என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வேலூரில் பெண் போலீஸ் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
    X

    வேலூரில் பெண் போலீஸ் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

    • பீரோக்கள் திறக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த 51 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர்.
    • வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளின் மாதிரியை சேகரித்தனர்.

    வேலூர்:

    வேலூர் ஓட்டேரி கமலாட்சிபுரம் மாந்தோப்பு 2-வது தெருவை சேர்ந்தவர் அனிதா (வயது 37) வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் கடந்த 10-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு இடையன்சாத்து பகுதியில் வசிக்கும் தாய் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு 2 நாட்கள் தங்கி விட்டு நேற்று காலை 9 மணியளவில் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றார். வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டு மற்றும் மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தன. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

    அங்கு பீரோக்கள் திறக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த 51 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர்.

    பாகாயம் போலீசாருக்கு இந்த திருட்டு பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளின் மாதிரியை சேகரித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஓட்டேரி கமலாட்சிபுரம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த திருட்டு குறித்து போலீசார் கூறுகையில்:-

    நன்கு தெரிந்த அல்லது நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    பீரோக்களை உடைக்காமல் சாவியை தேடி கண்டுபிடித்து திறந்து 51 பவுன் நகையை மட்டும் திருடி உள்ளனர்.

    தங்க நகைகளுடன் இருந்த கவரிங் நகைகளை எடுத்து செல்லாமல் அதனை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். அதேபோன்று வெள்ளி பொருட்களையும் மர்மநபர்கள் எடுக்கவில்லை.

    வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் அவரின் நடவடிக்கைகள் பற்றி நன்கு தெரிந்த நபர்கள்தான் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று பார்வையிட்டு வருகிறோம். திருட்டுபோன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சத்து 40 ஆயிரம் என்றனர்.

    Next Story
    ×