என் மலர்
வேலூர்
- ஒடுகத்தூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
- பேரூராட்சி தலைவரின் கணவரை தாக்கியவர்களை கைது செய்யும் வரை நாங்கள் இங்கிருந்து நகர மாட்டோம்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று மாடு விடும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது தி.மு.க. பேரூராட்சி தலைவர் சத்தியவதியின் கணவர் பாஸ்கரனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முன்னாள் தி.மு.க. பேரூராட்சி தலைவரின் தம்பி குபேந்திரன் (45), என்பவர் எங்கள் குடும்பத்தினருக்கும் மரியாதை செய்ய வேண்டும் என்று தகராறு செய்துள்ளார்.
இதனால் பாஸ்கரனுக்கும், குபேந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் பாஸ்கரன் அண்ணா நகர் பகுதிக்கு சென்றார்.
அவரை வழிமறித்த குபேந்திரன் பாஸ்கரனை சரமாரியாக தாக்கியுள்ளார். அதேபோல், அங்கிருந்த 5 பேர் பாஸ்கரனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தகவலறிந்த பாஸ்கரன் உறவினர்கள் அவரது மனைவியும் பேரூராட்சி மன்ற தலைவருமான சத்தியாவதி உட்பட 100-க்கும் மேற்பட்டோர் ஒடுகத்தூர் பஸ்நிலையம் வந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் ஒடுகத்தூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி தலைவரின் கணவரை தாக்கியவர்களை கைது செய்யும் வரை நாங்கள் இங்கிருந்து நகர மாட்டோம் என்று கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் காரணமாக ஒடுகத்தூர் பஸ்நிலையம் வரும் அனைத்து பஸ்களும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு முன்பு தடுத்து நிறுத்தி மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் இன்று காலை பாஸ்கரனை தாக்கியவர்களை கைது செய்வதாக கூறிய பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒடுகத்தூரில் இன்று 2-வது நாளாக கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒடுகத்தூர் பஜார் வீதி வெறிச்சோடியது.
- குமார் உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா? சாப்பிடும் போது தொண்டையில் இட்லி சிக்கியதா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இட்லி சாப்பிட்ட போது தொழிலாளி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
ராணிப்பேட்டை அருகே உள்ள காரையைச் சேர்ந்தவர் குமார் (வயது 40). இவர் வேலூர் புதிய பஸ் நிலையம் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
ஓட்டல் பின்புறம் உள்ள அறையில் குமார் தங்கியிருந்தார். மேலும் அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று ஓட்டல் விடுமுறை என்பதால் குமார் அவர் தங்கி இருந்த அறையில் இருந்தார்.
குமார் இரவு இட்லி சாப்பிட்டார். அப்போது இட்லி அவரது தொண்டையில் சிக்கியதாக தெரிகிறது. பாதி இட்லி தொண்டையில் இருந்தபடி குமார் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனைக் கண்ட சக ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டல் தொழிலாளி குமார் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குமார் உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா? சாப்பிடும் போது தொண்டையில் இட்லி சிக்கியதா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இட்லி சாப்பிட்ட போது தொழிலாளி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாடு திடீரென ஜெகதீஷை முட்டி தூக்கியது. அதில் அவனது மார்பில் கொம்பு குத்தி காயம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். ஊராட்சி பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜெகதீஷ் (வயது 14). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மாலை ஜெகதீஷ் அவரது வீட்டில் வளர்க்கும் காளை மாட்டுக்கு தண்ணீர் காட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது மாடு திடீரென ஜெகதீஷை முட்டி தூக்கியது. அதில் அவனது மார்பில் கொம்பு குத்தி காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவன் கீழே சரிந்து விழுந்தான். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவனை மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
இதுகுறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் வீட்டில் வளர்த்து வரும் மாட்டினை எருது விடும் திருவிழாவுக்காக தயார்படுத்தி வந்ததாக தெரிகிறது. அப்போது மாடு அவனை குத்தியதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்னரே இது குறித்து தெரியவரும் என்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:-
ஜெகதீஷ்க்கு சொந்தமான ஒரு மாட்டினை அவருக்கு சொந்தமான நிலத்தில் மேய்ப்பதற்காக கொண்டு செல்லும் வழியில் மாடு அவரை முட்டியது. அதில் காயமடைந்த சிறுவனை உடனே நாராயணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
நாராயணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்வானது மாடு விடும் திருவிழாவால் ஏற்பட்டவில்லை. மாடு மேய்க்க கொண்டு செல்லும் போது சிறுவன் இறந்துள்ளான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோட்டை, ஏலகிரி, அமிர்தியில் கடும் கூட்டம்
- காணும் பொங்கல் கோலாகலமாக நடந்தது
வேலூர்:
பொங்கல் பண்டிகை 3 நாட்களாக உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். தை முதல் நாளான நேற்று முன்தினம் வீடுகளில் பொங்கல் வைத்தும், மாட்டு பொங்கல் தினமான ேநற்று மாடுகளை அலங்கரித்தும் மக்கள் வழிபட்டனர்.
