என் மலர்tooltip icon

    வேலூர்

    • டயரில் சிக்கி பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் மதினா நகரை சேர்ந்தவர்கள் இஸ்மாயில் மகன் முகமது ஷெரீப் (வயது 17). ரபிக் மகன் ஏஜாஸ் (17)அந்த பகுதியில் உள்ள இரும்புக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இரவு முகம்மது ஷரீப் அவரது நண்பர் ஏஜாஸ் சத்துவாச்சாரியில் இருந்து கொணவட்டத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் வந்த போது கண்டெய்னர் லாரி அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    முகமது ஷெரிப் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார். அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் ஏ ஜாஸ் பலத்த காயமடைந்தார்.

    வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பலனின்றி ஏஜாஸ் இன்று காலை இறந்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் விரட்டிய போது சறுக்கி கீழே விழுந்தனர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் ஓட்டேரி நம்பிராஜபுரம் சாமி நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 46) காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு சொந்தமான பைக்கை அவருடைய வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் பைக்கை திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து பாலமுருகன் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் திருடிய நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் விருதம்பட்டு மெயின் ரோட்டில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் செல்போனை பறிக்க முயன்றனர்.

    அப்போது சுதாரித்துக் கொண்ட அவர் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அங்கிருந்த பொது மக்கள் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர்களை விரட்டி சென்றனர்.

    அப்போது பதட்டத்தில் பைக் ஓட்டிய வாலிபர்கள் சறுக்கி கீழே விழுந்தனர். பொதுமக்கள் இருவரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    பின்னர் அவர்களை விருதம்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் வேலூர் வசந்தபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (28) மற்றும் வசந்தகுமார் (20) என்பது தெரிய வந்தது. அவர்கள் ஓட்டி வந்த பைக் பாலமுருகன் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்கள் பாகாயம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    போலீசார் ஆனந்தராஜ், வசந்த குமார் இருவரையும் கைது செய்தனர்.

    • ஒன்றிய குழு தலைவர் வழங்கினார்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொண்டசமுத்திரம், சீவூர், அக்ராவரம், நெல்லூர்பேட்டை, எர்த்தாங்கல், கூடநகரம் சேம்பள்ளி ஆகிய 7 ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இந்தியா திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை பணிக்காக 9 டிராக்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த டிராக்டர்களை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.ஊராட்சி மன்ற தலைவர்கள் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார், முனிசாமி, வள்ளிநாயகி, கே.ஆர்.உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்வாணன் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் டிராக்டர்களுக்கான சாவிகளை வழங்கியும் ஒரு டிராக்டரை இயக்கியும் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

    • 2 நாட்களுக்கு முன்பு மாயமானார்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சேத்துவண்டை கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 32). ஆம்பூர் அடுத்த பச்சை குப்பம் பகுதியில் தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திரு மணமாகி லாவண்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தர்மலிங்கம் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று மதியம் குடியாத்தம் காந்திநகர் மோர்தனா கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள தென் னந்தோப்பில் தர்மலிங்கம் பிணமாக கிடப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தர்ம லிங்கத்தின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் மகன் மீது தவறு இருப்பதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக புகார்
    • கலெக்டர் சமாதானம் செய்தார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.

    காட்பாடி அடுத்த வடுகன்தாங்கல் கிராமத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரது மனைவி கோட்டீஸ்வரி (வயது 49) என்பவர் திடீரென கூட்டம் நடந்து கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் கோட்டீஸ்வரி மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு குடியாத்தத்தில் நடந்த விபத்தில் என்னுடைய மகன் ரவிவர்மா (26) என்பவர் பலியானார். இதில் தவறுதலாக எனது மகன் மீது தவறு இருப்பதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனது மகன் மீது எந்த தவறும் இல்லை. இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என கூறினார்.

    அவரை சமாதானம் செய்த கலெக்டர் முறையாக மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும். எந்த காரணத்தைக் கொண்டும் தீக்குளிக்கும் எண்ணத்தோடு வரக்கூடாது என அறிவுரை வழங்கினார்.

    குடியாத்தம் அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

    அதில் குடியாத்தம் பலமனேர் சாலை விரிவாக்க பணிக்காக எங்கள் பகுதியில் 60 வீடுகளை இடிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளனர். எங்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டு பின்னர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

    வேலூர் மாநகராட்சி விருப்பாச்சிபுரம் குளவி மேடு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் மனு அளித்தினர். அதில் குளவி மேடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 5 வருடங்களாக குடியிருந்து வருகிறோம்.

