என் மலர்
நீங்கள் தேடியது "Reinforcement competition"
- வேலூர் கலெக்டர் ஆபிசில் குறைதீர்வு கூட்டம் நடந்தது
- வலுதூக்கும் போட்டியில் சாதனை படைத்த மாணவனுக்கு கலெக்டர் நிதி உதவி
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
காட்பாடி அருகே உள்ள தேன்பள்ளி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
தேன் பள்ளி அருந்ததியர் காலனியில் வீடு கட்டியது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது.இதில் எங்கள் 7 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக நாட்டாண்மை அறிவித்தார். நாங்கள் ஊரில் தண்ணீர் எடுக்கக்கூடாது. தெருவில் நடக்க கூடாது. யாரிடம் பேசினாலும் அபராதம் விதிக்கப்படும். திருவிழாக்களில் அனுமதி இல்லை. எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு போனால் கேவலமாக பேசுகிறார்கள்.
இது குறித்து மேல்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
இது பற்றி தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்திற்கும் வழிகாட்ட வேண்டும்.கொலை மிரட்டலில் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த மாணவர் ஜெயமாருதி என்பவர் கலந்து கொண்டு, 4 தங்கப்பதக்கங்களை பெற்றார். மேலும் சத்துவாச்சாரியை சேர்ந்த மாணவி கவிதா 6-ம் இடம் பிடித்தார். சாதனை படைத்த இருவரும் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனை மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கலெக்டர் மாணவன் ஜெயமாருதிக்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினார். மேலும் இருவரையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
குடியாத்தத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று அவரது மனைவி ரேவதி என்பவருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். யானைக்கால் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை.குடும்பம் நடத்த வழி இல்லை. என் மனைவிக்கு ஏதாவது வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனை கேட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நோயால் பாதிக்கப்பட்ட ராஜசேகருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் அவரது மனைவி ரேவதிக்கு குடியாத்தம் நகராட்சியில் துப்புரவு பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் தாராபட வேடு பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் மழையின் காரணமாக எங்கள் பகுதிக்கு மாற்றப்பட்டது.தற்போது மீண்டும் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தாராபடவேடுபகுதிக்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனை மாற்றக்கூடாது என கூறியுள்ளனர்.