3-ம் நாளான இன்று காணும் பொங்கல் கொண் டாட்டம் களை கட்டியது. தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு மையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்ப்பரித்து திரண்டனர்.
வேலூர் மாவட்டத்திலும் காணும் பொங்கலை பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இதையொட்டி, வேலூர் கோட்டைக்கு ஆயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள் வந்திருந்தனர்.
அவர்கள் கோட்டையைச் சுற்றிப்பார்த்ததுடன், அந்தப் பகுதியிலுள்ள புல்தரையில் அமர்ந்து விளையாடி மகிழ்ந்தனர். பொங்கலையொட்டி, கோட்டையிலுள்ள ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
மேலும், மக்கள் வருகையையொட்டி கோட்டை நுழைவு வாயில் பகுதியில் கரும்பு, தர்பூசணி, குளிர்பானக் கடைகளும், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், அமிர்தியில் உள்ள வனப்பூங்காவுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்திருந்து காணும் பொங்கலை கொண்டாடினர். இதேபோல், கோட்டை பூங்கா,தங்கக்கோவில், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுலாத் தலங்கள், கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.
ஏலகிரி மலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் ஏலகிரி மலை சுற்றுலா தலத்திற்கு வந்தனர்.
இங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்தும், புங்கனூர் ஏரி படகுத்துறையில் படகில் சவாரி செய்தும் செல்பி எடுத்தும் உற்சாகம் அடைந்தனர்.
மேலும் இங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பழ வகைகள், இனிப்பு வகைகள், சாக்லேட்டுகள் போன்றவைகளை சுற்றுலா பயணிகள் வாங்கி மகிழ்ந்தனர்.
ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தனியார் பொழுதுபோக்கு கூடங்களும் அதிக அளவில் உள்ளதால் தங்களது குடும்பத்தினருடன் சென்று சாகச போட்டிகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்தனர்.
- தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
- மர்ம நபர்கள் அதில் தீ வைத்தனர்
வேலூர்:
வேலூர் கோட்டை முன்பு பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள காந்தி சிலையின் வலதுபுறம் உள்ள பூங்காவில் பொதுமக்கள் அமர்ந்து பொழுது போக்குவார்கள். ஆனால் இடதுபுற பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் அங்கு மக்கள் பொழுதுபோக்க முடியாது.
மேலும் அங்கு மக்கள் செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அந்தப் பகுதியில் வெட்டப்படும் புற்கள் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் மர்மநபர்கள் அதில் தீ வைத்தனர். தீ மளமளவென பரவியது. இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ எரிந்த போது சாலையில் சென்ற பொதுமக்கள் அங்கு கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
- 50-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்பு
- மாடுகள் சிலரை முட்டியது
வேலூர்:
வேலூர் ரங்காபுரத்தில் இளைஞர்கள் கூட்டத்தின் நடுவே காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்தப்படும். அதன்படி இந்த விழா மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. சில இடங்களில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வேலூர் ரங்கா புரத்தில் மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாடுகளின் உரிமையாளர்கள், மாடுகளை குளிப்பாட்டி மாட்டுக்கு அலங்காரம் செய்து, வீதிகளில் அழைத்து வந்தனர். அப்போது பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் மாடுகளை இளைஞர்கள் உற்சாகமாக அழைத்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து பிள்ளையார் கோவில் தெருவில் ஒன்றன்பின் ஒன்றாக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. அப்போது மாடுகள் கூட்டத்தின் நடுவே சீறி பாய்ந்து ஓடியது. சுற்றியிருந்த இளைஞர்கள் கைகளால் மாடுகளை தட்டி உற்சாகப்படுத்தினர். சில மாடுகள் திமிறிக்கொண்டு அங்கிருந்த பார்வையாளர்களை முட்டுவதுபோன்று வேகமாக ஓடியது. மாடுகள் சிலரை முட்டியது. சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். மாடுகளும் மோதிக்கொண்ட சம்பவமும் நடந்தது.