    எங்கள் குடியிருப்பில் 192 வீடுகள் உள்ளன. கடந்த வாரம் குடியிருப்பில் பெண் ஒருவர் இறந்து விட்டார். அவரை அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய கொண்டு சென்றபோது அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

    எங்கள் ஊர் மக்களுக்கு சுடுகாட்டில் அடக்கம் செய்யபோதிய இடவசதி இல்லை. எனவே இந்த ஒருவரை மட்டுமே இங்கே அடக்கம் செய்து கொள்ள லாம். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர். எங்களுக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியுள்ளனர்.

    பாட்டாளி மக்கள் கட்சி குடியாத்தம் நகர செயலாளர் ரமேஷ் மனு ஒன்று அளித்தார். அதில் குடியாத்தம் கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கூறியுள்ளார்.

    • 28 வீடுகள் இடிந்தன
    • வருவாய் துறையினர் கணக்கெடுப்பு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. குடியாத்தம், கே.வி.குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆலங்கட்டிகளை பொதுமக்கள் கையில் எடுத்துச் சென்றனர்.

    இந்த கன மழையால் பரதராமி சாலையில் 20-க்கும் மேற்பட்ட புளியமரம், வேப்ப மரங்கள் அடியோடு சாய்ந்தன. மேலும் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்தது.

    இதுபோல குடியாத்தம் சுற்றுவட்டார கிராமங்களிலும் மரங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டி க்கப்பட்டது. நெடுஞ்சா லைத் துறை மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குடியாத்தம் பகுதியில் பலத்த காற்று காரணமாக 100-க்கும் மேற்பட்ட தென்னை வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இந்த மழையால் பெருமளவில் விவசாய பயிர்கள் நாசம் அடைந்துள்ளன.

    அணைக்கட்டு பீஞ்சமந்தை பகுதிகளில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் 2 மாடு பலியானது.

    கே. வி. குப்பம் அருகே உள்ள மேல் காவனூர், மாச்சனூர், தேவதரிஷி குப்பம் பகுதிகளில் 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. கே.வி.குப்பம் வட்டார பகுதியில் 100 ஏக்கருக்கு மேலான விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது. கே.வி.குப்பம் தாசில்தார் மற்றும் வேளாண்மை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய பயிர்கள் குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    ஊசூர் அணைக்கட்டு பள்ளிகொண்டா பகுதிகளில் மிக மழையா விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களாக இந்த மழையில் வேலூர் மாவட்டத்தில் இதுவரை 3 மாடுகள் பலியாகி உள்ளது. 28 வீடுகள் இடிந்துள்ளன. இதில் 14 வீடுகள் இடிந்து தரைமட்டமாகிவிட்டது. இது குறித்து வருவாய் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் வெப்பம் குறைந்துள்ளது. விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    • வேலைக்குச் சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஒலக்காசி ஊராட்சி சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 50).மரம் ஏறும் தொழிலாளி.

    இன்று காலையில் வழக்கம் போல் வேலைக்குச் செல்ல சித்தாத்தூர் கிராமத்தில் இருந்து மண் பாதை வழியாக ஐதர்புரம் செல்ல சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    வேப்பூர் கிராமம் அருகே செல்லும்போது சாலையில் தேங்கி இருந்த தண்ணீரில் சைக்கிள் இறங்கி சென்றுள்ளது. அப்போது அந்த தண்ணீரில் அதிகாலை நேரத்தில் அறுந்து விழுந்த மின் கம்பி இருந்துள்ளது. அதனால் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருந்த தண்ணீரில் சைக்கிள் இறங்கியதும் உடனடியாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து ஜீவா இறந்தார். அந்த வழியாக வந்தவர்கள் ஜீவா துடிதுடித்து இருப்பதை கண்டு உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர்.

    சம்பவ இடத்திற்கு குடியாத்தம் தாலுகா போலீசார் விரைந்து வந்து ஜீவாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காலை நேரத்தில் அந்த மண் பாதை வழியாக வாகனங்களும் ஏராளமான கிராம மக்களும் வேலைக்குச் செல்ல பயன்படுத்தி வந்தனர்.

