என் மலர்tooltip icon

    வேலூர்

    • தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் நீதிபதி பேச்சு
    • மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். விழாவுக்கு மாவட்ட வழங்கள் அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிபதி மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    நுகர்வோர்களுக்கு அதிக உரிமை உள்ளது. நீங்கள் வாங்கும் பொருள்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் நுகர்வோர் கோர்ட்டை அணுகலாம். ஆன்லைன் மூலமாகவே தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.

    பொதுவாக வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் விபத்து ஏற்படும் போதும் அதற்கு காப்பீடு செய்து இருப்பார்கள் இழப்பீடு கிடைக்காவிட்டால் நுகர்வோர் கோர்ட்டை அணுகலாம்.

    மருந்து மாத்திரை காலாவதியாகி இருந்தாலும், மருத்துவ சிகிச்சையில் குறைபாடு இருந்தாலும் கோர்ட்டை அணுகலாம். அரசு துறைகளில் எந்த சேவை குறைபாடு இருந்தாலும் நுகர்வோர்கள் உங்களது உரிமைகளை பெறுவதற்கு கோர்ட்டை அனுகினால் தீர்வு கிடைக்கும்.

    பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்குகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை, கூட்டுறவுத்துறை மருந்து கட்டுப்பாட்டு துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது இங்கு பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் செயல் விளக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது.

    விழாவில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

    முன்னதாக மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    • மீன் பிடிக்கச் சென்றவர் தவறி விழுந்து இறந்தாரா?
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரியாகும். இந்த ஏரி தற்போது 70 சதவீதம் நிரம்பிய நிலையில் உள்ளது. ஏராளமான மீன்கள் உள்ளன. வலைகள் வீசியும், தூண்டில்கள் மூலம் பொதுமக்கள் மீன்களைப் பிடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் குடியாத்தம்-பேரணாம்பட்டு ரோடு நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் ஏரிக்கரையை ஒட்டியபடி ஆண் பிணம் இன்று காலையில் மிதந்து கொண்டு இருந்தது. இதனை கண்டவர்கள் உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கும், குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய நிலையிலிருந்து ஆண் பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    குடியாத்தம் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏரியில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அவர் அணிந்திருந்த ஆடைகளில் சோதனை செய்தபோது அவரிடம் இருந்து ஆதார் கார்டில் உம்ராபாத் அடுத்த கடாம்பூர் பகுதியைச் சேர்ந்த சையத்முனவர் என பெயர் இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் உமராபாத் பகுதியில் உள்ள காவல் துறையினரை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

    பிணத்தை பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் கூறுகையில்:-

    நேற்று மாலை அல்லது இரவு மீன் பிடிக்க அந்த நபர் தூண்டிலுடன் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் அமர்ந்துள்ளார் அப்போது தவறி ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    அங்கிருந்த தூண்டில் மற்றும் மீன் பிடிக்க தேவையான பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 கால பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் கிராமத்தில் எழுந்தருளி யுள்ள காலபைரவருக்கு வருடாந்திர நிறைவு விழா நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஏரி புதூர் கிராமத்தில் வனப்பகுதியின் அருகே காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு ஓராண்டுக்கு முன்பாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    தொடர்ந்து தேய்பிறை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன, இதனையடுத்து நேற்று வருடாந்திர நிறைவு விழா நடைபெற்றது. இங்கு யாகசாலைகள் அமைத்து 9 கலசங்கள் வைத்து 4 கால பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.

    இதையடுத்து 108 வகையான சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பூஜை செய்த கலசத்தை கோவிலை சுற்றி வந்து மூலவருக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து அலங்காரம் செய்து தீபாரதனை நடந்தது. இதில் அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் குமார பாண்டியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • அதானி குழுமத்தின் முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மத்திய மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுக்க தயங்கிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    குடியாத்தம் ஸ்டேட் பாங்க் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் வட்டார தலைவர் வீராங்கன் தலைமை தாங்கினார்.

    குடியாத்தம் எல்ஐசி அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் விஜயன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர்கள் பெரியசாமி, தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆடிட்டர் கிருபானந்தம், முகமது அராபத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் விஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் யுவராஜ், சரவணன், பாரத் நவீன்குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நவீன்பிரபு உள்பட நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்ப டுகின்றன. மேலும் தற்போது பாதாள சாக்கடை பணிகளும் நடந்து வருகிறது.