இந்த விழாவைக்கான வேலூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் ரங்காபுரத்தில் குவிந்தனர். அவர்கள் வீட்டின் மாடியில் நின்று வேடிக்கை பார்த்தனர்.
சிலர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். 50-க்கும் மேற்பட்ட மாடுகள் ஓட விடப்பட்டது. இந்த விழாவால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- பசுக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது
- அனைவருக்கும் அன்னதானம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊசூர் கிராமத்தில் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அப்பகுதியை சேர்ந்த பசுக்களை போஸ்டர் அடித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது.
இதனைதொடர்ந்து ஊர் மக்கள் ஒன்றாக கூடி பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து விட்டு பின் பசுக்களுக்கு படையலிட்டனர். ஊர் பொதுமக்கள் சார்பாக அனைத்து பசுக்களுக்கும் பரிசாக கயிர் மற்றும் சலங்கை கொடுக்கப்பட்டு படையலிட்ட சாதம் பசுக்களுக்கு ஊட்டி விடப்பட்டது. பின்பு அங்கு இருந்த பொலி நீரை எடுத்து பசுக்களின் மீது தெளித்து பசுக்களை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ளூர் காளைகளை கொண்டு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.
- தடையை மீறி பொதுமக்கள் யாரும் அருவிக்கு செல்ல வேண்டாம்
- வணத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்
வேலூர்:
வேலூர் அருகே உள்ள அமிர்தி பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள், குரங்குகள், சிவப்பு தலை கிளிகள், காதல்பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப்பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் உள்ளன.
காணும் பொங்கலையொட்டி அமிர்தி பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வனத்துறையினர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அமர்தி பூங்கா வளாகப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
பூங்காவில் வனத்துறை மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். நாளை பூங்கா நுழைவுவாயில் மற்றும் விலங்குகள் கூண்டுகள் உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பூங்காவிற்கு வருபவர்கள் விலங்குகள் பறவைகளுக்கு எந்தவித இடையூறும் செய்யக்கூடாது.மது அருந்தி விட்டு உள்ளே செல்ல அனுமதி இல்லை. மேலும் பூங்காவிற்கு மதுபானங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடர் மழை காரணமாக அமிர்தி அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பொதுமக்கள் யாரும் அருவிக்கு செல்ல வேண்டாம்.
ஆற்றிலும் சில இடங்களில் ஆழமான பகுதிகள் உள்ளன.அந்த இடங்களில் தெரியாமல் சென்று குளிக்க வேண்டாம். இதன் மூலம் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக அமிர்தி பூங்காவில் பொழுதை கழித்து செல்லலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
- குடியாத்தம் அடுத்த குட்லவாரிபல்லி கிராமத்தில் 108-வது ஆண்டாக நடந்தது
- 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீரிசெட்டிபல்லி ஊராட்சி குட்லவாரிபல்லி கிராமத்தில் 108-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது.
இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேதமூர், சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150 க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன.
காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்க ப்பட்டிருந்தன, விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன.இந்த காளை விடும் திருவிழாவிற்கு கே. ராமரத்தினம், ஏ.முனிரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தாசில்தார், எஸ்.விஜயகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.40 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.30 ஆயிரம் உள்ளிட்ட மொத்தம் 40 காளைகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த காளை விடும் திருவிழாவில் காளைகள் முட்டியதில் காய மடைந்தவர்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, பலத்த காயமடைந்தவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் குட்லவாரிபல்லி ஊர் பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
குட்லவாரிபல்லி கிராமத்தில் காளை விடும் திருவிழாவில் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதி களைச் சார்ந்தவர்களும், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்க ணக்கானோர் திரண்டு வந்து காளைகள் சீறிப்பாய்வதை கண்டு மகிழ்ந்தனர்.