    தேங்கிய தண்ணீரில் மின்கம்பி இருந்தது தெரியாததால் ஜீவா பரிதாபமாக இறந்தார். அந்த மின் கம்பி அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீதோ கூட்டமாக செல்லும் கிராம மக்கள் மீதோ விழுந்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

    இறந்து போன ஜீவாவிற்கு கவிதா என்ற மனைவியும் ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்
    • மழையால் மண் சரிந்து பரிதாபம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் கெங்கசானிகுப்பம், துத்திபுளியமரம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 48) விவசாயி.

    இவர் அவருடைய நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றார். இன்னிலையில் நேற்று பெய்த கனமழையினால் கிணற்றின் சுற்றுப்பகுதி முழுவதும் மழைநீரால் வலுவிழந்து காணப்பட்டுள்ளது. இதனை கவனிக்காத ஐயப்பன் கிணற்றை எட்டி பார்த்துள்ளார். அப்போது வலுவிழந்து உள்ள கிணற்றின் மண் சரிந்து சுமார் 100அடி ஆழமுடைய கிணற்றில் விழுந்தார்.

    இதில் அவருக்கு கால் முறிவு ஏற்ப்பட்ட நிலையில் மேலே வர முடியாமல் வலியால் துடித்து சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர். உடனடியாக ஒடுகத்தூர் தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர்.

    விரைந்து வந்த நிலைய அலுவலர் குமார் மற்றும் சசிதரன் அடங்கிய குழுவினர். கிணற்றில் 100 அடி ஆழத்தில் தவித்த ஐயப்பனை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது
    • மின் விநியோகத்தை சீரமைக்க 170 ஊழியர்கள் இரவு பகலாக தீவிரம்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

    அப்போது ருத்ரதாண்டவம் ஆடிய கடும் சூறைக்காற்றால் பல்லாயிரம் வாழை மரங்கள் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள், பல ஏக்கரில் பயிரப்பட்டிருந்த நெல், கரும்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்கள் பொருத்த சேதம் அடைந்தன.

    இதேபோல் பல இடங்களில் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இரவு பகல் பாராமல் அந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

    ஏராளமான மின்கம்பங்களும் சாய்ந்து பல இடங்களில் ஒரு நாள் ஆகியும் மின்விநியோகம் தடைபட்டுள்ளது. பலத்த மழையால் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

    இந்நிலையில் மின்விநியோகம் தடை குறித்து குடியாத்தம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் வி. எம்.வெங்கடாஜலபதி கூறுகையில்:-

    நேற்று பெய்த கனமழையால் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து மின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மின்வாரிய வேலூர் மண்டல தலைமை பொறியாளர் ஞான பெட்ஷீபா, திருப்பத்தூர் கூடுதல் தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவின் பேரில் மின்விநியோகத்தை சீரமைக்க திருப்பத்தூர், வாணியம்பாடி, பள்ளிகொண்டா மின் கோட்ட பணியாளர்கள் 100 பேர் கூடுதலாக குடியாத்தம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 70 பேர் என 170 பேர் மின்விநோக்கத்தை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இன்று மாலைக்குள் பெரும்பாலான இடங்களுக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின் சப்ளை கிடைக்கும் என தெரிவித்தார்.

    நேற்று அதிகாலை முதலே கொட்டும் மழையை பொருட்படுத்தாது இரவு பகல் பாராமல் மின் ஊழியர்கள் சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை சீரமைத்து வருகின்றனர் என்றார்.

    • வேலை காரணமாக காட்பாடிக்கு பணியிட மாறுதலாகி வந்த யோகேஸ்வர பாண்டியன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
    • தனிமையில் இருந்த யோகேஸ்வர பாண்டியன் பொழுது போக்கிற்காக ஆரம்ப கட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கினார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கல்வி கடன் வழங்கும் கிளை இயங்கி வருகிறது. இங்கு விருதுநகரை சேர்ந்த மதிமுத்து என்பவரின் மகன் யோகேஸ்வர பாண்டியன் (வயது38). உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.