    இதற்காக மாநகராட்சி சார்பில் ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    வேலூர் மாநகரத்தில் உள்ள 4 மண்டலங்களிலும் குப்பைகள் சேகரித்து வருவதற்காக 20 புதிய மினி லாரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    மேலும் பெரிய அளவிலான பாதாள சாக்கடை குழாய்களில் நீரை உறிஞ்சி அடைப்பு நீக்குவதற்காக ஒரு எந்திரத்துடன் கூடிய வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

    சிறிய பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு நீக்கும் கருவிப் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றும், இது தவிர பாதாள சாக்கடை குழாய்களில் அதிக அளவில் மண் அடைப்பு ஏற்பட்டால் அந்த மண்ணையும் சேர்த்து உறிஞ்சி அடைப்பு நீக்கும் வகையில் நவீன எந்திரத்திடன் கூடிய பெரிய வாகனம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனங்களை கார்த்திகேயன் எம்.எல்.ஏ. இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
    • 150 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது

    வேலூர்:

    தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோயினை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

    இதனையொட்டி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் இன்று முதல் வீட்டு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்படுகிறது.

    வேலூர் அண்ணாசாலையில் உள்ள ஹரிஷ்புட்ஜோன் வளாகத்தில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச வெறிநாய் தடுப்பு முகாமினை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வேனில் 150 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

    அதன் தொடர்ச்சியாக கே.வி.குப்பம், அணைகட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா. லத்தேரி, திருவலம், பென்னாத்தூர், ஏரிகுத்தி, காட்பாடி, ஒடுகத்தூர் ஆகிய அரசு கால்நடை மருத்துவ மனைகளில் மார்ச் மாதம் இறுதி வரை தொடர்ச்சியாக நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் 1590 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி மேற்கொள்ளப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • 5 பவுன் நகையை மீட்பு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த லோகேஷ் குமார் (30) என்பவர் கடந்த 7-ந் தேதி வேலப்பாடியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் 15 பவுன் தங்க நகைகளை அடமானம் வைக்க சென்றார்.

    அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் லோகேஷ் குமார் வைத்திருந்த நகை பையை பறித்துக்கொண்டு தப்பினர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் தப்பிய மர்ம நபர்கள் ஆட்டோ மீது மோதி கீழே விழுந்தனர். சுதாரித்து எழுந்தவர்கள் தங்களது வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பினர்.

    இது தொடர்பாக தெற்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அதில், மர்ம நபர்கள் விட்டுச்சென்ற இரு சக்கர வாகனம் போலியானது என்பதுடன் அது காரின் பதிவெண் என தெரியவந்தது. தொடர் விசாரணையில், நகை பறிப்பு வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய சேலம் மற்றும் திருச்சிக்கு தனிப்படையினர் விரைந்தனர்.

    இந்த வழக்கில் பெரம்பலூரைச் சேர்ந்த செந்தில்குமார் (37), சேலத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (23), திருச்சியைச் சேர்ந்த ராஜசேகர் (23) ஆகியோரை ஷியாமளா தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து சுமார் 5 பவுன் தங்க நகையை மீட்டனர். கைதான நபர்களிடம் நடத்திய விசாரணையில், நகை பறிப்பு வழக்கில் தொடர்புடைய 4 பேரும் ஜெயிலில் பழக்கமானவர்கள்.

    இவர்கள் வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி நகை, பணத்தை பறிக்கும் கும்பலமாக செயல்பட தொடங்கியுள்ளனர்.

    இவர்கள் வேலூரிலும் நகை அல்லது பணத்தை பறித்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி, லோகேஷ்குமாரை பின்தொடர்ந்து 15 பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.

    3 பேரையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், பெரம்பலூர், வேளாங்கண்ணி, திருச்சி, சேலம் என்று விரட்டிச் சென்று தனிப்படையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல்-அமைச்சர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வேலழகன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு ஒன்றிய செயலாளர்கள் டி. சிவா, சீனிவாசன், பிரபாகரன், சுரேஷ்பாபு, ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன், முன்னாள் நகர் மன்ற தலைவர் எம்.பாஸ்கர், நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்திஆகியோர் முன்னிலை வகித்தனர்.குடியாத்தம் நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி வரவேற்றார்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இமகிரிபாபு, மாவட்ட பொருளாளர் காடை மூர்த்தி நகர நிர்வாகிகள் ஆர்.கே.அன்பு, வி என். தனஞ்செயன், எஸ்.என்.சுந்தரேசன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ் உள்பட நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

    • யார்? என தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சேவூர் ரெயில் நிலையம் அருகே மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பாய்ந்தார்.

    ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் சேவூர் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வெள்ளை நிற கட் பனியன் மற்றும் நீல நிற அரைக்கால் டவுசர் அணிந்திருந்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் யார் எதற்காக ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீரோக்கள் திறக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த 51 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர்.
    • வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளின் மாதிரியை சேகரித்தனர்.

