியாகும் என்று வீரர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து போட்டியா ளர்களை வாழ்த்தினார்.
இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் விளையாட்டு (கிரிக்கெட் போட்டி) குழு தலைவர் கூத்தரசன், வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் சாய் விக்னேஷ்வரன், துணைத் தலைவர்கள் கிருஷ்ண குமார். கங்காதரன், இணை செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் போட்டியில் வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அணியும் மோதின. கிரிக்கெட் போட்டிகளை சென்னையை சேர்ந்த் கே.எச். கோபிநாத் நடுவராக இருந்து வெற்றி பெறும் அணிகளை தேர்வு செய்கிறார்.
மாவட்டங்க ளுக்கு இடையிலான மாநில அளவிலான இப்போட்டி யில் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வெற்றி பெறும் இரண்டு அணிகள் அடுத்த கட்ட போட்டிகளில் பங்கேற்கும்.
- வேலூர் உள்பட 4 மாவட்டத்தில் நடந்தது
- அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு
வேலூர்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் 2-ம் நிலை காவலர், தீயணைப்பாளர், சிறைக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் 15 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 14,991 பேர் தேர்வு எழுதினர். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தேர்வு மையங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மையங்களில் 12,278 பேர் தேர்வு எழுதினர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி, ஆற்காடு மகாலட்சுமி, கலவை ஆதிபராசக்தி கல்லூரி என 5 மையங்களில் தேர்வு நடந்தது. இதில் ஆண்கள் -5,217 பெண்கள்-1,111 மூன்றாம் பாலினத்தவர்-1 மொத்தம் 6,329 பேர் தேர்வு எழுதினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் புனித தூய நெஞ்சக் கல்லூரி, பொன்னுசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருதர் கேசரி ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, இஸ்லாமிய ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இஸ்லாமிய பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மையங்களில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது.7,318 பேர் இந்த மையங்களில் தேர்வு எழுதினர்.
போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்வு மையங்களில் பலத்த சோதனைக்கு பிறகு தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஆகாஷின் தந்தை ஏகாம்பரம் புகார் அளித்தார்.
- ஆகாஷ் குமார் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது தவறி விழுந்தாரா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூடநகரம் ஊராட்சி பார்வதியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் இவரது மகன் ஆகாஷ் குமார் (வயது 23). பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகராக உள்ளார்.
ஆகாஷ் குமார் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
பின்னர் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது ஆகாஷ் குமார் குறித்து எந்தவித தகவலும் தெரிய வரவில்லை.
இதனையடுத்து குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஆகாஷின் தந்தை ஏகாம்பரம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பார்வதியாபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றின் அருகே ஆகாஷ் குமாரின் செருப்புகள் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது ஆகாஷ் குமார் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.
ஆகாஷ் குமார் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது தவறி விழுந்தாரா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1200 போலீசார் பாதுகாப்பு
- வீடியோ கேமரா மூலம் தேர்வு கண்காணிக்கப்படுகிறது
வேலூர்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான எழுத்துத்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வேலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் 14 மையங்களில் நடைபெற உள்ளது. அதில் 14,991 பேர் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு பாதுகாப்பு பணிக்கு 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தேர்வு எழுதும் நபர்களுக்கான நடைமுறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறியதாவது:-
தேர்வு நாள் அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு மேல் தேர்வு எழுத அனுமதிக்கப்ப டமாட்டார்கள்.
விண்ணப்பதாரர் தேர்வு கூட அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஹால்டிக்கெட் கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்துக்குள் அனுமதி அளிக்கப்பட மாட்டார்.
அழைப்பு கடிதம் கிடைக்காத விண்ணப்ப தாரர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் சென்று நகல் எடுத்து மையத்துக்கு கொண்டு வரவேண்டும்.அழைப்பு கடிதத்தில் விண்ணப்பதாரரின் புகைப்படங்கள் இல்லாமல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தங்களது புகைப்படத்தினை ஒட்டி ஏ அல்லது பி பிரிவு அதிகாரியிடம் சான்று ஒப்பம் பெற்று வரவேண்டும்.ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என புகைப்படம் ஒட்டிய அரசால் வழங்கிய ஒரு அட்டையை கொண்டு வரவேண்டும்.
தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர அனுமதி கிடையாது.பேனா மற்றும் ஹால்டிக்கெட் மட்டுமே கொண்டு வரவேண்டும்.
தேர்வின் போது பேசவோ, சைகை புரியவோ, பிறரை பார்த்து எழுத கூடாது. மீறினால் அவரது தேர்வுநிலை ரத்து செய்யப்படும். கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த தேர்வு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- வேலூர் மேயர் தகவல்
- கால்வாய்களில் அடைப்பு ஏற்படுத்துவதாக புகார்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். நகர் நல அலுவலர் கணேஷ் முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர்கள் சிவகுமார், பாலமுருகன், முருகன், லூர்துசாமி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகராட்சியில் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டம் குறித்து மாநகராட்சி மேயர் சுஜாதா கூறியதாவது:-
வேலூர் மாநகராட்சியில் குப்பைகள் அதிகமாக வருகிறது. பெறப்படும் குப்பைகள் உரமாக்கபட்ட பின்னர் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் குப்பைகள் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது.
மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது.
இது தொடர்பாக புகார்கள் வருகிறது. மாடுகள் பிடிக்கப்பட்டாலும் மீண்டும் சாலையில் தான் அவிழ்த்து விடப்படுகிறது. எனவே அதை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி வேலூர் போக்குவரத்து போலீசார், மிருகவதை தடுப்பு சங்கம் ஆகியோர் இணைந்து மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளுக்கு காதுகளில் உரிமையாளர்களின் பெயர் விவரம் உள்ளிட்ட டேக் போடப்படம். தொடர்ந்து மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
பன்றிகள் தொல்லையும் அதிகமாக உள்ளது அதை கட்டுப்படுத்தும் வகையில் மதுரையில் இருந்து பன்றிகள் பிடிக்கும் நபர்கள் வரவழைக்கப்பட உள்ளனர்.
பிடிக்கப்படும் பன்றிகளை அவர்கள் மதுரைக்கு எடுத்துச் செல்ல உள்ளனர்.
பன்றிகள் உரிமையாளருக்கு திருப்பி கொடுக்கப்பட மாட்டாது. நகரில் உள்ள கால்வாய்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவு மிதக்கிறது உரிமம் இல்லாத குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது மீறி விற்பனை செய்தால் வியாபாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் அடுத்த வாரம் திறக்கப்படும் கருத்தடை மையத்தில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவித்தார்.
கூட்டத்தில் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






