என் மலர்
வேலூர்
- கலெக்டர் தகவல்
- பயிர்கள் சேதம் குறித்து கணக்கெடுக்க நடவடிக்கை
வேலூர்:
வேலூர் பிள்ளையார் குப்பம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 76 பிளஸ்-2 மாணவ, மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகின்றனர்.
அரசு மாதிரி பள்ளி வளாகத்தில் கலெக்டர் குமார வேல் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளியில் பாடம் நடத்தும் விதம், மாணவர்களின் செயல்பாடு, புரிதல் தன்மை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பல்வேறு திருத்தங்களை செய்யுமாறு அங்குள்ள ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இது குறித்து கலெக்டர் கூறுகையில்;
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களின் கற்கும் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாரந்தோ றும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி மதிப்பெண் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பிளஸ் 2 வகுப்பு மட்டும் செயல்பட்டு வருகிறது அடுத்த கட்டமாக அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவ மாணவிகள் 180 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கான விடுதி மற்றும் வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் ஐஐடி போன்ற போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. வருகிற புயல் மழையில் விவசாய பயிர்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. அது குறித்த கணக்கெடுப்பு நடத்த தேவையான நடவடிக்கை களும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாயிகள் வேதனை
- குறைவான அளவிேலயே பங்கேற்றதால் கூட்டம் வெறிச்சோடியது
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வட்டார அளவிலான குறைத் தீர்வு கூட்டம் ஒவ்வொரு மாதமும் 2-ம் வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
அவ்வாறு நடைபெறும் குறைதீர்வு கூட்டத்திற்கு வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கால்நடை துறை, பொதுப்பணி துறை, மீன்வளத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்து துறை உட்பட 19 துறை அலுவலர்களுக்கும் விவசாயிகள் குறைப்பு தீர்வு முகாமில் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்கப்படும்.
அவ்வாறு, தகவல் தெரிவிக்கும்போது விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் விவசாயிகளுக்கும் குறை தீர்வு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.
ஆனால், அணைக்கட்டு தாசில்தார் அலுவலகத்தின் மூலம் ஒரு சில விவசாய சங்க நிர்வாகிகளுக்கும் மட்டுமே தகவல் தெரிவிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் குறை தீர்வு கூட்டம் குறித்து ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகம் வாரியாக நோட்டீஸ் ஒட்டியும் விவசாயிகளுக்கு குறை தீர்வு கூட்டம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், விவசாய குறை தீர்ப்பு கூட்டம் குறித்து தகவல் தெரிந்து. விவசாயிகள் தாங்களாக சென்றாலும் கூட குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் மூலம் தெரிவிக்கப்படும் குறைகள் குறித்து எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
தாலுகா அளவில் நடைபெறும் விவசாயக் குறை தீர்வு கூட்டம் பெயர் அளவிற்கு மட்டுமே நடைபெற்று வருகிறது. இனிவரும் காலங்களிலாவது அரசு அலுவலர்கள் விவசாய குறை தீர்வு முகாமினை விவசாயிகள் பயன்பெறும் அளவிற்கு நடத்தப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நேற்று நடைபெற்ற விவசாயி குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குறைந்த அளவே வருகை புரிந்ததால் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அரசு அலுவலர்களும் பெரும்பாலானோர் கூட்டத்திற்கு வருகை தராமல் புறக்கணித்திருந்தனர்.
- வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நடந்தது
- விவசாயிகளுக்கு அடையாளச் சான்றிதழ் வழங்கினர்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உலக மண் தின விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆர். விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நத்தம் பிரதீஷ் மேல்ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாராஜ்குமார், துணைத் தலைவர் ராஜி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சூரியகலாமனோஜ்குமார் செல்விபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடியாத்தம் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர். உமாசங்கர் வரவேற்புரை ஆற்றினார். அமலுவிஜயன் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் ஆகியோர் விவசாயிகளுக்கு மண் பரிசோதனைக்கான அடையாளச் சான்றிதழ்களை வழங்கினர்.
மேல்ஆலத்தூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் என்.ஏ.சரவணன், தகவல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.லட்சுமணன், மண் பரிசோதனை நிலையம் மூத்த வேளாண்மை அலுவலர் எஸ்.சிங்காரவேல், மங்களூர் கெமிக்கல் அண்ட் பெர்டிலைஸ் வேலூர் மேலாளர் எம்.கோபால் ஆகியோர் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உரை ஆற்றினார்.