- 25 அணிகள் பங்கேற்கிறது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் மெர்குரி கிரிக்கெட் கிளப் கவுண்டி கிரிக்கெட் கிளப் மற்றும் குடியாத்தம் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாநில அளவிலான 31ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்த கிரிக்கெட் போட்டிகளை ஒன்றிய குழு உறுப்பினர் பி.எச்.இமகிரிபாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சக்திதாசன், குமரன், வார்டு உறுப்பினர் கமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் குடியாத்தம், வேலூர், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆம்பூர், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 25 சிறந்த அணிகள் கலந்து கொள்கிறது.
இதில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையும் 50,000 ரூபாய் பரிசும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு கோப்பையும் 25,000 பரிசும் வழங்கப்படுகிறது.
இந்த கிரிக்கெட் போட்டிகள் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெறுகிறது
இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் தலைவர் கார்மேகபாபு, நிர்வாகிகள் ராஜ்குமார், ராம்பிரசாத், சுனில் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்,
- காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் சாதனை
- இளைஞர்கள் விளையாட்டு பயிற்சியில் கவனம் செலுத்தினால் தேவையற்ற சிந்தனைகள் வராது - எஸ்.பி. அறிவுறுத்தல
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சீவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி ஆசிய வலுத்தூக்கும் வீரர் இவரது மகன் ஜெயமாருதி (வயது 18).
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சிறு வயது முதலே வலுதூக்கும் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார்.
கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிகளில் சப் ஜூனியர் 74 கிலோ உடல் எடை பிரிவில் கலந்து கொண்டு ஒட்டுமொத்தமாக 635.5 கிலோ எடையை தூக்கி 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
சாதனை படைத்த ஜெய மாருதியை பாராட்டி வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கினார்.
தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்ட சாதனை படைத்த ஜெய் மாருதி உள்ளிட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளை சென்னையில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
சாதனை படைத்த மாணவன் வீட்டிற்கு நேரடியாக சென்று பாராட்டிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு 4 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த ஜெய மாருதியின் இல்லத்திற்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேரடியாக சென்று சால்வை அணிவித்தும் பூங்கொத்து வழங்கியும் மாவட்ட காவல்துறை சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சேகர், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில்:-
குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஜெய மாருதி காமன்வெல்த் போட்டிகளில் நான்கு தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்த நிகழ்வு மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக உள்ளது. அவர் விரைவில் உலக சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற வாழ்த்துகிறோம்.
சாதனை படைத்த ஜெயமாருதிக்கு வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் எனவும் அதுவும் அவரது இல்லத்திற்கே சென்று பாராட்ட வேண்டும் என விரும்பி இல்லத்திற்கே வந்து பாராட்டுகிறோம் இளைஞர்கள் விளையாட்டு பயிற்சியில் கவனம் செலுத்தினால் தேவையற்ற சிந்தனைகள் வளராது விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து ஈடுபட்டால் தலைமை பண்பு, தன்னம்பிக்கை வளரும் ஜெய மாருதியை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் சாதனைகள் பல படைக்க வேண்டும் அவர்களுக்கு தேவையான உதவிகளை காவல்துறை சார்பில் செய்ய தயாராக இருக்கிறோம். மேலும் விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் மற்றும் பரிசுகளை வெல்லும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் காவல்துறை மற்றும் ராணுவத்தில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளது மற்ற துறைகளில் வேலைவாய்ப்பில் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறும் இளைஞர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி விளையாட்டு போட்டிகளில் அதிக அளவு கலந்து கொண்டு தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
- பொங்கல் பண்டிகையில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அலமேலுமங்கா புரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25) லாரி டிரைவர்.இவரது நண்பர் ராகுல். இருவரும் நேற்று இரவு தொரப்பாடி சென்று மருந்து வாங்கிக் கொண்டு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
சாய்நாதபுரம் பாதுஷா நகரை சேர்ந்தவர் காசிம் (22). பிரியாணி கடை ஊழியர். அவரது நண்பர் சலீம் ஆகியோர் வேலூரில் இருந்து சாய்நாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.ஆரணி ரோட்டில் தினேஷ் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.இதில் பலத்த காயமடைந்த அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் காசிம் பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட விஜயகுமார் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார்.
வேலூர் தெற்கு போலீசார் இறந்தவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதி வேகமாக பைக் ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை நாளான நேற்று நடந்த இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. பண்டிகை கொண்டாட வேண்டிய குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.