    வேலூர்:

    வேலூர் ஓட்டேரி கமலாட்சிபுரம் மாந்தோப்பு 2-வது தெருவை சேர்ந்தவர் அனிதா (வயது 37) வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் கடந்த 10-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு இடையன்சாத்து பகுதியில் வசிக்கும் தாய் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு 2 நாட்கள் தங்கி விட்டு நேற்று காலை 9 மணியளவில் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றார். வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டு மற்றும் மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தன. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

    அங்கு பீரோக்கள் திறக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த 51 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர்.

    பாகாயம் போலீசாருக்கு இந்த திருட்டு பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளின் மாதிரியை சேகரித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஓட்டேரி கமலாட்சிபுரம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த திருட்டு குறித்து போலீசார் கூறுகையில்:-

    நன்கு தெரிந்த அல்லது நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    பீரோக்களை உடைக்காமல் சாவியை தேடி கண்டுபிடித்து திறந்து 51 பவுன் நகையை மட்டும் திருடி உள்ளனர்.

    தங்க நகைகளுடன் இருந்த கவரிங் நகைகளை எடுத்து செல்லாமல் அதனை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். அதேபோன்று வெள்ளி பொருட்களையும் மர்மநபர்கள் எடுக்கவில்லை.

    வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் அவரின் நடவடிக்கைகள் பற்றி நன்கு தெரிந்த நபர்கள்தான் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று பார்வையிட்டு வருகிறோம். திருட்டுபோன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சத்து 40 ஆயிரம் என்றனர்.

    • வள்ளி தெய்வானை சமேத முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
    • கோவில் வளாகத்தில் பெண்கள் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    காட்பாடி தாலுகாவில் காங்கேயநல்லூர் உள்ளது. இது திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவதரித்த திருத்தலம் ஆகும். இங்கு சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் முருகப்பெருமானுக்கு லட்சதீப திருவிழா நடைபெறும். அதுபோல இந்த ஆண்டு லட்சதீப திருவிழா நடந்தது.பகல் 3 மணிக்கு சாமிக்கு மகா அபிஷேகம், 6 மணிக்கு மகா தீபாராதனை லட்ச தீபக்காட்சி நடந்தது. வள்ளி தெய்வானை சமேத முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில் பெண்கள் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    இரவு 8 மணிக்கு வாரியார் சுவாமிகளின் தம்பி மகன் வாதவூரனின் செஞ்சொல் விரிவுரை நிகழ்ச்சியும், 9 மணிக்கு டி.கே.எஸ். கலைவாணன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சியும் நடந்தது.இதில் வாரியார் சுவாமிகளின் தம்பி மகன் புகழனார், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அசோகன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கே.பி.ரமேஷ், சாமுண்டீஸ்வரி குணாளன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இரவு சாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. லட்சதீப திருவிழாவில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டனர்.

    கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வாரியார் சுவாமிகளின் ஞானத்திருவளாகமும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    திருவிழாவை முன்னிட்டு காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
    • காவி உடையுடன் ஒருவர் தர்ணா

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் பேர்ணாம்பட்டு அருகே உள்ள ராஜாக்கல் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது மனைவி பி. ஜெயந்தி என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் ராஜாக்கல் ஊராட்சி மன்ற தேர்தலில் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டேன். அதே வார்டில் வி. ஜெயந்தி என்பவரும் போட்டியிட்டார். அப்போது நான் தோல்வியடைந்ததாக கவும் வி. ஜெயந்தி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்க பட்டார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் எனது வாக்கு விபரம் குறித்து விவரம் சேகரித்தேன்.அதில் பி. ஜெயந்தி ஆகிய நான் 119 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும் தற்போது பதவியில் உள்ள வி. ஜெயந்தி 64 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வெற்றி பெற்ற என்னை தோல்வி அடைந்ததாக கூறி ஏமாற்றி உள்ளனர். உண்மையான வெற்றி பெற்ற எனக்கு வாடு உறுப்பினர் பதவி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அணைக்கட்டு அருகே உள்ள ஓதியத்தூர் ஊராட்சி தாங்கல், கஜாபுரம், மலை கன்னிகாபுரம், புதுமனை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

    அதில் எங்கள் ஊராட்சியை 2 ஆக பிரிக்க வேண்டும். தாங்கல் உள்ளிட்ட 4 கிராமங்களை சேர்த்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    பேர்ணாம்பட்டு அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவ சூரிய நிலா என்பவர் காவி உடையுடன் குறைதீர்வு கூட்டம் நடந்த காயிதேமில்லத் அரங்கு முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.

    தனக்கு சொந்தமான வீட்டு மனை நிலத்தை சிலர் அபகரித்து விட்டதாகவும் இது பற்றி புகார் அளித்தால் யாரும் உதவி செய்யவில்லை எனக் கூறி அவர் கோஷம் எழுப்பினார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி அவரை சமாதானம் செய்து அவரிடம் இருந்து மனு பெற்றுக்கொண்டார்.இதனையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    ×