உதவி வேளாண்மை அலுவலர் ஜெயகாந்தன் செயல் விளக்கமளித்தார். முடிவில் வேளாண்மை அலுவலர் ஆர்.அன்பழகன் நன்றி கூறினார்.
- அதிகாரிகள் ரோந்து பணியில் சிக்கினார்
- வேலூர் ெஜயிலில் அடைப்பு
அணைக்கட்டு:
ஒடுக்கத்தூர் பரவமலை காப்பு காட்டில் நேற்று வனச்சர அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கீழ்கொத்தூர் கிராமத்தில் மான் கறியை வேட்டையாடி விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது மான் கறியை பாத்திரத்தில் வைத்து சமைத்துக் கொண்டிருந்தார்.
பின்னர் மான் கறியை பாத்திரத்துடன் பறிமுதல் செய்து வினோத் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
- வேலூர் மாநகராட்சியில் 1,390 ஆட்டோக்கள் இயங்கி வருகிறது
- பர்மிட் இல்லாத பல ஆட்டோக்களில் குற்றவாளிகளும் நடமாடி வருகின்றனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 59 ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன.
இங்கு மொத்தம் 1,390 ஆட்டோக்கள். இயங்கி வருகிறது.
ஆனால் வேலூர் நகரில் ஆட்டோக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆற்காடு, காட்பாடி சாலை முழுக்க ஆட்டோக் களால் நிரம்பி வழிகிறது. வேலூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் - பதிவு செய்யப்பட்ட ஆட் டோக்கள் தவிர வெளியூர் ஆட்டோக்களும் வேலூர் நகர சாலைகளில் உலா வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
குறிப்பாக சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் வேலூர் நகரை ஆக்கிரமித்துள்ளன. பதிவு இல்லாத, பர்மிட் இல்லாத ஆட்டோக்களால் சட்டவிரோத சம்பவங்களிலும் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.
இந்த ஆட்டோ ஒவ்வொன்றிற் கும் ஒரு எண் ஒதுக்கப் படும்.
பிறகு அந்த எண்ணுக்கான ஆட்டோ வுக்கான ஆவணங்கள், டிரைவர் தொடர்பான விவ ரங்களை பெற்று போக்கு வரத்து போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யும் பணி நடந்தது.
அந்த ஆட்டோக்களிலும் பயணிகளுக்கு தேவைப்படும் அவசர துறைகளின் எண்களும் அச்சிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால், விதிமீறும் ஆட்டோக்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வாகனங்கள், அனுமதிபெறாத வாகனங்கள் எளிதில் கண்டறியப்படும்' என போலீசார் தெரிவித்தனர். ஆனால் இந்த பணி தொடக்கத்தோடு முடிந்து விட்டது. ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடு இல்லாததால் பர்மிட் இல்லாத பல ஆட்டோக்களில் குற்றவாளிகளும் நடமாடி வருகின்றனர்.
- வேலூரில் மர்ம கும்பல் துணிகரம்
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து சிகிச்சைக்காக வருகின்றனர்.அவர்கள் வேலூர் மாநகர பகுதியில் உள்ள தங்கும் விடுதி லாட்ஜிகளில் தங்கி உள்ளனர்.
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த முகமது ரசூல் (வயது 34) என்பவர் இன்று காலை தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்பதால் லாட்ஜில் அறை எடுக்க முடிவு செய்தார்.
இதற்காக ஆற்காடு ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டிருந்தார். அவரை ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் லாட்ஜில் தங்கும் இடவசதி உள்ளது. எங்கள் ஆட்டோவில் வாருங்கள் என கூறியுள்ளனர். அதனை நம்பி முகமது ரசூல் அந்த ஆட்டோவில் ஏறினார்.