    இவர் காட்பாடி வி.ஜிராவ் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். அதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். அதனை ஈடு கட்டுவதற்காக வங்கியில் கல்வி கடன் வாங்கிய மாணவ மாணவிகள் தவணை செலுத்திய இன்சூரன்ஸ் பிரீமியம் பணம் மற்றும் சிலரின் கல்விக் கடனை கையாடல் செய்து அந்த பணத்தை யோகேஸ்வர பாண்டியன் தனது 2 வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார்.

    இது பற்றிய தகவல் தெரியவந்ததும் வங்கி மேலாளர் சிவக்குமார் ஆய்வு செய்தார். அப்போது யோகேஸ்வரபாண்டியன் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 137 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.34 லட்சத்து 10 ஆயிரத்து 622 கையாடல் செய்தது தெரிய வந்தது.

    புகாரின் பேரில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து யோகேஸ்வர பாண்டியனை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    விருதுநகரை சேர்ந்த யோகேஸ்வர பாண்டியன் நல்ல குடும்பப் பின்னணியில் உள்ளவர். இவருடைய மனைவி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    வேலை காரணமாக காட்பாடிக்கு பணியிட மாறுதலாகி வந்த யோகேஸ்வர பாண்டியன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

    தனிமையில் இருந்த அவர் பொழுது போக்கிற்காக ஆரம்ப கட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கினார். முதலில் சிறிய அளவில் பணத்தை செலுத்தினார். பின்னர் விட்ட பணத்தை பிடித்தே ஆக வேண்டும் என்பதற்காக பெரிய தொகைகளை செலுத்த ஆரம்பித்தார்.

    ஆன்லைனில் மூழ்கி அடிமையான அவர் மீள முடியாமல் வேலை பார்த்த இடத்திலும் பணத்தை கையாடல் செய்ய துணிந்தார். அதன்படி வாங்கி வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து ரூ.34 லட்சம் கையாடல் செய்து ரம்மி விளையாடியுள்ளார்.

    அந்த பணத்தை அதில் இழந்தார். மேலும் அவர் தனது சொந்த பணம் ரூ.10 லட்சம் ரம்மி விளையாட்டில் இழந்ததாக தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் ரூ.45 லட்சம் வரை அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார்.

    தான் தவறு செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தவறுக்கு தண்டனை அனுபவித்து ஆக வேண்டும் என்ன செய்வது என அவர் மனம் வருந்தினார்.

    தற்போது அவரது வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டு விட்டது. நல்ல நிலையில் இருந்த அவர் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ரம்மி விளையாட்டு போன்றவற்றில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    • ஆசை வார்த்தை கூறி உல்லாசம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் 17 வயது.அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவருடன் சிறுமிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

    இந்நிலையில் வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் வாலிபர் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது அசாம் மாநிலத்தில் ராணுவ பயிற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

    வாலிபர் உடன் நெருக்கமாக இருந்ததால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர்கள் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்த போது மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்த போது வாலிபருடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது

    இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா ராணுவத்தில் பணிபுரியும் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • பெண்ணை அறையில் அடைத்து துணிகரம்
    • ேபாலீசுார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி இவரது மனைவி உமா மகேஸ்வரி வயது 50 நேற்று முன்தினம் இரவு வீட்டில் உமாமகேஸ்வரி தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டின் பின்பக்கமாக உள்ளே நுழைந்த மர்மநபர்கள் உமாமகேஸ்வரி தூங்கிக் கொண்டிருந்த அறையை தாழிட்டு உள்ளனர்.மற்றொரு அறையில் இருந்த பெட்டியை திறந்து அதில் இருந்த ஒன்றரை சவரன் நகை 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடியுள்ளனர்.

    அப்போது சத்தம் கேட்டு உமாமகேஸ்வரி வந்தபோது அறை கதவின் வெளியே தாழிட்டு இருப்பதை கண்டு கண்டு சத்தமிட்டுள்ளார் இதனையடுத்து மர்மநபர்கள் தாளை திறந்து விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

    இந்த திருட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டுக்கு அருகே வசிப்பவர் முதியவர் நக்கீரன் வயது 74 இவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்னைக்கு சென்றுள்ளார் நேற்று காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அலங்கோலமாக இருந்துள்ளது பீரோவில் இருந்து 15 ஆயிரம் பணம் திருடி சென்றிருப்பது தெரியவந்தது

    இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    திருட்டு நடைபெற்ற வீட்டில் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து வீடுகளில் திருட்டு நடைபெற்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×