ஆட்டோவில் அவரை ஏற்றிக்கொண்டு ஆற்காடு ரோட்டில்வேகமாக வந்தனர். காகிதப்பட்டறை டாஸ்மாக் கடை அருகே வந்ததும் அதன் அருகில் உள்ள ஒரு தெருவில் ஆட்டோ நுழைந்தது. அங்கு வைத்து ஆட்டோவில் வந்த நபர்கள் முகமது ரசூலை சரமாரியாக தாக்கினர். அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
பலத்த காயத்துடன் பணத்தை இழந்த முகமது ரசூல் அங்கு நின்று கொண்டு என்ன செய்வது என அறியாமல் தவித்தார். அவருக்கு பொதுமக்கள் உதவி செய்தனர். வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் போவதாக கூறிவிட்டு அவர் சென்றார்.
வேலூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரி பெண் டாக்டர் ஒருவரை ஆட்டோவில் கடத்தி சென்று பலாத்காரம் செய்தனர்.
இந்த நிலையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை ஆட்டோவில் அழைத்து வந்து பணம் பறித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் ஆஸ்பத்திரிக்கு வரும் வெளி மாநிலத்தவர்களை தினமும் காலையில் ஆற்காடு ரோட்டில் மடக்கி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் வழங்கப்பட்டது
- தினசரி மீன்பிடிக்கும் பணி நடக்க உள்ளதாக தகவல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை ஆகும்.
இந்த அணையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன்கள் விடப்படும் அந்த மீன்களை மீனவர்கள் பிடித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.
குடியாத்தம் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் நலன் கருதியும், மீனவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காகவும் அரசு மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வந்தன கடந்த ஆண்டுகளில் குடியாத்தம் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் ஏலம் எடுத்து மீன் வளர்ப்பு பணி மேற்கொண்டு இருந்தனர்.கடந்த 2 ஆண்டுகளாக அதிக மழை பொழிவு காரணமாக சரிவர மீன்பிடிக்க முடியாமல் அரசுக்கே திரும்ப ஒப்படைத்து விட்டனர்.
இந்நிலையில் மீண்டும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மோர்தானா அணையில் உள்ள மீன் வளர்ப்பு மையத்தில் வளர்க்கப்பட்ட ரோகு, சாதாகெண்டை விரலிகள் உள்ளிட்ட 7 ஆயிரம் மீன்கள் மோர்தானா அணையில் விடப்பட்டன இதன் மதிப்பு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆகும்.
அணையில் மீன்கள் விடப்படும் நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், குடியாத்தம் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் கே.சீனிவாசன், இயக்குனர் எஸ்.பாஸ்கரன், மோர்தானா ஒன்றியக்குழு உறுப்பினர் கோதண்டம் மீன்வளத்துறை சார் ஆய்வாளர் விவேக் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், மீனவர்கள் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது அதிகாரிகள் கூறியதாவது:- தினசரி மீன்பிடி நடைபெற உள்ளதாகவும் துறை மூலமாக மீன்கள் விற்பனை நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
- கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்
- போலீசார் விசாரணை
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு.வி.க நகரை சேர்ந்தவர் ராஜா, கூலித்தொழிலாளி. இவரது மகள் ராஜேஷ்வரி (வயது19). இவர் பேரணாம்பட்டு ரங்கம்பேட்டை பகுதி யைச் சேர்ந்த ஸ்ரீதர் (20) என்பவரை கடந்த 2 ஆண் டுகளாக காதலித்து வந்தார். இருவரும் கடந்த 3 மாதங் களுக்கு முன்பு பெற்றோர் சம்மதமின்றி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து, ஸ்ரீதரின் வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்தனர். திருமணம் செய்து கொண்ட நாள் முதலே தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீதர், ராஜேஷ்வரிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. வேதனையது டைந்த ராஜேஷ்வரி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீதர், ராஜேஷ்வரியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தாய் வீட்டிற்கும் செல்லாதது தெரியவந்தது. ராஜேஷ்வரியை, ஸ்ரீதர் பல இடங்களில் தேடியுள்ளார்.
இதற்கிடையில், ரங்கம் பேட்டை அடுத்த கோக்கலூர் விவசாய கிணற்றில் ராஜேஸ்வரி பிணமாக கிடந்தார். அவரது முகம் கை கால்களில் துணி சுற்றி இருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத் தினர். மேலும் தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜேஷ்வரியின் முகம் கை, கால்களை கட்டி கிணற்றில் வீசி கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ராஜேஷ்வ ரியின் தந்தை ராஜா, தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளது, இதற்கு காரண மான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்ற னர்.
திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில் புதுப்பெண் கொலை செய்யப்பட்டுள்ள தால், குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், டி.எஸ்.பி. ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவரது மகள் பாரதி (வயது 55) இவர் தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் லத்தேரி அருகே பாரதி ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் பாரதி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தற்கொலைக்கான காரணம் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடந்தது
- மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, ஜனனீ சதீஷ்குமார் வழங்கினர்
வேலூர்:
வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சி வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இன்று நடந்தது.
அலங்கரிக்கப்பட்டிருந்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி. சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் சுகன்யா தாஸ், துணைச் செயலாளர் ஜெயபிரகாசம், தகவல் தொழில்நுட்பபிரிவு வேலூர் மாவட்ட செயலாளர் வி.எல்.ராஜன், பகுதி செயலாளர் நாகு, குப்புசாமி, அன்வர், அணி மாவட்ட செயலாளர்கள் பாலச்சந்தர், ராகேஷ், அண்ணாமலை, ரகு, மாநகராட்சி கவுன்சி லர்கள் எழிலரசன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் கலெக்டர் ஆபிசில் குறைதீர்வு கூட்டம் நடந்தது
- வலுதூக்கும் போட்டியில் சாதனை படைத்த மாணவனுக்கு கலெக்டர் நிதி உதவி
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
காட்பாடி அருகே உள்ள தேன்பள்ளி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
தேன் பள்ளி அருந்ததியர் காலனியில் வீடு கட்டியது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது.இதில் எங்கள் 7 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக நாட்டாண்மை அறிவித்தார். நாங்கள் ஊரில் தண்ணீர் எடுக்கக்கூடாது. தெருவில் நடக்க கூடாது. யாரிடம் பேசினாலும் அபராதம் விதிக்கப்படும். திருவிழாக்களில் அனுமதி இல்லை. எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு போனால் கேவலமாக பேசுகிறார்கள்.
இது குறித்து மேல்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
இது பற்றி தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்திற்கும் வழிகாட்ட வேண்டும்.கொலை மிரட்டலில் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த மாணவர் ஜெயமாருதி என்பவர் கலந்து கொண்டு, 4 தங்கப்பதக்கங்களை பெற்றார். மேலும் சத்துவாச்சாரியை சேர்ந்த மாணவி கவிதா 6-ம் இடம் பிடித்தார். சாதனை படைத்த இருவரும் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனை மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கலெக்டர் மாணவன் ஜெயமாருதிக்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினார். மேலும் இருவரையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
குடியாத்தத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று அவரது மனைவி ரேவதி என்பவருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். யானைக்கால் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை.குடும்பம் நடத்த வழி இல்லை. என் மனைவிக்கு ஏதாவது வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனை கேட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நோயால் பாதிக்கப்பட்ட ராஜசேகருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் அவரது மனைவி ரேவதிக்கு குடியாத்தம் நகராட்சியில் துப்புரவு பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் தாராபட வேடு பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் மழையின் காரணமாக எங்கள் பகுதிக்கு மாற்றப்பட்டது.தற்போது மீண்டும் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தாராபடவேடுபகுதிக்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனை மாற்றக்கூடாது என கூறியுள்ளனர்.
- சோதனைக்கு பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதி
- பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நடவடிக்கை
வேலூர்:
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுத்த பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையங்கள், மார்க்கெட், வணிகவளாகங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் இன்றுகாலை முதல் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், ஸ்ரீபுரம் தங்ககோவில், விரிஞ்சிபுரம் மார்கப்பந்தீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் மற்றும் பொருட்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது.
மேலும் இந்த கோவில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோட்டைக்கு வந்த பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர்.
கார், மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்களையும் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகள் பலர் போலீசாரை கண்டதும் உள்ளே செல்லாமல் தானாக திரும்பி சென்றனர்.
இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் வெளி மாவட்டங்கள், பிறமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பத்தலப்பல்லி, பிள்ளையார்குப்பம், கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே, மாதனூர் அருகே ஆகிய பகுதிகளில் சோதனை செய்யபடுகிறது.
மாவட்டம் முழுவதும் ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிகள் புதன்கிழமை காலை வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.






